பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 36

விக்கிமூலம் இலிருந்து


36-ஆம் அதிகாரம்
குடி யரசை நீக்கி, முடி யரசை நியமித்தல்
ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு,
அரசாண்டது


சூரியனைப் பிடித்த கிரகணம் நீங்கியும், என்னைப் பிடித்த பீடை நீங்காமையினால், நான் காவற் கூடத்திலே யிருந்தேன். அரசனை நியமிக்கிறதற் காக போன ஜனங்கள், உடனே தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தபிறகு, பட்டத்து யானை கையிலே பூமாலையைக் கொடுத்து விட்டதாகவும், அது ஒரு மகாபுருஷன் கழுத்திலே மாலையைப் போட்டுத் தன் முதுகின்மேலே தூக்கி வைத்துக் கொண்டதாகவும் அந்த மகா புருஷனை ஜனங்கள் அரசனாகத் தெரிந்துகொண்டதாகவும் அன்றையத் தினம் சாயங்காலத்தில் நான் கேள்விப்பட்டுத் திருப்தி அடைந்தேன். அந்த அரசனுடைய ஊர், பெயர், ஜாதி முதலிய பூர்வோத்தமங்களும் குணாகுணங்களும் ஒருவருக்குந் தெரியவில்லை. ஆனால் அவருடைய அதிரூப சௌந்தரியத்தைப் பற்றிப் புகழாதவர்கள் ஒருவருமில்லை. அன்றையத் தினம் சூரியன் அஸ்தமித்து இருட்டின பிறகு சில சேவகர்கள் ஓடி வந்து ““புதிதாக வந்திருந்த அரசர் அநேக வழக்குகள் விசாரணைவெகு காலமாய்ப் பாக்கியிருக்கின்றன வென்று கேள்விப்பட்டு உடனே எல்லாரையும் அழைத்துக்கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தார்” என்று தெரிவித்தார்கள். உடனே நாங்கள் எல்லாரும் புறப்பட்டுக் கொலுமண்டபத்துக்குப் போனோம். புது ராஜாவினுடைய மாதிரி தெரியாமையினால் எப்படித் தீர்மானஞ் செய்வாரோவென்று நான் பயந்து அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போவதுபோற் போனேன். அப்போது இராக்காலமாகவும் அநேக ஜனக்கூட்டமாகவும் இருந்தபடியால் அரசருடைய முகம் எனக்கு நன்றாகத் தெரியவில்லை. அவர் மிருது பாஷியாயிருந்தபடியால் அவருடைய குரலும் நன்றாகக் கேட்கவில்லை.

ஒரு உத்தியோகஸ்தன் என்னுடைய வாதியான சக்கிலியன் பெயரைச் சொல்லிக் கூப்பிட சக்கிலியன் சபை முன்னே வந்து “இந்த மனுஷன் என்னுடைய ஜோட்டை வாங்கி உபயோகித்துக்கொண்டு அதற்காக என்னைச் சந்தோஷப்படுத்துவதாக ஒப்புக்கொண்டவன் அந்தப்படிச் செய்யாததினால் என்னைச் சந்தோஷப்படுத்தும்படி உத்தரவு செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். நானும் என்னுடைய எதிர்வாதங்களைத் தெரிவித்தேன். அரசர் சற்று நேரம் மௌனமாயிருந்து பிறகு சக்கிலியனை நோக்கி “நாம் இப்போது அரசனாக வந்திருக்கிறோம்! உனக்கு எப்படி இருக்கிறது?” என்று வினவினார். அவன் “எனக்கு சந்தோஷமாயிருக்கிறது” என்றான். உடனே அரசர் “நீ சந்தோஷமாயிருப்பதாக ஒப்புக் கொள்ளுகிறபடியால் ஜோட்டுக்காக அந்த சந்தோஷத்தை எடுத்துக்கொள்” என்று சொல்லி அவனைப் பிடித்துத் தள்ளிவிடும்படி உத்தரவு கொடுத்தார்.

