பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 23

விக்கிமூலம் இலிருந்து


23-ஆம் அதிகாரம்
பிரதாப முதலியார் பிரயாணம்—பிரிந்தவர்
கூடல்—இரண்டு தாரக்காரன் பட்டபாடு

அத்தியாயம் - 23 ஒருநாள் இராத்திரி எல்லாரும் தூங்குகிற சமயத்தில் எனக்கு விசுவாசமுள்ள இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வழிக்கு வேண்டிய சாமான்களையும் எடுத்துக்கொண்டு, எங்களுக்குச் சொந்தமான ஒரு யாத்திரை வண்டியின் மேலேறிக் கொண்டு கிழக்கு ரஸ்தா வழியாகப் பிரயாணம் புறப்பட்டேன். எல்லாரும் தாங்கள் போகிற ஊரை நிச்சயித்துக் கொண்டு அந்த ஊருக்குப் போகிற மார்க்கமாய்ப் போவார்கள். நான் இன்ன ஊருக்குப் போகிறதென்ற நிச்சயமில்லாமல் கிழக்கு ரஸ்தாவைப் பிடித்துக்கொண்டு அதி துரிதமாய்ப் போனேன். நான் போகும்போது என்னுடைய தேகம் மட்டும் கூட வந்ததே தவிர என் மனம் கூடவராமல் என் தாயாரிடத்திலும் ஞானாம்பாளிடத்திலும் தங்கிவிட்டது. வழியில் என்ன அதிசயமென்று யாராவது கேட்டால் எனக்கு இன்னதென்று தெரியாது. மறுநாள் மத்தியான்னம் எங்கே தங்கியிருந்தோம், என்ன ஆகாரம் செய்தோமென்பதை வேலைக்காரர்களைக் கேட்கவேண்டுமே தவிர எனக்கு யாதொன்றும் தெரியாது; என் பிராணன் மனம் முதலியவைகளை யெல்லாம் சத்தியபுரியில் வைத்து விட்டு, நான் ஒரு சஞ்சாரப் பிரேதம் போல் சென்றேன். அன்றையத் தினம் ஐந்து காதவழி நடந்து இராத்திரிப் பத்து மணிக்கு நல்லூர் என்னும் கிராமத்தை அடைந்தோம். அந்த ஊரில் சத்திரத்தில் ஒரு தனிமையான இடத்தில் பஞ்சணையை விரித்துப் படுத்துக்கொண்டேன். என்னுடைய வேலைக்காரர்கள் சமையல் செய்வதற்காகப் போய் விட்டார்கள். நான் முகம் மறைய முக்காடிட்டுப் படுத்துக்கொண்டு இனி மேல் ஞானாம்பாளைப் பார்க்கும்படி யாயிருக்குமோ, அல்லது அவளைப் பார்க்கக்கூடாதென்று என் பிதா சொன்ன வாக்கியமே நிறைவேறிப் போகுமோ என்று மனங் கலங்கி எண்ணாததெல்லாம் எண்ணிக்கொண்டு படுத்திருந்தேன். நான் படுத்த சற்று நேரத்துக்குப் பின்பு யாரோ வந்து என்னைத் தட்டினார்கள். நான் என்னுடைய முக்காட்டைத் திறந்து பார்க்க ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இது கனவோ அல்லது உருவெளித் தோற்றமோ என்று நான் மயங்கிக் கொண்டிருக்கையில், அவளுடைய கண்ணீர்ப் பிரவாகம் என் முகத்தின்மேல் விழுந்து என் மயக்கத்தைத் தெளிவித்தது. உடனே அவள் என்னைத் தழுவிக்கொண்டு,“ “நான் உங்களுக்கு என்ன அபராதம் செய்தேன்? என் முகத்தில் விழிக்காமல் வந்து விட்டீர்களே”” என்று கண்ணீர் விட்டுப் பொருமினாள். நானும் சற்று நேரம் கண் கலங்கின பிற்பாடு அவளைப் பார்த்து “””நான் இன்றையத்தினம் புறப்படுகிறேனென்பதும், இந்த வழியாய்ப் போகிறேனென்பதும் உனக்கெப்படித் தெரியும்? நீ இவ்வளவு தூரம் எப்படி வந்தாய்?””” என்று கேட்க அவள் சொல்லுகிறாள்: ””“நீங்கள் பிரயாணம் புறப்படுகிறது நிச்சயமென்று, உங்கள் கடிதங்களால் அறிந்து கொண்டேன். நீங்கள் எங்கே போனாலும் உங்களுக்குப் பிரியமான ஊழியக்காரர் களாகிய கந்தசாமி, வினைதீர்த்தான் இவர்களைக் கூட அழைத்துக்கொண்டு போவீர்களென்பதும், எனக்குத் தெரியும். அவர்களுடைய பெண்சாதிகள் எனக்குத் தாதிகளானதினாலே அவர்களுடைய புருஷர்களை விசாரித்து, நீங்கள் புறப்படுகிற நிச்சயமான தினத்தை அறியும்படி சொல்லியிருந்தேன். நீங்கள் உங்களுடைய பெண்சாதிக்கு உண்மையை மறைத்தாலும் உங்களுடைய வேலைக்காரர்கள் அவர்களுடைய பெண்சாதிகளுக்கு உண்மையை மறைக்கவில்லை. ஆகையால் அவர்கள் மூலமாக நீங்கள் புறப்படுகிற தினத்தைத் தெரிந்துகொண்டு நானும் புறப்படுகிறதற்கு முஸ்திப்பாயிருந்தேன். என்னுடைய தாதிகளும் தங்கள் புருஷர்களைப் பிரிந்திருக்க மனமில்லாதவர்களாய்த் தங்களை அழைத்துக்கொண்டு போகும்படி பிரார்த்தித்தார்கள். அவர்களும் நானும் புறப்பட்டுச் சற்று நேரத்திற்குப் பின்பு ஒருவருக்குந் தெரியாமல் ஒரு பண்டியின் மேலே ஏறிக்கொண்டு உங்களுடைய கண்ணிலே படாமல் கொஞ்சதூரம் பின்னிட்டு உங்களுடைய பண்டியைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்ந்தோம்”” என்றாள்.

