பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 32

விக்கிமூலம் இலிருந்து


32-ஆம் அதிகாரம்
இராக் கொள்ளைக்காரன் பகற்
கொள்ளைக்காரர்களை வெளிப்படுத்தியது

ஒரு நாள் இரவு ஒரு தையற்காரன் அவனுடைய மேல் வேஷ்டியில் ஒரு ரூபாயை முடிந்து தோளிற் போட்டுக் கொண்டு தெரு வீதி வழியாகப் போனான். அதை நிலா வெளிச்சத்தில் ஒரு திருடன் கண்டு, அந்தத் தையற்காரனைப் பின் தொடர்ந்து சென்றான். திருடன் தொடர்ந்து வருவதைத் தையற்காரன் கடைக் கண்ணாற் கண்டும், காணாதது போல் நடந்தான். திருடன் அரவஞ் செய்யாமல் கிட்ட நெருங்கி அந்த முடிச்சைக் கத்தரிக்கோலினாற் கத்தரித்தான். உடனே தையற்காரன் திரும்பி, அவன் கையிலிருந்த கத்தரியினால் திருடன் காதைக் கத்தரித்து விட்டான். அந்த உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் திருடன் “”கூ! கூ! கொலை! கொலை!”” என்றான். உடனே தையற்காரன் ”“கூ! கூ!கொள்ளை! “கொள்ளை!!” என்றான். பிறகு கள்ளன் தையற்காரனைப் பார்த்து ““இந்தா! உன் பணம்”” என்று அவன் முன்பாக விட்டெறிந்தான். உடனே தையற்காரன் “இந்தா! உன் காது” என்று விட்டெறிந்தான். பிறகு அந்தத் தையற்காரன் திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து தேவராஜப் பிள்ளை முன்பாக விட்டான். திருடன் தேவராஜப் பிள்ளை முன்பாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டு சொல்லுகிறான்:—

“ஐயா! நான் ஒரு பெரிய குடும்பி. எனக்கு ஒரு பெண்சாதியும், பல பிள்ளைகளும் அதிக விருத்தாப்பியமான தாய் தந்தைகளும், விதந்துவாய்ப் போன இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைச் சம்ரக்ஷிப்பதற்கு என்னைத் தவிர வேறே நாதன் இல்லை. நான் தேகப்பிரயாசைப்பட்டு அவர்களை ஆதரித்து வந்தேன். இப்போது பஞ்ச காலமானதால் எனக்கு எங்கும் வேலை அகப்படவில்லை. யாசகங் கொடுப்பாரும் இல்லை; நான் ஒருவன் மட்டும் பட்டினியாயிருந்தால் எப்படியாவது சகித்துக் கொள்வேன். அதிவிருத்தர்களான என் தாய் தந்தையர்களும் சிறு பிள்ளைகளும் மற்றவர்களும் பல நாள் பட்டினியாயிருப்பதைப் பார்த்துச் சகிக்க மாட்டாமல் நான் இந்தத் திருட்டுத் தொழிலில் பிரவேசித்தேன்; ஆனால் பெண்டுகளிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் நல்லவர்களிடத்திலும் திருடுகிறதில்லையென்றும், லோபிகளிடத்திலும் பாவிகளிடத்திலும் மட்டுந் திருடுகிறதென்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் ஒரு ரூபா திருடினதற்காக என்னைத் தண்டிக்கப் போகிறீர்கள்; நான் அந்தத் தையற்காரனிடத்தில் ஒரு ரூபா கடன் வாங்கிக்கொண்டு பிறகு அதைக் கொடாமல் மோசஞ் செய்திருப்பேனானால் என்னைத் தண்டிப்பீர்களா? பிரதி தினமும் ஆயிரம், பதினாயிரம், லக்ஷம் பொன் கடன் வாங்கிக் கொண்டு அந்தக் கடனைக் கொடாமல் மாறுபாடு செய்கிறவர்களுக்குக் கணக்குண்டா? இவர்கள் எல்லாரும் எங்களுக்கு அண்ணன்மார்கள் அல்லவா? எங்க ளுடைய திருட்டுக்கும் அவர்களுடைய திருட்டுக்கும் பேதம் என்னவென்றால், நாங்கள் பொய்யும் புரட்டும் பேசாமல் எங்கள் கையில் அகப்பட்டதைக் கவர்ந்து கொள்ளுகிறோம். அவர்கள் ஆயிரம் பொய் சொல்லிக் கடன் வாங்கிக் கொண்டு, பிறகு அதைக் கொடாமல் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு, எத்தனையோ சூதுகளும் வாதுகளும் பொய்ச் சத்தியங்களுஞ் செய்கிறார்கள். அவர்களுடைய திருட்டில் பொய்யும் புரட்டும் நம்பிக்கைத் துரோகமும் ருண பாதகமும் கலந்திருக்கின்றன. எங்களுடைய திருட்டில் அப்படிப்பட்ட தோஷங்கள் கலக்கவில்லை. ஒரு ரூபா திருடின என்னை ஒரு மாசம் காவலிலிருக்கும்படி நீங்கள் தீர்மானித்தால் பெருங் கொள்ளைக்காரர்களாகிய அந்த ருண பாதகர்களையாவது ஜீவ பரியந்தந் தண்டிக்க வேண்டாமா?

