உள்ளடக்கத்துக்குச் செல்

புறப்பொருள் வெண்பாமாலை/வெட்சிப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

1. வெட்சிப் படலம்

[தொகு]
வெட்சி, வெட்சி யரவம், விரிச்சி, செலவு,
வேயே புறத்திறை யூர்கொலை, யாகோள்,
பூசன் மாற்றே, புகழ்சுரத் துய்த்தல்,
தலைத்தோற் றம்மே, தந்துநிறை பாதீ
டுண்டாட் டுயர்கொடை புலனறி சிறப்பே
பிள்ளை வழக்கே பெருந்துடி நிலையே
கொற்றவை நிலையே வெறியாட் டுளப்பட
எட்டிரண் டேனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித் துறையு மாகும்.
 1. வெட்சி,
 2. வெட்சி யரவம்,
 3. விரிச்சி,
 4. செலவு,
 5. வேய்
 6. புறத்திறை
 7. ஊர்கொலை,
 8. ஆ கோள்,
 9. பூசல் மாற்றே,
 10. சுரத்து உய்த்தல்,
 11. தலைத்தோற்றம்,
 12. தந்துநிறை
 13. பாதீடு
 14. உண்டாட்டு
 15. கொடை
 16. புலனறி சிறப்பு
 17. பிள்ளை வழக்கு
 18. துடி நிலை
 19. கொற்றவை நிலை
 20. வெறியாட்டு

என 20 துறைகள் வெட்சித் திணை

1. வெட்சி

[தொகு]
வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கன்முனை யாதந் தன்று. - கொளு
வேந்தன் ஆணைப்படியும்
ஆணை இல்லாமலும்
ஆனிரை கவர்தல் வெட்சித் திணை

வெட்சி மன்னுறு தொழில்

[தொகு]
மண்டு மெரியுண் மரந்தடிந் திட்டற்றாக்
கொண்ட கொடுஞ்சிலையன் கோறெரியக் – கண்டே
அடையார் முனையலற வையிலைவேற் காளை
விடையாயங் கொள்கென்றான் வேந்து.
எரியும் தீயில் மரத்தை வெட்டிப் போட்டது போல் சென்று
வேலேந்திய காளை
பகையரசர் போர்முனை அலறும்படி
ஆனிரைகளைக் காளைகளுடன் கொணர்க
என்று வேந்தன் ஆணையிட்டான்

வெட்சி தன்னுறு தொழில்

[தொகு]
அறாஅ நிலைச்சாடி யாடுறு தேறல்
மறாஅன் மழைத்தடங் கண்ணி – பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை
நெடுங்கடைய நேரார் நிரை.
மழைத்தடங்கண்ணி!
சாடியிலுள்ள தேறலை மறுக்காமல் ஊற்று
கடுங்கண் மறவன்
வீரக்கழல் புனைந்து
பகைவர் ஆனிரை கவரப் புறப்பட்டான்
நம் வாயிலில் அவை வந்து நிற்கும்
ஆகவே அவனுக்குத் தேறலை ஊற்று

2 வெட்சி அரவம்

[தொகு]

கலவார் முனைமேற்
செலவமர்ந் தன்று. - கொளு

பகைவரோடு போரிட விரும்பியது
நெடிபடு கானத்து நீள்வேன் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் – துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுட் காரி கலுழ்ம்.
சில்வீடு ஒலிக்கும் கானம்
வேல் கொண்ட மறவர்
காலில் செருப்பு அணிந்துகொண்டு செல்கின்றனர்
துடிப்பறை முழக்கத்துடன் செல்கின்றனர்
வெட்சிப்பூ சூடிக்கொண்டு செல்கின்றனர்
அப்போது பகைவர் ஆனிரை இருக்கும் இடத்தில் தீ நிமித்தமாக காரி என்னும் கருங்குருவி அழுகை ஒலி எழுப்புகிறது.

3 விரிச்சி

[தொகு]
வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்
கீண்டிருண் மாலைச் சொல்லோர்த் தன்று. - கொளு
விருப்பத்தின் விளைவு என்ன ஆகும் என்பதை நன்கு அறிந்தகொள்வதற்காக
இருண்டிருக்கும் மாலை வேளையில்
யாரோ பேசிக்கொள்ளும் விரிச்சிச் சொல்லை நிமித்தமாகக் கேட்பது விரிச்சி
எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற்
குழுவினங் கைகூப்பி நிற்பத் – தொழுவிற்
குடக்கணி கொண்டுவா வென்றாள் குனிவிற்
றடக்கையாய் வென்றி தரும்.
அது கழுமரம் இருக்கும் சீரூர்
இருண்ட மாலை நேரம்
கையைக் கூப்பிக்கொண்டு முற்றத்தில் நிற்கின்றனர்
எங்கோ ஒரு ஆனிரைத் தொழுவத்தில் இருப்பவள் ‘குடத்தில் கள் கொண்டு வா’ என்றாள்
இது அவர்கள் கேட்ட விரிச்சிச்சொல்.
இது வில்லாளனுக்கு வெற்றி தரும் என நினைத்துக்கொண்டனர்

