உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 33

விக்கிமூலம் இலிருந்து


33-ஆம் அதிகாரம்
குணபூஷணி சரித்திரம்—மூத்தாள் மகனை
இளையாள் கொடுமை செய்தது
திருட்டுக் கலியாணம்


ஆதியூரில் அருமை நாதபிள்ளை என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல், ஏக காலத்தில் இரண்டு தாரங்களை மணம் செய்துகொண்டான். அந்தத் தாரங்கள் இருவருஞ் சகோதரிகள். கலியாணம் நடந்த மறு வருஷத்தில் மூத்தவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள். அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாசத்துக்குப் பின்பு இளைய தாரமும் ஒரு புத்திரியைப் பெற்றாள். மூத்த தாரத்தின் மகள் பேர் குணபூஷணி. இளைய தாரத்தின் மகள் பெயர் மோகனமாலை. அந்தப் பெண்களுக்குப் பத்து வயசு நடக்கும்போது மூத்த தாரம் இறந்து அவளுடைய முன்னோர்கள் போன இடத்துக்குப் போய்விட்டாள். அவள் இறந்துபோன பிறகு அவளுடைய மகளான குணபூஷணி, இடத்தில் கஷ்டகாலம் வந்து இஷ்டஞ் செய்ய ஆரம்பித்தது. சிட்டுக் குருவி மேல் பாரதந் தொடுத்தது போல, சிறிய தாயாரும் அவளுடைய மகளும் குணபூஷணியை எப்போதும் சிறுமைப் படுத்தினார்கள். மோகன மாலை கட்டிக் கழித்த பழந்துணிகளைக் கட்டிக் கொள்ளுகிறதே யல்லாது, குண பூஷணி நல்ல வஸ்திரங்களைக் கட்டி அறியாள். எல்லாருஞ் சாப்பிட்டு மிஞ்சின உச்சிட்டத்தை உண்கிறதே தவிர, நல்ல சாதம் அருந்தி அறியாள். வருஷத்துக்கு ஒரு தரம் தீபாவளியில், அவள் தேகத்தில் எண்ணெய் பட்டிருக்குமோ என்னவோ அதுவும் சந்தேகம். சிட்டுக் குருவியின் தலை மேலே பனங்காயைக் கட்டினது போல, வீட்டு வேலைகளையெல்லாம் அவளே செய்யும்படி அவள் மேல் சுமத்தினார்கள். சிறிய தாயாருக்கும் அவளுடைய மகளுக்கும் வேலை யென்னவென்றால் குணபூஷணியைத் திட்டுகிறதும் அடிக்கிறதும் கொடுமை செய்கிறதேயன்றி வேறொரு வேலையும் இல்லை. அவர்கள் என்ன கொடுமை செய்தாலும் பொறுமையை அநுசரித்து வந்தாள். அவளுடைய தகப்பன் இளைய தாரத்தினுடைய கோளைக் கேட்டுக் கொண்டு மகளுக்கு நடக்கிற அநியாயங்களை விசாரிக்காமல் பாராமுகமாயிருந்து விட்டான். அதனால் அருமைநாத பிள்ளைக்கு எருமைநாதப் பிள்ளை யென்கிற பட்டப் பெயர் கிடைத்தது.

