பாண்டிமாதேவி/முதல் பாகம்/எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்

இடையாற்றுமங்கலம் மாளிகையில் மறுநாள் பொழுது புலர்ந்தபோது இந்தக் கதையைப் படிக்கின்ற நேயர்கள் ஏற்கனவே எதிர்பார்த்த சில நிகழ்ச்சிகளும், முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத சில நிகழ்ச்சிகளும் நடந்தன.

பாதாள மண்டபத்துச் சுரங்கத்திலிருந்து வெளியேறிய தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தில் பிரவேசித்ததும், அலங்காரக் கிருகத்தில் பொன்னாலும், மணியாலும் இழைத்த சப்ரமஞ்சக் கட்டிலில் உடலுக்குச் சுகம் தேடுவதைக் கொடுந் தவறாக எண்ண வேண்டிய துறவி கொண்டாட்டத்தோடு படுத்துத் துரங்குவதைக் கண்டதையும், வியந்து நினைத்ததையும், சென்ற பகுதிகளில் கண்டோம்.

அதன்பின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்று முன்பு படுத்திருந்த விருந்து மாளிகைக் கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டான். உறக்கம் கண்களைச் செருகவைக்கும் நேரத்தில் யாரோ விளக்கும் கையுமாக உள்ளே நுழையவே ஒளி கண்களில் உறுத்தி விழித்துக் கொண்டான்.

விழித்துக்கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பார்த்தபோது, நாராயணன் சேந்தன் விளக்கோடு எதிரே நின்று கொண்டிருந்தான். “யார்? சேந்தனா? வா, அப்பா! ஏது இந்த நேரத்துக்கு இப்படி மறுபடியும் வந்தாய்? தளபதி நன்றாகத் தூங்குகிறாரா, இல்லையா என்று பார்த்து விட்டுப்போக வந்தாயோ? அல்லது மகாமண்டலேசுவரரே போய்ப் பார்த்துவிட்டு வா என்று அனுப்பினாரா?” என்று சிரித்துக்கொண்டே சற்றுக் குத்தலாகக் கேட்டான் வீரத்தளபதி வல்லாளதேவன்.

நாராயணன் சேந்தனும் பதிலுக்கு ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டே, தளபதி! உங்கள் கேள்வி விசித்திரமாக அல்லவா இருக்கிறது ? ‘தூங்குகிறவர்களைத் துங்கிக் கொண்டிருக்கிறார்களா? என்று பரிசோதனை செய்ய இங்கிருப்பவர்கள் இன்னும் பித்தர்களாகி விடவில்லை. நானும் இந்த மாளிகையில் தான் படுத்துறங்குவது வழக்கம். இப்போது நான் படுக்க வந்திருக்கிறேன். நீங்கள் தூங்குகிறீர்களா, துங்கவில்லையா என்பதைப் பார்ப்பதற்காக வரவில்லை” என்று குத்தலாகவே மறுமொழி கூறினான்.

“எங்கே அப்பா ! இந்த இடையாற்றுமங்கலம் மாளிகையில் சுலபமாக அப்படி எதையும் நம்பிவிடவாமுடிகிறது: இங்கே தூங்கிவிட்டதாக நினைக்கப் படுகிறவர்கள் எல்லோரும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இரவில் தூங்காமலோ, அல்லது துரங்க முடியாமலோ, செய்ய வேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்களெல்லாம் மகாமண்டலேசுவரரின் நிர்வாகத்தில் இருக்கலாம்? வேண்டுமென்றேதான் மறுபடியும் நாராயணன் சேந்தனின் வாயைக் கிளறினான் தளபதி. ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் நாராயணன் சேந்தன் விசேடமான பதில் எதையும் சொல்லவில்லை.

