உள்ளடக்கத்துக்குச் செல்

புறப்பொருள் வெண்பாமாலை/பாடாண் படலம்

விக்கிமூலம் இலிருந்து

ஒன்பதாவது

பாடாண் படலம்

[தொகு]
பாடாண் பாட்டே வாயி னிலையே
கடவுள் வாழ்த்தொடு பூவை நிலையே
பரிசிற் றுறையே யியன்மொழி வாழ்த்தே
கண்படை நிலையே துயிலெடை நிலையே
மங்கல நிலையொடு விளக்கு நிலையே
கபிலை கண்ணிய புண்ணிய நிலையே
வேள்வி நிலையொடு வெள்ளி நிலையே
நாடு வாழ்த்தொடு கிணையது நிலையே
களவழி வாழ்த்தே
வீற்றினி திருந்த பெருமங் கலமே
குடுமி களைந்த புகழ்சாற்று நிலையே
மணமங் கலமே பொலிவுமங் கலமே
நாண்மங் கலமே பரிசி னிலையே
பரிசில் விடையே யாள்வினை வேள்வி
பாணாற்றுப் படையே கூத்தராற்றுப் படையே
பொருநாற்றுப் படையொடு விறலியாற்றுப் படையே
வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉக்
குடைமங் கலமொடு வாண்மங் கலமே
மண்ணுமங் கலமே யோம்படை யேனைப்
புறநிலை வாழ்த்து முளப்படத் தொகைஇ
அமரர்கண் முடியு மறுவகை யாகிய
கொடிநிலை கந்தழி வள்ளி குணஞ்சால்
புலவரை யவர்வயிற் புகழ்ந்தாற்றுப் படுத்தல்
புகழ்ந்தனர் பரவல் பழிச்சினர்ப் பணிதல்
நிகழ்ந்த காம்பஃ பகுதியுட் டோன்றிய
கைக்கிளை வகையும் பெருந்திணை வகையும்
நற்றுனி நவின்ற பாடாண் பாட்டும்
கடவுட் பக்கத்து மேனோர் பக்கத்தும்
மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கமும்
மாதர் மகிழ்ந்த குழவியு மூரின்
கண்ணே தோன்றிய காம்பஃ பகுதியொ
டாங்க வாறெண் பகுதிப் பொருளும்
பாங்குற வுரைப்பது பாடாண் பாட்டே.
  1. பாடாண் பாட்டு
  2. வாயில் நிலை
  3. கடவுள் வாழ்த்து
  4. பூவை நிலை
  5. பரிசிற்றுறை
  6. இயன்மொழி வாழ்த்து
  7. கண்படை நிலை
  8. துயிலெடை நிலை
  9. மங்கல நிலை
  10. விளக்கு நிலை
  11. கபிலை கண்ணிய புண்ணிய நிலை
  12. வேள்வி நிலை
  13. வெள்ளி நிலை
  14. நாடு வாழ்த்து
  15. கிணை நிலை
  16. களவழி வாழ்த்து
  17. வீற்றினிதிருந்த பெருமங்கலம்
  18. குடுமி களைந்த புகழ்சாற்று நிலை
  19. மண்மங்கலம்
  20. பொலிவு மங்கலம்
  21. நாண்மங்கலம்
  22. பரிசில் நிலை
  23. பரிசில் விடை
  24. ஆள்வினை வேள்வி
  25. பாணாற்றுப்படை
  26. கூத்தராற்றுப்படை
  27. பொருநாற்றுப்படை
  28. விறலியாற்றுப்படை
  29. வாயுறை வாழ்த்து
  30. செவியறிவுறூஉ
  31. குடைமங்கலம்
  32. வாள்மங்கலம்
  33. மண்ணுமங்கலம்
  34. ஓம்படை
  35. புறநிலை வாழ்த்து
  36. அமரர்கண் முடியு மறுவகை யாகிய கொடிநிலை
  37. கந்தழி
  38. வள்ளி
  39. புலவராற்றுப்படை
  40. புகழ்ந்தனர் பரவல்
  41. பழிச்சினர்ப் பணிதல்
  42. நிகழ்ந்த காமப் பகுதியுள் தோன்றிய கைக்கிளை வகை
  43. பெருந்திணை வகை
  44. நற்றுனி நவின்ற பாடாண் பாட்டு
  45. கடவுட் பக்கத்து மேனோர் பக்கம்
  46. மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கம்
  47. மாதர் மகிழ்ந்த குழவி
  48. ஊரின்கண் தோன்றிய காமப் பகுதி
ஆங்க ஆறெண் பகுதிப் பொருளும்
பாங்குற வுரைப்பது பாடாண் பாட்டே.

பாடாண் பாட்டு

[தொகு]
ஒளியு மாற்றலு மோம்பா வீகையும்
அளியு மென்றிவை யாய்ந்துரைத்தன்று. - கொளு
ஒருவனின் புகழ், ஆற்றல், ஈகை, அளி ஆகிய நற்பண்புகளை ஆராய்ந்து போற்றுதல்
மன்னர் மடங்கன் மறையவர் சொன்மாலை
அன்ன நடையினார்க் காரமுதம் – துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேற் றானையெங் கோ.
எம் அரசன் மன்னகளிடையே சிங்கம் போன்றவன். புகழ்மாலை சூடியவன். மகளிர்க்கு அமுதம் போன்றவன். பரிசிலர்க்கு மழைபோல் வழங்குபவன். எரி போல் சினம் கொண்ட படையை உடையவன்.