புஷ்பத்தை மறைத்து வைத்தாலும் அதனுடைய வாசனை காட்டிவிடுவது போல, குணபூஷணி குளிக்காமலும் முழுகாமலும், நல்ல ஆடையாபரணங்களைத் தரியாமலும் இருந்த போதிலும் அவளுடைய அழகுங் குணமும் ஊரெங்கும் பிரகாசித்தபடியால், அவளை மணங் செய்ய விரும்பாதவர்கள் இல்லை. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டினது போல, மோகனமாலை சர்வாபரணபூஷிதையா யிருந்தாலும் அவளுடைய துர்க்குணம் யாவருக்கும் பிரசித்தமான படியால் அவளை மணஞ்செய்ய விரும்புவார்களும் இல்லை. அதனால் அவளுடைய தாயாருக்கு அதிக பொறாமையும் மாற்சரியமும் உண்டாகி குணபூஷணி மேலே இல்லாத தோஷங்களைக் கற்பித்து அவளை ஒருவருங் கொள்ளாதபடி விகாதஞ் செய்து வந்தாள். நாகப்பட்டணத்திலிருக்கும் நல்லதம்பி பிள்ளையென்று பெயர் கொண்ட ஒரு கனவானுக்குப் பென் விசாரிக்கிறதற்காகச் சில ஸ்திரீகள் ஆதியூருக்கு வந்தார்கள். அவர் அருமைநாத பிள்ளைக்கு இரண்டு புத்திரிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பெண்களுடைய குணத்தைத் தாங்களே நேராக அறிந்து கொள்ளும்பொருட்டுச் சில நாள் வரைக்கும் அருமநாதப் பிள்ளை வீட்டிலே தங்கியிருந்தார்கள். அவர்கள் குணபூஷணியே யோக்கியமான பெண்ணென்று அதி சீக்கிரத்தில் கண்டுபிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய அபிப்பிராயம் சிறிய தாயாருக்குத் தெரிந்து, அந்த நல்ல அபிப்பிராயத்தைக் கெடுக்கும்பொருட்டு அவள் குணபூஷணி மேலே பிரமாண்டமான ஒரு திருட்டுக் குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தாள். பெண் பார்க்க வந்திருந்த அந்த ஸ்திரீகளுடைய பணப்பையைச் சிறிய தாயார் திருடி ஒருவருக்குந் தெரியாமல் குணபூஷணியினுடைய பெட்டியில் வைத்து மறைத்து விட்டாள். அந்த ஸ்திரீகள் பணப்பையைக் காணோமென்று தேடினபோது, எல்லோருடைய பெட்டிகளையுஞ் சோதிக்கும்படி சிறிய தாயாரே அவர்களைத் தூண்டிவிட்டாள். ஒருவருடைய பெட்டியிலும் பணப்பை அகப்படாமல் குணபூஷணியின் பெட்டியில் அகப்பட்டபோது அவள் திடுக்கிட்டு நடுநடுங்கித் தான் திருடவேயில்லை யென்று சொல்லி அழுதாள். உடனே அவளுடைய சிறிய தாயார் அவளைப் பார்த்து “நீலிக்குக் கண்ணீர் நிலைமையிலே என்பது போல் ஏன் கள்ள அழுகை அழுகிறாய்? நீ திருடாவிட்டால் அந்தப் பை உன் பெட்டியில் எப்படி வந்திருக்கக் கூடும்? கையுங் களவுமாக அகப்பட்டுக் கொண்ட பிறகு கூட ஏன் பாசாங்கு பண்ணுகிறாய்? நீ எப்போதும் பசப்புக் கள்ளி யென்பது எனக்குத் தெரியாதா?” என்றாள். சிறிய தாயாருடைய வார்த்தையை மறுத்துப் பேசத் துணியாமல் குணபூஷணி அழுதுகொண்டு மௌனமாயிருந்தாள். அவளுடைய முகத் தோற்றத்தினாலும் நிஷ்கபடமான வார்த்தைகளாலும் அவள் மாசற்றவளென்று ஊரிலிருந்து வந்த ஸ்திரீகள் அபிப்பிராயப் பட்டாலும் அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே தோஷாரோபணம் பண்ணினபடியால் அவள் தோஷக்கிரஸ்தி யென்று அவர்களும் நினைக்கும்படியா யிருந்தது. ஆகையால் அவர்கள் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி மோகனமாலையைக் கன்னிகாதானஞ் செய்து கொடுக்க வேண்டுமென்று அவளுடைய தாய் தந்தையரைப் பிரார்த்தித்தார்கள். அதற்கு அவர்கள் நிராக்ஷேபமாகச் சம்மதித்தார்கள். மணமகனுடைய ஊர் தூரமானதால் ஒரு மாசத்துக்குப் பிறகு விவாகஞ் செய்கிறதென்று முகூர்த்த தினமுங் குறிக்கப் பட்டது. அந்த ஸ்திரீகள் நாகப்பட்டணத்துப் போய் மணமகன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு முகூர்த்த நாளைக்கு முன் வந்து சேர்வதாகச் செலவு பெற்றுக்கொண்டு போய் விட்டார்கள். கலியாணத்துக்கு வேண்டிய ஆடையாபரணங்கள் சாமக்கிரியைகள் முதலியவைகளை யெல்லாம் சேகரஞ் செய்துகொண்டு மாப்பிள்ளை முதலானவர்கள் நாகப்பட்டணத்தை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள் காட்டின் மத்தியில் போகும்போது, திருடர்கள் வந்து வளைத்துக் கொண்டு அவர்கள் கையிலிருந்த சகல சொத்துக்களையும் பறித்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்கள். மாப்பிளை முதலானவர்களுக்கு இடுப்பில் கட்டிக் கொள்வதற்குக் கூட வஸ்திரமில்லாமற் சகல சொத்துக்களையும் இழந்து கோவணாண்டிகளாகி விட்டதால் அந்தக் கோலத்தோடு கலியாண வீட்டுக்குப் போக வெட்கப்பட்டுக் கொண்டு அவர்கள் நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். கள்ளர்களே என்றால் அவர்கள் கொள்ளையடித்த ஆஸ்திகளைப் பிதுரார்ஜிதம் போல் பாகித்துக் கொண்டார்கள். மாப்பிளையினுடைய வேலைக்காரனே திருடர்களுக்கு உளவாயிருந்து திருடும்படி செய்வித்ததால், அவன் மூலமாகப் பெண் வீட்டுக் காரர்களுடைய ஊர், பெயர் முதலான சகல விவரங்களையும் திருடர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களில் “அஞ்சாத சிங்கம்” என்று பெயர் கொண்ட ஒரு சோரன் மற்றவர்களைப் பார்த்துச் சொல்லுகிறான்:—

““அண்ணன்மார்களே! கலியாணக்காரர்களிடத்தில் அடிக்கிற கொள்ளையேயல்லாமல் மற்றக் கொள்ளைகளெல்லாம் கொள்ளையே. இந்த ஒரு திருட்டில் நமக்கு எவ்வளவோ திரவியங்கள் கிடைத்தன. நாம் பத்து மாசம் வரைக்கும் ஓயாமல் திருடினாலும் இவ்வளவு சொத்துகள் நமக்குக் கிடைக்குமா? நாம் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடத்தில் திருடிக் கொண்டதால் இனி மேல் பெண் வீட்டுக்காரகளிடத்திலும் திருடுவது நியாயமாயிருக்கின்றது. பெண் வீட்டுக்காரர்களுடைய ஊர், பெயர் முதலான சகல விவரங்களும், முகூர்த்த தினமும் உளவன் மூலமாக நாம் அறிந்து கொண்டோம். அவர்களுக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இதற்கு முன் பரிச்சயமில்லை யென்பதும் நன்றாய் விளங்குகின்றது. ஆகையால் நாம் பெண் வீட்டுக்குப் போய் நாமே நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளை முதலானவர்களென்று பாசாங்கு பண்ணி அந்தப் பெண்ணுக்குத் தாலி கட்டி ஒரு ராத்திரி மட்டும் அங்கே தங்கியிருந்து அகப்பட்ட சொத்துக்களை யெல்லாங் கவர்ந்துகொண்டு ஓடிவந்து விடலாமென்று யோசிக்கிறேன்” என்றான். இதைக் கேட்டவுடனே மற்றவர்கள் அவனைப் பார்த்து “தம்பீ! உன்னுடைய சாமர்த்தியமே சாமர்த்தியம். ராஜரீக தந்திர நிபுணர்களுக்குக் கூட உன்னுடைய புத்தியும் யுக்தியும் வருமா? அஞ்சாத சிங்கம் என்ற பெயர் உனக்கே தகும். நீ சொல்லுகிற காரியம் நிறைவேறி நம்முடைய எண்ணம் முற்றினால் இராமாயணம் மகாபாரதம் முதலிய மகா காவியங்கள் போல் உன் சரித்திரத்தையும் வித்வான்களைக் கொண்டு பாடுவித்து உன்னைத் தெய்வீகம் ஆக்கிவிடச் சித்தமாயிருக்கிறோம்” என்றார்கள். ஆனால் சில திருடர்கள் அஞ்சாத சிங்கத்தின் அபிப்பிராயத்தை அங்கீகரிக்காமல் அவர்களுடைய பாகச் சொத்தை வாங்கிக் கொண்டு தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். அஞ்சாத சிங்கம் உள்பட ஆறு திருடர்கள் மட்டும் பெண்வீட்டுக்குப் போகவும் நினைத்த காரியத்தை முடிக்கவும் துணிந்தார்கள்.