4 செலவு

[தொகு]
வில்லே ருழவர் வேற்றுப் புலமுனிக்
கல்லேர் கானங் கடந்துசென் றன்று. - கொளு
வில்லேர் உழவர் வேற்றுப்புத்தை நினைத்துக்கொண்டு கற்கள் மிகுந்த கானத்தைக் கடந்து செல்வது - செலவு
கூற்றினத் தன்னார் கொடுவி விடனேந்திப்
பாற்றினம் பின்படர முன்படர்ந் – தேற்றினம்
நின்ற நிலைசுருதி யேகினார் நீள்கழைய
குன்றங் கொடுவில் லவர்.
கூற்றினம் போன்றோர் வில்லினை ஏந்தியவராய், கழுகுகள் பின் தொடர, முந்திக்கொண்டு, மூங்கில் மலையில் முன்னேறினர்.

5 வேய்

[தொகு]
பற்றார் தம்முனைப் படுமணி யாயத்
தொற்றா ராய்ந்த வகையுரைத் தன்று. - கொளு
பகைவர் ஆனிரை இருக்குமிட நிலைமையை ஒற்றர் அறிந்து வந்து சொல்வது - வேய்
நிலையு நிரையு நிரைப்புறத்து நின்ற
சிலையுஞ் செருமுனையுள் வைகி – இலைபுனைந்த
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருட்கண் வந்தார் நமர்.
நள்ளிரவில் பகைவரின் ஆனிரை இருக்குமிடம் சென்று,
பசுக்கள், அவற்றைக் காப்போர் எண்ணிக்கை ஆகியவற்றை நம் உறவாளிகள் அறிந்து வந்துள்ளனர்.

6 புறத்திறை

[தொகு]
நோக்கருங் குறும்பி னூழையும் வாயிலும்
போக்கற வளைஇப் புறத்திறுத் தன்று. - கொளு
ஊரின் நுழைவாயிலை வளைத்துக்கொண்டு புறத்தே தங்குதல்
உய்ந்தொழிவா ரிங்கில்லை யூழிகட் டீயேபோல்
முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத் – தந்தமரின்
ஒற்றனா னொற்றி யுரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமற் சூழ்ந்து.
பிழைக்கப் வோவது யாருமில்லை
ஊழித் தீப் போல் தாக்கும் எண்ணம் கொண்டனர்
உள் நிலைமையை ஒற்றால் அறிந்து வந்தனர்
ஊரிலுள்ளோர் யாரும் வெளியில் செல்லாதவாறு வளைத்துக்கொண்டனர்

7 ஊர்கொலை

[தொகு]
விரைபரி கடவி வில்லுடை மறவர்
குரையழ னடப்பக் குறும்பெந் தன்று.
வில் மறவர் குதிரையில் சென்று ஊரே ஓலமிடும்படி வீடுகளுக்குத் தீ மூட்டினர்
இகலே துணையா வெரிதவழச் சீறிப்
புகலே யரிதென்னார் புக்குப் – பகலே
தொலைவிலார் வீழத் தொடுகழ லார்ப்பக்
கொலைவிலார் கொண்டார் குறும்பு.
முரண்பாட்டைத் துணையாகக் கொண்டவர்
எரி தவழும்படிச் சீறிப் பாய்ந்தனர்
பட்டப் பகலிலேயே ஊரிலுள்ளோர் தோற்றனர்
ஊரைக் கைப்பற்றிக் கொண்டனர்

8 ஆகோள்

[தொகு]
வென்றார்த்து விறன்மறவர்
கன்றோடு மாதழீ இயன்று. -கொளு
வென்ற மறவர் கன்றுகளோடு ஆனிரைகளை வளைத்தல்
கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால்
நெடுவரை நீள்வேய் நரலும் – நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை.
புலிகளின் கூட்டம் போலத் தாக்கினர்
மூங்கில் ஒலி கேட்கும் ஊரைத் தாக்கினர்
ஆனிரைகளைக் கைப்பற்றினர்
வேல் மறவர் அவற்றை நிலைநிறுத்தினர்

