புறப்பொருள் வெண்பாமாலை/வாகைப் படலம்

விக்கிமூலம் இலிருந்து


எட்டாவது

வாகைப்படலம்[தொகு]

சீர்சால் வாகை வாகை யரவம்
அரச வாகை முரச வாகை
மறக்கள வழியொடு களவேள் விய்யே
முன்றேர்க் குரவை பின்றேர்க் குரவை
பார்ப்பன வாகை வாணிக வாகை
வேளாண் வாகை பொருந வாகை
அறிவன வாகை தாபத வாகை
கூதிர்ப் பாசறை வாடைப் பாசறை
அரச முல்லை பார்ப்பன முல்லை
அவைய முல்லை கணிவன் முல்லை
மூதின் முல்லை யேறாண் முல்லை
வல்லாண் முல்லை காவன் முல்லை
பேராண் முல்லை மறமுல் லையே
குடைமுல் லையொடு தண்படை நிலையே
அவிப்பலி யென்றா சால்பு முல்லை
கிணைநிலை யேனைப் பொருளொடு புகறல்
அருளொடு நீங்க லுளப்படத் தொகைஇ
மூன்று தலையிட்ட மூவீ ரைந்தும்
வான்றோய் வாகைத் திணையது வகையே.
  1. வாகை
  2. வாகை அரவம்
  3. அரச வாகை
  4. முரச வாகை
  5. மறக்களவழி
  6. களவேள்வி
  7. முன்றேர்க் குரவை
  8. பின்றேர்க் குரவை
  9. பார்ப்பன வாகை
  10. வாணிக வாகை
  11. வேளாண் வாகை
  12. பொருந வாகை
  13. அறிவன வாகை
  14. தாபத வாகை
  15. கூதிர்ப் பாசறை
  16. வாடைப் பாசறை
  17. அரச முல்லை
  18. பார்ப்பன முல்லை
  19. அவைய முல்லை
  20. கணிவன் முல்லை
  21. மூதின் முல்லை
  22. ஏறாண் முல்லை
  23. வல்லாண் முல்லை
  24. காவன் முல்லை
  25. பேராண் முல்லை
  26. மற முல்லை
  27. குடை முல்லை
  28. கண்படை நிலையே
  29. அவிப்பலி
  30. சால்பு முல்லை
  31. கிணைநிலை
  32. பொருளொடு புகறல்
  33. அருளொடு நீங்கல்
உளப்படத் தொகைஇ
மூன்று தலையிட்ட மூவீ ரைந்தும்
வான்றோய் வாகைத் திணையது வகையே.

வாகை[தொகு]

இலைபுனை வாகைசூடி யிகன்மலைந்
தலைகடற் றானை யரசட் டார்த்தன்று. - கொளு
வாகைப் பூவை இலையுடன் சூடிக்கொண்டு படையுடன் சென்று படையுடன் வந்து தாக்கும் அரசனை அழித்து ஆரவாரம் செய்தல்
சூடினான் வாகைச் சுடர்த்தெரியல்
பாடினார் வெல்புகழைப் பல்புலவர் – கூடார்
உடல்வே லழுவத் தொளிதிகழும் பைம்பூண்
அடல்வேந்த னட்டார்த் தரசு.
வேந்தன் வாகைத் தலைமாலை சூடிக்கொண்டு போர்க்களத்தில் பகைவரைத் தாக்கி வென்று வாகை சூடினான்
புலவர்கள் அவன் புகழைப் பாடினர்

வாகை அரவம்[தொகு]

வெண்கண்ணியுங் கருங்கழலும்
செங்கச்சுந் தகைபுனைந்தன்று. - கொளு
தலையில் சூடிய வெள்ளைநிற வாகைப்பூ மாலையையும்
காலில் அணிந்துள்ள கருநிறக் கழலையும்
இடுப்பில் கட்டியுள்ள செந்நிறக் கச்சினையும்
பாராட்டி ஆரவாரம் செய்தல்
அனைய வமரு ளயில்போழ் விழுப்புண்
இனைய வினிக்கவலை யில்லை – புனைக
அழலோ டிமைக்கு மணங்குடைவாண் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு.
இளைய மைந்தர் குருதியில் சிவந்து தோன்றும் வாளைக் கச்சில் மாட்டினர்
இனி வேல் வீச்சில் பட்ட உன் விழுப்புண் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்

அரசவாகை[தொகு]

