பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 41

விக்கிமூலம் இலிருந்து


41-ஆம் அதிகாரம்
நியாய வாதிகள்

மொட்டைத் தலைச்சிக்குக் கூந்தல் அழகியென்று பெயர் வைத்தது போல, விக்கிரமபுரியில், நியாய சாஸ்திரந் தெரியாதவர்க ளெல்லாம் நியாய வாதிக ளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை யெல்லாம் ஞானாம்பாள் வரவழைத்துப் பின்வருமாறு பிரசங்கித்தாள். ““உலகத்தில் நடக்கிற வர்த்தகம், வியாபாரம், பல தொழில்கள், கொள்ளல், விற்றல், பரபத்தியங்கள் தாயபாகங்கள் முதலிய பரஸ்பர, நிபந்தனைகளைப் பற்றி எண்ணிறந்த சட்ட திட்டங்களும், ஒழுங்குகளும் மனு நீதிகளும், நியாயப் பிரமாணங்களும் உண்டா யிருக்கிற படியாலும், அந்த ஒழுங்குகளை யெல்லாம் ஒவ்வொருவனுங் கற்றுக்கொண்டு நியாய சபையில் விவகரிப்பது கஷ்ட சாத்தியம் ஆகையாலும், சட்டந்தெரியாத பாமர ஜனங்களுக்கு உபகார்த்தமாக, நியாயவாதத் தொழில் சகல தேசங்களிலும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்றது. நியாயவாதிகள் துன்பம் அடைந்தவர் களுக்குத் துணைவர்களாயும், ஆஸ்திகளை இழந்தவர்களுக்கு அடைக்கல ஸ்தானமாயும், பாத்தியக் கிரமங்களுக்குப் பாதுகாவலராயு மிருக்கிறார்கள். நியாயவாதிகளே நியாய சாஸ்திரந் தெரியாமலிருப்பார் களானால் அவர்கள் மற்றவர்களுக்கு எப்படிச் சகாயஞ் செய்யக்கூடும்? குருடனுக்குக் குருடன் வழிகாட்டவும், செவிடனுக்கு ஊமையன் உபதேசிக்கவுங் கூடுமா? கூடாதாகையால், நியாயவாதிகள் சகக சாஸ்திரப் பண்டிதர்களா யிருக்கவேண்டும். நியாய ஸ்தலங்களில் சகல விதமான வழக்குகளும் வருகிறபடியால் அந்த வழக்குகளுக்குச் சம்பந்தமான சகல சட்டங்களும் நியாயவாதிகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலப் பாடமா யிருக்கவேண்டும். ஒரு அற்பத் தொழிலாளிகூட, வெகு காலம் பிரயாசைப்பட்டுக் கற்றுக் கொண்டு பிறகு அந்தத் தொழிலில் பிரவேசிக்கிறான். அப்படியானால் வக்கீல் வேலையைக் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு பரிசிரமப்பட வேண்டும்? யுத்த சாஸ்திரந் தெரியாதவன் யுத்தத்திற் பிரவேசித்தது போலவும், மாலுமி சாஸ்திரந் தெரியாதவன் மரக்கலம் ஓட்டப் புகுந்தது போலவும், நியாய சாஸ்திரந் தெரியாத நியாயவாதி எப்போதும் பரம சங்கடப்பட ஹேதுவாகுமாகையால் நியாய வாதிக்குச் சகல சாஸ்திரங்களும் விவகார அனுபவங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