வாயினிலை

[தொகு]
புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை
கரவின் றுரையெனக் காவலற் குரைத்தன்று. - கொளு
தான் வந்திருப்பதை வேந்தனுக்கு அறிவிக்குமாறு வாயில் காவலனைப் புலவர் வேண்டுதல்
நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை
ஈட்டிய சொல்லா னிவனென்று – காட்டிய
காயலோங் கெஃகிமைக்குங் கண்ணார் கொடிமதில்
வாயிலோய் வாயி லிசை.
வாயிலோயே! வாய்மொழிச் செந்நாப் புலவன் வந்திருப்பதாக, புகழ் பெற்று விளங்கும் கயல் பொறித்த மதில் கொண்ட பாண்டியனுக்குஞ் சொல்.

கடவுள் வாழ்த்து

[தொகு]
காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரி லொருவனை யெடுத்துரைத் தன்று. -கொளு
அரசன் தொழும் கடவுள் மூவருள் ஒருவன் புகழை எடுத்துரைத்தல்
வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய வுருவம் வெளிப்படுத்தாய் – வெய்ய
அடுந்திற லாழி யரவணையா யென்றும்
நெடுந்தகை நின்னையே யாம்.
அரசன் மண்மகளைத் தன் ஆட்சியின் வைத்திருக்கிறான். திருமால் தன் அடியால் நிலத்தை அளந்தான்
அரசன் மக்களுக்காக உருவெடுத்துள்ளான். திருமாலும் அவ்வாறே மக்களுக்காகப் பிறவி எடுத்துள்ளான்
அரசன் ஆட்சிச் சக்கரத்தைக் கையில் வைத்துள்ளான். திருமால் கையிலும் ஆழி உள்ளது
அரசன் மக்களை அரவணைப்பான். திருமால் பாம்பணையில் துயில்மின்றான்
எனவே அரசன் திருமாலே.

பூவைநிலை

[தொகு]
கறவை காவல னிறனொடு பொரீஇப்
புறவலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று. - கொளு
கறவைக் காவலன் கண்ணனோடு அவன் சூடும் காயாம்பூவைச் சிறப்பித்தல்
பூவை விரியும் புதுமலரிற் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் – மேவார்
மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்.
சூடும் காயாம்பூப் போன்ற கழல் அணிந்தவன்.
மல்லர் மறம் கடந்த காளை.
விழுமியது எது
அருள் தரும் உன் கழலா
மறம் கடந்த வீரமா

பரிசிற்றுறை

[தொகு]
மண்ணகங் காவன் மன்னன் முன்னர்
எண்ணிய பரிசி லிதுவென வுரைத்தன்று. - கொளு
எனக்கு இன்ன பரிசில் வேண்டும் என்று இரவலன் மன்னனிடம் கூறல்
வரிசை கருதாது வான்போற் றடக்கைக்
குரிசினீ நல்கயாங் கொள்ளும் – பரிசில்
அடுகள மார்ப்ப வமரோட்டித் தந்த
படுகளி நால்வாய்ப் பகடு.
மழைபோல் வழங்கும் மன்னனே! பகைவனை வென்று நீ கொண்டுவந்த யானை எனக்குப் பரிசிலாகத் தரவேண்டும்.

இயன்மொழி வாழ்த்து

[தொகு]
இன்னோ ரின்னவை கொடுத்தார் நீயும்
அன்னோர் போல வவையெமக்கீகென
என்னோரு மறிய வெடுத்துரைத் தன்று. - கொளு
இன்னார் இன்னது கொடுத்தார்
அவர் போல நீயும் வழங்க வேண்டும்
என்று கூறுதல்
முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் – தொல்லை
இரவாம லீந்த விறைவர்போ னீயும்
கரவாம லீகை கடன்.
பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான்
பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
அவர்களைப் போல் தரம் பார்க்காமல் நீ எனக்குப் பரிசில் நல்க வேண்டும்

இதுவுமது

மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன்
இயல்பே மொழியினு மத்துறையாகும். - கொளு
மன்னவன் இயல்புகளை எடுத்துரைப்பினும் இத் துறை.
ஒள்வா ளமரு ளுயிரோம்பான் றானீயக்
கொள்வார் நடுவட் கொடையோம்பான் – வெள்வாள்
கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான்
ஒழியாமே யோம்பு முலகு.
போரில் உயிரை ஓம்பான்
கொடை வழங்கும்போது கொள்வாரின் தரத்தைப் பார்க்க மாட்டான்.
சினமில்லாமல் வேலைக் வேலைக் கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்றுவான்

கண்படைநிலை

[தொகு]
நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும்
கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று. - கொளு
பகைவரின் தேர்ப்படையைத் துகளாக்கிய மன்னவன் மாண்டது பற்றிக் கூறுதல்
மேலா ரிறையமருண் மின்னார் சினஞ்சொரியும்
வேலான் விறன்முனை வென்றடக்கிக் – கோலாற்
கொடிய வுலகிற் குறுகாமை யெங்கோன்
கடியத் துயிலேற்ற கண்.
போரில் சினம் சொரிந்த மன்னவன் கோலோச்சாமல் நீண்ட உறக்கம் எய்தினான்

துயிலெடைநிலை

[தொகு]
அடுதிறன் மன்னரை யருளிய வெழுகெனத்
தொடுகழன் மன்னனைத் துயிலெடுப் பின்று. - கொளு
உலகுக்கு அருள் தரத் துயில் எழும்படி மன்னனை எழுப்புதல்
அளந்த திறையா ரகலிடத்து மன்னர்
வளந்தரும் வேலோய் வணங்கக் – களந்தயங்கப்
பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத்
தூமலர்க்க ணேற்க துயில்.
மன்னர்கள் திறை அளக்க வந்துள்ளனர். பெற்றுக்கொள்ளத் துயில் எழுக.