இரண்டாவது சூதாடிகள் வந்து, சும்மாவை வாங்கிக் கொடுக்கும்படி வேண்டினார்கள். அரசர் சற்று நேரம் ஆலோசிக்கிறவர் போல மௌனமா யிருந்து, பிறகு சிம்மா சனத்துக்குப் பக்கத்தில் வெறுமையா யிருந்த ஒரு வெண்கலப் பானையைச் சூதாட்டிகளுக்குக் காட்டி “அதில் என்ன இருக்கிறது பாருங்கள்!” என்றார்.அவர்கள் உள்ளே பார்வையிட்டு “சும்மா இருக்கிறது” என்றார்கள். உடனே அரசர் அவர்களைப் பார்த்து “அந்தச் சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தீர்மானித்தார்.

மூன்றாவது ஒற்றைக்கண் குருடன் வந்து “இவன் தன்னுடைய குருட்டுக் கண்ணைக் கொடுத்துவிட்டு என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக் கொண்டு போனவன், மறுபடியுங் கொடாததினால் என்னுடைய நல்ல கண்ணை வாங்கிக் கொடுக்கவேண்டும்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து “நீ பிரதிவாதியினுடைய குருட்டுக் கண்ணை முந்தி வாங்கிக்கொண்டதாக ஒப்புக்கொள்ளுகிற படியால் அந்தக் கண்ணைத் தோண்டி அவருக்குக் கொடுத்துவிடு. அவருடைய நல்ல கண்ணைப் பற்றி பிற்பாடு தீர்மானஞ் செய்கிறோம்” என்றார். அவன் “குருட்டுக்கண்ணை எப்படித் தோண்டுவேன்?” என்றான். “அது உன்னாற் கூடாத பக்ஷத்தில் நாம் தோண்டும்படிச் செய்விக்கிறோம்” என்று ஒரு குறடு கொண்டுவரும்படி அரசர் உத்தரவு கொடுத்தார். இதைக் கேட்ட உடனே அந்த ஏகாக்ஷி “என்னைச் சும்மா விட்டாற் போதும்; எனக்கு நல்ல கண் வேண்டாம்! வேண்டாம்!” என்று கதறிக்கொண்டு ஓடினான்.

நொண்டிக்காலன் வழக்கிலும் நொண்டிக்காலை முந்தி எனக்கு வெட்டிக்கொடுக்கும்படித் தீர்மானஞ் செய்யப்பட்டது. அவனும் “எனக்கு நொண்டிக்காலே போதும்! நல்ல கால் வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்லி ஓடினான்.

பாகசாலைக்காரன் அவனுடைய வழக்கைச் சொல்லிக்கொண்ட உடனே அரசர் சில வெள்ளி நாணயங்களை எடுத்துக் கலகலவென்று சப்திக்கும்படியாக ஒரு வெண்கலத் தட்டிற் கொட்டி பாகசாலைக் காரனைப் பார்த்து “அந்தப் பணங்களின் ஓசையைக் கேட்டாயா?” என்றார். அவன் “கேட்டேன்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து “பிரதிவாதி உன்னுடைய சாதத்தின் வாசனையை மூக்கினால் கிரகித்ததற்கும் அதன் கிரயப் பணத்தின் சப்தத்தை நீ காதினாற் கேட்டதற்குஞ் சரியாய்ப் போய் விட்டது. ஆகையால் நீ வீட்டுக்குப் போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார்.

பிறகு தாசியானவள் வந்து, பிரதிவாதி தன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்ததாகத் தெரிவித்தாள். உடனே அரசர் அவளைப் பார்த்து “பிரதிவாதி உன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்தபடியால் உனக்குப் பணம் கொடுக்கப்படும்” என்று சொல்லி அந்த தாசியை வெளிச்சத்தில் நிறுத்தி அவள் மேலே பண நிழல் படும்படி பணத்தை மேலே தூக்கிக் காட்டும்படி திட்டஞ் செய்தார். மலை போல வந்த துன்பமெல்லாம் பனிபோல் நீங்கினது போல, என் மேலே வந்த துர்வழக்குகளெல்லாம் எனக்கு அநுகூலமாக முடிந்தபடியால் நான் கரைகாணாத களிப்புக் கடலில் மூழ்கினேன்.

