பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கல்லில் விழுந்த கௌரவம்
14. கல்லில் விழுந்த கெளரவம்
முதல் நாள் இரவிலிருந்தே விழிஞத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழை மறுநாள் காலைவரை நிற்கவே இல்லை. தேய்பிறைக் காலத்து இருட்டு முகில் மூட்டத்தின் கவிந்த நிலை. அதிகாலை மூன்றரை நாழிகைக்குமேல் இருக்கலாம். அலைகள் பேய்த்தனமாகக் குமுறி வீசிக்கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் தெற்கேயிருந்து ஒரு கப்பல்துறைக்கு வந்து நின்றது. மழையில் நனையாமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த சிலர் தீபங்களோடு ஒடிப்போய்க் கப்பலைப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவுடன் அவர்களிடமி ருந்து ஆரவாரமும், மகிழ்ச்சியும் நிறைந்த குரல்கள் எழுந்தன. அமைதியில் ஆழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமலிருந்த அந்த
நேரத்தில் அந்தக் கப்பலின் வருகையை எதிர்பார்த்தே அவர்கள் காத்திருந்தார்கள் போலிருக்கிறது. “குமாரபாண்டியருடைய கப்பல் வந்துவிட்டது!” என்ற ஆனந்தமயமான வார்த்தைகள் அந்த இருளிலும் மழையிலும் ஒலித்தன. அவர்களில் சிலர் ஒடிப்போய்த் துறைமுகத்துக்கு அண்மையிலிருந்த விழிஞத்து அரச மாளிகையில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரர் முதலியவர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள். மகாமண்டலேசுவரர் மற்றவர்களை எழுப்பினார். மகாராணி, அதங்கோட்டாசிரியர், விலாசினி, பவழக்கனிவாயர் முதலியவர்கள் மகாமண்டலேசுவரரைப் பின்தொடர்ந்து சென்றனர். இருட்டையும் மழைக் குளிரையும் பொருட்படுத்தாமல் கப்பல் நின்று கொண்டிருக்கும் துறைை நோக்கி அவர்கள் கால்கள் விரைந்தன. -
பகற்பொழுதில் மக்கள் கூட்டமும், பல மொழி பேசும் பல நாட்டு மக்களின் நாகரிகக் கலப்பும் வெள்ளமாக வழிந்து ஒடும் அந்தத் துறைமுகப் பகுதியில் அப்போது மழைத் தண்ணிர்தான் வழிந்து ஒடிக்கொண்டிருந்தது. மழைத் தண்ணீரில் நனையாமல் சுங்கச் சாவடிக்குள் அடுக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகளின் ஒரமாக ஒன்றிப் படுத்திருந்த மனிதன் ஒருவன் மெல்ல எழுந்தான். மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் எந்தக் கப்பலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்களோ, அதே கப்பலை நோக்கி அவனும் இருளில் பதுங்கி நடந்தான். யாருடைய கண்களிலும் தான் தென்பட்டு விடாமல் நடந்து செல்லவேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருக்கும் போலும், முன்னால் சென்றுகொண்டிருந்தவர்களின் வெளிச்சத்துக்காகப் பிடித்துச் செல்லப்பட்ட தீப்பந்தத்தின் ஒளி பின்னால் பதுங்கி நடந்தவனுடைய முகத்தில் படுகிறது. அப்போது அவன் முகத்தை நன்றாகக் காணமுடிகிறது.
ஆ! அது ஆபத்துதவிகள் தலைவனின் முகம் அல்லவா? தளபதிக்கு உடல்நலமில்லை என்று பொய் சொல்லி அவனை விழிஞத்திலிருந்து கிளப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். அவனோ நடுவழியிலேயே அவர் கொடுத்து அனுப்பிய
‘ . .
ஒலையைப் பிரித்துப் பார்த்து, அதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விழிஞத்துக்கே திரும்பியிருந்தான்.
