பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 29

விக்கிமூலம் இலிருந்து


29-ஆம் அதிகாரம்
படித்துக்‌ கெட்டவன்‌

ஒரு நாள் தேவராஜப் பிள்ளை என்னையுங் கனகசபையையும் பார்த்து “இங்கிலீஷில் சகல சாஸ்திரப் பண்டிதராகிய பேக்கன் (Bacon) என்பவர் யுஅற்பப் படிப்பு ஆபத்துரு என்று சொல்லுகிறார். அதற்கு அஜகுணமாக எனக்குத் தெரிந்த ஒரு அற்பப் படிப்பாளியின் சரித்திரத்தைக் கேளுங்கள்” என்று செப்பலுற்றார்.

சென்னை நகரத்தில் சுப்பையன் என்று பெயர் கொண்ட ஒரு ஏழைப் பிராமணன் இருந்தான். அவன் ஒரு தர்ம சத்திரத்தில் குடியிருந்து கொண்டு அதில் வந்து இறங்குகிற வழிப்போக்கருக்குச் சாதம் சமையல் பண்ணி விற்றுக் காலக்ஷேபஞ் செய்து வந்தான். அவனுடைய பிள்ளை அனந்தையனைத் தர்மப் பள்ளிக் கூடங்களில் விட்டு, தமிழும் இங்கிலீஷும் அப்பியாசிக்கும்படி செய்வித்தான். அனந்தையன் இங்கிலீஷில் அதிக கவனமுள்ளவனாய், அந்தப் பாஷையில் கூடியவரையில் எழுதவும் பேசவுங் கற்றுக் கொண்டு பாடசாலையை விட்டுவிட்டான். இங்கிலீஷில் அவனுக்குத் தெரிந்த அற்பப் படிப்பைக் கொண்டு, அந்தப் பாஷையில் தான் பூரண விற்பத்தியடைந்து விட்டது போல் அகம்பிரமம் அடைந்தான். தமிழ்ப் பாஷையை அவன் எவ்வளவுங் கவனிக்காமையினால் அந்தப் பாஷையில் நெடுங் கணக்குக் கூட அவனுக்குப் பூரணமாய்த் தெரியாது.

தமிழ் பாஷையை வாசிப்பதும் பேசுவதும் தனக்குக் கௌரவக் குறைவாக எண்ணிவிட்டான். அவனுடைய தயவு யாருக்காவது வேண்டியிருந்தால் அவன் இங்கிலீஷில் பூரண வித்வானென்றும், தமிழில் ஒன்றும் தெரியாதவனென்றும் யாராவது சொன்னால் அவர்களிடத்தில் அத்தியந்த விசுவாசமும் வைப்பான். அவனுக்குச் சுதேஷ பாஷா ஞானம் எப்படி இல்லாமற் போய் விட்டதோ அப்படியே தேசாபிமானமும் போய்விட்டது. இந்தத் தேசத்தையும் தேசாசாரங்களையும் நிந்திப்பதும் ஐரோப்பாக் (Europe) கண்டத்தைப் புகழுவதுமே அவனுக்கு நித்திய காலக்ஷேபம். அவன் தமிழ் பாஷை பேசுகிற வழக்கத்தை கட்டோடே விட்டுவிட்டு எப்போதும் இங்கிலீஷ் பாஷையிலே சம்பாஷிப்பதால் அந்தப் பாஷை தெரியாத அவனுடைய தாய் தந்தை சுற்றத்தார் முதலானவர்களுடைய சல்லாபத்தையும் நேசத்தையும் இழந்து போனான். அவன் அவர்களிடத்தில் பேசும்படியான அகத்தியம் நேரிட்டால் இங்கிலீஷும் தமிழும் தெரிந்த