பாண்டிமாதேவி/முதல் பாகம்/புவன மோகினியின் பீதி

விக்கிமூலம் இலிருந்து

30. புவன மோகினியின் பீதி


நள்ளிரவுவரை இடையாற்று மங்கலம் நம்பிக்கு ஒற்றிந்து கூறியதற்காக ஆபத்துதவிகள் தலைவன் தன்னை எப்போது, எப்படித் துன்புறுத்துவானோ என்று அஞ்சி மஞ்சத்தில் உறக்கமி


ன்றி புரண்டு கொண்டிருந்த புவன மோகினி அரண்மனை நாழிகை மன்றத்தில் ஒவ்வொரு யாம முடிவிலும் அடிக்கும் மணி அடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் தன்னையறியாமலே துயில் வயப்பட்டாள். நன்றாக அயர்ந்து தூங்கி விடவில்லையானாலும் உடல் சோர்வடைந்து தன்னுணர்வை இழந்திருந்தது. தூக்கத்தில் ஒரு முறை புரண்டு படுத்தாள். -

புரண்டு படுத்த சிறிது நேரத்தில் கழுத்தின் பின்புறம் பிடரியில் ஏதோ வெப்பமான மூச்சுக்காற்று உரசிச் செல்லுவது போலிருந்தது. தலையில் பூச்சூடிக்கொண்டிருந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெப்பக் காற்றுப் பட்டு உறைப்பது போலிருந்தது. -

உண்மைதானா? அல்லது தாக்கக் கலக்கத்தில் ஏதாவது சொப்பனம் காண்கிறோமா? என்று சந்தேகப்பட்டு மெல்லக் கண்களைத் திறந்தாள் புவனமோகினி, தலையருகே யாரோ குனிந்து பூவை முகர்ந்து பார்ப்பது போல் ஒரு பிரமை, ஒரு குறுகுறுப்பு அவள் மனதில் உண்டாயிற்று. தலைப்பக்கம் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. தலைமாட்டில் ஆள் நின்றுகொண்டிருந்தால் திரும்பிப் பார்த்துத்தான் அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. சுவரில் நிழல் நன்றாக விழும். புவனமோகினி எதிர்பார்த்தது வீண் போகவில்லை. எதிர்ச் சுவரில் ஓர் உருவத்தின் கரிய நிழல் பயங்கரமாகப் படிந்திருந்தது. கண்களைத் திறந்து அந்த நிழலைப் பார்த்ததும், பீதியினால் 'வீல்' என்று அலறி விட்டாள் அவள். அந்த அலறல் அவள் வாயிலிருந்து முழுமையாக வெளிப்பட்டு விடாமல் ஒரு முரட்டுக் கை தலைப் பக்கத்திலிருந்து அவள் வாயைப் பொத்தியது. அச்சத்தினால் மை தீட்டிய அவள் கண் இமைகளுக்குக் கீழே விழிகள் பிதுங்கின. முகம் வெளிறியது. படுத்திருந்தாலும் பயத்தினால் உடம்பு 'வெட வெட' வென்று நடுங்கியது. நெஞ்சங்கள் திடீரென்று மலைகளாக மாறிக் கனத்து இறுகி அழுத்துவதுபோல் மூச்சு அடைத்தது. பயத்தோடு பயமாகத் தலையை ஒருக்களித்துத் திருப்பி மிரளும் விழிகளால் தலைப் பக்கம் பார்த்தாள். தூண்டா விளக்கின் மங்கலான

ஒளியில் ஆபத்துதவிகள் தலைவனின் முகத்தைக் கண்டாள் புவன மோகினி. அவள் நெஞ்சு 'படக் படக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. வலிமை பொருந்திய அவனது இரும்புக் கை அவள் வாய்க்குக் கவசம் போட்டுப் பூட்டியது போல் அழுத்திப் பொத்திக் கொண்டிருந்தது. ஆபத்துதவிகள் தலைவனின் மற்றொரு கை அவள் கழுத்துக்கு நேர் உயரப் பாம்பு நெளிவது போன்ற சிறு குத்துவாள் ஒன்றை ஓங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்தச் சமயத்தில் எதிர்ச் சுவரில் தெரிந்த அவன் நிழல்கூடப் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே கழிந்தது. அவள் கழுத்துக்கு நேரே ஓங்கியிருந்த கத்தியாலேயே விளக்கின் திரியை நசுக்கி அணைத்தான் அவன். சுடர் நாற்றமும், திரி கருகிய புகையும் மூச்சில் கலந்து நெஞ்சைக் குமட்டின. விளக்கு அணைந்து இருள் பரவியவுடன் புவனமோகினியின் பயம் அதிகமாயிற்று. பலங்கொண்ட மட்டும் அவன் கையைப் பிடித்துத் தள்ளித் திமிறி எழுந்து மீண்டும் கூச்சலிட்டாள் அவள். இருட்டில் அவன் ஓடிவிட்டான்.