“ஐயோ, பாவம்! தம்முடைய பெண்ணும், நாராயணன் சேந்தனும் குமாரபாண்டியரை அழைத்துக்கொண்டு இந்தக் கப்பலில் வந்திருப்பார்களென்று மகாமண்டலேசுவரர் கனவு காண்கிறார். நானும், தளபதியும் பகவதியை அனுப்பியிருக்கிற நோக்கம் இவருக்குத் தெரியாது போலும் என்று நினைத்துக் கொண்டே, அவர்களுக்குப் பின்னால் நடந்தான் மகரநெடுங் குழைக்காதன். மழை பெய்து சேறாகியிருந்த தரையில் இருளில் வழுக்கி விடாமல் கவனமாக நடக்க வேண்டியிருந்தது. முன்னால் சென்றவர்களும் நிதானமாகவே நடந்து சென்றதால், குழைக்காதனும் அதற்கேற்ப வேகத்தைக் குறைத்துக் கொண்டான். கப்பலிலிருந்து குமாரபாண்டியனும் பகவதியும் இறங்குவதையும், அதைக் கண்டு மகாமண்டலேசுவரரின் முகத்தில் ஏமாற்றம் படர்வதையும் ஒருங்கே காணப்போகிற ஆவல் அவன் மனத்தில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது.
அந்த ஆவலுடன் அவன் சென்று கொண்டிருந்தபோது இருட்டில் பின்புறமிருந்து ஒரு கை நீண்டு அவன் முகத்தைத் தொட்டது. சிறிதளவு பயமும், பெரும்பகுதி ஆத்திரமுமாகத் திடுக்கிட்டுத் திரும்பினான் ஆபத்துதவிகள் தலைவன். பின்னால் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தவுடன் அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மரியாதையும் திகைப்பும் முகத்தில் மிளிர, நீங்களா? என்ற வினா அவன் வாயிலிருந்து மெல்ல வெளிப்பட்டது. மழையில் நனைந்த உடம்போடு தளபதி வல்லாளதேவன் அங்கே அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். х . -
இரையாதீர்கள், மெல்லப் பேசுங்கள்! என்று சொல்லும் பாவனையில் உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்துக் காட்டினான் தளபதி வல்லாளதேவன்.
“படைகள் புறப்படுகிற சமயத்தில் உங்களுக்குத் திடீரென்று உடல் நலமில்லாமற் போய்விட்டதாகவும், நீங்கள் படைக் கோட்டத்திலேயே தங்கி விட்டதாகவும் அல்லவா மகாமண்டலேசுவரர் என்னிடம் சொன்னார்?"என்று குரலை
மேலும் சிறிதாக்கிக் கொண்டு தன் துடிப்பை அடக்க முடியாமல் கேட்டான் குழைக்காதன்.
“எல்லா விவரமும் சொல்கிறேன். பொறுமையாக இருங்கள்” என்று மெல்லக் கூறிவிட்டுக் குழைக்காதனின் கையைப்பற்றி ஒரு மூலைக்கு இழுத்துக் கொண்டு சென்றான் தளபதி.
“மகாசேனாபதி! இப்போது நாம் இங்கே தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க அவகாசமில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த கப்பல் துறையில் வந்து நின்றுவிட்டது. மகாமண்டலேசுவரர், மகாராணி முதலியவர்கள் இளவரசரை வரவேற்பதற்காக அதோ முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்” என்று பரபரப்போடு சொன்னான் மகரநெடுங்குழைக்காதன். . -
“பரவாயில்லை, குழைக்காதரே! அவர்களெல்லாம் கப்பலிலிருந்து இறங்கி வருவதற்குள் நாமும் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். குமாரபாண்டியனோடு பகவதி உடன் வருவாளாகையினால் எல்லாம் அவள் கவனித்துக் கொள்வாள்:” “பகவதி கப்பலில் வருகிற விவரத்தைச் சொல்லி அவளையும் சேர்த்து அழைத்து வந்துவிட வேண்டுமென்று தாங்களே மகாமண்டலேசுவரரிடம் வேண்டிக் கொண்டீர்களாமே?” -
“அவர் உங்களிடம் சொன்னாரா அப்படி?” “சொல்லியது மட்டுமில்லை, உங்கள் உடல் நலனைக் கவனிப்பதற்காக நான் உடனே படைக்கோட்டத்துக்குப் போயாக வேண்டுமென்று என்னிடம் ஓர் ஒலை கொடுத்து இங்கிருந்து துரத்தினார். நானும் முதலில் அதை நம்பிப் புறப்பட்டு விட்டேன்.” என்று தொடங்கி, நடந்த விவர்த்தைத் தளபதிக்கு சொன்னான். . . . .