வக்கீல் ஒரு வழக்கை அங்கீகரித்துக் கொள்வதற்குமுன், அதை நன்றாகப் பரிசோதித்து நியாய வழக்காயிருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அநியாய வழக்குகளை அங்கீகரிக்கக் கூடாது. வக்கீல் தன்னிடத்தில் வருகிற வழக்காளிகளின் சங்கதிகளைப் பூராயமாய் விசாரித்தால் பெரும்பாலும் உண்மையைக் கண்டுபிடிப்பது பிரயாசையாயிராது. ஒருவன் கொலை செய்திருப்பதாக வக்கீலுக்கு உண்மை தெரிந்த பிற்பாடு, அவன் கொலையே செய்யவில்லை யென்று வக்கீல் பேசுவது தெய்வ சம்மதமாகுமா? அந்த வக்கீலினுடைய மனசாக்ஷிக்குத் தான் பொருத்தமா யிருக்குமா? ஒருவன் திருடனென்று வக்கீலினுடைய மனசுக்குத் தெரிந்திருக்க, அவன் திருடவேயில்லையென்று வக்கீல் சலஞ்சாதிப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்? அந்தக் கொலை யையுங் களவையும் வக்கீல் செய்திருந்தால் எவ்வளவு தோஷமோ அவ்வளவு தோஷம் வக்கீலைச் சாராதா? ஒருவன் பொய்ப் பத்திரத்தை உண்டுபண்ணினதாக வக்கீலுக்குப் பரிஷ்காரமாய்த் தெரிந்தபிறகு, அந்தப் பத்திரம் உண்மையென்று வக்கீல் வாதித்தால் அந்தப் பத்திரத்தை சிருஷ்டி செய்தவனுக்கும் வக்கீலுக்கும் என்ன பேதமிருக்கிறது? இந்த வழக்காளியும் மனதறியப் பொய்யாதரவை உண்டுபண்ணினான். வக்கீலும் மனதறியப் பொய்ப்பத்திரத்தை மெய்ப் பத்திரமென்று சாதித்தான். ஆகையால் அவ்விருவருங் குற்ற விஷயத்தில் துல்லியமா யிருக்கிறார்கள். ஒரு வழக்கு நிர்த்தோஷமாகக் காணப்படுகிற பக்ஷத்தில், சில அற்பவிஷயங்களில் இப்படியோ அப்படியோ என்கிற சந்தேகமிருந்தாலுங் கூட அந்த வழக்கை வக்கீல் ஏற்றுக்கொள்ளத் தடையில்லை. ஏனென்றால் உண்மையைக் கண்டுபிடிப்பது கோர்ட்டாருடைய கடமையே யல்லாது வக்கீலுடைய கடமையல்ல. அன்றியும் ஒரு கக்ஷி பொய்யென்று ஸ்தாபிக்கப் படுகிற வரையில் அதை மெய்யென்றே ஊகிக்கவேண்டியது சுபாவமுறைமையா யிருக்கிறது. சில வக்கீல்கள் வழக்கின் தன்மையை யோசிக்காமல், வந்த வழக்கு எந்த வழக்காயிருந்தாலும் உடனே அங்கீகரித்துக் கொண்டு தங்களுடைய மனசாக்ஷிக்கு விரோதமாக கறுப்பை வெள்ளையென்றும், வெள்ளையைக் கறுப்பென்றும் வாதித்துப் பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அந்நியாயவாதிகள் என்கிற பெயர் பொருந்துமேயல்லாமல் நியாயவாதிகளென்கிற பெயர் பொருந்துமா?

ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரிக்கும்போது அது துர்வழக்கென்று தெரியாமலிருந்து பிறகு எப்போது தெரிந்தாலும், அதை உடனே நிஷேதித்து விடவேண்டியது வக்கிலின் கடமையா யிருக்கிறது. ஒருவனுடைய கக்ஷியை வக்கீல் பார்வையிட்டு அதை அங்கீகரிக்கமாட்டேனென்று நிராகரித்தபின்பு, அவனுடைய எதிரியின் கக்ஷியையும் வக்கீல் ஏற்றுகொள்வது முறையல்ல. ஏனென்றால் எந்தக் கக்ஷிக்காரனுடைய வழக்கை வக்கீல் முந்திப் பார்வையிட்டாரோ அந்தக் கக்ஷிக்காரனுடைய ரகசியங்களும் பலாபலங்களும் வக்கீலுக்குத் தெரிந்திருக்குமாதனாலும், அவைகளை அந்தக் கக்ஷிக்காரனுக்கு விரோதமாகவும் எதிர்க் கக்ஷிக்காரனுக்குச் சாதகமாகவும் உபயோகிக்கும்படியான துர்ப்புத்தி வக்கீலுக்கு உண்டாகுமாதலாலும் வக்கீல் எதிர்க்கக்ஷியை ஏற்றுக்கொள்வது தர்மமல்ல. வக்கீலிடத்தில் வருகிற கக்ஷிக்காரன் அறியாப் புத்தியினால் ஆதாரமற்ற வழக்கைச் செய்ய எத்தனிக்கிறானென்று வக்கீலுக்குத் தெரிந்த மாத்திரத்தில், அவன் வீண் வழக்காடி நஷ்டப்படாதபடி அவனுக்கு வக்கீல் புத்தி போதிக்க வேண்டும். சமாதானப் படுத்த வேண்டியது வக்கீலின் கடமையா யிருக்கிறது. வக்கீல்கள் தங்களுடைய சொந்தப் பிரயோஜனத்துக்காக வழக்குகள் சமாதானமாகாதபடி விக்கினஞ் செய்கிறார்களென்னும் அபவாதத்துக்கு வக்கீல்கள் இடங் கொடுக்கக் கூடாது.

ஒரு துர்நியாயவாதியானவன் கக்ஷிக்காரனைக் கண்ட உடனே “உன்னுடைய அதிர்ஷ்டந்தான் உன்னை என்னிடத்தில் கொண்டுவந்து விட்டது. என்னிடத்தில் எப்போது வந்தாயோ அப்பொதே உன்னுடைய காரியமெல்லாம் அனுகூலந் தான். வல்லவனுக்குப் புல்லுமாயுதம் என்பது போல உன்னுடைய வழக்கு எப்படிப்பட்ட வழக்காயிருந்தாலும் ஜயித்துக் கொடுக்கிறேன். உன்னுடைய எதிரியைத் தலை காட்டாதபடி அடிக்கிறேன். அவன் லா (law) மேலே போனதால் நான் ஈக்விடி (equity) மேலே போவேன். அவன் தர்மசாஸ்திரத்தை ஆதாரமாகக் காட்டினால் நான் இங்கிலீஷ் லாவைக் கொண்டு வெல்கிறேன். அவன் பிரெஞ்சு லாவைப் (french law) பிரயோகித்தால் நான் ஜெர்மன் லாவைப் (german law) பிரயோகிக்கிறேன். அவன் ஜெர்மன் லாவால் என்னை அடித்தால் அவனை ரோமன் லாவால் (Roman law) அடிக்கிறேன்” என்று மெய்யாகவே யுத்தத்துக்குப் புறப்படுகிறவன் போல் வீரச் சல்லாபங் கூறுகிறான். மதில் மேல் ஏறிய பூனையைப் போலவும் சேற்றில் நட்ட கம்பம் போலவும் வியாஜ்ஜியம் எந்தப் பக்கம் தீருமென்பது நிச்சயமில்லாமலிருக்கிற வக்கீல் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிக் கக்ஷிக்காரர்களை ஏமாற்றுவது தர்மமா?