அவள் போட்ட கூச்சலைக் கேட்டு விளக்குகளோடும் தீப்பந்தங்களோடும், அந்தப்புரத்துப் பெண்களும், காவல் வீரர்களும் அங்கு ஓடி வந்தபோது யாரும் வந்துபோன சுவடே தெரியவில்லை. அவ்வளவு விரைவில் வந்த ஆள் தப்பி விட்டான். புவனமோகினி கூறியதை அவர்களில் எவருமே நம்பத் தயாராயில்லை. “அடி, பைத்தியக்காரப் பெண்ணே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? உன் கூச்சலால் அந்தப்புரத்தையே அதிரச் செய்து விட்டாயே! என்னதான் பயங்கரமாகச் சொப்பனம் கண்டாலும் இப்படியா கூச்சல் போடுவார்கள்?“ என்று வண்ண மகள் புவனமோகினியை விலாசினியும், பகவதியும் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். புவனமோகினி தன் அனுபவம் உண்மை என்பதைக் கடைசிவரை அவர்கள் நம்பும்படி செய்ய முடியவில்லை. அவள் கனவுதான் கண்டிருக்க வேண்டுமென்று பிடிவாதமாகச் சாதித்தார்கள் அவர்கள். அதன் பின் அன்றிரவு அவளைச் சுற்றிப் பன்னிரண்டு தோழிப் பெண்களைப் பக்கத்துக்கு மூன்று பேர்கள் வீதம் நான்கு பக்கமும் துணைக்கு காவலாகப்

படுத்துக்கொண்ட பின்பே படுக்கையில் படுத்தாள். இங்கே இது நடந்த நேரத்தில்தான் இடையாற்று மங்கலத்து மாளிகையில் அந்தப் பயங்கரக் கொள்ளையும் நடந்திருக்கிறது. ஒரே இரவில் ஒரே நேரத்தில் இரண்டு குழப்பங்கள் நடந்துவிட்டன.

மறுநாள் பொழுது புலர்ந்தபோது தென்பாண்டி நாட்டின் அரசியல் வாழ்வுக்கு அதிர்ச்சி தரும் உண்மைகளும் வந்து சேர்ந்தன. மகா மண்டலேசுவரர் கண் விழித்து எழுந்தவுடன் கரவந்தபுரத்திலிருந்து வந்திருந்த தூதனை அவருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான் தளபதி வல்லாளதேவன். அதற்கு முன்பே முதல் நள்ளிரவு புவனமோகினியின் பள்ளியறையில் நடந்த கலவரம் அவர் காதுக்கு எட்டியிருந்தது. கரவந்தபுரத்துத் தூதன் தான் கொண்டு வந்திருந்த முத்திரையிட்டு ஜாக்கிரதையாகப் பத்திரப்படுத்திய ஒலையை மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தான்.

அவசர அவசரமாக அதன் மேலிருந்த அரக்கு முத்திரைகளைக் கலைத்து உதிர்த்துவிட்டு ஒலையைப் பிரித்துப் படித்தனர்.

“தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர் திருச்சமூகத்துக்குக் கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தன் பல வணக்கங்களுடன் அவசரமாய் எழுதும் திருமுகம்:

“வடபாண்டி நாட்டு மதுரை மண்டலம் முழுதும் வென்று கைப்பற்றியதோடு ஆசை தணியாமல் கோப்பரகேசரி பராந்தக சோழன் தென்பாண்டி நாட்டின்மீதும் தக்கவர்களின் படைத்துணையோடு படையெடுக்கக் கருதியுள்ளான். இந்தப் படையெடுப்பு நாம் எதிர்பாராமலிருக்கும் போது மிக விரைவில் திடீரென்று நம்மேல் நிகழும் என்று தெரிகிறது. சில நாட்களாக இங்கே உக்கிரன் கோட்டையிலும், இதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சோழ மண்டலத்து ஒற்றர்களும், உளவறிவோரும் இரகசியமாக உலாவக் காண்கிறேன். மிக விரைவில் வடதிசை மன்னர் படையெடுப்பால்-நாம் தாக்கப்படுவோம்


என்பதற்குரிய வேறு சில சங்கேதமான நிகழ்ச்சிகளை நமது வட எல்லைப் பிரதேசங்களில் அடிக்கடி காணமுடிகிறது; கீழைப்பழுவூர்ச் சிற்றரசன் பழுவேட்டரையன் கண்டன் அமுதனும், சோழமண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும், கொடும்பாளூர் மன்னனும், பரதூருடை யானும், இப்படையெடுப்பில் பராந்தக சோழனுக்கு உறுதுணையாயிருப்பார்களென்று தெரிகிறது. தென்பாண்டி மண்டலத்தின் வட எல்லைக் காவல் பொறுப்பு அடியேனிடம் ஒப்புவிக்கப்பட்டிருப்பதால் இந்தச் செய்தியை உடனே தங்களுக்கும், மகாராணி வானவன்மாதேவியாருக்கும் அறிவித்து விடவேண்டுமென்று இத்திருமுகம் எழுதலானேன்.”

