உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கலகக் கனல் மூண்டது

விக்கிமூலம் இலிருந்து

22. கலகக் கனல் மூண்டது

போர்க்களத்தில் அந்த இரவில் மூண்ட கலவரங்களை அடக்கிவிட முயன்றனர் குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும். கலகம் அடங்கவில்லை. மேலும் மேலும் பெருகி வளர்ந்தது. கலகத்துக்குக் காரணமான செய்திகளைப் போர்க்களத்துப் பாறைகளில் பரப்புவதற்கு வந்த வெளியாட்கள் எல்லோரையும் இருளில் சரியாகப் பார்க்க முடியவில்லையாயினும் அதில் முக்கியமான ஒருவனைக் குமாரபாண்டியன் பார்த்துவிட்டான். அவ்வாறு பார்க்கப்பட்டவன் வேறு யாருமில்லை, ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன்தான்! ஆபத்துக் காலங்களில் நன்றியுணர்ச்சியோடு அரச குடும்பத்துக்கு உதவி புரிந்து பாதுகாக்க வேண்டிய அவன் இப்படிக் கலகக்காரனாக மாறியிருப்பதைக் கண்டு குமாரபாண்டியன் உள்ளம் கொதித்தான். கோட்டாற்றிலிருந்து வந்திருந்த தென்பாண்டிப் படைவீரர்களில் பெரும்பாலோர் பாசறைகளை விட்டு வெளியேறிக் கலகக்காரர்களோடு சேர்ந்து கொண்டு விட்டனர். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தத் துரோகம் நடந்தது. சாம, தான, பேத தண்ட முறைகளில் எதனாலும் அவர்களால் அதைத் தடுக்க இயலவில்லை.

“இளவரசே! காரியம் கைமீறிப் போய்விட்டது. பார்த்துக்கொண்டே சும்மாயிருப்பதில் பயனில்லை. உடனே தளபதியைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி ‘அரண்மனைக்கோ, மகாமண்டலேசுவரருக்கோதுாதனுப்புங்கள். தளபதி வந்துவிட்டால் இந்தக் கலகம் அடங்கிப் போகும்” என்றார் சக்கசேனாபதி.

“சக்கசேனாபதி ! தளபதியைப் போர்க்களத்துக்கு வரவழைத்துவிடுவது அவ்வளவு எளிய காரியமல்ல. அதில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நான் மாட்டிக்கொண்டிருக்கிறேன்."

“நீங்கள் சொல்லாவிட்டாலும் நானாகச் சிலவற்றைப் புரிந்துகொண்டேன். இளவரசே! மகாமண்டலேசுவரருக்கும் தளபதிக்கும் உள்ளுறப் பெரிய பகைமை ஏதோ இருக்கவேண்டும். தளபதி இந்தப் போரில் கலந்துகொள்ள முடியாமற் போன தற்குக் கூட மகாமண்டலேசுவரர் காரணமாயிருக்கலாம். அதனால்தான் இந்தக் கலகமே மூண்டிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.”

“சக்கசேனாபதி ! உங்களுக்குத் தெரிந்தது சிறுபகுதிதான், ஆனால் அவை சரியான அனுமானங்களே! அதற்கு மேற்பட்டவற்றைத் தெரிவிக்க ஆவல் இருந்தும் ஒருவருக்கு வாக்குக்கொடுத்துவிட்ட காரணத்தால் இயலாத நிலையில் இருக்கிறேன்.” - “வேண்டாம்! அவற்றைத் தெரிந்துகொள்ளும் அவசியம் எனக்கும் இப்போது இல்லை. ஆனால் இந்தக் கலகத்தைத் தடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தளபதி எங்கேயிருந்தாலும் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு வரவழைக்கச் செய்யுங்கள்.”

“நான் மகாமண்டலேசுவரருக்கும் என் அன்னைக்கும் இங்குள்ள நிலைமையை விவரித்து உடனே திருமுகங்கள் எழுதுகிறேன்.” * , - “சொல்லிக்கொண்டே நிற்காதீர்கள். இளவரசே! உடனே உங்கள் பாசறையில் போய் அமர்ந்து எழுதத் தொடங்குங்கள். நான் இங்கே சிறிது நேரம் இருந்து கவனித்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி குமாரபாண்டியனைப் பாசறைக்கு அனுப்பி விட்டுத் தாம் மட்டும் தனியே இருளில் நடந்தார் சக்கசேனாபதி. கலகத்தின் காரணம் பற்றிக் குமாரபாண்டியர் தம்மிடம் கூறாமல் மறைக்கும் மர்மச் செய்திகள் எவையோ அவற்றைத் தெரிந்துகொண்டு விடவேண்டுமென்று கிளம்பிவிட எண்ணினார். தமது தோற்றத்தைத் தென்பாண்டி நாட்டின் சாதாரணமான ஒரு படைவீரனின் தோற்றம் போல எளிமையாக்கிக் கொண்டு பாசறைகளைப் புறக்கணித்துக் கலகக்காரர்களோடு ஓடிப்போன பாண்டியப் படையைப் பின்பற்றி அவரும் சென்றார். தாமும் அவர்களில் ஒருவனைப் போலக் கலந்துகொண்டு அவர்களோடு பேச்சுக் கொடுத்துப்

