புறப்பொருள் வெண்பாமாலை/தும்பைப் படவம்
Appearance
ஏழாவது
தும்பைப்படலம்
[தொகு]- துன்னருங் கடும்போர்த் தும்பை தும்பை யரவம்
- தன்னிக ரில்லாத் தானை மறமே
- யானை மறத்தொடு குதிரை மறமே
- தார்நிலை தேர்மறம் பாணது பாட்டே
- இருவருந் தபுநிலை யெருமை மறமே
- ஏம வெருமை நூழி லென்றா
- நூழி லாட்டே முன்றேர்க் குரவை
- பின்றேர்க் குரவை பேய்க்குர வையே
- களிற்றுட னிலையே யொள்வா ளமலை
- தானை நிலையே வெருவரு நிலையே
- சிருங்கார நிலையே யுவகைக் கலுழ்ச்சி
- தன்னை வேட்ட றொகைநிலை யுளப்பட
- நன்பொரு டெரிந்தோர் நாலிரு மூன்றும்
- வண்பூந் தும்பை வகையென மொழிப.
- தும்பை
- தும்பை யரவம்
- தானை மறம்
- யானை மறம்
- குதிரை மறம்
- தார்நிலை
- தேர்மறம்
- பாண் பாட்டு
- இருவரும் தபுநிலை
- எருமை மறம்
- ஏம வெருமை
- நூழில்
- நூழிலாட்டு
- முன்றேர்க் குரவை
- பின்றேர்க் குரவை
- பேய்க்குரவை
- களிற்றுடனிலை
- ஒள்வாளமலை
- தானை நிலை
- வெருவரு நிலை
- சிருங்கார நிலை
- உவகைக் கலுழ்ச்சி
- தன்னை வேட்டல்
- தொகைநிலை
நாலிரு மூன்றும் தும்பை வகை என மொழிப.
தும்பை
[தொகு]- செங்களத்து மறங்கருதிப்
- பைந்தும்பை தலைமலைந்தன்று. - கொளு
- போர்க்களத்தில் தன் மறம் காட்டவேண்டி
- தும்பைப்பூ சூடி எதிர்த்துப் போரிடுதல்
- கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான்
- சோர்குருதி சூழா நிலநனைப்பப் – போர்கருதித்
- துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர்
- வெப்புடைத் தானையெம் வேந்து.
- முரசம் கார்மேகம் போலக் கௌவையொலி முழங்க,
- எம் மன்னன் தும்பை சூடிக்கொண்டு
- தன் படையுடன் சென்று
- குருதி நிலத்தை நனைக்க,
- போரிட்டான்
தும்பை அரவம்
[தொகு]- பொன்புனைந்த கழலடியோன்
- தன்படையைத் தலையளித்தன்று. - கொளு
- பொன்னாலான வீரக்கழல் அணிந்த மன்னன்
- தன் படையின் முன் தோன்றி எழுச்சி ஊட்டுதல்
- வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையும்
- கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் – பல்புரவி
- நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
- பன்மணிப் பூணான் படைக்கு.
- வெல்லும் போர்க்கருவிகளையும்
- விரும்பும் விழுமிய பொருள்களையும்
- குளுமையான அடைவு நிலங்களையும்
- யானை, குதிரைகளையும்
- பகைவர் நடுங்கும்படித்
- தன் படையினருக்கு வேந்தன் அளித்தான்
தானைமறம்
[தொகு]- தாம்படைத் தலைக்கொள்ளாமை
- ஓம்படுத்த வுயர்புகூறின்று. - கொளு
- தனக்குப் படைத்தலைமை வேண்டாம் என்று கூறும் மேம்பாட்டைப் புகழ்தல்
- கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்
- இழுதார்வேற் றானை யிகலிற் – பழுதாம்
- செயிர்காவல் பூண்டொழுகுஞ் செங்கோலார் செல்வம்
- உயிர்காவ லென்னு முரை.
