பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/குமார பாண்டியன் வந்தான்

விக்கிமூலம் இலிருந்து

13. குமாரபாண்டியன் வந்தான்

இறந்துபோன் பெண் பகவதிதான் என்ற உண்மையைத் தெரிந்து தாங்கிக்கொள்வது கடினமாயிருந்தது குமார பாண்டியனுக்கு ஏற்றுக் கொள்ளமுடியாத அந்தத் துயர உண்மையிலிருந்து மீள வழியறியாது தவித்தான் அவன். கப்பல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தளத்தில் அவனருகே குழல்வாய்மொழியும் சேந்தனும், மெளனமே உருவாய்க் கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தனர்.

“தளபதிக்கு முன்னால் எந்த முகத்தோடு போய் நிற்பேன்! இப்படி அநியாயமாக அந்தப் பெண் இறக்கும்படி நேரிட்டுவிட்டதே போரும், படையெடுப்பும் ஏற்பட்டுத் தளபதியின் ஊக்கமும் உற்சாகமும் நன்றாகப் பயன்பட வேண்டிய சமயத்தில் இந்தச் செய்தியைப் போய்ச் சொன்னால் அவனுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் மட்டும் கவனமாக இருந்திருந்தால் அந்தப் பெண் கப்பலிலிருந்து தப்பி ஓடி இப்படித் துர்மரணமடைந்திராமல் தவிர்த்திருக்க முடியும்” என்று சேந்தனையும் குழல்வாய்மொழியையும் நோக்கித் துக்கத்தோடு சொன்னான் இராசசிம்மன். துயர வேதனையினால் பேசும்போது தொண்டை தடுமாறி நாக் குழறியது அவனுக்கு.

“இளவரசே! நாங்கள் என்ன செய்யமுடியும்? எங்களைக் கேட்டுக் கொண்டா அந்தப் பெண் இந்தக் காரியங்களைச் செய்தாள்? அவளுடைய முரட்டுத்தனம் அவளுக்கே அழிவைத் தேடிக் கொடுத்து விட்டது. விழிஞத்தில் அந்தப் பெண் ஆண் வேடத்தோடு வந்தபோதே சந்தேகப்பட்டுக் கப்பலில் இடங்கொடுக்க மறுத்தேன் நான். மகாமண்டலேசுவரருடைய திருப்புதல்வியாரின் நல்ல மனத்தால் கப்பலில் இடம்பெற்றுத் தன் பெயர் கூத்தனென்று பொய் கூறி நடித்தாள் அந்தப் பெண்.

கப்பலில் பலமுறை என்னுடைய சந்தேகம் வலுத்தும், பேசாமல் அடக்கிக் கொண்டிருந்தேன் நான். கடைசியில் தனக்கு இடங்கொடுத்த இடையாற்றுமங்கலத்து நங்கையிடமே கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு விட்டுத் தப்பியிருக்கிறாள் அவள். நாங்கள் ஒரு குற்றமும் அறியோம்” என்று அந்தச் சோகமயமான சந்தர்ப்பத்திலும் தெளிவாகப் பதில் சொன்னான் நாராயணன் சேந்தன்.

“நீங்கள் ஏன் வீணாக அவருக்குப் பதில் சொல்லிச் சிரமப்படுகிறீர்கள்? இப்போது அந்தப் பெண்ணுக்குப் பதிலாக நானே இறந்து போயிருந்தால்கூடக் குமாரபாண்டியர் இவ்வளவு துக்கப்பட மாட்டார். பொய்யும் வஞ்சகமும் நிறைந்தவளாயிருந்தாலும் அவள் கொடுத்து வைத்தவள். அதிருஷ்டக்காரி. இல்லாவிட்டால் குமார பாண்டியரை இவ்வளவு தூரம் அதுதாபத்துக்கு ஆளாக்க முடியுமா?” என்று சற்றே அசூயை தொனிக்கும் குரலில் சேந்தனை நோக்கிச் சொன்னாள் குழல்வாய்மொழி. இந்தச் சொற்களைக் கேட்டுச் சினமும் வெறுப்பும் அடைந்த இராசசிம்மன், “நீங்கள் இருவரும் பேசுகிறவிதம் கொஞ்சங்கட நன்றாயில்லை. அந்தப் பெண் பகவதி என்னதான் பொய்யாக நடந்து ஏமாற்றியிருக்கட்டுமே! அதற்காக இப்படியா ஈவிரக்கமின்றிப் பேசுவீர்கள்? உங்களுக்கு மனித மனத்துக்குரிய நெகிழ்ச்சியே இல்லையா? மரணத்துக்குப் பின்னும் பகைகளை மறந்துதுக்கப்படத் தெரியாமல் இப்படியா விலகிப் பேசுவது?” என்று அவர்கள் இருவரையும் கடிந்து பேசினான்.

