பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 38

விக்கிமூலம் இலிருந்து


38-ஆம் அதிகாரம்
அரசன் குடிகளுக்குச் செய்ய வேண்டிய
நன்மைகள்—உத்தியோக விஷயம்—
பரிதான கண்டனம்

நானும் ஞானாம்பாளும் எங்களுடைய துயரங்களை ஒருவருக்கொருவர் சொல்லி மனந்தேறின பிறகு, ஞானாம்பாள் என்னை நோக்கி ““நீங்கள் உங்களுடைய வரலாறுகளை எனக்குத் தெரிவித்த போது, ஒரு முக்கியமான சங்கதியைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டீர்கள். நீங்கள் பொழுது விடியாமல் பாடினதாகவும், அந்தப் பிரகாரம் பொழுது விடியாமலிருந்ததாகவும், பிறகு நீங்கள் வேறொரு பாட்டுப் பாடி பொழுது விடியும்படி செய்ததாகவும் நான் கேள்விப்பட்டேன். அந்தச் சங்கதியை எனக்கு விவரமாகத் தெரிவிக்க வேண்டும்“” என்று சொல்லிக் கும்பிட்டாள். சக்கிலியன் பக்ஷமாக நியாயாதிபதி தீர்மானஞ் செய்ததும், நான் கிரகணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு பொழுது விடியாமற் பாடினதும், பிறகு ஜனங்களுடைய வேண்டுகோளின் பிரகாரம் நான் பொழுது விடியும்படி பாடினதும் ஞானாம்பாளுக்குப் பூரணமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்ட வுடனே, அவள் நெடுநேரம் வரைக்கும் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். பிறகு அவள் என்னுடைய சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டு ““என்னுடைய அத்தான் நெருப்பைச் சுடு மென்பார், தண்ணீர் குளிர்ந்திருக்கு மென்பார். ஈ பறக்கு மென்பார். காகங் கறுப்பாகவும், கொக்கு வெண்மை யாகவும் இருக்கு மென்பார். ஆகையால் அத்தானைப் போற் சமர்த்தர்கள் யார்?”” என்னும் கருத்தை அடக்கி ஒரு வெண்பாப் பாடினாள். அஃது:—

தீயே சுடுமென்பர் தெண்ணீர் குளிருமென்பர்
ஈயே பறக்குமென்ப ரின்னமுந்தான்—பாய்காகஞ்
சுத்தக் கறுப்பென்பர் சூழ்கொக்கு வெண்மையென்பர்
அத்தானைப் போல்சமர்த்தர் யார்?

நான் அத்தா னென்கிற முறைமை பற்றி, ஞானாம்பாள் பரிகாச மாகப் பாடின படியால், ஒருவரும் விகற்பமாக எண்ணார்க ளென்று நம்புகிறேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து “நீங்கள் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குச் சாதகமாயிருக்குமென்று நினைத்தே நான் இந்த ராஜ்யபாரத்தை அங்கீகரணஞ் செய்தேன்? இப்போது என்னுடைய மனோரதம் நிறைவேறி உங்களைக் காணும்படியான பெரும்பேறு கிடைத்துவிட்டதால் இனி நமக்கு இந்த ராஜ்யபாரம் வேண்டுவதில்லை. எனக்கு நீங்களே எஜமான் நான் உங்களுக்கு ஊழியக்காரி. நான் உங்களுடைய ஊழியத்தை விட்டு விட்டு ராஜாங்கத்தை வகிப்பது முறையல்ல. அன்றியும் அரசாட்சி செய்யத் தகுந்த யோக்கியதையும் என்னிடத்தில் இல்லை. ஆகையால் ஒருவருக்குந் தெரியாமல் நாம் இந்த ஊரைவிட்டுப் போய்விடுவதே சர்வோத்தமம் என்றாள்”. நான் அவளைப் பார்த்து “இந்த ஊர் சில காலமாக அரசனில்லாமல் அராஜகமாக இருப்பதால் துஷ்டர்கள் அதிகரித்து சாதுக்கள் எல்லோரும் ஆலையில் அகப்பட்ட