பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 35

விக்கிமூலம் இலிருந்து


35-ஆம் அதிகாரம்
காவற் சேவகர்களின் குமார்கம்—விக்ரம
புரியின் விருத்தாந்தம்—குடியர சொன்னுங்
கொடிய அரசு

தாடி பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்டது போல், அந்தக் காவல் வீரர்கள் என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:- “இந்த ஊரிலே சில ஆஸ்திவந்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ஒன்றும் கொடுக்கிறதுமில்லை; குற்றஞ் செய்கிறதுமில்லை. அவர்கள் உன்னிடத்திலே திருடினதுபோற் குற்றஞ் சாட்டிச் சில தடையங்களை அவர்களுடைய வீட்டிற் போட்டு எடுத்து அவர்களை விசாரணைக்குக் கொண்டுவர யோசித்திருக்கிறோம். நீ அந்தத் திருட்டுக் குற்றம் வாஸ்தவந்தானென்று சாக்ஷி சொன்னால், எங்களுக்குக் கிடைக்கிற தொகையில் உனக்கு நாங்கள் பங்கு கொடுக்கிறதுமல்லாமல் உன் மேலே இப்போது வந்திருக்கிற குற்றங்களையும் நிவர்த்தி செய்துவிடுகிறோம்” என்கிறார்கள். அவர்கள் சொன்ன ஆசை வார்த்தைகள் எப்படிப்பட்டவர்களுடைய புத்தியையும் மயக்கக் கூடியவைகளா யிருந்தாலும், என்னுடைய தாய் தகப்பன்மார்கள் எனக்குச் செய்த பால போதத்தினால் நான் துர்ப்புத்திக்கு இடங் கொடாமல், அந்தக் காவற் சேவகர்களை நோக்கி “நீங்கள் சொல்லுகிறபடி பொய்ச்சாக்ஷி சொல்ல நான் அருகனல்ல. நான் ஒரு குற்றமுஞ் செய்யாமலிருக்கும்போதே கடவுள் என்னை இந்த நிலைமையில் விட்டிருக்கிறார். நான் பொய்ச்சாக்ஷி சொல்லவும் வேண்டுமா?” என்றேன். அவர்கள் மறுபடியும் என்னை நோக்கி “நீ பொய்ச்சாக்ஷி சொல்ல அஞ்சுகிறபடியால் வேறொரு காரியஞ் சொல்லுகிறோம். அதையாவது நீ செய்யவேண்டும். எங்களுக்கு வெகு காலமாக உத்தியோகம் உயரவில்லை; ஏனென்றால் நாங்கள் மானத்தைப் பார்க்கிலும் பிராணனைப் பெரியதாக எண்ணுகிற சூரர்களானபடியால் ஒரு வீட்டில் திருடர்கள் பிரவேசித்துத் திருடும்போதாவது, அல்லது வேறு குற்றங்கள் நடக்கும்போதாவது நாங்கள் போய்க் கலந்து கொள்ளுகிறதில்லை. திருடர்கள் சொத்துக்களையெல்லாம் வாரிக்கொண்டு ஓடின பிற்பாடு, நாங்கள் திருட்டு நடந்த இடத்துக்குப் போய் விசாரிக்கிறது வழக்கம். நாங்கள் குற்றம் நடக்கும்போது பிரவேசித்துத் தடுக்காமலும், திருடர்களைக் கையுங் களவுமாய்ப் பிடிக்காமலிருப்பதால், எங்களை உத்தியோகத்தில் உயர்த்தமாட்டோமென்று மேலான அதிகாரிகள் சொல்லுகிறார்கள். ஆகையால் நாங்களே சில திருடர்களைச் சேர்த்து ஒரு வீட்டில் திருடும்படி செய்து அவர்களைக் கையும் மெய்யுமாய்ப் பிடித்ததுபோற் பாவனை செய்ய யோசித்திருக்கிறோம். அவர்களைக் காட்டிக் கொடுக்கிறதில்லை யென்று நாங்கள் வாக்குறுதி செய்தால் அவர்கள் எங்களுடைய வார்த்தையை நம்பி அகத்தியந் திருடச் சம்மதிப்பார்கள். அவர்கள் திருடின பிற்பாடு அவர்களைக் காட்டிக் கொடுத்தால் தோஷம் என்ன? அவர்கள் திருடுகிற சொத்தை நாங்கள் கைப்பற்றிக் கொள்வதுமன்றி எங்களுக்கு உத்தியோகம் உயரவும் ஹேதுவாயிருப்பதால் இரண்டு விதமான அனுகூலங்கள் இருக்கின்றன. சில திருடர்கள் தங்களுடைய கிருகங்களைப் பார்க்கிலும் காராக்கிருகத்தைச் சிரேஷ்டமாக எண்ணி அவ்விடத்துக்கு எப்போது போவோமோ என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருடர்களை ஒரு வீட்டில் திருடும்படி ஏவிப் பிறகு அவர்களைக் காட்டிக்கொடுப்பதினால் அவர்களுக்கு நாங்கள் உபகாரஞ் செய்கிறோமே யன்றித் தீங்கு செய்யவில்லை. நீயும் அந்தத் திருடர்களுடன் சேர்ந்து திருடினால், உன்னை மட்டும் நாங்கள் ஒரு நாளுங் காட்டிக் கொடோம். உன்னைத் தகப்பனாக வைத்துக் கொண்டு நாங்கள் நினைத்த காரியத்தை முடிக்கிறோம்” என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட உடனே நான் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டு, இப்படிப்பட்ட அயோக்கியர்களுடன் சகவாசஞ் செய்யும்படி லபித்ததே யென்று நினத்து நினத்து நெடு நேரம் பெருமூச்செறிந்தேன். அந்த ஊர் தவிர வேறெந்த ஊரிலாவது அப்படிப்பட்ட வார்த்தைகளை யாராவது சொல்லியிருந்தால் அவர்களுடைய நாவு உடனே அறுபட்டிருக்கும். அவர்களுடைய முப்பத்திரண்டு பல்லும் உடைபட்டிருக்கும். ஆயிரம் பாம்புகளுக்குள் ஒரு தேரையைப் போல அகப்பட்டுக்கொண்டு தவிக்கிற நான் என்ன செய்யக் கூடும்? நான் அவர்களைப் பார்த்து “நீங்கள் சொல்லுகிற காரியத்தை நிறைவேற்ற நான் சமர்த்தன் அல்ல. அதற்குத் தகுந்த பக்குவசாலிகள் உங்களுக்கு யதேஷ்டமாக அகப்படுவார்கள். ஆகையால் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றேன். இதனைக் கேட்டவுடனே அந்தப் பாபிஷ்டர்கள் கோபிஷ்டர்களாகி என்மேலே ஏற்பட்டிருக்கிற குற்றங்களை பலப்படுத்தவும், அந்தக் குற்றங்களை அவர்கள் முன்பாக நான் ஒப்புக்கொண்டது போலப் படுமுடிச்சு முடியவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்ப்பது யாருக்கும் அசாத்தியமாகையால், நான் வலையில் அகப்பட்ட மான் போலவும், தூண்டிலில் அகப்பட்ட மீன் போலவும் துடித்துப் பதைத்துத் தடுமாறினேன்.