‘நீங்கள் செய்தது நல்லதாய்ப் போயிற்று. மகாமண்டலேசுவரர் கொடுத்த ஒலையை நம்பிப் படைக் கோட்டத்துக்கு வந்திருந்தால் என்னைப் போலவே நீங்களும் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பீர்கள், இடைவழியிலேயே அவருடைய ஒலையைக் கிழித்துப்போட்டுவிட்டு விழிஞத்துக்கே
திரும்பிய உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன் குழைக்காதரே! மகாமண்டலேசுவரர் பெரிய சூழ்ச்சி செய்து என்னை ஏமாற்றி விட்டார். நயமாகப் பேசி படைகளை முன்னால் அனுப்பச் செய்துவிட்டுத் தனியே என்னை அழைத்துக் கொண்டு போனார். நான் முட்டாள்தனமாய் அவரிடம் தனிமையில் மாட்டிக்கொண்டுவிட்டேன். நான் போருக்குத் தலைமை தாங்கத் தகுதியற்ற குற்றவாளி என்றும் என்னால் எவ்வளவோ தவறுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் எரிந்து விழுந்தார். நானும் என் ஆத்திரத்தை அவரிடம் காட்டினேன், பலிக்கவில்லை. தந்திரமாக என்னைப் படைக் கோட்டத்திலேயே சிறை வைத்துவிட்டு விழிஞத்துக்குப் புறப்பட்டார் அவர் அங்கே என்னை ஏமாற்றியது போதாதென்று இங்கே வந்து உங்களையும் ஏமாற்றியிருக்கிறாரென்று தெரிகிறது. இல்லாவிட்டால், படை புறப்படும் நேரத்தில் எனக்கு உடல் நலமில்லாமல் போய். விட்டது என்று சொல்லி உங்களை அங்கே அனுப்பி யிருப்பாரா? என்ன இருந்தாலும் பிறரை அஞ்சி நிற்கச் செய்யும் சூழ்ச்சித் திறமை அவரிடம் இருப்பது போல வேறு யாரிடமும் இருக்க முடியாது. நான் அவருக்கு எதிராகச் செய்த ஒவ்வொரு தவற்றையும் வரிசையாக எண்ணி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறாரே அவர் பகவதியை ஈழ நாட்டுக்கு அனுப்பியிருக்கும் இரகசியம் உங்களையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாதென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரோ அதை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவினால் அவரை வெல்ல நம்மால் முடியாது. குழைக்காதரே! ஆனால் எப்படியும் அந்த மலைச்சிகரத்தை வீழ்த்தியாக வேண்டும். அதைச் செய்வதற்காகத்தான் நான் தப்பி ஓடி வந்தேன். வலிமையான யவனக் காவல் வீரர்களை எனக்குக் காவல் போட்டிருந்தார் மகாண்டலேசுவரர். என் சாமர்த்தியத்தையெல்லாம் பயன்படுத்தி, என்னைக் காவல் செய்த வீரர்களை ஏமாற்றிவிட்டு இங்கு ஓடி வந்தேன். அவர் என்னை இவ்வளவு தூரத்துக்கு அவமானப்படுத்திய பின்பும் போர்க் களத்துக்குப் போய்ப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போர் செய்ய விருப்பமில்லை
எனக்கு. நான் போருக்குத் தலைமை தாங்கலாமா, இல்லையா என்பதைக் குமாரபாண்டியர் வந்து விசாரித்துத் தீர்ப்புக் கூற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம் ?” என்று ஆபத்துதவிகள் தலைவனிடம் தம் மனக்குமுறலை வெளியிட்டான் தளபதி வல்லாளதேவன். அதைக் கேட்டுவிட்டுக் குழைக்காதன் கூறினான்:
“மகாமண்டலேசுவரர் ஒருவரை மட்டும் மனத்தில் வைத்துக் கொண்டு தாங்கள் அப்படியெல்லாம் செய்துவிடக் கூடாது. தங்கள் தங்கையார் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிகளையும், சர்வாதிகார மனப்பான்மையையும் குமார பாண்டியரிடம் இதற்குள் விவரித்துச் சொல்லியிருக்கலாம். அதைக் கேட்டு குமாரபாண்டியரே மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கை இழந்திருப்பார்” . -
“அப்படிச் சொல்வதற்கில்லை, குழைக்காதரே! குமார பாண்டியருடைய மனத்தை என் தங்கை பகவதி எவ்வளவு தான் மாற்றியிருந்தாலும் இங்கு வந்து இறங்கியவுடன் மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் சொல்கிறபடி தான் கேட்பார் அவர். ஆகவே, இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே காரியம்தான். மகாமண்டலேசுவரர் என்ற இறுமாப்பு சக்தியை ஒரேயடியாக வீழ்ச்சியுறச் செய்துவிட வேண்டும்.”
“முயன்று பார்க்கலாம். அதோ அவர்கள் கப்பலை நெருங்கி விட்டார்கள். வாருங்கள், நாமும் போகலாம். மற்றவற்றைப் பின்பு பேசிக்கொள்வோம்” என்று கூறித் தளபதியையும் கூட்டிக்கொண்டு துறையில் வந்து நின்ற கப்பலை நோக்கிச் சென்றான் குழைக்காதன். - - .
தளபதிக்கும், குழைக்காதனுக்கும் இருளும் மழையும் போதுமான அளவு மறைந்து செல்வதற்கு ஒத்துழைத்தன. கப்பல் நின்றுகொண்டிருந்த துறைக்கு அருகில் ஒரு பாறை மறைவில் அவர்கள் இருவரும் மறைவாக நின்று கொண்டனர். அந்த இடத்தில் நின்றுகொண்டு கப்பலிலிருந்து இறங்குபவர்களை அவர்கள் பார்க்க முடியும். அங்கே பேசுகிற பேச்சையும் கேட்க முடியும். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மறைவிடம் அது.
கப்பலின் அருகே தீப்பந்தங்களின் ஒளியில் மகாராணி, மகாமண்டலேசுவரர், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், விலாசினி ஆகியோர் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் எல்லோரும் மழைத் துாற்றலில் நனைந்து கொண்டுதான் நின்றார்கள். நங்கூரக் கயிறுகளால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தாலும் அலைக் குழப்பத்தால் கப்பல் ஆடிக் கொண்டிருந்தது. - -
அடடா! அப்போது மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில்தான் எத்தனை ஆவல் நிறைவு பொங்கி நிற்கிறது: கப்பலிலிருந்து இறங்கிவரும் வழியையே பார்த்து நிற்கும் அவருடைய கண்களில் தென்படும் புனிதமான உணர்ச்சி தாய்மைப் பாசத்துக்கே சொந்தமான உணர்ச்சியல்லவா? அந்த உணர்ச்சிச் சாயல் மூலமாக அவருடைய துரய உள்ளத்தில் அப்போது எத்தனை எண்ணங்கள் பொங்கி எழுந்தனவோ?