கரும்பு போலத் துன்பப் படுகிறார்கள். இதை நாம் ஸ்வாநுபோகமாகத் தெரிந்திருந்தும் அந்தச் சாதுக்களைக் கைவிட்டுப் போவது தர்மமா? அன்றியும் நீ மகாராணியாய் இருப்பதும் உனக்கு நான் கணவனாயிருப்பதும் எனக்கு எவ்வளவோ மேன்மை. அந்த மேன்மையை இழந்துவிட எனக்குச் சம்மதமில்லை” என்றேன். அதற்கு ஞானாம்பாள் சொல்லுகிறாள்:- “ராஜ்ய பாரத்தை வகிப்பது எனக்கு அசம்மதமாயிருந்தாலும் அது உங்களுக்குப் பிரியமாயிருக்கிற படியால் உங்களுடைய சித்தப் பிரகாரம் நடக்கக் காத்திருக்கிறேன். பெரிய மலையைத் தூக்கித் தலைமேல் வைத்துக்கொண்டது போல ராஜாங்க பாரத்தை நான் வகித்துக் கொண்டபடியால், அதை நான் தாங்கும்படி நீங்களும் எனக்கு உதவி செய்யவேண்டும். ஏனென்றால் அரசு செலுத்துவது நம்முடைய வீட்டுக் கிள்ளுக்கீரை யல்ல. உலகத்திலுள்ள சகலத் தொழில்களிலும் அதிகாரங்களிலும் ராஜாதிகாரம் எப்படி மேலானதா யிருக்கிறதோ, அப்படியே அதைச் சேர்ந்த வேலைகளும் அபாரமாயிருக்கின்றன. ஒரு குடும்பத்துத் தலைவனாயிருக்கிறவன் அந்தக் குடும்பத்துக்காக ஓயாமல் பாடுபடுகிறான். கோடானுகோடி குடும்பங்களுக்குத் தலைவனாயிருக்கிற இறைவன் ஒரு நிமிஷமாவது சும்மா யிருக்கலாமா? சொற்பக் கூலியை வாங்கிக்கொண்டு வேலை செய்கிறவன் அகோராத்திரம் உழைக்கிறான். அப்படியானால் எண்ணிக்கை யில்லாத வருமானங்களையும் ஊதியங்களையும் ராஜ சுதந்திரங்களையும் ஜனங்களிடத்தில் பெற்றுக்கொண்டு அநுபவிக்கிற அரசன், அந்த ஜனங்களுக்காக எவ்வளவு பாடுபடவேண்டும்? அரசனுடைய நேரமும் புத்தியும் சக்தியும் ஜனங்களுக்குச் சொந்தமேயன்றி, அரசனுக்குச் சொந்தமல்ல. ஜனங்களுடைய சௌக்கியத்துக்காக ராஜாங்கம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, தன்னுடைய சௌக்கியத்துக்காக ஏற்பட்டிருக்கவில்லை என்பதை அரசன் எப்போதும் தன்னுடைய கருத்தில் வைக்கவேண்டும். அரசன் ஜனங்களுடைய சுகாசுகங்களையே, தன்னுடைய சுகாசுகங்களாக எண்ணவேண்டுமே யல்லாது, தன்னையும் ஜனங்களையும் பிரத்தியேகமாக எண்ணக்கூடாது. அப்படிப் பிரத்தியேகமாக எண்ணுகிற பக்ஷத்தில், தன்னைப் பார்க்கிலும் ஜனங்களையே விசேஷமாக எண்ணவேண்டும். ஒரு அன்புள்ள தகப்பன், தன் பிள்ளைகளுடைய சௌக்கியத்தின் மேலே நாட்டமாயிருப்பது போல் அரசனும் பிரஜைகளுடைய நன்மைகளையே எப்போதும் தேடவேண்டும். அரசன் நல்ல சட்டதிட்டங்களை உண்டுபண்ணி அந்தப்படி தான் முந்தி நடந்து வழிகாட்டவேண்டும். எப்போது யாவரும் காணும்படியான முகாரவிந்தத்தை உடையவனாகவும், அருள் பொழியாநின்ற கண்ணை உடையவனாகவும், ஜனங்களுடைய குறைகளைக் கேட்க எப்போது சித்தமாயிருக்கிற காதுகளை உடையவனாகவும், சத்தியமும் இன்சொல்லுங் குடிகொண்ட நாவையுடையவனாகவும் ஜனங்களுடைய பயத்தைத் தீர்க்கும் அபயாஸ்தங்களை உடையவனாகவும் பரஸ்திரீகள் காணாத மார்புடையவனாகவும் சத்துருக்கள் காணாத முதுகுடையவனாகவும் தர்மமே அவதரித்தது போன்ற நற்குண நற்செய்கைகளை உடையவனாகவும் அரசன் பிரகாசிக்க வேண்டும்.