மங்கலநிலை

[தொகு]
கங்குற் கனைதுயி லெழுந்தோன் முன்னர்
மங்கலங் கூறிய மலிவுரைத் தன்று. - கொளு
துயிலெழுந்த மன்னன் முன் தோன்றி வாழ்த்துதல்.
விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு
மண்வேண்டிற் கைகூப்பன் மங்கலம் – பெண்வேண்டின்
துன்னன் மடவார்க்கு மங்கலந் தோலாப்போர்
மன்னன் வரைபுரையு மார்பு.
விண் வேண்டின் பெறும் வேந்தனுக்ககு மங்கலம்
மண் வேண்டின் மன்னர்கள் கைகூப்பி நிற்கும் மன்னனுக்கு மங்கலம்
பெண் வேண்டின் பெறும் மார்பினனுக்கு மங்கலம்

இதுவுமது

மன்னிய சிறப்பின் மங்கல மரபிற்
றுன்னின னென்றலு மத்துறை யாகும் - கொளு
நிலைபெற்ற சிறப்புடன் மங்கலம் பெற்றுள்ளான் என்றலும் இத்துறை
தீண்டியுங் கண்டும் பயிற்றியுந் தன்செவியால்
வேண்டியுங் கங்குல் விடியலும் – ஈண்டிய
மங்கல மாய நுகர்ந்தான் மறமன்னர்
வெங்களத்து வேலுயர்த்த வேந்து.
வெங்களத்து வேல் உயர்த்த வேந்தன்
தொட்டும், கண்டும், கேட்டும், பழகியும்
இரவிலும் பகலிலும்
மங்கலமாக எல்லாம் நுகர்ந்தான்

விளக்கு நிலை

[தொகு]
அளப்பருங் கடற்றானையான்
விளக்குநிலை விரித்துரைத்தன்று. - கொளு
கடற்படை வேந்தனுக்கு ஒளி தரும் விளக்கு நிலைமையை விரித்துரைத்தல்
வளிதுரந்த கண்ணும் வலந்திரியாப் பொங்கி
ஒளிசிறந்தோங்கி வரலால் – அளிசிறந்து
நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு
வென்னெறியே காட்டும் விளக்கு.
மன்னனின் விளக்கு வலமாகச் சுழன்று எரிந்து அவனுக்கு வரப்போகும் வெற்றியை எடுத்துரைக்கிறது

இதுவுமது

அடரவிர் பைம்பூண் வேந்தன் றன்னைச்
சுடரொடு பொருவினு மத்துறை யாகும். - கொளு
மன்னனை விளக்கோடு ஒப்புமைப்படுத்திக் கூறினும் அந்தத் துறையே ஆகும்.
வெய்யோன் கதிர்விரிய விண்மே லொளியெல்லாம்
மையாந் தொடுங்கி மறைந்தாங்கு – வையகத்துக்
கூத்தவை யேத்துங் கொடித்தேரான் கூடியபின்
வேத்தவையுண் மையாக்கும் வேந்து.
வேந்தன் ஒளி பெருகிய பின் வேத்தவையின் ஒளி வெய்யோன் ஒளி மறைந்த இரவு போல் ஆயிற்று

கபிலைகண்ணிய புண்ணியநிலை

[தொகு]
அண்ண னான்மறை யந்தணா ளர்க்குக்
கண்ணிய கபிலை நிலையுரைத் தன்று. - கொளு
அரசன் அந்தணர்களுக்குப் பசு தானம் கொடுத்தது பற்றிக் கூறுவது.
பருக்தாழுஞ் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கட் கபிலை கொடுத்தான் – செருக்கோ
டிடிமுரசத் தானை யிகலிரிய வெங்கோன்
கடிமுரசங் காலை செய.
அரசன் காலையில் முரசு முழக்கிக் கொடை வழங்கினான். அப்போது பார்ப்பார் அவன் வழங்கிய பொன்னை முகந்து சென்றனர். மேலும் அவர்களுக்குப் பசுக்களைத் தானமாக வழங்கினான்.

வேள்விநிலை

[தொகு]
அந்தமில் புகழா னமரரு மகிழச்
செந்தீ வேட்ட சிறப்புரைத் தன்று. - கொளு
அரசன் அமரர் மகிழுமாறு வேள்வி செய்ததைச் சிறப்பித்துக் கூறுவது.
கேள்வி மறையோர் கிளைமகிழ்த லென்வியப்பாம்
வேள்வி விறல்வேந்தன் றான்வேட்ப – நீள்விசும்பின்
ஈர்ந்தா ரிமையோரு மெய்தி யழல்வாயால்
ஆர்ந்தார் முறையா லவி.
வேந்தன் மறையோரைக்கொண்டு வேள்வி செய்தான். அதனால் மறையோர் வியந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. இமையோர் வேள்வித் தீயிலிட்ட அவிப் பொருள்களை உண்டு பசியாறினர்.

