பாண்டிமாதேவி/முதல் பாகம்/யார் இந்தத் துறவி?

விக்கிமூலம் இலிருந்து

6. யார் இந்தத் துறவி?

தோணித் துறையிலிருந்து இரவின் அகால நேரத்தில் புறப்பட்ட அந்தப் படகு பறளியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளத்தின் வேகமும், சுழிப்பும் மிகுதியாக இருந்ததால் அம்பலவன் வேளான் படகை மெல்லச் செலுத்திக் கொண்டு போனான்.

படகில் சென்று கொண்டிருந்தபோது மகா மண்டலேசுவரர் தளபதி வல்லாளதேவனிடம் கலகலப்பாகப் பேசினார். அவருடைய திருக்குமரி குழல்வாய்மொழி நாச்சியாரும் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகவும், கலகலப்பாகவும் பேசினாள். படகோட்டி அம்பலவன் வேளானும் பேசினான். குழல் மொழிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபத் துறவிதான் பேசவேயில்லை. எப்படியாவது அந்தத் துறவியைப் பேச வைத்துவிட வேண்டுமென்று தளபதி ஆன மட்டிலும் முயன்றான். வேண்டுமென்றே பேச்சினிடையே துறவிகளைப் பற்றிப் பேசினான். அப்போதாவது அந்த இளம் துறவி வாய் திறந்து பேசுவாரென்று அவன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். உதடுகளை நெகிழ்த்து மெளனமாக ஒரு புன்னகை செய்துவிட்டுப் பேசாமலிருந்தார் அவர். ‘மனிதர் வாய் பேச முடியாத ஊமையோ?’ என்று சந்தேகம் உண்டாகிவிட்டது அவனுக்கு.

மகாமண்டலேசுவரராவது அவருடைய புதல்வியாவது அந்தத் துறவியைத் தனக்கு அறிமுகம் செய்துவைப்பார்கள் என்று தளபதி எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் அதைச் செய்யவே இல்லை. வேண்டுமென்றே அறிமுகம் செய்யாமலிருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. இந்தத் துறவி யார்? எங்கிருந்து வருகிறார்? ஏன் இப்படிப் பேசாமல் ஊமைபோல் மெளனமாக உட்கார்ந்து கொண்டு வருகிறார்? என்று வெளிப்படையாக இடையாற்று மங்கலம் நம்பியிடம் நேருக்கு நேர் கேட்டுவிடலாம். ஆனால் அந்தத் துறவியையும் அருகில் வைத்துக் கொண்டே அப்படிக் கேட்பது அவ்வளவு சிறந்த முறையாகாது. பண்பற்ற முரட்டு விசாரணையாக முடிந்துவிடும் அது!

அவர்கள் வேண்டுமென்றே பிடிவாதமாக அதைத் தன்னிடம் சொல்ல விரும்பாதது போல் மறைக்கும்போது கேட்பது நாகரிகமில்லை. ஆனால் ஒரு உண்மையைத் தளபதி வல்லாளதேவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. திருமணமாகாத தம் குமாரியை அந்த வாலிப வயதுத் துறவியோடு நெருங்கிப் பழகவிடுவதைக் கண்டபோது, துறவிக்கும் இடையாற்று மங்கலம் நம்பிக்கும் நெருங்கிய விதத்தில் உறவோ தொடர்போ இருக்க வேண்டுமென்று தெரிந்தது. குழல்மொழி அந்தத் துறவியிடம் நடந்து கொண்ட விதம் எவ்வளவோ நாள் தெரிந்து பழகிய மாதிரி கூச்சமோ, நாணமோ இல்லாமல் இருந்தது. தன் பக்கத்தில் கன்னிப் பருவத்து அழகு பூரித்து நிற்கும் ஓர் இளம் பெண் படகில் உட்கார்ந்திருக்கிறாளே என்று துறவி கூச்சமடைந்ததாகத் தெரியவில்லை. அதேபோல் தளதளவென்று உருக்கிய செம்பொன் போன்ற நிறமும், இளமைக் கட்டமைந்த காளை போன்ற உடலும், அழகு ததும்பும் முகத் தோற்றமுமாக ஓர் ஆண் மகன் தன் அருகே உட்கார்ந்திருக்கிறானே என்று மகா மண்டலேசுவரரின் குமாரியும் கூசியதாகத் தெரியவில்லை. அவள் நெருங்கி உட்கள்ர்ந்து கொண்டிருந்தாள். அடிக்கடி சிரித்துக் கொண்டே துறவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்! இவற்றையெல்லாம் பார்த்துத்தான் தளபதி மனம் குழம்பினான். படகு மேலே முன்னேறிச் சென்று கொண்டிருந்தது.