பூசன்மாற்று

[தொகு]
கணம்பிறங்கக் கைக்கொண்டார்
பிணம்பிறங்கப் பெயர்த்திட்டன்று. - கொளு
கூட்டமாக ஆனிரைகளைக் கைப்பறியவர் தடுத்தோரைப் பிணமாக்கி ஆனிரைகளை ஓட்டிச் செல்லல்
சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் – தாழ்ந்த
குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனாயா ரெய்த
புலவுக் கணைவழிபோய்ப் புள்.
வளைத்த ஆனிரைகளை ஓட்டிச் சென்றனர்
தடுத்தோரை வீழ்த்தினர்
அம்பெய்து வீழ்த்தினர்

சுரத்துய்த்தல்

[தொகு]
அருஞ்சுரத்து மகன்கானத்தும்
வருந்தாம னிரையுய்த்தன்று. - கொளு
ஆனிரைகள் வருந்தாமல் பாலைநிலக் காட்டில் ஓட்டிச் செல்லுதல்
புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் – தன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ நிரை.
உடைமையாளர் தாக்க வருவது கண்டும்
ஆனிரை புல்லை மேய்ந்து அசை போட்டுக்கொண்டும்
பசுவும் காளையும் புணருமாறு விட்டுக்கொண்டும்
மலை நிழலில் தங்க வைத்தனர்.

தலைத்தோற்றம்

[தொகு]
உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று - கொளு
விரும்பும் இளையோன் ஆனிரை இனத்துடன் வருதல் கண்டு அவன் கிளைஞர்கள் மகிழ்தல்
மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லும்
மையணற காளை மகிழ்துடி – கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
உய்த்தன் றுவகை யொருங்கு.
ஆனிரைகள் முன்னே சென்றன
இளந்தாடிக் காளை பின்னே வந்தான்
கிளைஞர் மகிழ்வுடன் துடியை முழக்கினர்
எயிற்றியர் தன் கைகளைத் தாவாயில் வைத்துக்கொண்டு மகிழ்வுடன் பார்த்தனர்
நன்னிமித்தமாக அவர்களின் இடக்கண் துடித்தது

தந்துநிறை

[தொகு]
வார்வலந்த துடிவிம்ம
ஊர்புகல நிரையுய்த்தன்று. - கொளு
துடி முழக்கத்துடன் ஊரார் மகிழுமாறு மறவன் ஆனிரைகளை ஓட்டிக்கொண்டு வந்தது
தண்டா விருப்பின டன்னை திலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று – கண்டாள்
அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி
மணிநிரை மல்கிய மன்று.
எயிற்றி தணியாத விருப்பினளாய்க் கண்டாள்
ஆனிரை ஊர் மன்றில் நிறைந்ததைக் கண்டாள்
முறுவலுடன் கண்டாள்
மணக்கும் இலை மலிந்த மறவன் மாலை வாழ்க என்று வாழ்த்தினாள்

பாதீடு

[தொகு]
கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரை
அவரவர் வினைவயி னறிந்தீந் தன்று. - கொளு
கவர்ந்துவந்த ஆனிரைகளை ஊரார் பகிர்ந்துகொண்டனர்
செயலாற்றிய பாங்கிற்கு ஏற்ப, பகிர்ந்துகொண்டனர்
ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் – விள்வாரை
மாறட்ட வென்றீ மறவர்தஞ் சீறூரிற்
கூறிட்டார் கொண்ட நிரை.
வாட்போர் செய்தவர்
ஒற்று பார்த்து வந்து சொன்னவர்
புள் நிமித்தம் சொன்னவர்
எதிர்த்தவரைத் தடுத்து வென்ற மறவர்
முதலானோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தனர்

உண்டாட்டு

[தொகு]
தொட்டிமிழுங் கழன்மறவர்
மட்டுண்டு மகிழ்தூங்கின்று. - கொளு
வீரக்கழல் அணிந்த மறவர் மட்டுக்கள் பருகி மகிழ்ந்தல்
இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி
களிகொண்ட நோக்கங் கவற்றத் – தெளிகொண்ட
வெங்கண் மலிய விளிவதுதொல் வேற்றார்மேற்
செங்கண் மறவர் சினம்.
பல்லை இளித்துக்கொண்டு இனிமையாகப் பேசும் எயிற்றியின் களிப்புப் பார்வையால்
மறவர் வேற்றார் மேல் கொண்ட சினம் தணியுமா

கொடை

[தொகு]
ஈண்டியநிரை யொழிவின்றி
வேண்டியோர்க்கு விரும்பிவீசின்று.
தொகுத்துக் கொண்டுவந்த ஆனிரைகளை ஒளிவு மறைவு இல்லாமல் வேண்டியவர்களுக்கு வழங்குதல்
அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண்
வெங்கட்கு வீசும் விலையாகும் – செங்கட்
செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி
வரிச்சிலையாற் றந்த வளம்.
கிணையன்
துடியன்
விறலி
பாணன்
கள் விற்றவள்
முதலானோர்க்கு
வில் மறவர் போர் முனையில் கொண்டுவந்த ஆனிரைகளை வழங்கினர்.