ஜலமும் விவசாயத்தொழிலும் உலகத்துக்கு முக்கியமானதால், ஆறுகள், குளங்கள், ஏரிகள், பாய்க்கால்கள், வடிகால்கள் முதலியவைகளை நன்றாக வெட்டி வேளாண்மைக்குரிய சாதகங்களை அரசன் செய்து கொடுக்க வேண்டும். வியாபாரங்களும் பல தொழில்களும் கிரமமாய் நடக்கும்படி சர்வ ஜாக்கிரதை செய்யவேண்டும். பாலங்கள், மதகுகள், ரஸ்தாக்கள், சாலை மார்க்கங்கள் முதலியவைகளை உண்டாக்கி அவைகளை எப்போதும் செவ்வையான ஸ்திதியில் வைத்திருக்கவேண்டும். குருடர் முடவர் முதலிய அங்கஹீனர்களும் பாடுபடச் சக்தியில்லாத விருத்தர்களும் ஸ்திரீகளும் ரோகஸ்தர்களும் அநாதப் பிள்ளைகளும் பரம ஏழைகளும் வெளியே போய் பிக்ஷை எடுக்காதபடி தர்மசாலைகளை உண்டாக்கி அவர்களை அரசனே சம்ரக்ஷிக்கவேண்டும். வைத்திய சாலை, ஔஷதசாலை முதலியவைகளை ஊர்கள் தோறும் ஏற்படுத்தி ஏழைகளுக்குத் தர்ம வைத்தியஞ் செய்யும்படி தகுந்த வைத்தியர்களை நியமிக்கவேண்டும். வித்தியா சாலைகளை உண்டாக்கி அக்ஷராப்பியாசம், இலக்கணம், இலக்கியம், பூகோளம், ககோளம், கணிதம், பல தேச சரித்திரம் முதலியவைகளைப் படிப்பதுமன்றி சத்தியம், பிரமாணிக்கம், நீதிநெறி, தெய்வபக்தி, பரோபகாரம் முதலிய சன்மார்க்கங்களையும் கற்பிக்க வேண்டும். பணங் கொடுத்துப் படிக்க நிர்வாகமில்லாத பிள்ளைகள் இலவசமாகப் படிக்கும்படி அரசன் திட்டஞ் செய்யவேண்டும். பிள்ளைகளுக்குத் தேகப்பலமும் சௌக்கியமும் உண்டாகும்படி சிலம்பக் கூடம் முதலியவைகளை ஸ்தாபிக்கவேண்டும். சிற்பவேலை, நெசவுத்தொழில், தச்சு வேலை, கொற்றுவேலை முதலிய பல தொழில்களைக் கற்றுக்கொள்ள இஷ்டமுள்ளவர்களுக்கு உபயோகமாகும்படி பல தொழிற்சாலைகளை நிருமிக்கவேண்டும். மார்க்கங்களிலும் இன்னும் முக்கியமான இடங்களிலும் வழிப்போக்கர் தங்கும்படியாகச் சத்திரஞ்சாவடி முதலியவைகளை நிலைப்படுத்த வேண்டும். ஜனக்களுடைய வீடுகளும் தெருக்களும் சுத்தமாகவும் நாகரீகமாகவும் காற்று நடமாட்டமாகவும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்வதுமன்றி மல ஜல ஆதி அசுத்தங்களும் ஜனங்களுடைய பார்வையிற் படாதபடி அடிக்கடி அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

பெயர்ப்போன வித்தியா பாரங்கதர்களுக்கும் அருமையான தொழிலாளிகளுக்கும் அரசன் வெகுமதிகளும் உபகாரச் சம்பளங்களும் கொடுத்து அவர்களைக் கனப்படுத்த வேண்டும். அரசன் சாதுஜன மித்திரனாகவும் அசாத சத்துருவாகவும் இருக்கவேண்டும். அரசன் ஜனங்களை அறியாவிட்டால் அவர்களை எப்படி ஆளக்கூடும்? ஆகையால் அரசன் ஜனங்களுக்குள்ளே தானும் ஒருவனாகச் சஞ்சரித்து அவர்களுடைய குணாகுணங்களையும் ஆசாரக் கிரமங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அரசன் காக்ஷிக்கெளியனாய் மதுர பாஷியாய்ச் சகலருடைய குறைகளையுங் கேட்டு உடனே பரிகாரஞ் செய்யவேண்டும். அரசன் எல்லாருக்குங் காது கொடுக்க வேண்டுமே தவிர தகுந்த விசாரணையில்லாமல் எல்லாருடைய வார்த்தைகளையும் நம்பவொண்ணாது.

