பாண்டிமாதேவி/முதல் பாகம்/கூற்றத் தலைவர் கூட்டம்
16. கூற்றத் தலைவர் கூட்டம்
இருட்டில் திடீரென்று பின்புறமிருந்து யாரோ தன் கையை இறுக்கிப் பிடித்ததைக் கண்டு மகாராணி பயந்து கூச்சலிட்டுவிடுவதற்கிருந்தாள். “மகாராணி! நான்தான் பகவதி!” என்று பகவதி மெல்லக் கூறியதைக் கேட்ட பின்பே வானவன்மாதேவியின் அதிர்ச்சி நீங்கியது. தலைவிரி கோலமாக அழுதுகொண்டு நீராழி மண்டபத்துக்கருகே இருந்த பாழுங்கிணற்று விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த வானவன்மாதேவி சற்றும் எதிர்பாராத நிலையில் பகவதியை அங்கே கண்டதும் சிறிது நாணமடைந்து விட்டாள்.
“பெண்ணே! நீ எப்போது இங்கே வந்தாய்? நான் எழுந்திருந்து வந்தது உனக்கு எப்படித் தெரியும்? நீதான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாயே!” மகாராணியின் குரலில் வெகு நேரம் அழுதுகொண்டிருந்ததைக் காட்டும் கரகரப்பு இருந்தது.
“தேவி! இன்றைக்கு உங்கள் மனநிலை சரியில்லை. இப்படி ஏதாவது செய்ய முற்படுவீர்கள் என்று எதிர்பார்த்தே உறங்காமல் இருந்தேன். என்னையும் மீறிக் கண்கள் சிறிது அயர்ந்துவிட்டேன். நான் விழித்துக் கொண்ட போது உங்களைப் படுக்கையில் காணவில்லை. எழுந்திருந்து ஓடி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீங்கள் பெரிய அநியாயத்தைச் செய்வதற்கு இருந்தீர்கள். இப்படிச் செய்யலாமா? தாயே! இந்தத் தென்பாண்டி நாட்டு மக்கள் மாமன்னரான பராந்தகச் சக்கரவர்த்தியை இழந்து விட்டார்கள். குமாரபாண்டியர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. மக்களெல்லாம் கைகூப்பி வணங்கத்தக்க, தென்பாண்டி மாதேவியாக கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறீர்கள். தாங்களும் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த மாதிரிப் போக முயற்சி செய்தால் நாங்கள் யாரைத் தாயே கைகூப்பி வணங்கிப் பெருமைப்படுவோம்” என்று உருக்கமாகப் பேசினாள் பகவதி.
“குழந்தாய்! சாகத் துணிந்து விட்டவளுக்குச் சமுத்திரத்தின் ஆழத்தைப் பற்றி என்ன கவலை. மனத்தில் அளவற்ற வெறுப்பு ஏற்பட்டுவிட்டால் எதைச் செய்யவும் துணிவு வந்துவிடுகிறது. இதோ, இன்னும் சில நொடிப்போது நீ இங்கே வராமலிருந்தால் என்னுடைய துன்ப உடல்கூடு நாளை இந்தப் பாழுங்கிணற்றில் மிதந்துகொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் எவற்றை வேண்டுமானாலும் இவ்வுலகில் நம் விருப்பப்படியே செய்துகொண்டு போவதற்கு இடமில்லை. இறைவன் சித்தம் என்று ஒன்றிருக்கிறது. சாவதோ, பிழைப்பதோ அந்தச் சித்தப்படித்தான் நடக்கிறது. இதோ என் சொந்த அநுபவத்தைத்தான் பாரேன்! இன்று மாலையிலிருந்து நான் படும் கவலைக்களுக்கு ஒரு முடிவும் காண முடியாமல் இந்த முடிவுக்கு வந்தேன். நீ பின் தொடர்ந்து வந்து இதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் செய்துவிட்டாய்."
“எவ்வளவு புண்ணிய பலன் இது? நான் மட்டும் விழித்துக் கொண்டு தேடிப் பின்தொடர்ந்து வந்திருக்கவில்லை யானால் நாளைக் காலை இந்த நாடு முழுவதுமே கதிகலங்கிப் போய் அலறிப் பதைபதைக்கும் படியான காட்சியையல்லவா கான நேர்ந்திருக்கும்?”
