உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 30

விக்கிமூலம் இலிருந்து


30-ஆம் அதிகாரம்
தேவராஜப் பிள்ளைக்குக் கனகசபை சொந்தப்
புத்திரனா என்னும் விசாரணை—
சிரித்தவர் அழுவார்—அழுதவர் சிரிப்பார்

கவர்ன்மெண்டாருக்குத் தேவராஜப் பிள்ளை எழுதிய மனுவுக்கு எப்போது உத்தரவு வருமோவென்று நாங்கள் சதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் குதிரைத் தபால் வழியாகக் கவர்ன்மெண்டாருடைய உத்தரவு வந்து சேர்ந்தது. அதைத் தேவராஜப்பிள்ளை ஆவலாக வாங்கிப் பிரித்து வாசித்தார். அவருக்குக் கனகசபை சொந்தப் பிள்ளையா அல்லவாவென்று விசாரிக்கும்படி, மூன்று துரைமார்களை விசாரணைக் கர்த்தர்களாக நியமித்திருப்பதாகவும், அவர்கள் முன்பாக சாக்ஷி சாதனங்களுடன் போய்ச் சங்கதிகளைத் தெரிவித்துக் கொள்ளும்படியாகவும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய அபிப்பிராயப்படி தீர்மானம் செய்ய அவர்களுக்குப் பூரண அதிகாரங் கொடுத்திருப்பதாகவும் கவர்ன்மெண்டாருடைய உத்தரவினால் தெரியவந்தது. அதைப் பார்த்தவுடனே, இனி மேல் எப்படியும் நியாயங் கிடைக்குமென்று நாங்கள் எல்லோரும் ஆனந்த பரிதர்கள் ஆனோம். பிற்பாடு மேற்படி விசாரணைக் கர்த்தர்கள் இடத்திலிருந்து வந்த உத்தரவில் வேதபுரி என்னுமூரில் விசாரணை நடக்குமென்றும் சகல சாக்ஷி சாதனங்களுடன் அவ்விடத்துக்கு வரும்படியாகவும் ஆக்ஞாபிக்கப் பட்டிருந்தது. அந்தப் பிரகாரம் ஆதியூரிலும் பக்க ஊர்களிலும் வசிக்கின்ற தகுந்த கௌரவமுள்ள பெரிய பிரபுக்களும் நானும் என் தகப்பனாரும் சம்பந்தி முதலியாரும் சாந்தலிங்கம் பிள்ளையும் சந்நியாசியாரும் உள்பட நூறு சாக்ஷிகள் சகிதமாக தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் பயண சந்நாகமாய்ப் புறப்பட்டு வேதபுரிக்குப் போனோம். அந்த மூன்று விசாரணைக் கர்த்தர்களில் இருவர் கலெக்டர் வீட்டில் இறங்கியிருப்பதாகக் கேள்வியுற்று நாங்கள் குறு விசாரம் அடைந்தோம். ஆயினும் மூன்று துரைமார்கள் கூடி அநியாயஞ் செய்ய மாட்டார்களென்று நாங்கள் எங்களைத் தைரியப் படுத்திக் கொண்டோம். விசாரணைக் கர்த்தர்கள் தேவராஜப் பிள்ளையை முந்தி விசாரித்தார்கள். அவர் கனகசபை பிறந்தது முதல் நடந்த ஒவ்வொரு சங்கதியையும் விடாமல் பரிஷ்காரமாய் வாக்குமூலம் எழுதி வைத்தார். பிற்பாடு சந்நியாசியாரையும் கனகசபையையும் அவனை வளர்த்த தகப்பனாரையும் என்னையும் என் தகப்பனாரையும் சம்பந்தி முதலியாரையும் தனித்தனியே விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷயத்தையும் பூரணமாகத் தெரிவித்தோம். பிற்பாடு நாங்கள் கொண்டு போன பெரிய மனுஷர்களையும் பின்னும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய இஷ்டப்படி வரவழைக்கப் பட்ட நூறு பிரபுக்களையும் பிரத்தியேகம் பிரத்தியேகமாய் விசாரித்தார்கள். அவர்கள் எல்லோரு ஒரே வாக்காய்த் தேவராஜப் பிள்ளை பட்சத்தில் சாட்சி சொன்னார்கள். விசாரணைக் கர்த்தர்கள் அவர்கள் கையிலிருந்த ஒரு கடிதத்தைத் தேவராஜப் பிள்ளைக்குக் காட்டி, அது முழுவதும் யார் கையெழுத்து என்று கேட்டார்கள். அவர் மேல் விலாசமட்டும் தம்முடைய கையெழுத்தென்றும் உள்ளேயிருக்கிற கடிதம் தமது கையெழுத்து அல்லவென்றும் தம்முடைய லிகிதம் போல் யாரோ எழுதியிருப்பதாகவும் சொன்னார்.

