பாண்டிமாதேவி/முதல் பாகம்/துறவியின் காதல்
19. துறவியின் காதல்
இடையாற்றுமங்கலம் தீவில் வைகறையின் அழகிய சூழ்நிலையில் வசந்தமண்டபத்துப் பொழிலிலுள்ள மரங்கள் அசைந்தன. இலைகளிலும், பூக்களிலும், புல் நுனிகளிலும் முத்துப்போல் திரண்டிருந்த வெண்பனித் துளிகள் இளகி உதிர்ந்தன. பொழிலில் மலர்ந்திருந்த சண்பகம், கோங்கு, வேங்கை, மல்லிகை, முல்லை மலர்களின் நறுமணத்தைத் தென்றல்காற்று வாரிக் கொண்டு வந்தது. வாவிகளிலும் சித்திரப் பூங்குளத்திலும், செம்மையும், வெண்மையுமாக ஆம்பலும், தாமரையும், அலர்ந்து விரிந்து, வண்டுகளை விருந்துக்கு அழைத்தன. காதலனின் பருத்த தோளைத் தன் மெல்லிய கைகளால் அனைத்துத் தழுவும் காதலியைப்போல் கரையோரத்து மரங்களின் பருத்த அடிப்பகுதியைப் பறளியாற்று நீர்த்தரங்கள் தழுவிச் சென்றன. இலைகளிலும் பூக்களிலும், குங்கு மக்கரைசல் போல் பொங்கிவரும் செந்நீர்ப் பரப்பிலும், இளங் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மின்னின. வசந்த மண்டபத்து விமான மதிற்கவர்களின் மாடங்களில் அடைந்துகிடந்த மணிப்புறாக்கள் கூட்டமாக வெளிப்பட்டுப் பறந்தன.
பொழுது புலர்ந்துவிட்டது. ஒளியின் ஆட்சிக்கு உரியவன் கிழக்கே அடிவானத்தைக் கிளைத்துக்கொண்டு கிளர்ந்தெழுந்து விட்டான். ஆனால் வசந்த மண்டபத்துப் பள்ளியறையின் பொற்கட்டிலில் இரத்தினக்கம்பள விரிப்புக்களின் மேல் படுத்துக் கொண்டிருந்த அந்த இளந் துறவி மட்டும் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ஐயோ, பாவம் ! நன்றாக அயர்ந்து தூங்குகிறார் போலிருக்கிறது. பள்ளியறையின் அழகிய ஓவியப் பலகணி வழியே ஒளிக்கதிர்கள் கட்டிலின் விளிம்பில் பட்டும் அவர் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.
அப்போது அந்தப் பள்ளியறையின் கதவுகளைச் செந்தாமரை மலர் போன்ற அழகும், சண்பக அரும்பு போன்ற விரல்களும் பொருந்திய வளை குலுங்கும் கரம் ஒன்று மெல்லத் தட்டியது. செம்பொன் நிறம் பொருந்திய அந்தப் பெண் கரம் முன் கையில் வெண்மையான சங்கு வளையல்களையும் விரல்களில் பொன் மோதிரங்களையும் அணிந்திருந்தது.
வனப்பு நிறைந்த அந்த மலர்க் கரத்துக்கு உரியவள் யார்? அருகில் நெருங்கிப் பார்க்கலாம். ஆ! இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி குழல்வாய்மொழி அல்லவா இவள்? அடடா? இந்த விடியற்காலை நேரத்தில் இவ்வளவு அழகான பூம்பொழிலின் இடையே அலங்காரமான வசந்த மண்டபத்தின் கதவருகே தங்கப்பதுமை ஒன்று உயிர் பெற்று நிற்பது போல் அல்லவா நிற்கிறாள்? நீராடி, அகிற்பூகையூட்டிய கூந்தல் மேகக் காடுபோல் விளங்கியது. அந்த மேகக் காட்டில் மின்னும் பிறைமதிபோல் கொடை மல்லிகைச்சரத்தை அள்ளி முடித்திருந்தாள். சுழலும் கருவண்டுகள்போல் பிறழும் கெண்டை மீன்கள்போல் மலர்ந்த விழிகளும், சிரிக்கும் செம்பவழ இதழ்களுமாகக் கதவருகே தயங்கி நின்றாள் குழல்மொழி.
