பாண்டிமாதேவி/முதல் பாகம்/வானவன்மாதேவியின் விரக்தி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

5. வானவன்மாதேவியின் விரக்தி

ஆலயத்துக்கு வந்து திரும்பினால் அலை மோதும் துயரம் மறைந்து மனத்தில் சாந்தி பிறக்கு மென்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் நிலவு பொழியும் அந்த நீளிரவில் பரிவாரங்களோடு கன்னியாகுமரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது மகாராணி வானவன் மாதேவியாரின் இதயத்தில் கவலைகள் முதிர்ந்து விரக்தி வளர்ந்து கொண்டிருந்தது.

அவர் தனியாகச் செல்லவில்லை. ஆறுதலும் அன்பும் நிறைந்தவர்கள், ஞானமும் அநுபவ மேதையும் செறிந்த இரண்டு பெரியோர்கள், குழந்தைகள் போல் சிரித்துச் சிரித்துப் பேசும் நிர்மலமான நெஞ்சம் படைத்த இரண்டு கன்னிகைகள் ஆகிய எல்லோரும் அவரோடு வருகிறார்கள். பரிவாரத்து வீரர்கள் சங்கு, கொம்பு, தமருகம், பேரிகை, முழவு, திருச்சின்னம் ஆகிய பிரயாணகால இன்னிசைக் கருவிகளால் கீத வெள்ளத்தை உண்டாக்குகின்றனர். உடம்பில் பொதியமலைச் சந்தனக் குழம்பை ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அள்ளித் தடவுவது போல் கடல்காற்று வீசுகிறது. ஆனால் அவற்றில் எதுவும் வானவன்மாதேவியின் மனத்துக்குச் சுகத்தை அளிக்கவில்லை. குமரியன்னை கோவிலின் கருப்பக் கிருகத்துப் பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சியை நினைக்கும்போதே அவர் உடம்பு புல்லரித்தது. ஒரு கணம் தவறியிருந்தால், எவனோ குறி வைத்து எறிந்த அந்தக் கூர்மையான வேல் அவர் நெஞ்சைப் பிளக்காமல் விட்டிருக்குமோ? அப்படி ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் இப்போது பல்லக்கில் சுமந்து கொண்டு போவதற்குப் பதிலாக...? ஐயோ! இந்த மாதிரி எண்ணிப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. வானவன்மாதேவியின் எண்ணங்கள் பல்லக்கைத் துாக்கிச் செல்லும் வீரர்களின் நடையைப் போலவே துரிதமாக மேலெழுந்து சென்றன.

‘இந்தத் தென் பாண்டி நாட்ட்ை ஏதோ நான் அரியணையில் அமர்ந்து ஆண்டு கொண்டிருக்கிற மாதிரி அல்லவா எண்ணுகிறார்கள்? இல்லையானால் என்னைச் சுற்றி ஒற்றர்களும் வஞ்சகர்களும் உலாவக் காரணமென்ன? தரிசனத்துக்குப் போன இடத்தில் முன்னேற்பாடாக மறைந்திருந்து என்னைக் கொல்லச் சதி நடக்கிறது. இது எனக்குப் போதாத காலம் போலிருக்கிறது; சக்கரவர்த்திகள் காலமானபின் நான் அமங்கலியாக மட்டும் ஆகவில்லை; எவ்வளவு துரதிருஷ்டங்களும் துர்ப்பாக்கியங்களும் உண்டோ, அவ்வளவும் என்னை வந்து சார்ந்து விட்டன போலிருக்கிறது. கணவனைத்தான் இழந்தேன், அருமைக் குமாரன் இராசசிம்மனுமா என்னை விட்டு ஒடிப்போக வேண்டும்? போரில் தோற்றுவிட்டால் என்ன? அதற்காகப் பெற்றவளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் இலங்கைக்கும் புட்பகத்துக்குமா ஓட வேண்டும்? பாழாய்ப் போன எதிரிகளுமா வட பாண்டி நாட்டின்மேல் படையெடுக்க வேண்டும்? நாடு தான் போயிற்று, இவனும் இப்படி எதற்காக ஒடிப் போனான்?

