பாண்டிமாதேவி/முதல் பாகம்/கொள்ளையோ கொள்ளை!

விக்கிமூலம் இலிருந்து

29. கொள்ளையோ கொள்ளை !

இராசசிம்மன் அப்படி நடந்துகொண்டது குழல் மொழிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அக்கரையிலிருந்து படகில் வருபவர் யாராக இருந்தால்தான் என்ன! எவ்வளவு அவசரமாக இருந்தால்தான் என்ன? அதற்காக ஒரு பெண்ணிடம் தனிமையில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தவர் இப்படியா முகத்தை முறித்துக்கொண்டு போவதுபோல் திடீரென்று போவார்?’ என்று எண்ணி நொந்து கொண்டாள். வந்தவர்களோடு விரைவில் பேசி முடித்து அனுப்பிவிட்டுத் திரும்பி வந்துவிடுவார் என்று நிலா முற்றத்துத் திறந்த வெளியிலேயே அவள் இராசசிம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் அவன் திரும்பி வராமற்போகவே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கீழே இறங்கி வந்துவிட்டாள்.

அவள் கீழே இறங்கி வந்த சமயத்தில் படகோட்டி அம்பலவன் வேளான் வசந்த மண்டபத்துப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். முதலில் படகில் வந்தவர்களை அழைத்துக் கொண்டு இராசசிம்மன் முன்பே வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருந்த இடத்துக்குப் போயிருக்க வேண்டுமென்று குழல்மொழி அனுமானித்து உணர்ந்து கொண்டாள்.

‘வந்திருப்பவர்கள் யார்? என்ன காரியத்துக்காக் வந்திருக்கிறார்கள்?’ என்று அவனிடம் கேட்கலாம் என்று

எண்ணி வேளான் வருவதை எதிர்பார்த்து நின்றாள் குழல்மொழி.

சிறிது நேரத்தில் வசந்த மண்டபத்திலிருந்து மாளிகைக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் வேளான் வருவது தெரிந்தது. அவன் தான் நின்று கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து சேருகிறவரை ஆவலை அடக்கிக் கொள்ளும் பொறுமை கூட அவளுக்கு இல்லை. மான் துள்ளி ஓடுவதுபோல வேகமாக ஓடிச் சென்று அவனை, எதிர்கொண்டு “வேளான்! வந்திருப்பவர்கள் யார்? எதற்காக இவ்வளவு அவசரமாய் அடிகளைச் சந்திக்க வந்திருக்கிறார்கள்?” என்று அவனை நடுவழியிலேயே மறித்துக்கொண்டு கேட்டாள். வேளான் சிறிது தயங்கி நின்றுவிட்டுப் பின்பு கூறலானான். “அம்மா! அவர்கள் இன்னாரென்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அக்கரையிலிருந்து வசந்த மண்டபம் வரை என்னுடன் வந்தார்கள் என்று பெயரே ஒழிய, என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 'இந்தத் தீவில் மகாமண்டலேசுவரரின் விருந்தினராக ஒரு துறவி வந்து தங்கியிருக்கிறாரே; அவரை நாங்கள் சந்திக்கவேண்டும்' என்று சுருக்கமாக என்னிடம் கேட்டார்கள். ஆனால் வந்திருப்பவர்களுடைய பேச்சையும், நடையுடை பாவனைகளையும் கூர்ந்து கவனித்தால் நம்முடைய முத்தமிழ் நாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்தவர்களாகத் தெரியவே இல்லை. துறவிக்கு அவர்கள் மிகவும் வேண்டிய வர்கள் போலிருக்கிறது. எல்லோருடனும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஏதோ இரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். வேறு யாரையும் தப்பித் தவறிக்கூட அந்தப் பக்கம் விட்டுவிடக்கூடாதென்று எனக்குக் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்.”

வேளானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குழல் மொழி,"என்னைக்கூடவா உள்ளே விடக்கூடாதென்று உத்தரவு?” என்று சிரித்துக்கொண்டே வேடிக்கையாகக் கேட்டாள். “ஆம்! உங்களையும்தான் விடக்கூடாதென்றிருக்கிறார்” என்று வேளான் பதில் சொல்லியதும், அவளுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்தமாதிரி இருந்தது. ஏதோ விளையாட்டுத்தனமாகக் கேட்டாளேயன்றி அந்தப் புதிலை எதிர்பார்த்துக் கேட்கவில்லை.