நான் திருட ஆரம்பிப்பதற்கு என்னுடைய தரித்திரத்தைக் காரணமாகச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்படிப்பட்ட யாதொரு காரணமும் இல்லாமல் அநேக அரசர்கள் அந்நிய ராஜாக்களுடன் யுத்தத்துக்குப் புறப்பட்டு வழிகளில் இருக்கிற கோட்டை கொத்தளங்கள் மாளிகைகளையெல்லாம் இடித்து. கோடானு கோடி ஜனங்களை மாய்த்து அகப்பட்ட பொருள்களையெல்லாம் சர்வ கொள்ளை அடிக்கிறார்களே! அந்த அரசர்களும் எங்களுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா? அலெக்ஸாண்டர் (Alexander) முதலிய சுத்த வீரர்கள் தாங்கள் பிடித்த தேசங்களை மறுபடியும் கொடுத்து விட்டதாக அவர்களுக்குப் புகழ்ச்சியாகச் சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். புருஷர்களையெல்லாங் கொலை செய்து அவர்களுடைய மாட மாளிகைகளையெல்லாங் கொள்ளையிட்டபிறகு, நிராதரவான கைம்பெண்சாதிகளும் சிறு பிள்ளைகளும் நிறைந்த தேசத்தை மறுபடியும் பழைய அரசனுக்குக் கொடுப்பதினால் என்ன பிரயோசனம்? அப்படிக் கொடுப்பது பெருமையாயிருக்குமானால் நானும் திருடிய ஒரு ரூபாயை மறுபடியும் அந்தத் தையற்காரன் முன்பாக எறிந்து விடவில்லையா? அலெக்சான்றார் முதலிய சுத்த வீரர்கள், தங்கள் சத்துருக்களுடைய பெண்சாதி பிள்ளைகளை உபத்திரவம் செய்த தில்லை யென்று, சரிதாசிரியர்கள் சொல்லுகிறார்கள். பெண்டுகளையும் பிள்ளைகளையும் திருடுகிற தில்லை யென்று, நானும் பிரதிக்ஞை செய்து கொள்ள வில்லையா? ஒரு கொலை செய்தவனுக்கு, மரண தண்டனை விதிக்கிறீர்கள். அப்படியானால், இலக்ஷாதி லக்ஷம் கொலைகளும் கொள்ளைகளும் செய்கிற அந்த அரசர்களுக்கு, எப்படிப் பட்ட தண்டனை விதிக்க வேண்டும்? பின்னும், ஜனங்கள் தாங்கக் கூடாத பல வரிகளைச் சுமத்திக் கொடுமை செய்கிற அரசர்களும், பெரும் கொள்ளைக் காரர்கள் தானே? ஒரு கொடுங்கோல் மன்னன் அநியாய வரிகள் வாங்கினபடியால், ஒரு எளியவன் தனக்கு வரி கொடுக்க நிர்வாகமில்லையென்று, அரசனுக்கு அறிவித்தான். அரசன், "நீ வரி கொடாவிட்டால், நம்முடைய தேசத்திலிருக்கக் கூடாது" என்றான். எளியவன், "நான் எங்கே போவேன்!" என்று சொல்ல, அரசன், "சீரங்கப் பட்டணத்துக்குப் போ" என்றான். எளியவன், "சீரங்கப் பட்டணத்தை உம்முடைய அண்ணன் ஆளுகிற படியால், நான் அங்கே போக மாட்டேன்" என்றான். அரசன், "தஞ்சாவூருக்குப் போ" என, எளியவன், "அங்கேயும் உம்முடைய சிற்றப்பன் ஆளுகிறானே!" என்றான். "அப்படியானால், நரகத்துக்குப் போ" என்று அரசன் கோபத்தோடு சொல்ல, "அங்கே உம்முடைய தகப்பன், பாட்டன் முதலானவர்கள் நிலை பெற் றிருப்பதால், நான் அங்கேயும் போக மாட்டேன்” என்று எளியவன் மறுத்து விட்டான். இப்படிப்பட்ட கொடுங்கோல் மன்னர்களைப் பார்க்கிலும், நாங்கள் பொல்லாதவர்களா?