பகலன்ன வாய்மொழி
இகல்வேந்த னியல்புரைத்தன்று. - கொளு
பகல் வெளிச்சம் நாள்தோறும் தவறாமல் வருவது போல் சொன்ன சொல் தவறாமல் நடந்துகொள்ளும் வேந்தனின் இயல்பினைச் சொல்வது
காவ லமைந்தான் கடலுலகங் காவலால்
ஓவ லறியா துயிர்க்குவகை – மேவருஞ்சீர்
ஐந்தொழி னான்மறை முத்தீ யிருபிறப்பு
வெந்திறற் றண்ணளியெம் வேந்து.
எம் வேந்து காவலன்
உலகிலுள்ள உயிர்களை ஓய்வு இல்லாமல் காக்கின்றான்
5 தொழில்
4 மறை
3 தீ
2 பிறப்பு
ஆகியவற்றுக்கு உதவுமாறு
தன் திற
திறமையாலும்
தண்ணளியாலும் - காக்கின்றான்

முரச வாகை[தொகு]

ஒலிகழலா னகனகருட்
பலிபெறுமுரசின் பண்புரைத்தன்று. - கொளு
புகழும் கொடைகழல் பூண்டவன் அகநகருள்
பலி (கொடை) கொடுக்கும் செய்தியை அறிவிக்க
முழங்கும் முரசின் பண்பினை உரைத்தல்
மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய – நிதியம்
வழங்குந் தடக்கையான் வான்றோய் நகருள்
முழங்கு மதிரு முரசு.
மன்னர்கள் பணிந்து புதிய புகழ்மாலை சூட்டினர்
அங்கே வேந்தன் கொடை வழங்கும் செய்தி அறிவிக்கவும் முரசம் முழங்கிற்று.

மறக்களவழி[தொகு]

முழவுறழ் திணைதோளானை
உழவனாக வுரைமலிந்தன்று. - கொளு
அரசனைப் போர்க்கள உழவனாகப் புகழ்தல்
அஞ்சுவரு தானை யமரென்னு நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும் – செஞ்சுடர்வேற்
பைங்கட் பணைத்தாட் பகட்டுழவ னல்கலான்
எங்கட் கடையா விடர்.
அமர் என்னும் வயலில்
சினம் விதைத்தான்
புகழ் விளைந்தது
இவன் யானைகளைக் கொண்டு உழுகிறான்
அதனால் எங்களுக்கு இடர் வராது

களவேள்வி[தொகு]

அடுதிற லணங்கார
விடுதிறலான் களம்வேட்டன்று. - கொளு
அடும் திறலான் அணங்குகள் வயிறு நிறையும்படி, போர்க்களத்தில் வேள்வி செய்தல்
பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான் – முடித்தலைத்
தோளோடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து.
பிடித்து ஆடும் பேய்களின் வயிறு நிறையும்படி மன்னன் தன் பகைவரின் தலை தோள் கை ஆகியவற்றைத் துணித்து அவற்றைக் கொண்டு அவர்களின் மூளைச்சோற்றைச் சமைத்து வழங்கினான்

முன்றேர்க் குரவை[தொகு]

வென்றேந்திய விறற்படையோன்
முன்றேர்க்க ணணங்காடின்று. - கொளு
வென்று திரும்பும் மன்னன் தேரின் முன் அணங்குப் பேய்கள் கூத்தாடுதல்
உலவா வளஞ்செய்தா னூழிவாழ் கென்று
புலவாய புன்றலைப்பே யாடும் – கலவா
அரசதிர நூறி யடுகளம் வேட்டான்
முரசதிர வென்றதேர் முன்.
போரில் வென்ற அரசன் முரசு முழங்கக் களவேள்வி செய்தான். உண்ட பேய்கள் அவன் தேரின் முன் ‘நீடூழி வாழ்க’ என்று பாடிக்கொண்டு கூத்தாடின

பின்றேர்க் குரவை[தொகு]

பெய்கழலான் றேரின்பின்
மொய்வளை விறலியர் வயவரொடாடின்று. - கொளு
வென்று மீளும் வேந்தன் தேருக்குப் பின்னால் விறலியர் வயவரோடு சேர்ந்து கூத்தாடுதல்
வஞ்சமில் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரு மாடுபவே – வெஞ்சமரில்
குன்றேர் மழகளிறுங் கூந்தற் பிடியும்போற்
பின்றேர்க் குரவை பிணைந்து.
போர் முடிந்து களிறும் பிடியும் ஆடுவது போல வென்று திரும்பும் அரசன் தேருக்குப் பின்னால் வயவரும் விறலியரும் சேர்ந்து ஆடினர்

