உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 22

விக்கிமூலம் இலிருந்து


22-ஆம் அதிகாரம்
பிறவாக் குழந்தையை ஸ்வீகாரம் கேட்டுப்
பிரமாதம் விளைதல்


முந்தின அதிகாரத்திற் சொல்லியபடி ஞானசல்லாபங்களிலும் கிருகஸ்தாச்சிர தர்மங்களிலும் சந்தோஷமாகக் காலம் போக்கிக் கொண்டு வந்தோம். கலியாணத்துக்கு முன்பு பிடாரியைப் பிடித்துத் தள்ளினாலும் போகாமலிருந்த காலம் இப்போது வாயு வேகம் மனோ வேகமாக ஓடத் தலைப்பட்டது. கலியாணத்துக்குப் பின்பு ஒன்றரை வருஷம் ஒன்றரை நிமிஷம்போற் பறந்துவிட்டது. நாங்கள் இரண்டாவது தடவை சம்பந்தி முதலியார் வீட்டில் இருக்க வேண்டிய ஆறு மாசமும் கடந்துபோய் விட்டதால் ஞானாம்பாளை என் வீட்டுக்கு வரும்படி உத்தரவு செய்து நான் முந்திப் போய்விட்டேன். அதற்குச் சற்று நேரத்துக்குப் பின்பு சம்பந்தி முதலியார் என் தகப்பனாரிடத்திற்கு வந்து “ஞானாம்பாள் கர்ப்பவதியாயிருப்பதாக அவளுடைய தாயார் சொல்லுகிறாள். அவளுக்கு முதற் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறக்கு மென்று, அவளுடைய ஜாதகத்தில் எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் பிள்ளையை எனக்கு நீர் ஸ்வீகாரம் கொடுக்கவேண்டும்; அதற்கென்ன சொல்லுகிறீர்?” என்றார். என் தகப்பனார் சிரித்துக்கொண்டு “கர்ப்பமே நிச்சயமென்று தெரியவில்லை; அது நிச்சயமாயிருந்தாலும் ஆண் பிள்ளைதான் பிறக்குமென்று எப்படி நிச்சயிக்கக் கூடும்? பின்னும் ஜேஷ்டபுத்திர ஸ்வீகாரமும் புத்திரிகா புத்திரி ஸ்வீகாரமும் செல்லாதென்று தர்மசாஸ்திர வசனமும் இருக்கின்றதே” என்றார். சம்பந்தி முதலியார் என் தகப்பனாரைப் பார்த்து “உம்மை நான் தர்ம சாஸ்திரம் கேட்கவில்லை. நீர் அந்தப் பிள்ளையை ஸ்வீகாரம் கொடுப்பீரா? மாட்டீரா? இரண்டிலொன்று சொல்லும்” என்றார். உடனே என் தகப்பனார் “எனக்குப் பௌத்திரன் வேண்டாமா? உமக்கெப்படி ஸ்வீகாரம் கொடுப்பேன்?” என்றார். இதைக் கேட்டவுடனே சம்பந்தி முதலியாருக்கு ஆக்கிரம் உண்டாகி, அவர் வீட்டுக்குப் போய் “ஞானாம்பாளைக் கூப்பிட்டு “உனக்கு நான் வேண்டுமா? புருஷன் வேண்டுமா?” என்று கேட்க, அவள் “இருவரும் தான் வேண்டும்” என்றாளாம். “இருவரிலும் யார் விசேஷம்?” என்று அவர் மறுபடியும் கேட்க அவள் புருஷன் தான் விசேஷமென்று நேரே உத்தரவு சொன்னால் தகப்பனாருக்குக் கோபம் வருமென்று நினைத்து “என் தாயாருக்குத் தன் தகப்பனாரைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷமல்லவா?” என்று வினயமாகவும் மறை பொருளாகவும் மறுமொழி சொன்னாள். அதற்குச் சற்று நேரம் அவருக்குப் பயன் தெரியாமலிருந்து பிற்பாடு தெரிந்துகொண்டு ஞானாம்பாளை வாயில் வந்தபடி தூஷித்து “இனி மேல் நீ உன் புருஷன் வீட்டுக்குப் போவதைப் பார்க்கலாம். அவனும் இங்கே வருவதைப் பார்க்கலாம்” என்று சொன்னாராம். தூஷணியான வார்த்தைகளை அவள் கேளாதவளானபடியால் உடனே நடுக்கலும் சுரமும் கண்டு கர்ப்பத்துக்கு அபாயம் வந்துவிட்டது.