நியாயாதிபதிகள் முதலிய அதிகாரிகள் பரிதானத்தை அபேக்ஷிக்காத படி, அவர்களுக்குத் துரைத்தனத்தார் போதுமான சம்பளங்களை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அப்படியிருந்தும், அந்த அதிகாரிகள், பிரதி வழக்கிலும், உபய வர்திக ளிடத்திலும், கைலஞ்சம் வாங்கிக் கொண்டு, அதைச் சீரணிப்பிக்கும் பொருட்டு, இரு பக்ஷத்தாருக்கும் சிறிது சாதகமும், சிறிது பாதகமும் பண்ணுகிறார்கள். ஒருவனுக்கு முழுதுஞ் சாதகஞ் செய்யக்கூடாத பக்ஷத்தில் அவனிடத்தில் வாங்கின லஞ்சத்தைத் திருப்பிக் கொடாமல் இனிமேல் வரும் வழக்குக்கு அச்சாரமாக வைத்துக் கொள்ளுகிறார்கள். அன்றியும் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வருஷத்துக்கு வேண்டிய வஸ்திரங்களை வியாபாரிகள் கொடுக்கிறார்கள்; தானிய தவசங்களைப் பூபாலர்கள் கொடுக்கிறார்கள். அப்படியே உப்பு முதல் கற்பூரம் வரையில் உள்ள பல சரக்குகளையும் பல வியாபாரிகள் இலவசமாகக் கொடுக்கிறார்கள்; நாங்கள் அமாவாசையில் மட்டுந் திருடப்போகிறோம்; அந்த அதிகாரிகள் அகோராத்திரங் கொள்ளையடிக்கிற படியால் அவர்களுடைய கொள்ளைகளுக்கு எங்களுடைய கொள்ளைகள் உறை போடக் காணுமா? நாங்கள் திருடப்போன இடத்தில் அகப்பட்டுக் கொண்டு அந்த அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு வரும்போது “குயவனுக்குப் பல நாள் வேலை; தடியடிக்காரனுக்கு ஒரு நிமிஷ வேலை” என்பது போல், நாங்கள் வெகு காலம் பிரயாசைப் பட்டுத் திருடிவைத்த பொருள்களை அவர்கள் ஒரு நிமிஷத்தில் தட்டிப் பறித்துக் கொள்ளுகிறார்கள். திருடர்கள் இடத்திலும் திருடுகிற திருடர்கள் எப்படிப்பட்ட திருடர்களா யிருக்க வேண்டும்? சில புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்வதினால் தோஷபரிகாரம் ஆவதாகச் சில சமயிகள் சொல்லுகிறார்கள். ஆனால் அதை நாம் திருஷ்டாந்தமாகக் கண்டதில்லை. இந்த அதிகாரிகளுக்கு யார் கொடுக்கிறார்களோ அவர்கள் பெருங் குற்றவாளிகளாயிருந்தாலும் குற்ற நிவர்த்தி அடைகிறார்கள். அவர்களுக்குக் கொடாதவர்கள் மாசற்றவர்களா யிருந்தாலும் குற்றவாளிகள் போலத் தண்டிக்கப் படுகிறார்கள். சில அதிகாரிகள் ஒவ்வொரு வழக்கிலும் லஞ்சம் வாங்கினால் பெயர் கெட்டுப் போகுமென்று பயந்து, தங்கள் கிருகங்களில் நடக்கிற சுபா சுப முதலான விசேஷ தினங்களில், சகல பொருள்களையும் வாங்கிக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய கிருகங்களில் அடிக்கடி கலியாணங்களும் ருது சாந்திகளும் உப நயனங்களும் பிதுர் சிரார்த்தங்களும் வருகிற வழக்கம். ஒவ்வொரு அதிகாரியினுடைய குடும்பத்திலும் நூறு பெயர்களிருந்தால் எத்தனை சுபா சுபங்கள் நடக்குமோ அத்தனை சுபா சுபங்கள் ஒவ்வொருத்தருடைய வீட்டிலும் நடக்கின்றன. இதற்குக் காரணம் வருமானமேயன்றி வேறல்ல. அதிகாரியா யிருந்தாலும் யாராயிருந்தாலும், ஒவ்வொருவனுக்கு ஒரு தகப்பன் மட்டும் இருந்து இறந்து போயிருக்க வேண்டும். அப்படியிருக்க ஒவ்வொரு வருஷத்திலுந் தகப்பனுக்குப் பல சிரார்த்தங்கள் வருகிறது எவ்வளவு ஆச்சரியம்?