வியாஜ்ஜியத் தொகையையும் வக்கீலினுடைய பிரயாசத்தையும் வழக்காளியினுடைய நேர் நிர்வாகத்தையும் யோசித்து, அதற்குத் தக்கபடி கிரமமான பீசு (fees) வக்கீல் வாங்கவேண்டுமே தவிர அதிக பீசு கேட்பது கிரமமல்ல. வியாஜ்ஜியக்காரனுக்குப் பல செலவுகளுந் துன்பங்களும் நேரிடுகிறபடியால் வக்கீலும் அதிக பீசு வாங்கி அவனைத் துன்பப்படுத்துவது நியாயாமல்ல. ஒரு வழக்காளி தோற்கிற பக்ஷத்தில் அவன் கொடுத்த பீசுகளும் செய்த செலவுகளும் அவனுக்கு மறுபடியும் கிடைக்கிறதற்கு மார்க்கமில்லாமல் நஷ்டமடைகிறான். அவன் ஜெயிக்கிற பக்ஷத்தில் சட்டத்திற் குறிக்கப்பட்ட கிரமமான பீசு மட்டும் அவனுக்கு எதிரியினால் கிடைக்குமே யல்லாமல் அவன் அதிகமாகக் கொடுத்த பீசு அவனுக்குக் கிடைக்க வழியில்லை. ஆகையால் இந்த விஷயங்களையெல்லாம் வக்கீல்கள் யோசித்துப் பீசு வாங்குகிற விஷயத்தில் அதிக்கிரமிக்கக் கூடாது. துன்பப் படுகிறவர்களுக்குச் சகாயஞ் செய்ய வேண்டியது எல்லாருடைய கடமையா யிருப்பதைப் போலவே வக்கீல்களுக்கும் முக்கிய கடமையாயிருக்கிறது. சொத்து நஷ்டமாவது அல்லது சரீரத் துன்பமாவது அடைந்து, பீசு கொடுக்க நிர்வாகமில்லாத பரம ஏழைகளிடத்தில் வக்கீல்கள் ஒன்றும் வாங்காமல் அவர்களுடைய கக்ஷியில் பேசிச் சாதிப்பார்களானால், அவர்களுக்குப் பரம சுகிர்தமும் கீர்த்தியுமாயிருக்கும். மற்றவர்கள் பொருள் கொடுத்துச் சம்பாதிக்கிற புண்ணியம், வக்கீல்களுக்கு வாய் வார்த்தையால் வருகிறபடியால், அவர்கள் எப்போதும் ஆபத்சகாயிகளாயும் தீனோபகாரிகளாயு மிருக்க வேண்டும். அந்த ஏழைகளுக்குப் பொருளுதவி வேண்டுமானாலும் செய்து, அவர்கள் ஜயித்த பின்பு, அந்தத் தொகையை வாங்கிக் கொள்வதும் பெரிய உபகாரந் தானே!

சில தேவதைகள் அடிக்கடி பலி கேட்பதுபோலச் சில வக்கீல்கள் ஒரு வழக்கில் அடிக்கடி பீஸ் கேட்பதாகக் கேள்விப்படுகிறோம். எப்படியென்றால் அவர்கள் வியாஜ்ஜிய ஆரம்பத்திலே சரியான பீஸ் வாங்கியிருக்கப் பிறகு வியாஜ்ஜியம் முதல் விசாரணையாகும்போது வேறு பீஸ் கொடுக்கவேண்டுமென்றும் கொடாதவரையில் கோர்ட்டில் ஆஜராகமாட்டோமென்றும் பிடிவாதஞ் செய்கிறார்கள். கக்ஷிக்காரனுக்கு வேறே மார்க்கமில்லாமையால் அப்போதும் பீஸ் கொடுக்கிறான். பிறகு சாக்ஷி விசாரணையாகும்போதும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வரமாட்டோமென்று படுத்துகிறார்கள். அல்லது வேறொரு கோர்ட்டில் அதிக பீஸ் வருவதாகச் சொல்லிப் பயணச் சன்னாகமாயிருக்கிறார்கள். அப்போதும் அவர்களுக்குத் தக்ஷணை கொடுத்து வசப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இப்படியாகச் சிவில் விஷயமாவது அல்லது கிரிமினல் விஷயமாவது விசாரணையாகிற ஒவ்வொரு தினத்திலும் புதிது புதிதாக வக்கீலுக்குக் காணிக்கை கொடுத்து கக்ஷிக்காரன் பிக்ஷைக்காரனாகிறான். ஒரு வழக்குக்காக வக்கீல் பூரணப் பீஸ் வாங்கிக்கொண்டு அதைக் கோர்ட்டில் தாக்கல் செய்தபின்பு, அந்த வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு அனுப்பப்படுகிற பக்ஷத்தில் அந்தக் கோர்ட்டிலும் பேச அந்த வக்கீலுக்குப் பாத்தியம் இருந்தால்கூட, வேறு பீஸும் போக வர வழிச்செலவும், படிச்செலவும் முதலியவைகளௌம் வாங்கிக் கொண்டு தான் அந்த வக்கீல் மற்றொரு கோர்ட்டுக்குப் போகிறார். குறித்த தினத்தில் விசாரணை யாகாத பக்ஷத்தில் மறுபடியும் வேறு பீசும் படிச்செலவுகளும், வக்கீல் வாங்கிக்கொள்கிறார்

சில வக்கீல்கள் பல ஜில்லாக்களில் வழக்குகளை வாங்கிக் கொண்டு பூப் பிரதக்ஷணஞ் செய்து வருகிறார்கள். அவர்களைக் காலையில் காசியிற் பார்க்கலாம்; மத்தியானத்தில் மதுரையிற் பார்க்கலாம்; அந்தி நேரத்தில் அயோத்தியிற் பார்க்கலாம். அவர்கள் ஆசையையே இறகாகக் கொண்டு பக்ஷி போற் பறந்து திரிகிறார்கள். அவர்களுக்கு ரயில் வண்டி வேகமும் போதாமையினால் தந்தி தபால் வழியாகப் பிரயாணம் செய்யக் கூடாமலிருப்பதற்காகச் சர்வதா விசனப் படுகிறார்கள். இந்த விசுவ சஞ்சாரிகளிடத்தில் வியாஜ்ஜியங்களைக் கொடுப்பதைப் பார்க்கிலும் சகல அஸ்தாந்தரங்களையும் அக்கினிக்குத் தத்தம் செய்துவிடுவது நன்மையா யிருக்கும். ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குப் போகிற வக்கீல் தனக்காக வேறொரு வக்கீலை ஆஜராகும்படி சொல்லிவிட்டுப் போவது வழக்கமாயிருக்கிறது. இந்த வழக்கம் யாரால் எக்காலத்தில் ஏற்பட்டதென்பது ஒருவருக்குந் தெரியாது. ஒரு வக்கீல் கக்ஷிக்காரனிடத்தில் பீஸ் வாங்கிக் கொண்டு, அவனுடைய வழக்கு முழுமையும் தானே சுயமாக நடத்துவதாக ஒப்பபுக்கொண்டிருக்க, அந்த உடன்படிக்கைக்கு விரோதமாக அந்த வக்கீல் வேறொரு வக்கீலை எப்படி நியமிக்கக் கூடும்? கவர்ன்மெண்டாரால் நியமிக்கப் பட்ட உத்தியோகஸ்தன் சுயமே வேலை பாராமல் தன்னுடைய ஸ்தானத்தில் வேறொரு உத்தியோகஸ்தனை நியமிக்கக் கூடுமா? ஒரு காரியஸ்தன் எசமானுடைய உத்தரவில்லாமல் தனக்குப் பதிலாக வேறொரு காரியஸ்தனை நியமித்துவிட்டு நினைத்தபடி திரியலாமா? இந்த வினாக்களுக்கு யாவரும் எதிர்மறையாக உத்தரம் சொல்லுவார்களென்று நம்புகிறோம். அப்படியானால் ஒரு கக்ஷிக்காரனால் நியமிக்கப் பட்ட வக்கீல் தனக்காக ஆஜராகிப் பேசும்படி வேறொரு வக்கீலுக்கு எப்படி ஆதாரம் கொடுக்கக் கூடும்? ஒரு வக்கீல் சம்பந்தப்பட்ட வழக்கைக் கோர்ட்டார் விசாரிக்கப் போகிற தற்சமயத்தில், அந்த வக்கீல் வேறொரு வக்கீலை நியமித்து விட்டுப் போகிறபடியால் அந்தப் புது வக்கீலுக்கு வியாஜ்ஜிய நடவடிக்கைகளைப் பார்க்க மனமுமில்லாமல் நேரமுமில்லாமல் அநேக வழக்குகள் அதோகதியாய்ப் போகின்றன. சில சமயங்களில் அந்தப் புது வக்கீலுக்கும் அந்தக் கக்ஷிக்காரன் தஸ்தூரி கொடுத்துப் பல விதத்திலும் நஷ்டமடைகிறான். தன்னுடைய வக்கீல் ஆஜராகமற் போனால் நஷ்டமடைந்த கக்ஷிக்காரன் அந்த நஷ்டத்துக்காக வக்கில் மேலே தாவா செய்ய யாதொரு தடையுமில்லை. ஒரு வக்கீலுக்காக வேறொரு வக்கீல் ஆஜராகிற வழக்கம் அக்கிரமத்திலே பிறந்து, அக்கிரமத்திலே வளர்ந்து, அக்கிரமத்திலே நிலைமை பெற்றிருப்பதால் அதை ஒவ்வொரு கோர்ட்டாரும் திக்காரஞ் செய்யவேண்டும். அந்த துர்வழக்கம் மேலான கோர்ட்டுகளிலும் நடந்து வருகிறதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அக்கிரமத்தைக் கிரமாக்கவும் கிரமத்தை அக்கிரமாக்கவும் ஒரு கோர்ட்டாருக்கும் அதிகாரமில்லை என்பது பொது விதியா யிருக்கிறது.

