பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 37
37-ஆம் அதிகாரம்
ஞானாம்பாள் தன்னுடைய வரலாறுகளைத்
தெரிவித்தல்
“நீங்கள் வேட்டை பார்க்கப் போன பிறகு, கானகத்தில் என்ன ஆதங்கள் நேரிடுவோமென்று நான் சித்தாஞ்சல்லியப் பட்டுக்கொண்டிருக்கும்போது, நீங்களும் நீங்கள் ஏறிய யானையும், யானைப்பாகனும் போன வழி தெரியவில்லை யென்றும், நீங்கள் ஆதியூருக்குத் திரும்பி வந்துவிட்டீர்களாவென்று விசாரித்துக் கொண்டு வரும்படி கனகசபை யண்ணன் உத்தரவு கொடுத்ததாகவும் சிலர் வந்து தெரிவித்தார்கள். நீங்கள் ஆதியூருக்குத் திரும்பிவராமையினால் தேவராஜப் பிள்ளையும் இன்னும் அநேகரும் உடனே புறப்பட்டுக் கானகத்துக்குப் போய்த் தேடியும் உங்களுடைய செய்தி ஒன்றும் தெரியவில்லை. வேடர்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த இடத்துக்கும் யானை நின்ற இடத்துக்கும் அதிக தூரமாகையால் யானை வீறிட்டுக்கொண்டு போன சப்தம் மட்டுந் தங்கள் காதில் விழுந்ததாகவும், அந்த யானை எந்தத் திசை நோக்கி நடந்ததென்பது தெரியாதென்றும் வேடர்களும் மற்றவர்களும் அந்தக் காட்டில் நுழையக் கூடாத இடங்களெல்லாம் நுழைந்து தேடியும் நீங்கள் அகப்படவில்லை. தேவராஜப் பிள்ளை, கனகசபை யண்ணன் முதலானவர்கள் வீட்டுக்குத் திரும்பி வராமல் அந்தக் காட்டிலே கூடாரம் அடித்துக்கொண்டு பல நாள் வரைக்குந் தேடியும் தாங்கள் அகப்படாமையினால், நான் சித்தங் கலங்கி தேக ஸ்மரணை தப்பிப் பைத்தியம் பிடித்தவள்போற் புலம்பிக்கொண்டு திரிந்தேன். தேவராஜப் பிள்ளை முதலானவர்கள் எனக்கு ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகளெல்லாம் செவிடன் காதிற் சங்க நாதம் செய்தது போல, நிஷ்பலமாகிவிட்டன. நான் சரியான ஆகாரமும் உறக்கமு மில்லாமல் எப்போதும் அழுதுகொண்டு வட திசையை நோக்கிப் பார்த்தவண்ணமாயிருந்தேன். ஒரு நாள் நடுச்சாமத்தில் நான் மேல்மாடியில் உட்கார்ந்துகொண்டு சாளரத்தின் வழியாக வடக்கை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அதிக தூரத்தில் ஒரு கரிய மேகம் நடந்து வருவதுபோல ஒரு யானையானது பாகனுமில்லாமல் அம்பாரி முதலிய அலங்காரமுமில்லாமல் வெறுமையாய் நடந்து வந்தது. அந்த யானை சமீபத்தில் வந்த உடனே நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். அதுதான் உங்களை மோசஞ் செய்த பட்டத்து யானையென்று எனக்குப் பரிஷ்காரமாய் விளங்கிற்று. அந்த யானையானது வழக்கமாய்க் கட்டப்படுகிற கொட்டத்துக்குள்ளே வந்து தானே நுழைந்து கொண்டது. அப்போது எல்லாரும் அருநித்திரையாயிருந்தபடியால் அந்த யானை வந்தது என்னைத் தவிர வேறொருவருக்குந் தெரியாது. அந்த யானையைப் பார்த்த உடனே எனக்குச் சகிக்கக்கூடாத சஞ்சலம் உண்டாகி நான் ஒருவருக்குந் தெரியாமல் எழுந்து அந்த யானை நின்ற இடத்துக்குப் போனேன். அந்த யானை என்னைப் பார்த்த உடனே அதனுடைய துதிக்கையை என்மேலே நீட்டி மிருதுவாகத் தடவிற்று. நான் உடனே அந்த யானையைப் பார்த்து ஐயோ! துஷ்ட மிருகமே! என்னுடைய பர்த்தாவை என்ன செய்தாய்? எந்தத் திக்கிலே கொண்டுபோய் விட்டாய்? அவரைக் கொன்றுவிட்டாயோ? அல்லது உயிரோடு விட்டாயோ? ஒன்றுந் தெரியவில்லயே!! நீ ஆணோடு பெண்ணோடு பிறக்கவில்லையா? நீ ஆணோடு பிறந்திருந்தால் என் பர்த்தாவை ஏன் அவகடஞ் செய்தாய்? நீ பெண்ணோடு பிறந்திருந்தால் பெண்ணாகிய எனக்கு நீ இரங்கமாட்டாயா? என் பர்த்தா இருக்குமிடத்தைக் காட்டாயா? என் துன்பத்தை ஓட்டாயா? என்று பல விதமாகச் சொல்லிப் புலம்பினேன். என்னுடய கண்ணீர்த் துளிகள் அந்த யானையின் துதிக்கையை நனைத்து விட்டன. உடனே அந்த யானையானது தன்னுடைய துதிக்கையை என்னுடைய இடுப்பிலே சுற்றி என்னை அதி மிருதுவாகத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக்கொண்டு நடந்தது. ஆரம்பத்தில் எனக்குப் பயம் ஜனித்த போதிலும் அந்த யானை வட திசையை நோக்கி நடந்தபடியால் நீங்களிருக்கிற இடத்திலே என்னைக் கொண்டுபோய் விட்டாலும் விடுமென்று நான் மனத்திடஞ் செய்துகொண்டேன். அப்போது அர்த்த சாமமாகவும் எல்லாருந் தூங்குகிற சமயமாகவும் இருந்தபடியால் யானை என்னைத் தூக்கிக் கொண்டு போனது ஒருவருக்குந் தெரியாது.
அந்த யானையானது உள்நகர் புறநகரெல்லாங் கடந்து கானகத்துக்குள் நுழைந்து மரஞ் செடிகளையெல்லாம் நெறு நெறென்று சாய்த்துத் தள்ளிக்கொண்டு அநேகங் காடுகள், மலைகள், ஆறுகளெல்லாந் தாண்டி வட திசையை நோக்கி இரவும் பகலுமாகக் கடுமையாக நடந்தது. நான் வழியிலிருகிற மரக் கனிகளை உண்டு பசி தீர்த்துக் கொண்டு போனேன். யானை பல நாள் நடந்தபிறகு ஒரு பெரிய மலையடிவாரத்தில் வந்து சேர்ந்து அந்த மலையோரத்தில் அசையாமல் நின்றது. நான் அந்த மலையில் ஒரு பக்கத்தில் அம்பாரி உடைந்து கிடப்பதைக் கண்டு யானையை விட்டுத் தாண்டி, அந்த மலை மேலே தொற்றிக் கொண்டேன். அந்த அம்பாரி கிடந்த இடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் சில வஸ்திரங்கள் கிடந்தன. அவைகளை ஒரு நீளக் கழியினால் இழுத்து என் கையிலே எடுத்துப் பார்க்க அவைகள் உங்களுடைய சட்டையாகவும் முண்டாசாகவுமிருந்தபடியால் எனக்கு உண்டான மனோ விசாரம் இவ்வளவென்று சொல்ல ஒண்ணாது. அவைகளைக் கண்களில் ஒத்தித் தலையிலே சூடி, வாயிலே வைத்து அநேக முத்தங்கள் கொடுத்தேன். அவைகளைக் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறும்பொழுது உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருந்த மரங்களையும் பார்வையிட்டேன். அந்த மரங்களையே வழிகாட்டியாக வைத்துக்கொண்டு நடந்து மலையின் உச்சியில் வந்து சேர்ந்தேன். அந்த மலைக்கு வடபுறத்தில் வெட்டப்படிருந்த படிகளைக் கண்ட உடனே அவைகளின் வழியாக நீங்கள் இறங்கிப் போயிருக்கலாமென்று நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் பெண் வடிவாய்ப் போகிறது எப்போதும் ஆபத்தை விளைவிக்குமானதால் புருஷ வேஷந் தரித்துக்கொண்டு போவது சர்வோத்தமமென்று நினைத்து அப்போது நான் இடையிலே தரித்திருந்த வெள்ளைச் சல்லாச் சேலையை இரண்டாகக் கிழித்து இடுப்பு வேஷ்டியாகவும் அங்கவஸ்திரமாகவும் உபயோகித்துக் கொண்டு உங்களுடைய சட்டையை மேலே தரித்துக்கொண்டு உங்களுடைய முண்டாசையும் என் தலை மேலே தரித்துக்கொண்டேன். இப்படியாக ஆண்வேஷந் தரித்துக்கொண்டு படிவழி இறங்கி அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன்.
