பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 40
40-ஆம் அதிகாரம்
குடிகள் இயல்பு—இராஜ பக்தி—
அநியாய பஞ்சகம்
விக்கிரமபுரி சில காலம் குடியரசா யிருந்த நிமித்தம் அநேக ஜனங்கள் இராஜ பக்தி என்பதையே சுத்தமாய் மறந்து விட்டார்கள். இராஜாவா யிருக்கிற நாங்களே இராஜ பக்தியை உபதேசிப்பது கிரம மல்ல யென்று நினைத்து, சில விவேகிகளை ஏவி, ஜனங்களுக்கு இராஜபக்தியைப் போதிக்கும்படி செய்வித்தோம். அவர்கள் அடியிற்கண்டபடி பிரசங்கித்தார்கள்.
ஒவ்வொரு மனுஷனும் ஜீவிக்கிறதற்குப் பலருடைய உதவி வேண்டியிருப்பதால் ஒவ்வொருவனும் தனிமையாக வனவாசம் செய்வது சாத்தியமில்லாத காரியமா யிருக்கிறது. ஆகையால் ஆதிகாலந் துவக்கிக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஜனங்கள் கூட்டுறவாய் வாழ்வது வழக்கமாயிருக்கின்றது. விவசாயம், நெசவு, சிற்பம், தச்சுவேலை, கொல்லுவேலை முதலிய பல தொழில்கள் உலகத்துக்கு முக்கியமானபடியாலும், அந்தத் தொழில்களை ஒவ்வொருவனுங் கற்றுக்கொள்வது அசாத்திய மாகையாலும், அந்தத் தொழிலாளிகள் உள்ள இடங்களில் வசிப்பது ஜனங்களுக்குப் பெரிய சௌகரியமாயிருக்கிறது. கூட்டுறவாய் வாழ்கிற ஜனங்கள், ஒருவருக்கொருவர் உபத்திரவம் செய்து கொள்ளாமலும், ஒருவருடைய சொத்தை ஒருவர் அபகரிக்காமலும் பாதுகாப்பதற்காகவும் இன்னும் தேசோபகார மான பல நன்மைகளைச் செய்யவுமே, ஒவ்வொரு தேசத்திலும் ராஜாங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஜனங்கள் தங்கள் நன்மைக்காக அரசனை நியமித்துக் கொண்டி ருப்பதால் அரசனுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியது அகத்தியமா யிருக்கிறது. ஒரு சிறிய குடும்பத் தலைவன் சொற்படி நடவாத குடும்பஸ்தர்கள் துன்பம் அடைவார்களானால், அனந்தங் குடும்பங்களுக்குத் தலைவனாகிய அரசன் சொற்படி கேளாதவர்கள் எப்படி க்ஷேமம் அடைவார்கள்? உலக மாகிய உடலுக்கு அரசன் தலையாகவும் பிரஜைகள் பல அவயவங்களாயு மிருக்கிறார்கள். எண்சாணுடம்பிற்கும் சிரசே பிரதானமாயிருப்பது போல், உலக மாகிய உடலுக்கு அரசனே பிரதானமா யிருக்கிறான். தலையில்லாத சரீரம் எப்படி ஜீவிக்காதோ அப்படியே அரசனில்லாத தேசம் நாசத்தையும் அடையும்.