“உனக்குப் புண்ணியமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் இது பாவக் கணக்குத்தான். தண்ணீர் தேங்கத் தேங்க அழுகி நாறுவதைப்போல் இந்த உலகத்தில் வாழும் நாட்கள் பெருகப் பெருகப் பாவச் சுமையை அதிகமாகக் கட்டிக்கொள்கிறோம்.”
“தேவி ! தாங்கள் அறியாத ஞானநூல்களையும் கருத்துக்களையும் நானா உங்களுக்குச் சொல்லப்போகிறேன்? இந்த உலகில் பிறருக்குப் பயன்படுமாறு வாழ்வதனால் பாவமோ துன்பமோ பெருகுமானால் அத்தகைய துன்பத்தை விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்ளவேண்டும் என்று நம்முடைய திருவள்ளுவப்பெருமான் கூறியருளிய கருத்து தங்களுக்குத் தெரியாததல்லவே?”
"ஒப்புரவினால் வரும்கேடு எனின் அஃதொருவன்
விற்றுக் கோள் தக்கதுடைத்து”
என்ற குறளின் கருத்தால் மகாராணியைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டுபோக முயன்றாள் பகவதி! சிறிது நேரத்துத் தர்க்க விவாதங்களுக்குப்பின், “வா. குழந்தாய், உன்னுடைய சாமர்த்தியமான பேச்சினால் என்னையே சரியானபடி மடக்கிவிட்டாய் நீ போகலாம் வா” என்று பகவதியின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு அந்தப் புரத்துக்குத் திரும்பினார் மகாராணி வானவன்மாதேவி.
அரண்மனை நிகழ்ச்சியை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒரு நாள் மாலைப்பொழுதுக்குப் பின் வந்த இரவில் வேறோர் பகுதியிலே நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் கவனிபோம்.
யாத்திரீகர்களை அழைத்துக் கொண்டு கன்னியா குமரியிலிருந்து திரும்பிய அண்டராதித்த வைணவன் முன்சிறைக்குத் திரும்பும்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அவர்களெல்லோரும் சத்திரத்து வாசலை அடைந்தபோது அங்கே மடைப்பள்ளியில் வேலை செய்யும் பணிப் பெண்கள் கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள். அவ்விருவர் முகத்திலும் கவலையும், பரபரப்பும் தோன்றின.
“பெண்களே! என்ன நடந்தது? ஏன் இப்படிக் கையைப் பிசைந்தது கொண்டு நிற்கிறீர்கள்? கோதை எங்கே? அதற்குள் தூங்கிவிட்டாளா? எனக்குத் தெரியுமே, அவள் சோம்பேறித் தனம்!” என்று தன் வழக்கப்படி வேடிக்கையாகப் பேச்சை ஆரம்பித்த அண்டராதித்த வைணவன் அந்தப் பெண்களின் முகம்போன போக்கைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஏதோ நடக்கத் தகாதது நடந்திருக்கிறதென்று அவன் மனதில் பட்டுவிட்டது.
“ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள் ? என்ன நடந்தது ? சொல்லுங்களேன். வாயில் கொழுக் கட்டையா அடைத்திருக்கிறது?” என்று இரைந்தான். அவனோடு நிற்கும் யாத்திரீகர்களின் கூட்டத்தைப் பார்த்து அந்தப் பணிப்பெண்கள் சிறிது தயக்கமடைந்தனர்.
அந்தக் குறிப்பைப் புரிந்துகொண்ட அண்டராதித்தன் வாயிற் கதவு முழுவதையும் நன்றாகத் திறந்துவிட்டு, “நீங்கள் உள்ளே செல்லுங்கள். நான் இதோ, இவர்களிடம் என்னவென்று விபரம் கேட்டுக் கொண்டு வருகிறேன். அருகில் இருந்தவர்களிடம் கூறி அவர்களை உள்ளே அனுப்பினான்.