‘எங்காவது சமணப் பள்ளியிலோ, பெளத்தப் பள்ளியிலோ, தீட்சை பெற்று மணிமேகலை, குண்டலகேசி இவர்களைப் போல் எஞ்சிய வாழ்நாளைத் துறவு மார்க்கத்தில் கழித்துவிட எண்ணியிருந்தவளை இந்த மகாமண்டலேசுவரர் ஏன் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாரோ? இந்த இடையாற்று மங்கலம் நம்பி இருக்கிறாரே, அப்பப்பா ! எதையும் சில புன்னகைகளாலும், சில வார்த்தைகளாலும் சாதித்து விடுகிறார். எவ்வளவோ விரக்தியோடு இருந்தவளை மனத்தை மாற்றி இங்கு அழைத்துக் கொண்டு வந்து இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மறுபடியும் இராஜபோகங்களுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் நடுவே சிக்கவைத்துவிட்டாரே! இதிலிருந்து எப்படித் தப்புவது? தப்பாமல் இப்படியே இருக்கத்தான் முடியுமா? மகா மண்டலேசுவரர் எனக்கு அளித்திருக்கும் கெளரவம் மிக மிகப் பெரியது தான். அதில் சந்தேகமே இல்லை. ஐம்பெருங் கூற்றத் தலைப் பெருமக்களும், மந்திராலோசனைத் தலைவரும் இருக்கும் தென்பாண்டி நாட்டின் அரசியைப் போன்ற மரியாதையை அந்த மகாபுருஷரான இடையாற்று மங்கலம் நம்பி எனக்கு அளித்திருந்தாலும் இதிலிருந்து நான் தப்பித்தானாக வேண்டும். காலஞ் சென்ற என் நாயகர் மீது நாஞ்சில் நாட்டாருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பினால் மகா மண்டலேசுவரர் இதைச் செய்திருக்கிறார்.

அதே சமயத்தில் இதன் விளைவு என்ன ஆகுமென்பதை அவர் சிந்திக்காமல் விட்டிருக்கவும் முடியாது. அபாரமான சாணக்கியத் திறமை படைத்த இடையாற்று மங்கலம் நம்பிக்கா சிந்தனையை நினைவு படுத்த வேண்டும்?

‘தென்பாண்டிப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் நான் இருப்பதால் தான் ஒற்றர்களும் கொலைக்கு ஏவப்பட்டிருக்கும் சூழ்ச்சிக்காரர்களும் இங்கே பின் தொடர்ந்திருக்கிறார்கள்! வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிய எதிரிகள் இங்கே படையோடு நுழைய எவ்வளவு நாட்களாகும் ? என் ஒருத்தியின் பொருட்டு அமைதியும், வளமும், அழகுச் செல்வமும் கொழிக்கும் இந்த நாஞ்சில் நாட்டில் போர் ஏற்படத்தான் வேண்டுமா? இன்று மாலை முன்னிரவு நேரத்தில் கன்னியாகுமரியில் நடந்த தீய நிகழ்ச்சிகள் எதைக் குறிக்கின்றன? மகா மேதையான மண்டலேசுவரர் தளபதி மூலமாக அவற்றைக் கேள்விப்பட்ட பின்பாவது, தம் கருத்தை மாற்றிக் கொள்வாரா? அல்லது அவருடைய மெளனத்துக்கும், அமைதிக்கும் வேறு ஏதாவது காரணம் உண்டா? சில சமயங்களில் அவர் பெரிய புதிராக மாறிவிடுகிறாரே? இராசசிம்மனைத் தேடி இலங்கைத் தீவுக்கு ஒற்றர்களை அனுப்புங்கள் என்று மூன்று தினங்களாக அவரிடம் சொல்லி வருகிறேன்; ஒர் ஏற்பாடும் செய்யாமல் தண்ணீருக்குள் போட்ட கல் மாதிரி இருக்கிறார். சமீப காலமாக இங்கேயும் கோட்டைக்கு வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டுப் பதில் சொல்லாமல் வழக்கம் போல் சிரித்து விட்டுப் போய் விடுகிறார்.

‘வரட்டும்! நாளைய மகாசபைக் கூட்டத்துக்கு அவர் எப்படியும் வந்துதானாக வேண்டும். அப்போது எல்லாவற்றையும் தெளிவாக மனம் விட்டுச் சொல்லி விடுகிறேன். மகா மண்டலேசுவரரே! என்னை இந்தப் பெரிய கோட்டையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள். என்னால் இனியும் இங்கிருக்க முடியாது. நான் சமண மதத்தில் சேர்ந்து திட்சை பெற்றுச் சந்நியாசினியாகப் போகிறேன். என் மகனையும் தேடி அழைத்து வராமல் என்னையும் இந்தக் கெளரவ வலையில் அடைத்து வதைக்காதீர்கள். என் மனம் விரக்தியடைந்துவிட்டது’ என்று சொல்லத்தான் வேண்டும்.’