பார்ப்பன வாகை[தொகு]

கேள்வியாற் சிறப்பெய்தியானை
வேள்வியான் விறன்மிகுத்தன்று. - கொளு
மறை = கேள்வி = வேதம்
கேள்வியால் சிறப்புற்று விளங்கும் பார்ப்பான் வேள்வி செய்யப் பாராட்டுதல்
ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்
வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும் – ஏதம்
சுடுசுடர் தானாகிச் செல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி யகத்து.
வேதம் கரைகண்டவன் வேள்வி செய்யத் துன்பம் நீங்கும்

வாணிக வாகை[தொகு]

செறுதொழிலிற் சேணீங்கியான்
அறுதொழிலு மெடுத்துரைத்தன்று. - கொளு
வயல் விளை பொருள்களுக்காக, தொலைதூரம் சென்ற வாணிகனின் அறுதொழில் சிறப்பினைப் பாராட்டுதல்
உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிய
பழுதிலாப் பண்டம் பகர்ந்து – முழுதுணர
ஓதி யழல்வழிபட் டோம்பாத வீகையான்
ஆதி வணிகர்க் கரசு.
உழுது பயன் கொள்ளல்
ஆனிரை ஓம்பல்
பண்டம் பறிமாறி விற்றல்
ஓதுதல்
வேள்வி செய்தல்
ஈதல்
ஆகிய ஆறும் செய்பவன் வணிகர்க்கு அரசு என்று போற்றப்படுகிறான்

வேளாண் வாகை[தொகு]

மேன்மூவரு மனம்புகல
வாய்மையான வழியொழுகின்று - கொளு
மேல் குடியினர் மூவரும் மனம் விரும்பும்படி, அவர்கள் காட்டிய வழியில் நடத்தல்
மூவரு நெஞ்சமர முற்றி யவரவர்
ஏவ லெதிர்கொண்டு மீண்டுரையான் – ஏவல்
வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்.
மேல்குடியினர் மூவரும் விரும்புமாறு, அவர்கள் ஏவியதைச் செய்துகொண்டு, வயலில் உழுது பயிரிடுபவன் உலகுக்கு உயிர் போன்றவன்

பொருந வாகை[தொகு]

புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்த லோம்பென வெடுத்துரைத் தன்று. - கொளு
யாரையும் இகழாமல், எல்லாரிடமும் உள்ள புகழையும், பெருமையாயும் மேம்படுத்திக் கூறுதல்
வெள்ளம்போற் றானை வியந்து வீரவரை
எள்ளி யுணர்த லியல்பன்று – தெள்ளியார்
ஆறு மே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார்
நீறுமேற் பூத்த நெருப்பு.
வெள்ளம் போல் படையில் வரும் மறவர்களை ஏளனம் செய்யாமல், பொருத்தி, ஆடிக் காட்டுபவர் நீறாகிய சாம்பலில் பற்றி எரியும் நெருப்பு

அறிவன் வாகை[தொகு]

புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பறிபவ னியல்புரைத்தன்று. - கொளு
முக்காலமும் அறிந்த அறிவன் நிகழவிருப்பதைக் கூறும்போது அதன் இயல்பினைக் கூறுதல்
இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போல்
அம்மூன்று முற்ற வறிதலாற் – றம்மின்
உறழா மயங்கி யுறழினு மென்றும்
பிறழா பெரியோர்வாய்ச் சொல்.
கதிரவன் உலகிருளைப் போக்குவது போல, மூன்று காலமும் அறிந்தவனாய், எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு பெரியார் கூறும் வாய்ச்சொல் பிழையாவது இல்லை

தாபத வாகை[தொகு]

தாபத முனிவர் தவத்தொடு முயங்கி
ஓவுத லறியா வொழுக்குரைத்தன்று. - கொளு
மனைவாழ்க்கையைத் துறத்தல் தாபதம். தாபத முனிவர் இடைவிடாமல் தவத்தில் மூழ்கியிருத்தலைக் கூறுவது
நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடீஇச்
சோர்சடை தாழச் சுடரோம்பி – ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி.
நீரில் பலமுறை நீராடி, நிலத்தில் அமர்ந்துகொண்டு, தோலாடை உடுத்தியவராக, தலையில் சடைமுடி இருக்க, தீச்சுடர் வளர்த்துக்கொண்டு, ஊர்ப்பக்கம் வராமல், கானகத்தில் இருந்துகொண்டு, கடவுளுக்கு விருந்தோம்பும் வாழ்க்கையை மேற்கொள்வதே, தன்னை வானுலகுக்கு உய்க்கும் வழி ஆகும்.