விலாசினி, அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் எல்லோருடைய முகங்களிலும் குமாரபாண்டியரைக் காணப்போகும் ஆவல் நிலவியது. மகாமண்டலேசுவரருடைய முகம் ஒன்று மட்டுமே உணர்ச்சி நிழல் படியாமல் வழக்கம் டோல், இயல்பாக இருந்தது. பக்கத்திலிருந்து படர்ந்த தீப்பந்தத்தின் ஒளிச் சாயலில் அவருடைய கூர்மையான மூக்கு, முகத்திலிருந்து நீண்ட சக்தி ஒன்றின் நுனி போல் பளபளத்தது. அவருடைய சக்தி வாய்ந்த கண்களும் கப்பலிலிருந்து இறங்கி வரும் மரப்படிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன. ஆ! அவர்கள் எதிர்பார்த்த இணையற்ற அந்த விநாடி இதோ வந்துவிட்டது. சேந்தனும், குழல்வாய்மொழியும் பின் தொடர குமர்ர பாண்டியன் இறங்கிவந்தான். ஏனோ அவன் முகத்தில் சிறிது சோர்வு தென் பட்டது. சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் கூட அவ்வளவாக உற்சாகம் தென்படவில்லை. வரவேற்றவர்களிடம் இருந்த உற்சாகமும் பரபரப்பும் வரவேற்கப்பட்டவர்களிடம் இல்லை. குமாரபாண்டியன் கடைசிப் படியிலிருந்து இறங்கித் தென்பாண்டி நாட்டு மண்ணில் கால் வைத்தான். தீப்பந்த ஒளியில் அவன் அழகிய முகமும் வலது கையில் இருந்த
வலம்புரிச் சங்கும் தெரிந்து மின்னின. யாரோ ஒரு கந்தர்வ உலகத்துச் சுந்தர இளைஞன் போல் எழிலார்ந்து காட்சியளித்தான் அவன் இறங்கியதும் கீழே நின்ற யாவரையும் வணங்கினான். அப்போது “குழந்தாய்! வந்தாயா?” என்று ஒரு பாசம் நிறைந்த குரல் அவன் செவி வழிப் புகுந்து மனத்தின் இடமெல்லாம் நிறைந்து அவனைக் குழந்தையாக்கி விட்டது. அடுத்த விநாடி “அம்மா!” என்ற சொல் அவன் நாவிலிருந்து உணர்ச்சி மயமாகக் கனிந்து குழைந்து தோன்றி ஒலித்தது. அந்த ஒலி எழுந்து அடங்குவதற்குள் தன் தாயின் கரங்களுக்கிடையே தழுவப்பட்டு நின்றான் அவன். தாய்மை என்ற பாற்கடலில் விழுந்து முழுகிப் பருகியும், நனைந்தும், உணர்ந்தும், தன்னை இழந்து அதிலேயே ஆழ்ந்து விட்டதுபோல் ஒரு பரவச நிலை. தங்கமே தசையாகத் திரண்டு நீண்டாற்போன்ற குமாரபாண்டியனின் அழகிய தோளில் மகாராணி வானவன் மாதேவியின் கண்கள் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. தாயின் அந்தக் கண்ணிர் தன் உடம்பையும் உள்ளத்தையும் அழுக்கு நீக்கிப் பரிசுத்தமாக்கி விட்டதுபோல் ஒரு மகத்தான உணர்வு ஏற்பட்டது இராசசிம்மனுக்கு பின்பு குழல்வாய்மொழியையும் அன்போடு தழுவி வரவேற்றார் மகாராணி.
