பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/பொருள்மொழிக் காஞ்சி
21. பொருள்மொழிக் காஞ்சி
சேந்தன் மகாமண்டலேசுவரரின் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தான்; கதறினான், அழுது அலறினான், தொழுது புலம்பினான். “சுவாமி! நான் ஒரு வ்கையிலும் தங்கள் குமாரிக்குத் தகுதியற்றவன். அழகும், இளமையும் நிறைந்த தங்கள்
பெண்ணின் இன்பக் கனவுகள் என்னால் சிதையக்கூடாது” என்றெல்லாம் அவன் கூறிய வார்த்தைகளை அவர் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
“அதிகம் பேசாதே! நீ எனக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். நான் கொடுப்பதை வாங்கிக்கொண்டு தான் ஆகவேண்டும். என் பெண்ணின் கைகளை ஒரு நாட்டின் இளவரசனிடம் பிடித்துக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பதில் ஆயிரம் மடங்கு இன்பமடைகிறேன் நான். ஒரு காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்துக் கொண்டபின் மாற்றவேமாட்டேன்! எனக்காக நீ இன்றுவரை அடிமைபோல் உழைத்திருக்கிறாய். பொருளை வாரிக் கொடுத்து மட்டும் ஈடு செய்ய முடியாத நன்றி இது” என்றார் மகாமண்டலேசுவரர்.
சேந்தன் அதற்கு மேல் அவருடைய கட்டளையை மறுத்துப் பேசும் சக்தி இழந்தான். சிவன் கோவில் குறட்டில் ஒரு துரணடியில் கல்லோடு கல்லாகச் சமைந்து போய் உட் கார்ந்து விட்டான். தாங்கிக் கொள்ள முடியாத சோதனையைத் தாங்கிக்கொள்ள வேண்டுமென்றே அந்த இரவு அவன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து சேர்த்ததா? தங்கத்துக்கு இரும்பால் பூண் பிடிக்கிறதுபோல் செல்வச் செருக்குடன் கூடிய இறுமாப்பு நிறைந்த குழல்வாய்மொழிக்குத் தான் தகுதியற்றவன் என்பது தோன்றித் தோன்றி நினைவு நெருப்பாக அவன் உள்ளத்தை வாட்டியது. செழிப்பும், கொழிப்புமாக உயர்ந்து நிற்கும் தங்கச் சிலை போன்ற குழல்வாய்மொழி எங்கே? நேற்றுவரை அவளை இடையாற்றுமங்கலத்து இளவரசியாகக் கருதி ஊழியனைப் போல் பணிபுரிந்த நான் எங்கே? அவளோ நானோ இப்படி ஒரு நினைவைக் கனவில்கூட நினைத்திருக்க முடியாதே! மகாமண்டலேசுவரர் ஏன் இப்படிப் பிடிவாதமாகச் சோதனை செய்கிறார் என்று எண்ணியவாறே நெடுநேரம் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தான். இரவு நீண்டு வளர்ந்தது. சேந்தன் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு இருளில் எதிரே பார்த்தான். மகாமண்டலேசுவரர், உட்கார்ந்த இடத்திலேயே தூணில் சாய்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மகுடத்தை
எடுத்தபின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வாறு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன், அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் திரங்கி இளைத்துத் தளர்ந்துவிட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்துகொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, “சுவாமி!” என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, “என்ன வேண்டும். சேந்தா?” என்று புன்னகையோடு கேட்டார்.
“தாங்கள் சாப்பிட வேண்டும்.” “சேந்தா! நம்முடைய வள்ளுவர் பெருமான் இந்தச் சமயத்தில் நான் நினைத்துப் பார்ப்பதற்கென்றே ஒர் அழகான குறளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.” “என்ன குறள் சுவாமி, அது?” “'மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து என்பதுதான் அப்பா அந்தக் குறள். இனிமேல் நான் சாப்பிடுகிற சாப்பாடு அடுத்த பிறவியில் இருக்கும். என்னைத் தொந்தரவு செய்யாதே! நீ போய்ப் பேசாமல் தூங்கு”
சேந்தன் இதைக் கேட்டுப் பொறுக்கமுடியாமல் அழுதுவிட்டான். - -
“அழாதே! நீ ஏன் அழுகிறாய்? ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு நடுவே தன் தாய்ப் பசுவை இனம் கண்டு அடையும் கன்றுக் குட்டிபோல் வினைப் பயன் யாரையும் தவறவிடாது. மேலே வீசி எறியப்பட்ட பொருள் கீழே வீழ்ந்துதான் ஆக வேண்டும். இதுவரையில் நல்வினைகள் என்னை மேலே வீசி எறிந்திருந்தன. நான் உயர்ந்த நிலையில் இருந்தேன். இப்போது அவை கைவிட்டுவிட்டன. அதனால் நான் வீழ்ந்துவிட்டேன்.” “சுவாமி! இப்படியெல்லாம் பேசாதீர்கள், நீங்கள் பேசப் பேச எனக்கு அழுகை குமுறிக்கொண்டு வருகிறது.”