- பேய்கள் நிறைந்த போர்களத்தைப் பார்த்துத் தன் படையினர் எண்ணம் மாறுபட்டால் தனக்குப் பழுதாகும் என்று எண்ணி சினம் கொண்ட மறவன் செங்கோலன் தரும் செல்வத்தை வேண்டாம் என்றான்
இதுவுமது
- பூம்பொழிற் புறங்காவலனை
- ஓம்படுத்தற்கு முரித்தெனமொழிப
- அரசனைப் பாதுகாக்கும் அணுக்க மறவன் திறம் கூறுவதும் இத் திணைக்கு உரித்து என்று கூறுவர்
- வயிர்மேல் வளைஞரல வைவேலும் வாளும்
- செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி – உயிர்மேற்
- பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்த்
- குலகழியு மோர்த்துச் செயின்.
- கொம்பும் சங்கும் முழங்க, வேலும் வாளும் வீசிச் சீறிப் பாய்ந்து தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மன்னன் உயிரை உலகின் நலனைப் பாதுகாப்பதற்காப் போரிட்டான்
இதுவுமது
- வேற்றானை மறங்கூறி மாற்றார தழிபிரங்கினும்
- ஆற்றி னுணரி னத்துறையாகும்.
- தன் வேல்படையின் மறத்தைச் சொல்லி மாற்றாரது அழிவுக்கு இரக்கப்பட்டாலும் இந்தத் துறை ஆகும்
- மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை
- ஒன்னார் நடுங்க வுலாய்நிமிரின் – என்னாங்கொல்
- ஆழித்தேர் வேல்புரவி யண்ணன் மதயானைப்
- பாழித்தோண் மன்னர் படை.
- இந்த வேல்மறவன் மீளி கடல் போன்ற பகைவர் படை நடுங்கப் போர்க்களத்தில் உலாவுகிறான். பகைவனின் தேர், குதிரை, யானைப் படைகள் என்ன ஆகுமோ
யானைமறம்
[தொகு]- எழுமரவக் கடற்றானையான்
- மழகளிற்றின் மறங்கிளந்தன்று. -கொளு
- முழங்கும் யானைப் படையின் மறத்தைக் கூறுவது
- அடக்கருந் தானை யலங்குதார் மன்னர்
- விடக்கு முயிரு மிசையக் – கடற்படையுள்
- பேயு மெருவையுங் கூற்றுந்தன் பின்படரக்
- காயுங் கழலான் களிறு.
- அடக்க முடியாத படையினைக் கொண்ட பகைமன்னனின் கொழுப்பையும் உயிரையும் பிசைந்து உண்ணவேண்டும் என்று எண்ணி இந்த மறவன் தன் வீரக் கழலைச் சுழற்றி விட்டுக்கொண்டு தன் யானைமேல் வருகிறான்
குதிரைமறம்
[தொகு]- எறிபடையா னிகலமருள்
- செறிபடைமான் றிறங்கிளந்தன்று. - கொளு
- பகையரசன் எறிபடை கொண்டு தாக்கும் போர்களத்தில் குதிரைப் படை மறவன் போரிடும் திறம் பற்றிக் கூறுதல்
- குந்தங் கொடுவில் குருதிவேல் கூடாதார்
- வந்த வகையறியா வாளமருள் – வெந்திறல்
- ஆர்கழன் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை
- வார்கணையின் முந்தி வரும்.
- குந்தம், வில், வேல், வாள் கொண்டு பகைவர் தாக்கும் போர்க்களத்தில் வில் மறவன் தன் குதிரையில் முந்திக்கொண்டு வருகிறான்
தார்நிலை
[தொகு]- முன்னெழுதரு படைதாங்குவனென
- மன்னவர்க்கு மறங்கிளந்தன்று. - கொளு
- முன்னே சென்று முன்னே வரும் படையைத் தாக்குவேன் என்று மறம் பேசுவது
- உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின்
- சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் – எறிசுடர்வேற்
- றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்தே நின்னனோடு
- பாங்கலா மன்னர் படை.