கடவுளைப் போல அரசனுக்குச் சர்வலோக சஞ்சாரமும் சர்வசக்தியும் இல்லாதபடியால், உத்தியோகஸ்தர்கள் மூலமாகவே அநேக காரியங்களையும் அரசன் நடத்தவேண்டியதாயிருக்கும். அந்த உத்தியோகஸ்தர்கள் ராஜப்பிரதிநிதிகளாகையால், அவர்கள் சர்வோத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி யில்லாவிட்டால் அரசனைப் பாவமும் பழியும் தொடருமானதால், அரசன் திறமையும் சன்மார்க்கமும் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கே தகுந்த உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும். ஒருவன் வேலை பார்க்குந் திறமையில் அதி மேதாவியா யிருந்தாலும், நற்குண சூனியனாயிருப்பானானால் அவனுக்கு அரசன் அற்ப உத்தியோகமுங் கொடுக்கக் கூடாது. அரசன் யோக்கியர்களையே நாடுகிறானென்று யாவருக்குந் தெரிந்தால் உலகத்தில் யோக்கியதை அதிகரிக்கவும் அயோக்கியதை வலசை வாங்கிப் போகவும் இடமாகுமல்லவா? சில ராஜாங்கத்தார் யோக்கியதையைக் குறித்து யாதொரு பரீக்ஷையுஞ் செய்யாமல் கல்வி பரீக்ஷை மட்டுஞ் செய்துகொண்டு, அதில் யார் தேர்ந்து வருகிறார்களோ அவர்களுக்கே எந்த உத்தியோகங்களையும் கொடுக்கிறார்கள். நாம் வித்தியா பரீக்ஷையோடே யோக்கியதா பரீக்ஷையுஞ் செய்யாமல் ஒருவருக்கும் உத்தியோகங் கொடுக்கக் கூடாது. இங்கிலீஷ் துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்டிருக்கிற பாடசாலைகளில் ஈசுர நிச்சயம் சன்மார்க்கம் முதலிய ஆத்மார்த்தமான விஷயங்கள் கற்பிக்கப் படாமல்,லௌகீக சம்பந்தமான சில காரியங்கள் மட்டுங் கற்பிக்கப்படுகிற படியால், அந்த பாடசாலைகளிற் கல்வி கற்கிற பிள்ளைகள், உலகாயதர்களாயும், நாஸ்திகர்களாயும், பரிணமிக்கிறார்கள். அவர்களுக்கு உத்தியோகமான உடனே, பணமே தெய்வமென்று நினைத்து, அதைச் சம்பாதிக்கிறதற்காகச் சகல அக்கிரமங்களையுஞ் செய்கிறார்கள். இங்கிலீஷ் துரைத்தனத்தாருடைய சட்டத்தில், இலஞ்சம் வாங்குகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது போலவே. இலஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட் டிருக்கிறது. இலஞ்சம் வாங்குகிறவர்களுக்குச் சர்வாநுகூலமான சட்டம் இதைவிட வேறொன் றிருக்கக் கூடுமோ? திருட ருடைய இம்சைக்குப் பயந்து, அவர்களுக்குப் பொக்கிஷத்தின் திறவு கோலைக் கொடுப்பவர்கள் போல, உத்தியோகஸ்தர்களுடைய நிர்ப்பந்தத்தினால் அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறார்களே தவிர, அவர்களுக்கு மனப் பூர்வமாய் இலஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. ‘அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியான வன் வீட்டு அம்மியை உடைக்கும்' என்கிற பழமொழிப்படி, அதிகாரிக்கு யார் மேலே துவேஷமிருக்கிறதோ, அவர்களைக் கெடுக்கிறதற்குப் பல சமயங்கள் நேரிடுகின்றன. வழக்கமாய் இலஞ்சம் வாங்குகிற அதிகாரிக்கு, எவன் இலஞ்சம் கொடுக்கவில்லையோ. அவன் அந்த அதிகாரிக்கு ஜன்ம சத்துரு