அஞ்சாத சிங்கம் முகவசீகரம் உள்ளவனாகவும், பராக்கிரமசாலியாகவும் இருந்தபடியால் அவன் மணமகன் போல வேஷம் பூண்டுகொண்டான். மற்றவர்கள் எல்லாரும் அவனுடன் கூடக் கலியாணத்துக்கு வந்த பந்துக்கள் போலப் புருஷீகரித்தார்கள். அவர்கள் எல்லாரும் புறப்பட்டு முகூர்த்த தினத்துக்கு முந்தின நாள் இரவில் பெண் வீட்டிற் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளையும் அவனுடைய மனைவியும் வினவ, அவர்களைப் பார்த்து அஞ்சாத சிங்கம் சொல்லுகிறான்:- நாகப்பட்டணத்திலிருக்கும் நல்லதம்பி பிள்ளை நான் தான்; உங்களுடைய உத்தரவுப் படி புருஷர்களும் ஸ்திரீகளும் உட்பட நாங்கள் இருபது பேர் புறப்பட்டு வழியில் வரும் போது, திருடர்கள் வந்து வளைத்துக்கொண்டு எங்கள் கைவசமாயிருந்த சகல சொத்துக்களையுங் கொள்ளை யடித்துக் கொண்டு போய்விட்டார்கள். என்னுடைய இடுப்பிலிருக்கிற பாடி வஸ்திரந் தவிர மற்ற வஸ்திராபரணங்களையெல்லாங் கொள்ளை போய்விட்டன. எங்களுடன் கூட வந்த மற்றப் புருஷர்களும் ஸ்திரீ ஜனங்களும் இடுப்பிற் கட்டிக் கொள்ளக் கூடத் தகுந்த வஸ்திரம் இல்லாமையினால் கலியாண வீட்டுக்கு வர வெட்கப்பட்டு நாகப்பட்டணத்துக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். நீங்கள் குறித்த முகூர்த்தம் தவறிப் போகாமலிருக்க வேண்டியதற்காக நாங்கள் ஆறு பேர் மட்டும் ஊருக்குத் திரும்பாமல் உங்களிடம் வந்து சேர்ந்தோம்” என்றான். இதைக் கேட்டவுடனே அருமைநாதப் பிள்ளையும் மற்றவர்களும் அவன் உண்மையான மாப்பிள்ளையென்றும் அவன் சொன்னதெல்லாம் யதார்த்தமென்றும் நம்பிக்கை கொண்டார்கள். மாப்பிள்ளையைப் பார்த்தவுடனே மாமனாருக்கு ஒரு புஜம் இரு புஜமாகவும் இரு புஜம் இருபத்து நாலு புஜமாகவும் ஆயின. மாமியார் எட்டி எட்டிப் பார்த்து மனம் பூரித்தாள். மணமகள் அடுத்த அறையிலிருந்துகொண்டு மணமகனுடைய இனிமையான குரலைக் கேட்டுக் கேட்டு மன மகிழ்ந்தாள். அருமைநாத பிள்ளை அந்தத் திருட்டு மாப்பிள்ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “என்னுடைய அருமையான மாப்பிள்ளைத் துரையே! உம்மைக் கண்டேன்; கண் குளிர்ந்தேன்; உம்மைத் தரிசித்தது எனக்கு நேத்திரோற்சவஞ் செய்தது போலிருக்கின்றது. என்னுடைய மகளுடைய பாக்கியமே பாக்கியம்! ரதிக்கு மன்மதன் வாய்த்தது போலவும், இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போலவும், என்னுடைய மகளுக்கு மணவாளனாக வந்து வாய்த்தீர்! இப்படிப்பட்ட லோகோத்தரமான மாப்பிள்ளை யாருக்காவது கிடைக்குமா? திருடர்களிடத்திலே பறி கொடுத்ததைப் பற்றி நீர் எவ்வளவுஞ் சிந்திக்க வேண்டாம். இந்த நிமிஷ முதல் என்னுடைய கிருகமும் திரவியங்களும் என்னுடைய மகளும் உம்முடைய ஆதீனந்தான்” என்று சொல்லிச் சொல்லி நடுச்சாமம் வரைக்கும் மாப்பிள்ளையைப் புகழ்ந்து கொண்டிருந்தான். மறு நாள் உதய முகூர்த்தமானதால் நடுச் சாமந் துவக்கி மணமகளையும் மணமகனையும் அலங்காரஞ் செய்தார்கள். விடிந்த உடனே மணமகன் மணக்கோலத்துடன் கல்யாண பீடத்தில் உட்கார்ந்து பெண்ணுக்குத் திருமாங்கலியமுஞ் சூட்டினான். வேத விதிப்படி நடக்கவேண்டிய மற்றக் கிரியாசாரங்களும் கிரமப்படி நடந்தன. இவ்வாறாகத் திருட்டு மாப்பிள்ளைக்கும் மோகனமாலைக்கும் விவாகம் நிறைவேறிய பின்பு, நாகப்பட்டணத்திலிருந்து உண்மையான மாப்பிள்ளையாகிய நல்லதம்பி