பாண்டிமாதேவி/முதல் பாகம்/நந்தவனத்தில் நடந்த குழப்பம்
7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்
நிலா முற்றத்துப் படிகளில் வேகமாக இறங்கி எல்லோரும் கீழே சென்றனர். அத்தனை பேருடைய மனத்திலும் திகில் சூழ்ந்திருந்தது. வேற்றவர் நுழைய முடியாத புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் அமைதியான நள்ளிரவில் நந்தவனத்தில் அப்படி ஒரு பயங்கரக் குழப்பம் ஏற்பட்டால் யாருக்குத்தான் திகில் உண்டாகாது?
மகாராணி வானவன்மாதேவியாரின் மனம் காரணமின்றி நடுங்கியது. ‘இன்று மாலை கன்னியாகுமரிக்குப் புறப்பட்டதிலிருந்து என்னுடைய போதாத காலமும் என்னோடு புறப்பட்டுவிட்டது போலிருக்கிறது. இன்றைக்குக் குறை இரவு கழிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றனவோ? ஐயோ! இடையாற்று மங்கலம் நம்பியின் வார்த்தைகளைக் கேட்டு இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு எதற்காக வந்து தங்கினேன் என்று எண்ணி அவர் மனம் வாடினார். பகவதியும், விலா சினியும் மிரண்டுபோய் உடன் நடந்தனர். ஆடவர்களாகிய பவழக்களிைவாயரும், அதங்கோட்டாசிரியரும் வேகமாக நந்தவனத்தை நோக்கி ஓடினர். நடக்கிற கலவரம் என்ன என்று நந்தவனத்துக்கு நேரில் போய் விசாரித்து அறியவேண்டும்’ என்ற ஆவல் மகாராணியின் உள்ளத்தில் அணுவளவும் இல்லை. ‘என்ன வேண்டுமானால் நடக்கட்டும்! எது நடந்தால் எனக்கென்ன? நாளைக்கு மகாசபைக் கூட்டம் நடந்து முடிகிறவரை பல்லைக் கடித்துக் கொண்டு முள்ளின் மேலிருப்பது போல் இந்த மாளிகையில் இருந்து தீர வேண்டியதுதான். அப்புறம் எந்தத் தவப் பள்ளியில் போய் எப்படி எப்படி வாழ்வின் எஞ்சியிருக்கும் பாவ நாட்கள் கழியப் போகின்றனவோ?’-என்று பழைய விரக்திதான் மகாராணியின் உள்ளத்தில் உறுதிபட்டது.
அந்த இரண்டு பெண்களையும் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, தான் பெற்ற மக்களை அழைத்துச் செல்வதைப்போல் பரிவோடும் பாசத்தோடும் அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குள் சென்றார் மகாராணி.
இனி நிலாமுற்றத்தில் நடனமும், பாடலும் நிகழ்ந்து முடியும் தறுவாயில் ஏற்பட்ட அந்தக் குழப்பம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏற்கெனவே நமக்குத் தெரியாமல் இந்தக் கதையில் நடந்து முடிந்துவிட்ட சில முன் நிகழ்ச்சிகளையும் இங்கே தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டி யிருக்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டால் கதைத் தொடர்விட்டுப் போகாமல் விளக்கமாகப் புரிவதற்கு இயலும்.
‘மகாராணி வானவன் மாதேவி கன்னியாகுமரி ஆலயத்துக்கு வந்திருந்த அன்றைய தினம் மாலையில் நாஞ்சில் நாட்டின் தளபதி வல்லாளதேவன், பெரும் புலவராகிய அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச் சாலை மணியம் பலங்காக்கும் பவழக்கனி வாயர் ஆகிய எல்லோரும் ஆலயத்துக்கு வந்திருந்தார்களே! மகாமண்டலேசுவரராகிய இடையாற்று மங்கலம் நம்பியும் அவருடைய புதல்வியும் மட்டும் ஏன் வரவில்லை? என்று சந்தேகம் நேயர்களுக்கு உண்டாகவில்லையா ? இந்தச் சந்தேகம் இதுவரை நேயர்களுக்கு ஏற்படவில்லையானால், உடனே ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்திவிட்டு மேலே தொடருகிறேன்.