- வேந்தே! இன் பகைவர் படையினரின் வாள் தாக்குலுக்கு முன் நிற்காவிட்டால் நமக்கு இருளாய் முடியும் - என்றான் அந்த மறவன்
இதுவுமது
- ஒருகுடை மன்னனைப் பலகுடை நெருங்கச்
- செருவிடைத் தமியன் றாங்கற்கு முரித்தே. - கொளு
- தன் ஒருகுடை மன்னனைப் பலகுடை மன்னர் சேர்ந்து தாக்கும்போது தான் தனியே எதிர்த்து நிற்பது
- காலான் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
- வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே – தாலா
- இலைபுனை தண்டா ரிறைவன்மேல் வந்த
- மலைபுரை யானை மறிந்து.
- காற்றுடன் வரும் புயல் போல வந்து தாக்கிய பகைவனின் வேல்படைகள் வேல்மறவன் ஒருவனின் தாக்குதலால் வீழ்ந்தன
தேர்மறம்
[தொகு]- முறிமலர்த்தார் வயவேந்தன்
- செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று. - கொளு
- போரிடச் செல்லும் வேந்தனின் தேர்ப்படைச் சிறப்பினைக் கூறுவது
- செருமலி வெங்களத்துச் செங்குருதி வெள்ளம்
- அருமுர ணாழி தொடர – வருமரோ
- கட்டார் கமழ்தெரியற் காவலன் காமர்தேர்
- ஒட்டார் புறத்தின்மே லூர்ந்து.
- கொடிய போர்க்களத்தில் குருதி வெள்ளம் பாயும்படி காவலனின் தேர்ப்படை வரும்
பாண்பாட்டு
[தொகு]- வெண்கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
- கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத்தன்று. - கொளு
- போரிடும் களிற்றைத் தாக்கி வீழ்ந்த மறவனைப் பாராட்டிப் பாணர் தன் கடமையைச் செய்தல்
- தளரிய றாய்புதல்வர் தாமுண ராமைக்
- களரிக் கனன் முழங்க மூட்டி – விளரிப்பண்
- கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு
- விண்ணினார் செய்தார் விருந்து.
- போர்க்களத்தில் களிற்றினை சாய்த்து வீழ்ந்துபட்டவனைப் போற்றிப் பாணர் போர்க்களத்தில் விளரிப்பண் பாடினர்
இருவருந் தபுநிலை
[தொகு]- பொருபடை களத்தவிய
- இருவேந்தரு மிகலவிந்தன்று. - கொளு
- போரிட்ட மறவர்களுடன் தாமும் போரிட்டு இரு வேந்தர்களும் மடிந்தது
- காய்ந்து-கடுங்களிறு கண்கனலக் கைகூடி
- வேந்த ரிருவரும் விண்படர – ஏந்து
- பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
- இருபடையு நீங்கா விகல்.
- இரு மன்னர்களும் கடுஞ்சினத்துடன் போரிட்டுக் களத்தில் மாய்ந்தது கண்டும் இரு படையினரும் போரை நிறுத்தவில்லை
எருமை மறம்
[தொகு]- வெயர்பொடிப்பச் சினங்கடைஇப்
- பெயர்படைக்குப் பின்னின்றன்று. - கொளு
- சினம் கொண்டு தாக்கிப் பெயரும் தன் படைக்குப் பின் நின்று தளராமல் போரிடுதல்
- கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
- நெடுங்கைப் பிணத்திடை நின்றான் – நடுங்கமருள்
- ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி
- வாள்வெள்ளைந் தன்மேல் வர.
- கனலும் விழியுடன், போர்களத்தில் பிணங்களுக்கு இடையில், ஆள் வெள்ளம் திரும்பிச் செல்லும்போதும், அந்த மறவன் தன் வேலை ஊன்றிக்கொண்டு வாள் வெள்ளத்தை எதிர்த்து நின்றான்
ஏம வெருமை
[தொகு]- குடைமயங்கிய வாளமருட்
- படைமயங்கப் பாழிகொண்டன்று. - கொளு
- மன்னனை எதிர்த்து மறவன் வாட்போர் புரிதல்
- மருப்புத்தோ ளாக மதர்விடையிற் சீறிச்
- செருப்புகன்று செங்கண் மறவன் – நெருப்பிமையாக்
- கைக்கொண்ட வெஃகங் கடுங்களிற்றின் மேற்போக்கி
- மெய்க்கொண்டான் பின்னரு மீட்டு.
