உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/தாமரைக்குளம்

விக்கிமூலம் இலிருந்து



10. தாமரைக்குளம்

வலைஞர்பால் விடைகொள்ளும் ஓரிரு நாழிகைக்குள் அந்தணர் குடியிருப்பை அடைந்துவிடலாம் எனினும், இடை வழியில் உள்ள தாமரைக் குளக்கரையிலும், குவளை மலர்க் குளக்கரையிலும், பெரும்பாணனைச் சிறிது நேரம் இருக்க வைத்து, அவற்றின் இயற்கை அழகை அனுபவித்து, இன்புறச் செய்துள்ளார் புலவர்.

வலைஞர் குடியிருப்பிற்கு அணித்தாக ஒரு குளம், வாளையும், வராலும் வளரும் அக்குளக்கரையில், மீன் பிடிப்பதில் வல்லவர் வரிசையாக அமர்ந்திருப்பர். தூண்டில் முள்ளில் இடுவதற்கான பச்சை இறைச்சி இருக்கும் தோற்பை, அவர் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்; கையில் நீண்ட மூங்கிற் கோலாலான தூண்டில், மூங்கில் முனையில் வலித்து முடியப்பட்ட மெல்லிய வலிய கயிறு: கயிற்றின் மறு முனையில் உட்புறம் வளைந்த தூண்டில்முள்; அம்முள்ளில், அது முள் எனத் தெரியவாறு முழுமையாக் மறையும்படி கோத்து வைக்கப்பட்ட இறைச்சித் துண்டு; நீருள் போடப்படும் அத்தூண்டிலை, அவர் கைகள் விட்டு விட்டு அசைத்துக் கொண்டிருக்கும்.

திடுமெனத், தூண்டிலை யாரோ பற்றி மறுபுறம் வலிந்து ஈர்ப்பது போன்ற உணர்வு; உடனே அவர்முகம் மலர்ந்துவிடும். தூண்டிலில் பருமீன் அகப்பட்டுக்கொண்டது அறிந்து, தூண்டிலை விரைந்து வலித்துத் தூக்க, தூண்டில் முள்ளில் அகப்பட்டுக் கொள்ளாமலே, மிகவும் பக்குவமாகத், தூண்டில் முள்ளில் கோத்து வைத்த இறைச்சியை மட்டும் கவர்ந்து சென்றுவிட்டது காண, அவர் பெரிதும் ஏமாற்றம் அடைவர். மீன் பிடிப்பதில் அவர் வல்லவர் என்றால், அக்குளத்து மீன்கள் அவரைவிடத் திறமை வாய்ந்தவை எனினும், வலைஞர், உள்ளம் சோர்ந்து விடாது, உறுதியோடு இருந்து, வரால்களை வேண்டுமளவு அகப்படுத்திச் செல்லவே முயற்சிப்பர்.

தூண்டில் முள்ளில் அகப்பட இருந்ததிலிருந்து, தப்பிப் பிழைத்த மீன் மருட்சியுற்றுப்போகும். அந்நிலையில். குளக் கரையில் செழுமையாக வளர்ந்திருக்கும் பிரம்புக் கொடிகளின் நிழல், மெல்ல அலைவீசிக் கொண்டிருக்கும் நீருள் தெரிவதைக் காணும் அம்மீன்கள், அவற்றையும் தூண்டிலாகக் கருதி, அஞ்சி மீண்டும் மருளும். இவ்வாறு மருட்சி மேல் மருட்சியுற்றுப்போகும் அவை, தம்மை அறியாமல், தாமாகவே சென்று தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளும்.

குளத்தின் ஒரு துறையில், அவ்வாறு சிலர் மீன் பிடித்திருக்க, வேறு துறையில், பெருநீரில் குதித்து நீந்த வல்லவர் சிலர், நீந்தி மகிழ்வர். இவை அனைத்திற்கும் மேலாகக், குளமே தீப்பற்றி எரிகிறதோ என எண்ணுமளவு, குளம் நிறைய, செந்தாமரை மலர்கள், இலை தெரியாவாறு மலர்ந்திருக்கும். திருமகளும் கலைமகளும் விரும்பி அமரும் மலர்களாதலின், பெரும்பாண! அம்மலர்க் காட்சியைக் கண்டு மகிழ்வதல்லது பறித்துச் சூட விரும்பாதீர்கள்" என்றார்.