துவிபாஷிகள் மூலமாய்ப் பேசுகிறதே தவிர அவன் வேறே ஒரு வார்த்தையும் பேசுகிறதில்லை. தொப்பி ஒன்று தவிர மற்ற விஷயங்களில் ஐரோப்பியருடைய நடை உடை பாவனைகளையெல்லாம் அனுசரிக்கத் தலைப்பட்டான். அவனுடன் எப்போதும் இங்கிலீஷ் பேசத் தகுந்த மனுஷர்கள் அகப்படாமையினாலும் இங்கிலீஷ் துரைமார்களுடைய சல்லாபம் அவனுக்குக் கிடைப்பது அரிதாகையாலும் அவர்களுடைய பரிசாரகர்கள் சுயம்பாகிகள் எளிய சட்டைக்காரர்கள் முதலானவர்களுடைய சகவாசமே அவனுக்கு நிலைத்துவிட்டது. அவர்களில் சிலர் தினந்தோறும் பல் விளக்காமையினால் இவனும் பல் விளக்குகிற வழக்கத்தை விட்டுவிட்டான். அவர்கள் ஸ்நானஞ் செய்யாமையினால் இவனும் ஸ்நானத்தை விட்டுவிட்டான். அவர்கள் சுருட்டுக் குடிக்கிறது வாயில் புகையிலை போட்டுக்கொள்ளுகிறது கள்ளு சாராயம் அருந்துகிறது முதலான வழக்கங்களை அநுசரிப்பதால் இவனும் அந்தத் துர்வழக்கங்களை ஆசரிக்கத் தொடங்கினான். அவர்களிடத்தில் துர்ப்பாஷைகளையும் கற்றுக் கொண்டான். அவர்களுடைய ஸ்திரீகள் அந்நிய புருஷர்களிடத்தில் சங்கோசம் இல்லாமல் சம்பாஷிப்பது சகஜமானபடியால் அந்த வழக்கத்தை இவனுடைய பத்தினி முதலான ஸ்திரீகளுக்குத் தானே பிரயாசப்பட்டுக் கற்பித்தான். தன்னுடைய இஷ்டர்கள் சந்திக்க வரும்போது தன்னுடைய பத்தினியைக் கூட வைத்துக் கொண்டு பேட்டி கொடுப்பதும் தான் யாரையாவது காணப் போகும்பொழுது ஸ்திரீ சகிதமாய்ப் போய்க் காணுகிறதும் அவனுடைய வழக்கம். அந்த வழக்கத்தை நிறுத்தவேண்டுமென்று அவனுடைய பத்தினி முதலானவர்கள் பிரயாசைப்பட்டும் அவர்களுடைய ஜபம் நடக்கவில்லை.

இங்கிலீஷில் சன்மார்க்கமான புஸ்தகங்கள் எத்தனையோ இருந்தாலும் அவைகளை அனந்தையன் வாங்குகிறதும் இல்லை. படிக்கிறதும் இல்லை. லெக்கி எல் (Lucky.L), ஸ்டீபன் (Stephen), பெயின் (Bain), டார்வின் (Darwin), கமெடி எஸ் (Comete S), மில் (Mill), ஹெர்பர்ட் (Herbert), ஸ்பென்சர் (Spencer), ஹக்ஸ்லி (Huxley), ஹூம் (Hume), காலின்ஸ் (Collins), டிண்டால் (Tyndal), வால்டேர் (Voltaire) முதலான வேத விரோதிகளுடைய கிரந்தங்களை அவன் படித்ததினால் தெய்வம் இல்லை; வேதம் இல்லை; பாபபுண்ணியங்கள் இல்ல; நரகம் மோக்ஷம் இல்லை; உலக சுகமே சுகம் என்கிற