- போரை விரும்பிய மறவன் தன வேலை யானைமேல் வீசி அதன் கொம்புகளைத் தன் மார்பில் வாங்கிக்கொண்டு போரிட்டான்
நூழில்
[தொகு]- கழல்வேந்தர் படைவிலங்கி
- அழல்வேறிரித் தாட்டமர்ந்தன்று. - கொளு
- வேந்தனின் படையை விலக்கிக்கொண்டு நிற்கும் மறவன் அழலும் தன் வேலைச் சுழற்றிக்கொண்டு போர்க்களத்தில் ஆடதலை விரும்பியது
- ஆட லமர்ந்தா னமர்வெய்யோன் வீழ்குடர்
- சூடன் மலைந்த சுழல்கட்பேய் – மீடல்
- மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
- திறந்தவேல் கையிற் றிரித்து.
- பேய் குடல்மாலை அணிந்தாடும் போர்க்களத்தில் எதிர்த்தவனின் மார்பைப் பிளந்த வேலைக் கையில் சுழற்றிக்கொண்டு மறவன் ஆடுகிறான்
நூழிலாட்டு
[தொகு]- களங்கழுமிய படையிரிய
- உளங்கிழித்தவேல் பறித்தோச்சின்று. - கொளு
- தன் படையினர் பரந்தோடத் தன் மார்பில் பாய்ந்த வேலைப் பிடுங்கி, வீசியவன்மீது மறவன் பாய்ச்சுதல்
- மெய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல்
- கையகத்துக் கொண்டான் கழல்விடலை – வெய்ய
- விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
- படுசுட ரெஃகம் பறித்து.
- கழலணிந்த விடலை தன் மார்புக் கவசத்தில் பாய்ந்திருக்கும் வேலைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு நிற்கிறான்
- பகைவர் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லை
முன்றேர்க் குரவை
[தொகு]- எழுவுறல் திணிதோள் வேந்தன் வெஃறேர்
- முழுவலி வயவர் முன்னா டின்று. - கொளு
- மன்னன் செல்லும் வெற்றித் தேரின் முன்னர் வயவர் மகிழ்ச்சியுடன் ஆடியது
- ஆனா வயவர்முன் னாட வமர்க்களத்து
- வானார்மின் னாகி வழிநுடங்கும் – நோனாக்
- கழுமணிப் பைம்பூட் கழல்வேந்த னூரும்
- குழுமணித் திண்டேர்க் கொடி.
- போர்க் களத்தில் கழல்வேந்தன் செல்லும் தேரின் முன்னர், வயவர் அடும்போது, தேரிலுள்ள கொடியும் ஆடிற்று
பின்றேர்க் குரவை
[தொகு]- கருங்கழன் மறவரொடு வெள்வளை விறலியர்
- பெருந்தகை தேரின் பின்னா டின்று. - கொளு
- போர்க்களத்தில் மன்னன் தேரின் பின்னே மறவரும், விறலியரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடுதல்
- கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்
- வளையா வயவரும் பின்னாக் – கொளையாய்ந்து
- தசைவிளங்கும் பாடலொ டாட வருமே
- திசைவிளங்குந் தானையான் றேர்.
- மன்னன் தேரின் பின்னே இருந்துகொண்டு
- கிளை நரம்பில் கை படாமல் பாணன் யாழை மீட்டவும்
- கொளை என்னும் குரவை ஓசை முழக்கத்துன் பாடினி பாட்டிசைக்கவும்
- படையுடன் மன்னன் தேர் போர்களம் வருகிறது
பேய்க் குரவை
[தொகு]- மன்ன னூரு மறமிகு மணித்தேர்ப்
- பின்னு முன்னும் பேயா டின்று. - கொளு
- மன்னன் போர்க்களம் செல்லும் மணித் தேரின் முன்னும், பின்னும் நல்ல தீனி கிடைக்கும் என்று மகிழ்ந்து பேய்கள் ஆடிக்கொண்டு செல்லல்
- முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை
- மன்ன னெடுந்தேர் மறனேத்தி – ஒன்னார்
- நிணங்கொள் பேழ் வாய நிழல்போ னுடங்கிக்
- கணங்கொள்பே யாடுங் களித்து.