இரண்டு பூனைகளின் வியாச்சியத்தைக் குரங்கு எப்படி தீர்த்து விட்டதோ அப்படியே சில நியாயாதிபதிகள் தீர்த்துவிடுகிறார்கள். ஒரு பணியாரத்தைப் பிரித்துக் கொள்ளுகிற விஷயத்தில் இரண்டு பூனைகளுக்குள் விவாதம் நேரிட்டு அதைச் சமபாகமாகப் பிரித்துக் கொடுக்கும்படி அந்தப் பூனைகள் ஒரு குரங்கை வேண்டிக்கொண்டன. அந்தக் குரங்கு அந்தப் பணியாரத்தை இரண்டாகப் பிட்டு ஒரு தராசில் வைத்து நிறுத்தது. ஒரு பக்கத்துத் தட்டுக் கனமாயிருந்தபடியால் அதைச் சமன் செய்வதற்காக அந்தத் தட்டில் இருந்த பணியாரத்தில் ஒரு துண்டைக் குரங்கு வாயினால் கவ்வி விழுங்கிவிட்டது. பிறகு மற்றொரு தட்டுக் கீழே இழுத்தபடியால் அதிலும் ஒரு துண்டைக் குரங்கு வாயினாற் கவ்வித் தின்றுவிட்டது. இதைப் பார்த்த உடனே பூனைகளுக்குப் பயம் உண்டாகி “ஐயா! நீங்கள் நிறுத்தது போதும்! நாங்கள் திருப்தி ஆகிவிட்டோம்! எங்களுடைய பாகங்களை எங்களுக்குக் கொடுங்கள்!” என்று பிரார்த்தித்துக் கொண்டன. உடனே குரங்கு பூனைகளைப் பார்த்து ““நீங்கள் திருப்தி அடைந்தாலும் நாம் திருப்தி அடையவில்லை. இப்படிப்பட்ட சிக்கலான வியாச்சியத்தை ஆய்ந்தோய்ந்து பாராமல் அவசரமாகத் தீர்மானிக்கக்கூடாது”” என்று சொல் லிக் கொண்டு தராசைத் தூக்கி நிறுத்து நிறுத்துப் பக்ஷணத்தைத் துண்டு துண்டாகக் கடித்து பக்ஷிக்க ஆரம்பித்தது. பூனைகள் குரங்கை நோக்கி “ஓ! நியாயாதிபதியே! இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம். க்ஷேமமாயிருக்கிற பணியாரத்தையாவது எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றன. உடனே குரங்கு “ நான் பட்ட சிரமத்துக்குக் கூலி வேண்டாமா? சம்பளம் இல்லாமல் யாராவது உத்தியோகஞ் செய்வார்களா?” என்று சொல்லி மிச்சப் பணியாரத்தையும் பக்ஷித்துவிட்டது. அந்தக் குரங்கு செய்தது போல் விவாதப்படுகிற சொத்தைத் தாங்கள் அபகரித்துக் கொண்டு வழக்காளிக்கு ஒன்றுங் கொடாமல் துரத்திவிடுகிற நியாயாதிபதிகளும் உலகத்தில் இருக்கிறார்களே!

கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி என்பதுபோல் மாமிச பக்ஷணிகளான சில பெரிய அதிகாரிகள் அவர்களுடைய அதிகார எல்லைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகும்போது அக்கம்பக்கங்களில் உள்ள ஆடு மாடு முதலிய மிருகங்களும், கோழி கொக்கு முதலிய பக்ஷிகளும் அதமாய் விடுகின்றன. நூறு புலிகள் புறப்பட்டாலும் அத்தனை பிராணிகளை அவ்வளவு சீக்கிரத்தில் பக்ஷியா. நவ தானியங்களும் வைக்கோல் புல் விறகு முதலியவைகளும் பல கிராமங்களிலிருந்து சுமை சுமையாக வருகின்றன. அந்தப் பெரிய அதிகாரிகளுக்கு உபயோகமான சாமான்கள் போக, மீந்தவைகளைச் சில்லரை அதிகாரிகளாகிய துர்த்தேவதைகள் பங்கிட்டுக் கொள்ளுகிறார்கள். பின்னும் அவர்களுக்காகப் பந்தல் அலங்கரிக்கவும், தோரணங்கள் கட்டவும், வாழை கமுகு தென்னை முதலிய விருக்ஷங்களெல்லாம் வெட்டப்படுகின்றன. அவர்களுடைய சாமான்களைக் கொண்டு போவதற்காக ஊரில் உள்ள சகல வண்டிகளும் பலவந்தமாய்ப் பிடிக்கப்படுகின்றன. மேற் சொல்லிய தானியம் முதலியவைகளின் கிரயமும், வண்டி வாடகையும் உடையவர்களுக்குக் கிடைக்கின்றனவா அல்லவாவென்பது கடவுளுக்கு வெளிச்சம்.

பசுவுக்குப் புலியும், கிளிக்குப் பூனையுங் காவல் வைத்ததுபோல், ஜனங்களுக்குப் பாதுகாவலாகச் சில உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய அந்நியார்ஜிதங்கள் வாசாமகோசரமா யிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய செய்கைகளைத் திருடர்களாகிய நாங்கள் வெளிப்படுத்தினால் எங்களைப் போல நன்றி கெட்டவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய சகாயத்தால் நாங்கள் ஜீவிக்கிறோம்; எங்களால் அவர்கள் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு நாங்களே துணை; எங்களுக்கு அவர்கள் துணை. எங்களுடைய அந்தரங்களையெல்லாம் அவர்கள் அறிவார்கள்; அவர்களுடைய அந்தரங்களையெல்லாம் நாங்கள் அறிவோம். எங்களுடைய ரகசியங்களை அவர்களும் வெளியிடார்கள்; அவர்களுடைய ரகசியங்களையும் நாங்களும் பிரசித்தஞ் செய்யோம். அவர்களுடைய கிருபை இல்லாவிட்டால் எங்களில் அநேகர் தூக்கு மரத்தில் மாண்டுபோயிருப்பார்கள். அநேகர் காவற்கூட வாசிகளாயிருப்பார்கள். நாங்கள் திருடுகிற சொத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு கொடுக்கிறபடியால் அவர்கள் ஒருநாளும் எங்களைக் காட்டிக் கொடார்கள். குற்றம் அற்றவர்களையும் தங்களுக்குக் கொடாதவர்களையும் அவர்கள் பிடிக்கிறதேயன்றி, எங்கள் சோலிக்கு வருகிறதில்லை. ஆகையால் அவர்களுடைய செயல்களை வெளிப்படுத்தாமல் ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல் மறைத்துவிடுகிறேன்.

