பாண்டிமாதேவி/முதல் பாகம்/நெஞ்சமெனும் கடல் நிறைய

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

35. நெஞ்சமெனும் கடல் நிறைய...

கீழே மணற் பரப்பிலிருந்து மதிவதனியின் பெயரைச் சொல்லி யாரோ அழைக்கும் குரலைக்கேட்டு முகத்தில் கலவரம் தோன்ற அவளைப் பார்த்தான் குமாரபாண்டியன். இரவு நேரத்தில் கடலோரத்துத் தனிமையில் உயரமான மரக்கிளையின் மேல் அப்படி ஒர் அழகிய பெண்ணோடு நிற்கும் இளைஞனை மூன்றாவது மனிதன் பார்த்தால் எவ்வளவு தவறாகக் கற்பனை செய்துகொள்ள முடியும்?' இதை நினைக்கும்போது ஒரு துன்பத்திலிருந்து நீங்கி இன்னொரு துன்பத்தில் சிக்கிக்கொண்டுவிட்டது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் அஞ்சினான். அந்த அச்சம் அவனுடைய முகத்தில், பார்வையில், பேச்சில் வெளிப்பட்டுத் தெரிந்தது.

"மதிவதனி கீழேயிருந்து யாரோ உன்னைக் கூப்பிடுகிறார்களே?”

“வேறு யாருமில்லை. என் தந்தைதான். நேரமாயிற்றே என்று என்னைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்.”

“ஐயோ! இந்த நிலையில் உன்னோடு என்னை இங்கே பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்?”

அவனுடைய கேள்வியின் உட்பொருள் விளங்காதவள் போல் அவன் முகத்தைச் சாதாரணமாகப் பார்த்தாள் அவள். பின்பு மெல்லச் சிரித்தாள். சிறிது சிறிதாகச் செந்நிற மலர்போல் நடு இதழில் மலர்ந்த அந்தச் சிரிப்பு இதழ் முடியும் இடத்தில் வலது கன்னத்தில் ஒரு சிறு குழியாகத் தேங்கி மறைந்தது. அவள் சிரிக்கும்போதெல்லாம் தென்படும் அந்த நளினச் சுழிப்பு சிரிப்பின் இங்கிதத்தையெல்லாம் மொத்தமாக ஒன்று சேர்த்துக் காட்டும் இறுதி முத்திரையாக அமைந்தது. எதிரே நின்று காண்பவரின் எண்ணங்களைத் தேக்கிச் சிறைப்பிடிக்கும் அந்த இங்கிதச் சிரிப்பில் சற்றே கிறங்கி நின்றான் இராசசிம்மன்.

அப்போது இரண்டாவது முறையாகக் கீழேயிருந்து அவள் தந்தை அவளை இரைந்து கூப்பிடும் ஒலி எழுந்தது.

“மதிவதனீ! பேசாமல் நீ மட்டும் கீழே இறங்கிப்போய் விடு. நான் இப்படியே மரக்கிளையில் ஒளிந்துகொண்டு விடுகிறேன்.”

அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தையும், பதற்றத்தையும் உணர்ந்து அவள் மீண்டும் புன்முறுவல் பூத்தாள். அவனுக்கோ இரைந்து பேசவே நா எழவில்லை. அவன் பயந்தான்.

“ஏன்தான் இப்படிப் பயப்படுகிறீர்களோ நீங்கள்? மரியாதையாக என்னோடு கீழே இறங்கி வரப்போகிறீர்களா? அல்லது நான் கீழே இறங்கிப்போய் மரத்தில் ஒரு திருடன் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று என் தந்தையிடம் சொல்லட்டுமா?”

“ஐயோ, வேண்டாம் பெண்ணே நானே வந்து விடுகிறேன்.”

முதலில் மரக்கிளையிலிருந்து கீழே இறங்கிக் கால் வைத்துக்கொண்டு, கையை நீட்டிக் குமாரபாண்டியனை இறக்கிவிட்டாள் அவள்.

மரத்திலிருந்து முன்பின் அறிமுகமில்லாத இளைஞன் ஒருவனோடு தம் பெண் இறங்குவதைக் கண்டு ஒன்றும் விளங்காமல் திகைப்பும் சிறிது சினமும் அடைந்தார் கீழே நின்று கொண்டிருந்த மதிவதனியின் தந்தை.

“அப்பா! இவர்தான் நமது வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கியவர்” என்று அவனை இழுத்துக்கொண்டு போய்த் தன் தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்தாள். சிறு குழந்தை வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் கண்டெடுத்த விளையாட்டுப் பொம்மையை அடக்கமுடியாத ஆசைத்துடிப்போடு பெரியவர்களிடம் கொண்டுபோய்க் காட்டுவது போன்ற மகிழ்ச்சித்துள்ளல் மதிவதனியிடம் இருந்தது. முதலைக்கு வலை விரித்துக்கொண்டு மரத்தின்மேல் காத்திருந்தது, அப்போது அவன் எவராலோ துரத்தப்பட்டு வலையின் குறுக்கே ஓடிவந்தது, அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் வலையைத் தூக்கியது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரே மூச்சில் தன் தந்தையிடம் சொல்லிவிட்டாள் அவள்.

விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டபின்புதான் அந்த மனிதருடைய முகத்தில் மலர்ச்சியைக் காணமுடிந்தது.

“விலைமதிப்பற்ற இந்தச் சங்கை வாங்குவதற்கு யார் வரப்போகிறார்கள் என்று நெடுநாட்கள் காத்திருந்தோம். இத்தனை நாட்களுக்குப் பிறகு நீங்கள் அந்தப் பாக்கியத்தை அடைந்திருக்கிறீர்கள்?" என்று சொல்லிக்கொண்டே குமாரபாண்டியனின் கையிலிருந்த சங்கை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தார். பின்பு அந்தச் சங்கை வைத்திருப்பவருக்கு அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விவரித்துவிட்டு அதை அவனிடமே மறுபடியும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

கணக்குப் பாராமல் பொற்கழஞ்சுகளை அள்ளிக்கொடுத்து வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிய அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன், எந்த நகரத்தில் வசிப்பவன் என்ன பெயரினன் என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார் மதிவதனியின் அருமைத் தந்தை.

“காவிரிப் பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு பெரிய பொன் வணிகரின் புதல்வன்” என்று அவர் நம்பும் விதத்தில் பொய் சொல்லித் தப்பித்துக்கொண்டான் குமாரபாண்டியன். மேலும் தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு பொய்யாக மனத்துக்குள் உருவாக்கித் தடுமாற்றமின்றி வெளியிட்டுக் கொண்டிருந்தான் அவன். பழகிவிட்டால் பொய்யைக்கூட அழகாகச் சொல்ல முடிகிறது. மாபெரும் கற்பனைக் காவியங்களைப் படைத்த மகா கவிகளே அந்த வேலையைத் திறம்படச் செய்திருக்கும்போது தென்பாண்டித் தமிழ் இளவரசனால் மட்டும் முடியாமல் போய்விடுமா?

“திருட்டுப் பயமே இல்லாத இந்தத் தீவில் உங்களை யார் எதற்காகத் துரத்திக்கொண்டு வந்தார்கள்? அவர்களால் உங்களுக்கு எத்தகைய துன்பம் நேர இருந்தது?” என்று மதிவதனியின் தந்தை அவனைக் கேட்டபோது, “தீவின் கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். என் கையிலிருந்த இந்தச் சங்கைப் பறிப்பதற்காகவோ என்னவோ, யாரோ சிலர் என்னைத் துரத்திக்கொண்டு வந்தார்கள் உங்கள் பெண் மட்டும் என்னைக் காப்பாற்றியிராவிட்டால் நான் அவர்களிடம் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும். உங்கள் பெண் மதிவதனிக்கு நாள் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று அவரிடம் கூறினான் அவன். அப்போது அவன் கண்களின் கடையோரத்தில் மிதந்த கள்ளக் குறும்புப் பார்வை அவள்மேல் சென்றது. அந்தப் பார்வையின் விளைவாக அவள் பூத்த புன்னகை படர்ந்து இதழ்க் கோடியில் சுழித்து மறைந்தது.

“ஐயா, பெரியவரே! உங்கள் பெண் துணிவு மிகுந்தவள்" என்று அவளையும் அருகில் வைத்துக்கொண்டே அவரிடம் பிரமாதமாகப் புகழத் தொடங்கினான் குமாரபாண்டியன்.