மூன்று விசாரணைக் கர்த்தர்களும் ஒரு அறைக்குள்ளே போய் ஆலோசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நெடு நேரம் சம்வாதஞ் செய்துகொண்டு பிற்பாடு வெளியே வந்து சிம்மாசனரூடர் ஆனார்கள். அவர்களில் கலெக்டர் வீட்டில் இறங்கியிருந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களும் அநேக சிப்பாய்கள் உருவின கத்திகளுடனே எங்களைச் சுற்றிக் காவலாயிருக்கும்படி செய்வித்து தீர்மானம் சொல்லத் தொடங்கினார்கள்: “இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் ஒரே அபிப்பிராயமா யிருக்கிறோம். ஒரு விசாரணைக் கர்த்தர் மட்டும் எங்கள் அபிப்பிராயத்துக்கு இசையவில்லை. அப்படியிருந்தாலும் அந்த ஒரு விசாரணைக் கர்த்தருடைய அபிப்பிராயத்தைப் பார்க்கிலும் இருவருடைய அபிப்பிராயம் விசேஷமானதால் எங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகிறோம். இந்த விஷயத்தில் சாட்சி சொன்ன ஒருவருடைய வார்த்தையையாவது நாம் நம்பவில்லை. எல்லோருமாய்க் கூடிப் பெரிய பொய்க்கோட்டை கட்டியிருக்கிறார்கள் என்பது சத்தியமே. சந்ததி இல்லாமல் பாளையதார் இறந்துபோனால் பாளையப்பட்டு கவர்ன்மெண்டுக்குச் சித்தித்துப் போமென்று யோசித்து கவர்ன்மெண்டாரை மோசஞ் செய்வதற்காக இப்படிப்பட்ட அபாண்டமான பொய்யை உண்டுபண்ணி யிருப்பதாக அபிப்பிராயப் படுகிறோம். ஏழைகளாயிருந்து பொய் சொன்னாலும் அதை க்ஷமிக்கலாம். பெரிய பிரபுக்களென்று பெயர் வைத்துக்கொண்டு பொய்ச் சத்தியஞ் செய்து பொய்ச் சாட்சியம் சொல்லியிருப்பது பெரிய அக்கிரமமாகவும் பிரபல துன்மார்க்கமாகவும் இருக்கின்றது. இந்தியா தேச முழுதும் தெரியும் படிக்குப் பொய்ச் சத்தியஞ் செய்தவர்களுக்குத் தகுந்த சிட்சை செய்யவேண்டியது முக்கியமாயிருக்கிறது. ஆகையால் பாளையதார் உள்படச் சகல சாக்ஷிகளையும் அவர்களுடைய ஆயுள் பரியந்தம் தீவாரந்தத்துக்கு அனுப்புகிறதென்றும் அவர்களுடைய சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்து கவர்ன்மெண்டாரைச் சேருகிறதென்றும் தீர்மானஞ் செய்திருக்கிறோம்” என்று சொல்லி எங்களுக்குக் கைவிலங்கு கால்விலங்கு மாட்டிக் காவலில் வைக்கும்படி உத்தரவு செய்தார்கள்.