தன் தந்தை அதங்கோட்டாசிரியரின் முதுகுக்குப் பின் வெட்கத்தோடு ஒன்றிக்கொண்டு நின்ற விலாசினி வியப்போடு பார்த்தாள். அவ்வளவு வயதான மகாராணி தம் மகனைக் கண்டதும் சிறு பிள்ளைபோல் தழுவிக்கொண்டு கண்ணிர்சோர நின்ற காட்சி அவள் உள்ளத்தை உருக்கியது. குழந்தைத் தன்மை என்ற அபூர்வமான உணர்ச்சியை உலகத்துக்குக் கொடுத்துக் கொண்டு வருபவள் தாய். அதனால் தான் அந்தத் தன்மை தாயிடமிருந்தே சில சமயம் வெளிப்பட்டுவிடுகிறது போலும் என்று நினைத்து வியந்தார். அதங்கோட்டாசிரியர். மகாமண்டலேசுவரர் முதலியவர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினான் குமாரபாண்டியன்,
“இராசசிம்மா! நல்ல சமயத்தில் நீ தாய் நாட்டுக்கு வந்திருக்கிறாய். வடக்கே நம்முடைய எல்லையில் போர்
தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய வருகை யால் நம் படைவீரர்கள் உற்சாகமும் ஊக்கமும் அடையப் போகிறார்கள். சேர வீரர் படை உதவியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி வெற்றி நம்முடையதாகத்தான் இருக்கும்” என்று அவனைச் சந்தித்துவிட்ட மகிழ்ச்சியோடு கூறினார் மகாமண்டலேசுவரர். அவர் முகத்தை நேருக்கு நேர் நோக்க வெட்கினான் அவன். கீழே குனிந்துகொண்டு பார்த்தவாறு, “சுவாமி! படைக்கும், உதவிகளுக்கும் ஒன்றும் குறைவே இல்லை. ஈழ நாட்டுக் காசிய மன்னரின் படை கூட இன்னும் சில நாட்களில் நம் உதவிக்கு வரலாம்” என்றான் இராசசிம்மன்.
“உன்னுடைய முகத்தில் போரைப் பற்றிப் பேசும் போது ஆவேசமே ஏற்படவில்லையே? இந்தச் சோர்வும், சோகமும் எங்கிருந்து உன் முகத்தில் வந்து படிந்தனவோ?’ என்று அவன் முகத்தை வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்துவிட்டுக் கேட்டார் மகாராணி மகாராணி இவ்வாறு கேட்டதும் இராசசிம்மனுடைய முகத்தில் மேலும் சோகக் களை வந்து கவிந்தது. அவன் நெட்டுயிர்த்தான். அவனுடைய கண்கள் கலங்கின. எதையோ கூறுவதற்கு அவன் உதடுகள் தயங்கித் துடித்தன.
அவன் என்ன கூறப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எல்லோருடைய விழிகளும் அவனுடைய முகத்திலேயே நிலைத்தன. ஆனால் அவன் வாய் திறந்து பேசுவதற்குமுன் கண்களின் குறிப்பினாலேயே வேறு ஒரு பேச்சும் அங்கு நிகழ்ந்தது. பயந்து மிரளும் கண்களால் ஏதோ ஒரு குறிப்புத் தோன்றச் சேந்தன் முகத்தைப் பார்த்தாள் குழல்வாய்மொழி. - -
சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சிறிது தள்ளி அழைத்துக் கொண்டு போய் ஏதோ சொல்லிவிட்டு வந்தான். அதைக் கேட்டுவிட்டுத் திரும்பிவந்த மகாமண்டலேசுவரர், “குமாரபாண்டியரிடம் ஒரு விநாடி தனியாகப் பேச விரும்புகிறேன். இப்படிக் கொஞ்சம் என்னுடன் வரலாமா?” என்று பதறாத குரலில் தெளிவாகக் கூப்பிட்டார். குமார பாண்டியன் மறுப்பின்றி அவருடன் சென்றான். கப்பல்துறைக்கு
அருகேயிருந்த ஒரு பாறைக்குச் சமீபத்தில் போய் மகாமண்டலேசுவரரும் குமாரபாண்டியனும் நின்றனர். மகாமண்டலேசுவரர் இருளில் அவன் காதருகே ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்திச் சொன்னார்: “இராசசிம்மா! சற்று முன் நீ எல்லோரிடமும் சொல்லி விடுவதற்கு இருந்த சோகச் செய்தி என்னவென்று நான் இப்போதுதான் சேந்தனிடம் அறிந்து கொண்டேன். பகவதி இறந்து,போனாள் என்ற செய்தியை இன்னும் சிறிது காலத்துக்கு வெளியிடாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது. நான் வெளியிடச் சொல்கிறவரை அதை வெளியிடுவதில்லை என்று எனக்கு வாக்குத் தத்தம் செய்துகொடு” .