சித்தாந்தம் உள்ளவனானான். மேற்சொல்லிய சமய விரோதிகள் உலகத்துக்கு ஒரு சமயம் அவசியந்தானென்றும் அப்படியில்லாதவரையில் அக்கிரமம் நடக்குமென்றும் ஒப்புக் கொண்டார்கள். அப்படியே வால்டேர் (Voltaire) ஒரு தேவாலயம் கட்டினார். ஹூம் (Hume) சில சமயங்களில் கோவிலுக்குப் போனான். காலின்ஸ் (Collins) தன்னுடைய வேலைக்காரர்கள் தன்னைக் கொலை செய்யாமலும் திருடாமலும் இருக்கவேண்டியதற்காக அவர்கள் கோவிலுக்குப் போகும்படி கட்டாயஞ் செய்தான். ஹக்ஸ்லி (Huxley) பைபிள் (Bible) என்னும் சுவிசேஷத்தைப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கவேண்டுமென்று முயற்சி செய்தான். டிண்டால் (Tyndal) தன்னை யாராவது சமய விரோதி என்று சொன்னால் சண்டைக்கு வருவான். இவ்வாறாக மேற்படி வித்வான்களுடைய நூல்கள் ஒருவிதமாகவும் நடை வேறொரு விதமாகவும் இருந்தன. ஆனால் அனந்தையனுடைய வார்த்தையும் நடையும் ஒரே தன்மையாயிருந்தன. தெய்வம் இல்லை பாபபுண்ணியம் இல்லை என்கிற சித்தாந்தத்தைத் தனக்குள்ளே வைத்துக் கொள்ளாமல் தன் பெண்சாதி பிள்ளைகள் முதலானவர்களுக்கு உபதேசிக்கவும் தானே துன்மார்க்கங்கள் செய்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஆரம்பித்தான். பணமே தெய்வமென்றும் அதனைச் சம்பாதிக்கிறதற்கு ரகசியத்தில் எந்த அக்கிரமம் வேண்டுமானாலுஞ் செய்யலாமென்றும் ஆனால் யோக்கியனைப் போல் வேஷம் போடுவது உத்தியோகத்தையும் பணத்தையும் சம்பாதிக்கிறதற்கு மார்க்கமா யிருப்பதால் அந்தப்படி செய்ய வேண்டியது அகத்தியம் என்றும் நினைத்து அவன் வெளிவேஷம் போட்டுக் கொண்டு வந்ததால் அவனுக்கு ஒரு தாலூகா முன்சீப் உத்தியோகங் கிடைத்தது. அந்த உத்தியோகம் கிடைத்தவுடனே இந்திரப் பட்டம் கிடைத்தது போல் அவன் சுத்தமாய்த் தன்னை மறந்துவிட்டான். தன்னுடைய எளிய தகப்பனைத் தகப்பனென்று சொல்லவே அவனுக்குச் சங்கோசம் வந்துவிட்டது. பெரிய பணக்காரர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுத் தான் அவர்களுக்குப் பிள்ளையா யிராமற் போனதற்காக ஓயாமல் மனஸ்தாபப் படுவான். யாராவது ஒரு திரவியவந்தனைத் தனக்குப் பிதாவென்று சொல்லிக் கொள்ள அவனுக்குச் சம்மதந்தான். ஆனால் அந்தத் திரவியவந்தர் கேள்விப் பட்டால் சண்டைக்கு வருவாரென்று பயந்து சும்மா இருந்துவிட்டான்.