என்னுடைய வழக்குகள் முடிந்த பிற்பாடு அரசர் ஜனங்களை நோக்கிச் சொல்லுகிறார்:- “இப்போது நாம் விசாரணை செய்த துர்வழக்குகளினால் இந்த ஊர் எவ்வளவு கெட்ட ஸ்திதிக்கு வந்திருக்கிறதென்பதை நாம் கரதலாமலகம் போற் கண்டுகொண்டோம். இப்படிப்பட்ட வழக்குகளை நாம் எந்த ஊரிலும் கேள்விப்பட்டதில்லை. இப்படிப்பட்ட வழக்குகளைக் கொண்டுவருகிறவர்கள் நம்மையும் நம்முடைய நியாயாசனத்தையும் அவமானப்படுத்துகிற படியால் அவர்களைத் தண்டிக்க வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கின்றது. ஆயினும் நமக்குப் பட்டாபிஷேகமான இந்த மங்கள தினத்தில் ஒருவரையுந் தண்டிக்க நமக்கு இஷ்டமில்லாதபடியால் அந்தத் துர்வியாஜ்ஜியக்காரர்களை இந்தத் தடவை மன்னித்திருக்கிறோம். இனிமேல் இத் தன்மையான வழக்குகளை யாராவது கொண்டு வருவார்களானால் அவர்கள் தப்பாமல் தண்டிக்கப்படுவார்கள். ஸ்தாவர ஜங்கமங்களை அநியாயமாக இழந்துபோனவர்களும் அல்லது வேறுவிதமான துன்பத்தை அடைந்தவர்களும் நம்மிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டால் நாம் கிரமப்படி விசாரணை செய்து நிஷ்பக்ஷபாதமாகவும் நிர்த்தாட்சண்ணியமாகவுந் தீர்மானஞ்செய்யச் சித்தமாயிருக்கிறோம். இந்த ஊரிலே குடியரசு நிலைத்த பிற்பாடு அக்கிரமம் நிலைபெற்று தர்மங் குடியோடிப் போய்விட்டதாகத் தெரியவருகிறது. நம்முடய காலத்தில் தர்மந் தலையெடுக்கும்; அநியாயம் அதோகதியாகப் போகும். இதை நீங்கள் சீக்கிரத்தில் காண்பீர்கள்!” என்றார்.