உறங்கிக் கொண்டிருப்ப வரை எழுப்பிவிட வேண்டுமென்றும் ஆசை. அதே சமயத்தில் கதவைப் பலமாகத் தட்டி ஓசை உண்டாக்குவதற்கும் பயமாக இருந்தது. தயங்கித் துவண்டு மின்னலோ எனச் சிறிய இடை நெளிய அவள் நின்ற தோற்றம் நெஞ்சத்தைச் சூறையாடுவதாக இருந்தது.
பலகணியின் வழியே எட்டிப் பார்த்து, “அடிகளே!” என்று கிளி மிழற்றுவதுபோல் மெல்லக் கூப்பிட்டாள் அவள். பள்ளியறைக் கட்டிலில் படுத்திருந்த இளந் துறவி புரண்டு படுத்தார்.
“அடிகளே ! இன்னும் உறக்கத்தை உதறிவிட்டு எழுந்திருப்பதற்கு உங்களுக்கு மனம் வர வில்லையா? பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதே?” இரண்டாவது முறையாகச் சற்று இரைந்தே கூப்பிட்டாள் குழல்மொழி. அதனோடு கதவிலும் தட்டவே, தட்டிய ஒலி அதைச் செய்த மென்பூங்கைகளில் செறிந்திருந்த வளைகளின் ஒலி-எல்லாமாகச் சேர்ந்து துறவியின் உறக்கத்துக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டன; துறவி கண் விழித்தார். மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தார். விரத நியமங்களாலும், தவத்தாலும் வருந்திய ஒரு துறவியின் உடம்பு போலவா தோன்றுகிறது. அது: ஆகா! என்ன கட்டழகு? தீக்கொழுந்துபோல் எவ்வளவு சிவப்பான நிறம்? வாலிபத்தின் அழகு முழுமையாய் நிறைந்து, ஆசையைக்களையும் தவத் தொழிலில் இருந்து தம்மைக் காண்போர் கண்களின் ஆசையை வளர்த்துவிடும் போலிருக்கிறதே, இந்தத் துறவியின் தோற்றம்!
“ஓ! நீயா? இந்த நேரத்துக்குள் எழுந்து நீராடி, பூச்சூடி அலங்கரித்துக்கொண்டு என்னையும் எழுப்புவதற்கு வந்து விட்டாயே!” எழுந்து உட்கார்ந்து துறவி அவள் வெளியே நின்று கொண்டு தம்மை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைக் கண்டு இவ்வாறு கூறினார்.
“ஆமாம் ! அதிகாலையில் எழுந்திருந்து தவக் கடன்களையும், நியம ஒழுக்கங்களையும் தவறாமல் செய்யவேண்டி துறவிகளே இப்போதெல்லாம் அதிக நேரம் தூங்கத் தொடங்கி விட்டார்கள். பெண்களாகிய நாங்களும் அந்த வழக்கத்தை விட்டுவிட்டால் அதன் கதி என்ன ஆவது?” - அவள் வேண்டுமென்றே குறும்பாகப் பேசினாள். நீண்ட முகமும், கூரிய நாசியும் பிறரை மயக்கும் வசீகர விழிகளும் பொருந்திய அந்தத் துறவி ஒரிரு கணங்கள் அவளையே உற்றுப் பார்த்தார். அவருடைய இதழ்களில் மோகனப் புன்னகை அரும்பியிருந்தது. தோள்களையும் மார்பையும் சேர்த்துப் போர்த்திக்கொண்டிருந்த மெல்லிய காவித் துணி விலகி நழுவியது. அடியில் சிறுத்து மேலே பரந்து அகன்ற பொன்நிற மார்பு, உருண்டு திரண்ட வளமான தோள்கள், அவற்றைக் குழல்மொழி கடைக் கண்களால் திருட்டுப் பார்வை பார்த்தாள். பிறகு அவள் தரையைப் பார்த்தாள். கன்னங்கள் சிவந்தன. இவர் துறவியா? அல்லது நம் போன்ற பேதைப் பெண்களின் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்வதற்கு மாரவேள் கொண்ட மாறுவேடமா? என்று எண்ணி எண்ணி உள்ளம் உருகினாள் குழல்மொழி.