வாகிறான். அவனுடைய வழக்குகளை யெல்லாங் கெடுத்து, மடி மாங்காய் போட்டு, கழுத் தறுக்க, அதிகாரி சமயந் தேடுகிற படியால், கைலஞ்சம் கொடுத்து, அவனுடைய தயவைச் சம்பாதிக்க வழக்காளிகள் உடன்படுகிறார்கள். இப்படிப் பட்ட நிர்ப்பந்தங்களினால் இலஞ்சங் கொடுக்கச் சம்மதிக்கிறார்களே தவிர, மனத் திருப்தியாக இலஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. ஆகையால், இலஞ்சம் கொடுப்பவர்களைத் தண்டிப்பது நியாயமா யிருக்குமானால், திருடாகளுடைய தடியடியைப் பொறுக்க . . மாட்டாமல், அவர்களுக்கு யார் பொருளை யெடுத்துக் கொடுக்கிறார்களோ, அவர்களையுந் தண்டிப்பது கிரமமாயிருக்கும். இங்கிலீஷ் ஆளுகையில், இலஞ்சங் கொடுத்தவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், இலஞ்சப் பிரியாது கொண்டு வர ஒருவருந் துணிகிற தில்லை. அப்படி யாராவது துணிந்தாலும், அதிகாரிகளுக்கு விரோதமாகக் சாக்ஷிகள் அகப்படுவது துர்லபமா யிருக்கின்றது. இலஞ்சப் பிரியாது உருசு வாகா விட்டால், பொய்ப் பிரியாது செய்த குற்றத்துக் காக. பிரியாதுக்காரன் வகையாகத் தண்டிக்கப் படுகிறது மன்றி அவன் எப்போதும் அதிகாரிகளினுடைய க்ஷாத்திரத்துக்குப் பாத்திரன் ஆகிறான். இவ்வகையாக, இலஞ்சம் வாங்கிகளுக்குப் பல சாதகங்களிருக்கிற படியால், அவர்கள் இலஞ்சம் வாங்குகிறதற்கு உத்தாரச் சீட்டுப் பெற்றுக் கொண்டது போல, நிர்ப்பயமாய்ச் சர்வ கொள்ளை யடிக்கிறார்கள். அதுவும் போதாதென்று, அவர்களுடைய ஆயுசு வரையில், அவர்களுக்குத் துரைத் தளத்தார் உபகாரச் சம்பளங்களையுங் கொடுக்கிறார்கள்.

லஞ்சம் கொடுக்கிறவர்களைத் தண்டிக்கிறதென்கிற விதியை நாம் பரிச்சேடம் அநுசரிக்கக்கூடாது. அன்றியும் ஒரு உத்தியோகஸ்தன் பரிதானம் வாங்குகிறானென்றாவது அல்லது வேறு பிரபலமான துஷ்கிருத்தியங்கள் செய்கிறானென்றாவது, பல பெயர்களுக்குப் பகிரங்கமாய்த் தெரிந்திருந்தால் அதைப் பற்றிப் பூரண விசாரணை செய்து கொண்டு அவன் மேலே பிரியாது வராமலிருந்தாலுங் கூட அவனை உடனே உத்தியோகத்தினின்று நீக்கி விட வேண்டும். அரசன் அயோக்கியமான உத்தியோகஸ்தர்களை எப்போதும் நன்கு மதித்து அபிமானிக்கவேண்டும். அவர்கள் மூப்பு ரோகம் முதலிய காரணங்களால் வேலை பார்க்க அசக்தர்களாயிருக்கும்போது அரசன் அவர்களுக்கு உபகாரச் சம்பளங் கொடுத்து ஆதரிக்க வேண்டும். அவர்கள் அகால மரணமாய் இறந்து போய், அவர்களுடைய புத்திர களத்திராதிகள் அன்ன வஸ்திரத்துக்கு வழியில்லாமல் நிர்க்கதியாயிருப்பார்களானால், அவர்களை அரசன் போஷிக்கவேண்டும். தங்களுக்குப் பிற்காலந் தங்களுடைய குடும்ப சம்ரக்ஷணைக்கு மார்க்கஞ் செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடன் அனேகர் லஞ்சத்தைக் கையாளுகிறபடியால், அரசன் தங்களுக்குப் பிற்காலத்தில் தங்களுடைய குடும்பங்களைப் போஷிப்பானென்கிற நிச்சயமிருந்தால் அநேகர் லஞ்சம் வாங்காமற் பரிசுத்தராயிருப்பார்களென்பது உண்மையே.