வெள்ளி நிலை

[தொகு]
துயர்தீரப் புயறருமென
உயர்வெள்ளி நிலையுரைத்தன்று. - கொளு
மழை பொழியும் என்பதை வானத்தில் வெள்ளிக்கோள் இருக்கும் நிலையால் உணர்த்துதல்
சீழ்கதிர் வான்விளக்கும் வெள்ளி சுடர்விரியத்
தாழ்புயல் வெள்ளம் தருமரோ – சூழ்புரவித்
தேர்விற்றார் தாங்கித் திகழ்ந்திலங்கு வேலோய்நின்
மார்விற்றார் கோலி மழை.
வானில் தோன்றும் வெள்ளிக் கோள் தன் இருப்பு நிலையால் புயலால் வெள்ளம் வரவிருப்பதை மன்னனுக்குத் தெரிவிக்கிறது.

நாடு வாழ்த்து

[தொகு]
தாட்டாழ் தடக்கையான்
நாட்டது வளமுரைத்தன்று. - கொளு
முழந்தாள் வரையில் தாழ்ந்த கைகளை உடைய கொடைமன்னனின் நாட்டு வளத்தைக் கூறுதல்.
எண்ணி னிடரெட்டு மின்றி வயற்செந்நெற்
கண்ணின் மலரக் கருநீலம் – விண்ணின்
வகைத்தாய் வளனொடு வைகின்று வென்வேல்
நகைத்தாரான் றான்விரும்பு நாடு.
வெற்றிவேல் மன்னன் விரும்பும் நாட்டு வயலில் எட்டு வகையான இடர்ப்பாடுகளும் இல்லாமல் கண்போல் பூக்கும் நீல மலருடன் செந்நெல் விளைந்திருக்கிறது.

கிணை நிலை

[தொகு]
திருக்கிளரு மகன்கோயில்
அரிக்கிணைவன் வளமுரைத் தன்று. - கொளு
அரசன் அரண்மனையில் கிணைவன் கிணை முழக்கும் சிறப்பினை எடுத்துரைத்தல்
வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ளகட் டன்ன வரிக்கிணை – வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்.
வெள்ளி முளைக்கும் வைகறை வேளையில், கிணைவன் தன் வயலாமை வயிறு போன்ற உருவம் கொண்ட கிணைப்பறையை முழக்கி, பகடு வாழ்க என வாழ்த்தினான். அப்போது எங்கள் சுன்பங்கள் எல்லாம் நீங்கின.

களவழி வாழ்த்து

[தொகு]
செங்களத்துச் செழுஞ்செல்வம்
வெண்டுறையாழ்ப் பாணர் விளம்பின்று. - கொளு
போர்கள வெற்றிச் செல்வத்தை, பாணன் யாழிசையோடு போற்றுதல்
ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து
வேண்டியாங் கொண்ட விறல்வேழம் – வேண்டாள்
வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே
விளைகட் பகர்வாள் விலை.
போருக்குச் செல்லும்போது கள் விற்ற பெண். கழுகு பறக்கும் போர்க்களத்தில் கொண்ட யானைகளை விலையாக வாங்கிக்கொள்ள மாட்டாள்.

வீற்றினிதிருந்த பெருமங்கலம்

[தொகு]
கூற்றிருந்த கொலைவேலான்
வீற்றிருந்த விறன்மிகுத்தன்று. - கொளு
போருக்குச் செல்லும் கொலைவேலான் வீற்றிருக்கும் பெருமிதத்தைக் கூறுதல்
அழலவிர் பைங்க ணரிமா னமளி
நிழலவிர் பூண் மன்னர்நின் றேத்தக் – கழல்புனைந்து
வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப்
பூமலி நாவற் பொழிற்கு.
மன்னர்கள் போற்றிப் புகழுமாறு அரியணையில், வீரக்கழல் பொலிவுடன் தோன்றுமாறு மன்னன் வீற்றிருந்தான்.

குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை

[தொகு]
நெடுமதி லெறிந்து நிரைதார் மன்னன்
குடுமி களைந்த மலிவுரைத் தன்று. - கொளு
மதில் வெற்றிக்குப் பின்னர் மன்னன் தன் குடுமி களைந்து மகிழ்ந்தது.
பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின்
வேந்தனை வென்றான் விறன்முருகன் – ஏந்தும்
நெடுமதில் கொண்டு நிலமிசையோ ரேத்தக்
குடுமி களைந்தானெங் கோ.
தாமரையில் தோன்றிய முருகன் போன்ற மன்னன் மதில் வெற்றிக்குப் பின்னர் உலகம் புகழும்படி தன் குடுமியை இறக்கி மொட்டை அடித்துக்கொண்டு விழா கொண்டாடினான்.

மணமங்கலம்

[தொகு]
இகலடுதோ ளெறிவேன் மன்னன்
மகளிரொடு மணந்த மங்கலங் கூறின்று. - கொளு
தோள் வலிமையால் வென்ற மன்னன் மகளிரைத் தழுவி மணவிழா கொண்டாடுதல்
அணக்கருந் தானையா னல்லியந்தார் தோய்ந்தோள்
மணக்கோல மங்கலம்யாம் பாட – வணக்கருஞ்சீர்
ஆரெயின் மன்னன் மடமக ளம்பணைத்தோட்
கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி.
படை மறவர்களைக் கொண்ட மன்னன் அல்லிமாலை சூடிய தன் மார்பில் மணமாலை சூடி மணவிழா கொண்டாடினான்.