ஆண்பிள்ளையாகிய வல்லாள தேவனையே அந்த இளந் துறவியின் தோற்றம் மயக்கியது. ‘இந்த முகத்தை இன்னொரு முறை பார்!’ என்று பார்த்தவன் அல்லது பார்த்தவளை மீண்டும் மீண்டும் தூண்டக்கூடிய அதிசயமானதோர் அழகு துறவியின் முகத்தில் இருந்தது.

தங்கத் தாம்பாளத்தில் அரைக்கீரை விதையைக் கொட்டி வைத்தாற்போல் அந்தப் பொன்னிற முகத்தில் கருகருவென்று வளர்ந்திருந்த தாடி எடுப்பாக இருந்தது. தளபதி மீண்டும் நிலா ஒளியில் படகுக்குள் தன் எதிரே உட்கார்ந்திருக்கும் துறவியைப் பார்த்தான்.

அந்தக் கம்பீரமான பார்வை, அழகிய கண்கள், நீண்ட நாசி, புன்னகை தவழும் சிவந்த உதடுகள் இவற்றையெல்லாம் இதற்கு முன் எங்கோ, எப்போதோ, பல முறைகள் பார்த்திருப்பது போல் ஒரு பிரமை. ஒரு தற்செயலான நினைவு திடீரென்று வல்லாளதேவனின் மனத்தில் ஏற்பட்டது.

மாளிகைக் கரையிலுள்ள துறையில் போய்த் தோணி நிற்கிறவரை இடையாற்று மங்கலம் நம்பியும், அவருடைய பெண்ணும் எதைஎதையோ பேசினார்கள். மகாராணியாரின் உடல்நலம், வடபாண்டி நாட்டின் அரசியல் நிலைமை, விழிஞத்துத் துறைமுகத்தில் வந்து செல்லும் வெளிநாட்டு மரக்கலங்கள், கோட்டாற்றிலுள்ள தென் பாண்டிப் பெரும் படைகளின் நிலைமை என்று எத்தனையோ செய்திகளைப் பற்றி விரிவாக விவாதித்துப் பேசினார்கள். ஆனால் தப்பித் தவறிக் கூட அந்த வாலிபத் துறவியைப் பற்றிப் பேசவில்லை.

‘இந்த அகால வேளையில் இவர்களோடு எங்கே போய் விட்டு மாளிகைக்குத் திரும்புகிறார் இடையாற்று மங்கலம் நம்பி’ என்று இன்னொரு சந்தேகமும் தளபதிக்கு ஏற்பட்டது. கரையில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் செய்த முதல் காரியம் வீரத்தளபதி வல்லாளதேவனுடைய சந்தேகத்தை மேலும் வளர்ப்பதாகவே இருந்தது.

“குழல்மொழி! தளபதி ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவரோடு நான் தனியாகப் பேச வேண்டும். நீ சுவாமிகளை அழைத்துக் கொண்டு போய் வசந்த மண்டபத்தில் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடு” என்று தீவின் மேற்குக் கோடியிலிருந்த வசந்த மண்டபக் கட்டிடத்தைச் சுட்டிக்காட்டினார் மகா மண்டலேசுவரர். “ஆகட்டும், அப்பா ! இவரை நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் தளபதியாரை அழைத்துக் கொண்டு போய் உங்கள் காரியத்தைக் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு, அவருடைய பெண் குழல்மொழி அந்த இளந் துறவியை அழைத்துக்கொண்டு அந்த நேரத்தில் தனியே வசந்த மண்டபத்தை நோக்கி நடந்ததைப் பார்த்தபோது தளபதி திகைத்துப்போய் நின்றுவிட்டான். அவன் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த மர்மக் குழப்பம் இன்னும் ஒரு படி அதிகமாகிவிட்டது.

