பாண்டிமாதேவி/முதல் பாகம்/தென்னவன் ஆபத்துதவிகள்
18. தென்னவன் ஆபத்துதவிகள்
இன்னவென்று புரியாத எண்ணங்களாலும், அந்த இரவில் இடையாற்று மங்கலம் மாளிகையில் நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளாலும், தளபதியின் உள்ளம் குழப்பமடைந்திருந்தது. நாராயணன் சேந்தன் ஏற்றிக்கொண்டு வந்து வைத்திருந்த சிறிய அகல் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒளியில் சேந்தனைப் பார்த்தான் தளபதி, சேந்தன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். தளபதிக்கு உறக்கம் வரவில்லை. அங்கு இருப்புக்கொள்ளவும் இல்லை. பயமும், கலவரமும் நிறைந்ததொரு உணர்வு அந்த இருளிலேயே அங்கிருந்து வெளியேறி விடுமாறு அவனைத் துரண்டியது.
விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டுப் பறளியாற்றின் கரையிலுள்ள படகுத் துறையை நோக்கி நடந்தான் அவன். துறைக்கு அருகேயிருந்த குடிசையின் முகப்பில் யாரோ கட்டிலில் படுத்துத் துரங்கிக் கொண்டிருப்பதைத் தளபதி கண்டான். பக்கத்தில் நெருங்கிச் சென்று பார்த்தபோது படுத்திருப்பது படகோட்டி அம்பலவன் வேளான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. தளபதி சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னை அப்போது அந்த நிசி வேளையில் இடையாற்று மங்கலம் தீவிலுள்ள யாருடைய விழிகளும், எந்த இடத்திலிருந்தும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கரையோரத்துப் புன்னை மரத்தில் இழுத்துக் கட்டியிருந்த படகை ஒசைப்படாமல் அவிழ்த்தான். நல்ல வேளையாகத் துடுப்புக்களையும் படகிலேயே வைத்து விட்டுப் போயிருந்தான் வேளான். அப்போது பறளியாற்றில் கரை நிமிர ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்துத் தன்னால் படகைச் செலுத்த முடியுமா?-என்று எண்ணித் தயங்கிக் கொண்டிருக்கவில்லை அவன். கேவலம், ஒரு சாதாரணப் படகோட்டியான அம்பலவன் வேளானின் கைகளுக்குள்ள வன்மை, புறத்தாய நாட்டின் மாபெரும் படைத் தலைவனின் கைகளுக்கு இல்லாமலா போய் விடும்? தளபதியின் கைகள் துடுப்பை வலித்தன. படகு அக்கரையை நோக்கி மெல்ல நகர்ந்து வெள்ளத்தின் வேகத்தையும், இழுப்பையும் சமாளிப்பது கடினமாகத்தான் இருந்தது. இளமையும், வளமையும், தோற்றமும், ஏற்றமும் உள்ள நூற்றுக்கணக்கான செந்நிறக்குதிரைகள் ஒரே திசையில் கால்கள் போனபடி தறிகெட்டுப் பாய்ந்து வெறி கொண்டு ஓடினால் என்ன வேகம் இருக்குமோ, அந்தப் பயங்கர வேகத்தைத் தான் அப்போதைய பறளியாற்று வெள்ளத்துக்கு உவமை கூற வேண்டும்.
புறப்பட்ட இடத்திலிருந்து நேரே அம்பு பாய்வதுபோல் அக்கரைக்குப் போக முடியவில்லை. வெள்ளத்தின் போக்கில் இழுபட்டு ஒருபுறமாகச் சாய்ந்து மெதுவாகவே சென்றது படகு. அவர்கள் வரும்போது இருந்ததை விட வெள்ளத்தின் வேகம் இப்போது அதிகரித்திருந்தது. தளபதி வல்லாளதேவன் அக்கரையை அடைந்த போது வெகு நேரமாகிவிட்டது. பொழுது விடிவதற்கு இன்னும் நான்கைந்து நாழிகைகளே இருந்தன. நிலா ஒளி சற்று மங்கியிருந்தது.
அங்கிருந்த மரமொன்றில் படகை இழுத்துக் கட்டிவிட்டுக் கரையோரமாக நடந்து முன்னிரவில் தான் குதிரையை விட்டிருந்த மரத்தடியை அடைந்தான். பின் இரவு நேரத்தின் குளிர்ந்த காற்றும் கரையோரத்துத் தாழம் புதர்களில் இருக்குமி டம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும் சோர்ந்திருந்த தளபதி வல்லாளதேவனின் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டின.