அனந்தையன் தன் தகப்பனைத் தகப்பனென்று சொல்லுவதற்குக் கூட வெட்கப்படுகிறானென்று பல பெரிய மனுஷர்களுக்குத் தெரியும். அவர்களிற் சிலர் அனந்தையனைக் கண்டுகொள்வதற்காக அவனுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வருகிற சமாசாரங் கேள்விப்பட்டு அனந்தையன் எதிர்கொண்டுபோய் அவர்களுக்குக் கைலாகு கொடுத்து அழைத்துக்கொண்டு வந்தான். அப்போது தெருத் திண்ணையில் அவனுடைய தகப்பனார் சுப்பையர் உட்கார்ந்திருந்தார். அவருடைய முகச் சாயலும் ஒரே தன்மையாயிருந்தபடியால் அவர் யாரென்று அந்தப் பெரிய மனுஷர்கள் அனந்தையனை இங்கிலீஷ் பாஷையில் கேட்க அவன் தன்னுடைய வேலைக்காரனென்று அனந்தையன் இங்கிலீஷில் மறுமொழி சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே போய் அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து சம்பாஷிக்கத் துவங்கினான். அவர்கள் இவன் தகப்பனையே வேலைக்காரனென்று சொல்கிறானென்று அனுமானித்துக் கொண்டு அவனை அவமானப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்துடன் “ உம்முடைய தாயையும் தந்தையையும் நாங்கள் பார்க்கக்கூடாதா? அவர்களை நாங்கள் பார்த்து சந்தோஷிக்கும் பொருட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று பிடிவாதஞ் செய்தார்கள். அனந்தையன் திருடனைப் போலச் சற்று நேரம் பரக்கப் பரக்க விழித்தபிற்பாடு “தகப்பனார் வியாதியா யிருக்கிறார்; தாயாரை மட்டும் அழைத்து வருகிறேன்” என்று சொன்னான். உடனே அவர்கள் எழுந்து “உம்முடைய தகப்பனார் வியாதியாயிருந்தால் அவரை அகத்தியம் நாங்கள் பார்க்கவேண்டும்; அவர் இருக்கிற இடத்தைக் காட்டும்” என்று அனந்தையனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அவன் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல் போகும்போது அவனுடைய தாயார் எதிரே வந்தாள். அவளைக் காண்பித்துவிட்டால் பிறகு தன் தகப்பனைத் தேடமாட்டார்களென்று நினைத்து இவள் தன் தாயென்று அனந்தையன் காட்டினான். உடனே அவர்கள் “அம்மா! உங்களைப் பார்த்தோம்; அகமகிழ்ந்தோம்; உங்கள் பர்த்தாவையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்; அவர் இருக்கிற இடத்தைக் காட்ட வேண்டும்” என்று சொல்ல, அந்த அம்மணி கபடம் இல்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்த் தெருத் திண்ணையிலிருந்த தன் பர்த்தாவைக் காட்டிவிட்டாள். உடனே அவர்கள் அனந்தையனுடைய முகத்தைப் பார்த்தார்கள். அனந்தையன் வெட்கத்தினால் பூமி தேவி முகத்தைப் பார்த்தான். அந்தக் கனவான்கள் அனந்தையனைப் பார்த்து “உம்முடைய தகப்பனாரை வேலைக்காரனென்று சொன்னீரே! இது தர்மமா?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே சுப்பையருக்குத் தன் பிள்ளை மேல் பிரமாதமான கோப சன்னதம் உண்டாகி அந்தக் கனவானை நோக்கி “ஐயா! இந்தப் பயலுக்கு நான் வேலைக்காரன் தான். இவனுடைய தாயார் வேலைக்காரனுடன் தேக சம்பந்தப்பட்டு இவனைப் பெற்றாள். அது உண்மையா பொய்யா அவனுடைய தாயாரையே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று சரமாரியாகக் கொடுங் சொற்களைப் பிரயோகித்தார். உடனே