சகல சாஸ்திரங்களும், புராணங்களும், சமய நூல்களும் அரசனை விசேஷமாகச் சொல்லுகின்றன. அரசன் ஜனங்களால் நியமிக்கப்பட்டவனா யிருந்தாலும் அவன் சகலருக்கும் மேலான புருஷ ஸ்ரேஷ்டனென்று சகல தேசங்களிலும் நன்கு மதிக்கப் படுகிறான். சூரியன் உயர்வான இடத்திலிருந்து பிரகாசியா விட்டால் உலகம் ஒளி பெறுமா? மேகம் மேலான இடத்திலிருந்து வருஷியாவிட்டால் உலகத்துக்குப் பயன்படுமா? ஆறு குளங்கள் உயர்வாகவும், வயல்கள் தாழ்வாகவும் இருந்தால் மட்டும் ஜலம் பாயுமே யல்லாமல், ஆற்றைப் பார்க்கிலும் உயர்வாயிருக்கிற கழனிகளுக்கு ஜலம் பாயுமா? அப்படியே அரசனுக்குக் குடிகள் தாழ்ந்திருக்க வேண்டியவர்களே யல்லாது அரசனுக்குக் கீழ்ப்படியாத குடிகள் க்ஷேமத்தை அடைவார்களா? யுமாதாவுக்குச் சுரமிருந்தால் கர்ப்பத்துக்குஞ் சுரம்ரு என்பது போல் அரசன் சுகமாயிருந்தால் மட்டும் ஜனக்களுக்கும் சுகமானதால், அவனுடைய க்ஷேமத்தை ஜனங்கள் எப்போதும் பிரார்த்திக்க வேண்டும். அரசனை வணக்கமாயும், மரியாதையாயும், பயபக்தியாயும் பூஜிதை செய்யவேண்டும். அரசனுடைய சுகதுக்கங்களைத் தங்களுடைய கண்ணிற் பட்டதாகவும் பிரஜைகள் எண்ணி எப்போதும் ராஜபக்தி செய்யவேண்டும். சூரியனிடத்தில் வெப்பமும், சந்திரனிடத்தில் களங்கமும், மேகத்தினிடத்தில் இடியும், புஷ்பங்களிடத்தில் முட்களுமிருப்பது போல, அரசனும் நம்மைப் போல் மனுஷனானதால் அவனிடத்திலே சில குண தோஷங்களிருப்பதும் சகஜம். அதற்காக அரசனை நாம் அவமதிக்காமல் நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னம் போல, அரசனுடைய குற்றத்தை நீக்கிக் குணத்தை மட்டும் கிரகித்துக் கொள்ளவேண்டும். அரசனுடைய செய்கைகளுக்கு நமக்குக்காரணந் தெரியாதபோது அவன் நல்ல எண்ணத்துடனே செய்ததாக ஊகிக்கவேண்டுமே தவிர, விபரீதமாக எண்ணக்கூடாது. அரசன் ஒரு அக்கிரமஞ் செய்தாலுங் கூட, அதைக் கிரமமான மனுமூலமாகப் பரிகரிக்கவேண்டுமே யல்லாது, ராஜத் துரோகத்தைக் கனவிலுஞ் சிந்திக்கக் கூடாது. ராஜ நிந்தையை நாமும் பேசக்கூடாது. பிறர் பேசவும் இடம் கொடுக்கக் கூடாது.
சத்துருக்களையும், துஷ்டர்களையும் அடக்கவும், நியாய பரிபாலனம் நடத்தவும், தேச நன்மைக் கடுத்த பல வேலைகளைச் செய்யவும், போது மான சதுரங்கச் சேனைகளையும், உத்தியோகஸ்தர் முதலியவர்களையும் நியமித்து, அநுபாலிக்க, அரசன் கடமைப்பட் டிருப்பதால், அதற் காக விதிக்கப்பட்ட வரிகளை ஜனங்கள் மனோற்சாக மாகச் செலுத்த வேண்டும். வரி வாங்காவிட்டால் அரசன் தேச காரியங்களை எப்படி நடத்தக்கூடும்? வேரில் விடப்பட்ட ஜலம் மரம் முழுவதும் பரவுவது போலவும் நாம் வயிறு நிரம்பப் புசிக்கும் உணவு ஜீரணித்துத் தேகம் முழுதும் வியாபிப்பது போலவும், அரசனுக்குப் பிரஜைகள் கொடுக்கிற வரிகள் பிரஜைகளுக்கே உபயோகமாகிறபடியால், அரசனால் விதிக்கப்பட்ட நியாயமான வரிகளைப் பிரஜைகள் நிராடங்கமாகச் செலுத்தவேண்டும்.