வஸ்திர வியாபாரிகளுடைய புரட்டுகள் சர்வ லோகப் பிரசித்த மானதால், அவைகளை நான் விவரிக்க வேண்டுவதில்லை. அவர்க ளுடைய வஸ்திரங்களின் இழைகளை எண்ணி னாலும், அவர்கள் செய்யும் குத்திரங்களை எண்ணு வது அசாத்தியம். அவர்கள் பழைய ஆடையைப் புதிதாக்கி, வெள்ளையைக் கறுப்பாக்கி, கறுப்பைச் சிவப்பாக்கி இந்திரஜால வித்தை செய்கிறார்கள். நல்ல வஸ்திரத்தைக் காட்டி அதற்குத் தக்க விலை வாங்கிக்கொண்டு, மட்ட வஸ்திரத்தைக் கொடுக்கிறார்கள். ஒரு வஸ்திரத்தை வைத்துக் கொண்டு கோடி வஸ்திரம் என்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு வாங்கின துணியைப் பத்து ரூபாய்க்கு வாங்கினதாகப் பட்டோலை காட்டுகிறார்கள். அவர்களுடைய மோசத்துக்குப் பயந்துகொண்டே ஆடு, மாடு முதலிய மிருகங்களும், பக்ஷிகளும் நிர்வஸ்திரமாயிருக்கின்றன. ஜைன விக்கிரகம் நிர்வாணமாயிருப்பதற்கும் சிவன் புலித்தோலையும் யானைத்தோலையும் தரித்துக் கொண்டதற்கு அது தான் காரணம்.

இரத்ந வியாபாரிகள் செய்யும் மாறுபாடுகள் அபாரம் அல்லவா? செங்கல்லை மாணிக்கமென்றும், வெண்கல்லை வயிரமென்றும், பசுங்கல்லை மரகதமென்றுஞ் சொல்லி அவர்கள் சகலரையும் ஏமாற்றவில்லையா? அந்தக் கற்களுக்கு மாற்று, உரை, நிறை இல்லாதபடியால் “கடல் மீனுக்கு நுழையனிட்டதே சட்டம்” என்பதுபோல, அந்த வியாபாரிகள் வாய்கொண்டமட்டும் விலை கூறி எத்திப் பறிக்கவில்லையா? சில பொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு கோடி பொடிகளென்று கோடி பொய்கள் சொல்லுகிறார்கள். அந்தக் கற்கள் பிரகாசியாவிட்டால் பாடவேளையில்லை யென்கிறார்கள். அவைகள் ஸ்வயம் பிரகாசம் உள்ளவைகளாயிருந்தால் எந்த வேளையிலும் பிரகாசியாமலிருப்பதற்குக் காரணம் என்ன? பல வியாபாரிகள் கூடி விலை மதிக்கும்போது, அவர்கள் சகலரும் அறிய வாயினாற் பேசிக்கொள்ளாமல் கைகளைத் துணியினால் மறைத்துக்கொண்டு, கைகளாற் பேசுகிறார்கள். அன்றியும் அவர்கள் பேசுவது பரிபாஷையே யல்லாமல் சரியான பாஷையிற் பேசுகிறதில்லை. அந்தக் கற்கள் உலகத்தில் இல்லாமற் போனால் யாருக்கு என்ன நஷ்டஞ் சம்பவிக்கக்கூடும்? அந்தச் செங்கல், வெண்கல், பசுங்கல்லைப் பார்க்கிலும் வீடு கட்ட உதவுகிற செங்கல், வெண்கல், கருங்கல் உலகத்துக்கு முக்கியம் அல்லவா? நிருபயோகமான அந்த ரத்நக் கற்களுக்கு ஜனங்களுடைய அறியாமையினால் மகிமை உண்டானதேயன்றி மற்றப்படி அல்லவே!