“சிறு வயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்தவள். இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை. துடுக்குத்தனம் அதிகமாக இருக்கிறது. நினைவு தெரிந்து பொறுப்புவர வேண்டுமே என்றுதான் எனக்கு இடைவிடாத கவலை.”

பெரியவர் அவனிடம் குறைப்பட்டுக் கொண்டார். பேசிக்கொண்டே மூவரும் அங்கிருந்து நடந்தார்கள்.

தன் தந்தைக்குப் பக்கத்தில் துள்ளிக்குதித்து நடந்து வந்த அவள் தாய் மானுக்குப் பக்கத்தில் வரும் குட்டி மான் போல் தோன்றினாள்.

“அப்பா, முதலைக்காக வலை விரித்துக் காத்திருந்தது தான் மீதம். ஒரு முதலைகூட வரவில்லை. இந்த மனிதர் வலையில் விழுந்து நேரத்தை வீணாக்கியிராவிட்டால் ஒரு முதலையாவது தப்பித்தவறி வந்திருக்கும்.” பேசாமல் நடந்து கொண்டிருந்த அவனைப் பேசவைக்க நினைத்த மதிவதனி தன் சொற்களால் வம்புக்கு இழுத்தாள்.

“தான்செய்த குற்றத்துக்குப் பிறர்மேல் குற்றம் சுமத்துவது தான் செம்பவழத் தீவின் நடைமுறை வழக்கமோ? தலைதெறிக்க ஒடிக்கொண்டிருந்தவனை வலைக்குள் இழுத்துச் சுருக்கி மேலே துர்க்கியதுமில்லாமல் என்மேல் பழிசுறவும் செய்கிறாயே!”

“அடே அப்பா! ஒரு வார்த்தை சொல்வதற்குள் இவருக்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள் அப்பா!”

“போதும்! விளையாட்டுத்தனமாக எதையாவது பேசிக் குறும்பு செய்வதே உனக்கு வழக்கமாகப் போயிற்று.”

தந்தையின் வார்த்தைகளிலிருந்த கண்டிப்பின் கடுமை அவள் பேச்சுக்கு அணையிட்டது. மூவரும் பேசாமல் கரை யோரமாகவே நடந்தார்கள்.

“நீங்கள் எந்த இடத்துக்குப் போகவேண்டும்? உங்களுக்கு வழிதெரியாவிட்டால் நாங்கள் உடன் வந்து காண்பித்துவிட்டுப் பின்பு வீடு செல்வோம்” என்றார் பெரியவர்.

“வேண்டாம்! நானே போய்க்கொள்வேன். அதோ கடலோரத்தில் நிற்கிறதே ஒரு கப்பல், அதற்கு அருகில் கரையில் எங்கள் கூடாரம்" என்று கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்படத் தயாரானான் குமார பாண்டியன். கடைசியாக அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை காணும் அவாவோடு அவன் கண்கள் திரும்பிய போது அவள் கண்கள் அதற்காகவே காத்திருப்பதுபோல் அவனைப் பருகிக்கொண்டிருந்தன. “இங்கிருந்து என்றைக்கு உங்கள் கப்பல் புறப்படுகிறது?” என்று பெரியவர் கேட்டார்.

“நாளை வைகறையில் நாங்கள் புறப்படுகிறோம்.”

“மறந்துவிடாதீர்கள். எத்தனையோ எண்ணங்களுக்கு நடுவே எங்களையும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். திரும்பும்போது உங்கள் கப்பல் இந்தப் பாதையாக வந்தால் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை எங்களுக்கு அளியுங்கள்”—பெரியவர் தழுதழுக்கும் குரலில் வேண்டிக் கொண்டார்.

“உங்களை நினைப்பதற்காக நான் அதிகம் துன்பப்பட வேண்டியதேயில்லை, பெரியவரே! இந்தச் சங்கு என் கையில் இருக்கிறவரையில் உங்களையும் உங்கள் பெண்ணையும் நான் நினைக்காமல் இருக்க முடியாது. இதைக் காணும்போது, தீண்டும்போது, ஒலிக்கும்போது உங்களை நினைத்து மகிழ்வேன்.”