ரோமாபுரியில் பல வரிகள் ஏற்பட்டிருந்த காலத்தில் ஜனங்கள் வரி கொடுக்க மாட்டோமென்று நிராகரித்து ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். அவர்களை அழைத்து வரும்படி அகிரிப்பா என்னும் தளகர்த்தனை ஆலோசனைச் சங்கத்தார் அனுப்பினார்கள். அந்தத் தளகர்த்தன் ஒரு விசித்திரமான கட்டுக் கதையைச் சொல்லி ஜனங்களை வசியப் படுத்தினான். அஃதென்னவெனில்:—
“முற்காலத்தில் வயிற்றுக்கும் மற்ற அவயவங்களுக்குஞ் சடுத்தம் உண்டாகி அந்த அவயவங்களெல்லாம் ஒன்று கூடி வயிறு ஒரு வேலையுஞ் செய்யாமலிருப்பதால் இனிமேல் வயிற்றுக்காகத் தாங்கள் ஒரு பாடும் படுகிறதில்லையென்று பிரதிக்ஞை செய்து கொண்டன. கைகள் ஒரு வேலையுஞ் செய்யோம் என்று சும்மா இருந்தன. கால் வயிற்றுக்காக ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன் என்றது. வாய் ஒன்றையும் புசிக்க மாட்டேன்” என்றது. கண், காது முதலியவைகளும் தங்களுடைய தொழில்களைச் செய்ய நிராகரித்தன. இவ்வகையாக அந்த அவயவங்கள் செய்த பந்துக்கட்டு தங்களுக்கே தீங்காய் விளைந்தது. வயிற்றுக்கு ஆகாரமில்லாமையினால் கை சோர்ந்து, கால் அயர்ந்து, வாய் உலர்ந்து, கண் இருண்டு, காது அடைத்துத் தங்களுக்கே உபத்திரவம் உண்டானபடியால் வயிறு தான் பிரதானமென்றும், வயிற்றுக்கு ஆகாரங் கொடாவிட்டால் தாங்கள் ஜீவிக்கிறதற்கு மார்க்கமில்லை என்றும் அந்த அவயவங்கள் அறிந்துகொண்டன. வயிற்றுக்கு இடுகிற அன்னம் தேகத்தின் அவயவங்களுக்கெல்லாம் பிரயோஜனமாவது போல அரசனுக்குக் கொடுக்கப்பட்ட வரிகள் ஜனங்களுக்கே உபயோகமாகிற படியால் வரி கொடுக்கிற விஷயத்தில் ஜனங்கள் ஆடங்கம் செய்யக்கூடாது” என்றார்கள்.
அந்தப் பிரசங்கிகள் மறுபடியும் ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:— “இந்த ஊர் குடியரசா யிருந்த காலத்தில் நாம் பட்ட அவஸ்தைகளும், இப்போது நமக்கு உண்டாயிருக்கிற சௌகரியங்களும், நமக்குப் பிரத்தியக்ஷப் பிரமாணமாய்த் தெரிந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தர்ம ராஜாங்கம் இந்தப் பூமண்டலத்தில் எங்கேயாயினும் இருக்குமா? சில மூட ராஜாக்கள் செய்த அக்கிரமங்களை நீங்கள் கேள்விப்பட்டால் இப்போது நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிகளென்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்! ஒரு சம்ஸ்கிருத வித்துவான் “அநியாய பஞ்சகம்“ என்று ஐந்து ஸ்லோகங்கள் செய்திருக்கிறார். அவைகளுள் மூன்று சுலோகங்களை மொழி பெயர்த்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