பொலிவுமங்கலம்

[தொகு]
வேல்வேந்த னுண்மகிழப்
பாலன் பிறப்பப் பலர்புகழ்ந் தன்று. - கொளு
வேந்தன் மகிழுமாறு அவனுக்கு மகன் பிறந்துற்றதை மக்கள் கொண்டாடல்
கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்
பெருங்கட் புதல்வன் பிறப்பப் – பெரும்பெயர்
விண்ணார் மகிழ்ந்தார் வியலிடத்தா ரேத்தினார்
எண்ணா ரவிந்தா ரிகல்.
சினம் கொள்ளும் வீரக் கழல் அணிந்து, மகிழ்ச்சி தரும் வெண்குடை நிழற்றும் வேந்தனுக்கு மகன் பிறந்துள்ளது கண்டு விண்ணோர் மகிழ்ந்தனர். மக்கள் பாராட்டி வழ்த்தினர். பகைவரும் போரை நிறுத்திக்கொண்டனர்.

நாண்மங்கலம்

[தொகு]
அறந்தரு செங்கோ லருள்வெய்யோன்
பிறந்தநாட் சிறப்புரைத் தன்று. - கொளு
மன்னன் பிறந்த நாளை மக்கள் கொண்டாடியது
கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணிநாட் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ – சுரும்பிமிர்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதி றாந்திறப்பர் தாள்.
வெள்ளணி நாள் என்பது பிறந்த நாள். மன்னனின் வெள்ளணி நாளில் மன்னன் யானைகளையும் பொன்னையும் மக்களுக்குக் கொடையாக வழங்கினான். வேந்தரும் மகிழ்வில் மனைவியருடன் திளைத்து மகிழ்ந்திருந்தனர்.

பரிசில் நிலை

[தொகு]
புரவலன் மகிழ்தூங்க
இரவலன் கடைக்கூடின்று. - கொளு
புரவலன் மகிழும்படி, இரவலர் அவன் வாயிலில் திரண்டது
வெல்புரவி பூண்ட விளங்கு மணித்திண்டேர்
நல்கிய பின்னு நனிநீடப் – பல்போர்
விலங்குங் கடற்றானை வேற்றார் முனைபோற்
கலங்கு மளித்தென் கடும்பு.
புரவலன் குதிரை பூட்டிய தோர்களில் பரிசில் வழங்கினான். பெறுவற்காக இரவலர் அவன் வாயிலில் திரண்டிருந்தனர்.

பரிசில்விடை

[தொகு]
வேந்தனுண் மகிழ வெல்புக ழறைந்தோர்க்
கீந்து பரிசி லின்புற விடுத்தன்று. - கொளு
வேந்தன் மகிழுமாறு அவன் புகழைப் பாடிய பரிசிலர் உள்ளம் மகிழுமாறு வேந்தன் பரிசில் வழங்குதல்
படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும்
நடைநவின்ற பாய்மாவு நல்கிக் – கடையிறந்து
முன்வந்த மன்னர் முடிவணங்குஞ் சேவடியாற்
பின்வந்தான் பேரருளி னான்.
அவன் தந்த களிறு, தேர், புரவி ஆகியவற்றில் பரிசிலை ஏற்றுக்கொண்டு இரவலர் மன்னனிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றனர்.

ஆள்வினை வேள்வி

[தொகு]
வினைமுற்றிய கனைகழலோன்
மனைவேள்வி மலிவுரைத் தன்று. - கொளு
வினை முற்றிய தலைவன் இல்லம் திரும்பியதைக் கொண்டாடல்
நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகில்
ஒன்ற உயிர்களிப்ப ஓம்பலால் - வென்றமருள்
வாள்வினை நீக்கி வருக முந்தென்னும்
ஆள்வினை வேள்வி யவன்
வாளால் போரில் வென்றவன் இல்லம் திரும்பி, புகழுடன் உயிரினங்கள் களிக்குமாறு பாதுகாத்தான்.

பாணாற்றுப்படை

[தொகு]
சேணோங்கிய வரையதரிற்
பாணனை யாற்றுப்படுத் தன்று. - கொளு
மலைப்பாதை வழியில் பாணனை வள்ளலிடம் ஆற்றப்படுத்துதல்
இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண வெம்மைப்போற்
கன்றுடை வேழத்த கான்கடந்து – சென்றடையிற்
காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்.
யாழ் மீட்டும் பாண! யானைகள் நிறைந்த இந்தக் காட்டைக் கடந்து வள்ளல், சாயலாள் கேள்வனிடம் சென்றால், குளத்தில் பூக்காத பொற்றாமரை மலரை உன் தலையில் சூட்டுவான்.

கூத்தராற்றுப்படை

[தொகு]
ஏத்திச்சென்ற விரவலன்
கூத்தரை யாற்றுப்படுத்தன்று. -கொளு
பாராட்டிப் பரிசில் பெற்றுவந்த இரவலன் வழியில் வரும் கூத்தரைப் புரவலனிடம் ஆற்றுப்படுத்துதல்
கொலைவிற் புருவத்துக் கொம்பன்னார் கூத்தின்
தலைவ தவிராது சேறி – சிலைகுலாம்
காரினை வென்ற கவிகையான் கைவளம்
வாரினை கொண்டு வரற்கு .
கூத்தின் தலைவ
தவறாமல் செல்
புரவலன் தரும் கொடையை வாரிக்கொண்டு வரலாம்

