உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 21

விக்கிமூலம் இலிருந்து


21-ஆம் அதிகாரம்
துஷ்டப் புருஷனைத் திருத்தும் விதம்
அடங்காப் பாரியை அடக்கும் வகை

நான் ஞானாம்பாளைப் பார்த்து “உனக்கு ஒரு துஷ்டப் புருஷன் வந்து வாய்த்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்க, அவள் என்னை நோக்கி, “இதற்குமுன் ஒரு புண்ணியவதி நடந்து வழி காட்டி யிருக்கிறாள்; நானும் அந்தப் பிரகாரம் நடப்பேன்” என்றாள். “அது என்ன?” வென்று கேட்க ஞானாம்பாள் சொல்லுகிறாள்;

“ஒரு தனவானும் அவன் பத்தினியும் ஓர் உயிரும் இரண்டு உடலும் போல ஒருவருக்கொருவர் அதிக நேசமாகவும் பிரியமாகவும் நடந்து வந்தார்கள். கலியாணமாகிப் பத்து வருஷம் வரைக்கும், இவர்களைப் போல ஸ்திரீ புருஷர்கள் உண்டாவென்று யாவரும் சொல்லும்படியாகவும் அவ்வளவு அந்நியோன்னியமாகவும் மைத்திரமாகவும் வாழ்ந்தார்கள். பிற்பாடு சில துஷ்டர்களுடைய சகவாசத்தால் அந்த தனவானுடைய புத்தி மாறி, ஒரு சோர ஸ்திரீயினிடத்தில் ஸ்நேகம் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய ஸ்நேகம் அதிகரிக்க அதிகரிக்க, பத்தினியிடத்தில் அவனுக்கிருந்த பிரியம் குறையத் தலைப்பட்டது. அவன் போஜனத்துக்கு மட்டும் வீட்டுக்கு வருவதே தவிர மற்ற நேரமெல்லாம் வைப்பாட்டி வீடே அவனுக்கு வாசஸ்தலமாய்விட்டது. ‘வேண்டாப் பெண்ணாட்டி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம்’ என்பதுபோல் வைப்பாட்டியினுடைய கோளைக் கேட்டுக்கொண்டு, சொந்தப் பெண்சாதியைத் தாறுமாறாக நடத்தவும் ஆரம்பித்தான். அவன் என்ன கொடுமை செய்தாலும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு அவனுடைய பிரியத்தைப் பொறுமையினாலும் வணக்கத்தினாலும் மறுபடியும் சம்பாதிக்க அவளாற் கூடியமட்டும் பிரயாசைப்பட்டும் அநுகூல சித்தியாகவில்லை. பிற்பாடு அந்த உத்தமி கடவுளே கதியென்று அவரிடத்திலே சகல நம்பிக்கையும் வைத்து புருஷன் வரும்போது அவனுடைய பணிவிடைகளில் ஒரு குறைவும் இல்லாமல் சர்வ சாக்கிரதையாய் நடந்து வந்தாள்.

““புருஷனுக்கும் பெண்சாதிக்கும் ஒரு சம்பந்தமுமில்லாமல் செய்துவிட வேண்டுமென்று அவனுடைய வைப்பாட்டி கருதி, அவள் மேலே இல்லாத தோஷங்களையெல்லாம் உண்டுபண்ணிச் சொன்னதுந் தவிர அந்தப் பதிவிரதையினுடைய கற்புக்கும் பழுது சொல்ல ஆரம்பித்தாள். அதை அவன் நம்பவில்லையென்று கண்டு அவனுக்கு நம்பிக்கை உண்டாகும்படியாக அந்தச் சோர ஸ்திரீ அபாண்டமான கற்பனை செய்யத் தொடுத்தாள். எப்படியென்றால் அந்த உத்தமி கள்ளப் புருஷர்களுக்குக் கடிதம் எழுதி அவர்கள் அதற்குப் பதில் எழுதினதுபோல அந்த சோர ஸ்திரீ இரண்டு கடிதங்களை உற்பத்தி செய்து அதை அந்த உத்தமியினுடைய வேலைக்காரி கையிற் கொடுத்து அவளுடைய மேசைக்குள்ளாக வைத்துவிடும்படி ஜாக்கிரதை செய்தாள். அந்த வேலைக்காரி தன்னுடைய எஜமானிக்குத் துரோகஞ் செய்யமாட்டேனென்று முந்தி ஆக்ஷேபித்தாலும் பின்பு பணப்பிசாசின் ஏவுதலால் அந்தக் கடிதங்களைத் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்துவிட்டாள். இது நடந்த பிற்பாடு அந்தச் சோர ஸ்திரீ அந்த தனவானைப் பார்த்து “உங்களுடைய பெண்சாதி மேலே தோஷஞ் சொன்னால் நீங்கள் நம்புகிறதில்லை. உங்கள் கௌரவத்திற்குக் குறைவு வரக்கூடாதென்று நான் சொல்லுகிறேனே தவிர எனக்கு ஏதாவது லாபமுண்டா? உங்கள் பத்தினியும் அவளுடைய சோர நாயகனும் ஒருவர்க்கொருவர் அடிக்கடி கடிதம் எழுதிக் கொள்வதாகவும் கேள்விப்படுகிறேன். அவளுடைய பெட்டி முதலானவைகளைச் சோதித்தால் கடிதங்கள் அகப்பட்டாலும் அகப்படலாம். நீங்கள் எப்படியாவது உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றாள். உடனே அந்தத் தனவான் “நீ யார் மூலமாய்க் கேள்விப்பட்டாய்?” என, அந்தத் துஷ்டை “நான் அவர்களை இப்போது காட்டிக் கொடுக்க மாட்டேன். நீங்கள் உங்கள் வீட்டைப் பரிசோதித்துப் பாருங்கள்” என்றாள்.