அந்தப் பதிலை அவனிடமிருந்து கேட்டதும் அவள் கண்களில் சினம்கொண்ட சாயல் ஒளிர்ந்தது. புருவங்கள் நெளிந்து வளைந்தன. “பரவாயில்லையே! அடிகளுக்கு வந்து ஒருநாள் கழிவதற்குள் இவ்வளவு அதிகாரம் செய்யும் உரிமை வந்துவிட்டதா?" என்று வெடுக்கென்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள் அவள். அவ்வளவு கோபத்திலும் இராசசிம்மன் தான் அடிகளாக நடிக்கிறான் என்ற உண்மையைப் படகோட்டியிடம் கூறத் துணிவுவரவில்லை அவளுக்கு. 'நான் கூட வரக்கூடாதாமே? அப்படி என்னதான் இரகசியம் பேசுகிறார்களோ? வரட்டும்; சொல்கிறேன்' என்று இராசசிம்மன்மேல் ஊடலும், பொய்க்கோபமும் கொண்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டாள் குழல்மொழி. இராசசிம்மன் வசந்த மண்டபத்துக்கு வரக்கூடாதென்று சொல்லிவிட்டதனால் இடையாற்று மங்கலம் அரண்மனை போவதற்கு இடமோ பேசுவதற்குத் தோழிகளோ, இல்லாமல் போய்விட்டார்கள் அவளுக்கு!

அதன்பின் அன்று அவள் வசந்த மண்டபத்துப் பக்கம் வரவேயில்லை. துறவியும் அவரைச் சந்திக்க வந்திருந்தவர் களும்கூட வசந்த மண்டபத்தைவிட்டு வெளியேறவில்லை. படகோட்டி அம்பலவன் வேளான் யாரையும் உள்ளே விட்டுவிடாமல் பாதுகாப்பாக வசந்த மண்டபத்துப் பாதை தொடங்கும் இடத்தில் காவலுக்கு உட்கார்ந்து கொண்டான்.

இருட்டியதும் வழக்கமாகத் துறவியை உணவுக்கு அழைத்துக் கொண்டு போக வருவாள் குழல்மொழி. அன்று அதற்காகவும் அவள் வரவில்லை. “நீ போய் அவர்களைச் சாப்பிட அழைத்துக்கொண்டுவா!” என்று ஒரு தோழியை வசந்த மண்டபத்துக்கு அனுப்பினாள். அந்தத் தோழி அடிகளைத் தேடிக் கொண்டு வசந்த மண்டபத்துக்குச் செல்லும்போது இருட்டி நான்கைந்து நாழிகைகள் ஆகியிருக்கும். துறவியும் அவரைத் தேடிப் புதிதாக வந்திருப்பவர்களும் கூடியிருப்பதால் தீபாலங்காரங்களினால் ஒளி மயமாகவும், பலருடைய பேச்சுக்குரல்களால் கலகலப்பாகவும். இருக்குமென்று நினைத்துக்கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்த தோழி

அங்கிருந்த நிலைமையக் கண்டு திகைத்துப் போனாள். வசந்த மண்டபம் இருண்டு கிடந்தது. அங்கே எவருடைய பேச்சுக் குரலும் கேட்கவில்லை. இருளும், தனிமையும் ஆட்சி புரிந்த அந்த இடத்தில் நிற்பதே பயமாக இருந்தது தோழிக்கு. அவள் வசந்த மண்டபத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகச் சுற்றிப் பார்க்காமல் முகப்பிலேயே பயந்து கொண்டு திரும்பி விட்டாள். வசந்த மண்டபத்தின் பின்புறமிருந்த தோட்டத்துக்குள் சென்று பார்த்திருந்தால் ஒரு சிறிய தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் துறவியும், அவரைத் தேடிவந்தவர்களும், ஏதோ சதிக்கூட்டம் நடத்துகிறவர்களைப் போல் அந்தரங்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் தோழிக்குத்தான் அவ்வளவுக்குப் பொறுமையில்லாமல் போய்விட்டதே!

“அம்மா! துறவியையும் அவரோடு வந்திருந்தவர்களையும் வசந்த மண்டபத்தில் காணவில்லை” என்று குழல்மொழியிடம் திரும்பிவந்து சொல்லிவிட்டாள் அந்தத் தோழி.

"வசந்த மண்டபத்துக்குப் போகிற பாதையின் தொடக்கத்தில் அம்பலவன் வேளான் காவலுக்கு உட்கார்ந்திருப்பானே? அவனைக்கூடவா காணவில்லை!”

“ஆம்! அவனையும் காணவில்லை!”

“சரிதான், படகில் அக்கரைக்குப் போயிருப்பார்கள். அடிகளுக்குத் திடீரென்று சுசீந்திரத்துக்குப் போய்த் தாணுமாலய விண்ணகரத்தில் தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசை உண்டாகியிருக்கும். நமக்கென்ன வந்தது? எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாம் தூங்கலாம்” என்று சுவாரஸ்யமில்லாமல் பேசினாள் குழல்மொழி.

அதன்பின் அடிகள் உணவு கொள்ள வரவில்லையே என்று அங்கு யாரும் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. இரவு பத்துப் பதினொரு நாழிகைக் கெல்லாம் இடையாற்று மங்கலம் மாளிகையில் பூரண அமைதி நிலவியது. மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வியும், மாளிகையிலிருந்த மற்றப் பணிப் பெண்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கன்னிமாடப்பகுதிக்குப் போய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.