தட்டார்களுடைய புரட்டைச் சொல்ல எட்டாறு வாய்கள் இருந்தாலும் போதுமா? ஆயிரம் பேர் கண்ணை விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அத்தனை பெயர்களுடைய கண்களையுங் கட்டிவிட்டு, அரை வராகனெடைப் பொன்னில் கால்வராகனெடைப் பொன்னைத் திருடிக் கொண்டு செம்பைக் கலந்து விடுகிறார்கள். இரும்பு முதலிய உலோகங்களைத் தங்கம் ஆக்குகிற வாதிகளிருப்பதாக உலகத்தார் சொல்லுகிறார்கள். அவர்கள் இந்தத் தட்டார்களேயன்றி வேறொருவரையும் நாம் பிரத்தியக்ஷமாகக் கண்டதில்லை. அவர்கள் திருடித் திருடி எவ்வளவு கைபழகியிருக்கிறார்களென்றால் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக நகை செய்தாலுங்கூட அதிலுஞ் சிறிது பொன்னைத் திருடிக் கொள்வார்கள். நாம் மலையளவு பொன் கொடுத்தாலும் அதைக் கடுகு அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கடுகு அளவு பொன் கொடுத்தாலும் அதை மலை அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கையிலிருக்கிற பொன் ஆறுமாற்றாயிருந்தாலும் பத்து மாற்றாகக் காட்டுவார்கள். நம்முடைய கையிலிருக்கிற பொன் பத்து மாற்றாயிருந்தாலும் ஆறு மாற்றாக மாற்றுவார்கள். அவர்கள் கையிலிருக்கிற இரும்பையுந் தங்கமாகிக் கொடுப்பார்கள். ஆபரணஞ் செய்கிற விஷயத்தில் தட்டார்கள் செய்யும் கரவடங்களுக்குப் பயந்தே சிவன் சர்ப்பாபரணந்தரித்துக் கொண்டதாக ஒரு புலவர் பாடியிருக்கிறார்:—

கட்டளைக் கலித்துறை

ஒட்டாக வொட்டியுங் காற்பொன்னின் மாப்பொன்னு பாயமதாத்
தட்டா திரான்பணி செய்யா திரான்செம்பொன் மேருவினைக்
கட்டாகக் கட்டிக் கடுவள வாநிறை காட்டவல்ல
தட்டானுக் கஞ்சியல் லோஅணிந் தான்சிவன் சர்ப்பத்தையே.

தட்டார்கள் எட்டு நாளையில் ஒரு நகை செய்து கொடுப்ப தாக ஒப்புக்கொண்டால், எட்டு வருஷத்திலுங் கொடார்கள். அவர்கள் சொல்லும் சாக்குகளும் போக்குகளும் ஜாலங்களும் தெரியும் பொருட்டுப், பூர்வீக சங்கராசாரியார் காலத்தில் நடந்த ஒரு விசேஷத்தைத் தெரிவிக்கிறேன். சகல சாஸ்திரங்களிலும் வித்தைகளிலுந் தொழில்களிலும் நிபுணரான அந்த சங்கராசாரியார் பல தொழிலாளிகளும் வந்து தம்மைப் பரீக்ஷிக்கும்படி விளம்பரஞ் செய்தார். அந்தப் பிரகாரம் பலரும் வந்து அவரைப் பரீக்ஷித்தது மன்றி. தட்டாரும் அவரைச் சோதிக்க வந்தார்கள். அவர் தட்டார்களைப் பார்த்து எட்டு நாளைக்குப் பிறகு வரும்படி ஆக்ஞாபித்தார். அவர்கள் அந்தப்படி வந்தார்கள். நாலு நாளைக்குப் பிறகு வரும்படி மறுபடியும் உத்தரவு செய்தார். அவர்கள் அந்தப் பிரகாரமும் வந்தார்கள். இரண்டு நாளைக்குப் பிறகு வரும்படி உத்தரவு செய்து அந்தப்படிக்கு வந்து அலைந்தார்கள். பிறகு ““நாளைக்கு வாருங்கள்! நாளைக்கு வாருங்கள்!” என்று அநேக மாசக்காலம் அவர்களை அலைக்கழித்தார். இந்தப் பிரகாரம் இழுத்துவிடுவது கம்மாளர்களுடைய வழக்கமானதால் அவர்கள் சங்கராசாரியாரைப் பார்த்து “ஸ்வாமி! எங்களுடைய வித்தை உங்களுக்குப் பூரணமாய் வந்து விட்டது. இனி மேல் உங்களைப் பரீக்ஷிக்க வேண்டுவதில்லை”” என்று சொல்லி யோக்கியப் பத்திரிகை கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். வஸ்திர வியாபாரமும், ரத்ந வியாபாரமும், தட்டார் தொழிலும் உலகத்தில் நடப்பது ஸ்திரீகள் பொருட்டாகவே யல்லாமல் மற்றப்படி அல்ல. உலகத்தில் ஸ்திரீகள் இல்லாமலிருந்தால் அந்த வியாபாரிகள் இல்லாமற் போனால் ஸ்திரீகளுடைய ஜபம் நடக்குமா?