அந்தப் பணிப் பெண்கள் அவன் பக்கத்தில் வந்து நெருங்கி நின்றுகொண்டு பயத்தால் ஒடுங்கிப் போன குரலில், “ஐயா! திடீரென்று அம்மாவைக் காணவில்லை. இருட்டி இரண்டு நாழிகை இருக்கும். தீபங்களை ஏற்றிவிட்டு இங்கே சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து கொண்டு ஒலையில் படித்தரக் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் கழித்து நாங்கள் வந்து பார்த்தபோது அம்மாவைக் காணவில்லை. இங்கிருந்த ஒலை எழுத்தாணி ஆகியவற்றையும் காணோம். தீபம் அணைக்கப்பட்டு இருளடைந்திருந்தது. மறுபடியும் தீபத்தை ஏற்றிக்கொண்டு வந்து இங்கே பார்த்தபோது இந்த உடைந்த வளையல் சில்லுகள் தான் கிடந்தன” என்று அவனிடம் அவற்றைக் காட்டினர் பணிப்பெண்கள். அவன் திகைத்தான்! துணுக்குற்றான். கோதை காணாமற் போய் விட்டாள் என்றபோது அவன் மனத்தில் பலவிதமான ஐயப்பாடுகள் உண்டாயின.
அண்டராதித்தன் உணர்ச்சிமயமானவன், இம்மாதிரிச் சமயங்களில் நிதானமாகச் சிந்தித்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியாது. தம்பி நாராயணன் சேந்தனைப் போய்ச் சந்தித்தால் அவன் ஏதாவது உருப்படியான வழியைக் கூறுவான். உதவியும் செய்வான். தம்பியைத் தவிர வேறு யாரிடமும் இந்தச் செய்தியைச் சொல்லி உதவி கேட்கப் போவதே வெட்கக்கேடு’ - என்று நினைத்தான்.
“பெண்களே, இந்தச் செய்தி உங்களோடு இருக்கட்டும். வேறு யாருக்கும் தெரியவேண்டாம். யாராவது கேட்டால் கோதையை அழைத்துக் கொண்டு நான் அவசர காரியமாக இடையாற்று மங்கலம் போயிருக்கிறேனென்றும், திரும்பி வருவதற்குச் சில நாட்கள் ஆகுமென்றும் சொல்லுங்கள்! இப்போது நான் அவளைத் தேடிக்கொண்டு போகிறேன். சத்திரத்துக் காரியங்களை ஒன்றும் குறைவில்லாமல் நீங்கள் தான் இன்னும் சில நாட்களுக்குக் கவனித்துக் கொள்ள வேண்டும்.”
“நீங்கள் சாப்பிடவில்லையே! சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று பணிப்பெண்கள் கூறினர்.
“இல்லை. யாத்திரீகர்களைக் கவனியுங்கள். நான் புறப்படுகிறேன்” என்று சத்திரத்திற்குள்ளே காலை வைக்காமல் அப்படியே திரும்பி நடந்தான் அண்டராதித்த வைணவன். அவன் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது. என்ன செய்யலாம் : உலகத்தில் எந்தப் பொருள் காணாமற்போனால் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குக் கூட வெட்கப்பட வேண்டுமோ, அந்தப் பொருளைக் காணவில்லையென்றால் மன வேதனையை என்னவென்று சொல்லி முடியும்! ஏற்கெனவே நடந்து நடந்து ஓய்ந்து போயிருந்த அவன் கால்கள் அந்தக் களைப்பையும் மறந்து இடையாற்றுமங்கலத்திற்குச் செல்லும் கிளை வழியில்வேகமாக நடந்தன. சுசீந்திரம் வரையில் வழி, ஒரே சாலையாகச் சென்று பாதிரித் தோட்டத்துக்குத் தெற்கே விழிஞம், குமரி, இடையாற்றுமங்கலம் என்று மூன்று இடங்களுக்கும் தனித்தனியே பிரிகிறது.
ஜனசஞ்சாரமற்ற, ஒசை ஒலிகள் அடங்கிப்போன அந்த நள்ளிரவில் தன்னந்தனியனாய் மனத்தில் கவலைகளையும், குதி காலில் களைப்பையும் சுமந்து கொண்டு நாராயணன் சேந்தனைக் கண்டு ஒரு வழி செய்யலாம் என்ற ஒரே நம்பிக்கையோடு அண்டராதித்தன் நடந்து கொண்டிருந்தான்.