இந்தத் தீர்மானத்தைக் கேட்டவுடனே எங்களுடைய நிலைமை எப்படி இருந்திருக்குமென்று நான் சொல்லவும் வேண்டுமா? உடனே “ஐயோ! தெய்வமே! என்ன செய்வோம்?” என்கிற கூக்குரலும், அழுகைக் குரலும் எங்கும் கிளம்பிற்று. பெண்சாதிகளை நினத்து அழுகிறவர்களும், பிள்ளைகளை நினைத்து அழுகிறவர்களும், தாய்தந்தை சுற்றத்தாரை நினைத்து அழுகிறவர்களும், ஆஸ்திகளை நினைத்து அழுகிறவர்களும் இவ்வகையாக எங்கும் அழுகைக் குரலே தவிர வேறொரு சப்தமுமில்லை. தேவராஜப் பிள்ளை எழுந்து மற்றவர்களை நோக்கி “ஐயையோ! உங்கள் எல்லோருக்கும் நான் ஒருவன் கூற்றுவனாயிருந்தேனே! என்னாலே உங்கள் ஆஸ்திகளை இழந்தீர்களே! பெண்சாதி பிள்ளைகளை இழந்தீர்களே! ஆயுசு வரையில் தண்டனையும் அடைந்தீர்களே! நீங்கள் எனக்கு உபகாரஞ் செய்ய வந்து பெருந் துன்பத்தை அடைந்தீர்களே! இந்தத் துக்கத்தை நான் எப்படிச் சகிப்பேன்!” என்று சொல்லிப் புலம்பினார். பிறகு அவர் என்னையும் என் தகப்பானாரையும், என் மாமனாரையும் நோக்கி “இந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தானா நீங்கள் ஊரைவிட்டு இவ்வளவு தூரம் வந்தீர்கள்? நீங்களும் உத்தம பத்தினிகளுஞ் செய்த தர்மங்கூட உங்களைத் தலைகாக்காமற் போய்விட்டதே! அந்த மகா உத்தமிகள் இந்தச் செய்திகளைக் கேட்டுச் சகிப்பார்களா? பிராணனை வைத்திருப்பார்களா? நீங்க ளாவது தப்பி யிருந்தால், எங்களுக்காகச் சர்வப் பிரயத்தனஞ் செய்வீர்களே! இப்போது அந்த நம்பிக்கையும் இல்லாமற் போய்விட்டதே! நான் என்ன செய்வேன்?” என்று சொல்லிக் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதார். அப்படியே ஒவ்வொருவரும் தங்களுடைய துயரத்தைச் சொல்லிப் பொருமினார்கள். அப்போது மண்ணூம், விண்ணும், மரமும், மலையும், சகலமும் அழுவது போல் தோன்றின. அந்த இரண்டு பாவிகளாகிய விசாரணைக் கர்த்தர்களுடைய மனம் மட்டும் இரங்கவில்லை.

புருஷர்களாகிய எங்களுடைய கதியே இப்படியிருக்கும்போது எங்களுடைய ஸ்திரீ ஜாதிகள் பட்ட துக்கங்களை நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அப்போது நான் கூட இராவிட்டாலும் நான் கேள்விப்படதை எழுதுகிறேன். இந்தச் சமாசாரம் அவர்களுக்குத் தெரிந்த உடனே பட்டணம் அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. எல்லா ஸ்திரீகளும், பாளையதார் அரண்மனையில் வந்து கூட்டங்கூடித் தலைமயிரைப் பிச்சிக்கொண்டும், வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டும், முகத்தில் அறைந்துகொண்டும், வயிற்றில் அடித்துக்கொண்டும் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதார்கள். அவர்களுடைய கூந்தல்கள் மேகங்கள் போலவும், அவர்களுடைய தேகங்கள் மின்னல் போலவும், அவர்களுடைய கூக்குரல் இடியோசை போலவும், அவர்களுடைய கண்ணீர் மழை பொழிவது போலவும் இருந்தன. “ஐயோ! எங்கள் நாயகர்களை இழந்து போனோமே! இனிமேல் அவர்களை ஒருநாளும் பார்க்கமாட்டோமோ? எங்களுடைய ஆஸ்தி பாஸ்திகளையும் தோற்றோமே! நாங்களும் எங்கள் பிள்ளைகளும் என்ன