பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 20

விக்கிமூலம் இலிருந்து


20-ஆம் அதிகாரம்
இல்லறம்—குண அழகு அழகேயன்றி
முக அழகு அழ கல்ல
கெட்ட ஸ்திரீகளும், நல்ல ஸ்திரீகளும்

விக்கிரமாதித்தன் காட்டில் ஆறு மாதமும் நாட்டில் ஆறு மாதமும் வசித்தது போல நானும் ஞானாம்பாளும், அவள் தகப்பனார் கிரஹத்தில் ஆறு மாதமும் என் கிரஹத்தில் ஆறு மாதமும், மாறி மாறி வசிக்கிற தென்று, என் தகப்பனாரும், ஞானாம்பாள் தகப்பனாரும் நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப் பிரகாரம் நாங்கள் முந்திய ஆறு மாதம் சம்பந்தி முதலியார் வீட்டிலும், பிந்தின ஆறு மாதம் என் தகப்பனார் வீட்டிலுமிருந்து வந்தோம். என் தாயாரும் ஞானாம்பாளும் தாயும் மகளும்போல அதிக நேசமும் பிரியமுமாக ஒத்து வாழ்ந்தார்கள். ஞானாம்பாள் வருகிறதற்கு முன் என் தாயார் தங்களுடைய தேக சௌக்கியத்துக்கடுத்த காரியங்களைக் கவனிப்பதற்குக்கூட நேரமில்லாமல் குடும்ப யோகக்ஷேம காரியங்களை ஏகதேசத்திற் பார்த்துப் பரிசிரமப்பட்டார்கள். ஞானாம்பாள் வந்ததுமுதல் அவளுங் கிருக கிருத்தியங்களை வகித்துப் பார்த்து வந்ததுந் தவிர, என் தாயாருடைய தேக போஷணைக்கடுத்த காரியங்களையும் அவளுடைய கையாலேயே செய்துவந்தபடியால் என் தாயாருக்குப் பெரிய ஆறுதலும் சிரம பரிகாரமுமாயிருந்தது. அன்றியும் எனக்கு வேலை செய்யப் பல வேலைக்காரர்களிருந்தாலும் கலியாணத்துக்குப் பிற்பாடு என்னுடைய வேலையையும் ஞானாம்பாளே செய்து வருவாள். நான் ஒருநாள் அவளைப் பார்த்து “நாமென்ன ஏழைகளா? நமக்கு வேலை செய்ய ஊழியக்காரர்கள் இல்லையா? நீ உன் கையாலே வேலை செய்வது எனக்குத் திருப்தியில்லை” யென அவள் சொல்லுகிறாள்:— ““எளிய ஸ்திரீகள் கைப்பாடுபட்டு ஜீவனத்துக்கு வேண்டிய காரியங்களையும் சம்பாதித்துக் கொண்டு சமையல் முதலிய வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலைகள் யாதொன்றுமில்லை. உங்களுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளையாவது நான் செய்யக் கூடாதா?“” என்றாள். ““இதற்கு முன் ஒரு நாளும் நீ வேலை செய்வதை நான் பார்த்ததில்லையே. இப்போது இவ்வேலைகளையெல்லாம் எப்படிக் கற்றுக் கொண்டாய்?”“ என்று நான் கேட்க அவள் ““பக்ஷிகளுக்குப் பறக்கவும் மீன்களுக்கு நீந்தவும் யார் கற்பித்தார்கள்? அப்படியே நானும் வேலை செய்யப் பயின்றேன்”” என்றாள்.