பிள்ளையும் அவனுக்குச் சொந்தமான சில புருஷர்களும் வந்து கலியாண வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் ஒருவருக்கும் முகப்பழக்கமில்லாதவர்களான படியால் அவர்கள் யாரென்று அருமைநாத பிள்ளை வினவினான். உடனே நல்லதம்பி பிள்ளை தான் இன்னானென்று தெரிவித்ததுந் தவிரத் தானும் மற்றவர்களும் புறப்பட்டு மார்க்கத்தில் வரும்போது கொள்ளை நடந்ததும், தாங்கள் ஊருக்குத் திரும்பிப் போய்ச் சாமான்கள் சேகரித்துக் கொண்டு வந்ததும் முதலான விவரங்களையும் தெரிவித்தான். இதைக் கேட்டவுடனே அங்கே இருந்தவர்களெல்லாம் பிரமித்து மயங்கி நின்றார்கள். உடனே திருட்டு மாப்பிள்ளையாகிய அஞ்சாத சிங்கம் அந்த உண்மையான மாப்பிள்ளையைப் பார்த்து “அட! சண்டாளா! என் தகப்பனை உன் தகப்பனென்றும், என் பெயரை உன் பெயரென்றும் சுத்த அபாண்டமான பெயரைச் சொல்லுகிறாயே! உன் தலை மேலே இடி விழாதா? நீயும் இப்போது வந்திருப்பவர்களுந் தானே எங்களை வழிப்பறி செய்தீர்கள். அது போதாதென்று மாப்பிள்ளை வேஷம் போட்டுக் கொண்டு இங்குந் திருட வந்துவிட்டீர்களா? இப்போது நீங்கள் தரித்திருக்கிற ஆடையாபரணங்கள் எங்கள் உடைமைகள் அல்லவா? அவைகளுக்கு வாயிருந்தால் அவைகளே எங்களுக்குச் சாக்ஷி சொல்லுமே!” என்று வெண்கலக் கடையில் மதயானை புகுந்தது போல் மடமடவென்று மூச்சு விடாமல் நெடு நேரம் பேசினான். இதைக் கேட்டவர்கள் அஞ்சாத சிங்கம் தான் உண்மையான மாப்பிள்ளையென்றும் உண்மையான மாப்பிள்ளையைத் திருடனென்றுங் கிராஹியஞ் செய்தார்கள்; அஞ்சாத சிங்கமே தாலி கட்டிக் கலியாணம் முடிந்து போய்விட்டபடியால் எல்லாரும் அவன் பக்ஷத்திலிருந்தார்கள். உண்மையான மாப்பிள்ளையானவன் நெடு நேரம் மலைத்துப் போயிருந்து பிறகு சொல்லுகிறான்:- “கலியாணம் நிறைவேறிக் காரியம் முடிந்து போய் விட்டதால் இனி மேல் நான் இன்னானென்று நிரூபணஞ் செய்வதினால் ஒரு லாபமுமில்லை. ஆயினும் என்னை அவன் திருடனென்று சொல்லுகிறபடியால் அவன் திருடனா நான் திருடனா வென்று ஒரு நிமிஷத்தில் மெய்ப்பிக்கிறேன். இந்த ஊரிலும் எனக்கு அறிமுகமான சில கனவான்களிருக்கிற படியால் அவர்களை அழைத்து வந்து உங்களுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறேன்” என்று சொல்லி அவனும் அவனுடன் கூட வந்தவர்களும் வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் வீண் போக்குச் சொல்லிப் போய்விட்டதாகவும், இனி மேல் திரும்பி வரமாட்டார்களென்றும் பெண் வீட்டார்கள் எண்ணிக் கொண்டார்கள். ஆனால் அஞ்சாத சிங்கம் மட்டும் அஞ்சுகிற சிங்கம் ஆனான். ““தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை, தாய அறியாத சூல் இல்லை”” என்பது போல், தான் செய்த காரியந் தனக்கே தெரியுமானதால் அந்த உண்மையான மாப்பிள்ளை தகுந்த மனுஷர்களைக் கொண்டு வந்து உண்மையை ருசிப்பித்தால் என்ன செய்கிறதென்ற பயங்கரம் அஞ்சாத சிங்கத்தைப் பிடித்துக் கொண்டது. கலியாண வீட்டில் எல்லாரும் பலபல வேலைகளிற் பிரவேசித்துப் பராக்கா யிருக்கும் போது அஞ்சாத சிங்கமும் அவனைச் சேர்ந்தவர்களும் அவர்கள் மேலே தரித்திருந்த விலை மதிக்கக்கூடாத, வஸ்திர பூஷணாதிகளுடன் அற்ப சங்கைக்குப் போகிறவர்கள் போற் கொல்லைத் தோட்டத்துக்குள் நுழைந்து சுவரேறிக் குதித்து சமீபத்திலிருக்கிற மலைகள் சூழ்ந்த காட்டுக்குள்ளே நுழைந்து ஒளிந்துகொண்டார்கள்.