என்னோடு கூடக் காவற்கூடத்தில் இருந்தவர்களில் ஒருவன் சுமுகனாயும் சரசியாயுங் காணப்பட்ட படியால், நான் அவனைப் பிரத்தியேகமாக அழைத்து இந்த ஊர்ப் பெயரும் அரசன் பெயரும் என்னவென்றும், ராஜரீக தர்மமும் நியாய பரிபாலனமும் எப்படியென்று விசாரித்தேன். அவன் என்னைப் பார்த்து, “நீர் அன்னிய தேசஸ்தர் போற் காணப்படுகின்றது. இந்த ஊருக்கு விக்கிரமபுரி என்று பெயர். பல நாடுகளுக்கு இது ராஜ நகரமாயிருக்கின்றது. இதை ஆண்ட அரசன் இதற்கு இரண்டு வருஷத்துக்கு முன்பு புருஷப் பிரஜையில்லாமல் இறந்துபோனான். அதுமுதற் இந்த ஊர் அரசனில்லாமல் பிராஜாதிபத்தியமா யிருக்கிறது. ஒவ்வொருவனும் தான் தான் பெரியவனென்று தலைக்குத் தலை மூப்பாய்த் தறிதலையாய்த் திரிகிறபடியால் இந்த நாடு தலையில்லாத சரீரம் போலத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. சூரியன் போனபிற்பாடு துஷ்ட மிருகங்கள் வெளிப்பட்டுச் சஞ்சரிப்பதுபோல, அரசன் போனபிற்பாடு அக்கிரமக்காரர்கள் கிளம்பி ஊரைப் பாழாக்கிவிட்டார்கள். சாதுக்கள் எல்லாரும் ஒடுங்கிப் போனார்கள். வெளியே போனால் மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வருவோமென்கிற நம்பிக்கையில்ல. நம்முடைய பொருளை நாமே சுதந்திரமாக அநுபவிப்போமென்கிற நிச்சயமில்லை. “பாழூருக்கு நரி ராஜா”என்பது பால துஷ்டர்களே சர்வ வியாகபகமாயிருக்கிறபடியால் லக்ஷாதிபதியா யிருக்கிறவன் ஒரு நிமிஷத்தில் பிக்ஷாதிபதியாகிறான். பிக்ஷாதிபதியா யிருக்கிறவன் லக்ஷாதிபதியாகிறான். இந்த ஊருக்கு விக்கிரமபுரி யென்கிற பெயர் போய் அக்கிரமபுரி யென்கிற பெயர் வந்துவிட்டது. பெரிய அரண் போல மலைகளும் சமுத்திரங்களும் சூழ்ந்திருப்பதால் இந்த ஊருக்கு வெளிச் சத்துருக்கள் ஒருவரும் இல்லை. உள் சத்துருக்களுடைய போராட்டமே பெரிதாயிருக்கின்றது. குடியரசு, கொடிய அரசாகிவிட்டதால் சீக்கிரத்தில் ஒரு அரசனை நியமிக்க வேண்டுமென்பது சாதுக்களுடைய மனோபாவமாயிருக்கின்றது. அப்படிப்பட்ட நல்ல காலம் எப்போது வருமோ தெரியவில்லை” என்றான்.