ஞானாம்பாள் வேலை செய்கிற நேரம் போக மற்ற நேரங்களில் நானும் அவளும் பல விஷயங்களைப் பற்றிச் சம்பாஷிக்கிறது வழக்கம். ஒரு நாள் அழகைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்தபோது அவள் சொல்லுகிறாள்:— ““குண அழகும், புத்தியின் அழகும் அழகே யல்லாமல் முக அழகு அழகல்ல. ஒரு ஸ்திரீயினுடைய அழகையாவது, புருஷனுடைய அழகையாவது அழகென்று எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களா? ஒருவனுடைய முகம் அழகென்று சிலர் ஒப்புக்கொண்டாலும் அநேகர் அதை விகாரமென்று சொல்லுகிறார்கள். ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பதுபோல் அவரவர்களுடைய பிரியத்துக்குத் தகுந்தபடி அவலக்ஷணத்தையும் லக்ஷணமென்று சொல்லுகிறார்கள். குணத்தையும் புத்தியையும் சிலாகிக்காதவர்கள் யார்? ஒருவன் குணவானாயும் கல்விமானாயும் இருப்பானானால் அவனால் உலகத்துக்கு எவ்வளவோ பிரயோஜனமுண்டு. அழகினால் யாருக்கு என்ன பிரயோஜனம்? யௌவன காலத்தில் அழகுக்கு விசேஷமே தவிர வயது செல்லச் செல்ல அழகும் குறைந்துபோகின்றது. மேலும் அம்மை முதலிய பல வியாதிகளால் அழகு விகாரமாய் மாறிவிடுகின்றது. குணமும், விவேகமும் எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் மாறாமல் ஒரே தன்மையாயிருக்கின்றது. அழகில்லாத ஆடுமாடுகள் உலகத்துக்கு உபகாரியாயிருக்கின்றன. காஞ்சிரங்கனி அழகாயிருந்து காரியமென்ன? அழகை மின்னலுக்குச் சமானமாக வித்வான்கள் வர்ணிக்கிறார்கள். மின்னல் இடியை உண்டுபண்ணுவதுபோல் அழகும் காமவிகாரம் முதலான பல தீமைகளை விளைவிக்கின்றது”” என்று பிரசங்கித்தாள்.

என் தாயாரையும் ஞானாம்பாளையும் அவளுடைய தாயாரையும் தவிர வேறே ஸ்திரீகளை நான் அறியாதபடியால் ஸ்திரீக ளெல்லாரும் நல்லவர்க ளென்று பூசிக்கிறதும் புருஷர்க ளெல்லாரும் துஷ்டர்க ளென்று தூஷிக்கிறதும், எனக்கு வழக்கமா யிருந்தது. ஒரு நாள் ஞானாம்பாள் என்னை நோக்கி ““ஸ்திரீகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படியே, புருஷர்களிலும் சிஷ்டர்களும் துஷ்டர்களு மிருக்கிறார்கள்” என்றாள்.

மில்ட்டன் (Milton) என்னும் இங்கிலீஷ் மகாவித்வான், அந்தகனான பிற்பாடு விவாகம் செய்த பெண்சாதி, எவ்வளவோ கொடுமை யுள்ளவ ளென்று அந்த வித்வானே முறையிடுகிறார். அவளை ஒரு பெரிய பிரபு ரோஜாப் புஷ்ப மென்று வர்ணித்த போது அந்த மகாவித்வான் அவரை நோக்கி ‘“நான் குருட னானதால் அவள் அழகினுடைய சமாசாரம் எனக்குத் தெரியாது; ஆனால் என் மேலே படுகிற தெல்லாம் முட்கள்தான்’” என்றார்.

“சோக்கிராட்டிஸ் (Socrates) என்னும் ஞான சாஸ்திரிக்கு வாய்த்த பெண்சாதி, எவ்வளவு பொல்லாதவளென்று சகலருக்கும் தெரிந்த காரியமே. அவள் செய்த கொடுமைகளை யெல்லாம் அவர் எவ்வளவோ பொறுமையுடன் சகித்தார். ஒரு நாள் அவள் சொன்ன தூஷணங்களைச் சகிக்கமாட்டாமல் அவர் வெளியே போய், வாசற்படிக்கு முன்பாக உட்கார்ந்தார். அவள், கோபாவேசத்துடன், மேல்மெத்தை மேல் ஓடி, அங்கே விருந்த அசுத்த நீர் நிறைந்த பானையை எடுத்து அவர் தலைமேல் கவிழ்த்தாள். அவர் சிரித்துக் கொண்டு ““முன்னே இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது”” என்று சொல்லிப் பொறுமையாயிருந்தார்.