வக்கீல் தனக்குள்ள நேரத்தையும் சாவகாசத்தையும் தன்னுடைய சக்தியையும் ஆலோசித்து, மிதமாக வியாஜ்ஜியங்களை அங்கீகரிக்க வேண்டுமே தவிரப் பொருளாசையினாற் பல ஊர்களிலும் எண்ணிக்கையில்லாத வியாஜ்ஜியங்களை வாங்கிக் கொண்டு, ஒன்றையுங் கவனிக்க நேரமில்லாமல் திண்டாடப்படக் கூடாது. வக்கீலினுடைய சக்திக்கு மேற்பட்ட வழக்குகளை வாங்குவது கக்ஷிக்காரர்களுக்கு நஷ்டகரமாயும் வக்கீலுடைய சரீர சௌக்கியத்துக்கே குறைவாகவும் முடியும். ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரித்துக் கொண்டால், அது அநுகூலிக்கும் பொருட்டு வக்கீலாற் கூடிய மட்டும் பரிசிரமப்பட வேண்டும். அந்த வழக்கின் சாராம்சங்களையும் சகல சங்கதிகளையும் வக்கீல் நன்றாகக் கவனித்து, அதற்கேற்ற சட்டங்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோர்ட்டாருடைய சித்தாந்தங்களையும் எதிர்க் கக்ஷியின் துர்ப்பலங்களையும் எடுத்துக் காட்டி சபாகம்பமில்லாமல் வாசகதாட்டியாகவும் சமயரஞ்சிதமாகவும் வாதிக்கவேண்டும். ஆனால் நடந்த காரியங்களை வக்கீல் விவரிக்கிற விஷயத்தில் கக்ஷிக்காரன் சொன்னபடி விவரிக்க வேண்டுமே யல்லாது நூதன சங்கதிகளைச் சிருஷ்டிப்பதும் கக்ஷிக்கரனுக்குச் சாக்ஷி திட்டம் பண்ணிக்கொடுப்பதும் வக்கீலுடைய வேலையல்ல. சில வக்கீல்கள் எதைக் கிரமமென்று ஒரு வழக்கில் வாதித்தார்களோ அதைத் தானே அக்கிரமென்று வேறொரு வழக்கில் வாத்திக்கிறார்கள். பிள்ளைகளுக்குத் தகுந்த வயது வராமலிருக்கும் போது தகப்பன் எந்தக் காரணத்தைப் பற்றியும் சொத்துக்களை விநியோகஞ் செய்யக் கூடாதென்றும், அப்படி விநியோகஞ் செய்தால் தகுந்த வயது வந்த உடனே பிள்ளைகள் ஆக்ஷேபிக்கலாமென்றும், ஒரு வழக்கில் வக்கீல் வாதிக்கிறார். பிறகு அந்த வழக்கில் தானே அன்றைத் தினம் விசாரணையாகிற வேறொரு வழக்கில் பிள்ளைகள் பாலியர்களாயிருக்கும்போது தகப்பன் எதேச்சா விநியோகம் செய்யலாமென்றும் பிள்ளைகள் ஒரு காலத்திலும் அதை ஆக்ஷேபிக்கக் கூடாதென்றும் வாதிக்கிறார். யாதொரு காரணமு மில்லாமல் புருஷனை விட்டு வெளிப்பட்டுப் போய்விட்ட ஸ்திரீக்குப் புருஷன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென்று ஒரு வழக்கில் வக்கீல் வாதிக்கிறார். அதே விதமான வேறொரு வழக்கில் புருஷன் பெண்சாதிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய தில்லையென்று வாதிக்கிறார். இப்படியாகச் சமயத்துக்குத் தக்கபடி வழக்குக்கு வழக்கு பரஸ்பர விரோதமாக வக்கீல் செய்யும் வாதம் துர் வாதம் அல்லவா?