“தளபதி! நீங்கள் எதை வேண்டுமானால் சொல்லிக் கொண்டிருங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது. நான் படுத்துத் தூங்கப் போகிறேன்” என்று சொல்லி மழுப்பிவிட்டுத் தீபத்தின் ஒளியைக் குறைத்து ஒரு மூலையில் வைத்த பின் எதிர்ப்புறமி ருந்த மற்றோர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டு விட்டான் அவன். உடனே தூங்கியும் விட்டான். சில விநாடிகளுக்குள் விருந்து மாளிகையின் பலமான சுவர்கள் பிளந்து விழுந்துவிடும் போல் கர்புர் என்று பிரமாதமான குறட்டை ஒலி நாராயணன் சேந்தனின் கட்டிலிலிருந்து கிளம்பியது.

வல்லாளதேவன் அந்த ஓசையைச் சகித்துக் கொள்வதற்காக இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டான். அப்படியும் அந்த ஒலி, செவிக்குள் புகுந்து துளைத்தது. அப்படியே எழுந்திருந்து போய்க் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் அந்தக் குட்டைத் தடியனின் உச்சிக் குடுமியை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் மொத்துமொத்தென்று மொத்தி விடலாமா என்று தோன்றியது அவனுக்கு. வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காகத் தனக்குக் காவலைப்போலத் தன்னருகே படுத்துகொள்ளச் சொல்லி மகாமண்டலேசுவரர் அவனை அங்கே அனுப்பியிருக்கலாமென்று தளபதி வல்லாளதேவனின் மனத்தில் ஒரு சந்தேக எண்ணம் உறைக்க ஆரம்பித்தது.

துறவிக்கு மகாமண்டலேசுவரர் தம்முடைய மாளிகையிலேயே எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார் போலிருக்கிறது? இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது; கிளியைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைத்து வைத்துத் தம் சொந்த இன்பத்துக்காக அதற்குப் பாலும் பழமும் கொடுக்கின்ற மனிதர்களைப் போல, ஏதோ ஒரு பெரிய சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் துறவியை இடையாற்று மங்கலம் தீவுக்குள் உலகத்துக்குத் தெரியாமல் இவர் ஒளித்து வைத்திருக்கிறார்.

‘மகா மேதையாகவும் குலதெய்வமாகவும் இவரை எண்ணிக் கொண்டிருக்கும் மகாராணியிடம் இந்த இரகசியங்களை நான் அறிவித்தால் நம்பக்கூடத் தோன்றாது, காலம் வரும். அப்போது ஆதார பூர்வமான சான்றுகளோடு எல்லா உண்மைகளையும் விவரமாக வெளிப்படுத்துகிறேன்.’

நாராயணன் சேந்தனின் குறட்டை ஒலியால் தூக்கத்தை இழந்த வல்லாளதேவன் மேற்கண்டவாறு பலவகைச் சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்.

“அட என்னதான் ஆசை இருக்கட்டுமே! மனிதருக்கு மானம், வெட்கம் ஆகிய பண்புகள் கூடவா ஆசை வந்தால் இல்லாமல் போய்விடும்? யாரோ ஒரு சாமியாரை மயக்குவதற்கும் சொந்த மகளை அவனோடு சிரித்துப் பேசுமாறு செய்கிறார். பிறரை மயக்கிக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் மகளின் சிரிப்பும், பேச்சும்தான் இவருக்குச் சரியான சாதனம் போலும்! இவ்வளவு படித்தவருக்குப் பெண்களுக்கென்று இந்த நாட்டில் பரம்பரைப் பரம்பரையாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடு, பண்பு, ஒழுக்கம் எல்லாம் மறந்தா போய்விட்டன? ஐயோ! இந்த மனிதருடைய அந்தரங்க வாழ்க்கையை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. இன்னொருபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது. இவ்வளவும் ஆசை படுத்துகிற பாடு அல்லவா?”

இப்படியே இன்னும் என்னென்னவோ சிந்தித்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்துகொண்டிருந்த தளபதி வல்லாளதேவன் பொழுது விடிவதற்குள் ஏதோ ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தவனாகச் சட்டென்று எழுந்திருந்தான்.