“ஒரு புருஷன் வடை தின்ன ஆசைகொண்டு உழுந்து வாங்கி, பெண்சாதி யிடத்திலே கொடுத்து வடை சுடும்படி ஆக்ஞாபிக்க, அவள் நூறு வடை சுட்டு, தொண்ணூற்றொன்பது வடைகளையும் அவளே தின்றுவிட்டு, ஒரு வடை மட்டும் புருஷனுக்கு வைத்தாள். அவன் ‘அத்தனை வடைகளையும் “எப்படித் தின்றாய்?”’ என்று கேட்க, அவள் “‘இப்படித் தான் தின்றேன்‘” என்று அந்த ஒரு வடையையும் எடுத்துத் தின்றுவிட்டாள். இவள் எப்படிப்பட்ட அரக்கியாய் இருக்கவேண்டும்?

பின்னும் ஒரு பெண்சாதிக்கும் புருஷனுக்கும் வாக்குவாதமுண்டாகி அவன் பெண்சாதியைப் பழி வாங்குவேனென்று சொல்ல, “அவள் “என்ன பழி வாங்குவாய்?”” என்று கேட்க, “‘கொல்லை யிலிருக்கிற குளத்தில் விழுந்துவிடுவேன்’” என்று புருஷன் சொல்ல, அவள் ’நீ “விழுகிறதை நான் கண்ணாலே பார்க்கவேண்டும் வா”’ என்று திட்டி மடியைப் பிடித்து இழுக்க அவன் குளத்தில் விழுகிறதற்காக ஒரே ஓட்டமாக ஓடினவன் பிற்பாடு பயந்துகொண்டு குளத்து ஓரத்தில் நின்றுவிட்டான். உடனே அவனை அவன் பெண்சாதி வாயில் வந்தபடி தூஷித்து “’வெட்கம் கெட்டவனே! ஏன் குளத்தில் விழவில்லை?’” என்று கேட்க அவன் ’“எனக்கு மனம் துணிய வில்லை. பின்னும், எனக்கு நீச்சுத் தெரியுமானதால் நான் தப்பிவந்தாலும் வந்துவிடுவேன். நான் தப்பிவராதபடி என்னுடைய இரண்டு கைகளையும் நீ பின் கட்டு முறையாய்க் கட்டி விட்டு தூரத்திலிருந்து ஓடிவந்து என்னைக் குளத்திலே தள்ளி விடு’” என்று சொல்லிக் குளத்து ஓரத்தில் நின்றான். அந்தப் பிரகாரம் பெண்சாதி பர்த்தாவினுடய இரு கைகளையும் பின்புறமாய்க் கட்டிவிட்டு அவள் வெகு தூரம் பின்னிட்டுப் போய் அவனைத் தள்ளுவதற்காக அதி வேகமாக ஓடிவந்தாள். அவள் தனக்குச் சமீபத்தில் வரும்போது அவன் திடீரென்று அப்பால் விலகிவிட்டான். அவள் ஓடிவந்த விசையினால் அவளே ஒர் நிமிஷத்திற் குளத்தில் விழுந்துவிட்டாள். உடனே தன்னைத் தூக்கிவிடும்படி கத்தினாள். ’“நீயே என் கைகளைக் கட்டிவிடாயே! நான் என்ன செய்வேன்?”’ என்று புருஷன் சும்மா இருந்துவிட்டான். அவள் ஸ்வயங்கிருத அபராதத்தால் தண்ணீரில் மூழ்கி இறந்து போனாள்” என்றாள்.