பொருநாற்றுப்படை

[தொகு]
பெருநல்லா நுழையீராகெனப்
பொருநனை யாற்றுப்படுத்தன்று. - கொளு
பொருநர் புரவலன் வாயிலில் நுழைக என்றது
தெருவி லலமருந் தெண்கட் டடாரிப்
பொருவில் பொருநநீ செல்லிற் – செருவில்
அடுந்தடக்கை தோன்றா ளமர்வெய்யோ னீயும்
நெடுந்தடக்கை யானை நிரை.
தெருவில் கிணை முழக்கிக்கொண்டு செல்லும் பொருந! போரில் வென்று திரும்பும் புரவனிடம் செல்
அவன் யானைகளைப் பரிசிலாக நல்குவான்

விறலியாற்றுப்படை

[தொகு]
திறல்வேந்தன் புகழ்பாடும்
விறலியை யாற்றுப்படுத்தன்று. - கொளு
வேந்தன் புகழைப் பாடுபவள் விறலி
அவளை ஆற்றுப்படுத்துதல்
சில்வளைக்கை செவ்வாய் விறலி செருப்புடையான்
பல்புகழ் பாடிப் படர்தியேல் – நல்லவையோர்
ஏத்த விழையணிந் தின்னே வருதியாற்
பூத்த கொடிபோற் பொலிந்து.
விறலி!
போர்க்களத்தில் இருக்கும் அரசனைப் பாடிச் சென்றால்
அவன் தரும் அணிகலன்களை அணிந்துகொண்டு அவன் கொடித்தேர் போல் வரலாம்

வாயுறை வாழ்த்து

[தொகு]
பிற்பயக்கு மெஞ்சொல்லென்
முற்படர்ந்த மொழிமிகுத் தன்று. - கொளு
பின்னர் பயன் விளைவிக்கும் செயல் என்று முன்கூட்டியே எடுத்துரைப்பது
எஞ்சொ லெதிர்கொண் டிகழான் வழிநிற்பிற்
குஞ்சர வெல்படையான் கொள்ளானோ – எஞ்சும்
இகலிட னின்றி யெறிமுந்நீர் சூழ்ந்த
அகலிட மங்கை யகத்து.
என் சொல்லை இகழாமல் அதன்வழி செயல்பட்டால்
யானைபடை வேந்தன் நிலமகளோடு வாழ்வான்

செவியறிவுறூஉ

[தொகு]
மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி
அறந்தெரி கோலாற் கறிய வுரைத்தன்று. - கொளு
மனம் திரிபு இல்லாமல், நிலைபேறுடைய அறநெறியை அரசனுக்கு எடுத்துரைத்தல்
அந்தணர் சான்றோரர் அருந்தவத்தோர் தம்முன்னோர்
தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே – முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிநின்று கேட்டன் முறை.
அந்தணர், சான்றோர், தவமுனிவர், தம் முன்னோர், தந்தை, தாய் ஆகியோர் வழி நின்று நாடாளுதல் முறைமையாகும்.

குடைமங்கலம்

[தொகு]
நாற்றிசையும் புகழ்பெருக
வீற்றிருந்தான் குடைபுகழ்ந்தன்று. - கொளு
புகழ் பெருகும்படி அரசன் கொற்றக்குடை நிழலில் வீற்றிருத்தலைக் கூறுவது.
தன்னிழலோ செல்லோர்க்குந் தண்கதிராந் தற்சேரா
வெந்நிழலோ ரெல்லோர்க்கும் வெங்கதிராம் – இன்னிழல்வேல்
மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன்
கோலா யுயர்த்த குடை.
துன்புறுவோர்க்கு அதனைப் போக்கும் குளுமைக் கதிர் தருவதாகவும்
அவனைச் சேராதவர்களுக்கு சூட்டுக் கதிர் வீசுவதாகவும் விளங்கும்
கொற்றக் குடை நிழலில் செம்பியன் வீற்றிருந்தான்

வாண்மங்கலம்

[தொகு]
கயக்கருங் கடற்றானை
வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று. - கொளு
கடல் போன்ற படையுடன் களிற்றின்மீது வரும் வேந்தனின் வாளின் திறமையைப் புகழ்வது
கொங்கவி ழைம்பான் மடவார் வியன்கோயில்
மங்கலங் கூற மறங்கனலும் – செங்கோல்
நிலந்தரிய செல்லு நிரைதண்டார்ச் சேரன்
வலந்தரிய வேந்திய வாள்.
அரண்மனை மகளிர் மங்கலம் கூற, மறம் கனலும் வாளுடன் சென்ற சேரன் தன் வாளாற்றலால் வாகை சூடினான்

மண்ணுமங்கலம்

[தொகு]
எண்ணருஞ் சீர்த்தி யிறைவ னெய்தி
மண்ணு மங்கல மலிவுரைத் தன்று. - கொளு
வெற்றிக்குப் பின்னர் மன்னன் நீராடும் விழாவினைச் சிறப்புறுத்துவது
கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள்
மங்கலங் கூற மலிபெய்திக் – கங்கையாள்
பூம்புன லாகங் கெழீஇயினான் போரடுதோள்
வெம்பார் தெரியலெம் வேந்து.
மனைவியின் வாழ்த்துடன் மன்னன் கங்கை நீரில் நீராடினான்