சாக்ஷி கொண்டுவரப் போன நல்லதம்பி பிள்ளை, சில பெரிய மனுஷர்களை அழைத்துக்கொண்டு கலியாண வீட்டுக்கு வந்தான். அவர்கள் அருமைநாத பிள்ளைக்கு உண்மையைத் தெரிவித்ததும் தவிர “மணமகளுக்குத் தாலி கட்டின மாப்பிள்ளை எங்கே?” என்று வினவினார்கள். உடனே மாப்பிளையைத் தேட ஆரம்பித்தார்கள். அநுமார் இலங்கையிலே சீதையைத் தேடினதுபோல் கோட்டைகள் கொத்தளங்கள் மூலைகள் முடுக்குகள் சந்துகள் பொந்துகள் கோயில்கள் குளங்கள் தெருக்கள் திண்ணைகள் தோட்டங்கள் துரவுகள் எங்கும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்தார்கள். மாப்பிள்ளையும் அகப்படவில்லை. மாப்பிள்ளையைச் சேர்ந்தவர்களும் அகப்படவில்லை. ““சந்தையில் அடித்ததற்குச் சாக்ஷியா?”” என்பதுபோல், அவர்கள் திருடர்களென்பதற்கு அவர்கள் தரித்திருந்த ஆடையாபரணங்களுடன் ஓடிப் போய்விட்டதே பிரத்தியக்ஷ நிதரிசனமானதால் அந்தச் சுப வீடு அசுபவீடாகி, அருமைநாதப் பிள்ளயும் அவனுடைய பெண்சாதி முதலானவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு குய்யோ முறையோவென்று கதறி அழுதார்கள். இந்தச் சமாசாரங்களெல்லாம் தேவராஜப் பிள்ளை கேள்விப்பட்டு, அவர் என்னையும் கனகசபையையும் அழைத்துக் கொண்டு கலியாணவீட்டுக்குப் போனார். நாங்கள் போகும்போது அருமைநாத பிள்ளை மனைவி பெருஞ்சப்தத்துடன் ஒப்பாரி சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அந்த ஒப்பாரியில் “ “அக்காள் மகளை அநியாயஞ் செய்தேனே! பையை எடுத்தேன்! பழியவற்மேற் போட்டேனே! ஐயையோ! தெய்வமே! அத்தனையும் வீணாச்சே!”” என்று சொல்லி அழுதாள்.