செய்வோம்? எந்தத்தெருவில் நிற்போம்?” என்று புலம்பினார்கள். அவர்களுடன் அழுது புலம்பிக் கொண்டிருந்த என் தாயார் திடீரென்று எழுந்து மற்ற ஸ்திரீ ஜனங்களைப் பார்த்து “தங்கைமாரே! தமக்கைமாரே! அழுது பிரயோசனமில்லை. வெள்ளம் தலைக்குமேல் ஓடிவிட்டது. இனிமேல் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன? நம்முடைய புருஷர்கள் எல்லாரும் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் யாராவது ஒருவர் தப்பியிருந்தால் மற்றவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு அவர்களால் கூடியவரையில் முயற்சி செய்வார்கள். அவர்கள் எல்லாரும் அகப்பட்டுக்கொண்டிருப்பதால் இனி மேல் நம்மைத்தவிர நம்முடைய புருஷர்களுக்காகப் பிரயாசைப் படத்தக்கவர்கள் யார்? இனி மேல் நாம் செய்யத்தக்கது ஒன்றும் இல்லையென்று நினைத்து நாம் முயற்சி செய்யாமலிருக்கலாமா? கப்பல் உடைந்து கடலில் முழுகுகிறவர்களும் ஏதாவது ஒரு பலகையைப் பிடித்துக் கொண்டு கரையேற முயலுகிறார்கள். விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கூடத் தகுந்த வைத்தியஞ் செய்து அவர்கைளைப் பிழைப்பிக்க வகை தேடுகிறார்கள். பிராணன் போன பிற்பாடு கூட மூச்சு அடங்கியிருக்குமென்று நினைத்துப் பிரேத வைத்தியஞ் செய்கிறார்கள். அப்படிப்போல் நாமும் பிரயத்தனஞ் செய்வது அத்தியாவசியமா யிருக்கின்றது. ஆனால், காரியம் மலையாய் வளர்ந்து போயிருப்பதால் அதற்குத் தகுந்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர அற்பப் பிரயத்தனத்தால் அனுகூலம் உண்டாகாது. வியாதி எவ்வளவு பெரிதோ அதற்குத் தகுந்த ஔஷதங்களைப் பிரயோகிக்கவேண்டும். சென்னைப் பட்டணம் கவர்னர் அவர்கள் மகா நீதிமானென்றும் தர்மிஷ்டரென்றூங் கேள்விப்படுகிறேன். அவருக்கு நாம் மனு அனுப்பினால் கிரமப்படி உத்தரவாகக் கால தாமதம் ஆகும். உத்தரவு வருகிறதற்கு முன் நம்முடைய நாயகர்களைக் கப்பல் வழியாய்த் தீவாந்தரம் அனுப்பி விடுவார்கள். ஆகையால் இப்போதே நாம் எல்லோருமாய்க் கூடிச் சென்னைப் பட்டணம் போய்க் கவர்னர் அவர்கள் பாதத்தில் விழுந்து நம்முடைய நாயகர்களுக்காக மன்றாடுவோம். இத்தனை ஸ்திரீகளுடையவும், பாலகர்களுடையவும் பிரார்த்தனை வியர்த்தம் ஆகாதென்று நினைக்கிறேன். அந்தப்புர ஸ்திரீகளாகிய நாம் எப்படி வெளியே புறப்பட்டு அதிகாரிகளிடம் போகிறதென்று யோசிப்பீர்கள். நமக்குத் தகப்பனுக்குச் சமானமான கவர்னர் அவர்களிடத்திற் சென்று நம்முடைய குறையைச் சொல்லுவதினால் நமக்கு என்ன அவமானம்? நம்முடைய பிரயத்தனத்தால் அதை விடப் பெரிய பாக்கியமும் கீர்த்தியும் வேறென்ன இருக்கிறது? ரோம் (Rome) பட்டணத்தைச் சத்துருக்கள் வளைத்துக் கொண்டபோது அந்தப் பட்டணத்து ஸ்திரீகளுடைய பிரயத்தனத்தால் அவர்களுடைய புருஷர்கள் பிழைத்தார்களே! அப்படிப்போல் நாமும் முயற்சி செய்வோம்! புறப்படுங்கள்!” புறப்படுங்கள்!” என்றார்கள். இதைக் கேட்டவுடனே எல்லாருக்கும் தைரியம் உண்டாகி என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.