எவ்வளவு முக்கியமான காரியங்கள் குறுக்கிட்டாலும் தம்முடைய தினசரி வழக்கங்களைக் குன்றாமல் கடைப்பிடிப்பவர் இடையாற்று மங்கலம் நம்பி. புலரிப்பொழுதாகிய வைகறையின் பனிக்காற்று நீங்குவதற்கு முன்பே எழுந்து போய்ப் பறளியாற்றில் நீராடிவிடுவார். ஈர ஆடையைக் களையாமல் நந்தவனத்துக்குச் சென்று தம் கையாலேயே மலர்களைக் கொய்துகொண்டு வருவார். கிழக்கே கதிரவனின் செங்கிரணங்கள் பொன் வண்ணக்கோலமிடத் தொடங்கும் நேரத்தில்தான் அவர் பூஜையை முடித்துக் கொண்டு மாளிகையிலுள்ள சிவன் கோவிலிலிருந்து வெளிவருவார். அப்போது அவரைப் பார்த்தால் கோவில் வாயிலில் ஒளி மயமான மற்றொரு சூரியன் உதித்து நடந்து வருவது போலிருக்கும். சிவந்த கம்பீரமான நெடிதுயர்ந்த மேனியில் வெள்ளிக் கம்பிகள் பதித்தாற்போலத் திருநீற்றுக் கீற்றுக்களும் வெண்ணிற ஆடையும் விளங்க அவிழ்த்து முடித்த ஈரத் தலையோடு அவர் நடந்து வருவது அற்புதமான காட்சியாக இருக்கும். எவ்வளவு தலைபோகிற கர்ரியமானாலும் இந்த அன்றாட அனுட்டானங்களில் குறைவே ஏற்படாது, மாறுதலும் நிகழாது.

அன்றைக்கு மகாசபைக் கூட்டத்துக்காகப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போகவேண்டுமென்ற நினைவு இருந்ததனால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்து விட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் தம்முடைய நித்திய கர்மானுட்டானங்களை முடித்துக் கொண்டு வெளிவந்தபோது, நாராயணன் சேந்தன் விருந்து மண்டபத்திலிருந்து பரபரப்பாக ஓடி வந்தான்.

“என்ன சேந்தா? இப்போதுதான் திருப்பள்ளி எழுச்சி ஆயிற்றா! தளபதி வல்லாளதேவன் இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறான்?” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டார் மகாமண்டலேசுவரர்.

“சுவாமி! நேற்றிரவு நான் விருந்து மண்டபத்துக்குப் படுத்துக்கொள்ளச் சென்றபோது கூடத் தளபதி அங்கேதான் உறங்கிக்கொண்டிருந்தார். நான் சென்றதும் விழித்துக் கொண்டு சிறிதுநேரம் என்னோடு பேசிக்கொண்டும் இருந்தார். இப்போது காலையில் எழுந்திருந்து பார்த்தால் ஆளைக் காணவில்லை” என்று மூச்சுவிடாமல் பதற்றத்தோடு தான் சொல்ல வந்த செய்தியைக் கூறி முடித்தான் நாராயணன் சேந்தன்.

இடையாற்று மங்கலம் நம்பி அதைக் கேட்டுச் சிறிதும் திகைப்படையவில்லை. “ஏன் இவ்வளவு பதறுகிறாய், சேந்தா? பக்கத்தில் எங்கேயாவது எழுந்திருந்து போயிருப்பான். சிறிது நேரத்தில் தானாக வந்துவிடுவான். இன்றைக்கு மகாசபை கூடுகிறது. கோட்டைக்குப் போகவேண்டும். இருவரும் இங்கிருந்து புறப்பட்டுச் சேர்ந்தே போகலாம் என்று அவனிடம் நேற்றிரவே நான் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அவன் என்னிடம் சொல்லாமல் போவானா?” என்றார்.

“இல்லை, சுவாe! அநேகமான இடையாற்று மங்கலம் தீவு முழுவதும் தேடிப்பார்த்து விட்டேன். கால் கடுக்கச் சுற்றியாகி விட்டது. காலையில் எழுந்ததிலிருந்து இதே வேலைதான். ஆனால் அந்த மனிதரைக் காணவில்லை. மாளிகைக்குள் இருந்தால்தான் உண்டு. ஆனால் இங்கும் அவர் இல்லையென்று தெரிகின்றது.”