இராஜ பதவி எல்லாருடைய அந்தஸ்துக்கும் மேற்பட்டதாயிருப்பது போலவே, அரசன் நற்குணங்களிலும் புத்தியிலும் சாமர்த்தியங்களிலும் மற்றவர்களுக்கு மீசரமாயிருக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் அவனை யார் மதிப்பார்கள்? சூரியன் தன்னுடைய ஒளியினால் எல்லாப் பொருள்களையும் பிரகாசிக்கச் செய்வதுபோல், அரசனுந் தன்னுடைய நற்குணங்களாற் குடிகளுடைய குணந் திருந்தும்படி செய்யவேண்டும். அரசன் சிற்றின்பத்தைத் திரஸ்கரிக்க வேண்டும். அன்னிய ஸ்திரீகளுடைய அழகுக்குக் குருடனாயிருக்க வேண்டும். தப்பு ஸ்தோத்திரத்துக்குச் செவிடனாயிருக்க வேண்டும். அரசனுக்குச் செங்கோலின் பலம் பலமேயல்லாமல் ரத கஜ துரக பதாதிகள் பலமல்ல. செங்கோல் கோணாமல் அரசாளுகிற மன்னனுக்கு நாடெல்லாம் அரணானதல் வேறு அரண் வேண்டுவதில்லை. குடிகளெல்லாம் அவனுக்குப் படையாகையால், வேறு படை வேண்டுவதில்லை. அவர்களுடைய மனங்களெல்லாம் அவனுக்கு வாசஸ்தலமானதால் வேறு அரண்மனை வேண்டுவதில்லை. அந்த அரசனுக்குச் சத்துருக்களுமில்லை. கொடுங்கோல் மன்னனுக்குக் குடிகளே பகைவர். அவனுடைய கோட்டையே யுத்த பூமி. அவன் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி. அவன் உண்ணூம் அன்னமே விஷம். அவனைச் சூழ்ந்திருப்பவர்கள் எல்லாரும் யம தூதர்கள். அவனுடைய அரண்மனையே மயானம். ஆகையால் கொடுங்கோல் மன்னர் உய்வதற்கு வழி இல்லை” என்று தேன்மழை பொழிவது போல ஞானாம்பாள் பிரசங்கித்தாள். நான் அளவற்ற ஆக்லாந்தடைந்து அவளைப் பார்த்து “நீ இவ்வளவு கையிருப்பு வைத்துக் கொண்டு அரசாளத் தெரியாதென்று சொன்னாயே! இப்போது உலகத்தில் அரசு செய்கிறவர்களுக்கு உனக்குத் தெரிந்த காரியங்களில் நூற்றில் ஒரு பங்கு கூடத் தெரியுமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்து “வாய்த்தைக்குத் தரித்திரமுண்டா? வாய்ப் பந்தல் போட யாராலே கூடாது? அரசன் நடக்கவேண்டிய நெறிகளைப் பற்றி நான் வாசா கைங்கரியமாகப் பேசினபோதிலும் பேசினபடி நடப்பதல்லவோ கஷ்டம்” என்றாள். நானும் ஞானாம்பாளும் ஒருவரையொருவர் சந்தித்த சந்தோஷத்தினால் நேரம் போவதுகூடத் தெரியாமல் நாங்கள் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது உதயபேரி முதலிய வாத்தியங்கள் முழங்கினபடியால் விடியற்காலம் ஆய்விட்டதென்று தெரிஅது கொண்டோம். உடனே ஞானாம்பாள் ஒரு அறைக்குள்ளே போய்ப் பெண் ரூபத்தை மாற்றிப் புருஷ ரூபந் தரித்துக் கொண்டு என் முன்பாக வந்தாள். அதற்கு முன் பெண்ணுக்குப் பெண் ஆசிக்கும்படியான அதிரூபவதியாயிருந்தாள். இப்போது ஆணுக்கு ஆண் அபேக்ஷிக்கும்படியான அழகிய புருஷ வேஷம் பூண்டுகொண்டு வந்தாள். அவள் சாக்ஷாத் புருஷ வடிவமாகவே யிருந்தபடியால் அவள் பெண்ணென்பதை மறந்துவிட்டு ““இந்த மகா புருஷனை மணஞ் செய்வதற்கு நாம் பெண்ணாய்ப் பிறக்காமற் போய் விட்டோமே”” என்று சற்று நேரம் மதிமயங்கி, பிற்பாடு தெளிந்து கொண்டேன்.