“அதுதான் எங்களுக்குப் பெருமை! போய் வாருங்கள், வணக்கம், பெரியவரும், மதிவதனியும் கைகூப்பி வணங்கி விடை கொடுத்தனர். நீண்ட செம்மையான தாமரைப் பூக்கள் இரண்டு அளவாக, அழகாக ஒன்றுபட்டுக் குவிந்ததுபோல் குவிந்த மதிவதனியின் கூப்பிய கரங்களை, அவற்றின் காட்சியை அப்படியே தன் நினைவில் பதித்துக்கொண்டு திரும்பி நடந்தான் குமார பாண்டியன். போகும்போது கையிலிருந்த சங்கை மார்போடு அனைத்துக்கொண்டான். அவன் மனத்தில் என்ன நினைத்துக்கொண்டு அதைச் செய்தானோ? இரண்டு வழிகளிலும் சென்ற நான்கு கண்கள் சிறிது தொலைவு செல்வதற்குள் எத்தனை முறைகள் திரும்பிப் பார்த்துக் கொண்டன என்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது.

குமார பாண்டியனுக்கும், மதிவதனிக்கும் தரையில் நடப்பதாகவே நினைவில்லை. வானில் நிலவில் மிதப்பதுபோல் ஒரு பூரிப்பு. அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்ட அந்தச் சில விநாடிகள் என்றுமே நிலைக்கும் விநாடிகள்; மகா கவிகளைப் பாடவைக்கும் விநாடிகள் அவை.

எதிரே சக்கசேனாபதி தேடிக்கொண்டு வந்திருக்கா விட்டால் குமார பாண்டியனுக்குச் சுய நினைவு வர இன்னும் எவ்வளவு நேரமாகியிருக்குமென்றும் சொல்ல முடியாது.

“இளவரசே! நீங்கள் நாளைக் காலையில் பயணம் செய்ய வேண்டியதை மறந்து இப்படிச் சுற்றிக்கொண்டிருந்தால் உடல் என்ன ஆகும்? போகும்போது சொல்லிக் கொள்ளாமல் வேறு போய் விட்டீர்கள். இரவில் நேரங்கெட்ட நேரத்தில் நான் எங்கே வந்து உங்களைத் தேடுவேன்?”

“கடல் ஒரமாகச் சிறிது தொலைவு உலாவி விட்டு வந்தேன். பகலில் உறங்கிவிட்டதால் எனக்கு உறக்கம் வரவில்லை.”

போன இடத்தில் நடந்த நிகழ்ச்சியை அவன் சக்கசேனாபதியிடம் கூறவில்லை. இருவரும் கூடாரத்தில் போய்ப் படுத்துக்கொண்டார்கள்.

இரவு நேரங்கழித்துப் படுத்துக்கொண்டதனால் காலையில் விடிந்தபோது பொழுது வழக்கத்தைவிட விரைவாகவே புலர்ந்து விட்டது போலிருந்தது. சக்கசேனாபதி விரைவாகவே பயண ஏற்பாடுகளையெல்லாம் முழுமையாகச் செய்து வைத்திருந்தார். பொழுது புலர்ந்தும், புலராமலும் மங்கலாக இருந்தநேரத்தில் அவர்களுடைய கப்பல் புறப்பட்டது. காலை நேரத்தின் மணத்தோடு கூடிய ஒரு வகைக் குளிர் காற்று செம்பவழத் தீவின் உயிர்க் குலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். குமார பாண்டியனும் சக்கசேனாபதியும் கப்பலின் மேல் தளத்துத் திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். மேலே வைகறையின் வானவெளி வெண்ணிலப்பட்டு விரிப்பைப் போல் படர்ந்து கிடந்தது. அந்த வெண்ணிலத் துணியின் கீழே அடியோரத்தில் நெருப்பு நிறத்தில் சிவப்புச் சரிகை மினுமினுப்பதுபோல் சூரியன் உதயமாகியது.

இளவரசன் இராசசிம்மனின் கையிலிருந்து பொன்னிற வலம்புரிச் சங்கு அடிவானத்து ஒளியை வாங்கி உமிழ்ந்து வண்ணம் காட்டியது. ஆட்டமின்றி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் கப்பலின் தளத்தில் நின்று கொண்டு அந்த அழகைச் சுவைப்பதற்கு ஆசையாக இருந்தது அவனுக்கு.