பாதிரித் தோட்டத்தை நெருங்கியபோது சாலையில் அவன் மேலே நடந்து செல்ல முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது. யாரோ ஒர் ஆள் அசுரவேகத்தில் குதிரையை விரட்டிக்கொண்டு வந்தான். குதிரை பாய்ந்தோடிச் சென்ற வேகத்தில் அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவனின் தோற்றத்தைக்கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அடுத்து அந்தக் குதிரைக்குப் பின்னால், தலைதெறித்துப் போகிறாற் போன்ற வேகத்தில் இரண்டு மூன்று ஆட்கள் துரத்திக் கொண்டு ஓடுவதையும் அவன் பார்த்தான். சாலையோரத்தில் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டு அவர்கள் செல்கிறவரை தாமதித்தான் அண்டராதித்த வைணவன்.
சாலையில் ஏற்பட்ட புழுதி அடங்குவதற்காகக் கண்களை மூடிக்கொண்டு ஒரமாக ஒதுங்கி நின்றவன், சரி! யார் குதிரையில் போனால் என்ன ? எனக்கு என்ன வந்தது?’ என்று நினைத்தவனாய் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு மேலே நடப்பதற்காக அடி எடுத்து வைத்தபோது சாலையோரத்து மரத்தடியில் யாரோ முனகுவது போல் தீனக்குரலில் ஒலி எழுந்தது.
“யார் அங்கே?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே மரத்தடிக்குத் திரும்பிச் சென்றான் அண்டராதித்தன். அவன் உடல் நடுங்கியது! மனத்தில் பயமும் பதற்றமும் ஏற்பட்டன. பக்கத்தில் சென்றபோது வாயில் துணியை அடைத்து யாரோ ஒர் ஆளை அடி மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்திருப்பது போல் தெரிந்தது. இன்னும் நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்ததில் அப்படிக் கட்டி வைக்கப்பட்டிருந்தது ஒரு பெண்பிள்ளை என்று அறிந்தான். மரக்கிளைகளின் அடர்த்தியாலும், இலைகளின் செறிவாலும் அந்த இடத்தில் நிலா ஒளி படரவில்லை.
“என்ன அக்கிரமம்? பெண்பிள்ளையை மரத்தில் கட்டிப்போட்டுத் துன்புறுத்திக் கொள்ளையடிக்கிற அளவுக்கு இந்த நாட்டில் கொள்ளைத் தொழில் கேவலமான முறையில் வளர்ந்து விட்டதா?’ என்று எண்ணிக் கொண்டே பரபரப்படைந்து அந்தப் பெண்ணை அவிழ்த்து அவளுடைய மென்மையான உடலைத் தன் கைகளால் தாங்கிக்கொண்டு வந்து வெளிச்சத்தில் வைத்தான். நிலா ஒளியில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அவன் வாயிலிருந்து, “ஆ! கோதை! நீயா?” என்ற அலறல் கிளம்பிப் பாதிரித் தோட்டத்துப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது. ஆம்! அவள் அவனுடைய மனைவி, கானாம்ற்போன கோதையேதான்!
அண்டராதித்தன் பதறிப்போய் அவளுடைய வாயை மூடிக் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்த்து எடுத்தான். தண்ணிர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மயக்கத்தைப் போக்கினான். கோதைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்ததுடன் தன் பக்கத்தில் கணவனைப் பார்த்த போது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. “கோதை என்ன நடந்தது? எப்படி இங்கு வந்தாய்? யார் உன்னை இந்த மரத்தில் கட்டிப்போட்டார்கள்? அண்டராதித்தன் கொதிப்படைந்த உள்ளத்துடன் இந்தக் கேள்வியை அவளிடம் கேட்டான். அவள் கண்களில் நீர் துளிர்த்தது. தான் சத்திரத்துக் குறட்டில் கணக்கெழுதிக் கொண்டிருந்தபோது நடந்தது மட்டும் தான் அவளுக்கே தெளிவாக நினைவு இருந்தது. அதைக் கணவனிடம் கூறினாள்.
“அப்படியானால் உன்னிடமிருந்து அவர்கள் ஆபரணங்களைத் திருடவில்லை. வேறு எந்த விதத்திலும் உன்னைத் துன்புறுத்தவில்லை. உன் கையிலிருந்த ஒலையையும் எழுத்தாணியையும் மட்டும் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று தானே சொல்லுகிறாய்?”