“அவன் இதையும் நம்பாமல் போஜனத்துக்காகத் தன் வீட்டுக்குப் போனான். அவன் போஜனஞ் செய்தபிற்பாடு அவனுடைய பத்தினி வந்து உள்ளூரிலிருக்கிற தன்னுடைய தகப்பனார் வியாதியாயிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் அவரைப் போய்ப் பார்த்துக்கொண்டு உடனே திரும்பி வருவதாகவும் சொல்லி உத்தரவு கேட்டாள். அவள் போனபிற்பாடு அவளுடைய பெட்டியைச் சோதிக்கும்படி வைப்பாட்டி சொன்னது ஞாபகத்துக்கு வந்து அவன் உடனே பெட்டியைத் திறந்து பார்வையிட்டான். அதில் அந்த இரண்டு கற்பனைக் கடிதங்களும் அகப்பட்டன. அவைகளை அவன் படித்துப் பார்த்தவுடனே, பெண்சாதி மேலே கோபாக்கினி மூண்டுவிட்டது. அவள் அந்தச் சமயத்தில் இருந்திருப்பாளானால் தப்பாமற் பிராணாபாயம் சம்பவித்திருக்கும். அந்தக் கடிதங்களில் ஒன்றில் அன்றைய தினம் இராத்திரி பத்து மணிக்குக் கள்ளப் புருஷன் தன் பெண்சாதியிடத்தில் வருவதாக எழுதியிருந்தபடியால் அவனும் வந்த பிற்பாடு இருவரையும் ஒரே முகூர்த்தத்திலே கொன்றுவிடுகிறதென்று நிர்ணயித்து, தன்னுடைய கோபத்தையும் அடக்கிக் கொண்டிருந்தான் தகப்பனாரைப் பார்க்கப் போயிருந்த அவனுடைய பாரி அஸ்தமிக்கிற சமயத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அவளை அவன் வாயில் வந்தபடி நிஷ்காரணமாய்த் தூஷித்துக் கொண்டிருந்தான். சில நாளாய்த் தூஷிப்பது அவனுக்கு வழக்கமாயிருந்தபடியால் அவள் எதிர்வார்த்தை ஒன்றுஞ் சொல்லாமல் மௌனமாயிருந்தாள். அவன் இராப் போசனஞ் செய்த பிற்பாடு, வழக்கப்படி, வைப்பாட்டி வீட்டுக்குப் போகிறவன் போலப் புறப்பட்டு வெளியே போய், சற்று நேரம் கண்மறைவாயிருந்து ஒன்பது மணி நேரத்திற்கு ஒருவருக்குந் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்துக்குள்ளாக வந்து படுக்கை அறைப் பலகணி ஓரத்தில் நிறுத்தப் பட்டிருந்த வண்டிக்குள்ளாக நுழைந்து ஆயுதபாணியாய் உட்கார்ந்திருந்தான். இந்த இடம் எந்தப் பக்கத்திலிருந்து யார் வந்தாலும் தெரியக்கூடியதாகவும், அறைக்குள்ளாக என்ன நடந்தாலும் பார்க்கக் கூடியதாகவும் இருந்தது. அந்த அறையிலிருந்த கடிகாரம் பத்து மணி அடித்ததை இவன் கேட்டவுடனே கள்ளப் புருஷன் வருவானென்று நாலு பக்கத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவரும் வரவில்லை. அந்தக் கடிகாரம் பதினோரு மணியும் அடித்தது. அப்போதும் ஆண்பிள்ளை யென்கிற காற்றுக்கூட வீசவில்லை. அவனுடைய பத்தினியோ வென்றால் அவன் வெளியே போன நிமிஷமுதல் அந்த படுக்கை அறைக்குள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்க் கடவுளை ஜபித்துக்கொண்டிருந்தாள். அவள் இருந்த கோலத்தைப் பார்த்தால் தெய்வ பக்தி மேலிட்டு தேக பரவசமாக இருந்தாளே தவிர கள்ளப் புருஷனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவளாகக் காணப்படவில்லை.