அந்தச் சங்குதான் அவன் மனதுக்கு எவ்வளவு நினைவு களைக் கொடுத்து உதவுகிறது? அதன் நிறத்தை மட்டும் பிரித்து நினைத்தால் அவனுக்கு மதிவதனியின் நிறம் நினைவுக்கு வருகிறது. அதில் பதிந்துள்ள முத்துக்கள் அவள் சிரிப்பு. பவழங்கள் அவள் இதழ்கள். சங்கு வளைந்து திருகும் இடத்திலுள்ள சுழிப்பு அவள் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் சுழிப்பு. அதன் கூம்பிய தோற்றம் அவள் கைகள் செலுத்திய வணக்கம். அந்தச் சங்கை ஏந்தி நிற்கும் அவன் உள்ளங் கைகளுக்கு அவளையே ஏந்திக் கொண்டிருப்பதாக ஓர் இனிய பிரமை.

கரையிலிருந்து யாரோ கைதட்டிக் கூப்பிடும் ஒலி மங்கலாகக் கேட்டது. சங்கை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராசசிம்மன் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். தீவின் கரையிலிருந்து மணல் திட்டு ஒன்றில் மதிவதனி இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு நின்றாள். அவள் தெரிந்தாள். அவளுடைய சொற்கள் அவனுக்குக் கேட்கவில்லை. அவள் தனக்கு விடை கொடுக்க வந்ததைத் தான் கண்டுகொண்டதை எந்தக் குரலால், எந்த அடையாளத்தால் அவளுக்குத் தெரிவிப்பதென்று தெரியாமல் தயங்கினான் இராசசிம்மன். கப்பல் நகர நகர அவள் உருவம் சிறிது சிறிதாக மங்கியது.

அதேபோல் அவன் உருவமும் அவள் கண்களுக்கு மங்கியிருக்கும். அவன் உயிரைக் காப்பாற்றி உதவிய அந்தப் பேதைப் பெண் தன் நெஞ்சின் அன்பையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து அவனுக்கு விடை கொடுக்கிறாள். அதை, ஏற்றுக்கொண்ட நன்றியை அவன் எப்படித் தெரிவிப்பது? வார்த்தைகளில் கூறினால் அந்த ஒலி அவள் செவிகளை அடைவதற்கு முன் கடல் காற்று வாரிக்கொண்டு போய் விடும்! அவளைப்போல் கைகளை ஆட்டித் தெரிவிக்கலா மென்றால் அதைப் பார்த்து, “திரும்பிப் போ!” என்று அவனைத் துரத்துவதாக அவள் தப்பர்த்தம் செய்துகொள்வாளோ என்ற பயம் உண்டாயிற்று அவனுக்கு.

குமார பாண்டியன் இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கு அவனுக்குச் சமய சஞ்சீவியாகக் பயன்பட்டது. அதன் ஊதுவாயில் தன் இதழ்களைப் பொருத்தி, மூச்சை அடக்கிப் பலங் கொண்ட மட்டும் ஊதினான். அந்தச் சங்கொலி கரையை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவனை நினைத்து நெஞ்சின் ஆழம்வரை வற்றிக்கொண்டிருக்கும் ஒரு பேதைப் பெண்ணின் உள்ளக் கடலை அந்தச் சங்கொலி பரிபூர்ணமாக நிறைத்துப் பொங்கச் செய்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை.

கப்பல் வெகு தூரம் வந்து செம்பவழத் தீவின் தோற்றம் மங்கி மறைந்தபின்னும், நான் இன்னும் பலமுறை இந்தத் தீவுக்கு வரவேண்டும். எந்த வகையிலோ நான் தள்ள முடியாத, தவிர்க்க முடியாத ஒரு கவர்ச்சி என்னை இந்தத் தீவுக்கு மறுபடியும் வரவேண்டுமென்று நினைக்கச் செய்கிறது என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டான் குமாரபாண்டியன். “இளவரசே வெய்யில் அதிகமாகுமுன் கீழ்த் தளத்துக்குப் போய் விடலாம், வாருங்கள்” என்றார் சக்கசேனாபதி.

(முதல் பாகம் முற்றிற்று)