“மகாராணி என்ன? இன்னும் பல்லக்கினுள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது சிந்தனையோ?"அதங்கோட்டாசிரியரின் குரலைக் கேட்டு வானவன் மாதேவிக்குச் சுய நினைவு வந்தது. வெளியே பார்த்தார். பல்லக்குகள் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. பகவதியும், விலாசினியும் தங்கள் பல்லக்குகளிலிருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தனர்.

சிந்தனை வேகத்தில் அரண்மனையை அடைந்து விட்டதை உணர்ந்து கொண்டு பல்லக்கிலிருந்து கீழே இறங்கச் சிறிது நேரமாயிற்று வானவன்மாதேவிக்கு. பகவதியும், விலாசினியும் கன்னங்குழியச் சிரித்துக்கொண்டே மகாராணி யின் அருகே வந்து நின்றுகொண்டனர். முகக் குறிப்பையும் மெளனத்தையும் பார்த்தபோது பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் மகாராணியின் மனம் நிம்மதியற்று இருக்கிறதென்று தெரிந்துகொண்டனர். அந்த நிலையில் பேசாமலிருப்பதே நல்லதென்று அவர்களுக்குத் தோன்றியது.

உணவு முடிந்தபின் நிலா முற்றத்தில் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர். பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதி அதங்கோட்டாசிரியரின் மனத்தில் ஒருவகை வேதனையை உண்டாக்கிற்று. அங்கே மகிழ்ச்சியும், கலகலப்பும் நிலவுவதற்காக ஏதாவது ஒரு மாறுதலை உடனே உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்.

“மகாராணி! என் குமாரி விலாசினிக்குப் பரத நாட்டியம் முழுதும் கற்பித்திருக்கிறேன். அபிநயமும் நிருத்தியமும் அவளுக்கு அழகாகப் பொருந்தியிருக்கின்றன. திருவாசகம் திருக்கோவையாரிலுள்ள மாணிக்கவாசகரின் அற்புதமான பாடல்களுக்கெல்லாம் அபிநயப் பயிற்சி அளித்திருக்கிறேன். இப்போது எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கிறோம். மகாராணியாரின் நிம்மதியற்ற குழம்பிய மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்” என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். அதங்கோட்டாசிரியர்.

“மிகவும் நல்லது! உங்கள் பெண்ணின் நாட்டியத்தைப் பார்த்தாவது என் மனக்கவலைகளைச் சிறிது நேரத்துக்கு மறக்க முயல்கிறேன்” என்று கூறினார் மகாராணி. “குழந்தாய், விலாசினி! உனக்கு நடனமாடத் தெரியுமென்று நீ என்னிடம் சொல்லவே இல்லையே? வா இப்படி! ஏதாவதொரு நல்ல பாட்டுக்கு அபிநயம் பிடித்துக் காட்டு, பார்க்கலாம்” என்று ஆசிரியரின் மகளிடம் திரும்பிக் கூறினார். விலாசினி சிரித்துக் கொண்டே எழுந்திருந்தாள். நிலா முற்றத்துச் சுவரோரமாக மறைவில் சென்று உடையை நாட்டியத்துக்கு ஏற்றபடி வரிந்து கச்சும், தாருமாகக் கட்டிக்கொண்டு வந்தாள்.

“வல்லாளனின் தங்கைக்கு நன்றாகப் பாட வரும் என்று நினைக்கிறேன். அவளே பாடட்டும்” என்று பவழக்கனிவாயர் சும்மா இருந்த பகவதியையும் அதில் சேர்த்து வைத்தார்.

“பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று! இந்த இரண்டு இளம் பெண்களுமாகச் சேர்ந்து நமக்குச் கலைவிருந்து அளிக்கட்டும்.”

“மகாராணியாரே பார்த்து ஆசிமொழி கூறுவதற்கு முன் வந்திருக்கிற போது எங்கள் கலைக்கு அதைவிடப் பெரும் பேறு வேறென்ன இருக்கமுடியும்?” என்றாள் சிலம்பு குலுங்க நாட்டிய உடையோடு வந்து நின்ற விலாசினி. பகவதி மகாராணியை வணங்கி வீணையை ஏந்திப் பாடுவதற்குத் தயாராக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“தேவி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து இந்த விநாடிவரை உங்கள் மனத்தில் ஏற்பட்ட பெரிய பெரிய கவலைகளால் நிம்மதியற்றுக் குழம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. வல்லாளதேவனின் தங்கையும், அதங்கோட்டாசிரியரின் குமாரியுமாகச் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு உங்கள் கவலையைத் துரத்தப் போகிறார்கள்; பாருங்கள்!” என்றார் பவழக்கனிவாயர். மகாராணி அதைக் கேட்டு முகத்தில் மலர்ச்சியையும், உதடுகளில் சிரிப்பையும் வருவித்துக்கொள்ள முயன்றார். ஆனால் அந்தச் சிரிப்பில் இயற்கையான உயிர்ப்பு இல்லை.