மரத்தடியில் அவன் குதிரை துவண்டு போய்ப் படுத்திருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மரத்தடியில் ஆளரவம் கேட்டுக் கிளைகளைச் சரணடைந்திருந்த பறவைகள் சிறகுகளை அடித்தும், ஒலிகளைக் கிளப்பியும், தங்கள் இருப்பைப் புலப்படுத்தின. தளபதி குதிரையைத் தட்டி எழுப்பினான். குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்று உடலைச் சிலிரித்தது. ஒசை ஒலியடங்கிய பேரமைதி செறிந்த அந்தப் போதில் பயங்கரமாகப் பறளியாற்றங்கரை எங்கனும் எதிரொலித்தது அந்தக் கனைப்பொலி.
சூழ்நிலை இருக்கிற விதத்தைப் பார்த்தால் இன்றும் இனி வரும் சில நாட்களிலும், புறத்தாய நாட்டுக் கோட்டையைச் சுற்றி மகாராணியாருக்கு என்னென்ன ஆபத்துக்கள் காத்திருக்குமோ? என்னைக் காட்டிலும் பொறுப்புள்ள பதவியும், அதிகாரங்களும் மகாமண்டலேசுவரருக்கு இருக்கலாம். ஆனால் பாதுகாப்புக் குறைவினால் மகாராணியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அந்தப் பழியைத் தளபதியின் தலையில் தான் சுமத்துவார்கள். எதற்கும் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தளபதி நினைத்தான். பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகக் குதிரையில் ஏறிப் புறப்பட்டான். குதிரை கோட்டாற்றிலுள்ள தென்திசைப் பெரும் படையின் கோட்டையை நோக்கிச் சென்றது.
சாலையோரத்து மரப்பொந்துகளில் நெருப்புக் கங்குகளைப் போன்ற விழிகளை உருட்டிக் கொண்டு. பதுங்கியிருந்த கோட்டான்கள் இடையிடையே எழுப்பிய குரூரமான ஒலிகள் தவிர முற்றிலும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் குதிரைக் குளம்புகளின் ஒலி அளவாக வரிசை யொத்துத் தொடர்ந்து ஒலிப்பது என்னவோ போலிருந்தது.
பூ சிறிது சிறிதாக மலர்ந்து இதழ்களின் நறுமணமும், அழகும் பரவுவது போல் ஒளியின் மலர்ச்சியை நோக்கி இருள் தோற்று நைந்து கொண்டிருக்கும் அந்தப் பின்னிரவு நேரத்தில் மண்ணும், விண்ணும், மரங்களும் செடி கொடிகளும், தன்னைச் சுற்றியுள்ள எங்கும் எதுவும் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் சிக்காத ஒரு பேரழகில் தோய்ந்தெழுந்து கொண்டிருப்பதுபோல் அவன் கண்களுக்குத் தோன்றியது.
தென் பாண்டி நாட்டுப் படைத் தலைவனுக்கு வாள் முனையில் போரிடும் வீரச்சுவை ஒன்று மட்டும்தான் கைவந்த பழக்கம் என்பதில்லை; ஆண்மையும், பருவமும், பொறுப்பும் வந்த பின்பு கற்றுத் தெரிந்து கொண்ட சுவை அது. இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாகத் தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவியிலேயே வல்லாளதேவனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றன.எத்தகைய குழப்பமும் கலவரமும் தன்னையும், தன் பொறுப்பையும் சூழ்ந்திருந்தாலும் சுற்றுப் புறத்தின் அழகில் அந்த அழகு உண்டாக்கும் சிந்தனைகளில் தோயும் வழக்கம் மனப் பண்பால் அவனுக்கு இருந்தது.
தளபதி கோட்டாற்றை அடைந்து படையிருப்பினுள் நுழையும் போது கீழ்த்திசை வெளுத்து விட்டது. விடிந்ததும் விடியாததுமாகத் திடீரென்று தளபதி கோட்டைக்குள் வரவே அங்கிருந்த பலவகைப் படைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பரபரப்புக்கு உள்ளானார்கள். என்னவோ? ஏதோ ? படைத் தலைவருடைய திடீர் வருகையின் விளைவு யாதாயிருக்குமோ? என்று வீரர்கள் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். நால்வகைப் பெரும்படைகளும், ஆயுதச் சாலைகளும், யானைகளும் குதிரைகளும் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கொட்டங்களும் நிறைந்த அப்பெரிய கோட்டையில் மிகச் சில விநாடிகளுக்குள் ஒரு புதிய சுறுசுறுப்புப் பரவி விட்டது. எதையோ எதிர்பார்த்து ஆவலோடு துடித்து நிற்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தது. தளபதியின் கீழ் உள்ள படை அணிகளின் தலைவர்களெல்லாம் விழிப்பும், தாக்கமும் ஒன்றோடொன்று போரிடும் சோர்ந்த கண்களோடு ஒடோடி வந்து அவனை வரவேற்றனர். அவனது கட்டளையை எதிர்நோக்கிக் கை கட்டிக் காத்து நின்றனர் அவர்கள்.