அடுத்து ஒருகுளம். ஆங்கு மீன் பிடிப்பாரும் இலர்: நீந்தி மகிழ்வாரும் இலர்; ஆயினும், அது தாமரைக் குளத்தினும் அழகுடையது. அதில், செவ்வரக்கை உருக்கி வார்த்தாற்போலும் செந்நிறம் வாய்ந்த செங்குவளையும், இளநீல நிறம் காட்டும் கருங்குவளையும், மற்றும், வேறு பன்னிற மலர்களும் மலர்ந்து மணம் வீசும். அக்குளத்தைக் காணும் உன் அகக் கண்முன், பெரும்பாண! மலைநாட்டைக் கடந்து வந்தபோது, பெருமழை பெய்து ஓய்ந்த கருமுகில் அகன்ற வானில், ஞாயிறு தோன்ற, அஞ்ஞாயிற்றின் கதிர்கள் ஊடறுத்துப் பாய எழுநிறம் காட்டித் தோன்றிய வானவில் காட்சி தோன்றி, அவ்வின்ப நிலையில், நீ மகிழ்ந்து போவாய் அந்நிலையில், அம் மலர்களைப் பறித்திருப்பவர், திரையன் புகழ்பாட வந்திருக்கும் புதியவர் என அறிந்து உன்பால் அன்புகொண்டு, மலர்களுள், அன்றலர்ந்த மலர்களாகத் தேர்ந்து தருவர். மணம் நாறும் அம் மலர்களை மாலையாகத் தொடுத்து அணிந்துகொண்டு, ஞாயிறு தோன்றும் விடியற்போதில் அந்தணர் குடியிருப்புள் புகுவீர்களாக" என்றார்.


"பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த
நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நான் கொளீஇக்
கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்
பொதிஇரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பின் நடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங்கயம் தீப்பட மலர்ந்த
கடவுள் ஒண்பூ அடர்தல் ஓம்பி,
உறைகால் மாறிய ஓங்குயர் நனந்தலை
அகலிடு வானத்துக் குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம்நீடி
முரண்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநாள் அமைத்துப் பிணையினிர் கழிமின்"

(283—296)

உரை

பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்—வேகாத புதிய இறைச்சி இடப்பட்ட, தோளில் மாட்டித் தொங்கும் பசிய தோற்பையினை உடைய, கோள்வல் பாண் மகன்—மீனைத் தப்பாமல் பிடிக்க வல்ல பாணர் குடியில் பிறந்தவனுடைய, தலை வலித்து யாத்த—முனையில் இறுக்கிக் கட்டிய, நெடுங்கழைத் தூண்டில் நடுங்க—நீண்ட மூங்கிற் கோலாலான தூண்டில் நடுங்கும்படி, நாண் கொளீ இயகொடுவாய் இரும்பின் மடிதலை புலம்ப—கயிற்றனாலே கட்டப்பட்ட வளைந்த முனையையுடைய இரும்பாலான தூண்டில் முள், தன்னிடத்தே கோத்து வைக்கப்பட்ட இரை கவரப்பட்டு தனித்து வறிதே கிடக்க; பொதி இரை கதுவிய—தூண்டிலில் பொதிந்து வைக்கப்பட்ட இரையைக் கெளவிக்கொண்டு பிழைத்து ஓடிய, போழ்வாய்வாளை —பிளந்தபெரிய வாயையுடைய வாளைமீன்; நீர் நணிப் பிரம்பின்—நீர் அணித்தே முளைத்திருக்கும் பிரம்புக் கொடியின், நடுங்கு நிழல் வெரூஉம்—அசையும் நீரில் தெரிவதால் அசையும் நிழலுக்கு அஞ்சும், நீத்து உடை நெடுங் கயம்—நீந்தி விளையாடுதற்கு உரிய பெரிய குளத்தில், தீப்பட மலர்ந்த கடவள் ஒண்பூ—குளம் தீப்பட்டு விட்டதே என மருளுமளவு நிறைய மலர்ந்த கடவுள் விரும்பும் சிறந்த தரமரை மலரை, அடைதல் ஓம்பி—பறித்துச் சூடுதலைக் கைவிட்டு, உறை கால் மாறிய—மழை பெய்தலைக் கைவிட்ட, ஓங்கு உயர் நனந்தலை அகன்ற வானத்து—ஓங்கி உயர்ந்த பரந்த இடம் அகன்ற வானத்தில் தோன்றும், குறைவில், ஏய்ப்ப—விட்டு விட்டுக் காட்சி தரும் வானவில்லை ஒப்ப, அரக்கு இதழ் குவளையொடு, நீலம் நீடி—செவ்வரக்குப் போன்ற செவ்விதழ்களையுடைய குவளை மலரோடு, நீல மலரும் மலர்ந்து; முரண்பூ மலிந்த
முதுநீர்ப் பொய்கை—நிறத்தால் வேறுபட்ட பல்வேறு மலர்களும் நிறைய மலர்ந்த, வற்றாத பழைய நீர் நிறைந்த குளத்தில், குறுநர் இட்ட கூம்பு விடு பன்மலர்—பூக் கொய்வார் உங்கள் முன்னே குவித்த, அரும்பு மலர்ந்த பல மலர்களை; பெருநாள் அமையத்து—பெருமைக்குரிய விடியற் போதில், பிணியினிர் கழிமின்—சூடிக்கொண்டு செல்வீர்களாக.