பார்த்ததிலேயே எல்லாக் காரணங்களும் அவருக்கு ஒருவாறு விளங்கிவிட்டன. குமாரபாண்டியர் சொல்லத் தயங்கிய வற்றையும் அவர் தெரிந்துகொண்டார். எல்லாம் தெரிந்து கொண்டு திரும்பி வந்த அவர் நேரே குமாரபாண்டியனின் பாசறைக்குச் சென்றார். பாசறையில் தீப ஒளி எரிந்து கொண்டிருந்தது. மகாமண்டலேசுவரருக்கும் தன் தாய்க்கும் எழுதவேண்டிய திருமுக ஒலைகளை எழுதி விட்டுக் காத்திருந்தான் குமாரபாண்டியன். - -

“வாருங்கள் சக்கசேனாபதி! நான் வந்து எழுத வேண்டிய அவசர ஒலைகளை எழுதிவிட்டு இவ்வளவு நேரமாக நீங்கள் வருவீர்களென்று விழித்துக்கொண்டு காத்திருக்கிறேன். அதற்குள் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?” என்று தன்னை நோக்கிக் கேட்ட குமாரபாண்டியனின் முகத்தைச் சிரித்தவாறே கூர்ந்து பார்த்தார் சக்கசேனாபதி.

“சக்கசேனாபதி! இந்த நெருக்கடியான நிலைமையில் என் முகத்தைப் பார்த்தால் சிரிப்புக்கூட வருகிறதா உங்களுக்கு ?”

“உங்கள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கவில்லை இளவரசே! சில முக்கியமான செய்திகளை இவ்வளவு நேர்ந்த பின்பும் என்னிடம் கூடச் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்.”

“அப்படி எவற்றை நான் உங்களிடம் மறைத்தேன்?

“சொல்லி விடட்டுமா? “நீங்கள் அவற்றைத் தேடித் தெரிந்துகொண்டிருந்தால் சொல்லித்தானே ஆக வேண்டும்?” என்று சோர்ந்த குரலில் சொன்னான் குமாரபாண்டியன். * .

“மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சியில்தான் பகவதி ஈழ நாட்டில் இறந்து போனாளென்று கலகக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள். இன்னும் அவருடைய சூழ்ச்சியால் படைகள் போருக்குப் புறப்படுகிற சமயத்தில் தளபதி மட்டும் இரகசியமாகச் சிறை வைக்கப்பட்டானாம். அதேபோல் ஆபத்துதவிகள் தலைவனையும் சூழ்ச்சி செய்து சிறைப்படுத்த முயன்றாராமே அவர்? நீங்கள் கப்பலில் வந்து விழிஞத்தில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் உங்களைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், பகவதியின் மரணத்தைப் பற்றி

பன.தே.46

யாரிடமும் சொல்லக்கூடாது’ என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாராமே? தளபதியை இரகசியமாகச் சிறைப் படுத்தியிருக்கிற அந்தரங்கத்தையும் சொல்லி அதையும் யாரிடத்திலும் கூறவேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொண்டாராம். ஆனால், அதே சமயத்தில் இருளில் அதே இடத்தில் நின்றுகொண்டு காவலைத் தாண்டி தப்பி ஓடிவந்து தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும் நீங்களும் மகாமண்டலேசுவரரும் பேசியவற்றை ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு கல்லைக்கூட மகாம்ன்டலேசுவரர் மேல் தூக்கி எறிந்தார்களாமே?” இவ்வாறு கூறிக்கொண்டே வந்த சக்கசேனாபதியை இடைமறித்து, “இவற்றையெல்லாம் இப்போது உங்களுக்கு யார் கூறினார்கள்?” என்று குமாரபாண்டியன் கேட்டான்.

“யாரும் என்னிடம் வந்து கூறவில்லை. கலகக்காரர்களுக்கு நடுவே போய்க் கலந்துகொண்டு, அவற்றைத் தெரிந்து கொண்டேன்!” என்றார் சக்கசேனாபதி.