“கட்டளைப்படி இத் திருமுகம் கொண்டுவருவான் மானகவசனென்னும் உத்தமதேவன் பால் மறுமொழியும் படையெடுப்பைச் சமாளிக்கும் ஏற்பாட்டு விவரங்களும் காலந்தாழ்த்தாது அறிவித்து அனுப்புக.

“இங்ஙனம் தென்பாண்டி மண்டலப் பேரரசுக்கு அடங்கிய, குறுநிலவேள்". பெரும்பெயர்ச்சாத்தனின் திருமுகத்தைப் படித்து முடித்ததும் இடையாற்று மங்கலம் நம்பி மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானார். இவ்வளவு சீக்கிரமாக இந்தப் படையெடுப்பு நேருமென்று கனவிற்கூட எதிர்பார்க்கவில்லை அவர். உடனே தளபதியையும் கரவந்தபுரத்துத் தூதனையும் அழைத்துக்கொண்டு மகாராணியாரைச் சந்திப்பதற்காக அந்தப்புரத்துக்குச் சென்றார் அவர். செய்தியை மகாராணியாரிடம் படித்துக் காட்டியபோது அவரும் அதிர்ச்சிக்குள்ளானார். “மகாமண்டலேசுவரரே! ஒரே ஒரு வழி தான் எனக்குத் தோன்றுகிறது. அவசரமாக விரைவில் நீங்கள் இராசசிம்மனைத்தேடிக் கொண்டுவந்தால் அவனையே சேர நாட்டுக்குத் தூதனுப்பலாம். அவனே நேரில் போனால் மாமன்மாராகிய சேரர்கள் படை உதவி செய்ய நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள். சேரர் படை உதவி கிடைத்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். இப்போது இதைத் தவிர வேறு ஒரு வழியும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் உடனே இராசசிம்மனைத்


தேடிக்கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறினார் மகாராணியார்.

“மகாராணியார் என்னை மன்னிக்கவேண்டும். ஓர் இரகசியத்தை இந்தக்கணம் வரை உங்களிடம் சொல்லாமலே மறைத்து வந்திருக்கிறேன். குமாரபாண்டியர் சில நாட்களாக என் விருந்தினராக இடையாற்று மங்கலம் வசந்த மண்டபத்தில்தான் தங்கியிருக்கிறார். இப்போதே சென்று இங்கு அழைத்துவரச் செய்கிறேன்.”

"உண்மையாகவா?" மகாராணியின் குரலில் அவநம்பிக்கையும், வியப்பும் போட்டியிட்டன. தளபதி வல்லாளதேவனின் முகத்தில் ஆச்சரியத்தின் உணர்வுச் சாயைகள் கோடிட்டன. அன்று இடையாற்று மங்கலத்து நிலவறையில் அந்தத் துறவியைப் பார்த்துக் குமாரபாண்டியரோ எனத் தான் அடைந்த பிரமை அவனுக்கு நினைவு வந்தது. துரதன் திகைத்துப்போய் நின்றான். “உண்மைதான்! சில நாட்களுக்கு முன்புதான் கடல் கடந்த நாட்டிலிருந்து இளவரசரை இரகசியமாக இங்கு வரவழைத்தேன். யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக அவரை மாறுவேடத்திலேயே விழிஞம் துறைமுகத்திலிருந்து இரவோடிரவாக அழைத்துச் சென்றேன். இடையாற்று மங்கலத்தில் இப்போதும் இளவரசர் துறவிபோல் மாறுவேடத்திலேயே தங்கியிருக்கிறார். ஒரு சில முக்கியமான அரசியல் காரணங்களுக்காக இளவரசர் வரவைத் தங்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் எவ்வளவு முன்னேற்பாடாகவும், பரம இரகசியமாகவும் இதை மறைத்தேனோ, அவ்வளவு எதிர்பாராதவிமாக, சிலருக்குக் குறிப்பாக இந்த இரகசியம் புரிந்துவிட்டது” என்று கூறிக் கொண்டே சிரித்துவிட்டுத் தளபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் அவர். ஏற்கெனவே அவர் மேல் சிறிது மனக்கசப்போடு இருந்த தளபதி, “மற்றவர்களுக்கும் சாமர்த்தியம், அறிவு, சூழ்ச்சித் திறன் எல்லாம் இருக்க முடியும் என்பதைச் சில சமயங்களில் தாங்களும் தங்களுடைய அந்தரங்க ஒற்றனும் மறந்து விடுகிறீர்கள்” என்று குத்தலாக அவருக்குப் பதில் சொன்னான்.