“என்ன தளபதி? நாம் போகலாமா? அந்தரங்க மண்டபத்தில் போய் நாம் பேசவேண்டியதைப் பேசுவோம்” என்று கூறிக்கொண்டே முன்னால் நடந்தார் இடையாற்று மங்கலம் நம்பி, தளபதி வசந்த மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அந்தத் துறவியையும், பூங்கொடி அசைந்து துவள்வது போல் அவர் அருகே நடை பயிலும் குழல்மொழியையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மகா மண்டலேசுவரரைப் பின்பற்றி நடந்தான். “தளபதி! வழியைப் பார்த்து நடந்து வா! மழை பெய்த ஈரம், வழுக்கிவிடப்போகிறது. எங்கேயோ பார்த்துக்கொண்டு நடக்கிறாயே?’ என்று அவர் குறிப்பாகத் தன் செயலைக் கண்டித்தபோது தான் திரும்பிப் பார்ப்பதை வல்லாளதேவன் நிறுத்திக் கொண்டான். அப்போது மகாமண்டலேசுவரரும் தானும் தனியாக இருப்பதால் அந்தத் துறவியைப் பற்றி அவரிடம் விசாரிப்பது தவறில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

“மகா மண்டலேசுவரரிடம் அடியேன் ஒரு சந்தேகம் கேட்கலாமோ?” என்றான்.

முன்னால் ‘விறுவிறு’ வென்று விரைந்து நடந்து கொண்டிருந்த இடையாற்று மங்கலம் நம்பி நின்று அவனைத் திரும்பிப் பார்த்தார். இமையாமல் அவர் பார்த்த அந்தப் பார்வையில் ஆத்திரமா? திகைப்பா? வெறுப்பா? கோபமா?எது நிறைந்திருந்தது என்பதை வல்லாளதேவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

“சந்தேகமா! என்ன சந்தேகம்?” நிதானமான குரலில் பதற்றமில்லாமல் வெளி வந்தது அவருடைய கேள்வி.

மகா மண்டலேசுவரர் தன்னைத் திரும்பிப் பார்த்த விதத்தையும் கேட்ட கேள்வியையும் பார்த்து ஒரு கணம் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டான், வீரத்தளபதி. தான் கேட்க நினைத்ததைக் கேட்காமலே இருந்து விடலாமா என்று ஒருவிதத் தயக்கம்கூட அவனுக்கு உண்டாயிற்று. அறிவிலும், அநுபவத்திலும், சூழ்ச்சியிலும், எதையும் ஆளும் திறமையிலும் மலை போல் உயர்ந்த மகா மண்டலேசுவரரிடம் எதையும் மறைக்க முடியாது. ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு பார்வையிலும், ஒவ்வொரு அசைவிலும் மனத்தின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் அதற்கு மூலமான எண்ணத்தை ஊடுருவி அறியக்கூடியவர் இடையாற்று மங்கலம் நம்பி. எனவே கேட்க நினைத்ததை மறைக்காமல் கேட்டு விடுவதென்று உறுதி செய்து கொண்டு “நம்மோடு படகில் வந்தாரே, அந்தத் துறவி...” என்று தொடங்கி, அவன் தன் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே அவர் இடைமறித்துப் பதில் சொல்லத் தொடங்கி விட்டார்:

“அவர் இன்னாரென்று அறிவதற்காகப் படகு புறப்பட்ட போதிலிருந்து நீ துடிதுடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும், வல்லாளா ! அவரை வாய் திறந்து பேச வைப்பதற்காக நீ செய்த சாகஸங்களை யெல்லாம் பார்த்து உள்ளுறச் சிரித்துக் கொண்டுதான் வந்தேன் நான். அவரைப் பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போது வேண்டாம், அதற்கொரு சமயம் வரும்” என்று சொல்லி விட்டுக் குறும்புத்தனமானதொரு சிரிப்பை இதழ்களில் மலரச் செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி.

தன் கேள்விக்கு விடை சொல்லாமல் அவர் சாமர்த்தியமாக அதை மறுத்த விதம் தளபதியை அதிர்ச்சியடையச் செய்தது. “வல்லாளதேவா! நீ வந்திருக்கிற நேரத்தையும் அவசரத்தையும் பார்த்தால் மிக மிக இன்றியமையாத காரியமாகத்தான் வந்திருப்பாய் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தத் துறவியைப்பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதே. வந்த காரியத்தைப் பேசுவோம், வா!” என்று சொல்லிக் கொண்டே மாளிகையின் அந்தரங்க அறை வாசலில் வந்து நின்றார் மகாமண்டலேசுவரர்.