தளபதியின் கண்கள் அவர்களுள் யாரோ ஒருவரை மட்டும் குறிப்பிட்டுத் தேடுவதுபோல் சுழன்றன. ஒவ்வொரு வராகப் பார்த்துக் கொண்டு வந்த அவன் பார்வை ஆபத்துதவிகளின் படைக்குத் தலைவனான மகர நெடுங் குழைக்காதனின்மேல் ஒரு கணம் நிலைத்தது. அந்தப் பார்வையின் குறிப்பைப் புரிந்துகொண்டு ஓரிரு அடிகள் முன் வைத்து நடந்து வந்து வணங்கினான் மகர நெடுங்குழைக்காதன்.
“குழைக்காதரே! ஆபத்துதவிகள் படையைச் சேர்ந்த வீரர்களெல்லாம் கோட்டைக்குள்தானே இருக்கிறார்கள்?” என்று கேட்டார் தளபதி.
“ஆம்! எல்லோரும் கோட்டைக்குள்ளே இருக்கிறார்கள்?”
“நல்லது! மற்றவர்கள் போகலாம்! குழைக்காதரும் நானும் தனிமையில் சிறிது நேரம் பேசவேண்டும்.”
குழைக்காதனைத் தவிர அங்கு நின்றுகொண்டிருந்த மற்றவர்கள் வெளியேறினர். தென்னவன் ஆபத்துதவிகள் என்பார் படைகளுள் ஒரு முக்கியமான பிரிவினர். தென் பாண்டி நாட்டு அரசமரபினரின் உயிருக்குக் கவசம் போன்றவர். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ ஆபத்துதவிகளின் காவல் இருந்து கொண்டிருக்கும். ஆட்சியில் குழப்பம், சூழ்ச்சி, சதி இவற்றில் ஏதாவது ஏற்பட்டாலோ, ஏற்படுவதாகத் தெரிந்தாலோ தளபதி ஆபத்துதவிகளைப் பயன்படுத்தலாம்.
ஆபத்துதவிகளைப் பயன்படுத்தவேண்டிய அத்தகைய நெருக்கடி இப்போது தளபதி வல்லாளதேவனுக்கு ஏற்பட்டிருந்தது. யாரால் எப்போது என்ன ஏற்பட முடியுமென்று அவனால் சிந்திக்கவோ, சொல்லவோ முடியவில்லை. இரவு நடந்தவற்றை நினைத்தால் இடையாற்று மங்கலம் நம்பியின் மேலேயே அவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு ஆறுகளுக்கு நடுவேயுள்ள அந்தச் சின்னஞ்சிறு தீவில் மகாமண்டலேசுவரரின் உள்ளத்திலும், மாளிகையிலும் நிறைந்து கிடந்த சூழ்ச்சிகளை எண்ணியபோது அவன் திகைத்தான். ‘ஒரு பெரிய இரவின் சிறிய சில நாழிகைகளுக்குள் இடையாற்று மங்கலத்தில் இவ்வளவு மர்மங்களைப் புரிந்துகொள்ள முடியுமானால் சில நாட்கள் இரவும் பகலும் எந்நேரமும் அங்கேயே முழுமையாகத் தங்கியிருந்தால் இன்னும் எவ்வளவு தெரிந்துகொள்ள முடியும்?’ என்று எண்ணினான் அவன்.
தளபதியின் முகத்தில் தோன்றி மறையும் ஆழ்ந்த சிந்தனைகளின் சாயையைப் பார்த்துக்கொண்டே பயபக்தியோடு எதிரில் நின்று கொண்டிருந்தான் மகர நெடுங்குழைக்காதன்.
“ஓ! உங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு நான் ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டேன்?”
“பரவாயில்லை! நான் காத்திருப்பேன்” என்று அடக்கமாகக் கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.