அநியாய பஞ்சகம்
I. “அநியாயபுரி என்னும் பட்டணத்தை மூர்க்கராஜன் என்பவன் ஆண்டுகொண்டு வந்தான். அவன் எலி வேட்டைக்குப் போயிருந்தபோது அவனுடைய பத்தினியை ஒரு பாம்பு கடித்து விட்டதாகவும், விஷம் தலையில் ஏறினவுடனே அவளுக்குப் பிராணலயம் உண்டாகுமென்றும், அரண்மனை உத்தியோகஸ்தர்கள் மந்திரிக்குத் தெரிவித்தார்கள். விஷம் தலையில் ஏறாதபடி தலையை வெட்டிப் பத்திரமாய் வைத்திருக்கும்படி மந்திரி உத்தரவு செய்தான். அந்தப் பிரகாரம் ராஜபத்தினியின் தலை வெட்டப் பட்டது. பாம்பு ஒரு வீட்டில் நுழைந்து வெளிப்படாமல் இருந்தபடியால் அந்த வீட்டைக் கொளுத்திவிடும்படி மந்திரி ஆக்ஞாபித்து அந்தப் பிரகாரம் நெருப்பு வைக்கப்பட்டது. அந்த நெருப்பு நகரமெங்கும் பரவி எல்லா வீடுகளையும் பொருள்களையும் நாசஞ் செய்துவிட்டது. தீயை அவிப்பதற்காக ஏரியின் கரையை உடைக்கும்படி மந்திரி உத்தரவு செய்து அந்தப் பிரகாரம் ஏரியின் கரை உடைக்கப்பட்டது. ஏரியின் ஜலமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதால் வயலுக்குப் பாய்ச்சத் தண்ணீரில்லாமல் பயிர்களெல்லாம் வாடி வதங்கின. பயிர்கள் வெய்யிலினால் வாடாதபடி ஊரிலுள்ள மரங்களையெல்லாம் வெட்டிப் பயிருக்குப் பந்தலிடும்படி செய்வித்தான். இந்தப் பிரகாரம் மந்திரி ஊரையெல்லாம் பாழாக்கி விட்டான்.
II. பயறு அளக்கிற விஷயத்தில் விற்கிறவனுக்கும் கொள்கிறவனுக்கும் கலகம் உண்டாகி, மத்தியஸ்தர்களிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். விற்கிறவன் மரக்காலைக் கவிழ்த்துப் பின்புறத்தால் அளப்பேன் என்றான். வாங்குகிறவன் வழக்கப்படி மரக்காலின் முன்புறத்தால் அளக்க வேண்டும் என்றான். மத்தியஸ்தர்கள் இருவருக்கும் பொதுவாக மரக்காலைப் படுக்க வைத்து குறுக்காக அளக்கும்படி தீர்மானித்தார்கள்.
III. ஒரு சேணியனுடைய பிள்ளை குளத்தில் விழுந்து இறந்து போய்விட்டது. அந்தக் குளத்துக்குடையவன் மேலே சேணியன் குற்றஞ் சாட்டினான். உடையவனை அரசன் வரவழைத்து விசாரித்தபோது அவன் குளம் வெட்டின கூலிக்காரன் மேலே குற்றஞ் சுமத்தினான். அவர்கள் குளம் நிறையும்படி மழை பெய்த மேகத்தின் மீது குறை கூறினார்கள். குயவனுடைய சூளையினின்று கிளம்புகிற புகையினால் மேகம் உண்டாவதாக அரசன் எண்ணிக் குயவர்களை யெல்லாம் குலநாசஞ்செய்தான் என்றார்கள்.