“பெண்ணே நீ என்மேல் வீணாகப் பழி சுமத்துகிறாய்! மான் தோலில் படுத்துத் துரங்கும் துறவியைப் பஞ்சணைகளோடு கூடிய மஞ்சத்தில் உறங்க வைத்தால் அவன் அந்தப் புதிய சுகத்தில் தன்னையும் மறந்து நேரத்தையும் மறந்து விடுவதுதானே இயற்கை?”
“பரவாயில்லை! துறவியை நாங்கள் மன்னித்து விடத் தயாராக இருக்கிறோம். எழுந்திருந்து வாருங்கள். நீராடுவதற்குப் போகலாம்.”
“நீராடுவதற்கு வேறு எங்கே போகவேண்டும்? இதோ இங்கேயே வசந்த மண்டபத்துக்குப் பின்னால் பறளியாற்றுப் படித்துறை இருக்கிறது. நீ சிரமப்பட வேண்டாம். நான் இங்கேயே நீராடிக் கொள்கிறேன்.”
“ஐயோ! கூடாது. அப்பா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பறளியாற்றில் புதுத் தண்ணிர் பாய்கிறது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. நீங்கள் பேசாமல் என்னோடு எழுந்து வாருங்கள். நான் சொல்லுகிறபடி கேளுங்கள். நீங்கள் இருக்கிறவரை உங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சிறிது நேரத்துக்கு முன்புதான் அப்பா கூறிவிட்டுப் போனார்” என்றாள் குழல்மொழி.
“அப்படியானால் மகாமண்டலேசுவரர் இப்போது இங்கு இல்லையா?” என்றார் துறவி.
“இல்லை! மகாராணியாரைச் சந்திப்பதற்காகப் போயிருக்கிறார்.”
“என்ன காரியமாகப் போயிருக்கிறாரோ? என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாரே!”
“எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது! அவர் திரும்பி வருகிறவரை தங்களுக்கு இங்கு ஒரு குறைவும் இல்லாமல் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று எனக்கு உத்தரவு.”
துறவி ஒன்றும் மறுமொழி கூறாமல் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.
கருகருவென்று அடர்ந்து வளர்ந்திருந்த இளந் தாடிக்கு மேல் சிவந்த உதடுகள் நெகிழ அவர் சிரித்த சிரிப்பு, குழல்மொழியைக் கிறங்க வைத்தது. துறவி நீராடப் புறப்படுவதற்காக எழுந்தார். இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே தூக்கிச் சோம்பல் முறித்தபோது, மூங்கிலின் மேல்புறம் போல மின்னிய அந்த வளமான புஜங்களின் அழகு மகாமண்டலேசுவரருடைய புதல்வியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
“வாருங்கள் நேரமாகிறது. அடிகளை அரண்மனை நீராழி மண்டபத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் பூசைக்காக நான் மலர் கொய்து வரவேண்டும்” என்று குழல்மொழி துறவியை அவசரப் படுத்தினாள்.
அவர் சிரித்துக்கொண்டே அவளைப் பின்பற்றி நடந்தார். குழல்மொழி அன்னம்போல் நடந்து சென்ற நடையின் அழகைக் கவியின் கண்களோடு பார்த்தார் துறவி. பாம்புப் படம்போல் விரிந்து சுருங்கிய அந்த நடையின் பின்புறக் காட்சி, மலர் சூடிய கரிகுழல், ஆமையின் புறவடிபோல் செவ்விய பாதங்கள் பெயர்த்து நடந்த பெருமை அத்தனை அழகையும் கண் குளிர நோக்கிக்கொண்டே அவளுக்குப் பின்னால் மெல்லச் சென்றார் அவர்.