“தெரிந்து கொண்டவை இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?” -

“நிறைய உண்டு! மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளை யெல்லாம் தங்களிடம் கூறித் தங்களை அழைத்து வருவதற் காகவே தன் தங்கை பகவதியை இலங்கைக்கு மாறு வேடத்தில் அனுப்பினானாம் தளபதி, அவள் தங்களோடு திரும்பி வரும் காட்சியை காணவே காவலிலிருந்து தப்பி விழிஞத்துக்கு ஓடி வந்து பார்த்தானாம். அவன் தங்கை இறந்த செய்தியை கேட்டவுடன் அவனுக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்பட்டதாம். போதாக்குறைக்குத் தாங்களும் மகாமண்டேலேசு வருடைய சூழ்ச்சிக்கு இணங்கி அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்தது அவனுக்குச் சினம் மூட்டியதாம். அவனும் ஆபத்துதவிகள் தலைவனும் போய்க் கழற்கால் மாறனாரைப் பார்த்தார்களாம். எல்லோருமாக ஒன்று சேர்ந்து முயன்று ஒரு பெரிய கலகக் கூட்டத்தைத் திரட்டினார்களாம். அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தளபதியும் கழற்கால் மாறனாரும் தலைமை தாங்கிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை வளைத்துத் தாக்குவதற்குப் போயிருக்கிறார்களாம். மற்றொரு

பகுதியைத்தான் ஆபத்துதவிகள் தலைவன் இங்கே கூட்டிக் கொண்டு வந்து படை வீரர்களை மனம் மாற்றுவதற்கு முயன்றதை நாம் பார்த்தோமே?”

“சக்கசேனாபதி! தளபதியின் தங்கை இறந்து போனதற்கு மகாமண்டலேசுவரர் எந்த விதத்திலும் காரணமில்லை என்பது உங்களுக்கும் தெரியும்!”

“இப்போதுதான் உறுதியாகத் தெரியும். ஏனென்றால் நீங்கள் ஈழ நாட்டிலிருந்து கப்பலில் புறப்படுகிறவரை காட்டில் இறந்துபோன பெண் பகவதியா, இல்லையா என்ற சந்தேகத்திலிருந்து மீளவில்லை. அதனால் எனக்கும் அது உறுதியாகத் தெரியாமற் போய்விட்டது, இளவரசே!”

“சக்கசேனாபதி! தமனன்தோட்டத்துத் துறையிலிருந்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் விசாரித்து இறந்த பெண் பகவதிதான் என்று நான் உறுதியாகத் தெரிந்துகொண்டு விட்டேன். அதனால் என் கடற்பயணம் முழுவதும் சோகத்திலேயே கழிந்தது. விழிஞத்தில் வந்து இறங்கியதும் அந்தத் துயர உண்மையை எல்லோரிடமும் சொல்லிக் கதறிவிடவேண்டுமென்றிருந்தேன். மகாமண்டலேசுவரர் வாய்ப் பூட்டுப் போட்டுவிட்டார். அதன் காரணமாகத்தான் நீங்களாகத் தெரிந்து கொள்கிறவரையில் உங்களிடம் கூடச் சொல்ல முடியாமல் போயிற்று. இவ்வளவு பெரிய கலகங்களெல்லாம் அதன் மூலம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை!”

“நாம் எதிர்பார்க்கிறபடியே எல்லாம் நடந்தால் விதி என்று ஒன்று இல்லாமலே போய்விடும் இளவரசே!”

“பாசறையிலுள்ள படை வீரர்கள் மனம் மாற்றிக் கலைத்துக்கொண்டு போகிற அளவுக்குத் தளபதி வல்லாளதேவன் கெட்டவனாக மாறுவானென்று நான் நினைக்கவே இல்லை!”

‘எவ்வளவு நல்ல மனிதனையும் சந்தர்ப்பம் நன்றிகெட்டவனாக மாற்றலாம். அந்த ஒரு மனிதனுக்காக இத்தனை ஆயிரம் படை வீரர்களும் மனம் மாறுகிறார்களே! அதற்கென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?"

“விட்டுத்தள்ளுங்கள்! உங்களுடைய ஈழத்துப்படைகளும், கரவந்தபுரத்து வீரர்களும், சேரப் படைகளும் இருக்கின்றன. தென்பாண்டிப் படைகளில் சில பத்தி வீரர்கள் போரைப் புறக்கணித்துவிட்டு ஓடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து விடாது!”

“இப்படி அலட்சியமாகப் பேசுவதுதான் தவறு ! ஆயிரமிருந்தாலும் சொந்தப் படைகளைப் பிரிந்து போகவிடுவது கூடாது. நீங்கள் எந்த வகையில் முயற்சி செய்வீர்களோ எனக்குத் தெரியாது. தளபதியையும் ஆபத்துதவிகள் தலைவனையும், அவர் களோடு சேர்ந்திருக்கும் கழற்கால் மாறனார் முதலியவர்களையும் நம்முடன் தழுவிக்கொள்ளவேண்டும். நம்முடைய இந்த உட்பகையை எதிர்தரப்பினர் தெரிந்துகொள்ள நேர்ந்தால் பின் இரண்டே நாட் போரில் அவர்கள் நம்மை வென்றுவிட முடியும்.”