ஒரு ஸ்திரீ மட்டும் என் தாயாருடைய அபிப்பிராயத்தை அங்கீகரிக்காமல் குதர்க்கம் பேசினாள். அவள் சொன்னது என்ன வென்றால், ““இந்தச் சீமாட்டி சொல்வது, எலிகள் கூடிப் பூனையைத் தப்புகிறதற்குச் செய்த உபாயம் போ லிருக்கிறது.

ஒரு காலத்தில் எலிகளெல்லாஞ் சேர்ந்து ஆலோசனைச் சபை கூடி, பூனைக்குத் தப்புகிறதற்கு என்ன உபாயம் செய்யலா மென்று, ஆலோசிக்கத் தொடங்கின. பல எலிகள் பல அபிப்பிராயங்களை வெளியிட்டாலும், அந்த அபிப்பிராயங்கள் அயுக்த மென்று தள்ளப்பட்டன. ஒரு சுண்டெலி எழுந்து, வாசக தாட்டியாகவும் அலங்கார நயமாகவும் தன்னுடைய அபிப்பராயத்தை வெளியிட்டது. எப்படி யெனில் ”“காலம் கண்ட பெரியோர்களும் ஞாதாக்களும் நிறைந்த இந்தச் சபையில், சிற்றறிவை யுடைய சிறியேன் வாய் திறக்க அபாத்திரனாயிருந்தாலும், தாங்கள் கிருபை கூர்ந்து, என்னுடைய அபிப்பிராயத்தையும் சிரவணம் செய்யவேண்டும். பூனை நம்மை வருகிற சமயம் தெரியாமையினால், நாம் அதன் வாய்க்கு இரையாகிறோம். பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் அது வருகிற ஓசை கேட்டு, உடனே நம்முடைய வளைகளில் நுழைந்து தப்பிக்கொள்ளலாம்” என்றது. இதைக் கேட்டவுடனே எலிகளெல்லாஞ் சந்தோஷித்து ”அந்தச் சுண்டெலியைப் புகழ்ந்து கொண்டாடின. அப்போது ஒரு மூலையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த நரை திரையுள்ள ஒரு கிழ எலி எழுந்து சொன்ன தாவது, ”“அந்தச் சுண்டெலி மகா சதுரனே! அது சொல்லுகிற உபாயமும் நல்ல உபாயந்தான். ஆனால் நமக்குள் யார் பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுகிற தென்று” அந்தச் சுண்டெலியைக் கேட்டுத் தெரிவிக்கவேண்டும்” என்றது. இதைக் கேட்டவுடனே எலிகளெல்லாம் நாணம் அடைந்து ஓடிப்போய்விட்டன.

“அந்தக் கிழ எலி கேட்டதுபோல நானும் இந்த அம்மையை ஒரு கேள்வி கேட்கிறேன். “கவர்னர் நமக்குத் தரிசனங் கொடுக்காத பட்சத்தில் நாம் என்ன செய்கிறது?”” என்றாள். உடனே என் தாயார் “”கவர்னர் பேட்டி நமக்குக் கிடைக்காத பட்சத்தில் நாம் ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் வெளியே வரும்போது கொடுக்கலாம்”” என்றார்கள். இதைக் கேட்டவுடனே எல்லாருஞ் சரியென்று ஒப்புக்கொண்டு பிரயாணம் ஆரம்பித்தார்கள். தூய்மையான வஸ்திரங்களையும் முக்கியமான சில ஆபரணங்களையும் தரித்துக்கொண்டு அவர்களுடைய பிள்ளைகளுடனே வாகனங்களில் ஏறிக் கொண்டு பிரஸ்தானப்பட்டுச் சென்னை நகரம் போய்ச் சேர்ந்தார்கள். அந்த நகரத்திலும் மார்க்கங்களிலும் உள்ள அனேக பிரபுக்களுடைய வீட்டு ஸ்திரீகள் இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களும் வாகனாரூடராய்ப் பின் தொடர்ந்தார்கள். எல்லாங் கூட ஐந்நூறு (500) வாகனங்களுக்கு மேற்பட்டுக் கவர்னர் அவர்களுடைய அரண்மனைத் தோட்டத்தின் வெளி வாசலுக்கு முன்னே வந்து, நிறைந்து நின்றன. அப்போது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த