“சேந்தா! தளபதி எப்படிப் போயிருக்க முடியும் ? என்னிடம் அவ்வளவு உறுதியாகச் சொல்லிருந்தவன் போவானா ? எதற்கும் நீ படகோட்டி அம்பலவன் வேளானுடைய குடிசைக்குப் போய்க் காலையில் யாருக்காவது அவன் படகு செலுத்திக் கொண்டுபோனானா என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டு வா. பறளியாற்றில் தண்ணிர் அதிகமாகப் போய்க்கொண்டிருப்பதனால் அம்பலவன் வேளானின் உதவியில்லாமல் யாரும் அக் கரைக்குச் சென்றிருக்க முடியாது."

நாராயணன் சேந்தன் படகோட்டியைக் கண்டு விசாரித்து வருவதற்காக அவன் குடிசையை நோக்கிப் புறப்பட்டான். அதுவும் மகாமண்டலேசுவரரின் சொற்களைத் தட்டக்கூடாதே என்பதற்காகத்தான். அவன் மனத்தைப் பொறுத்தவரையில், தளபதி வல்லாளதேவன் அப்போது அந்தத் தீவிலேயே இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. தளபதி முதல் நாள் இரவு படுத்துக்கொள்ளச் சென்றபோது, தன்னிடம் குத்தலாகக் கேட்ட கேள்விகளை நினைத்துப் பார்த்தபோது அவன் எண்ணம் வலுப்பட்டது. ஏதேனும் ஒரு விதத்தில் தளபதி வல்லாளதேவனுக்கு மகாமண்டலேசுவரரிடம் அவநம்பிக்கையோ, அதிருப்தியோ ஏற்பட்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாக இப்படித் தனக்கு ஏற்படுகிற சந்தேகங்களை உடனே இடையாற்று மங்கலம் நம்பியிடம் தெரிவித்துவிடுவது அவன் வழக்கம். அன்று ஏனோ தளபதியைப் பற்றித் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டுமென்ற எழுச்சியோ ஆர்வமோ அவனுக்கு உண்டாகவில்லை.

படகோட்டி அம்பலவன் வேளானின் குடிசை தோணித்துறைக்கு அருகே பறளியாற்றின் கரையில் அமைந்திருந்தது. எண்ணங்களின் சுமை கணக்கும் மனத்துடன் தன்போக்கில் அம்பலவன் வேளானின் இருப்பிடத்துக்கு நடந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் எதிரே வந்த யார் மேலேயோ பட்டென்று மோதிக் கொள்வதற்கு இருந்தான்.

“ஐயா! எங்கே இப்படி? அதிகாலை நேரத்தில் கிளம்பி விட்டீர்கள்?’ என்று எதிரே வந்த ஆள் விலகி நின்று கேட்டபோது, அது அம்பலவன் வேளான் குரல்தான் என்பதைப் புரிந்து கொண்டு நிமிர்ந்தான் நாராயணன் சேந்தன். “நல்ல வேளை கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் நீயே வந்துவிட்டாய்? உன்னைத்தான் அப்பா தேடிக் கொண்டு புறப்பட்டேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் விசாரிக்கவேண்டும்” என்று தணிந்த குரலில் அவனிடம் கூறினான் சேந்தன். அதைக் கேட்டுக் கொண்டே “ஐயா! இந்த அநியாயத்தைக் கேட்டீர்களா? நான் என்ன செய்வேன்? யாரிடம் போய்ச் சொல்வேன்? நேற்றிரவு துறையில் இழுத்துக் கட்டிவிட்டு வந்த தோணியைக் காலையில் எழுந்திருந்து போய்ப் பார்த்தால் காணவில்லை” என்று பதற்றமும் நடுக்கமும் செறிந்த குரலில் சொன்னான் அம்பலவன் வேளான். வேளான் கூறியதைக் கேட்டுச் சேந்தன் மேலும் வியப்பில் மூழ்கினான்.