“தான் அழியுமுன் உலகத்துக்குத் தன் அனுபவ உண்மைகளில் முடிந்தவற்றை மொழிந்துவிட்டுப் போவது நம் தமிழ் நாட்டு மரபு அப்பா! அதைப் பொருள் மொழிக் காஞ்சி என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக்கொள். போ! நீ போய்த்துங்கு! என்னைக் கொஞ்சம் தனிமையில் மூழ்கவிடு:
சேந்தன் எழுந்து போனான். தூக்கம் வரக்கூடிய நிலையா அது? அத்தனை ஆண்டுகளாக அந்த மேதையின் நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை மனத்தில் அசை போட்டுக்கொண்டே தூணடியில் விழுந்து கிடைந்தான் அவன். கண்ணிர், கோவில் குறட்டை ஈரமாக்கியது.
விடிந்தது. முதல் நாள் மாலை செய்ததுபோலவே பறளியாற்றில் போய் நெடுநேரம் நீராடிவிட்டு ஈர உடையோடு வந்தார் மகாமண்டலேசுவரர். பிறகு சிவன் கோவிலுள் போய்த் தியானத்தில் அமர்ந்தார். சேந்தனும் நீராடிவிட்டு அவருக்குப் பூக்கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. சேந்தனை ஒலையும் எழுத்தாணியும் கொண்டுவரச் சொன்னார், கொண்டுவந்து கொடுத்தான். ஏதோ எழுதத் தொடங்கினார். -
கதிரவன் மேற்கே சாய்கிற நேரத்துக்கு குழல்வாய்மொழியோடு அம்பலவன் வேளான் அங்கே வந்து சேர்ந்தான். வருகிறபோது இருவருமே பெரிய அளவில் பதற்றமும் பரபரப்பும் அடைந்திருந்தனர்.
“சுவாமி தளபதியும் கழற்கால் மாறனாரும், ஒரு பெரிய கலகக் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு இடையாற்று மங்கலத்தை நோக்கி வெறியோடு தாக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் தங்கள் புதல்வியாரும் அவர்களிடம் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்தது தெய்வத்துணையால்தான்” என்று அம்பலவன் வேளான் கூறியதைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அதிர்ச்சியடைந்து விடவில்லை. - .
“நான் எதிர்பார்த்ததுதான். வரட்டும், விரைவாக வரட்டும்” என்று சர்வசாதாரணமாகப் புன்முறுவலோடு பதில் சொன்னார்
அவர். “அப்பா! மகாராணிக்குக் கூட இதெல்லாம் தெரிந்துவிட்டது. புவனமோகினி என்ற பணிப் பெண் போய்ப் பார்த்துக்கொண்டு வந்து கூறினாள்” என்று குழல்வாய்மொழி சொன்னபோதும் வியப்படையவில்லை அவர். -
“பெண்ணே ! உலகம் முழுவதும் தெரியட்டும். தெரிய வேண்டியதுதானே? மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது: நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது!” என்று தம் பெண்ணிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த சேந்தனையும், அம்பலவன் வேளானையும் சிறிது தொலைவு விலகிப் போய் இருக்குமாறு குறிப்புக் காட்டினார், அவர்கள் சென்றார்கள்.
“நான் என்ன அப்பா செய்ய வேண்டும்!” என்று கேட்டாள் குழல்வாய்மொழி.
“எனக்காக நீ ஒரு மகத்தான தியாகம் செய்ய வேண்டும் மகளே!”
குழல்வாய்மொழி கண்களில் நீர் அரும்ப மருண்டு தயங்கி நின்றாள். மகுடமிழந்து, கம்பீரமற்றுச் சாதாரண மனிதரைப் போல் சிவன் கோவிலில் கிடக்கும் தந்தையைக் கண்டு பிழியப் பிழியக் கண்ணிர் சிந்தி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு “என்னம்மா அப்படி என்னைப் பார்க்கிறாய்? இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்றுதானே பார்க்கிறாய்? போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல்!” - “நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும், அப்பா?” குழல்வாய்மொழியின் குரலில் துயரம் கரகரப்படைந்து ஒலி மங்கியது.
“நான் ஒரு மனிதனுக்குத் தவிர்க்க முடியாதபடி கடன் பட்டிருக்கின்றேன். மகளே! அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்துவிட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும்தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்கவேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்துவிட்டது.
அதுபோலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியது தான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்டு இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா ?”
“உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அப்பா!’
‘இப்போது சொன்ன வார்த்தை மெய்தானா மகளே? எனக்காக எதையும் செய்வாய் அல்லவா?” -
தந்தையின் இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் குழல் வாய்மொழி விசும்பலோடு அழத்தொடங்கிவிட்டாள். “நான் எப்போது அப்பா உங்கள் சொல்லை மீறியிருக்கிறேன்? என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே ‘ என்று அவள் அழுகைக்கிடையே கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்; * * ,
‘அப்படியானால் கேள்! இந்தக் கணமே குமாரபாண்டியனைப் பற்றிய உன் கனவுகளை அழித்துவிடு. தன் வாழ் நாளில் எனக்காகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டு உழைத்த இந்த நன்றியுள்ள மனிதன் சேந்தனை மணந்துகொண்டு அவனோடு செல்; இது என் கட்டளை.”
“அப்பா..!” என்று அலறினாள் குழல்வாய்மொழி. அதற்குமேல் வார்த்தைகளே எழவில்லை அவளுக்கு அப்படியே மின்னற்கொடிபோல் சுருண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள். கோவென்று கதறியழுத மகளின் தவிப்பு அவர் மனத்தை மாற்றவில்லை. “அப்பா என்னைக் கொன்று விடுங்கள். என்னால் இந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது’ என்று அவள் கதறியபோது அவர் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேசுபவர்போல் அவளைத் துாக்கி நிறுத்தி முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசினார். -
“உன்னை ஏன் கொல்லவேண்டும் அம்மா? என்னைக் கொன்றுகொள்கிறேன் நான் சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்றுகொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக்கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது. ’
கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்? நீ போ. உன் விருப்பம்போல வாழு!” என்று சொல்லிவிட்டு மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடை தள்ளாடித் துவண்டது.
“நில்லுங்கள்:” நடந்து சென்றவர் நின்று திரும்பிப் பார்த்தார். குழல்வாய்மொழிதான் கூப்பிட்டிருந்தாள். அருகில்வந்து நின்று தந்தையின் முகத்தையே பார்த்தாள் அவள். விநாடிகள் உணர்ச்சிகளில் கரைந்துகொண்டிருந்தன. அவர் முகத்தையும் கண்களையும் பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் கல்லாக இருந்த ஏதோ ஓர் உணர்வின் இறுக்கம் இளகி நெகிழ்ந்தது. அடுத்தகணம் அழுக்குத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் அவள் முகபாவம் புனிதமானதொரு மாறுதல் அடைந்தது. கண்களில் உறுதியான ஒளிவந்து குடிகொண்டது.
“அப்பா! நான் சேந்தனை மணந்துகொள்கிறேன்” என்று திடமான குரலில் சொன்னாள் குழல்வாய்மொழி. அவர் ஆச்சரியத்தோடு முகமலர்ந்து அவளைப் பார்த்தார். அவளைச் சிறுகுழந்தைபோல் கருதி அருகில் அழைத்துத் தழுவி உச்சிமோந்தார். “சேந்தா! இங்கே வா!” என்று உற்சாகத்தோடு அழைத்தார் அவர், சேந்தன் ஓடிவந்து வணங்கினான்.
“இத்தா! உன் மனைவியை அழைத்துக்கொண்டு போ! இருவரும் பறளியாற்றில் நீராடிவாருங்கள். பல நாட்கள் பழகிய காதலனை அணுகுவதுபோல் குழல்வாய்மொழி அவனை அணுகிவந்தாள். சேந்தன் கூசிப் பயந்து ஒதுங்க முயன்றான். அவள் விடவில்லை.
“ஒதுங்கினால் மட்டும் உறவு போகாது வாருங்கள்:குழல் வாய்மொழி துணிவாக அவன் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு போனாள். அந்தக் கை தன்மேல் பட்டபோது மலர்க்கொத்து ஒன்று தீண்டியது போன்ற உணர்வை அடைந்தான் சேந்தன். அவன் உடல் சிலிர்த்தது. வயிற்றுப் பசியுள்ள பிச்சைக்காரனுக்குப் பட்டுப் பீதாம்பர்ம் கிடைத்ததுபோல் அவன் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் உண்டாயின. குழல்வாய்மொழி
கலகலப்பாகப் பேசிப் பழக முயன்றும் சேந்தன் கூசிக்கொண்டேயிருந்தான். அவளால் அவ்வளவு சுலபமாகத் தன்னை எப்படி மாற்றிக்கொள்ள முடிந்ததென்று அவனுக்குப் புரியவே இல்லை. .