தேவராஜப் பிள்ளை அங்கேயிருந்தவர்களைப் பார்த்து “அந்த ஸ்திரீ அவ்வகையாக ஒப்பாரி சொல்லி அழவேண்டிய காரணம் என்ன?” என்று விசாரித்தார். உடனே அவர்கள் அக்காள் மகளுக்கு அவள் செய்த கொடுமைகளைத் தேவராஜப் பிள்ளைக்கு ரகசியமாகத் தெரிவித்தார்கள். “பையை எடுத்தேனே பழியவற்மேற் போட்டேனே!” என்றதற்குப் பயன் என்னவென்று மறுபடியும் தேவராஜப் பிள்ளை வினவினார். உடனே நாகப்பட்டணத்திலிருந்து வந்த நல்லதம்பி பிள்ளை தேவராஜப் பிள்ளையை நோக்கிச் சொல்லுகிறான்:- “ ஐயா! போன மாசத் துவக்கத்தில் எனக்குப் பெண் விசாரிக்கிறதற்காக என் தாய் முதலான ஸ்திரீகள் இந்த ஊருக்கு வந்தபோது இந்த வீட்டில் இரண்டு பெண்களிருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தப் பெண்களுடைய குணங்களை அனுபவ சித்தியாக அறியும்பொருட்டு இந்த வீட்டில் சில நாள் தங்கியிருந்தார்கள்; குணபூஷணி யென்ற பெண்ணே அவர்களுடைய கருத்துக்கு இசைந்ததாயிருந்ததால், அந்தப் பெண்ணை எனக்காகக் கேட்கிறதென்று எண்ணங் கொண்டிருக்கையில், அவர்களுடைய பணப் பை அகஸ்மாத்தாய்க் காணாமற் போய்விட்டது. எல்லாருடைய பெட்டிகளையுஞ் சோதித்தபோது குணபூஷணியின் பெட்டியிலிருந்து அந்தப் பணப்பை அகப்பட்டது. அந்தப் பெண் மேலே என் தாயாருக்கு எவ்வளவுஞ் சந்தேகமில்லாதிருந்த போதிலும், அவளுடைய சிறிய தாயாரே அவள் மேலே குற்றஞ் சாட்டினபடியால் என் தாயார் ஆதியிற் கொண்ட கருத்தை மாற்றி, மோகனமாலை என்கிற பெண்ணை எனக்காகக் கேட்டு நிச்சயார்த்தஞ் செய்து வந்தார்கள். இந்தச் சங்கதிகளெல்லாம் என் தாயார் மூலமாக நான் கேள்விப்பட்டேன். இப்போது அந்த ஒப்பாரியின் கருத்தை யோசிக்குமிடத்தில் சிறிய தாயாரே பையைத் திருடிக் குணபூஷணியின் பெட்டியில் வைத்து அவள் மேலே பழி போட்டதாகத் தோன்றுகிறது” என்றான். தேவராஜப் பிள்ளைக்கும், எனக்கும், மற்றவர்களுக்கும் அப்படியே அபிப்பிராயம் ஆயிற்று. தேவராஜப் பிள்ளை யாதொரு அக்கிரமத்தைப் பற்றிக் கேள்விப் பட்டால் உடனே அதற்குப் பரிகாரஞ் செய்யவேண்டுமென்ற கவலையுள்ளவரானதால், குணபூஷணிக்கும் நாகப்பட்டணத்திலிருந்து வந்த மாப்பிள்ளைக்கும் விவாகஞ் செய்விக்க வேண்டுமென்கிற இச்சையுடையவரானார். அவருடைய கருத்துக்கு எல்லாரும் இசைந்தபடியால் அவருங்கூட இருந்து அந்தப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்பிரமாகக் கலியாணம் நடப்பித்தார். குணபூஷணி அந்தக் கலியாணத்தில் சந்தோஷமாயிராமல் தன்னுடைய தங்கைக்கு நேரிட்ட அவமானத்தை நினைத்து நினைத்துப் பொருமிக் கொண்டிருந்தாள். இதுவும் அவளுடைய கீர்த்திப் பிரதாபத்தை மென்மேலும் விளங்கச்செய்தது. திருடன் அவகடமாய் வந்து மோகனமாலைக்குத் தாலி கட்டினது செல்லாதென்றும், அவளை வேறு யாருக்காவது பாணிக்கிரகணஞ் செய்து கொடுக்கத் தடையில்லையென்றுஞ் சாஸ்திரந் தெரிந்த பிராமணோத்தமர்கள் வியாக்கியானம் செய்தபோதிலும், அவளுக்குத் திருடன் தாலி கட்டினானென்கிற அபக்யாதி ஊரெங்கும் பிரசித்தமானபடியால், அவளை ஒருவரும் வதுவை செய்யத் துணியவில்லை. குணபூஷணியினுடைய ஓயா முயற்சியினால், நாகப்பட்டணத்தில் மோகனமாலைக்கு ஒரு புருஷன் கிடைத்து, விவாகம் நிறைவேறி, எல்லாரும் க்ஷேமமா யிருக்கிறார்கள்.