நான் அந்த மனுஷனைப் பார்த்து “இப்போது அரசனில்லாத படியால் நம்முடைய சங்கதிகளை யார் விசாரிப்பார்கள்?” என்று கேட்டேன். அவன் என்னைப் பார்த்துச் சொல்லுகிறான்:- “அரசனால் நியமிக்கப்பட்ட ஒரு நியாயாதிபதி யிருக்கிறான். அவன் தான் நம்முடைய சங்கதிகளை விசாரிப்பான். அவன் அரசன் உள்ளவரையில் உருத்திராக்ஷப் பூனை வேஷம் போட்டுக்கொண்டு வந்தான். அரசன் இறந்த பிறகு அவனுடைய யதார்த்த சொரூபத்தைக் காட்டி விட்டான். யமனுக்கு தர்மராஜா என்கிற பெயர் வாய்த்தது போல், இவனுக்கு நியாயாதிபதி என்கிற பெயர் கிடைத்திருக்கின்றது. அவன் சிஷ்ட நிக்கிரகமும் துஷ்டாநுக்கிரகமுஞ் செய்கிறதேயன்றி, அவன் துஷ்டநிக்கிரகமும் சிஷ்டாநுக்கிரகமும் செய்கிறதில்லை. ஒரு மாசத்தில் ஒரு தரம் அல்லது இரண்டு தரந்தான் நியாய சபைக்கு வருகிற வழக்கம். அந்த ஒரு நாளையிற் கெடுகிற குடிகள் ஆயிரத்துக்கு அதிகமாயிருக்கலாம். அவன் நியாயா நியாயங்களைப் பார்த்துத் தீர்மானிக்காமல் குருட்டு நியாயமாக ஆறு மாசம் வரையில் வாதிகள் பக்ஷத்திலும், ஆறு மாசம் வரை பிரதிவாதிகள் பக்ஷத்திலும் தீர்மானிக்கிற வழக்கம். இப்போது வாதிகள் பக்ஷந் தீர்மானிக்கிற காலமானபடியால், நம் மேல் வந்திருக்கிற வழக்குகளை நமக்குப் பிரதிகூலமாகவும் வாதிகளுக்கு அநுகூலமாகவும் தீர்ப்பானென்கிறதற்குச் சந்தேகமில்ல. நாம் பிராணனுடன் வீட்டுக்குத் திரும்பிப்போய் நம்முடைய பெண்ஜாதி பிள்ளைகள் முகத்தில் விழிப்போமென்கிற நம்பிக்கையைக் கட்டோடே விட்டுவிட வேண்டியது தான்” என்றான். இதைக் கேட்ட உடனே எனக்கு உண்டான துயரம் எப்படிப்பட்டதென்றால் அதற்கு முன் ஒருநாளும் அப்படிப்பட்ட துயரத்தை நான் அநுபவித்ததில்லை. தேவராஜப் பிள்ளைக்குச் சாக்ஷி சொன்னதற்காக விசாரணைக் கர்த்தர்கள் விதித்த தண்டனைக்குத் தப்பி, மத யானைக்குத் தப்பி, இந்தப் பாவிகளுடைய ஊரிலே இறக்கவா வந்தோமென்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணாகிக் கலங்கினேன்.