இரவின் நாழிகைகள் ஒவ்வொன்றாக வளர்ந்து கொண்டிருந்தன. நடுச்சாமத்தை எட்டிப்பிடித்து விட்டபோது, வானமும், நட்சத்திரங்களும் சோகை பிடித்த மாதிரி வெளுத்து ஒளி மங்கிக்கொண்டு வந்தன. மாளிகையில் அங்கங்கே அவசியமான இடங்களில் காவல் வைக்கப்பட்டிருந்த வீரர்களெல்லாம் கூடச் சோர்ந்து கண் மயங்கும் நேரம் அது.

அந்த நேரத்தில் வசந்த மண்டபத்தின் பின்புறத்துத் தோட்டத்திலிருந்து அடிகளும், மற்ற மூவரும் புறப்பட்டனர். மாளிகையின் பிரதான வாசலில் கொண்டுபோய் விடும் ஒற்றையடிப் பாதையில் வந்து படகோட்டியின் குடிசையருகே தயங்கி நின்றனர். அன்று குளிர் அதிகமாக இருந்ததனால் படகோட்டி அம்பலவன் வேளான் குடிசைக்குள்ளேயே படுத்திருந்தான்.

வசந்த மண்டபத்திலிருந்து வந்து நின்றவர்களில் ஒருவன் படகோட்டியின் குடிசைக் கதவருகே வந்தான். ஓசைப்படாமல் கதவை வெளிப்பக்கமாக இழுத்துத் தாழிட்டான்.

"அட! படகை அவிழ்த்து வைத்துக்கொண்டு புறப்படுவதற்குத் தயாராக நீ துறையிலேயே இரு. நாங்கள் விரைவில் காரியத்தை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்” என்று மற்றவர்கள் அவனைத்துறையில் இருக்கச் செய்து விட்டு மாளிகையை நோக்கி விரைந்தனர். குரல்தான் கேட்டதே ஒழிய இருளில் அவர்கள் முகங்கள் சரியாகத் தெரியவில்லை. அதன் பின் அன்றிரவு நடுச் சாமத்துக்கு மேல் இடையாற்று மங்கலம் மாளிகையில் எந்தப் பகுதியில் என்ன நடந்ததென்று எவருக்கும் தெரியாது.

பொழுது விடிந்தபோது அலறிப் புடைத்துக் கொண்டு குழல்மொழியின் கன்னிமாடத்து வாசலில் வந்து கூக்குரலிட்டனர் யவனக் காவல் வீரர்கள். மாளிகை முழுவதும் கூச்சலும் ஓலமுமாக ஒரே குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பங்களாலும், கூப்பாடுகளாலும் தூக்கம் கலைந்த குழல் மொழி எழுந்திருந்தவுடன் அந்த யவனக் காவல் வீரர்களின் முகத்தில்தான் விழித்தாள். அவர்கள் ஒன்றும் விளக்கிச்

பா.தே.16


சொல்லத் தோன்றாமல் 'ஓ' வென்று வீறிட்டு அலறி அழத் தொடங்கினர்.

“ஏன் அழுகிறீர்கள்? விடிந்ததும் விடியாததுமாக இப்போது என்ன நடந்துவிட்டது? விவரத்தைச் சொல்லுங்கள். இதென்ன? மாளிகை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறதே!” என்று பதறிப் போய் அதிர்ச்சி யடைந்து கேட்டாள் குழல்மொழி. அதே சமயம் மாளிகையின் எதிர்ப் புறம் பறளியாற்றுப் படகுத் துறையில் 'தடால், தடால்' என்று ஏதோ இடிபடும் ஓசை கேட்டது. நாலைந்து வீரர்கள் என்னவென்று பார்ப்பதற்காக அங்கே ஓடினார்கள். போய்ப் பார்த்தபோது அம்பலவன் வேளான் தன் குடிசைக் குள்ளிருந்து வெளிப்புறமாகத் தாழிட்டிருந்த கதவைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்டு அங்கே போன வீரர்களில் ஒருவன் கதவைத் திறந்து விட்டான். இல்லையானால் கதவு பிழைத்திருக்காது. வேளான் வெளியே வந்து பார்த்தபோது துறையில் கட்டியிருந்த படகைக் காணவில்லை. “ஐயோ! படகைக் காணவில்லையே?’ என்று கூச்சலிட்டான் அவன்.

“போ, ஐயா! உன் ஓட்டைப் படகு போனதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. கொள்ளை போகக்கூடாத மாபெரும் ஐசுவரியம் நேற்றிரவு இந்த மாளிகையிலிருந்து கொள்ளை போய்விட்டது. மகாமண்டலேசுவரர் கண்ணுக்குக் கண்ணாக வைத்துப் பாதுகாத்து வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் காணாமல் போய் விட்டனவே!” என்று வேளானின் வாய்க்கூச்சலை அடக்கினான் ஒருவன்.