நான் வந்து சேர்ந்தபோது பட்டணத்து ஜனங்களெல்லோரும் மலையடிவாரத்தில் ஏகமாய்க் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களால் விடப்பட்ட ஒரு யானையானது என்னிடத்தில் வந்து என் கழுத்திலே பூமாலையைப் போட்டு என்னைத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக்கொண்டது. உடனே ஜனங்களெல்லோரும் என்னை நோக்கி மகாராஜாவே! சக்கரவர்த்தியே! நீங்கள் தீர்க்காயுசாயிருக்க வேண்டும். நாங்கள் ஒரு ராஜாவை நியமிக்க வேண்டியதற்காக யானையின் கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்பினோம். அது உங்களுடைய கழுத்திலே மாலையைப் போட்டபடியால், இனி மேல் நீங்கள் தான் எங்களுக்கு மகாராஜா. நாங்கள் உங்களுக்குப் பிரஜைகள். நீங்கள் எங்களுக்குப் பிதா. நாங்கள் உங்களுக்குப் பிள்ளைகள் என்று சொல்லி பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்து என்னை நமஸ்கரித்தார்கள். கூத்துப் பார்க்கப் போன இடத்திலே பேய் பிடித்தது போலப் புருஷனைத் தேடிவந்த இடத்தில் இப்படிப்பட்ட சகடயோகம் வந்ததேயென்று நான் திகைத்து ராஜாங்கம் வேண்டாமென்று நிராகரிக்க எண்ணங் கொண்டேன். ஆனால், நான் வேண்டா மென்றாலும் ஜனக்கள் என்னை விடமாட்டார்களென்கிற பயத்தினாலும், நான் அரசனாயிருக்கிற பக்ஷத்தில் நீங்கள் இருக்கிற இடத்தை அநாயாசமாய்க் கண்டுபிடிக்கலாமென்கிற நம்பிக்கையாலும் நான் ராஜாங்கம் வேண்டாமென்று சொல்லாமல் சும்மாயிருந்து விட்டேன். உடனே அவர்கள் பட்டணப் பிரதக்ஷணஞ் செய்வித்து அரண்மனைக்குக் கொண்டுபோய் மகுடஞ் சூட்டினார்கள். அப்போது ஒரு பக்கத்தில் பரத நாட்டியமும், ஒரு பக்கத்தில் மேள வாத்திய முழக்கமும், ஒரு பக்கத்தில் சங்கீத கானமும், ஒரு பக்கத்தில் பிராமணருடைய வேதகோஷமும், ஒரு பக்கத்தில் வித்வான்களுடைய ஸ்தோத்திரப் பாடல்களும், ஒரு பக்கத்தில் ஆசியக்காரர்களுடைய விகடமுங் கூடி எனக்குத் தலை மூர்ச்சனையாய்ப் போய்விட்டது. அந்த ஆரவாரங்களெல்லாம் போதுமென்றும் நான் ஏகாந்தமாயிருக்க அபேக்ஷிக்கிறேனென்றும் நான் ஆயிரந்தரம் தெரிவித்தபிறகு அவர்கள் ஒருவர் ஒருவராய்த் தொலைந்தார்கள். அவர்கள் தொலைந்ததும் ஆயிரம் பேர் என்னைச் சுற்றிக்கொண்டு பங்கா போடுகிறவர்களும், கவரி வீசுகிறவர்களும், குடை பிடிக்கிறவர்களும், படிக்கம் ஏந்துகிறவர்களும், அடப்பம் ஏந்துகிறவர்களும், பன்னீர் தெளிப்பவர்களும், கந்தப்பொடி இறைப்பவர்களும், பூமழை பொழிகிறவர்களூம், சுவாமி! பராக்கு! பராக்கு! என்று கட்டியங் கூறுகிறவர்களும், வாழத்துகிறவர்களும், இன்னும் அநேகவித கோலாகலஞ் செய்கிறவர்களுமாயிருந்தார்கள். அவர்கள் எந்தச் சமயத்திலும் என்னுடன் கூட இருக்கிறார்களென்று கேள்விப்பட்டு எனக்கு மகத்தாகிய சித்தாகுலம் உண்டாயிற்று.