“ஆமாம்! அப்போது நான் கூச்சலிட முயன்றேன். அவர்கள் என் வாயில் துணியைத் திணித்துத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். நான் மூர்ச்சையடைந்துவிட்டதால் அதற்குப்பின் நடந்ததொன்றும் தெரியாது. இப்போது தான் தெளிவடைந்து இங்கே உங்களை என் கண்முன்னால் காண்கிறேன்” என்றாள் கோதை.
“அப்படியானால் அந்த ஆட்கள் உன்னை அநாவசியமாக இவ்வளவு தூரம் தூக்கி வந்து இந்த மரத்தில் ஏன் கட்டிப் போட்டிருந்தார்கள்?”
“அதுதான் எனக்கும் விளங்கவில்லை ! ஒலைகளையும், எழுத்தாணியையும் திருடுவதற்காகக் கூடச் சில ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் வேறோரு சந்தேகமும் உண்டாகிறது!” என்று கோதை சொல்லவும், “என்ன சந்தேகம்? சொல்லேன்” என்றான் அண்டராதித்தன்.
“விளக்கை வாயால் ஊதி அணைத்துவிட்டார்கள். அதனால் அந்தத் தடியர்களை இருட்டில் என்னால் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. ஒரு வேளை அன்றொரு நாள் இரவு சத்திரத்துக் கதவை அடைக்கிற நேரத்துக்கு வந்து வம்பு செய்தார்களே, அவர்களாக இருக்கலாமோ?”
“இருந்தாலும் இருக்கும். நீ செய்ததும் வம்புதானே? கதவை அடைத்து, ‘இடங்கொடுக்க மாட்டோம் என்று சொன்னது சரி, அதோடு போகாமல் மேலே நின்று கொண்டு சாணத்தை வேறு கரைத்துக் கொட்டினாய். எல்லாம் உன்னால் வருகிற வினைதான். உன் துடுக்குத்தனத்தால் எனக்கு இல்லாத வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வைக்கிறாய்.”
“சரி! நீங்கள் எப்படி இவ்வளவு கணக்காக இந்த இடத்துக்குத் தேடி வந்தீர்கள்?” என்று கேட்டாள் கோதை, நடந்ததையெல்லாம் அவளுக்கு விவரித்துக் கூறினான்.
“எப்படியானால் என்ன? எப்படியோ என்னைக் கண்டு பிடித்துவிட்டீர்கள். உங்கள் தம்பியின் ஆலோசனையும், உதவியும் இல்லாமலே நீங்கள் பெற்ற முதல் வெற்றியாகட்டும் இது. வாருங்கள், சத்திரத்துக்குப் போகலாம்! இந்த இரவில் இப்படி நடுக்காட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பானேன்?” என்று அவனையும் கூப்பிட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் கோதை.
மறுநாள் கள்லை புறத்தாய நாட்டுக் கோட்டையில் நாஞ்சில் நாட்டின் கூற்றத் தலைவர்கள் வந்து கூடிவிட்டனர். தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர், பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால மாறனார், அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள் முதலிய நாஞ்சில் நாட்டுப் பெருமக்களின் முதன்மையாளர்களெல்லாம் மகாராணி வானவன் மாதேவியாரின் அவசரக் கட்டளையை மதித்து ஒடோடியும் வந்து கூடியிருந்தனர்.
அவ்வளவு அவசரமாக மகாசபையைக் கூட்டுவதின் நோக்கம் என்னவாக இருக்குமென்று புரிந்துகொள்ளும் ஆவல் நிரம்பிய மனத்தோடு காத்திருந்தனர் அவர்கள்.
ஆனால் மகாசபைக் கூட்டம் எந்த இருவர் இல்லாவிடில் நிச்சயமாக நடக்க முடியாமல் போய்விடுமோ, அந்த இருவரும் அதுவரையில் வந்து சேரவே இல்லை. முடிந்தால் முதல் நாள் இரவே வந்துவிடுவதாகச் சொல்லி விட்டுப் போயிருந்த தளபதி வல்லாளதேவன், மறுநாள் காலை விடிந்து பத்து நாழிகைக்கு மேலாகியும் இடையாற்று மங்கலத்திலிருந்து திரும்பி வரவில்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பியும் வரவில்லை. கூற்றத் தலைவர்களும், மகாராணியும், பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் முதலியோரும் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.