“நீங்கள் சொல்வதெல்லாம் நியாயந்தான்! ஆனால் அவர்களைச் சமாதானப்படுத்தித் தழுவிக்கொள்வது எளிதில் முடிகிற காரியமல்லவே?”

“இளவரசே! நீங்களே நேரில் போனால் இரண்டு நல்ல காரியங்கள் முடியும். தளபதி வெறிபிடித்துப் போய் இடையாற்றுமங்கலத்தைத் தாக்கச் சென்றிருக்கிறானாம். அதனால் மகாமண்டலேசுவரரும், நீங்களும் சேர்ந்தே தளபதியைச் சந்தித்துச் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்து வந்துவிடலாம். நீங்கள், உங்களுடைய அன்னையார், மகாமண்டலேசுவரர் மூவருமாகச் சேர்ந்து சமாதானப் படுத்துகிறபோது தளபதி ஒப்புக்கொள்வான்.”

“நான் போய் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஒருவராகவே இரண்டு நாளைக்குப் போரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் போய்வர இரண்டு நாட்களாகலாம்.” -

“ஒருவாறு இரண்டு நாட்கள் சமாளித்துக்கொள்ள முடியும், நாம் படைகளின் கைதளர்ந்து பின்வாங்க நேர்ந்தாலும் மூன்றாம் நாள் காலை நீங்கள் தளபதியோடும் படைகளோடும் வரவில்லையானால் முடிவுக்கு நான் பொறுப்பில்லை.”

“பயங்கரமான நிபந்தனை விதிக்கிறீர்கள், சக்கசேனாபதி!"

“அதைத் தவிர வேறு வழியில்லை, இளவரசே! நீங்கள் தளபதியைச் சந்தித்து அழைத்துவரப் போகாவிட்டால் முடிவு அதைவிட விரைவிலேயே நாம் தோற்றுவிடுவோம்.”

“இந்த வார்த்தையைச் சொல்லத்தான் இவ்வளவு படைகளோடு கடல் கடந்து வந்தீர்களோ? நீங்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கை இதுதானா?”

“உங்கள் நாட்டின் உட்பகைக் குழப்பங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? புறப்பட்டுப்போய் உட்பகைக் கலகங்களைத் தவிர்த்து ஒற்றுமையை ஏற்பாடு செய்ய முயன்று பாருங்கள். ஏற்பாடு முடிந்தால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகைவரை என்னால் முடிந்த மட்டும் இந்தப் போர்க்களத்தைச் சமாளிக்கின்றேன். அதற்குள் வர இயலாமற்போனால் பின்பு நீங்கள் இங்கு வரவே வேண்டாம். நானும் என்னோடு வந்த வீரர்களில் உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடிக் கப்பலேறிவிடுவோம்!”

“நீங்கள் இப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம்?” “அந்த அர்த்தத்தை வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? உங்களுக்குப் புரியவில்லையா?”

“புரிகிறதே! தோற்றுவிடுவேன் என்கிறீர்கள்.” “அதை ஏன் என் வாயாற் சொல்ல வேண்டும்? ஒரு வேளை நீங்கள் சமாதானப்பட்டுத் தளபதி வல்லாளதேவனை அழைத்துவந்தால் நமக்கே வெற்றியாக முடியலாம்!”

“சக்கசேனாபதி அப்படியானால் மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகை வரை இந்தப் போர்க்களத்தில் தோல்வி நிழல் நம் பக்கம் படர விடாமலிருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?”

“ஆகா! உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.” “நான் உங்களை நம்பிப் போய்விட்டு வரலாமா?” “தாரளமாகப் போய்வரலாம்!” “யாரங்கே! என்னுடைய பிரயாணத்துக்குக் குதிரை கொண்டு வா!’ என்று குமாரபாண்டியன் பாசறைக் குள்ளிலிருந்து தன் ஏவலனைக் கூவிக் கட்டளையிட்டான். குதிரை கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. அவன் வெளியே வந்து ஏறிக்கொண்டான். “சக்கசேனாபதி! வருகிறேன். விதி இருந்தால் சந்தித்து வெற்றி பெறுவோம்” என்று பாசறை வாயிலில் நின்ற அவரிடம் கூறி விடைபெற்றுக்கொண்டு குதிரையைச் செலுத்தி இருளில் மறைந்தான் குமார பாண்டியன்.