ஞானாம்பாளைக் கண்டவுடனே சூரியனைக் கண்ட பனி போல என்னுடைய துக்கமெல்லாம் விலகிவிட்டது. ஆனால் அவள் வியாதிப்பட்டு மெலிந்திருந்தபடியால் ““இப்படிப்பட்ட பலவீன ஸ்திதியில் நீ யாத்திரை செய்யக் கூடுமா?”“ என்று கேட்டேன். அவள் தனக்குப் பூரண சௌக்கியமாய்விட்டதால் யாத்திரை செய்யலாமென்று சொன்னாள். நான் அவளைப் பார்த்து ““என்னை நீ கலியாணஞ் செய்த நிமித்தம் உன்னுடைய உற்றார் பெற்றோரையும் சகல சுகங்களையும் இழந்து வனாந்தரத்தில் சஞ்சரிக்கும்படி நேரிட்டதே!“” என்றேன். அவள் என்னைப் பார்த்து ““நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லுகிறீர்கள்! என்னாலே தான் உங்களுக்கு இப்படிப்பட்ட கதி வாய்த்தது. பின்னும் நீங்கள் இல்லாத இடம் நாடாயிருந்தாலும் அது தான் காடு. உங்களுடன் கூடியிருக்கிற காடே எனக்கு நாடு“” என்று சீதை ராமருக்குச் சொன்னதுபோல் எனக்குச் சொன்னாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து, ““எனக்குத் தங்கை எப்போது வருவாள்?“” என்று கேட்டாள். அதற்கு நான் அர்த்தம் தெரியாமல் மயங்கினேன். அவள் சிரித்துக் கொண்டு ““என்னுடைய மாமா உங்களுக்கு வேறே பெண் தேடி விவாகம் செய்ய யோசித்திருப்பதாக நான் கேள்விப் பட்டேன்“” என்றாள். அதற்கு நான் ““என்னுடைய சிநேகிதன் ஒருவன் இரண்டு தாரம் கலியாணம் செய்து பட்ட பாடுகளை நினைக்கும்போது, எனக்குத் தலை நடுக்கமாயிருக்கின்றது. நான் சந்திர சூரியர் தெற்கு வடக்கானாலும் இரண்டு தாரம் கொள்ளச் சம்மதியேன்“” என்றேன். அவள் ““உங்களுடைய சிநேகிதர் என்ன பாடுகள் பட்டார்?“” என்று கேட்டாள். அதற்கு நான் சொன்னதாவது:—

இரண்டு தாரம் கொண்ட ஒருவன் என்னிடத்திலே பேசும்போது தூங்கித் தூங்கி விழுந்துகொண்டு பேசினான். “நான் ஏன் தூங்கி விழுகிறாய்?” என்று கேட்க, அவன் என்னைப் பார்த்து யுஎனக்கு இரா முழுவதும் தூக்கமே யில்லை. என்னுடைய தாரங்களில் ஒருத்தியை ஒரு பக்கத்திலும் மற்றொருத்தியை மற்றொரு பக்கத்திலும் படுக்கவைத்து நான் நடுவே படுத்துக்கொள்கிறது வழக்கம். அவள் பக்கத்தில் நான் திரும்பினால் இவள் திட்டுகிறாள்; இவள் பக்கத்திலே திரும்பினால் அவள் திட்டுகிறாள்; ஒருத்தியையும் பாராமல் மல்லாக்காய்ப் படுத்துக்கொண்டால் இருவரும் திட்டுகிறார்கள். பின்னுங் கூடி, என் தலையை மொட்டையாக்கி விட்டார்கள். எப்படியென்றால் அவளுடைய பக்கத்தில் திரும்பியிருக்கும்போது இவளும், இவள் பக்கத்தில் திரும்பியிருக்கும்போது அவளும் கோபத்தினால் தனித்தனியே என் தலைமயிரைக் கத்தரித்து முண்டிதம் ஆக்கிவிட்டார்கள், என்று சொல்லித் தன்னுடைய மொட்டைத் தலையைச் சாக்ஷி காட்டினான்”” என்றேன். இவ்வகையாக வினோத சல்லாபத்தில் நானும் ஞானாம்பாளும் அந்த இரவைப் போக்கினோம்.