அதே தினம் மாலையில் மகாமண்டலேசுவரரும் அவருடைய புதல்வி குழல்வாய் மொழியும், இன்னும் இந்தக் கதையில் இதுவரை நமக்கு அறிமுகமாகாத ஒரு புதிய பாத்திரமும் தென்பாண்டி நாட்டின் மேல்புறம் மேலை மண்டலக் கடற்கரையின் முக்கியத் துறைமுகப் பட்டினமாகிய விழிஞத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
சாரி சாரியாக ஏற்றுமதிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகள், கொற்கை முத்துச் சலாபத்திலிருந்து முத்திரையிட்டுக் கொண்டு வரப்பட்டிருந்த முத்து மூட்டைகள், ஏலக்காய், இலவங்கம், சாதிக்காய், கிராம்பு ஆகிய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொதிகள் எல்லாம் நிறைந்து கிடந்தன. அந்தத் துறைமுகத்தில், நாஞ்சில் நாட்டு அரசாங்க இலச்சினையாகிய மேழியோடு கூடிய கலப்பையும், அதன் ஒரு மூலையில் பாண்டியர் மீன் இலச்சினையும் பதித்த பெரிய பெரிய கொடிகள் மரக்கலங்களின் கூம்பில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பல தேசத்து வியாபாரிகளின் கூட்டமும், பிரயாணம் செய்து வந்து இறங்கியவர்கள், பிரயாணம் செய்வதற்காகக் கப்பலேற வந்திருப்பவர்களின் கூட்டங்களுமாகத் துறைமுகம் கலகலப்பாக இருந்தது.
இடையாற்று மங்கலம் நம்பியும், அவர் மகளும், அவர்களோடு இருந்த குட்டையான ஓர் இளைஞனும், துறைமுகத்துக்கு வந்து சேரவேண்டிய கப்பலொன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைப் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு இருந்த அந்த இளைஞன் பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தை உடையவனாக இருந்தான். தமிழ் முனிவர் அகத்தியரைப் பார்த்திருந்தால் இவனைப் பார்க்க வேண்டாம்-என்று சொல்லத் தக்க குட்டையான தோற்றம், பீமசேனனைப் போலக் கட்டமைந்த உடல், உருண்டை முகம், மூக்கும் விழியுமாக எடுப்பான தோற்றம். நெற்றியில் தீபச் சுடர்போல் சிவப்பு நிறத்தில் ஒரு சிந்துாரக் கீறல்-இது அவன் இட்டுக் கொண்டிருந்த திலகம். செவிகளில் சங்கு சக்கர வடிவமாக முத்துக்கள் பதிக்கப்பெற்ற இரண்டு முத்துக் கடுக்கன்கள் மின்னின. மூலத்தாராகக் கச்சம் வைத்துக் கட்டிக்கொண்டிருந்த ஆடை முழங்காலுக்கு மேல் தொங்கியது. அடிக்கடி எதையாவது சொல்லிக் கொண்டே இடி இடியென்று சிரித்துக் கொண்டிருந்தான் அவன். அப்படிச் சிரிக்கும்போது முன்புறமாக முடிந்திருந்த அவன் தலையின் சிறிய குடுமி ஆடுவது காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அவன் கூறுவனவற்றைக் கேட்டு மகா மண்டலேசுவரர் அவ்வளவாக இரசித்துச் சிரிக்க வில்லையான்ாலும், அவருடைய குமாரி குழல்மொழி தன் முல்லைப் பற்கள் தெரியச் சிரித்து அநுபவித்துக் கொண்டிருந்தாள். அதிகமாகச் சொன்னாலும் இருபத்தெட்டு வயதுக்குமேல் மதிப்பிட்டுச் சொல்ல முடியாது அந்த இளைஞனுக்கு அவனுடைய வைதிகமான இந்த எளிய கோலத்துக்கு ஒரு சிறிய விதிவிலக்குப் போல் இடையில் ஒரு வாள் உறையோடு தொங்கியது.