அனந்தையன் அநந்த லோகத்துக்கே போய் விட்டதுபோல எந்த மூலையிலோ போய் ஒளிந்துகொண்டான். அந்தக் கனவான்கள் “இந்தப் பிதுர்த் துரோகி வீட்டில் இருந்தாலும் பாவம்” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார்கள். சுப்பையரும் அவர் பத்தினியும் இனிமேல் இந்தச் சண்டாளன் வீட்டில் இருப்பது மரியாதையல்ல வென்று நினைத்துப் பிரத்தியேகமாக ஒரு சத்திரத்துக்குக் குடி போய்விட்டார்கள். அவர்கள் சில மத்தியஸ்தர் மூலமாக “நாங்கள் உன்னுடன் சேர்ந்திருப்பதுதான் உனக்கு அவமானமாயிருக்கிறதே! நாங்கள் சத்திரத்திலே குடி யிருக்கிறோம்; எங்களுக்குச் சாப்பாட்டுக்கு மார்க்கஞ் செய்யவேண்டும்”என்று மகனுக்குச் சொல்லி அனுப்பினார்கள். அவன் “நான் ஒன்றும் கொடுக்க மாட்டேன்; ஊரில் பிக்ஷையெடுத்துச் சாப்பிடுங்கள்” என்று கோபமாய் மறுமொழி சொல்லி யனுப்பினான். அதைக் கேட்டவுடனே சுப்பையரும் அவர் பாரியும் கந்தைத்துணிகள் உடுத்திக் கொண்டு கையில் ஓடுகளை யெடுத்துக் கொண்டு “நாங்கள் இந்த ஊர் முன்சீப்தாருடைய தாய் தந்தையர்கள்; எங்களை ஆதரிக்காமல் பிக்ஷையெடுக்கும்படி விட்டுவிட்டான்; எங்களுக்குப் பிக்ஷையிடுங்கள்!” என்று வீடு வீடாகச் சொல்லி அனந்தையனை லச்சை கெடுக்க ஆரம்பித்தார்கள். அதை அவன் கேள்விப்பட்டு அவமானத்தையடைந்து “ஒரு சக்கிலியத் தொழிலாவது செய்து பிழைக்கக் கூடாதா? பிக்ஷை யெடுக்க வெட்கமில்லையா?” என்று சொல்லியனுப்பினான். உடனே சுப்பையர் “நான் முன்சீப்தாருடைய தகப்பன்; நான் சக்கிலியத் தொழில் செய்கிறபடியால் செருப்பு ஜோடு முதலியவர்கள் என்னிடத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்று விளம்பரம் எழுதித் தான் குடியிருக்கிற சத்திரத்தின் வாசற்படியில் ஒட்டி வைத்தார். இந்த சமாசாரங்கள் ஊரெங்கும் பிரசித்தமாகி அனந்தையனைக் காரித் துப்பாதவர்கள் ஒருவருமில்லை. அவன் நிரீச்சுரவாதி யென்றும் பாப புண்ணியம் பாராத பரம சண்டாளனென்றும் பிதுர்த் துரோகியென்றும் துரைமார்கள் கேள்விப்பட்டு அந்தக் காரணத்துக்காகவே அவனை உத்தியோகத்தினின்று நீக்கிவிட்டார்கள். அவனுக்கு உத்தியோகம் போனபிற்பாடு அவனை மதிக்கிறவர்கள் ஒருவருமில்லை. அவன் எல்லாருக்கும் தீங்கு செய்தபடியால் உத்தியோகம் போனபிறகு அவனுக்கு எல்லாரும் தீங்கு செய்யத் தொடுத்தார்கள். தெய்வம் இல்லை; பாப புண்ணியம் இல்லயென்று அவன் எப்பொழுதும் செய்து வந்த பிரசங்கத்தைக் கேட்டுக் கேட்டு அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் துன்மார்க்கத்திற் பிரவேசித்து அவனை அலட்சியஞ் செய்து வந்தார்கள்.

அவனுக்கு உத்தியோகம் போன விசனத்தினால் வியாதி நேரிட்டு அவன் படுத்த படுக்கையில் இருக்கும்போது அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் சற்றும் இரக்கமில்லாமல் அநேகம் பொருள்களை யெடுத்துக் கொண்டு அவனை அந்தரத்தில் விட்டு விட்டு ஓடிப்போனார்கள். அவனுடைய வேலைக்காரர்களும் அவர்களுடைய கையில் அகப்பட்டதைக் கிரகித்துக் கொண்டு சொல்லாமற் புறப்பட்டு நடந்துவிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட நிராதரவான