10-1 அந்தணர் அளிக்கும் விருந்து

வலைஞர் குடியிருப்பின் நீங்கி, திரையன் அரசிருக்கையாம் கச்சி நோக்கிச் செல்லும் பெரும் பாணன், இடையில், அந்தணர் குடியிருப்பையும், காஞ்சி நாட்டுக் கடற்றுறை நகராம் நீர்ப்பாயல் துறையையும், வணிகர் வாழிடங்களையும், மாவும், பலாவும், வாழையும், தென்னையும் மலிந்த பெருமரச் சோலைகளையும், தண்டலை உழவர் உறையுள்களையும் கடந்து சென்ற பிறகே கச்சிநகர் அடைவராதலின், கச்சி நகர் பற்றி விளக்குவதன் முன்னர், இடைவழிச் சிறப்புகளை விளக்கத் தொடங்கி, முதற்கண் அந்தணர் குடியிருப்பு பற்றிய விளக்கத்தை மேற் கொண்டார்.

அந்தணர், தம் உற்றார் உறவினர் பால் அன்பு கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டிருப்பதினாலேயே அந்தண்ர் என அழைக்கப்படுவர். அதனால், அது, அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் தெற்றெனப் புலப்பட விளங்கும். அவர் மனையின் முன்புறத்தில் போடப்பட்டிருக்கும் பந்தலின் குறுகிய காலில் கட்டப்பட்டிருக்கும் கன்று ஒன்றே, அவர், எத்துணை அருள் நிறை உள்ளம் உடையவர் என்பதை விளக்கிவிடும். தாய்ப்பசு அளிக்கும் பால் அவ்வளவையும் தாமே கறந்து கொண்டு விடாது, கன்று செழுமையாக வளர்வதற்குத் தேவைப்படுமளவு, அதைக் குடிக்கவிட்டு, எஞ்சிய பாலையே அவர் கறந்து கொள்வர். அதை, அக்கன்றின் உடல் செழிப்பே உணர்த்தி விடும்.

அவர் வீடுகள், அவர்தம் புறநலனைப் புலப்படுத்தும் வகையில், நாள்தோறும், பசும் சாணமும் செம்மண்ணும் கொண்டு மெழுகப்பட்டுத் தூய்மையுடையதாக இருக்கும். மனையின் அகத்தே அவர் வழிபடு தெய்வங்களின் படிவங்கள் நிறுவப்பட்டிருக்கும். அந்தணர் புலால் உணவைவெறுப்பவர். அதனால், பிறர் மனைகளில், அது குறித்து வளர்க்கப்படும் கோழியை அந்தணர் குடியிருப்பில் காணல் இயலாது. உலகத்து மக்கள் அறவழி வாழ மறை ஓதிக்காவல் புரிபவர் அந்தணர்; அதனால், அவர் உடைமைகளைக் காக்கும் பொறுப்பு அவர்க்கு இல்லை; அதனால் காவல் கருதி நாய் வளர்ப்பது அவர்க்குத் தேவையற்றது. மேலும், நாய், தான் உண்ணும் உணவு கிடைக்கும் இடத்திலேயே சுற்றி சுற்றித் திரியும். அந்தணர் இல்லத்தில் அது விரும்பும் உணவு கிடைக்காது. அதனால் நாய்களும், அந்தணர் சேரியை அணுகுவதில்லை.

ஆங்கு, வேத ஒலி ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும். மறையவர், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மறை ஓதுவர், காலை முதல் மாலை வரை இடைவிடாமலும் ஓதிக் கொண்டிருப்பவரோ என ஐயுற்று நோக்கினால், அவ்வாறு ஓயாமல் ஒதுவது அந்தணர் அல்லர், அந்தணர் மனைகள் மீதும், மரக் கிளைகள் மீதும் அமர்ந்திருக்கும் கிளிக்கூட்டங்கள் தான், கூறியது கூறும் கிளிப்பிள்ளை என்ற முது மொழியை மெய்ப்பிக்கும் வகையில், அந்தணர் ஓதுவது கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொண்ட அம் மறையை, மீண்டும் மீண்டும் ஓதிக்கொண்டிருப்பது புலப்படும். நான்மறையை, வரும் புதியவர்க்கெல்லாம் பிழையறக் கற்பிக்குமளவு கிளிகளும் மறை ஓதும் என்றால், அக்கிளிகள் பயில மறை ஓதும் அந்தணர் பெருமையைக் கூறவும் இயலுமோ!