இந்தச் செய்திகளெல்லாம் என் தகப்பனார் கேள்விப்பட்டு அவர் என்னை அழைத்து “உனக்குத் தகப்பன் வேண்டுமா? பெண்சாதி வேண்டுமா?” என, நான் “இருவரும் தான் வேண்டும்” என்றேன். அவர் “அது கூடாது; நான் வேண்டுமானால் உன் பாரியைத் தள்ளி விட வேண்டும்” என்றார். நான் என் தகப்பனாரைப் பார்த்து “பிதுர் வாக்கியம் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் ஒத்திருக்கிற பக்ஷத்தில் நான் அந்தப்படி நடக்கவேண்டியது தான். சகல சாஸ்திரங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும் விரோதமாகவும் நிஷ்காரணமாகவும் என் பாரியைத் தள்ளிவிடும்படி சொல்கிறீர்கள். அந்த உத்தரவை நான் எப்படி அனுஷ்டிக்கக் கூடும்?” என்றேன். உடனே அவருக்குக் காலாக்கினி போல் கடுங் கோபமுண்டாகி “அடா! பயலே! இதற்குத் தானா உன்னை நான் பெற்றேன்? வளர்த்தேன்? நேற்று வந்தவளைப் பொருளாயெண்ணி என்னை அலக்ஷியஞ் செய்தாயே! இனி மேல் அவளும் இங்கே வரக் கூடாது. நீயும் அங்கே போகக் கூடாது. இனி நீ அவளிடத்தில் பேசினால் எனக்கு நீ பிள்ளையுமல்ல; நான் உனக்குத் தகப்பனுமல்ல; என்னுடைய ஆஸ்தியும் உனக்கு நாஸ்தி தான்” என்றார். இதைக் கேட்டவுடனே எனக்கு எவ்வளவு துயர முண்டாயிருக்குமென்பதை இதை வாசிக்கிறவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமே யல்லாது அதை விவரிக்க நான் சக்தியுள்ளவனல்ல. இப்படிப்பட்ட வார்த்தைகளை இதற்குமுன் ஒரு நாளும் நான் கேட்டதில்லையாதனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாணம் போல் என் இருதயத்தைப் பிளந்தது. சம்பந்தி முதலியார் வீட்டுக்கு நானும் போகக் கூடாது. என் வீட்டுக்கு ஞானாம்பாளும் வரக்கூடாதென்று சம்பந்தி முதலியாரும் என் தகப்பனாரும் ஆணையிட்டு மறித்தபிற்பாடு இனி மேல் அவளை எப்போது காணப்போகிறோம் என்று நான் துக்காக்கிரனாயிருக்கும் போது என் தாயார் பரிதாப முகத்துடன் என்னிடம் வந்தார்கள்.