“குமாரபாண்டியர் என்னை மன்னிக்க வேண்டும். நான் வெளிப்படையாக மனம் விட்டுக் கூறுகிறேன். நெஞ்சில் துக்கம் ஊறாமல் துக்கப்படுவது போல் நடிக்க எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கெனச் சொன்னாள் குழல்வாய்மொழி. -

“குழல்வாய்மொழி! நீ கல்நெஞ்சுக்காரி: - х “நீங்களும் சில சமயம் கல்நெஞ்சுக்காரராக இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்:” . . . . z “போதும். நிறுத்து! இதற்குமேல் இப்போது உன்னுடன் நான் பேசு விரும்பவில்லை.” .

“ஓ! தாராளமாக நிறுத்திவிடுகிறேன். எனக்குங்கூட விருப்பமில்லைதான்.”

“உங்கள் இருவருடனும் இந்தக் கப்பலில் நான் புறப்பட்டதே தப்பு. அதை இப்போது உணர்கிறேன்” என்று வெறுப்போடு சொன்னான் இராசசிம்மன். -

“நீங்கள் எங்களுக்காகப் புறப்படவில்லை. உங்கள் சொந்த நாட்டையும் அருமைத் தாயையும் காப்பாற்றுவதற்காகப் புறப்பட்டிருக்கிறீர்கள்” என்றாள் குழல்வாய்மொழி,

அங்கேயிருந்து அவர்கள் இருவருடனும் மேலும் பேசிக் கொண்டிருப்பதை விரும்பாதவன் போல் விருட்டென்று எழுந்து மேல் தளத்துப் படிகளில் ஏறினான் குமாரபாண்டியன். அவன் கையில் எடுத்துச் சென்ற வலம்புரிச் சங்கை கடுப்புடன் நோக்கினாள் குழல்வாய்மொழி. சேந்தனும் வியப்போடு பார்த்துக்கொண்டு நின்றான். குமாரபாண்டியனின் உருவம் மேல்தளத்துப் படிகளில் ஏறி மறைந்ததும் குழல்வாய்மொழி அவசரமாகச் சேந்தன் பக்கம் திரும்பினாள்:

“இடை வழியில் செம்பவழத் தீவு வராமல் கப்பலை வேறு மார்க்கமாக விலக்கிச் செலுத்திக்கொண்டு போகவேண்டுமென்று உடனே மீகாமனுக்கு இரகசியமாகத் தெரிவித்து விடுங்கள்.” அவளுடைய குரலிலிருந்த உணர்ச்சிக் கொதிப்பைக் கண்டு சேந்தன்ே திகைத்துப் போனான்.

“அப்படியே தெரிவித்துவிட்டு வருகிறேன், அம்மணி!” என்று உடனே மீகாமனைச் சந்திப்பதற்குச் சென்றான். குழல் வாய்மொழி ஆத்திரத்தோடு இரண்டு கைவிரல்களையும் சேர்த்துக் கோத்து முறித்துச் சொடுக்கினாள். விரல்கள் நெளிந்த ஒலி அவள் சினத்தை எல்லையிட்டுக் காட்டியது. தந்தைக்கு அறிவில் இறுமாப்பு என்றால் மகளுக்கு அன்பில் இறுமாப்பு. தான் உரிமை கொண்டாடி அநுபவிக்கும் அழகைத் தன்னைத் தவிர வேறொருவர் உரிமை கொண்டாடவிடக்கூடாது. பிடிவாதத்திலும், இறுமாப்பிலும் அவள் தன் அருமைத் தந்தையைக் கொண்டிருந்தாள். - -

“அம்மணி! கவலை வேண்டாம். கப்பல் செம்பவழத் தீவு வழியே போகாது” என்று சேந்தன் திரும்பி வந்து உறுதி

கூறியபோதுதான் அவளுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. அதன்பின் அந்தப் பயணத்தின்போது குழல்வாய்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. பேச்சில் தொடங்கிய பிணக்கு ஊடலாகி, ஊடல் பெருங் கோபமாக மாறியிருந்தது. பயணம் தொடங்கிய மூன்றாம் நாள் மாலை, “போகிற வழியில் இந்தக் கப்பலைச் செம்பவழத் தீவில் சிறிது நேரம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று நாராயணன் சேந்தனை அழைத்துக் கூறினான் இராசசிம்மன். ‘குமாரபாண்டியர் என்னை மன்னிக்கவேண்டும். செம்பவழத் தீவு கடந்துவிட்டது. அவசரமாக விழிஞத்தை அடைய வேண்டுமென்பதற்காகக் கப்பலை வேறு வழியாக விலக்கிச் செலுத்திக் கொண்டு வந்துவிட்டோம்” என்று கவலைப்படுவது போன்ற முகபாவத்தை வருவித்துக்கொண்டு சொன்னான் நாராயணன் சேந்தன்.