அடுத்த கணம் நிலா முற்றத்தில் சிலம்பும் சலங்கையும் குலுங்கும் ஒலி எழுந்தது. நாட்டியத்துக்கு என்றே படைக்கப்பட்டதைப் போன்ற விலாசினியின் உடல் வளைந்து நெளிந்து அபிநயம் பிடித்த அழகை எப்படி வருணிப்பது? இது என்ன? குயிலின் இனிமை இந்த மானிட நங்கையின் தொண்டைக்கு எப்படிக் கிடைத்தது பாடுவது வல்லாளதேவனின் தங்கை பகவதிதானா? அல்லது தேவலோகத்துச் சங்கீத தேவதை ஒன்று வினையை ஏந்தி வந்து இந்த நிலா முற்றத்தில் உட்கார்ந்து பாடுகிறதா?

“சூடகந் தோள்வளை யார்ப்ப வார்ப்ப
தொண்டர் குழாம் எழுந்தார்ப்ப வார்ப்ப
நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப
நாமும் அவர் தம்மை யார்ப்ப வார்ப்ப
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை யன்ன கோவுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும்நாமே!”

திருவாசகத் திருப்பொற் சுண்ணப் பதிகத்திலிருந்து ஒரு பாடலை வரி வரியாக, நிறுத்தி, அபிநயத்துக்கு அவகாசம் கொடுத்து, நிதான கதியில் வீணையை மீட்டிப் பாடும் பகவதி அங்கிருந்த எல்லோரையும் முற்றிலும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போய்விட்டாள். விலாசினியின் நடனமோ பாட்டின் ஒவ்வொரு எழுத்தையும் தத்ரூபமாக அபிநயத்தில் சித்தரித்துக் காட்டியது. விரக்தியின் எல்லையில் குமைந்து கொண்டிருந்த மகாராணி சகலத்தையும் மறந்து அந்தப் பாட்டிலும் நடனத்திலும் லயித்துப் போயிருந்தார். ஆனால் உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் அந்தப் பாட்டு இன்னொரு வகையில் அவர் மனத்தை விரக்தி கொள்ளச் செய்தது.

‘பார்க்கப் போனால் பொன்னும், பொருளும், அரச போகமும், அதிகார ஆணவங்களும் என்ன பயனைக் கொடுக்கப் போகின்றன? துன்பத்தையும், சூழ்ச்சியையும், குரோதத்தையும் உண்டாக்கவல்ல போட்டிதான் இவற்றால் உண்டாகின்றன. பரம்பொருளை நினைந்து அல்லும், பகலும் அனுவரதமும் பாடித் திரிவதில் மாணிக்கவாசகர் போன்ற அடியார்களுக்குக் கிடைத்த ஆத்மீகமான இன்பம் என்னைப் போல ஒரு நாட்டின் அரசியே விரும்பினாலும் கிடைக்குமா? இந்தப் பாடலை வீணையோடு இழைந்து பாடும் பகவதியின் குரலையும், இதற்கு அழகாக அபிநயம் செய்யும் விலாசினியின் தோற்றத்தையும் பார்க்கும்போது என் மனத்தில் ஏன் இந்தக் கிளர்ச்சி ஏற்படுகிறது. இந்தக் கிளர்ச்சிக்குப் பொருள் என்ன? கோட்டை, கொத்தளம், அரண்மனை, அரசபோகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்படியே, இப்போதே எழுந்திருந்து எங்காவது ஒடிப்போய் விடலாம் போலத் தோன்றுகிறதே? இது ஏன்? ஏன்?

மேலே பால் மாரியென முழுநிலா, சீதமாருத மென் காற்று; பாட்டின் குரல் இனிமை, கருத்தாழம்; சலங்கை ஒலிக்கும் பாதம்-இவையெல்லாம் சேர்ந்து மகாராணியைத் தெய்வீகம் நிறைந்த புனிதமானதொரு மானnக பூமிக்குத் தூக்கிக்கொண்டு செல்வதைப் போலிருந்தது.