அவர்கள் நின்றுகொண்டிருந்த வழியாக வந்து போய்க் கொண்டிருந்த கூட்டத்தினரில் அந்த இளைஞனின் விசித்திரத் தோற்றத்தையும், அவன் சிரித்துச்சிரித்துப் பேசும் வேடிக்கை யான காட்சியையும் ஒரு கணம் நின்று வியப்புடன் பார்த்து விட்டுப் போகாதவர்களே இல்லை. மகாமண்டலேசுவரர் தென் மேற்குத் திசையில் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த இளைஞனின் பக்கமாகத் திரும்பி, “சேந்தா! நீ கிளம்பு. இன்று மாலை மகாராணியார் கன்னியாகுமரிக்கு வரப் போவதை மறந்து விட்டாயா? இங்கே நின்று கொண்டு உன் சிரிபொலியால் கடற்கரையையே அதிர அடித்துக் கொண்டிருக்கிறாயே! கப்பல் வந்ததும் நானும், குழல்மொழியும் அவரை மாளிகைக்கு அழைத்துக்கொண்டு போகிறோம். எவ்வளவு நாழிகையானாலும் நாங்கள் இங்கே இன்றிரவு தங்க மட்டோம். மாளிகைக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம். அதே போல் நீயும் மாளிகைக்கு வந்துவிடு. உனக்காகத் தென்கரையில் அம்பலவன் வேளானைத் தோணியோடு காத்திருக்கச் செய்வேன். மகாராணி கன்னியாகுமரிலிருந்து கோட்டைக்குத் திரும்பிப் போய்ச் சேர்கிறவரை என்னென்ன நடக்கிறது என்பதை ஒன்று விடாமல் கவனித்துக்கொண்டு வந்து சொல்லவேண்டும். நீ அங்கே சென்று கவனிப்பதை வேறு யாரும் தெரிந்து கொள்ளாதபடி மறைந்து கவனிக்க வேண்டியது மிக முக்கியம். நீ வந்து தகவல்களைக் கூறுகிற வரையில் நான் உறங்காமல் உனக்காக விழித்துக் கொண்டு காத்திருப்பேன்.”
மகாமண்டலேசுவரரின் இந்தக் கம்பீரமான கட்டளையைக் கேட்டதும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் குடி கொண்டன.
“அப்படியே செய்கிறேன், பிரபு!” என்று சொல்லிக் கைகூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான் அவன்.
“சேந்தா! கொஞ்சம் இப்படி அருகே வா. இன்தயும் கேட்டுக் கொண்டு போ” சிறிது தூரம் நடந்து சென்று விட்ட அவனை மீண்டும் கை நீட்டிக் கூப்பிட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவன் திரும்பி நடந்து வந்தான்.
நாஞ்சில் நாட்டு வேளாளப் பெரு மக்கள் நெல் போட்டு வைத்திருக்கப் பயன்படும் குறுகிய தாழி ஒன்று உருண்டு உருண்டு வருவது போல் அந்தக் குட்டை இளைஞன் நடப்பது பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை மூட்டியது.
“சேந்தா! நானும் குழல்மொழியும் இங்கே விழிளுத்துக்கு வந்திருக்கும் செய்தியை வேறு யாரிடமும் சொல்லி விடாதே. எச்சரிக்கையாக நடந்து கொள்! நானும் குழல் மொழியும், ‘கப்பலில் வருகின்றவரும் திரும்பிச் செல்கிற வழியில் சுசீந்திரம் தானுமாலய விண்ணகரத்தில் சிறிது நேரம் தங்கித் தரிசித்துவிட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறேன். இரவு மாளிகைக்கு வருவதற்கு முன்பே அவசரமான செய்தி ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டியிருந்தால் சுசீந்திரத்துக்கு ஒரு நடை வந்து சொல்லிவிட்டுப் போ’ என்று அவன் காதருகே குனிந்து தணிந்த குரலில் கூறினார் அவர். அவனுடைய உருண்டைத் தலையும் அதில் முடியப்பட்டிருந்த குடுமியும் சம்மதத்துக்கு அறிகுறியாக அசைந்தன. “சரி! அவ்வளவுதான். போய்வா” என்றார் அவர்.
துறைமுகத்தின் சுங்கச் சாவடிக்கு அருகில் கட்டியிருந்த தன் குதிரையை அவிழ்த்து அதன் மேல் தாவி ஏறிக் கொண்டான் அந்தக் குட்டை இளைஞன். குதிரை சாலையில் திரும்பி வேகமாகச் சென்றது. வாமனாவதாரம் போன்ற அந்தக் குறள் வடிவ இளைஞன் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யும் காட்சியைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் வியப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது.
வியப்புக்கும், விந்தைக்கும் காரணமான இந்த இளைஞன் யார், தெரியுமா? மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைத் தெரிந்தவர்களுக்கு இவனையும் தெரிந்திருக்க வேண்டும். நாராயணன் சேந்தன்’ என்னும் பெயரையுடைய இந்தக் குட்டை இளைஞன் மகாமண்டலேசுவரருக்கு வலது கையைப்போல உதவி வருபவன்.
'உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்
தேர்க்(கு) அச்சாணி யன்னா ருடைத்து’
என்று திருவள்ளுவ நாயனார் கூறியருளிய திருக்குறளுக்குப் பொருத்தமானவன் நாராயணன் சேந்தன். நாடக அரங்கில் வந்து போகின்ற விதுரடகனைப் போலத் தோன்றும் இந்தக் குட்டை மனிதனால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கும் மகாமண்டலேசுவரருக்கு என்ன ஆகப்போகிறது?’ என்று யாராவது நினைத்தால் அது முதல் தரமான தவறு. நாஞ்சில் நாட்டுக்கும் அதன் அரசாட்சி அமைப்புக்கும் இடையாற்று மங்கலம் நம்பி எவ்வளவு முக்கியமானவரோ அவ்வளவுக்கு அவருக்கு முக்கியமானவன் இந்த நாராயணன் சேந்தன். இவனை அவருடைய உதவி ஆள் என்பதா, அந்தரங்க ஒற்றன் என்பதா, நண்பன் என்பதா, மாணவன் என்பதா என்றெல்லாம் தனித்தனியே ஆராய்ந்து கொண்டிருப்பதைவிடச் சுருக்கமாக ஒன்று சொல்லிவிடலாம். எந்தெந்தச் சமயங்களில் எப்படி எப்படியெல்லாம் பயன்பட முடியுமோ, அப்படிச் சமய சஞ்சீவியாகப் பயன்படுபவன் இவன்.
இவன் உடலின் உயரத்தைவிட அறிவின் உயரம் அதிகம். பார்ப்பதற்குப் பாமரனைப் போல்தான் இடிஇடியென்று, சிரித்துப் பேசிக் கொண்டிருப்பான்; ஆனால் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்கிவிட்டாலோ இவன் சூரப்புலிதான்.
‘நாராயணன் சேந்தனால் செய்ய முடிந்த காரியத்துக்கு நாராயணன் சேந்தனைத் தவிர வேறு யாரையும் அனுப்ப முடியாது’ என்று இடையாற்று மங்கலம் நம்பி அடிக்கடி அவனைப் புகழுவதுண்டு. அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான் அவன்.
அன்று மாலை ‘விழிஞம்’ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தன், மகாராணியாரும் அவருடைய பரிவாரமும் கன்னியாகுமரியை அடைவதற்கு முன்பே தான் அங்குப் போய் ச் சேர்ந்துவிட்டான். குதிரையோடு ஆலயத்த ருகே போய் இறங்கினால் தன் வரவை வெளிப்படையாகப் பலருக்கு அறிவித்தது போல் ஆகிவிடுமென்று அவன் அறிவான். கூடியவரை தன்னை அங்கே யாரும், எதற்காகவும் தெரிந்து கொள்ளக்கூடாது; ஆனால், தான் எல்லாவற்றையும் எல்லோரையும் தெரிந்து கொள்ளவேண்டுமென்பது அவனுடைய நோக்கம். கோவிலின் மேற்குப் புறமாகக் கடற்கரையோரத்தில் இருந்த புன்னைமரச்சோலை ஒன்றுக்குள் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் குதிரையைக் கட்டினான்.
பின்பு சிறிது நேரம் அந்தச் சோலையிலேயே இங்கும் அங்குமாகச் சுற்றினபோது, ஒரு பெரிய மரத்தின் அடியில் சில ஆடைகளும், அங்கிகளும், மூன்று சிவப்புத் தலைப்பாகைகளும் களைந்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.
‘இவைகளை யார் இங்கே வைத்திருக்கக்கூடும்?’ என்ற சந்தேகத்தோடு நாராயணன் சேந்தன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். புன்னைமரத் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் கடலில் கரையோரமாக மூன்று மனிதர்கள் நீராடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டான். மரத்தடியில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த உடைகளும் தலைப்பாகைகளும், அவர்களுடையனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நாராயணன் சேந்தன் புரிந்து கொண்டான். சாதாரண மனிதர்கள் அணியக் கூடிய உடைகளாகத் தெரியவில்லை அவை. அரசாங்கப் பணி புரியும் வீரர்களோ, சேவகர்களோ, அணியக் கூடிய உடையாகத் தோன்றின அவை. புறத்தாய நாட்டு வீரர்களும், பாண்டி நாட்டின் பிற பகுதிகளிலுள்ள படை வீரர்களும் வழக்கமாக அணியக் கூடிய உடை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் புன்னை மரத்தடியில் கண்ட உடைகளும் அப்படி இருந்திருந்தால், ‘சரிதான்! யாரோ பாண்டி நாட்டு வீரர்கள் உடைகளைக் கழற்றி வைத்து விட்டு நீராடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு போயிருப்பான், ஆனால் அந்த மாதிரி உடையணிந்த வீரர்களை அவன் பாண்டி நாட்டுப் படையில் எங்கும், எப்போதும் கண்டதே இல்லை. ஆகவே, அருகில் நெருங்கி உற்றுப் பார்த்தான். தலைப்பாகைகள் மூன்றில் ஒன்றுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்த ஒர் ஒலை நாராயணன் சேந்தனின் கூரிய விழிகளில் தென்பட்டது. சட்டென்று குனிந்து அதைக் கையில் எடுத்தான்.