இதைச் சொல்லிவிட்டு, வாக்குறுதிக்காக வலது கையை நீட்டினார் அவர். “சுவாமி! என்னைச் சோதிக்காதீர்கள். நீங்கள் மிகப் பெரியவர். எவ்வளவு பெரிய துக்கத்தையும் அங்கீகரித்துக் கொண்டு உணர்ச்சி வசப்படாமல் நிமிர்ந்து நிற்கிற தெம்பு உங்களுக்கு உண்டு. நான் அப்படி மறைத்துக் கொண்டு நிற்கும் உறுதியற்றவன். என்னை மன்னித்துவிடுங்கள். அந்தப் பெண்ணின் துர்மரணத்தை என்னால் ஒளிக்க முடியாது. உங்கள் பெண்ணும் சேந்தனும் கூட அந்தத் துயர உண்மையை மறைத்துக்கொண்டு இருந்துவிடுவார்கள். என்னால் முடியாதே!” என்று நாத் தழுதழுக்கச் சொன்னான் குமாரபாண்டியன்.
“நீ கட்டாயம் அதை மறைத்துத்தான் ஆக வேண்டும். இப்போது நடந்து கொண்டிருக்கும் போரில் தென்பாண்டி நாடு வெற்றி பெற வேண்டுமென்றால், இந்த வாக்கை நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன் விருப்பம்போல் செய். இதற்குமேல் உன்னைக் கெஞ்சிக் கொண்டிருக்க எனக்குத் தெரியாது."-ஒரு கணம் குமார பாண்டியன் என்ன பதில் கூறுவதென்று தயங்கினான். அடுத்த விநாடி, “உங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று அவருடைய வலது கையில் தன் வலது கையை வைத்துச் சத்தியம் செய்துகொடுத்தான். மகாமண்டலேசுவரர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
“சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா?” என்று கேட்டான் இராசசிம்மன்.
“இல்லை! கோட்டாற்றுப்படைத் தளத்தில் தனியே சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். இதைக் கேட்டு ஆச்சரியப்படாதே, இந்த உண்மையும் இப்போதைக்கு உன் மனத்தோடு இருக்கட்டும்.”
“இதெல்லாம் என்ன விபரீதங்களோ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே?”
“கவலைப்படாதே, இராசசிம்மா! எல்லாம் போகப் போக விளங்கும்.”
அவர் இப்படிச் சொல்லி வாய் மூடவில்லை. அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை ஒட்டி அமைந்த பாறையின் மறுபுறமிருந்து தேங்காய் பருமனுக்கு ஒரு கல் ‘விர்'ரென்று வீசி எறியப்பட்டுப் பறந்து வந்தது. அந்தக் கல் மகாமண்டலேசுவரரின் மகுடத்தில் விழுந்து அதைக் கீழே வீழ்த்தியது. குமாரபாண்டியன் வாளை உருவிக் கொண்டு ஓடினான். ஒசை கேட்டுச் சேந்தனும் ஓடிவந்தான்.
“நில்லுங்கள். மகுடம் தான் விழுந்தது. என் தலை இன்னும் இருக்கிறது!” என்று சிரித்துக் கொண்டே அவர்களைத் தடுத்து நிறுத்தினார் மகாமண்டலேசுவரர். பாறையின் மறுபுறத்திலிருந்து யாரோ இருவர் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் ஓசை கேட்டது.