ஓம்படை

[தொகு]
இன்னது செய்த லியல்பென விறைவன்
முன்னின் றறிவன் மொழி தொடர்ந் தன்று. - கொளு
இன்னது செய்க என்று கூறும் அறிவன் மொழியை அரசன் பின்பற்றல்
ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்
வென்று களங்கொண்ட வேல்வேந்தே – சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்து ளைந்துவென் றாறகற்றி
ஏழ்கடிந தினபுற் றிரு.
வேந்தே!
நீ ஒருவன்
அகம், புறம் என்னும் இரண்டையும் ஆராய்ந்தவன்
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றையும் அடக்கியவன்
நாற்படை கொண்டு களம் வென்றவன்
அத்துடன் புலன்கள் ஐந்தையும் வெல்வாயாக
ஆறு தீய குணங்களைச் சீரமைத்து (அறுகுணம் என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வடநூலார் குறிப்பிட்டுள்ள ஆறுவகை மனோ நிலைகள். இவை தமிழ் மொழியில் முறையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளக்கப்படுகின்றன.)
7 பிறப்புகளைக் கடந்து
இன்புற்று வாழ்வாயாக

புறநிலை வாழ்த்து

[தொகு]
வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப
வழிவழி சிறக்கென வாய்மொழிந் தன்று. - கொளு
வழிபடு தெய்வம் உன்னைப் பாதுகாக்க நீயும் உன் வழியினரும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துதல்
கொடிபடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக்
கடிபடு கொன்றையான் காப்ப – நெடிதுலகிற்
பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற
மாமலைபோன் மன்னுக நீ.
சிவபெருமான் பாதுகாக்க நீ மலை போல் நின்று நிலவுக

கொடிநிலை

[தொகு]
மூவர்கொடி யுள்ளு மொன்றொடு பொரீஇ
மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று. - கொளு
மூவேந்தர் கொடிகள் ஒன்றினை இறைவன் கொடியோடு பொருத்திக் காட்டிப் புகழ்தல்
பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடிபோல் – ஓங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
கொல்யானை மன்னன் கொடி.
திருமாலின் கருடக்கொடி போல் வேந்தன் கொடி மன்னர் பலர் போற்ற ஓங்குக

கந்தழி

[தொகு]
குழுநேமியான் சோவெறிந்த
வீழாச்சீர் விறன்மிகுத்தன்று. - கொளு
மாயோன் சோ அரணை அழித்தது பற்றிக் கூறல்
மாயவன் மாய மதுவான் மணிநிரையுள்
ஆயனா வெண்ண லவனருளால் – காயக்
கழலவிழக் கண்கனலக் கைவளையார் சோரச்
சுழலழலுள் வைகின்று சோ.
மாயவன் மாய வலிமை கொண்டவன். அவனை வெறுமனே மாடு மேய்ப்பவன் என்று எண்ண வேண்டாம். கோட்டைக்குள் இருந்த மகளிர் கணவனை இழந்து கைவளை சோரும்படி சோ என்னும் அரணை அழித்தான்.

வள்ளி

[தொகு]
பூண்முலையார் மனமுருக
வேன்முருகற்கு வெறியாடின்று. - கொளு
மகளிர் மனம் உருகும்படி வேலன் முருகனுக்கு வெறி ஆடுதல்
வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே
ஈண்டியம் விம்ம வினவளையார் – பூண்டயங்கச்
சூலமொ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு
வேலனொ டாடும் வெறி.
நீயும் இதனை விரும்புகிறாய். வேலன் ஆடும் இந்த விழா விழுமியது. பெண்மகள் ஆடும்படி வேலன் சிவன் மகன் முருகனுக்கு வேலைச் சுழற்றிக்கொண்டு வெறியாட்டம் ஆடுகிறான்.

புலவராற்றுப்படை

[தொகு]
இருங்கண் வானத் திமையோருழைப்
பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று. - கொளு
புலவனை இறைவனிடம் ஆற்றுப்படுத்துதல்
வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
அருளீயு மாழி யவன்.
படிவத்தோய்! அருவி பாயும் வேங்கடம் சென்றால், ஆழியோன் திருமால் உனக்கு அருள் தருவான்

புகழ்ந்தனர் பரவல்

[தொகு]
இன்னதொன் றெய்துது மிருநிலத் தியாமெனத்
துன்னருங் கடவுட் டொடுகழல் றொழுதன்று. - கொளு
நிலவுலகில் தனக்கு இத்தகைய வாழ்வினைத் தரவேண்டும் என வேண்டிக் கடவுளைத் தொழுதல்
சூடிய வான்பிறையோய் சூழ்கடலை நீற்றரங்கத்
தாடி யசையா வட்டியிரண்டும் – பாடி
உரவுநீர் ஞாலத் துயப்போக வென்று
பரவுதும் பல்காற் பணிந்து.
பிறை சூடிய பெருமானே!
நான் ஞாலம் முழுவதும் வெல்லவேண்டும் என்று வேண்டி உன்னைப் பரவுகிறேன்.

பழிச்சினர் பணிதல்

[தொகு]
வயங்கியபுகழ் வானவனைப்
பயன்கருதிப் பழிச்சினர் பணிந்தன்று. - கொளு
வானவனைப் போற்றிப் பலவுதல்
ஆடலமர்ந்தா னடியடைந்தா ரென்பெறார்
ஓடரி யுண்க ணுமையொருபாற் – கூடிய
சீர்சா லகலத்தைச் செங்கணழகனாகம்
தாராய்த் தழுவப் பெறும்.
ஆடும் சிவனையும்
அடியால் உலகை அளந்த திருமாலையும்
அடைந்தவர்
அம்மையப்பன் தழுவுதலைப் பெறுவர்.