கவர்னரவர்கள் வாகனங்களின் சப்தத்தைக் கேட்டு, அதிசயப்பட்டு, என்ன வென்று விசாரிக்க, எண்ணிக்கையில்லாத ஸ்திரீகள் அழுத கண்ணூம் சிந்திய மூக்குமாய்த் தங்களுடைய குறையை விக்ஞாபனம் பண்ண வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, தம்முடைய சபா மண்டபத்துக்கு வரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப் பிரகாரம் எல்லா ஸ்திரீகளும் வாகனத்தை விட்டு இறங்கி சபா மண்டபத்திலே பிரவேசித்தார்கள். அவர்கள் எல்லாரும் பிரபுக்கள் வீட்டு ஸ்திரீகள் என்று அவர்களுடைய முக விலாசத்தினால் கவர்னர் அவர்கள் அறிந்துகொண்டு, அவர்களையெல்லாம் ஆசனத்தில் உட்காரச் செய்து தாமும் தம்முடைய தேவியாரும் பீடத்தில் இருந்துகொண்டு “நீங்கள் உங்களுடைய துன்பத்தைத் தெரிவிக்கலாம்”” என்று இனிமையாக மொழிந்தார். வேறொருவரும் பேசத் துணியாமையினால் என் தாயார் எழுந்து நின்றுகொண்டு, அடியிற் கண்டபடி விக்ஞாபனம் செய்தார்கள்.

““இந்தத் தேசத்தை ஆளுகின்ற மகாப் பிரபுவே! சிஷ்ட பரிபாலனமும், துஷ்ட நிக்கிரகமும் உங்களுடைய வேலையானதால் அந்த வேலையை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு துஷ்டன் ஒரு பெண்ணைக் கொள்ள அபேக்ஷித்து அந்த ஆசை நிறைவேறாமையால் இருநூறு பெண்கள் தங்கள் நாயகர்களையும் ஆஸ்திகளையும் இழந்துபோகும்படி செய்துவிட்டான். தான் ஒரு ஸ்திரீக்குப் புருஷன் ஆகாத நிமித்தம் இருநூறு புருஷர்களுக்குத் தாரங்கள் இருந்தும் இல்லாதவர்களாகச் செய்துவிட்டான்.

பாளையப்பட்டுச் சங்கதியை விசாரிக்கும்படி தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கர்த்தர்கள் முன்பாக இருநூறு பெரிய பிரபுக்கள் அந்தப் பாளையதார் பக்ஷத்தில் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய சாக்ஷியத்தை நம்பாமல் அந்த விசாரணைக் கர்த்தர்களில் இருவர் அந்த இருநூறு பிரபுக்களையும் பாளையதாரையும் ஆயுசு முழுதும் தண்டித்து, அவர்களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்யும்படி தீர்மானித்திருக்கிறார்கள். அந்த சாக்ஷிகளில் நூறு சாட்சிகள் பாளையதார் கொண்டுபோன சாட்சிகளாகவும் மற்றவர்கள் விசாரணைக் கர்த்தர்களால் நேரே வரவழைத்து விசாரிக்கப்பட்ட சாட்சிகளாகவும் இருக்கிறார்கள். இத்தனை பிரபுக்கள் கூடித் தங்களுக்குச் சம்பந்தமில்லாத பாளையதார் விஷயத்தில் தப்புப் பிரமாணம் பண்ணிப் பொய் சொல்லத் துணிவார்களா? நம்பிக்கையான ஏக சாட்சியினுடைய ருசு போதுமானதென்று சாட்சிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்க, நம்பிக்கையான கௌரவமும் உள்ள இருநூறு சாட்சிகளுடைய ருசுவை அவமதிப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? கலெக்டர் கச்சேரிச் சிரஸ்ததாரும் அவனுடைய துர்ப்போதனைகளுக்கு உட்பட்டிருக்கிற கலெக்டருமே பாளையதாருக்கும் எதிரிகளாயிருக்க அந்தக் கலெக்டர் வீட்டில் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் வாசஞ் செய்துகொண்டு