சகல வழக்குகளிலும் சாஸ்திரமும் நியாயமும் ஒரே தன்மையா யிருக்குமேயல்லாது வழக்குக்கு வழக்கு பேதிக்குமா? ஆனால் நடந்த சங்கதிகளிலும் விஷயாந்தரங்களிலும் பேதமிருக்குமானால் அந்தந்த வியாஜ்ஜிய விதிக்குத் தக்கபடி வெவ்வேறு விதமாக வாதிப்பது கிரமமே. எப்படியென்றால் தகப்பன் ஊதாரியாயும் ஆராதூரிக்காரனாயும் துர்த்தனாயுமிருந்து, சிறு பிள்ளைகளுடைய ஹிதத்துக்கு விரோதமாக சொத்துக்களைத் துர்விநியோகம் செய்திருப்பானானால், அந்த விநியோகம் செல்லாதென்று வக்கீல் ஆக்ஷேபிக்க என்ன தடையிருக்கிறது? வேறொரு வழக்கில் தகப்பன் பிள்ளைகளுடைய ஹிதத்தை நாடியே குடும்ப உபயோகர்த்தமாக சத்விநியோகஞ் செய்திருந்தால் அந்த விநியோகம் செல்லுமென்று வக்கீல் வாதிக்கவும் பிரதி பந்தமில்லை. ஒரு வழக்கில் புருஷன் பர ஸ்திரீயைச் சேர்த்துக் கொண்டு தன் பத்தினியை நிஷ்காரணமாய் அடித்துத் துரத்தி அநியாயஞ் செய்திருப்பானானால், அவன் பெண்சாதிக்குப் பிரத்தியேக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென்று வக்கீல் வாதிக்கலாம். வேறொரு வழக்கில் பெண்சாதி யாதொரு காரணமு மில்லாமல் ஸ்வேச்சையாய்ப் புருஷனை விட்டு விலகிப் போயிருப்பாளானால் அவள் பிரத்தியேக ஜீவனாம்சத்துக்கு அபார்த்தியஸ்தி யென்று வக்கீல் பேச என்ன விக்கின மிருக்கின்றது? இப்படிப்பட்ட விஷய பேதமான வழக்குகளில் வக்கீல் வெவ்வேறு விதமாக வாதிக்கலாமே யல்லாது ஒரே தன்மையான வழக்குகளில் வித்தியாசமாகப் பேசுவது விபரீத மல்லவா? நியாயவாதிகள் நியாயாதிபதிகளுக்கு அடுத்த படியி லிருப்பதாலும், ஒரு கால் அவர்கள் நியாயாசனத்தில் ஏறவும் கூடுமாகையாலும், நியாயவாதிகள் நீதிமான்களாயும் சர்வ குணோத்தமர்களாயும் பிரகாசிக்க வேண்டும்”“ என்றாள்.