மேற்படி திருஷ்டாந்தங்களை ஞானாம்பாள் சொன்னவுடனே ஸ்திரீகள் நல்லவர்களென்பதற்கு நானும் சில திருஷ்டாந்தங்கள் சொன்னேன்:—

““கொன்ராட் (Conrad) என்னும் சக்கரவர்த்தி ஒரு பட்டணத்தைப் பிடித்தபோது அதிலிருந்த புருஷர்களையெல்லாம் வெட்டிப்போடும்படியாகவும் ஸ்திரீகளையெல்லாம் அவர்கள் தூக்கக் கூடுமான ஆஸ்திகளை எடுத்துக் கொண்டு பட்டணத்தை விட்டுப் போய்விடும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அநேக ஸ்திரீகள் தங்களுடைய புருஷர்களை முதுகின் மேலே தூக்கிக்கொண்டு நகரத்துக்கு வெளியே போவதை அந்தச் சக்கரவர்த்தி பார்த்து ‘ஆஸ்திகளை எடுத்துக்கொண்டு போகும்படி நாம் உத்தரவு கொடுத்திருக்க, புருஷர்களை ஏன் கொண்டு போகிறீர்கள்?’ என்று கேட்க ‘புருஷர்கள் தான் எங்களுக்கு ஆஸ்தி‘ என்று அந்த ஸ்திரீகள் சொல்ல அந்தச் சக்கரவர்த்திக்கு இரக்கமுண்டாகி, அந்த நகரத்துப் புருஷர்களை யெல்லாம் கொலை செய்ய வேண்டா மென்று உத்தரவு கொடுத்தார்.

இராணுவ வகுப்பைச் சேர்ந்த ஒரு உத்தியோகஸ்தர் அழகும் மேன்குலமுமுள்ள ஒரு ஸ்திரீயை விவாகஞ் செய்கிறதென்று நிச்சயித்த பிற்பாடு அவர் திடீரென்று யுத்தத்துக்குப் போகும்படி நேரிட்டது. அவர் திரும்பி வந்த பிற்பாடு கலியாணஞ் செய்வதாக வாக்குத் தத்தஞ் செய்து யுத்தத்துக்குப் போய்விட்டார். அந்தச் சண்டையில் அவர் குண்டுபட்டு நொண்டியாய்ப் போனதுந்தவிர தேகத்தில் காயங்களுண்டாகி அவர் சர்வ விகாரமாய்ப் போனார். இப்படிப்பட்ட ஸ்திதியில் அந்த ரூபவதி தன்னைக் கலியாணஞ் செய்யச் சம்மதியாளென்று அவர் மிகவும் துயரத்தை அடைந்திருந்தார். அவர் ஊருக்குத் திரும்பிவந்த உடனே அந்த ஸ்திரீயைப் பார்க்கிறதற்குக் கூட வெட்கப்பட்டுக் கொண்டிருந்து, பிற்பாடு ஒரு நாள் அவளிடம் போய்த் தன்னை அந்த ஸ்திதியிற் கலியாணஞ் செய்யச் சம்மதமா என்று கேட்க, அவள் அவரைப் பார்த்து ‘“ஆடவர்களுக்குச் சௌரியமே அழகு; நீங்கள் சுத்த வீரர் என்பதற்கு உங்களுடைய காயங்களே சாக்ஷிகளாயிருப்பதால் உங்களை விவாகஞ் செய்ய ஒரு தடையுமில்லை”’ என்று உடனே சம்மதித்தாள்.