அவள் நெடுநேரம் தியான நிஷ்டையில் இருந்தபின்பு நித்திரை செய்து கொண்டிருந்த தன் பிள்ளையை எழுப்பிச் சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்; அந்தப் பிள்ளை சாப்பிடும்போது, ‘“ஏன், அம்மா அழுகிறீர்கள்?’” என்று கேட்க, அவள் ஒன்றுஞ் சொல்லாமலே சாதம் ஊட்டினாள். அந்தப் பிள்ளை மறுபடியும் சும்மா இராமல் “ஐயா போய்விட்டார்களென்றோ அழுகிறீர்கள்? அவர்கள் தான் உங்களை அடிக்கடி திட்டுகிறார்களே! அவர்கள் போனால் போகட்டுமே! நம்மை இரக்ஷிக்கிறதற்கு என் பாட்டனார் ஆகிய உங்கள் ஐயா இல்லையா?‘ மாமா இல்லையா?” என்றது. அவள் உடனே பிள்ளையைப் பார்த்து, “‘அப்படி எல்லாம் பேசாதே; உன்னுடைய ஐயா போய்விட்டால் நம்மை ஒருவருந் தாங்க மாட்டார்கள்; உன்னுடைய ஐயா ஒரு குறைவுமில்லாமல் க்ஷேமமாயிருக்க வேண்டுமென்று சுவாமியைப் பிரார்த்தனை செய்” என்றாள். இதைக் கேட்டவுடனே வண்டியிலிருந்தவனுடைய மனம் இளகவும், அவனுடைய கண்ணில் ஜலம் பெருகவும் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளை சாப்பிட்டு முடிந்தவுடனே, வேலைக்காரி அந்த அறைக்குள் ஏதோ காரியமாக வந்து நுழைந்தாள். அவளைக் கண்டவுடனே அந்தப் பிள்ளை தன் தாயாரைப் பார்த்து, “இவள் நேற்றைய தினம் உங்களுடைய பெட்டியைத் திறந்தாள். நான் வெளியே இருந்து சன்னல் வழியாய்ப் பார்த்தேன்” என்றது. அவள் “நான் பெட்டியைத் திறக்கவே யில்லை” என்றாள்; உடனே அந்தப் பிள்ளை “நீ பெட்டியைத் திறக்கவில்லையா? ஏதோ சில கடிதங்களை அந்தப் பெட்டிக்குள் வைக்கவில்லையா?” என்றது. இதைக் கேட்டவுடனே அவளுடைய மனோசாட்சியும் குற்றஞ் சாட்ட ஆரம்பித்தபடியால் முன்னுக்குப் பின் விரோதமாக வாயில் வந்தபடி உளறினாள். அவளுடைய தலைவிக்குக் கடித விஷயமொன்றுந் தெரியாதானபடியால் காசு திருடத் திறந்திருப்பாளென்று நினைத்து “இனிமேல் நீ பெட்டியைத் திறந்தால் உன்னுடைய வேலையை இழந்துபோவாய்! ஜாக்கிரதையாயிரு” என்று கண்டித்தாள். கொலைக்கு ஆயத்தமாக வண்டியிலிருந்த தலைவன் இந்தச் சம்பாஷணைகளையெல்லாம் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் ஓடவும் அவனுடைய கத்தி உறைக்குள் நுழையவும் ஆரம்பித்தது. ஆயினும் உண்மையை நன்றாக அறியவேண்டுமென்று அவன் சப்தப்படாமல் வண்டியை விட்டுக் கீழே குதித்து அந்தத் தோட்டத்தில் ஒரு மூலையிலே தனிமையாயிருந்த வேலைக்காரி வீட்டுக்குப் போனான். அவள் அப்போது தான் உள்ளே நுழைந்து அந்தப் பிள்ளையால் வெளியான துன்மார்க்கத்தை நினைத்து நினைத்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எசமான் அவளைக் கண்டவுடனே, கத்தியை உருவிக்கொண்டு “‘நீ ஏன் என் பெண்சாதிப் பெட்டியைத் திறந்தாய்? உண்மையைச் சொல்லாவிட்டால் இந்தக் கத்திக்கு இரை யாவாய்!”’ என்று பயமுறுத்தினான். அவள் உடனே கீழே விழுந்து அவனுடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு அவனுடைய வைப்பாட்டி இரண்டு கடிதங்களைக் கொடுத்ததாகவும் அவைகளைத் தான் தன்னுடைய தலைவியின் பெட்டியில் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டாள். இதனைக் கேட்டவுடனே அவனுடைய சந்தேகம் நிவாரணமாகி பத்தினியிடம் போய் அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு நடந்த காரியங்களையும் தான் அவளைக் கொல்ல நினைத்ததையும் சொன்னான். உடனே ஸ்திரீ புருஷர்கள் சமாதானமாகி முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகப் பிரீதியாய் வாழ்ந்தார்கள். அன்று முதல் அந்தத் தனவான் சோர நாயகியினுடைய ஸ்நேகத்தை விட்டுவிட்டான். அந்தப் பதிவிரதாசிரோமணியைப் போல நற்குணங்களாலும் தெய்வ பக்தியினாலும் புருஷனுடைய பிரியத்தைச் சம்பாதிக்கப் பிரயாசைப்படுவதே உத்தமம்”” என்றாள்.

பிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களுக்கு ஒரு கெட்ட பெண்சாதி வாய்த்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?ரு என்று கேட்டாள். “அவளை என்னாலே கூடியவரையில் சாந்தமாகவும் நயமாகவும் பேசித் திருத்தப் பிரயாசைப்படுவேன். அவள் திருந்தாமல் முரட்டுத்தனஞ் செய்வாளானால் அரபி தேசத்து ஆயிரம் இராத்திரிக் கதைகளில் ஒன்றிற் சொல்லுகிற பிரகாரஞ் செய்வேன்” என்றேன். அந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்லவேண்டுமென்று ஞானாம்பாள் கேட்க நான் சொல்லத் தொடங்கினேன்.

”ஒரு ஆஸ்திவந்தனான வியாபாரிக்கு நாட்டுப்புறத்தில் அனேக வீடுகளும் கால்நடைகளும் இருந்தன. அவன் குடும்ப சகிதமாக ஒரு கிராமத்துக்குப் போய், அவ்விடத்திலே சில நாள் வசித்தான். அவனுக்கு மிருகங்களின் பாஷை நன்றாகத் தெரியும். ஆனால் அதை வெளிப்படுத்தினால் அவன் இறந்துபோவானென்கிற ஒரு சந்தேகமுமிருந்தது. ஒரு நாள் ஒரு காளை மாடும் கழுதையும் கட்டபட்டிருந்த கொட்டத்துக்குச் சமீபத்தில் அந்த வியாபாரி உட்கார்ந்திருந்தான். அப்போது அந்தக் காளைமாடு கழுதையைப் பார்த்து யுஎன்னைப் பகல் முழுதும் ஏரிலே கட்டிக் கொல்லுகிறார்கள்; நீ அதிர்ஷ்டசாலியானதால் சௌக்கியத்தை அனுபவிக்கிறாய்ரு என்று முறையிட்டது. யுஇனி மேல் என்னை ஏரிலே கட்டவந்தால் கழுத்தைக் கொடாமல் முட்டித் தள்ளுரு என்று மாட்டுக்குக் கழுதை துர்ப்போதனை செய்தது. அந்தப் படி மறுநாட் காலையில் மாடு வசப்படாமல் முரட்டுத்தனஞ் செய்தபடியால் அதைப் பற்றி வேலைக்காரன் எசமானுக்குத் தெரிவித்தான்.