ஸ்திதியிலிருக்கும்போது திருடர்கள் வந்து பிரவேசித்து வியாதியிலிருந்தவனைத் தூணிலே சேர்த்துக் கட்டிப் புதையலைக் காட்டும்படி கணக்கில்லாத அடிகள் அடித்தார்கள். அவன் கதறிக்கொண்டு “இப்படி அக்கிரமஞ் செய்யலாமா?” என்று கேட்க அவர்கள் “நீ தான் தெய்வம் இல்லை; பாப புண்ணியம் இல்லையென்று உபதேசிக்கிறாயே! அப்படியிருக்க அக்கிரமம் ஏது?” என்று மறுபடியும் அடித்தார்கள். அவன் “ராஜ தண்டனை இல்லையா?” என வினவ, அவர்கள் “சாட்சி இல்லாவிட்டால் ராஜதண்டனை ஏது? உனக்கு சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள்?” என்று மீளவும் அடித்தார்கள். அவன் அடி பொறுக்கமாட்டாமல் புதையலைக் காண்பித்தான். அவர்கள் உள்ளதெல்லாம் வாரிக்கொண்டு வெளியே போகும்போது அனந்தையன் அவர்களைப் பார்த்து ““இப்படி அநியாயம் செய்தீர்களே! உங்களுக்கு ராஜ தண்டனை இல்லாவிட்டாலும் தெய்வதண்டனை இல்லாமற்போகுமா?” என்றான்; அவர்கள் உடனே கைகொட்டிச் சிரித்துக்கொண்டு “எங்களால் நீ தெய்வத்தின் உண்மை அறிந்ததால் உனக்கு மதி வந்தது; எங்களுக்கு நிதி வந்தது; உனக்குக் குணம் வந்தது; எங்களுக்குப் பணம் வந்தது” என்று மொழிந்துகொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

அன்று முதல் அவன் தெய்வம் இல்லையென்கிற வார்த்தையை விட்டு விட்டபடியால், அவனுடைய தாய் தந்தை ஆசாரியர்களைப் பார்க்கிலும் அந்தத் திருடர்களே அவனுக்குப் போதக குருவென்று சொல்லலாம். அவர்கள் குருதட்சணையைப் போல அவனுடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்ட படியால், யுபழைய குருடி கதவைத் திறடிரு என்பதுபோல அவனுடைய பூர்வ தரித்திர தசையில் வந்துவிட்டான். அவன் பொருளையும் இழந்து பிணியினால் வருந்துவதை அவனுடைய தந்தை தாய் கேள்வியுற்று அவன் செய்த துரோகங்களையெல்லாம் மறந்துவிட்டு, அவன் வீட்டுக்குப் போய் வேண்டிய காரியங்களைச் செய்து அவனைச் சௌக்கியப்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் உதவி செய்யாவிட்டால் அவன் பிராணவியோகம் ஆயிருப்பானென்பதில் சந்தேகமில்லை. அவன் ஒரு ஆண்டு முழுமையும் தீர்க்கரோகமா யிருந்தமையால் அவனுடைய தாய் தந்தையர் யாசகஞ் செய்து அவனைக் காப்பாற்றினார்கள். அவன் சௌக்கியம் அடைந்த பிறகு யாசகத் தொழிலைத் தவிர இவன் ஜீவிக்கிறதற்கு மார்க்கமில்லை. அவனுடைய தாய் தகப்பனுக்கு இரங்கி யாசகங் கொடுக்கிறார்களே தவிர அவனுக்கு இரங்குகிறவர்கள் ஒருவருமில்லை. நான் ஒருநாள் தெய்வத்தைக் குறித்துப் பேசினேன். அவன் தனக்குத் துரோகஞ் செய்து ஓடிப்போன தன் பெண்சாதி பிள்ளைகளும், வேலைக்காரர்களும், திருடர்களும் இந்த உலகத்தில் ராஜநீதியைத் தப்பிக்கொண்டபடியால், அவர்களைத் தண்டிக்கிறதற்கு ஒரு தெய்வமும், அவர்களை உபாதிக்கிறதற்கு ஒரு நரகமும் அவசியமென்றும் தான் செய்த துரோகங்களை க்ஷமித்துத் தன்னைக் காப்பாற்றின தாய் தந்தையர்களுக்குத் தகுந்த சன்மானம் இந்த உலகத்தில் இல்லாதபடியால், அவர்களுக்காக ஒரு மோட்சமும் அகத்தியம் வேண்டியதென்றும் ஆகையால் தெய்வமும், நரகமும், மோட்சமும் உண்டென்பது சத்தியமென்றும் ஒப்புக்கொண்டான்.