நான் அரண்மனைக்குச் சேர்ந்த சிங்கார வனத்துக்காவது போய்ச் சற்று நேரம் ஏகாந்தமாயும் அமரிக்கையாகவும் இருக்கலாமென்று நினைத்துப் புறப்பட்டேன். நான் பகிர் பூமிக்குப் போவதாக நினைத்து, என்னை நூறு பேர் தொடர்ந்து வந்தார்கள். “ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டேன். மகாராஜாவுக்குக் கொல்லையிலே பங்காப் போடவும், கால் கழுவிவிடவும், பல் விளக்கி விடவும், முகங்கழுவித் துடைக்கவும், வேஷ்டி கட்டிவிடவும் இன்னும் பல பல வேலைகள் செய்யவும் கொல்லையில் நூறு பேர் காத்திருப்பது வழக்கம் என்றார்கள். நான் உடனே கொல்லைக்குப் போகாமல் திரும்பி வந்துவிட்டேன். உங்களைத் தவிர வேறு புருஷர்களை நான் முகாலோபனஞ் செய்ததேயில்லை. நம்முடைய வீட்டில் வேலைக்காரர்களிடத்தில் பேசும்போது கூட எனக்கு நாணமுஞ் சங்கோசமுமா யிருக்கும். இப்படிப்பட்ட எனக்கு இத்தனை புருஷர்களுடைய மத்தியிலிருப்பது எவ்வளவு மனவருத்தமாயிருக்கு மென்பதை நீங்களே ஊஹித்துக்கொள்ள வேண்டும். நான் உடனே இதற்குப் பரிகாரந் தேடவேண்டுமென்று நினைத்து, அந்தப் புருஷர்களை நோக்கி எந்தத் தேசத்திலும் ராஜாக்களுக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது வழக்கமா யிருக்கின்றது. இந்த ஊரில் ஏன் அந்த வழக்கம் அநுஷ்டிக்கப்படவில்லை? இது ஸ்திரீகள் இல்லாத நகரமா? அல்லது ராஜாவுக்கு ஊழியஞ் செய்வதை ஸ்திரீகள் தங்களுக்குக் கௌரவக் குறைவாக எண்ணுகிறார்களா? அதன் வயணந் தெரியவேண்டும் என்றேன். உடனே அவர்கள் மகாராஜாவே! உங்களுடைய அபிப்பிராயந் தெரியாமையினால் நாங்கள் உங்கள் பணிவிடைகளைச் செய்ய ஆரம்பித்தோம். கணக்கில்லாத ஸ்திரீகள் உங்களுடைய ஊழியங்களைச் செய்யச் சித்தமாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைப்பிக்கும்படி உத்தரவானால் இந்த நிமிஷத்தில் வரவழைக்கிறோம் என்றார்கள். நான் அவர்களை நோக்கி எனக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது திருப்தியே யல்லாது புருஷர்கள் பணிவிடை செய்வது திருப்தி அல்ல; ஆகையால் நீங்கள் போய் ஸ்திரீகளை வரச் சொல்லுங்கள் என்றேன். அவர்கள் நான் ஸ்திரீ லோலனென்றும், கோலாகல புருஷ னென்றும் எண்ணிக் கொண்டு உடனே புறப்பட்டுப் போய் நூறு ஸ்திரீகளை அனுப்பினார்கள். நான் உட்கார்ந்திருக்கும் போதே சில ஸ்திரீகள் எனக்குக் கால் பிடிக்கவும் சில ஸ்திரீகள் கை பிடிக்கவும் பல ஸ்திரீகள் உடம்பெல்லாந் தடவி விடவும் ஆரம்பித்தார்கள். நான் அவர்களை வரவழைத்தது சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கில் மாட்டிக்கொண்டது போல் ஆயிற்று. ஏனென்றால் அந்தப் புருஷர்கள் என் சமீபத்தில் வரப் பயந்துகொண்டிருந்தார்கள். இந்த ஸ்திரீகளோ என்றால் நிர்ப்பயமாக என்னை நெருங்கித் தொடவும், மோகாபிநயங்கள் செய்யவும் ஆரம்பித்தார்கள். அவர்களை நான் கடுகடுத்துக் கொண்டு என்னுடைய உத்தரவில்லாமல் யாராவது தொட்டாலுங் கிட்ட நெருங்கினாலும் அவர்கள் சிரச்சேதஞ் செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தினேன். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிப் போய்விட்டார்கள்.