“முந்தின நாள் கழுதை செய்த உபதேசம் எசமானுக்குத் தெரியுமானதால் மாட்டுக்குப் பதிலாகக் கழுதையை ஏரிலே கட்டி உழும்படி ஆக்ஞாபித்தான். அந்தப் படி கழுதை அன்றையத் தினம் ஏரிலே கட்டப்பட்டு அது பட்டபாடு சாமானியம் அல்ல. கழுதை பாதிப் பிராணனுடன் அஸ்தமனத்துக்குக் கொட்டத்துக்கு வந்தவுடன் மாட்டைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு யுநாளைத் தினம் நீ என்ன செய்யப்போகிறாய்?ரு என்று கேட்க யுஇன்றைத் தினஞ் செய்ததுபோலவே நாளைத் தினமும் செய்யப்போகிறேன்ரு என்று மாடு சொல்ல உடனே கழுதை யுஅப்படிச் செய்யாதே; ஏனென்றால் எசமான் நீ வியாதியாயிருப்பதாக உன்னைக் கொன்றுவிடும்படி ஆளுக்கு உத்தரவு கொடுத்ததை நான் காதினாலே கேட்டேன். நாளைத் தினம் உன்னை நீ ஏரிலே கட்டும்போது நீ முரட்டுத்தனஞ் செய்யாமலிருந்தால் பிழைத்தாய்; அப்படியில்லாமல் சண்டித்தனஞ் செய்வாயானால் உன் பிராணம் உனக்குச் சொந்தமல்ல.ரு என்றது.

இதை வியாபாரி கேட்டுக் கொண்டிருந்ததால் அவனுக்குப் பெருஞ்சிரிப்பு வந்து விட்டது. அப்போது கூட இருந்த அவன் பத்தினி யுஏன் சிரிக்கிறீர்கள்?ரு என்று கேட்க யுமாடும் கழுதையுஞ் செய்துகொண்ட சம்பாஷணையைக் கேட்டுச் சிரித்தேன். அதை உனக்குச் சொன்னால் என் பிராணன் போய்விடும்ரு என்றான். அவள் யுநீங்கள் அதனைச் சொல்லாவிட்டால் என் பிராணன் போய்விடும்ரு என்று சொல்லி அன்ன ஆகாரமில்லாமல் ஒரு அறைக்குள்ளே போய்ப் படுத்துக்கொண்டு அழுதாள். புருஷன் என்ன நியாயஞ் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவளுடைய தாய் தகப்பன் முதலானவர்கள் வந்து அவர்களாலே கூடிய வரையில் புத்தி சொல்லியும் அவள் கேளாமற் பிடிவாதஞ் செய்தாள். அப்போது அந்த வீட்டிலிருந்த ஒரு சேவலும் ஐம்பது பெட்டைக் கோழிகளும் கூடிக் கொஞ்சிக் குலாவிக்கொண்டு திரிவதைப் பிரமாணிக்கமுள்ள ஒரு நாய் பார்த்து யுசேவலே1 சேவலே! நம்முடைய எசமானியும் எசமானிச்சியும் மனஸ்தாபக் கொண்டு வருத்தப் படுகிற காலத்தில் நீ உன் பெண்சாதிகளுடனே கூடிக் கொண்டு கொட்டம் அடிக்கிறாயே! இது அழகா?ரு என்று கேட்க, அந்தச் சேவல் நாயைப் பார்த்து யுநம்முடைய எசமான் முழுமூடன். ஒரு பெண்சாதியை அடக்கி ஆள அவனுக்குத் திறமையில்லை. நான் ஐம்பது பெண்சாதிகளை அடக்கி ஆளவில்லையா? எசமான் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு கழியை எடுத்துக்கொண்டு பெண்சாதிக்குத் தகுந்தபடி பூஜை கொடுத்தால் அவள் உடனே அடங்குவாள்ரு என்று சொல்லிற்று. அதைக் கேட்டுக்கொண்டிருந்த எசமான் நல்ல உபாயமென் றெண்ணி, ஒரு பெரிய கழியை எடுத்துக்கொண்டு பெண்சாதி படுத்துக்கொண்டிருந்த அறைக்குள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டு மர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தான். அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது போல், உடனே பெண்சாதிக்குப் புத்தி வந்தது. அவளுடைய பிடிவாத துர்க்குணத்தை விட்டுவிட்டாள்” என்றேன்.

இந்தக் கதையைக் கேட்டவுடனே ஞானாம்பாள் சிரித்த சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கும் சிரிப்பு வருகிறது.