கூதிர்ப் பாசறை[தொகு]

கூற்றலையான் வியன்கட்டூர்க் கூதிர்வான் றுளிவழங்க
ஆற்றாமை நனிபெருகவு மயில்வேலோ னளிதுறந்தன்று. - கொளு
கூற்றுவன் போல் கட்டூர்ப் பாசறையில் இருக்கும் மன்னன், குளிரும் பனிக்காற்று வீசும்போதும், மனைவி நினைவு தனக்கு ஆற்றாமை தரும்போதும், மனைவிக்கு அளி செய்யாமல் பாசறையிலேயே இருத்தல் பற்றிக் கூறுவது
கவலை மறுகிற் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூரை யொடுங்கத் – துவலைசெய்
கூதிர் கலிநவு முள்ளான் கொடித்தேராள்
மூதின் மடவாண் முயக்கு.
வழி பிரியும் கவலைக் கட்டூர்த் தெருவில், தழைகளால் வேயப்பட்ட கூரைப் பாடிவீட்டில், குளிருக்காக மறவர் ஒடுங்கி இருக்கும்போது, அந்தத் துன்பத்தைப் போக்கும் வகையில், இல்லம் திரும்பித் தன் மனைவிக்கு அளி செய்யாமல், கொடித்தேர் வேந்தன் கூதிர்ப்பாசறையில் இருக்கிறான்.

வாடைப் பாசறை[தொகு]

வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிர்ப்பெய்த
வந்துலாய்த் துயர்செய்யும் வாடையது மலிபுரைத்தன்று. - கொளு
வயவருடன் வேந்தன் இருக்கும் பாசறையில் வாடைக்காற்று தாக்குவது பற்றிக் கூறுவது
வாடை நலிய வடிக்கண்ணா டோணசை
ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல் – கோடல்
முகையோ டலம்வர முற்றெரிபோற் பொங்கிப்
பகையொடு பாசறையு ளான்.
வாடைக்காற்று துன்புறுத்த, அதனைப் போக்க மனைவியின் தோளணைப்பை விரும்பாமல், எரியும் தீயைப்போல் கோடல் மலர்ந்திருக்கும் பாசறையில் வேந்தன் தங்கியிருக்கிறான்

அரச முல்லை[தொகு]

செருமுனை யுடற்றுஞ் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலங் காவல னியல்புரைத் தன்று. - கொளு
பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற, வேந்தன் வேலுடன் தங்கியிருத்தல் பற்றிக் கூறுவது
செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி
மயிர்க்கண் முரச முழங்க – உயிர்க்கெல்லாம்
நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க்
காவலன் சேறல் கடன்.
சினம் கொள்ளும் தன் கண்ணை இகழாமல், செங்கோலை உயர்த்திக்கொண்டு, முரசு முழங்க, ஞாயிறுபோல் நாட்டுக்கு ஒளி வழங்குதல் காவலனின் கடமை.

பார்ப்பன முல்லை[தொகு]

கான்மலியு நறுந்தெரியற் கழல்வேந்த ரிகலவிக்கும்
நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத்தன்று. - கொளு
போரைத் தவிர்க்கப் பார்ப்பனன் தூது செல்வது
ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் – செல்லலும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்ட திலர்.
இந்த உணர்வு நன்று. முத்தீ நான்மறையாளன் தூது சென்றான். வெல்லும் வெம்பகை மன்னர் இருவர் பகைமை ஒழிந்தது.