கைக்கிளை

[தொகு]
தண்டாக் காதற் றளரிய றலைவன்
வண்டார் விரும்பிய வகையுரைத் தன்று. - கொளு
தலைமகனை விரும்பிய தலைவியின் நிலையை உரைத்தல்
மங்குன் மனங்கவர் மான்மாலை நின்றேற்குப்
பொங்கு மருவிப் புனனாடன் – கங்குல்
வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித்
தருவான்கொன் மார்பணிந்த தார்.
மயக்கும் மாலைப் பொழுதில் ஏங்கி நிற்கிறேன்.
புனல்நாடன் வருவானோ?
என் மார்பைத் தழுவி அவன் மாலையை எனக்குத் தருவானோ?

பெருந்திணை

[தொகு]
பெய்கழற் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து
மல்கிருட் செல்வோள் வகையுரைத் தன்று. - கொளு
பெருந்தகையைத் தழுவச் செல்லும் பெண்ணின் நிலைமையைச் சொல்வது
வயங்குமான் றென்னன் வரையகலந் தோய
இயங்கா விருளிடைச் செல்வேன் – மயங்காமை
ஓடரிக் கண்ணா யுறைகழிவாண் மின்னிற்றால்
மாட மறுகின் மழை.
தென்னன் மார்பைத் தோய விரும்பி அவள் நள்ளிருளில் உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னும் தோற்றத்துடன் இருளில் மாட மறுகில் செல்கிறாள்

புலவி பொருளாகத் தோன்றிய பாடாண்பாட்டு

[தொகு]
வில்லேர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று - கொளு
அவள் அவன் மார்பினைத் தழுவமாட்டேன் என்று புலந்து கூறுதல்
மலைபடு சாந்த மலர்மார்ப யாநின்
பலர்படி செல்வம் படியேம் – புலர்விடியல்
வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற்
கண்டனங் காண்டற் கினிது.
சந்தனம் மலரும் மார்ப!
பலரும் தழுவும் உன் மார்பினை நான் தழுவ மாட்டேன்.
விடியற்கால வேளையில் வயல்சூழ் நகரில் உன்னைக் கண்டேன்

கடவுண்மாட்டுக் கடவுட்பெண்டிர் நயந்தபக்கம்

[தொகு]
இமையா நாட்டத் திலங்கிழை மகளிர்
அமையாக் காத லமரரை மகிழ்ந்தன்று - கொளு
தெய்வ மகளிர் தெய்வமகனுடன் காதல் விழாக் கொண்டாடியது
நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமேல்
ஒல்கெனி னுச்சியா ணோமென்னும் – மல்கிருள்
ஆட லமர்ந்தாற் கரிதா லுமையாளை
ஊட லுணர்த்துவதோ ராறு.
நல்கு எனின் இசையாள்
அவள் சேவடியில் நம் உச்சி உருத்தும்
என்றும்
ஆடும் சிவன்
உமையாளிடம் சொல்லி அவளது ஊடலை உணர்த்தினான்

கடவுண்மாட்டு மானிடப்பெண்டிர் நயந்தபக்கம்

[தொகு]
முக்கணான் முயக்கம்வேட்ட
மக்கட்பெண்டிர் மலிவுரைத்தன்று. - கொளு
சிவனை மணாளன் ஆக்கித் தழுவ விரும்பிய மகளிர் நிலையைக் கூறுவது
அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாகம்
புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி – வரிவண்டு
பண்ணலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூரென்
உண்ணலங் கூட்டுண்டா னூர்.
பாசூர் சிவனின் பாம்பினைப் பூணூலாக அணிந்த மார்பினைப் புல்லி அவனது பல நலங்களையும் துய்ப்பேன்

குழவிக்கட் டோன்றிய காமப்பகுதி

[தொகு]
இளமைந்தர் நலம்வேட்ட
வளமங்கையர் வகையுரைத்தன்று. - கொளு
இள மைந்தரின் நலத்தைத் துய்க்க விரும்பிய வளம் மிக்க மகளிரின் நிலைமையைக் கூறுவது.
வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண்ணி யஞ்சி யலர – எரிக்கதிர்வேற்
செங்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும்
எங்கோலந் தீண்ட லினி.
வேந்தன் மகனே!
நான் விளையாடும் பந்தினை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டாய்.
உன் தந்தை செங்கோலன் என்றாலும் நீ என் அழகினைத் தீண்டாதே

ஊரின்கட் டோன்றிய காமப்பகுதி

[தொகு]
நீங்காக் காதன் மைந்தரு மகளிரும்
பாங்குறக் கூடும் பதியுரைத் தன்று. - கொளு
ஊரில் வாழும் மைந்தரும் மகளிரும் நீங்காக் காதலுடன் திளைத்தல் பற்றிக் கூறுவது
ஊடிய வூட லகல வுளநெகிழ்ந்து
ளாடிய மென்றோள் வளையொலிப்பக் – கூடியபின்
யாமநீ டாகென்ன யாழ்மொழியார் கைதொழூஉம்
ஏமநீர்க் கச்சியெம் மூர்.
உடல் ஊடலைக் காட்டும்
உள்ளம் நெகிழும்
தோள்வளை ஒலிக்கும்படிக் கூடும்
கூடிய யாமம் நீடுக என்று யாழ் போல் மிழற்றிக்கொண்டு தொழும்
இப்படிப்பட்டதுதான் என் கச்சி மூதூர்.

ஒன்பதாவது பாடாண்படலம் முற்றிற்று.