வழியில் ஒருமுறை பின்னால் திரும்பி அவரைப் பார்த்தாள் அவள். அவர் முறுவல் புரிந்தார். காரணமில்லாமல் சும்மா பார்த்ததாக அவர் எண்ணிக்கொள்ளக் கூடாது என்பதற்காக “அடிகளே! தாங்கள் வழக்கமாக எந்த மலர்களைக் கொண்டு பூசையில் வழிபடுவீர்கள் என்று நான் அறிந்துகொள்ளலாமா?” என்று கேட்டாள்.
“பயப்படாதே, பெண்னே! இந்த இடையாற்று மங்கலம் தீவில் இல்லாத மலரின் பெயரெதையாவது சொல்லி உன்னைத் திண்டாட வைத்துவிட மாட்டேன் நான்.”
“ஏன்? அடிகள் கேட்டுப் பார்ப்பதுதானே? இந்தத் தீவில் இல்லாத மலர்களே கிடையாதென்பது அடிகளுக்குத் தெரியாது போலும்!”
“இதோ, எனக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே; இந்த மலரையும் சேர்த்துத்தானே சொல்கிறாய்?"துறவி குறும்புப் பார்வையோடு சுட்டுவிரலை அவள் பக்கமாக நீட்டிக காட்டினார். குழல்மொழி விருட்டென்று, திரும்பினாள். இரு விழிகளும் மலர்ந்து விரிய அவருடைய முகத்தைப் பார்த்தாள்.
“நீ கோபித்துக்கொள்ளதே. தவறாக வேறொன்றும் கூறிவிடவில்லை. உன்னை ஒரு மலராக உருவகம் செய்து கூறினேன்” என்றார் துறவி.
“ஓகோ உருவகம், உவமை - இந்தமாதிரிக் கவிதைத் துறையில்கூட அடிகளுக்கு அனுபவம் அதிகமோ?"
“எல்லாம் சூழ்நிலையின் சிறப்பு இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி அருகே இருந்தால் கல்லும் மரமும்கூடச் சொல்லுமே கவி? என்னைப்போல் ஒரு வயதுத் துறவி ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்.”
“ஏதேது? அடிகளைப் பேச விட்டுவிட்டால் விநயமாக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டே இருப்பீர்கள்போல் தோன்றுகிறதே.”
“எல்லோரிடமும் அப்படிப் பேசிவிட முடியுமா? ஏதோ உன்னிடத்தில் பேசவேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது பேசினேன்.”
இப்படிக் கூறியதும் மறுபடியும் அவள் தன்அகன்ற நீண்ட கருவிழிகளால் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். துறவியும் முன்போலவே அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.
பேசிக்கொண்டே இருவரும் அரண்மனைக்குள் நீராழி மண்டபத்தின் கரையருகே வந்து நின்றனர். துறவி நீராடுவதற்குத் தயாரானார். “நீராடித் தயாராக இருங்கள். நான் நந்தவனத்தில் போய்ப் பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்துகொண்டு வருகிறேன்” என்று புறப்பட்டாள் குழல்மொழி.
அவள் நந்தவனத்து வாசலில் நுழைய இருந்தபோது ஆற்றின் கரையிலுள்ள படகுத் துறைப்பக்கமிருந்து படகோட்டி அம்பலவன் வேளான் வந்து கொண்டிருந்தான். அவன் அவளை நோக்கித்தான் வருவதுபோல் தெரிந்தது. அவசரமும் பரபரப்பும் அவன் வருகையில் தெரிந்தன.
“என்னைத் தேடித்தான் வருகிறாயா?” என்று அவள் கேட்டாள்.
“ஆமாம், அம்மா! போகும்போது உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி மகாமண்டலேசுவரர் இரகசியமாக ஒரு செய்தி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைச் சொல்லுவதற்காகத்தான் இவ்வளவு அவசரமாக வந்தேன்” என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கினான் படகோட்டி அம்பலவன் வேளான்.