என்னுடைய அபிப்பிராயமும் ஞானாம்பாளுடைய அபிப்பிராயமும் அநேக விஷயங்களில் ஏக பாவமாக ஒத்திருந்தாலும், இரண்டொரு விஷயக்களில் நானும் அவளும் பின்னாபிப்பிராயப் பட்டோம். ராஜாங்க வருமானத்தைப் பார்க்கிலும் செலவு அதிகரித்துப் பணம் போதாமலிருந்தபடியால், ஜனங்களிடத்தில் அதிக வரி வசூல் செய்யவேண்டுமென்பது என்னுடைய கருத்தாயிருந்தது. ஞானாம்பாள் என்னுடைய அபிப்பிராயத்தை ஒப்புக்கொள்ளாமல் என்னைப் பார்த்துச் சொல்கிறாள்:— “ஜனங்களுக்கு நியாயமாக எவ்வளவு வரி ஏற்படுத்தக்கூடுமோ அவ்வளவு வரி முன்னமே ஏற்பட்டிருப்பதால் நாம் செலவைக் குறைக்க மார்க்கம் தேடவேண்டுமே யல்லாது, ஜனங்களுடைய தலை மேலே அதிக வரிகளைச் சுமப்பது தர்மமல்ல. “சுண்டைக்காய் காற் பணம், சுமைக்கூலி முக்காற் பணம்“ என்பது போல, அநேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை குறைவ யிருக்க, அவர்களுக்கு அபரிதமான சம்பளங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்த பூலோகத்தில் ஒரு ராஜாங்கத்திலும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. கோட்டை போல நாலு பக்கத்திலும் மலைகளுங் கடலுஞ் சூழ்ந்திருக்கிறது. இந்த நாட்டுக்குச் சத்துரு பயமென்கிற பிராந்தியே யில்லாமலிருக்க, எண்ணிறந்த ரத கஜ துரக பதாதிகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நாம் சம்பளம் கொடுப்பது அக்கிரமமல்லவா? அன்றியும் மராமத்து டிபார்ட்மெண்டு என்கிற ஒரு பெரும் பூதமானது நம்முடைய பொக்கிஷப் பணங்களையெல்லாம் புசித்து விடுகின்றது. அநாவசியமான செலவுகளையெல்லாம் குறைத்து விட்டால் நம்முடைய வருமானம் செலவுக்கு மேல் மிஞ்சிக் கையிருப்புக்கும் இடம் உண்டாகும். சம்பளங்களைக் குறைப்பது உத்தியோகஸ்தர்களுக்கு அதிருப்தியா யிருக்குமென்பது நிச்சயந்தான். ஆனால் சில உத்தியோகஸ்தர்களுடைய திருப்திக்காகக் கோடானுகோடி ஜனங்களுடைய சௌக்கியத்துக்கு நாம் குறைவு செய்யலாமா?” என்றாள். ஞானாம்பாள் சொன்ன நியாயங்கள் மறுக்கக்கூடாதவைகளா யிருந்தபடியால் நானும் அவளுடைய கருத்துக்கு இசைந்தேன். விசுவாமித்திரர் அண்டங்களைப் புதிதாக சிருஷ்டிக்க ஆரம்பித்ததுபோல, நாங்களும் புதிய ஏற்பாடுகள் செய்யத் துவக்கினோம். விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் மத்தியில் தங்கிவிட்டது போல் நாங்கள் தங்காமல் எங்களுடைய எண்ணங்களைப் பரிபூர்த்தி செய்தோம். ஒரு ஆயுதமில்லாமல் யுத்தமுஞ் செய்யாமல் ஒரு வார்த்தையினாலே படைகளையெல்லாம் ஒழித்துவிட்டோம். மராமத்துப் பூதத்தைக் கிழித்து விட்டோம். அதிகச் சம்பளங்களைக் கழித்துவிட்டோம். இவ்வாறு செழித்து விட்டோம். படைகளிலும் மராமத்து வகுப்பு உத்தியோகத்திலும் அவசியமானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வீட்டுக்குப் போகும்படி உத்தரவு கொடுத்துவிட்டோம். எங்களாற் பிரதிகூலம் அடைந்தவர்களெல்லாரும் எங்களைத் தூஷித்தார்கள். அநுகூலம் அடைந்தவர்கள் எல்லாரும் பூஜித்தார்கள். நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல் ஒரு கதையிற் சொல்லியபடி, எங்களுக்கு யுக்தமாய்த் தோன்றின பிரகாரம் நடப்பித்தோம். அந்தக் கதையைச் சுருக்கிச் சொல்லுகிறேன்.