அந்த ஒலையைப் படிப்பதற்குள் வேலிக்கு அப்பால் மணலில் ஆட்கள் நடந்து வரும் ஒலி கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று வீரர்களும் தங்கள் உடைகளை அணிந்து கொள்வதற்காக மரத்தடிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கையில் எடுத்த ஒலையை அது முன்பிருந்தபடியே தலைப்பாகைக்குள்ளேயே வைத்து விட்டு வேலி ஒரமாகப் பதுங்கினான் நாராயணன் சேந்தன்.
அதன்பின் அன்று கன்னியாகுமரியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் மறைந்திருந்து கவனித்தான். மகாராணி யார் கடற்கரைக் காட்சியைக் கண்டது, தளபதி ஒற்றர்களோடு போரிட்டது, ஒலையைக் கைப்பற்றியது, கன்னியாகுமரி அம்மன் ஆலயத்தில் வானவன்மாதேவிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகியவையெல்லாம் ஒன்று விடாமல் தெரிந்து கொண்டான்.
மகாராணியாரும் பரிவாரமும் ஆலயத்திலிருந்து கோட்டைக்குத் திரும்பிய போது அவனும் பின்னாலேயே புறப்பட்டு விட்டான். சுசீந்திரத்தை அடைந்தவுடன் மகாமண்டலேசுவரர் தம்மைச் சுசீந்திரத்தில் சந்திக்கச் சொல்லியிருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே மகாராணியாரைக் கோட்டைக்குப் போகும் சாலையில் பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு, சுசீந்திரம் கோவிலுக்குத் திரும்பிப் பிரிந்து சென்றான் அவன். சுசீந்திரம் கோவிலில் இடையாற்று மங்கலம் நம்பியும் அவர் புதல்வி குழல்மொழியும் அவர்களோடு மூன்றாம் மனிதரான ஓர் இளந் துறவியும் நாராயணன் சேந்தனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, “சேந்தா! இப்போது நீ மகாராணியாரைப் பாதியில் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். நீ கூறியதிலிருந்து வானவன் மாதேவியாரை ஏதோ தீய சக்திகள் சூழ்வதாகத் தெரிகிறது. இப்போது நீ மீண்டும் பின் தொடர்ந்து செல். முடியுமானால் இன்றிரவு கோட்டையிலேயே யாரும் அறியாமல் தங்கியிருந்து கவனி, உடனே போ!” என்று அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டார் மகா மண்டலேசுவரர்.
நாராயணன் சேந்தன் மகாராணியாரும் பரிவாரங்களும் சென்ற நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் போகாமல் வேறொரு கிளைச்சாலை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அந்தக் கிளை வழி ஓரிடத்தில் நெடுந்துரத்துக்கு ஒரு பாதிரித் தோட்டத்துக்கு நடுவிலே புகுந்து சென்றது. குறுகலான அவ்வழியில் நாராயணன் சேந்தனின் புரவி மெல்லச் சென்றது. நெடிதுயர்ந்த பாதிரி மரக்கிளைக்கு இடையே வழியின் மேல் அங்கங்கே நிலவின் ஒளி பரவியது. சில இடங்களில் மரக்கிளைகளின் அடர்ந்த நிழல் பட்டு இடைவழி தெரியாமல் இருண்டாற் போலவும் இருந்தது.
ஒர் இடத்தில் பாதையோரமாக யாரோ இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்து மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருப் பதைத் துரத்தில் வரும்போதே அவனுடைய கூரிய கண்கள் பார்த்துவிட்டன. அதைப் பொருட்படுத்தாமல், ‘யாரோ வழிப் போக்கர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிக்கிறார்கள்’ என்று நினைத்துக் குதிரையை விட்டுக்கொண்டு போக முயன்றான்.
ஆனால் அவனுடைய குதிரை அந்த இடத்தை அடைந்ததும் சாலையோரத்து இருளில் உட்கார்ந்திருந்த அந்த மூன்று ஆட்களும் குபிரென்று எழுந்து பாய்ந்து மறித்தபோதுதான் நாராயணன் சேந்தன் அவர்களை இன்னாரென்று புரிந்து கொள்ள முடிந்தது. நிலவொளியில் தெரிந்த சிவப்புத் தலைப்பாகைகளைக் கண்டதும் குதிரையை நிறுத்தாமல், கடிவாளத்தைச் சுண்டி நாலுகால் பாய்ச்சலில் ஒடச் செய்தான்.