- வேந்தன் பகைவரின் குருதித் தசையை வாயில் அதவிக்கொண்டு
- வேந்தன் செல்லும் தேரின் முன்னரும், பின்னரும்
- அவனது படையினருடன் சேர்ந்து பேய்கள் ஆடுகின்றன
களிற்றுடனிலை
[தொகு]- ஒளிற்றெஃகம் படவீழ்ந்த
- களிற்றின் கீழ்க் கண்படுத்தன்று. - கொளு
- பகைவன் யானையை வேலால் வீழ்த்தி, அது சாயும்போது அதன் அடியில் பட்டு மடிந்தது
- இறுவரை வீழ வியக்கற் றவிந்த
- தறுகட் டகையரிமாப் போன்றான் – சிறுகட்
- பெருங்கைக் களிறெறிந்து பின்னதன்கீழ்ப் பட்ட
- கருங்கழற் செவ்வே லவன்.
- மலை அதிர முழங்கிக்கொண்டு வரும் யானை போன்று கருங்கழல் வேல்மறவன் போர்க்களத்தில் யானையை வீழ்த்தி அது சாயும்போது அதன் அடியில் பட்டு மாண்டான்.
ஒள்வாளமலை
[தொகு]- வலிகெழுதோள் வாள்வயவர்
- ஒலிகழலா னுடனாடின்று. - கொளு
- கழல் மறவனுடன் சேர்ந்து வாளைச் சுழற்றிக்கொண்டு வாள்மறவன் போர்க்களத்தில் ஆடுதல்
- வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார்
- ஆளமா வென்றி யடுகளத்துத் – தோள்பெயராக்
- காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார்
- வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.
- குளத்தில் வாளைமீன் பிறழ்வது போல வாளைச் சுழற்றிக்கொண்டு போர்க்களத்தில் கழல்மறவன் ஆடுகிறான்
தானைநிலை
[தொகு]- இருபடையு மறம்பழிச்சப்
- பொருளகத்துப் பொலிவெய்தின்று. - கொளு
- இருதிறப் படைகளும் போற்றும்படி போர்க்களத்தில் மறவன் தன் திறமையை வெளிப்படுத்தியது
- நேரார் படையி னிலைமை நெடுந்தகை
- ஓரா னுறைகழியா னொள்வாளும் – தேரார்க்கும்
- வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும்
- கம்பமா நின்றான் களத்து.
- யானைமீதும், குதிரைமீதும் வந்து தாக்கும் மறவர்கள் வியக்கும்படியாக, எதிராளிகளைத் தடுத்து நிறுத்திக்கொண்டு கழல்மறவன் போர்களத்தில் நின்றான்
வெருவருநிலை
[தொகு]- விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப
- நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலையுரைத்தன்று. - கொளு
- பகைவரின் அம்புகள் தைத்தும் உடல் நிலத்தில் சாயாமல் உடல் அம்பில் நின்றது
- வெங்கண் முரசதிரும் வேலமருள் வில்லுதைப்ப
- எங்கு மருமத் திடைக்குளிப்பச் – செங்கட்
- புலவா நெடுந்தகை பூம்பொழி லாகம்
- கலவாமற் காத்த கணை.
- முரசதிர வேலும் வில்லும் உடலில் பாய்ந்து, சினக்கண் மாறாத மறவனை மண்ணில் சாயாமல், கணைகள் நிறுத்தின
சிருங்கார நிலை
[தொகு]- பகைபுகழக் கிடந்தானை
- முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று - கொளு
- பகைவர் புகழும்படிப் போரிட்டுக் களத்தில் கிடந்தவனை
- மனைவி முயங்கியது
- எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத்
- தங்கணவன் றார்தம் முலைமுகப்ப – வெங்கணைசேர்
- புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
- நுண்ணிடைப் பேரல்கு லார்.