அவர்களைக் கண்டவுடனே “அம்மா! நடந்த சங்கதிகளை எல்லாம் கேள்விப்பட்டீர்களா?” என்று சொல்லி அழுதேன். அவர்களும் சற்று நேரம் என்னுடன்கூட விசனப்பட்ட பிற்பாடு என் கண்ணீரைத் துடைத்துச் சொல்லுகிறார்கள்: “அப்பா! நீ கிலேசப்பட வேண்டாம்; பெரியவர்களா யிருக்கிறவர்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் கோபம் வருகிறதும் பிற்பாடு தணிகிறதும் வழக்கம் தான். இப்போது உன் தந்தையார் ஏதோ சொன்னார்களென்று துக்கிக்க வேண்டாம். நீ பிறந்தது முதல் இந்நாள் மட்டும் உன்னை உயிருக்கு உயிராய் வளர்த்தவர்கள் இப்போது கோபமாய் ஒரு வார்த்தை சொன்னால் அதற்காக மனஸ்தாபப் படலாமா? அதற்குமுன் அவர்கள் செய்த நன்மையை மறந்து விடலாமா? அவர்கள் கோபத்திலே சொன்ன வார்த்தைகளை யெல்லாம் நிசமென்று நீ மனம் வருந்தாதே. ஞானாம்பாளை நீ சீக்கிரத்தில் பார்ப்பாய்” என்று பலவிதமாக என் தாயார் எனக்குத் திடஞ்சொன்னார்கள். அவர்கள் என் கூட இருந்த வரையில் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாகவிருந்தது. அவர்கள் போனவுடனே அந்த ஆறுதலும் போய்விட்டது. என்னுடைய வியாகுலத்தை அதிகப்படுத்துவதற்கு இன்னொரு காரணமும் கூடச் சேர்ந்தது. அஃது என்னவென்றால் சம்பந்தி முதலியாருக்கும் என் தகப்பனாருக்கும் உண்டான சண்டை நிமித்தம் ஞானாம்பாளுக்கு வியாதி அதிகரித்து, அவளுடைய கர்ப்பமும் அழிந்து போனதாக நான் கேள்விப்பட்டு, வேல் தொளைத்த புண்ணிலே கொள்ளிக் கட்டையைச் சொருகினது போல் பெருந்துயரத்தை அடைந்தேன். அந்தச் சண்டைக்குக் காரணமாயிருந்த கர்ப்பம் அழிந்துபோயும் அதனால் விளைந்த கலகம் தீரவில்லை. குதிரை தூக்கிப் போட்டதுமில்லாமல் மேலே ஏறியும் மிதித்ததுபோல், என் தகப்பனார் மறுபடியுஞ் சும்மா இராமல் எனக்கு வேறே பெண் விசாரித்துக் கலியாணம் செய்விக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டதாக நான் கேள்விப்பட்டு இப்படிப்பட்டவர்களுடைய முகத்தில் விழிக்காமல், ஞானம்பாளையும் அழைத்துக்கொண்டு எங்கேயாவது போய்விடலாமென்கிற எண்ணம் உண்டாயிற்று. ஆனால் ஞானாம்பாள் வியாதியாயிருப்பதினாலே, அவளை அழைத்துக் கொண்டு போவது தகுதியல்லவென்றும் நான் முந்திப் போய் ஒரு இடத்தில் நிலைத்திருந்துகொண்டு பிற்பாடு அவளை அழைத்துக்கொள்ளலாமென்றும் எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் அவளுக்குத் தெரிவிக்காமற் போனால் அவளுடைய வியாதி அதிகரிக்குமென்று பயந்து சகல விவரங்களையும் ஒரு அந்தரங்கக் கடிதம் மூலமாக அவளுக்குத் தெரிவித்தேன். அதற்கு உடனே மறுமொழி அனுப்பினாள். அதில் நான் தேசாந்தரம் போகக் கூடாதென்றும் , சில விசை நான் தேசாந்தரம் போகிற பக்ஷத்தில் தன்னையும் அழைத்துக்கொண்டு போகவேணுமென்றும் எழுதியிருந்தாள். நான் அவளை அழைத்துக்கொண்டு போவதற்குள்ள அசந்தர்ப்பங்களை விவரித்து இரண்டாவது கடிதம் அனுப்பினேன். அதற்கு ஒரு பதிலும் வராதபடியால் நான் சொன்ன நியாயங்களை அவள் ஏற்றுக்கொண்டாளென்று ஊகித்துக் கொண்டேன். அவளுக்கு நான் புறப்படப் போகிற தினத்தையும் தெரிவிக்கவில்லை.