“சேந்தன் அசட்டுத்தனமாக எதையாவது செய்திருப்பான். அதையெல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாதே, தளபதி!” அவனைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்கிறவர்போல் குழைந்து பேசினார் இடையாற்று மங்கலம் நம்பி.

“ஓகோ! அசட்டுத்தனத்தைக்கூடத் திட்டமிட்டுக் கொண்டு செய்வதுதான் தங்களுக்கும், தங்கள் ஒற்றனுக்கும் வழக்கம் போலிருக்கிறது. இன்றுதான் எனக்கு உங்களைச் சரியாகப் புரிகிறது” என்று சுடச்சுடப் பதில் கொடுத்தான் தளபதி. அதற்கு மேலும் அவரை வம்புக்கு இழுக்க வேண்டுமென்று அவன் ஆத்திரம் அவனைத் தூண்டியது. மகாராணியாரின் முன்னிலையில் அப்படிச் செய்வது மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்று அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான். 'தளபதியும், மண்டலேசுவரரும். பேசிக் கொண்ட விதத்தைக் கவனித்ததில் அவர்களுக்குள் ஏதோ பிணக்கு இருக்கிறது' என்ற குறிப்பு மட்டும் மகாராணியாருக்குப் புரிந்தது. ‘அது என்ன பிணக்கு?' என்பதை அவர்களிடமே வற்புறுத்தித்தூண்டிக் கேட்க விருப்பமில்லை அவருக்கு. “மகாமண்டலேசுவரரே! இன்னும் எதைச் சிந்தித்துக்கொண்டு நேரத்தைக் கழிக்கிறீர்கள்? தூதன் காத்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குப் பதில் ஓலை கொடுத்து அனுப்பி வையுங்கள். உடனே இடையாற்று மங்கலம் சென்று வடதிசை மன்னர் படையெடுப்பு விவரங்களைக் கூறிக் குமாரபாண்டியனை இங்கே அழைத்து வாருங்கள். இன்று இரவிலேயே மறுபடியும் கூற்றத் தலைவர்களைக் கூட்டி இளவரசனையும் உடன் வைத்துக் கொண்டு கலந்து ஆலோசிப்போம். உடனே புறப்படுங்கள். தாமதத்துக்கு இது நேரமில்லை” என்று வானவன்மாதேவியார் அவரைத் துரிதப்படுத்தினார்.

“தளபதி, உனக்கும், எனக்கும், உன்னுடைய ஒற்றனுக்கும், ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாக எத்தனையோ உட்பகைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் இந்தச் சமயத்தில் நாம் மறந்துவிடவேண்டும்" என்று அவனிடம் கெஞ்சுவது போல் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி. இந்தச் சமயத்தில் ஒரு வீரன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து, “மகாமண்டலேசுவரரைத் தேடிக்கொண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து அவசரமாக ஓர் ஆள் வந்திருக்கிறான்” என்று தெரிவித்தான். “அவனை உடனே இங்கு அழைத்துக்கொண்டு வா” என்று உத்தரவிட்டார் மகாமண்டலேசுவரர்.

படகோட்டி அம்பலவன் வேளான் உள்ளே வந்து நின்றான். அவன் முகம் பேயறைபட்டதுபோல் வெளிறிப் போயிருந்தது.

“சுவாமி! மாளிகையில் நடக்கக்கூடாத அநியாயம் நடந்துவிட்டது. எந்தப் பொருள்களை உயிரினும் மேலான வையாகக் கருதிப் பாதுகாத்து வந்தோமோ, அந்தப் பொருள்கள் நேற்றிரவு கொள்ளைபோய்விட்டன. பாண்டிய மரபின் சுந்தர முடியையும் வீர வாளையும் பொற் சிம்மாசனத்தையும் பறிகொடுத்துவிட்டோம். இன்று காலையில் தான் கொள்ளை நடந்தபின் வசந்தமண்டபத்தில் வந்து தங்கியிருந்த இந்தச் சாமி யாரையும், நேற்றுக் காலை அவரைத் தேடிவந்து அவரோடு தங்கியிருந்த ஆட்களையும், தீவின் எல்லையிலேயே கர்ண்வில்லை.” படகோட்டி மூச்சுவிடாமல் கூறிக்கொண்டே போனான். அங்கிருந்தவர்கள் அனைவரும் கல்லாய்ச் சிலையாய்ச் சமைந்து நின்றார்கள்.