“”கண் குருடானாலும் நித்திரைக்குக் குறைவில்லை”” என்பது போல் நியாயாதிபதி தினந்தோறும் நியாயசபைக்கு வராவிட்டாலும் அவன் என்றைக்கு வருவானென்கிற நிச்சயந் தெரியாமையினால் நாங்கள் தினந்தோறும் நியாயசபைக்குப் போய் அலைந்து கொண்டு வந்தோம். அவன் இருபது நாளைக்குப் பிறகு ஒரு நாள் விசாரிக்க ஆரம்பித்தான். சக்கிலியனுடைய வழக்கு முதல் வழக்கானதால் நியாயாதிபதி சக்கிலியனுடைய வாதத்தையும் என்னுடைய வாதத்தையும் கேட்டுக்கொண்டு தீர்மானஞ் சொல்லத் தொடங்கினான். நியாயாதிபதி என்னைப் பார்த்து ““சக்கிலியனை சந்தோ ஷப்படுத்துவதாக நீ ஒப்புக்கொண்ட படியால் நீ நாளைத் தினம் அருணோதயத்துக்கு முன் அவனை நீ எப்படியாவது சந்தோஷப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் நாளைத்தினம் விடிந்த உடனே அவன் உன்னுடைய பிராணனைக் கேட்டாலும் நீ கொடுக்க வேண்டியதுதான்” என்றான். இதைக் கேட்ட உடனே இடியோசையைக் கேட்ட நாகம் போல் நடுநடுங்கி வேர்த்து விறுவிறுத்துப் போனேன்.

“”ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”” என்பதுபோல, இந்த ஒரு வழக்கின் தீர்மானத்தைக் கொண்டு மற்ற வழக்குகள் எப்படித் தீருமென்பதை நான் அறிந்துகொண்டபடியால் இனி மேல் என் பிராணன் எனக்குச் சொந்தமல்லவென்று நிச்சயித்துக்கொண்டேன். பிராணனை இழப்பது நிச்சயமாயிருந்தாலும், அந்த விபத்தைத் தடுக்கும்பொருட்டு என்ன உபாயஞ் செய்யலாமென்று ஆலோசித்தேன். எனக்கு அண்டசாஸ்திரம் தெரியுமானதால் மறுநாள் சூரிய கிரகணமென்றும் அது பாதாள கிரகணமானதால் நெடுநேரம் வரையில் சூரியன் ஒருவருக்குந் தோன்றாதென்றும் நான் சாஸ்திரத்தினால் அறிந்துகொண்டதும் தவிர, அந்த ஊராருக்குக் கிரகணங் கணிக்கிற முறையே தெரியாதென்றும் தெரிந்துகொண்டேன். நான் அந்த நியாயாதிபதியைப் பார்த்து “நாளையத் தினம் பொழுது விடிகிறதற்குமுன் நான் சக்கிலியனைச் சந்தோஷப் படுத்த வேண்டுமென்று அநீதமாகத் தீர்மானஞ் செய்திருக்கிறீர்கள். நாளைத் தினம் பொழுது விடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்றேன். அவன் “நாளைக்குப் பொழுது விடியாதபடி செய்ய உன்னால் ஆகுமா?” என்றான். “என்னால் ஆகுமென்பதும் ஆகாதென்பதும் நாளைத் தினம் பார்த்துக்கொள்ளலாம்” என்றேன்.அவன் கோபத்துடன் என்னை நோக்கி ““நீ பொழுது விடியாதபடி செய்தால், நீ சமர்த்தன் தான். நாளைக்கு வழக்குப்படி பொழுது விடிந்தால் உனக்கு இறுதி உண்டாகுமென்பது உறுதி தான். இவ்விரண்டில் ஒன்று தெரிந்தபிறகு தான் மற்ற வழக்குகள் விசாரிக்கப்படும்” என்று சொல்லி மூர்க்காவேசத்துடன் வீட்டுக்குப் போய் விட்டான்.

அங்கே இருந்தவர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து “”யானை தன் தலை மேலே தானே மண்ணைப் போட்டுக்கொள்வது போல, நீயே உனக்குத் தீங்கைத் தேடிக்கொண்டாயே! பொழுது விடியாதபடி செய்ய உன்னால் கூடுமா?”” என்று என்னத் தூஷித்தார்கள். அநேகர் நான் சொன்னபடி நடந்தாலும் நடக்குமென்று பயந்துகொண்டு அன்று இரா முழுதும் தூங்காமலிருந்ததாகக் கேள்விப்பட்டேன். நானும் அந்த இரா முழுதும் நித்திரை செய்யாமல் மந்திர தந்திரங்கள் செய்வது போல மாமாலம் பண்ணினதுந் தவிர ஒரு வெண்பாவும் பாடிப் பிரசுரஞ் செய்தேன்:—

முடியரசன் போனபின்பு மூர்க்கரெல்லாங் கூடிக்
குடியரசென் றோர்பெயரைக் கூறி—நெடிய
பழுதே புரியுமிந்தப் பாழூ ரதனிற்
பொழுதே விடியாமற் போ.