“பேசுகிற பக்ஷியும், பாடுகிற மரமும், தங்கத் தண்ணீரும், ஒரு மலைச் சிகரத்திலிருப்பதாக ஒரு ராஜகுமாரத்தி கேள்வி யுற்று, அவைகள் தனக்கு வேண்டுமென்று தன்னுடைய தமையன்மார்களிடத்திலே தெரிவித்தாள். மூத்த தமையன் அவைகளைத் தான் கொண்டுவருவதாகச் சொல்லிப் பயணம் புறப்பட்டான். அவன் புறப்பட்ட இருபதாம் நாள் ஒரு சந்நியாசியைக் கண்டு அந்த மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தான். சந்நியாசி ராஜகுமாரனைப் பார்த்து ”அந்த மலை மேலே ஏறுவது சுலப சாத்தியமல்ல; ஏறும்போது பயங்கரமான சப்தங்களும் தூஷணமான வார்த்தைகளும் பல பக்கங்களிலும் கேட்கப்படும். அந்தச் சப்தஞ் செய்கிறவர்கள் அரூபிகளானதால், அவர்கள் நம்முடைய கண்களுக்குத் தோன்றார்கள். மலைமேல் ஏறுகிறவன் அந்தச் சப்தங்களுக்குப் பயப்படாமலும் பின்னே திரும்பிப் பாராமலும் ஏறுவானானால், அவன் மலை மேலே போய்ச் சேர்ந்து அந்த அபூர்வ வஸ்துக்களையுங் கைவசஞ் செய்துகொண்டு திரும்புவான். அவன் பின்னே திரும்பிப் பார்ப்பானானால் உடனே கருங்கல்லாய்ச் சமைந்து போவான். அநேகர் என் சொல்லைக் கேட்காமற் போய்க் கல்லாய் சமைந்து போனார்கள். நீ போனாலும் அப்படித்தான் சம்பவிக்கும் என்று சந்நியாசி ராஜகுமாரனைப் போக வேண்டாமென்று தடுத்தான். ராஜகுமாரன் தான் அகத்தியம் போகவேண்டுமென்று முஷ்கரஞ் செய்தபடியால் சந்நியாசி மலைக்குப் போகிற மார்க்கத்தைத் தெரிவித்தான். ராஜகுமாரன் மலைமேல் ஏற ஆரம்பித்த உடனே சந்நியாசி சொன்னபடி பல சப்தங்கள் உண்டாயின. அந்த மூடன் எங்கே போகிறான்? அவனை விடாதே! பிடி! அடி! கொல்லு! என்றும் இன்னும் பல விதமாகவும் சப்திப்பதைக் கேட்டு ராஜகுமாரன் பீதி உடையவனாய்ப் பின்னே திரும்பிப்பார்த்தான். உடனே கல்லாய்ச் சமைந்து போனான். அவனைத் தேடிக்கொண்டு வந்த அவனுடைய சகோதரனும் சந்நியாசி வார்த்தையைக் கேளாமல் மலைக்குப் போய்க் கல்லானான். ஆண் வேஷம் பூண்டுகொண்டு அண்ணன்மார்களைத் தேடிப் போன ராஜகுமாரத்தி சந்நியாசியைச் சந்தித்து மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தாள். அவளையும் போக வேண்டாமென்று சந்நியாசி தகுந்த புத்திமதிகள் சொல்லியும் அவள் கேட்கவில்லை. ஒரு சப்தமுங் கேளாதபடி தன்னுடைய இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு, நிர் விக்கினமாய் மலைமேல் ஏறி, அந்த அபூர்வ வஸ்துக்களையும் ஸ்வாதீனஞ் செய்துகொண்டு, கல்லாய்ச் சமைந்திருந்த அண்ணன்மார் முதலானவர்களையும் எழுப்பிக் கொண்டு, ஒட்டோலகமாய்ப் பட்டணத்துக்குத் திரும்பினாள்.”அந்த ராஜ குமாரத்தியைப் போல நாங்களும் அந்நியர்களுடைய தூஷணைகளை யாவது பூஷணைகளை யாவது கவனிக்காமல், எங்களுக்கு நியாயமாகத் தோன்றின காரியங்களை ஊக்க மாகவும் நிர்ப்பய மாகவுஞ் செய்து முடித்தோம்.