நான் ஸ்நான கட்டத்துக்குப் போனபோது, எனக்கு அழுக்கு தேய்க்கிறதற்காகச் சில ஸ்திரீகள் என் வலது காலைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் இடது காலைப் பிடித்துக்கொண்டார்கள். சிலர் இடது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே பல ஸ்திரீகள் என்னுடைய பல அவயவங்களையும் பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது நான் அவர்களைக் கடிந்துகொண்டு என்னுடைய கரசரணாதி அவயவங்களை அவர்களுடைய ஸ்வாதீனத்திலிருந்து என் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள நான் பட்ட பாடு போதுமென்றாய்விட்டது.
ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கர்மானுஷ்டானங்கள் முடிந்த பிற்பாடு, நான் அமுது செய்வதற்காகப் போஜனசாலைக்குள் நுழைந்தேன். அங்கே எனக்கு அமுது படைக்கிறதற்கு முன் இரண்டு பெயருக்கு இலையில் அமுது படைக்கப்பட்டு அவர்கள் எனக்கு முந்திப் புசிக்க ஆரம்பித்தார்கள். நான் ஆச்சரியம் அடைந்து அவர்கள் யாரென்று வினவினேன். உடனே மடப்பள்ளி விசாரணைக் கர்த்தர்கள் என்னை நோக்கி, “மண்டலாதி பதியே! அந்த இருவருக்கும் யுஉண்டுகாட்டிகள்ரு என்று பெயர். அவர்களை விஷபரீக்ஷகர்களென்றுஞ் சொல்லலாம். மகாராஜாவினுடைய உணவில் யாராவது சத்துருக்கள் விஷங் கலக்கக் கூடுமாகையால் அதைப் பரீக்ஷிப்பதற்காக அந்த இருவருக்கும் சாதம் படைப்பதும் அவர்கள் முந்திப் புசிப்பதும் வழக்கம். அவர்கள் போஜனஞ் செய்து இரண்டு நாழிகைக்குப் பிறகு அவர்களுக்கு விஷ உபத்திரவம் இல்லையென்று தெரிந்த பிறகு மகாராஜா சாப்பிடவேண்டும் என்றார்கள். எனக்குத் தாளக்கூடாத பசியாயிருந்தாலும் விஷசோதனை செய்வதற்காக நான் வெகு நேரம் வரையில் அன்னத்தைத் தொடாமல் உட்கார்ந்திருந்தேன். பிறகு வாழை இலை போலத் தங்கத்தினாற் செய்யப்பட்ட இலையிலே அன்னமும் பலவகையான அறுசுவைப் பதார்த்தங்களும் படைக்கப் பட்டன. நான் போஜனஞ் செய்வதற்காக இலைக்கு முன்பாக உட்கார்ந்தேன். என் பக்கத்திலே பல ஸ்திரீகள் உட்கார்ந்து ஒரு ஸ்திரீ எனக்கு சாதம் ஊட்டவும், பல ஸ்திரீகள் பல கறிகளை எடுத்து என் வாயில் வைக்கவும் ஆரம்பித்தார்கள். நான் அவர்களை முனிந்துகொண்டு ஒருவரும் எனக்கு ஊட்டவேண்டாம். நானே அள்ளிச் சாப்பிடுகிற வழக்கம் என்று சொல்லி அதட்டினேன். அவர்கள் நடுநடுங்கிக் கொண்டு தூரத்திற் போய்விட்டார்கள். சகல விகாதங்களுந் தீர்ந்துபோய் விட்டபடியால் இனிமேல் அமரிக்கையாகப் புசிக்கலாமென்று