அவைய முல்லை[தொகு]

நவைநீங்க நடுவுகூறும்
அவைமாந்த ரியல்புரைத்தன்று. - கொளு
வழக்குக்குத் தீர்ப்பளிக்கும் ஊரவை மாந்தரின் இயல்பினைக் கூறுதல்
தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை யூழிவை தோலாத் – தொடைவேட்
டழிபட லாற்ற லறிமுறையேன் றெட்டின்
வழிபடர்தல் வல்ல தவை.
வழக்கினை வினவி விடை அறிதல்
அதன்வழி முறைமை அறிதல்
வினா விடைகளை ஒப்பிட்டுப் பார்த்தல்
அவற்றிற்குத் தீர்பளித்த பழைய முறைகளை எண்ணல்
அந்தப் பழைய தீர்ப்புகளை அடிப்படையாகப் போர்த்திக்கொள்ளல்
வினாவால் பொய்யான விடைகளை அழித்தல்
கண்டறிந்த உண்மையின் ஆற்றலை வெளிப்படுத்தல்
கண்டறிந்த உண்மையை அவையோர்க்குத் தெரிவித்துத் தீர்ப்பு கூறல்
ஆகிய 8 நெறிகளிலும் வல்லதுதான் ஊரவை

கணிவன் முல்லை[தொகு]

துணிபுணருந் தொல்கேள்விக்
கணிவனது புகழ்கிளந்தன்று. - கொளு
எண்ணத்தையும் எதிர்காலத்தையும் எடுத்துச் சொல்லக்கூடிய கணிவன் சிறப்பினைக் கூறுதல்
புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் – திரிவின்றி
விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி யுரைப்பான் கணி.
யாரிடமும் இரக்கம் காட்டாமல், போற்றவேண்டுவனவற்றைப் போற்றி, உலகில் நிகழ்வதை அறிந்து, மாறுகோள் இல்லாமல், விண்மீன் உலகை ஒப்பிட்டுப் பார்த்து, விளைய இருப்பதை எடுத்துரைப்பவன் கணி என்று போற்றப்படுகிறான்.

மூதின் முல்லை[தொகு]

அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில்
மடவரன் மகளிர்க்கு மறமிகுத் தன்று. - கொளு
பகையைக் கொல்லும் வேலைத் தாய் மகன் கையில் கொடுத்து அனுப்புதல்
வந்த படைநோனாள் வாயின் முலைபறித்து
வெந்திற லெஃக மிறைக்கொளீஇ – முந்தை
முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு.
தாக்க, அரசன் வாயிலுக்கு வந்த பகைவனைக் கண்டு, நெஞ்சம் பொறுக்க மாட்டாமல், மூதில் மகளிர், தன் முன்னோர் செய்ததை எடுத்துரைத்து, மகன் மார்பில் கேடயம் அணிவித்துக் கையில் வேலைக் கொடுத்து, போருக்கு அனுப்புகிறாள்.

ஏறாண் முல்லை[தொகு]

மாறின்றி மறங்கனலும்
ஏறாண்குடி யெடுத்துரைத்தன்று. - கொளு
மறத் தீ பற்றி எரியும், ஏறு போன்ற ஆண்மகன் சிறப்பினைக் கூறுதல்
கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையா – பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தானென் னேறு.
மறக்குடி மகள் கூறுகிறாள்
போரில் மாண்ட என் தந்தை நடுகல்லாக இருக்கிறான்
என் கணவன் களத்தில் மாண்டான்
என் அண்ணன்மார்களும் போர்முனையில் விழுப்புண் பட்டு வலிமையை இழந்துவிட்டனர்.
என் மகனும் பகைமன்னனைத் தாக்கி, அவனால் கொல்லப்பட்டு, எய்தவனாகப் போர்க்களத்தில் கிடக்கிறான்

வல்லாண் முல்லை[தொகு]

இல்லும் பதியு மியல்புங் கூறி
நல்லாண் மையை நலமிகுத் தன்று. - கொளு
குடிப்பெருமை, ஊர்ப்பெருமை போன்றவற்றைச் சிறப்பித்துக் கூறல்
வின்முன் கணைதெரியும் வேட்டைச் சிறுசிறார்
முன்முன் முயலுகளு முன்றிற்றே – மன்முன்
வரைமார்பின் வேன்மூழ்க வாளழுவந் தாங்கி
உரைமாலை சூடினா னூர்.
பகைக் காட்டில், மன்னனுக்கு முன்னே, தன் மார்பில் வேல்கள் பல தாக்கி, மன்னனால் போற்றப்பட்டவனின் வேட்டுவச் சிறுவர்கள் இப்போது தம் முற்றத்தில் முயல்களை எய்து பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் ஊர் இந்த ஊர்.

