பெருங்கதை/2 13 குறிக்கோட் கேட்டது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

2 13 குறிக்கோட் கேட்டது

குறிக்கோள்[தொகு]

மைந்தரு மகளிரு மலைவயி னாடி
வெந்திறல் வேந்தன் வீழ்பவை காட்டி
ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்
கண்ணுறக் கவவிக் கலந்து விடாஅ
அருமைக் கொத்த வஞ்சுவரு காப்பின் 5
உரிமைச் சுற்றம் பின்பட வுய்த்துத்
தீதற வெறியுந் தெரிபொருட் கேள்வி
மூதறி முனிவன் பள்ளி முன்னர்

சோலை வளம்[தொகு]

அரணம் வேண்டா தச்ச நீக்கி
வருண மொன்றாய் மயங்கிய வூழிச் 10
சிறுமையும் வறுமையுந் தின்மையும் புன்மையும்
இறுபும் புலம்பு மின்மையு மிரக்கமும்
அறியு மாந்தரி னுறுவளங் கவினி
ஐந்திணை மரனும் பைந்தளிர்க் கொடியும்
தந்துணைச் செல்வந் தலைத்தலை பெருகி 15
அருமதி முனிவர் நிருமிதம் போல
அழல்கண் ணகற்றி நிழன்மீக் கூரி
நீர்புக் கன்ன நீர்மைத் தாகி
ஊர்புக் கன்ன வுள்ளுறப் புறீஇ
மலர்த்தவி சடுத்துத் தளிர்க்குடை யோங்கிப் 20
பூங்கொடிக் கவரி புடைபுடை வீசித்
தேங்கொடிப் பறவையுந் திருந்துசிறை மிஞிறும்
விரும்புறு சுரும்பும் பெரும்பொறி வண்டும்
குழல்வாய்த் தும்பியுங் குயிலுங் கூடி
மழலையம் பாடலின் மனம்பிணி யுறீஇ 25
முதிர்கனி யமிர்த மெதிர்கொண் டேந்தி
மேவன பலபயின் றீவன போன்ற
பயமர மல்லது கயமர மில்லாக்
காவினு ளிரீஇக் காவல் போற்றி

உதயணன் முனிவரைக் காணுதல்[தொகு]

மாதவ முனிவற்கு மன்னவன் காணும் 30
கரும முண்மை மரபிற் கிளப்பப்
பெருங்குலப் பிறப்பினு மரும்பொருள் வகையினும்
இருங்கண் ஞாலத் தின்னுயி ரோம்பும்
காவல் பூண்ட கடத்தினும் விரும்பி
இமையோ ரிறைவனை யெதிர்கொண் டோம்பும் 35
அமையா தீட்டிய வருந்தவ முனிவரின்
வியலக வேந்தனை யியல்புளி யெதிர்கொண்
டணித்தகு பள்ளி யசோகத் தணிநிழல்
மணித்தார் மார்பனை மணன்மிசை யடுத்த
பத்திப் பன்மலர்ச் சித்திரங் குயின்ற 40
இயற்றாத் தவிசின்மிசை யிருக்கை காட்டக்
கவற்சி மனத்தொடு காண்டக விருந்ததன்
தாண்முதல் சார்ந்து தோண்முதற் றோழனை
உள்ளி யுள்ளழிந் தொழுகுவரைத் தடக்கையின்
வெள்ளிதழ் நறுமலர் வீழப் பையாந்து 45
நீனைப்புள் ளுறுத்தவந் நிலைமை நோக்கி
இனத்தி னிரித்தாங் கெவ்வகை நிமித்தமும்
மனத்தி னுற்றவை மறையின் றுணர்தலிற்
றுனிவுகொண் மன்னற்கு முனிவன் கூறும்

முனிவன் கூறல்[தொகு]

பசுமரஞ் சாரந்தனை யாதலின் மற்றுநின் 50
உசிர்ப்பெருந் தோழ னுண்மையுங் கூட்டமும்
கண்ணகன் றுறைந்த கடிநா ளமையத்துத்
திண்ணி தாகுந் தெளிந்தனை யாகுமதி
விரும்பிநீ பிடித்த வெண்மலர் வீழ்ச்சி
பொருந்திநீ யளக்கும் பொருவில் போகத் 55
திடையூ றுண்மை முடியத் தோன்றும்
வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம் படாது
தாழ்ந்த கச்சைநின் றாண்முதற் றங்கலிற்
பிரிந்த போகம் பெயர்த்தும் பெறுகுவை
நிலத்துமிசை யிருந்தனை யாதலின் மற்றுநின் 60
தலைப்பெரு நகரமொடு நன்னாடு தழீஇக்
கொற்றங் கோடலு முற்றிய தாகி
முன்னிய நின்றவை முடியத் தோன்றுமென்
றெண்ணிய விப்பொரு டிண்ணிதி னெய்தும்
பெறும்பய மிதுவெனப் பிழைத்த லின்றி 65
உறும்பெருஞ் சாரண ருரைவே றுண்மையும்
இறுவா யெழுச்சியு மித்துணை யளவென
உறுதவ முனிவ னுள்விரித் தொழியாது
வத்தவர் பெருமகன் றத்துற வகலக்
கழிபொரு ளெதிர்பொருட் கேது வாக 70
அழிபொரு ளன்றி யாகுபயங் கூறத்

உதயணன் உவத்தல்[தொகு]

தக்கது மன்ற மிக்கோன் கூற்றென
நட்புடைத் தோழனை நண்ணி யன்னதோர்
உட்புகன் றெழுதரு முவகைய னாகிப்
பள்ளி மருங்கிற் பாவங் கழீஇ 75
வள்ளி மருங்குல் வாசவ தத்தையைக்
கூடுத லானாக் குறிப்பு முந்துறீஇ
ஆடுத லூற்றமொ டமர்ந்தன னுவந்தென்

2 13 குறிக்கோட் கேட்டது முற்றிற்று.