“நல்லது. அப்படியானால் விழிஞத்தை எப்போது அடையலாம்?” என்று தன் மனவேதனையைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான் இராசசிம்மன்.

“வழக்கமாக ஆகிற நாட்களைக் காட்டிலும் இரண்டு நாட்கள் முன்னதாகவே போய்விடலாம்” என்று சேந்தனிட மிருந்து பதில் வந்தது. குமாரபாண்டியன், சேந்தன், குழல்வாய்மொழி ஆகிய இவர்கள் மூவரும் இப்படி அவசரமாகக் கப்பலில் வந்து கொண்டிருந்த இதே சமயத்தில் இவர்களை எதிர்பார்த்து விழிஞத்தில் காத்திருந்தவர்களின் நிலை என்ன என்று இனிமேல் கவனிக்கலாம்.

மகாராணி, பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், விலாசினி ஆகிய எல்லோருடனும் விழிஞத்துக்குப் புறப்பட்டு வந்திருந்தார் மகாமண்டலேசுவரர். போர்க்களத்திலிருந்து வீரர்கள் எவரேனும் அவசரச் செய்தி கொண்டுவந்தால், அவர்கள் தம்மை விழிஞத்தில் வந்து சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டு அதன் பின்பே புறப்பட்டிருந்தார் அவர். கோட்டாற்றுப் பெரும்படைகளையெல்லாம் திரட்டி அனுப்பியிருப்பதால் உடனடியாகக் கவலைப்படும்படியான நிகழ்ச்சி எதுவும் போர்க்களத்தில் நடந்துவிடாது என்ற நம்பிக்கை

அவருக்கு உண்டாகியிருந்தது.

விழிஞத்துக்குப் போனதும் போகாததுமாக அவருடைய கண்கள் ஆபத்துதவிகள் தலைவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதைத்தான் தேடின. மகாராணி முதலியவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் மட்டும் தனியே புறப்பட்டுத்துறைமுகப் பகுதிகளில் சுற்றினார் அவர். தளபதியின் ஏற்பாட்டால் ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் அங்கே எங்கேயாவது மறைந்து காத்திருப்பானென்று அவர் எதிர்பார்த்தார். . . .

அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ஏற்றுமதிக் காகக் குவிக்கப்பட்டிருந்த மிளகுக் குவியல்களுக்கப்பால் ஒரு பெரிய சுரபுன்னைமரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தான் குழைக்காதன். பூதாகாரமான தோற்றத்தையுடைய நாலைந்து யவனக் கப்பல் மாலுமிகள் குடித்துவிட்டு மாமிச பர்வதங்கள் உருளுவனபோல் அந்த மரத்தடியில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தனர். குழைக்காதனும் கொஞ்சம் யவனத்து மதுவைச் சுவைத்திருப்பான்போலவே தோன்றியது.

ஆனாலும் அவன் தன் நினைவிழந்து விடவில்லை. திடீரென்று மகாமண்டலேசுவரரைப் பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். தள்ளாடிக்கொண்டே வணங்கினான். அந்த நிலையில் அவர் தன்னைக் கண்டு கொண்டாரே என்று

“ஒகோ! நீயும் பெருங்குடிமகனாகி (நிறைய குடிப்பவன்) விட்டாயா? பரவாயில்லை. கொஞ்சம் என் பின்னால் நடந்து வா.உன்னிடம் ஒரு விஷயம் பேசவேண்டும்” என்று மகாமண்டலேசுவரர் கூப்பிட்டபோது அவன் மறுக்காமல் அவர் பின்னால் அடக்கமாக நடந்து சென்றான். அப்படிச் சிறிது தொலைவு நடந்து சென்றதும் சற்றும் தளர்ச்சியில்லாத குரலில் அவனை நோக்கிக் கூறினார் அவர்: “நான் இப்போது படைத்தளத்தில் தளபதியைச் சந்தித்தவிட்டுத்தான் வருகிறேன். உன்னை இங்கே அனுப்பியிருப்பதைப் பற்றியும் அவன் என்னிடம் சொன்னான். படைகளையெல்லாம் போர் முனைக்கு அனுப்பியாயிற்று. புறப்படுகிற சமயத்தில் திடீரென்று உடல் நலங்குன்றிப் போய் வல்லாளதேவன் மட்டும் படைக்