அரசர்கள் தேசங்களைத் திருடுகிறதுபோலப் பெரிய பெரிய மிராஸ்தார்கள் தங்களுக்கு அடுத்த சின்ன மிராஸ்தார்களுடைய நிலங்களைக் கொஞ்சங் கொஞ்சமாய்த் திருடிச் சேர்த்துக் கொள்கிறார்களே! இந்த ஸ்தாவரத் திருட்டைப் பார்க்கிலும் எங்களுடைய ஜங்கமத் திருட்டு மீசரமா?

நான் இது வரையில் மனுஷர்களுடைய சொத்தைத் திருடுகிற திருடர்களைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன். தெய்வ சொத்தைத் திருடுகிற திருடர்கள் எத்தனையோ பெயர்கள் இருக்கிறார்கள். தேவாலயம், தர்ம சத்திரம் முதலியவைகளின் விசாரணைக் கர்த்தர்களும், மற்ற உத்தியோகஸ்தர்களும் தினந்தோறும் அடிக்கிற கொள்ளைகள் எண்ணித் தொலையுமா? ஏட்டில் அடங்குமா? இப்படியாக உலகத்தில் எண்ணிக்கை யில்லாத பகற் கொள்ளைக்காரர்கள் இருக்க அவர்களையெல்லாந் தண்டிக்காமல் விட்டு விட்டுத் தரித்திரத்தின் கொடுமையினால் திருடப் புகுந்த என் மேலே தாங்கள் குற்றம் பாரிப்பது தர்மமா?” என்றான். இதைக் கேட்டவுடனே தேவராஜப் பிள்ளை அந்தத் திருடனுடைய குடும்ப ஸ்திதியைப் பற்றியும், அவனுடைய யோக்கியதையைப் பற்றியும் பல பெயர்களை விசாரித்தார். அவனுடைய குடும்ப விஷயத்தைப் பற்றி அவன் சொன்னதெல்லாம் வாஸ்தவமென்றும் தெரிந்து கொண்டு அவனைப் பார்த்துச் சொல்லுகிறார்:— ““நீ குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறபடியால் உன்னைத் தண்டிக்காமல் விடுவது நியாயப் பிரமாணத்துக்குச் சரியாயிராது. ஆயினும் நீ செய்த குற்றத்தின் பளுவைக் குறைக்கும்படியான சில சாதகங்கள் உன் பக்ஷத்தில் இருக்கிறபடியால் ஒரு மாசமட்டும் நீ வெறுங்காவலிலிருக்கும்படி அற்பமாகத் தீர்மானிக்கிறோம். யுபல நாளைத் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ரு என்கிற பழமொழிப்படி நீ சொன்ன பகற் கொள்ளைக்காரர்கள் ஒரு நாள் அகப்பட்டுத் தண்டிக்கப் படுவார்கள். அவர்களுடைய தண்டனை உன்னுடைய தண்டனையைப் போல அற்பமாயிராது” என்றார். அந்தத் திருடன் காவற்கூடத்திலிருந்து விடுதலையான உடனே தேவராஜப் பிள்ளை அவனுக்கு ஒரு கிராமச் சேவகஞ் செய்துகொடுத்து அவன் பிரமாணிக்கமாய் வேலை பார்த்து வருகிறான். அந்தத் திருடனுக்கு முடிவில் நல்ல கதி வாய்த்தது போல் அவன் சொன்ன பகற்கொள்ளைக் காரர்களுக்கும் முடிவில் நல்ல கதி வாய்க்குமா என்பது சந்தே காஸ்பதமா யிருக்கிறது.