இருவரும் நீராடிவிட்டுச் சிவன் கோயில் அடைவதற்குள் இடையாற்றுமங்கலம் தீவைச் சுற்றி ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. கூட்டம் கூட்டமாக ஆயுதம் தாங்கிய முரட்டு மனிதர்கள் ஓடிவந்தார்கள். மரங்களெல்லாம் வெட்டப்படும் ஓசை காதைப் பிளந்தது. ஒரே கலகம், ஒலம்தான், கலகக்கும்பல் தீவை நெருங்கிவிட்டது.
அந்த நேரத்தில் குழல்வாய்மொழியையும், சேந்தனையும் சிவன் கோவிலுக்குள் அழைத்துப்போய் மலர் தூவி ஆசி கூறினார் மகாமண்டலேசுவரர். பின்பு இருவரையும் வெளியே அழைத்துவந்தார். “இங்கிருந்து போய் எங்கேயாவது நன்றாக வாழுங்கள். அது போதும் என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். கலகக் கூட்டம் வந்துவிட்டது. வேறு வழியாகத் தப்புங்கள்” என்று அவர்களை அவசரப்படுத்தினார் மகாமண்டலேசுவரர். “அப்பா! நீங்களும் எங்களோடு வந்துவிடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்” என்றாள் குழல்வாய்மொழி.
“இல்லை! நான் வரப்போவதில்லை. நீங்கள் புறப்படுங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஓர் ஒலையை எடுத்து வந்து சேந்தனிடம் கொடுத்தார். “சேந்தா, எப்போதாவது முடிந்தால் இந்த ஒலையை மகாராணியிடம் கொடுத்துவிடு” என்று சொன்னவர் இருவரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு விருட்டென்று சிவன் கோயிலுள்நுழைந்து கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டார். வெறித்தனமான கூச்சல்களோடு ஆட்கள் ஓடிவரும் ஓசை மிக அருகில் கேட்டது. - .
சேந்தன் குழல்வாய்மொழியை இழுத்துக்கொண்டு ஓடினான். புதர்களிலும் மரக் கூட்டங்களின் அடர்த்தியிலும் பதுங்கிப் பதுங்கி ஆற்றைக் கடந்து இரவோடு இரவர்க முன்சிறைக்குப் போகிற வழியில் நடந்தார்கள் அவர்கள்.
மகாமண்டலேசுவரர் சிவன் கோயில் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது இடையாற்றுமங்கலம் மாளிகை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அழகான நந்தவனமும், வசந்த மண்டபமும் சீரழிக்கப்பட்டிருந்தன. உருக்குலைந்து சீரழிந்து எரிந்துகொண்டிருக்கும் அந்தத் தீவைப் பார்த்துக்கொண்டே கோவில் குறட்டில் நின்ற மகாமண்டலேசுவரர் கால் தளர்ந்து போனதன் காரணமாக மெதுவாக உட்கார்ந்தார். தாகம் நெஞ்சை வறளச் செய்தது, தொண்டைக் குழியை ஏதோ அடைந்தது, கண்கள் விழி தெரியும்படி சொருகின, வாய் கோணியது. மெல்லச் சாய்ந்து படுத்துக்கொண்டார். பின்பு எழுந்திருக்கவேயில்லை. மறுநாள் காலையில் தளபதி வல்லாளதேவனும் கழற்கால் மாறனாரும் தற்செயலாக அங்கே வந்து அவருடைய சடலத்தைக் கண்டனர்.
“மனிதர் நம்மை முந்திக்கொண்டுவிட்டார்!” என்று கூறிக் கொடுமையாகச் சிரித்தவாறே அந்த உடலைப் புரட்டித் தள்ளினான் தளபதி, பழிவாங்கி விட்ட பெருமிதம் அவனுக்கு! அருணோதயத்தின் அழகை அனுபவித்துக் கொண்டே முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை யாரோ வருகிற காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தாள். - -
அவள் எதிரே நாராயணன் சேந்தனும், குழல்வாய் மொழியும் வந்து நின்றுகொண்டிருந்தனர். கோதைக்கு மைத்துனனைக் கண்ட மகிழ்ச்சி பிடிபடவில்லை. “வாருங்கள், மைத்துனரே! ஒய்வாக வந்திருக்கிறீர்களே.” என்று அவள் ஆர்வத்தோடு வரவேற்றாள்.
“ஓய்வுதான்! நிரந்தரமான ஒய்வு-நெடுங்காலத்துக்கு ஒய்வு” என்று சிரித்துக்கொண்டே கூறினான் சேந்தன். அதற்குள் அண்டராதித்தனும் அங்கு வந்துவிட்டான். சேந்தனும் குழல்வாய்மொழியும் அண்டராதித்தனையும் கோதையையும் வணங்கி ஆசி பெற்று உள்ளே சென்றார்கள்.