மறு நாள் கிரகணம் பிடித்துக் கொண்டபடியால் வெகுநேரம் வரையிற் பொழுது விடியவே யில்லை. இதைப் பார்த்த உடனே பட்டணம் கிடுகிடுத்துப் போய்விட்டது. அந்த நியாயாதிபதி பொழுது விடியவில்லையென்று தெரிந்த உடனே புறப்பட்டுக் காவற்கூடத்துக்கு ஓடி வந்தான். அவனைக் கண்ட உடனே ஜனங்கள் மண்ணை வாரி இறைத்து ”“அட பாவி! சண்டாளா! அந்த புண்ணியவானுக்கு விரோதமாகத் தீர்மானஞ் செய்து பொழுது விடியாதபடி பண்ணிவிட்டாயே!”” என்று வாயில் வந்தபடி அவனைத் தூஷித்தார்கள். அவன் என்னிடத்தில் வந்து நமஸ்காரஞ் செய்து ““சுவாமி! உங்களுடைய மகிமையை அறியாமல் அபராதஞ் செய்து விட்டேன். சக்கிலியன் பக்கத்தில் நான் தீர்மானத்தை இப்போதே மாற்றி விடுகிறேன். பொழுது விடியும்படி கிருபை செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். மற்ற ஜனங்களும் அந்தப் படி கிருபை செய்ய வேண்டும்” என்று என் காலில் விழுந்து கும்பிட்டார்கள். நான் ஜனங்களைப் பார்த்து “பொழுது விடிந்தவுடனே நீங்கள் குடியரசனை நீக்கி ஒரு அரசனை நியமித்துக் கொள்வதாக எனக்கு வாக்குத்தத்தஞ் செய்தால், நான் பொழுது விடியும்படி செய்கிறேன்” என்றேன். அவர்கள் அந்தப்படி வாக்குத்தத்தஞ் செய்தார்கள். கிரகணம் விடுகிற சமயம் நெருங்கி விட்டதால் இனி மேல் நான் தாமதஞ் செய்தால் என்னையல்லாமற் பொழுது விடிந்து போகுமென்று பயந்து கொண்டு நான் உடனே ஒரு வெண்பாப் பாடினேன்:—

வாடு பயிர்க்குவரு மாமழைபோல் னைந்துருகி
நாடுமக வுக்குதவு நற்றாய்போல்—நாடு
முழுதே யழுதேங்க மூடுமிரு ணீங்கப்
பொழுதே விடி வாயிப் போது.

என் பாட்டு முடிந்த உடனே கிரகணம் கொஞ்சங் கொஞ்சமாய் விலகி வெளிச்சங் காண ஆரம்பித்தது. அப்போது மேகக்கூட்டங்கள் சூரியனை மறைத்துக் கொண்டபடியால் கிரகணம் விடுகிற சமாச்சாரம் ஜனங்களுக்குத் தெரியாது. கிரகணம் முழுவதும் நீங்கின உடனே சூரியன் ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசிக்க ஆரம்பித்தது. உடனே ஜனங்களுக்கு உண்டான சந்தோஷத்தையும் அவர்கள் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையும் நான் விவரிக்கவும் வேண்டுமா? அவர்கள் என்னை மட்டுமிதமில்லாமற் புகழ்ந்த பிற்பாடு என்னைப் பார்த்து “சுவாமி! உங்களுடைய உத்தரவுப்படி நாங்கள் இன்றையத் தினமே ஒரு அரசனைத் தெரிந்து கொள்ளப் போகிறோம். நாங்கள் தேவாலயத்துக்குப் போய்ப் பிரார்த்தனை செய்து கொண்டு, பட்டத்து யானையைச் சிங்காரித்து அதன் கையிலே பூமாலையைக் கொடுத்து அனுப்புவோம். அந்த யானை யார் கழுத்திலே பூமாலையைப் போட்டுத் தன் முதுகிலே தூக்கி வைத்துக் கொள்ளுகிறதோ அவரை அரசனாக நாங்கள் அங்கீகரித்துக்கொள்வது வழக்கமாயிருக்கிறது. ஆகையால் அந்தப்படி செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லி என்னிடத்தில் செலவு பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.