விசாரித்தது தர்மமா? கலெக்டர் வீட்டில் தங்காமல் தனியே கூடாரம் அடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசாரணைக் கர்த்தர் பாளையதார் பக்ஷத்தில் அபிப்பிராயப்பட்டது அவருக்குப் பெரிய அநுகூலம் அல்லவா? அந்த இருநூறு சாட்சிகளும் பொய் சொல்லியிருந்தாலுங் கூட யாவத்தராளும் ஜீவபரியந்தம் அவர்களைத் தேசாந்தரம் அனுப்பும்படியான அவ்வளவு பெரிய குற்றமாகுமா? அவர்களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்வது ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை செய்வதற்குச் சமானமல்லவா? விசாரணைக் கர்த்தர்கள் சொல்லுகிறபடி எங்கள் புருஷர்களேதான் குற்றஞ்செய்தார்கள்; நாங்களும் எங்கள் பிள்ளைகளும் ஆஸ்திகளை இழப்பதற்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? இப்போது நான் சொல்வதைக்கொண்டு எங்கள் புருஷர்களைப் பார்க்கிலும் ஆஸ்திகளை விசேஷமாக எண்ணி யிருக்கிறோ மென்று தாங்கள் நினைக்காமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் மங்கலியப் பிக்ஷை கேட்க வந்திருக்கிறோமே அல்லாது, அஸ்திப் பிக்ஷை கேட்க வரவில்லை. எங்களுக்கு மங்கலியப் பிக்ஷை கிடைக்காத பட்சத்தில் எங்களுக்கு ஆஸ்திகளும் வேண்டிய தில்லை. தங்கள் சமூகத்தில் எல்லா விஷயங்களையும் நேரே விசாரித்து எங்கள் பட்சத்தில் நியாயமிருந்தால் செய்யும்படி பிரார்த்திக்கிறோமேயல்லாது எங்களுடைய அழுகைக்கும் பிரலாபத்துக்கும் இரங்கிப் பட்சபாதஞ் செய்யும்படி நாங்கள் கேட்கவில்லை. இங்கிலீஷ் கவர்ன்மெண்டு பூமண்டல முழுவதும் எவ்வளவோ கெடிபெற்றதாயிருக்கின்றது. உங்கள் உத்தியோகஸ்தனும் எங்கள் தேசத்தானுமான ஒரு பரமதுஷ்டன் உங்களுடைய கீர்த்தியையும் எங்களுடைய நன்மையும் அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான். அவனைச் சிக்ஷித்து எங்களை ரக்ஷிக்கும்படி பிரார்த்திக்கிறோம். சகலமும் தெரிந்த மகாப்பிரபுவாகிய உங்களுக்குப் புருஷர்களை இழந்து இந்தத் தேசத்து ஸ்திரீகளுடைய நிர்ப்பாக்கியங்களை விவரிக்க வேண்டுவதில்லை. ஆகையால் எங்களுக்கு நாயகர்களையும் எங்களுடைய பிள்ளைகளுக்குத் தந்தைமார்களையும் கொடுத்தருளுங்கள்! நாங்கள் சொல்வது பொய்யென்று தாங்கள் அபிப்பிராயப்படுகிற பக்ஷத்தில் அந்தக் குற்றத்துக்காக எங்களையும் தண்டித்து எங்கள் நாயகர்களுடனே எங்களையும் தீவாந்திரத்துக்கு அனுப்பி விடுங்கள்” என்று மிருதுவாகவும், நயமாகவும், வணக்கமாகவும் விக்ஞாபித்துக்கொண்டார்கள். இதைக் கேட்கும்போது கவர்னர் அவர்களுக்கும் அவருடைய தேவியாருக்கும் கண்ணீர் பெருகி அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