நினைத்து சாதத்தை அள்ளி வாயில் வைத்தேன். உடனே இரண்டு வைத்தியர்கள் என் முன்பாக நின்றுகொண்டு மகாராஜா! ராஜேந்திரா! அந்தப் பதார்த்தம் வாயு; இந்தப் பதார்த்தம் சூடு; அந்தக் கறி பித்தம்; இந்தக் கறி சீதளம் என்று சொல்லி அநேக பதார்த்தங்களை நான் புசிக்காதபடி தடுத்தார்கள். நான் அவர்களுடைய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் எனக்கு இஷ்டமான பதார்த்தங்களை யெல்லாம் பரிபூரணமாக உண்டு பசி தீர்த்துக் கொண்டேன். பிறகு நான் சுயம்பாகிகளைப் பார்த்து “இந்த வைத்தியர்கள் கறிகளுக் கெல்லாந் தோஷஞ் சொல்லுகிறபடியால், அவர்கள் சாப்பிடும்போது, அவர்களுக்குக் கறிகள் படைக்காமல், தண்ணீருஞ் சாதமும் படையுங்கள்” என்று ஆக்ஞாபித்தேன். அந்தப்படி ஸ்வயம்பாகிகள் உடனே நிறைவேற்றினார்கள்.
நான் சாப்பிட்டபிறகு நடந்த உபசாரங்களும் அநந்தம். இந்த உபசாரங்களை யெல்லாம் நான் அபசாரங்களென்றே நினைத்தேன். நான் ராஜாவாயிருந்து பட்ட பாடுகள் நீங்கள் காவற்கிடங்கிற்கூடப் பட்டிருக்க மாட்டீர்கள்.
“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்“ என்பது போல, நான் பட்ட உபத்திரவங்களின் மத்தியில் உங்களை நான் மறக்கவில்லை. இந்த ஊரில் என்ன விசேஷம் என்றும், யாராவது அந்நியர்கள் வந்திருக்கிறார்களா வென்றும், நான் பொதுவாக வேவுக்காரர்களை விசாரித்தபோது, அவர்கள் ஒரு அந்நிய தேசத்தார் வந்திருக்கிறார். அவர் மேலே பல துர்வழக்குகள் வந்திருக்கின்றன. அவர் பொழுது விடியச் சொன்னால் விடிகின்றது. விடிய வேண்டாமென்றால் விடிகிறதில்லை என்றார்கள். அவர்கள் சொன்ன அடையாளங்களைக் கொண்டு நீங்கள் தானென்று நிச்சயித்துக் கொண்டு உடனே உங்கைளையும் மற்றவர்களையும் விசாரணைக்குக் கொண்டுவரும்படி உத்தரவு செய்தேன். நீங்கள் இருந்த கோலத்தை நான் நியாயசபையிற் பார்த்தபோது என் பிராணந் துடித்துப் போய்விட்டது. நான் மெய்மறந்து சிங்காசனத்தை விட்டுக் கீழே விழும்படியான ஸ்திதியில் இருந்தேன். ஆயினும் பூண்ட வேஷத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டுமென்கிற எண்ணத்துடன் நான் மனந் திடஞ் செய்துகொண்டு உங்கள் மேல் வந்த வழக்குகளை விசாரித்தேன். அந்த விசாரணை முடிந்தபிறகு நீங்கள் கொலு மண்டபத்தை விட்டு அப்பால் போகவேண்டாமென்று ஒரு சேவகன் மூலமாக நான் தான் உங்களுக்குச் சொல்லி யனுப்பினேன்“ என்றாள். இந்த வரலாற்றை யெல்லாங் கேட்ட உடனே, எனக்கு உண்டான ஆச்சரியம் அளவுகடந்து போய் விட்டது.