காவன் முல்லை[தொகு]

தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிக்
கமழ்தார் மன்னவன் காவன்மிகுத் தன்று. - கொளு
மன்னன் நாட்டைக் காப்பாற்றுவதைச் சிறப்பித்துப் பேசுதல்
பெரும்பூட் சிறுதகைப் பெய்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் – விரும்பான்
ஒருநாண் மடியி னுலகின்மே னில்லா
திருநால் வகையா ரியல்பு.
நாட்டைக் காக்கும் பணியில் ஈடபடாமல் ஒருநாள் கழியினும் இந்த மன்னன் இறந்துவிடுவான்

இதுவுமது

தக்காங்குப் பிறர்கூறினும்
அத்துறைக் குரித்தாகும்
அரசனுக்கு அறிவுரை கூறுதலும் இந்தத் துறைக்கு உரியதாகும்
ஊறின் றுவகையுள் வைக வுயிரோம்பி
ஆறிலொன் றானா தளித்துண்டு – மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான்காவல் கொண்ட றகும்.
மக்கள் துன்பம் இல்லாமல் வாழ உயிரினங்களைப் பேணவேண்டும். மக்களின் வருவாயில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வரியாகப் பெறுதல் வேண்டும். இவைவே அரசன் தகைமைப் பண்பாகும்

பேராண் முல்லை[தொகு]

உளம்புகல மறவேந்தன்
களங்கொண்ட சிறப்புரைத்தன்று. - கொளு
வேந்தன் போர்க்களத்தில் வெற்றியைத் தனதாக்கிக்கொள்ளல்
ஏந்துவாட்டானை யிரிய வுறைகழித்துப்
போந்துவாண் மின்னும் பொருசமத்து – வேந்து
இருங்களி யானை யினமிரிந் தோடக்
கருங்கழலான் கொண்டான் களம்.
வாள்படை அஞ்சி ஒடும்படி வேந்தன் தன் வாளை உருவிப் போரிட யானைகளும் அஞ்சி ஓடின.

மறமுல்லை[தொகு]

வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும்
கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று. - கொளு
வேந்தன் விரும்பியதைக் கொடுத்தும் மறவன் கொதிப்பு அடங்காமை
வின்னவி றோளானும் வேண்டிய கொள்கென்னும்
கன்னவி றிண்டோட் கழலானும் – மன்னன்முன்
ஒன்றா னழல்விழியா வொள்வாள் வலனேந்தி
நின்றா நெடிய மொழிந்து.
வேந்தன் மறவன் விரும்பியன எல்லாவற்றையும் கொடுத்தான். அப்போதும் மறவன் தன்னைப் போருக்கு அனுப்ப வேண்டி வாளை ஏந்தி வஞ்சினம் வேசிக்கொண்டு நின்றான்.

குடைமுல்லை[தொகு]

மொய்தாங்கிய முழுவலித்தோட்
கொய்தாரான் குடைபுகழ்ந்தன்று. - கொளு
அரசன் வெண்கொற்றக் குடையைப் புகழ்வது
வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்
தாய புகழான் றளிக்குடைக்குத் – தோயம்
எதிர்வழங்கு கொண்மூ விடைபோழ்ந்த சுற்றுக்
கதிர்வழங்கு மாமலை காம்பு.
மூங்கிலின் உச்சியில் கதிர்வட்டம் விளங்குவது போன்ற குடை உடையவன் வேந்தன். அதன் நிழலில் தண்ணளி வழங்குகிறான். மேகங்களுக்கு இடையே தோன்றும் தோயம் (மின்னல்) போன்ற காம்புகளை உடையது அந்தக் குடை.

கண்படை நிலை[தொகு]

மண்கொண்ட மறவேந்தன்
கண்படைநிலை மலிந்தன்று. - கொளு
மண் கொண்ட வேந்தன் மாண்டதன் சிறப்பினை உரைத்தல்
கொங்கலர்தார் மன்னருங் கூட்டளப்பக் கூற்றணங்கும்
வெங்கதிர்வேற் றண்டெரியல் வேந்தற்குப் – பொங்கும்
புனலாடை யாளும் புனைகுடைக்கீழ் வைகக்
கனலா துயிலேற்ற கண்.
வேந்தன் உடலைச் சுற்றி மன்னர்கள் கூடி நிற்கின்றனர். கூற்றம் அவனை அசங்கிற்று. வேந்தன் மனைவியும் ஈரத்துணியுடன் அவன் குடைக்கீழ் நிற்கிறாள். கனல் அவனை உறங்க வைக்கிறது.