பிறகு, கவர்னர், என் தாயாரையும் மற்ற ஸ்திரீகளையும் நோக்கி, ““இது பெரிய விஷயமானதால் நாம் உங்கள் ஊருக்கே வந்து விசாரித்து நியாயப்படி தீர்மானிக்கிறோம்; அது வரையில் விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்கும்படி இப்பொழுதே உத்தரவு அனுப்புவோம்; நீங்கள் ஊருக்குப் போகலாம்”” என்று உத்தரவு கொடுத்தார். உடனே, என் தாயார் முதலிய ஸ்திரீகள் புறப்பட்டுக் கவர்னரவர்களுடைய உத்தியானம் தாண்டி வெளியே வந்தார்கள். அந்த உத்தியான வாசற்படிக்கு வெளியே பட்டண ஸ்திரீகளெல்லாம் திரண்டு மொய்த்து என் தாயாரையும் ஞானாம்பாளையும் மற்ற ஸ்திரீகளையும் பார்த்துப் பரிதாபப் படுகிறவர்களும், என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடுகிறவர்களும் அவர்களைத் தங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறவர்களுமா யிருந்தார்கள். அவர்களில் எங்களுக்கும் பாளையதாருக்கும் பந்துக்களும் பரிச்சயமானவர்களும் அநேகர் இருந்தபடியால் அவர்கள் கிருகங்களுக்குப் போய்ப் போஜனம் செய்தபிற்பாடு எங்களுடைய ஸ்திரீகள் வாகனாரூடராய்ப் புறப்பட்டுப் போய்த் தங்கள் ஊரை அடைந்தார்கள். மறுநாளே கவர்னர் அவர்கள் அவருடைய பரிவாரங்களுடன் வேதபுரி என்னும் ஊருக்கு வந்து, கூடாரங்களில் இருந்து கொண்டு பரிசீலனை பண்ணத் தொடங்கினார். பாளையதாரும் சாக்ஷிகளும் எழுதி வைத்த வாக்குமூலங்களையும் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தையும் அதற்கு விரோதமாய் மற்றொரு விசாரணைக் கர்த்தர் கொடுத்த அபிப்பிராயத்தையும் இன்னும் மற்ற லிகிதங்களையும் வாசித்துப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டார். பாளையதார் தனக்குப் பிள்ளையில்லை யென்று சிரெஸ்ததாருக்கு எழுதினதாகச் சொல்லப்பட்ட கடிதம் ஒன்று தான் பாளையதார் கக்ஷிக்குக் கொஞ்சம் பாதகமாயிருந்தது. பாளையதார் சிரெஸ்ததாருக்கு எழுதியிருந்த ஒரு வாஸ்தவமான கடிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு அது வைத்திருந்த உறைக்குள்ளே சிரெஸ்ததார் ஒரு பொய்யான கடிதத்தை எழுதி வைத்துக் கொண்டு மாறுபாடு செய்ததாக அநேக சாக்ஷிகளாலும் அனுமானங்களாலும் ஸ்தாபிக்கப்பட்டபடியால் கவர்னர் அவர்களுக்கு உண்டாயிருந்த அற்ப சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது. உடனே கவர்னர் அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்க ளுடைய தீர்மா னத்தை மாற்றிப் பாளையதார் கக்ஷியை ஸ்தாபித்து அவரும் நான் முதலான சாக்ஷிகளும் நிரபராதிகளென்று சித்தாந்தஞ் செய்தார். அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களையும் கலெக்டரையும் உத்தியோகத்தை விட்டு நீக்கி அவர்கள் எங்களைத் தீவாந்தரம் அனுப்ப வைத்திருந்த கப்பலில் அவர்களையேற்றிச் சீமைக்கு அனுப்பிவிட்டார். அந்த சிரெஸ்ததார் பொய்க் கடிதத்தை உண்டுபண்ணி பாளையதார் முதலானவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தபடியால் அவனை உத்தியோகத்திலிருந்து விலக்கி, அவன் எங்களுக்கு நியமித்திருந்த தீவாந்தரத்துக்கு அவனையே அனுப்பி அவனை தேசப்பிரஷ்டம் ஆக்கினார்.