இந்த உபந்நியாசத்தைக் கேட்ட உடனே, சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்ததுபோல் சாதுக்களெல்லாரும் பரம சந்தோஷம் அடைந்தார்கள். துஷ்டர்களெல்லாரும் கருடனைக் கண்ட பாம்புபோல அடங்கினார்கள். நான் இது தான் சமயமென்று நினைத்து, என்னுடைய வஸ்திராபரணங்களைக் கவர்ந்து கொண்ட காவல்வீரர்களை நோக்கி, “நீங்கள் செய்த அக்கிரமங்களை நான் அரசனுக்குத் தெரிவிக்கப் போகிறேன்” என்று சொல்லி என் காலை எட்டி வைத்தேன். அவர்கள் உடனே என்னை வழிமறித்துக் கொண்டு “சுவாமி! உங்களுடைய சொத்துக்களைக் கொடுத்துவிடுகிறோம். எங்களுடைய செய்கையை அரசனுக்குத் தெரிவிக்க வேண்டாம்!” என்று பதினாறு பல்லையுங் காட்டிக் கெஞ்சினார்கள். நான் அரசனிடத்திற் போகாமல் திரும்பி, என்னுடைய உடைமைகளைக் கொடுக்கும்படிக் கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து, “சுவாமி! இந்த ஆடை ஆபரணங்கள் உங்களுக்கு ஒரு விஷயமா? பொழுது விடிவதும் விடியாமற் போவதுமே, உங்களுடைய ஸ்வாதீனத்தில் இருக்கும்போது உங்களுடைய சக்திக்கு மேற்பட்டது யாது? நீங்கள் வானத்தை வில்லாக வளைப்பீர்கள்! மணலைக் கயிறாகத் திரிப்பீர்கள்!! நீங்கள் ஆகாயத்தை ஆடையாக்கி அணிந்துகொள்வீர்கள். மண்ணையும் கல்லையும் ஆபரணமாக்கிப் பூண்டுக் கொள்வீர்கள். எங்களுக்குக் கொடுத்துவிட்ட ஆடையாபரணங்களை மறுபடியும் கேட்கலாமா?” என்றார்கள். நான் அவர்களைப் பார்த்து, “நான் அவைகளை உங்களுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்திருந்தால் நான் மறுபடியும் கேட்கமாட்டேன். அவைகளை நீங்களே துராக்கிருதமாய்க் கவர்ந்துகொண்ட படியால் மறுபடியும் கொடுக்க வேண்டும்” என்றேன். அவர்கள் என் சொத்துக்களைக் கொண்டுவருவதாகச் சொல்லி வெளியே போய் சற்று நேரத்திற்குப் பின்பு ஒரு மூட்டையைக் கொண்டுவந்து கொடுத்து என்னுடைய உடைமைகளெல்லாம் அதற்குள் இருப்பதாகச் சொல்லிப் போய்விட்டார்கள். அவர்களை நான் பயமுறுத்தி மறுபடியும் என்னுடய சொத்துக்களை வாங்கிக்கொண்ட விஷயத்தில் என்னுடைய சாமர்த்தியத்தை நானே மெச்சிக்கொண்டேன். நடு சாமத்தில் ராஜசபை கலைந்து, அரசன் முதலிய எல்லாரும் அவரவர்களுடைய கிருகங்களுக்குப் போய்விட்டார்கள். வாய் கொழுப்புச் சீலையால் வடிந்தது போல் அந்த ஊராரிடத்தில் வாய் கொடுத்தால் பாடாவதியாய் வருகிறபடியால், இனி மேல் ஒருவரிடத்திலும் வாயைத் திறக்கிறதில்லை யென்றும், பொழுது விடிகிற வரையில் எங்கேயாவது படுத்திருந்து, விடிந்த உடனே அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறதென்றும் நிச்சயித்துக்கொண்டேன். நான் கொலு மண்டபத்தை விட்டு வெளியே போவதற்குமுன் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளலாமென்று நினைத்து, அந்தச் சேவகர்கள் கொடுத்த மூட்டையை அவிழ்த்தேன். வெங்காயம் உரிக்க உரிக்கத் தோலாயிருப்பது போல், அந்த மூட்டை அவிழ்க்க அவிழ்க்க பழங்கந்தையா யிருந்ததேயல்லாமல் என்னுடைய ஆடைகளையும் காணேன். ஆபரணங்களையும் காணேன். எனக்காக இத்தனை கந்தைகளை அந்தப் படுபாவிகள், எப்படிப் பொறுக்கிச் சேர்த்து வைத்திருந்தார்களென்பது பெரிய ஆச்சரியமா யிருந்தது. நமன் வாயில் அகப்பட்ட உயிர் திரும்பினாலும், அவர்களிடத்தில் அகப்பட்ட சொத்து மீளாதென்ற உண்மை அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

நான் கொலுமண்டபத்தை விட்டு வெளியே போக எத்தனமாயிருக்கையில், ஒரு சேவகன் ஓடி வந்து என்னைப் பார்த்து, “ஐயா! இந்த ஊர், துஷ்டர்களுக்கு வாசஸ்தலமாயிருப்பதால், இந்த அர்த்த ராத்திரியில் நீங்கள் வெளியே போகாமல், கொலு மண்டபத்திலே படுத்துக்கொள்ளும்படி மகராஜா உத்தரவு செய்தார்கள்” என்று சொல்லிப் போய் விட்டான். நான் அரசனுடைய ஜீவகாருண்யத்தை வியந்துகொண்டு, அவர் தீர்க்காயுஷாயிருக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்த பிறகு, அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் பூமியே புஷ்பமெத்தையாகவும் என் கையைத் தலையணயாகவும் வைத்துக் கொண்டு கௌபீனத்துடன் படுத்துக்கொண்டேன். படுத்தவுடனே அந்த மண்டபத்தில் புத்திர பௌத்திர ப்ரபௌத்திரர்களுடன் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்துகொண்டிருந்த மூட்டுப் பூச்சிகள் வந்து என் மேல் ஏறி கவசம் போட்டதுபோல் மொய்த்துக்கொண்டன. அவைகள் உபத்திரவத்தினால் எனக்கு நல்ல நித்திரையில்லாமற் பாதி நித்திரையாய்க் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தேன்.