- புண் பட்ட மார்புடன் போர்க்களத்தில் கிடப்பவனை
- என் கணவன், என் கணவன் என்று சொல்லிக்கொண்டு
- மகளிர் தம் முலைகளால் அவன் மார்பினைத் தழுவினர்
உவகைக் கலுழ்ச்சி
[தொகு]- வாள்வாய்த்த வடுவாழ்யாக்கைக்
- கேள்கண்டு கலுழ்ந்துவந்தன்று - கொளு
- போரில் வாளால் வெட்டப்பட்டு கிடக்கும் மறவன் உடலினைக் கண்டு அவனது உறவுக்காரி கண்ணீருடன் பெருமித உவகை கொள்ளுதல்
- வெந்தொழிற் கூற்றமு நாணின்று வெங்களத்து
- வந்த மறவர்கை வாடுமிப்பப் – பைந்தொடி
- ஆடரிமா வன்னான் கிடப்ப வகத்துவகை
- ஓடரிக்க ணீர்பா யுக.
- வெற்றி கொள்ளும் அரிமா போன்ற தன் கணவன் உடல் போர்க்களத்தில் எதிரி வாளால் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு கண்ணீர் மல்க உள்ளம் மகிழ்ந்தது கண்டு கூற்றமே நாணிற்று
தன்னை வேட்டல்
[தொகு]- தம்மிறைவன் விசும்படைந்தென
- வெம்முரணா னுயிர் வேட்டன்று. - கொளு
- தன் அரசன் விசும்பு இடைந்தான் என்று அவனது மெய்காப்பாளன் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டது
- வான மிறைவன் படர்ந்தென வாடுடுப்பா
- மானமே நெய்யா மறம்விறகாத் – தேனிமிரும்
- கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
- ஒள்ளழலுள் வேட்டா னுயிர்.
- தன் அரசன் வாலுலகம் சென்றுவிட்டான் என்று
- அவனது மெய்காப்பாளன்
- தன் வாளைத் துடுப்பாக்கிப்பொண்டு
- தன் மானத்தை நெய்யாக்கிக்கொண்டு
- தன் மறத்தை விறகாக வைத்து
- வேள்வி செய்தான்
- அதாவது தன் வாளால் தன் உயிரையே மாய்த்துக்கொண்டான்
இதுவுமது
- காய்கதிர் நெடுவேற் கணவனைக் காணிய
- ஆயிழை சேறலு மத்துறை யாகும். - கொளு
- போர்களத்தில் மாண்ட தன் கணவனை வானுலகில் காணும்பொருட்டு மனைவி அவனுடன் செல்வதைக் கூறினும் இந்தத் துறை ஆகும்
- கற்பின் விழுமிய தில்லை கடையிறந்
- திற்பிறப்பு நாணு மிடையொழிய – நற்போர்
- அணங்கிய வெங்களத் தாருயிரைக் காண்பான்
- வணங்கிடை தானே வரும்.
- கற்பினைக் காட்டிலும் விழுமிய பொருள் வேறொன்றும் இல்லை
- கணவன் இடையிலே மாள அவனுக்குப் பின் வாழ்வதற்கு மனைவி நாணினாள்
- அணங்கிய அவன் உயிரைக் காண்பதற்காக மனைவியும் தானே வருகிறாள்
தொகைநிலை
[தொகு]- அழிவின்று புகழ்நிறீஇ
- ஒழிவின்று களத்தொழிந்தன்று. - கொளு
- கணவன் புகழை நிலைநாட்டுவதற்காக மனவியும் போர்களத்தில் உயிரைத் துறந்தாள்
- மண்டமர்த் திண்டோள் மறங்கடைஇ மண்புலம்பக்
- கண்டிரள் வேன் மன்னர் களம்பட்டார் – பெண்டிர்
- கடிதெழு செந்தீக் கழுமினா ரின்னும்
- கொடி தேகா ணார்ந்தின்று கூற்று.
- தன் தோள் வீரத்தைக் காட்டி மண்ணுலகம் புலம்ப மன்னன் போர்க்களத்தில் மாண்டான்
- அவனது மனைவியரும் தீ மூட்டி அதில் விழுந்து இறந்தொழிந்தனர்
- என்னே! கொடுமை!
ஏழாவது தும்பைப் படலம் முற்றிற்று.