“குழைக்காதரே! நேற்று மாலை குமரித் துறையில் மகாராணியார் வழிபாட்டுக்கு வந்திருந்தபோது நடந்த நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தென்பாண்டி நாட்டுக்கு இது ஒரு சோதனைக்காலம். நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றிச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறிது காலத்துக்கு நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். அறிவின் பலத்தையோ, சிந்தனையின் வன்மையையோ கொண்டுமட்டும் இவற்றைச் சமாளித்துவிட முடியாது. இப்போது நான் சொல்வதை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கேட்கவேண்டும். ஆபத்துதவிப் படைகள் இன்னும் சிறிது காலத்துக்குப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மகாராணியாரைச் சுற்றி இருப்பது நல்லது. கூடியவரையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு வெளியில் அதிகம் பரவித் தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மகாராணியாரைச் சுற்றியோ, அல்லது கோட்டைப் பகுதிகளிலோ சந்தேகத்துக்குரிய ஆட்களாக யார் நடமாடினாலும் கண்காணித்து எனக்குத் தகவல் அனுப்பவேண்டும்.”
“இப்போதே ஆபத்துதவிகளோடு புறப்படுகிறேன்.”
“புறப்படுவது சரி! இன்றைக்கு அங்கே தென்பாண்டி மண்டலக் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக இடையாற்று மங்கலம் நம்பி அங்கு வர இருக்கிறார். அவர் போய்ச் சேருவதற்கு முன்பே நீங்களும் ஆபத்துதவிப் படைகளும் அங்கே போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.”
“அப்படியே செய்கிறோம்.”
“இடையாற்று மங்கலம் நம்பி இன்று அல்லது நாளை வரை அரண்மனையில் தங்குவார். நீங்கள் முடிந்த மட்டில் அவருடைய பார்வையில் தென்படாமல் இருக்கவே முயலுங்கள்.”
“எங்களால் இயன்றவரை அவருடைய கவனத்துக்கு ஆளாகாமலே இருக்க முயல்கிறோம்.”
“நீங்கள் புறப்படலாம், தாமதம் செய்யாதீர்கள்."-தளபதி வல்லாளதேவன் ஆபத்துதவிகள் படைத்தலைவனான மகர நெடுங்குழைக்காதனுக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
பொழுது விடிந்து நன்றாக வெயில் பரவிவிட்டது. அங்கேயே நீராடிவிட்டுக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கூற்றத் தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தானும் கோட்டைக்குப் புறப்பட்டுச் செல்ல நினைத்தான் அவன். இவ்வாறு நினைத்துக்கொண்டே படைக் குடியிருப்பின் வாயிற்புறமாக வந்து மேற்கே சாலையில் ஆபத்துதவிப் படைகள் அணிவகுத்துக் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான். படைத் தலைவன் .மகர நெடுங்குழைக்காதன் புறப்படுவதற்கு முன்னால் இறுதியாகத் தளபதி வல்லாளதேவனுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தான்.
“நீங்கள் போகலாம். நான்கூட இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவேன்” என்று சொல்லி அனுப்புவதற்காகத் தளபதி வாய் திறந்தபோது கீழ்ப்புறம் இடையாற்று மங்கலத்துக் கிளைவழியில் குதிரை வரும் ஒலி கேட்டது. வல்லாளதேவன் வியப்போடு திரும்பிப் பார்த்தான். குதிரைமேல் வந்து கொண்டிருந்த வீரன் அவர்களை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது.
“நீங்கள் புறப்படுங்கள்! தாமதிக்க வேண்டாம்” என்று குழைக்காதனைத் துரிதப்படுத்தினான் தளபதி, “யாரோ வருகிறாற் போலிருக்கிறதே!” என்று சொல்லித் தயங்கினான் குழைக்காதன்.
“வரட்டும்! நான் பார்த்து விசாரித்துக் கொள்கிறேன். நீங்கள் நிற்கக் கூடாது. உடனே புறப்பட்டு விடுங்கள்."தளபதியின் குரலிலிருந்த அவசரத்தைப் புரிந்துகொண்டு குழைக்காதன் படைகளுடன் கிளம்பினான். அவனும் படைகளும் மேற்கே சிறிது துாரம் சென்று மறையும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான் தளபதி வல்லாளதேவன். யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது.
“என்ன தளபதி ஆபத்துதவிகளை அனுப்பி யாயிற்றல்லவா?” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டவாறு குதிரையிலிருந்து இறங்கினான் நாராயணன்