அங்கிருந்த சேவகன் ஒருவன் ஓடி வந்து அந்தரங்க அறையின் மணிகள் பொருத்தப்பட்ட கதவுகளைத் திறந்து விட்டான். கதவுகளில் தொங்கிய மணிகள் அமைதியான இரவில் கலகலவென்று ஒலித்தன. உள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களைத் தூண்டி விட்டான். தூய கலசங்களிலிருந்த அனலை ஊதிக் கனியச் செய்து அதில் அகில் பொடியைத் துறவினான். தீபங்களின் ஒளியும், தூபங்களின் நறுமணமுமாக அற்புதச் சோபையுடன் விளங்கிய அந்த அறைக்குள் இருவரும் நுழைந்தவுடன் சேவகன் வெளிப்புறமாக வந்து நின்று கொண்டு கதவுகளை இழுத்துச் சாத்தினான். மறுபடியும் ஒரே சமயத்தில் இரு கதவுகளிலும் இருந்த எல்லா மணிகளும் ஒலித்து ஓய்ந்தன. சேவகன் அங்கேயே காவலாக நின்று கொண்டான்.

இடையாற்று மங்கலம் மாளிகை கடல் போலப் பெரியது. சொல்லப் போனால் இரண்டு ஆறுகளுக்கு நடுவே நதிகளின் செல்லப் பிள்ளைபோல் அமைந்திருந்த அந்தத் தீவின் முக்கால் பகுதி இடம் அந்த மாபெரும் மாளிகை தான். கடலுக்கு அடியில் எத்தனை இரகசியங்கள், மர்மங்கள் அபூர்வப் பொருள்கள் மூழ்கிக் கிடக்கின்றனவோ, தெரியாது; ஆனால் இடையாற்று மங்கலம் மாளிகையில் ஒவ்வொரு அணுவிலும் நாஞ்சில் அரசியலின் எண்ணற்ற மர்மங்கள் மறைந்திருக்கின்றன என்பார்கள்.

மாளிகையின் முக்கியமான அறைகளின் கதவுகளி லெல்லாம் நிச்சயமாக மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். எவ்வளவு மெதுவாகக் கதவைத் திறக்க முயன்றாலும் சிறு சிறு வெண்கல மணிகளின் நாவு அசைந்து கணிரென்று ஒலியைக் கிளப்பிவிடும். தனியாக உட்கார்ந்து அந்தரங்கமான செய்திகளைப் பேசும்போதே மந்திராலோசனையில் இருக்கும் போதோ அன்னியர் எவரும் முன்னறிவிப்பின்றி உள்ளே துழைந்துவிட முடியாதபடி கதவுகளை இப்படி நுணுக்கமாக அமைத்திருந்தார் இடையாற்று மங்கலம் நம்பி.

அரசியல் மேதையும், அறிவுச் செல்வரும், இராஜ தந்திரங்களின் இருப்பிடமுமான இடையாற்று மங்கலம் நம்பியின் எண்ணங்களையும், செயல்களையும், மனத்தையும் வல்லாளதேவன் எப்படி முழு அளவில் இன்றுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையோ, அதேபோல் அந்த மாளிகையிலும் தெரிந்து கொள்ளாத அல்லது தெரிந்து கொள்ள முடியாத இன்னும் எத்தனை எத்தனையோ விசித்திரமான இடங்கள் இருந்தன.

வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கு நடுவே போர்க்களத்தில் நின்று அஞ்சாமல் கட்டளைகளை இட்டும், கையில் வாளேந்தியும், ஒரு பெரும் படையினை முன்னின்று நடத்தி வெற்றி பெறும் திறன் அவனிடம் இருந்தது. ஆனால் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் செய்ய நினைக்கும் செயல்களையும் எண்ணங்களையும் துணிந்து முன்னின்று ஆராயும் இதயத் திடம் அவனுக்கு இல்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மனம் இந்த நொடிவரை பலவீனம் என்ற எல்லைக்கோட்டை மீறி அப்பாற் சென்றதே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே உட்கார்ந்து பேசும் போது இதயத்தை மறைத்து எந்தப் பொய்யையும் பேசமுடியாது. உயர்ந்தோங்கி, வானமண்டலத்தை அணைந்து நிற்கும் பிரமாண்டமான ஒரு மலைச்சிகரத்தைக் கண்ணெதிரே பார்க்கிற உணர்ச்சி உண்டாகும் அந்த மனிதரின் முகத்தைப் பார்க்கும் போது. ஆகவே எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் உண்மை தான் வாயில் வரும். தன்னிடம் யார் பேசிக் கொண்டிருந்தாலும் வேறெங்காவது பராக்குப் பார்த்துக் கொண்டு அந்தப் பேச்சைக் கேட்கும் வழக்கம் அவரிடம் கிடையவே கிடையாது. பேசுகிறவனின் முகத்தையும் அதிலுள்ள கண்களையும் பார்த்துக் கொண்டே தான் பேச்சைக் கேட்பார். அந்தப் பார்வை பேசுகிறவனின் மனத்தில் புதைந்து கொள்ள முயலுகிற உண்மைகளையெல்லாம் குத்தி இழுத்து வெளியே கொண்டு வந்து விடும். அவ்வளவு கூர்மை அதற்கு!

அவசியம் ஏற்பட்டாலொழிய இடையில் குறுக்கிட்டு எதையும் கேள்வி கேட்காமல் எதிராளியின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டே போவார்.

அவரிடம் இப்படிப் பலமுறை அநுபவப்பட்டிருந்த தளபதி வல்லாளதேவன் அன்று அந்தரங்க அறைக்குள் அவரோடு நுழைந்த போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அவசியமானவற்றைத் தவிர வேறெதையும் பேசக் கூடாதென்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தான் நுழைந்தான். கன்னியாகுமரியில் கைப்பற்றிய ஒலையைப் பற்றி அவரிடம் வாய் தவறி உளறி விடக்கூடாதென்று தீர்மானித்துக் கொண்டான் வல்லாளதேவன். ஆனால், இடையாற்று மங்கலம் நம்பியிடம் பேசத் தொடங்கி விட்டதும் தளபதி வல்லாளதேவன் எதை எதை மகா மண்டலேசுவரரிடம் சொல்லக்கூடாதென்று நினைத்துக் கொண்டிருந்தானோ, அவையெல்லாம் அவனையறியாமலே அவன் வாயில் வந்து விட்டன. அவர்கள் உட்கார்ந்திருந்த அந்தரங்க அறை ஒளி மயமாக இருந்தது. தூபப் புகையின் நறுமணம்! அன்னக் கொடி விளக்குகளின் ஒளி! நாற்புறமும் சுவர்களில் அழகான ஒவியங்கள்! அறை முழுவதும் கட்டித் தொங்க விடப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரங்கள்! பூ மணமும் அகிற்புகையும், தீப ஒளியும், எதிரே நிமிர்ந்து உட்கார்ந்து தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் இடையாற்று மங்கலம் நம்பியின் பார்வையும் ஒன்று சேர்ந்து தளபதியை என்னவோ செய்தன!

புறத்தாய நாட்டுக் கோட்டையிலிருந்து மகாராணியார் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டது, பாறையிடுக்கில் ஒற்றர்களைச் சந்தித்தது, தரிசனத்தின் போது மகாராணிக்கு ஏற்பட்ட ஆபத்து, மறு நாள் நாஞ்சில் நாட்டு மகாசபையைக் கூட்டுமாறு மகாராணி ஆணையிட்டிருப்பது ஆகிய எல்லா விஷயங்களையும் மகாமண்டலேசுவரரிடம் அவன் கூறினான். ஒற்றர்களிடமிருந்து கைப்பற்றிய ஒலையைப் பற்றி மட்டும் அவன் சொல்லவே இல்லை.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு மகாமண்டலேசுவரர் சிரித்தார். “தளபதி ! எல்லாம் சரிதான். உன்னுடைய இடுப்பிலிருக்கும் அந்த ஒலையில் என்ன எழுதியிருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதை என்னிடம் எடுத்துக் காட்டி விடுவது தான் முறை!” என்றார்.

இதைக் கேட்டதும் வல்லாளதேவன் வெலவெலத்துப் போனான். அவன் உடல் நடுங்கியது. மகாமண்டலேசுவரர் அவனை நோக்கி வெற்றிப் புன்னகை பூத்தார். அதே சமயம் கதவுகளின் மணிகள் மெல்ல ஒலித்தன.