ur. G#5.42

கோட்டத்திலேயே தங்கிவிட்டான். பாவம்! அதைக் கண்டு எனக்கே பரிதாபமாக இருந்தது. இடையாற்று மங்கலத்திலிருந்து என்னுடைய காவல் வீரர்கள் சிலரை வரவழைத்து ஒத்தாசைக்கு வைத்துவிட்டு வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீயும் அங்கு போனால் உதவியாயிருக்கும். தளபதி எல்லா விவரமும் என்னிடம் சொன்னான். கப்பலில் அவன் தங்கை பகவதி வந்தால் அவளை நானே அங்கு அழைத்து வந்துவிடுவேன். படைத்தளத்தைச் சுற்றிக் காவ்ல் பலமாக இருக்கிறது. ஆனாலும் தளபதியைக் கவனித்துக் கொள்வதற்காக உன்னை மட்டும் உள்ளேவிடச் சொல்லி நான் அனுமதி ஒலை எழுதித் தருகிறேன். நீ உடனே புறப்படு’ . . .

இதைக் கேட்டதும் குழைக்காதனுக்கு உடம்பு விதிர் விதிர்த்துப் போய்விட்டது. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிவின் சிகரமென விளங்கிய மகாமண்டலேசுவரர் மட்டும் இந்தச் செய்தியைச் சொல்லியிராமல் வேறு யாரேனும் சொல்லி யிருந்தால் அவன் சிறிதும் நம்பியிருக்கமாட்டான். தென்பாண்டி நாட்டு வீரத் தளபதி வல்லாளதேவனுக்கா உடல் நலம் சரி யில்லை? எத்தனையோ போர்க்களங்களில் பெரும் படையுடன் சென்று பகைவர்களைப் புறம்கண்டு வெற்றி வாகை சூடிய வல்லாளதேவனுக்கா திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது என்று பல் கேள்விகள் அவன் உள்ளத்தில் எழுந்து பெரும் ஐயத்தை உண்டாக்கியிருக்கும். மகாமண்டலேசுவரரின் வாய்ச் சொல்லாகவே வருகின்ற விஷயம் எதுவாயினும் அதை நம்பித்தானேயாகவேண்டும்? இந்த நல்ல சமயத்திலா தளபதிக்கு உடல் நலமில்லாது போகவேண்டும்? என்று மனம் கலங்கினான்

“இங்கே நின்றுகொண்டிரு. இன்னும் சிறிது நேரத்தில் ஒலையை எழுதிக்கொண்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார் மகாமண்டலேசுவரர். அவன் அங்கேயே இருந்தான். சிறிது நேரத்தில் உறையிட்டு அரக்குப் பொறி வைத்த ஒலையோடு வந்தார் அவர். அதை அவனிடம் கொடுத்துவிட்டு, “போய் வா! இந்த ஒலையைக் கொடுத்ததும் உன்னை உள்ளே அழைத்துப்போய் விட்டு விடுவார்கள்" என்றார். அவன் அவசரமாகப் புறப்பட்டான். வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு புன்னகை பூத்தார் மகாமண்டலேசுவரர்.

மகாமண்டலேசுவரருடைய ஒலையோடும், தளபதியின் உடல் நிலை எப்படியிருக்கிறதோ என்ற பயத்தோடும் அவசர மாகப் பயணம் செய்து கோட்டாற்றுக்குப் போய்க் கொண்டிருந்த மகரநெடுங்குழைக்காதனுக்கு இடைவழியில் என்ன சந்தேகம் உண்டாயிற்றோ, தெரியவில்லை. மகாமண்டலேசுவரரின் ஒலையைப் பிரித்துப் படித்துவிட்டான்.

‘இந்த ஒலைக் கொண்டு வரும் ஆபத்துதவிகள் தலைவனையும், தளபதியைச் செய்ததுபோலவே செய்யவும். இப்படிக்கு மகாமண்டலேசுவரர்’ என்ற ஒரே வாக்கியம்தான் அந்த ஒலையில் இருந்தது. ஆபத்துதவிகள் தலைவன் திகைத்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. ‘ஏதோ சூழ்ச்சிக்கு இரையாகப் போகிறாய்’ என்று மனம் எச்சரித்தது. என்ன ஆனாலும் மகாமண்டலேசுவரர் சொற்படிக் கேட்பதில்லை என்ற மன உறுதியுடன் விழிஞத்துக்கே திரும்பி, அந்த ஒலையையும் கிழித்தெறிந்துவிட்டான்.