ஒரு திரவியந்தர் நெடு நாள் வியாதியாயிருந்து எழுந்திருக்கக் கூடாமல் அசக்தியாயிருந்த காலத்தில் அவருக்கு விரோதிகளான அநேக திருடர்கள் அவரைக் கொலை செய்யவும் சொத்துக்களைத் திருடவும் எண்ணங்கொண்டு ஒரு நாள் நடுச்சாமத்திற் பெருங் கூட்டமாய் வந்து அவர் வீட்டுத் தெருவாசற் கதவுகளைக் கோடாலியாற் பிளந்தார்கள். அவர்கள் திருடர்களென்று அவருடைய பெண்சாதி தெரிந்துகொண்டு புருஷன் படுத்திருக்கிற இடந் தெரியாமல் மறைத்துவிட்டுப் புருஷனுடைய உடுப்புகளைத் தான் தரித்து ரூபம் மாறிக்கொண்டு திருடர்களுக்கெதிரே போய் “உங்களுக்குப் புதையல் இருக்கிற இடத்தைக் காட்டிவிடுகிறேன்; என்னை உபத்திரவஞ் செய்ய வேண்டாம்” என்று சொல்ல அவர்கள் “புதையலைக் காட்டு! காட்டு” என்று பின் தொடர்ந்தார்கள். அவள் அவர்களை வெகு தூரம் அழைத்துக்கொண்டு போய் ஒரு பெரிய அறைக்குள் நுழைந்து அதில் விரித்திருந்த ரத்னக் கம்பளத்தைத் தூக்கி அதற்கடியில் தரையோடு தரையாகப் பூட்டப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதவைக் காட்டி அதைத் தூக்கி நிமிர்த்தும்படியாகச் சொன்னாள். திருடர்கள் பல பேர் கூடி அந்த இரும்புக் கதவைத் தூக்கி நிறுத்தினார்கள். அதற்கு அடியிலிருந்த படிகளின் வழியாய் அந்த ஸ்திரீயை முன்னே இறங்கச் சொல்லித் திருடர்கள் தீபங்களுடன் பின்தொடர்ந்து போனார்கள். அந்த நிலவறையில் பூட்டப் பட்டிருந்த அநேக இரும்புப் பெட்டிகளைக் காட்டி அவைகளுக்குள்ளாகத் திரவியங்களெல்லாம் இருப்பதாகத் தெரிவித்தாள். அவர்கள் ‘“திறவுகோல் எங்கே?’

என்று கேட்க, அவள் “‘இதோ! ஒரு நொடியிற் கொண்டுவருகிறேன்’” என்று சொல்லி மான் ஓடுவதுபோல் அதிவேகமாய்ப் படிகளில் ஏறி வெளியே வந்து நிறுத்தப்பட்டிருந்த அந்த இரும்புக் கதவைக் காலே எட்டி உதைத்தாள். உடனே அந்தக் கதவு படீரென்று கீழே விழுந்து மூடிக்கொண்டது. அதன் பூட்டை ஒரு நிமிஷத்திலே பூட்டிவிட்டாள். திருடர்களெல்லாம் நில அறைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டார்கள். அவள் உடனே வீட்டுக்கு வெளியே ஓடிவந்து திருடர்களாலே கட்டப்பட்டிருந்த தன்னுடைய வேலைக் காரர்களை அவிழ்த்துவிட்டுக் கொஞ்ச தூரத்திற் குடியிருந்த தன் குடியானவர்களை அழைத்துவரும்படி ஆக்ஞாபித்தாள். அந்தப் பிரகாரம் இருநூறு குடியானவர்கள் வந்து திருடர்களைப் பிடித்துக் கட்டிக் குட்டையில் அடித்தார்கள். பிறகு அவர்களுக்குத் தகுந்த சிக்ஷையும் கிடைத்தது. அந்த ஸ்திரீ அவ்வளவு சாமர்த்தியம் செய்யாவிட்டால் திருடர்கள் அவளுடைய புருஷனையுங் கொன்று சர்வ கொள்ளை அடித்திருப்பார்கள்.

“இன்னும் அநேக ஸ்திரீகள் அந்நிய புருஷர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டு தப்புகிறதற்கு வேறே மார்க்கம் இல்லாமையினால் தங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டும் கிணற்றில் விழுந்தும் கத்திகளாற் கழுத்தை அரிந்துகொண்டும், இவ்வகையாகப் பிராணனைக் கொடுத்துக் கற்பைக் காப்பாற்றினார்களே! புருஷர்களோடு கூட உடன்கட்டை ஏறி மாண்டுபோன பதிவிரதிகளுக்குக் கணக்குண்டா?” என்றேன்.