புலனறி சிறப்பு

[தொகு]
வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத்
தம்மினுமிகச் சிறப்பீந்தன்று.
போருக்குச் சென்று முற்றுகை இட்டிருந்தபோது
ஊருக்குள் சென்று நிலைமை அறிந்து வந்து புலன் கூறியவருக்கு,
மிகுதியாக வழங்குதல்
இறுமுறை யெண்ணா திரவும் பகலும்
செறுமுனையுட் சென்றறிந்து வந்தார் – பெறுமுறையில்
அட்டுக் கனலு மயில்வேலோ யொன்றிரண்
டிட்டுக் கொடுத்த லியல்பு.
தனக்கு அறிவு நேருமே என்று எண்ணாமல்
இரவிலும் பகலிலும்
புலன் சொன்னவர்க்கு,
போரிட்டவரைக் காட்டிலும் ஒன்றிரண்டு கூடுதலாய் கொடுத்தனர்

பிள்ளைவழக்கு

[தொகு]
பொய்யாது புண்மொழிந்தார்க்கு
வையாது வழக்குரைத்தன்று.
புள் நிமித்தம் பார்த்துப் பொய்யாமல் சொன்னவர்க்கு, குறை ஏதும் வைக்காமல் ஆனிரை வழங்குதல்
புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புண்ணலம்
பல்லா ரறியப் பகர்ந்தார்க்குச் – சொல்லாற்
கடஞ்சுட்டவேண்டா கடுஞ்சுரையா னான்கு
குடஞ்சுட் டினத்தாற் கொடு
ஆனிரை கவரச் சென்றபோது
புள் நிமித்தம் பார்த்துச் சொன்னவர்க்கு
நான்கு குடம் பால் கறக்கும் பசு
நான்கு வழங்குக - என்றான்

துடிநிலை

[தொகு]
தொடுகழன் மறவர் தொல்குடி மரபிற்
படுக ணிமிழ்துடிப் பண்புரைத்தன்று.
மறவர் போரிடும்போது துடி முழக்குபவன் பண்பினை உரைத்தல்
முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வர்
எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு – வந்த
குடியொடு கோடா மரபினோற் கின்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு.
இவன் முந்தைக்கு முதல்வன் துடியன்
இவன் தந்தை என் தந்தைக்குத் துடியன்
இவன் எனக்குத் துடியன்
இவுக்கும் இவன் மரபினர்க்கும் தேறல் வார்த்துத் தாருங்கள்

கொற்றவைநிலை

[தொகு]
ஒளியினீங்கா விறற்படையோள்
அளியினீங்கா வருளுரைத்தன்று.
கொற்றவை என்பவள் வெற்றித் தெய்வம்
இவள் அருளைக் கூறுதல்
ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை – மீளி
அரண்முருங்க வாகோள் கருதி னடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்.
கொற்றவை ஆளியை மன் மணிக்கொடியில் கொண்டவள்
கையில் கிளி வைத்திருப்பாள்
கூளிப்படை கொண்டவள்
மீளி ஆனிரை கொள்ளச் செல்லும்போதெல்லாம் தான் முன்னே சென்று வெற்றியைத் தேடித் தருவாள்
அவளுக்கு விழா எடுப்போம்

வெறியாட்டு

[தொகு]
வாலிழையோர் வினைமுடிய
வேலனொடு வெறியாடின்று.
தொடங்கிய செயல் நிறைவேற முருகனொடு வெறி ஆடுதல்
காணி லரனுங் களிக்குங் கழன்மறவன்
பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண் – வாணுதல்
தான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப
வேன்முருகற் காடும் வெறி.
கழல் அணிந்த மறவன்
மென்முலை வாணுதலுக்கு முருகேற்றி
மாலை அணிவித்து
வேலனுக்காக அவளுடன் வெறி ஆடுவான்

முதலாவது வெட்சிப்படலம் முற்றிற்று.