அவிப்பலி[தொகு]

வெள்வா ளமருட் செஞ்சோ றல்ல
துள்ளா மைந்த ருயிர்ப்பலி கொடுத்தன்று. - கொளு
போரிட்டுச் செஞ்சோற்றுக் கடன் கழிப்பது
சிறந்த திதுவென்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளம ரென்னும் – பிறங்கழலுள்
ஆருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால்
வீரியரெய் தற்பால வீடு.
அரசன் அளித்த செஞ்சோற்றுக்குத் தான் செய்யவேண்டிய சிறந்த செயல் இது என்று கருதி, வாட்போர் என்னும் தீயில் தன் உயிரை வேள்வி செய்தான். அதுதானே வீரியர் எய்தும் வீடு?

சால்பு முல்லை[தொகு]

வான்றோயு மலையன்ன
சான்றோர்தஞ் சால்புரைத்தன்று. - கொளு
வானைத் தொடும் மலை போல் விளங்கும் சான்றாரின் சிறப்பினை உரைத்தல்
உறையார் விசும்பி னுவாமதி போல
நிறையா நிலவுத லன்றிக் – குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் வான்மையார் சால்பு.
விண்மீன் துளிகளுக்கு இடையே விளங்கும் நிறைமதி போல நிலவுதல் அல்லாமல், வங்கத்தில் கடல் தாண்டிச் சென்று கொண்டுவந்த நிதியமே பெற்றாலும் சங்கின் நிறம் போல் உளத்தூய்மை கொண்ட சான்றோர் உள்ளம் மாறுபடுவரோ?

கிணை நிலை[தொகு]

தண்பணை வயலுழவனைத்
தெண்கிணைவன் றிருந்துபுகழ்கிளந்தன்று. - கொளு
கிணை முழக்கும் பாணன் வயல் உழவனைப் புகழ்ந்து பண்பாடுதல்.
பகடுவாழ் கென்று பனிவயலு ளாமை
அகடுபோ லங்கட் டடாரித் – துகடுடைத்துக்
குன்றுபோற் போர்விற் குருசில் வளம்பாட
இன்றுபோ மெங்கட் கிடர்.
பகடு வாழ்க என்று பாடினான். வழலாமை வயிறு போல் இருக்கும் கிணையை முழக்குக்கொண்டு பாடினான். இவற்றால் எங்கள் இடரெல்லாம் நீங்கும்.

பொருளொடு புகறல்[தொகு]

வையகத்து விழைவறுத்து
மெய்யாய பொருணயந்தன்று. - கொளு
உலகில் வாழ விரும்பி, மெய்ப்பொருளை நாடியது.
ஆமினி மூப்பு மகன்ற திளமையும்
தாமினி நோயந் தலைவரும் – யாமினி
மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த
ஐயைந்து மாய்வ தறிவு.
இளமை அகன்று மூப்பு வந்துவிட்டது. இனி நோய் வரும். ஆகவே உடல் சோர்ந்து வாழக் கூடாது. ஐம்புல இன்பத்தில் ஆர்வம் கொள்ளக்கூடாது. ஐம்புலன்களை ஆராய்ந்து அறிவினைப் பெற வேண்டும்.

அருளொடு நீங்கல்[தொகு]

ஒலிகடல் வையகத்து
நலிவுகண்டு நயப்பவிந்தன்று. - கொளு
வையகம் துன்புறுவது கண்டு, உலக வாழ்க்கையை விரும்புதலை அவித்தல்
கயக்கிய நோயவாய்க் கையிகந்து நம்மை
இயக்கிய யாக்கை யிறாமுன் – மயக்கிய
படபடா வைகும் பயன்ஞால நீள்வலை
உட்படாம் போத லுறும்.
கசக்கும் நோய் வாட்டுகிறது. நம் கட்டுப்பாட்டுக்குள் எதுவும் இல்லை. உடம்பு அறுந்துபோகும் நிலையில் உள்ளது. அதற்கு முன்பதாக, பயனுள்ள உலகுக்குச் செல்ல முயலவேண்டும் என்று அவன் நினைக்கிறான்.


எட்டாவது வாகைப்படலம் முற்றிற்று.