படுத்துச் சற்று நேரத்திற்குப் பின்பு அந்தக் கொலுமண்டபத்திற்கும் ராஜமாளிகைக்கும் மத்தியிலிருந்த வாசற்படிக் கதவு படீரென்று திறந்த சப்தம் கேட்டு என்ன ஆபத்து வருமோ என்று பயந்துகொண்டு என்னுடைய இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டேன். சற்று நேரத்திற்குப் பின்பு யாவரோ வந்து என்னை மிருதுவாகத் தட்டினார்கள். நான் முழுக்கண்ணையுந் திறவாமல் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்தேன். ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இந்த இடத்துக்கு ஞானாம்பாள் எப்படி வரக்கூடும்? நாம் கனவு காண்கிறோமென்று நினைத்து மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டேன். அவள் தன்னுடைய இரண்டு கைகளாலும் என்னைப் பிடித்துத் தூக்கி உட்காரவைத்து “ஐயோ! அத்தான்! இந்தப் பஞ்சைக் கோலத்துடன் தேவரீரைப் பார்க்க நான் என்ன பாவஞ் செய்தேன்?” என்று சொல்லி அழுதாள். நான் கண்ணை விழித்து “நீ யார்?” என்றேன். அவள் “என்னை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டீர்களா? நான் ஞானாம்பாள் அல்லவா?” என்றாள். நான் அவளைப் பார்த்து “நான் தூங்குகிறேனென்றும் விழித்திருக்கிறேனென்றும் நிச்சயந் தெரியவில்லை. அந்த நிச்சயந் தெரியும் பொருட்டு உன்னுடைய நகத்தினாலே என்னைக் கிள்ளு!” என்றேன். அவளை நான் பூரண பக்ஷத்துடன் அங்கீகரிக்கவில்லை யென்கிற கோபத்தினாலும், என்னுடைய நித்திரை மயக்கத்தைத் தெளிவிக்கவேண்டும் என்கிற எண்ணத்தினாலும் அவள் என்னைப் பலமாகக் கிள்ளி எனக்கு முத்தம் கொடுப்பது போல என்னை வெடுக்கென்று பல்லாலே கடித்தாள். உடனே நான் திடுக்கென்று விழித்துக் கொண்டேன். எனக்கு நித்திரை மயக்கந் தெளிந்து அவள் ஞானாம்பாள் என்று நிச்சயந் தெரிந்த உடனே அவளைக் கட்டிக்கொண்டு சிறு பிள்ளை போல நெடுநேரங் கதறினேன். அவளும் என்னுடன் புலம்பின பிறகு என்னைப் பார்த்து “உங்களை இந்த கோலத்தோடு நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. உங்களைப் பார்க்கப் பார்க்க என் வயிறு பற்றி எரிகின்றது. நீங்கள் ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் நடந்த சங்கதிகளை யெல்லாம் தெரிவிக்க வேண்டும்” என்றாள்.

நான் வேட்டை பார்க்கப் புறப்பட்டது முதல் நடந்த ஒவ்வொரு விஷயத்தையுந் தெரிவித்ததுந் தவிர, கடைசியாகப் புது அரசன் என்னை விடுதலை செய்த விவரத்தையும் சொல்லி ““அந்த அரசருக்குக் கடவுள் பூரண ஆயுசைக் கொடுக்க வேண்டும்; அவராலே தான் உன்னை நான் இப்பொழுது காணும்படியான பாக்கியம் கிடைத்தது”” என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களை விடுதலை செய்த புது அரசன் நான் தான்” என்றாள். இதைக் கேட்ட உடனே நான் ஆச்சரியங் கொண்டு பிரமித்து நான் மறுபடியும் தூங்குகிறேனோ விழித்திருக்கிறேனோ வென்று என் கண்ணைத் தடவிப் பார்க்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்து ““உங்களுடைய புத்தியைச் சிதற விட வேண்டாம். நான் சொல்வது வாஸ்தவந்தான்; எல்லா காரியங்களையும் சவிஸ்தாரமாகச் சொல்லுகிறேன்; வாருங்கள்”” என்று சொல்லி என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் போனாள்.