கிண்கிணிச் சிறுசலங்கையின் ஒலியும் பகவதியின் பாடற் குரலும் நின்ற போதுதான். மகாராணி, வானவன்மாதேவி இந்த உலகத்துக்கு வந்து கண்ணைத் திறந்து எதிரே பார்த்தார். பகவதியும் விலாசினியும் பவ்வியமாக அடக்க ஒடுக்கத்துடன் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.

“அற்புதமான நிருத்தியம்! அற்புதமான கீதம்!” என்று சிரக்கம்பம் செய்தார் பவழக்கனிவாயர் தம் முன்னே அழகின் மாசுபடாத பொற்சிலையாக வணங்கி நிற்கும் அந்த யுவதிகளிடம் எந்த வார்த்தைகளைச் சொல்லி எப்படிப் பாராட்டுவதென்றே மகாராணிக்குத் தெரியவில்லை.

“மகாராணி! தங்கள் வாயால் குழந்தைகளை ஆசிமொழி கூறி வாழ்த்த வேண்டும்” என்று அதங்கோட்டாசிரியர் கேட்டுக் கொண்டார்.

“ஆசிரியரே! இந்தக் குழந்தைகளை எப்படி வாழத்துவ தென்றே எனக்குத் தோன்றவில்லை. ஒரு வேளை இந்த மாபெரும் கலைச் செல்விகளை வாழ்த்துவதற்கு வேண்டிய அவ்வளவு தகுதி கூட எனக்கு இல்லையோ என்று நான் பயப்படுகிறேன். உங்கள் போல ஆன்றோர்கள் தாம் இம்மாதிரிப் பெருங் கலைகளுக்கு வாழ்த்துவதற்கு உரிமை உடையவர்கள். குழந்தைகளே! என்னை வணங்காதீர்கள். ஆசிரியர் பிரானையும், பவழக்கனிவாயரையும் முதலில் வணங்குங்கள்.”

“நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. அன்னை கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடி இந்தத் தென்பாண்டி நாட்டின் மாபெருந்தேவி தாங்கள். உங்கள் மனத்தில் எழுகின்ற அன்பு நிறைந்த வார்த்தைகளால் வாழ்த்துங்கள்” என்றார் அதங்கோட்டாசிரியர்.

“குழந்தைகளே! இப்படி அருகில் வாருங்கள்.” பகவதியும் விலாசினியும் அருகே சென்றார்கள். உட்காரச் சொல்லிக் கையமர்த்தினார் மகாராணி. இரண்டு பெண்களும் இருபுறமும் மண்டியிட்டு அமர்ந்தனர். இரண்டு பெண்களையும் முதுகைச் சேர்த்துத் தழுவிக் கொண்டாற்போல் இரு கைகளாலும் பாசத்தோடு அனைத்துக்கொண்டார் மகாராணி வானவன்மாதேவி.

“அருமைக் குழந்தைகளே ! உங்களுக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். அறிவும், திருவும் மிக்க நல்ல நாயகர்கள் வாய்க்கட்டும்!”

மகாராணி இப்படி அவர்களை வாழ்த்திக்கொண்டிருந்த போது நிலா முற்றத்தின் தென் பக்கம் மதிற்கவருக்குக் கீழே இருந்த அரண்மனை நந்தவனத்திலிருந்து ஒரு குரூரமான கூப்பாடு எழுந்தது. அதை யடுத்துச் சடசடவென்று ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழும் ஓசை கேட்டது. ஆந்தைகள் அலறின. திடு திடு வென ஆட்கள் ஒடும் காலடி ஓசையும், இனம் புரிந்து கொள்ள முடியாத வேறு சில சத்தங்களும் அரண்மனை நந்தவனத்திலிருந்து கிளம்பின. நந்தவனத்தில் மூலைக்கொன்றாகத் தீப்பந்தங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நிலாமுற்றத்திலிருந்த மகாராணி உட்பட எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். என்ன? என்ன? என்ற கேள்வி ஒவ்வொருவர் வாயிலிருந்தும் முந்தி எழுந்தது. எல்லோரும் நந்நவனத்தின் பக்கமாக மிரண்ட பார்வையால் திரும்பிப் பார்த்தனர். அங்கே தீப்பந்தங்களோடு வீரர்கள் ஒடுவதும், ‘பிடி விடாதே!’ என்ற கூப்பாடுகளும் கண்டு அவர்கள் திகைத்தனர்.