“ஐயா! நீங்கள்தான் ஏதாவது ஒருவழி சொல்ல வேண்டும். இன்றைக்கு மகாமண்டலேசுவரரும் தளபதியும் காலையில் அக்கரைக்குப் போய்க் கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்று கூறியிருந்தார்கள். கோட்டையில் இன்று காலை மகாசபைக் கூட்டமாமே? இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் துறைக்கு வந்து படகு எங்கே?’ என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? ஐயோ! இன்றைக்கென்றா இப்படி நடக்கவேண்டும்? எல்லாம் என் தலையெழுத்து” என்று அலுத்துக் கவலைப்பட்டுக் கொண்டான் படகோட்டி அம்பலவன் வேளான்.

“இன்று காலையில் எப்போது போய்ப் பார்த்தாய்?” என்று நாராயணன் சேந்தன் கேட்டான்.

“இப்போதுதான் சிறிது நேரத்துக்கு முன்பு போய்ப் பார்த்தேன். தோணியைக் காணவில்லை என்று தெரிந்தும் பதறிப்போய் உடனே உங்களைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டேன். நீங்களே எதிரில் வந்து விட்டீர்கள்.”

“அதுசரி! நேற்றிரவு துறையில் தோணியைக் கட்டிவிட்டு வரும்போது துடுப்புகளையும் அதற்குள்ளேயே போட்டு விட்டு வந்திருந்தாயோ?”

“ஆமாம், ஐயா! துடுப்புக்களை எப்போதும் தோணிக்குள்ளே போட்டு வைத்துவிட்டு வருவதுதான் வழக்கம் அதுபோலவே நேற்றும் செய்தேன்.”

“ஆகா! நான் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது” என்றான் சேந்தன்.

“என்ன நினைத்தீர்கள் ஐயா! படகை யார் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா?” என்ற ஆவல் துடிக்கும் தொனியில் நம்பிக்கையின் சாயை மலர வினவினான் படகோட்டி அம்பலவன் வேளான்.

“அப்பா! அதை இப்போது உன்னிடம் உறுதியாகச் சொல்லி விட முடியாது. ஒரு தினுசாக எனக்குள் தீர்மானித்திருக்கிறேன். படகைக் கொண்டு போனவர்கள் யாராக இருக்கலாம் என்பது பற்றிப் பின்பு ஆராயலாம். су і пr | முதலில் மகாமண்டலேசுவரரிடம் போய்ப் படகு காணாமற்போன செய்தியைத் தெரிவிப்போம்” என்று கூறி வேளானையும் உடன் அழைத்துக் கொண்டு திரும்பினான் சேந்தன்.

சிவ பூஜை செய்துவிட்டு நிர்மலமான மனமும், உடலுமாக மாளிகை வாசலில் வந்து நின்ற இடையாற்று மங்கலம் நம்பிக்கு நாராயணன் சேந்தன் வந்து கூறிய செய்தியைக் கேட்டதும் சஞ்சலமும், சிந்தனையும் உண்டாயிற்று. “வல்லாளதேவன் காலைவரை தங்கியிருந்து தன்னோடு உடன் புறப்படுவதாகச் சொல்லியிருந்தும் அம்மாதிரி மோசம் செய்வானா?” என்று சிரித்தார். ஒரு வேளை அப்படியே அவன் புறப்பட்டுப் போயிருந்தாலும் கோட்டையைத் தவிர வேறெங்கே போயிருக்க முடியும்? போனதை ஒரு குற்றமாகச் சொல்லிவிட முடியாது. போகும்போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போயிருக்கக் கூடாதோ? என்று சமாதானமும் அடைந்தார். தளபதி இல்லாவிட்டால் என்ன ? படகுக்குச் சொல்லியிருந்த நேரத்தில் வேளானை வரச் சொல்லி நாராயணன் சேந்தனையும் உடன் அழைத்துக்கொண்டு நாம் தனியே புறப்பட வேண்டியது தான் என்று தமக்குள் அவர் ஒரு முடிவுக்கு வந்தபோது அம்பலவன் வேளானும், நாராயணன் சேந்தனும் வந்து, படகு காணவில்லை என்ற அந்தச் செய்தியைக் கூறினார்கள். அவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். வேறு படகுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.