இவ் வகையால், அந்தணர் இல்லத்து ஆடவர் சிறந்து விளங்குவது போலவே, அவ்வில்லத்து மகளிரும் நனி சிறந்து விளங்குவர். வானம் பெரிது; அதில் உலா வரும் மீன்களும் எண்ணிறந்தன; ஆயினும், அவற்றுள், உலகோரால் வழி படத்தக்கது, உற்று நோக்குவார்க்கு மட்டுமே புலப்படும் சிறு மீனாம், அருந்ததியாகும்; அது போல் இளையரும், முதியவரும், ஆடவரும் மகளிருமாகப் பலர் கூடி நடத்தும் இல்லற வாழ்க்கையில், மனைவியின் பங்கு சிறிதே என்றாலும், அருந்ததி நிகர் கற்புடைமையால் அவள் அம்மனைக்கு ஒளி தந்து நிற்பாள்.

கற்பாம் அக அழகு வாய்க்கப் பெற்ற அவள் புற அழகிலும் குறையற்றிருப்பாள். ஒளி வீசும் நுதல் அழகு போலும் இயற்கை வனப்போடு, கைவளை அணிதல் முதலாம் செயற்கை அழகும் உடையவள் அவள். அது மட்டுமன்று: செயல் திறமும் வாய்க்கப் பெற்றவள். அரிசியும், காய்களும் நல்லனவாகத் தேர்ந்து கொண்டு, உரிய காலத்தில் அடுக்களை புகுந்து, சுவை மிகச் சமைத்து, அன்புடன் படைப்பதிலும் அவள் வல்லவள். அரிசி வகைகளுள் சிறந்ததான கருடன் சம்பா அரிசியால் சோறு ஆக்கி, மாதுளை வகைகளில் கறிக்கு உதவும் கொம்மட்டி மாதுளங்காயை வகிர்ந்து, ஆவின் பால் காய்ச்சி ஆக்கிய நல்ல மோரைக் கடைந்து எடுத்த வெண்ணெயில், சிவந்து பதமுற வதக்கி, மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டுக் கறி சமைத்து, வற்றி இலை உதிர்ந்து போய் விடாது தழைத்துப் பூத்துக் குலுங்கும் வளமான மரத்திலிருந்து பறித்துக் கொணர்ந்த இளம் பிஞ்சுகளாகிய மாவடுவைப் பிளந்து போட்டு, உப்பும் பிறவும் இட்டு ஊற வைத்து ஊறுகாய் செய்து, வரும் விருந்தினர்களை முக மலர்ந்து வரவேற்று, அவர் அகம் மலர உணவு படைக்கும் உயர்வுடையவள் அவள். பெரும்பாண! வழியில் அந்தணர் குடியிருப்புக்குத் தவறாது சென்று, அவர் அளிக்கும் அரிய அறு சுவை உணவுண்டு செல்வாயாக" என்றார்.


"செழும் கன்று யாத்த சிறுதாள் பந்தர்
பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்,
மனை உறை கோழியோடு ஞமலி துன்னாது,
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின்,
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல்,
வளைக்கை மகடூ உ, வயின் அறிந்து அட்ட
சுடர்க் கடைப் பறவைப் பெயர்ப் படு வத்தம்,
சேதா நறுமோர் வெண்ணையின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழோடு, கறிகலந்து
கஞ்சக நறு முறி அளை இப், பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகை படப் பெறுகுவிர்"

(297-310)

உரை:

செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்—வளமான கன்றைக் கட்டின குறுகிய கால்களையுடைய பந்தலினையும், பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர்—பசும் சாணத்தால் மெழுகிய, தெய்வங்களின் படிவங்கள் உள்ள, நல்ல வீடுகளையுடைய, மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது—மனைகளிலே வளரும் கோழிகளுடன் நாயும் நெருங்காமல், வளைவாய் கிள்ளைமறை விளி பயிற்றும்-வளைந்த வாயையுடைய கிளி, வேதத்தைப் பலகால் ஓதும், மறை காப்பாளர் உறைபதி
சேப்பின்—வேதக் காவலராகிய அந்தணர் வாழும் ஊரில் தங்குவீராயின், பெருநல் வானத்து வடவயின் விளங்கும்—பெரிய நல்ல வானத்தில், வடபகுதியில் ஒளிவிடும், சிறு மீன், புரையும் கற்பின்—சிறிய மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறு நுதல் வளைக்கை மகடூஉ—நல்ல மணம் நாறும் நெற்றியையும், வளை அணிந்த கைகளையும் உடைய பார்ப்பினி, வயின் அறிந்து அட்ட—பதம் அறிந்து ஆக்கிய, சுடர்க் கடை—ஒளி வீசும் முனைகளை யுடைய, பறவைப் பெயர்ப் படு வத்தம்—கருடன் என்ற பறவையின் பெயர் பெற்ற கருடன் சம்பா என்ற நெல் சோற்றினையும், சேதா நறு மோர் வெண்ணையின்—சிவந்த பசுவின் மணம் மிக்க மோரைக் கடைந்து கொண்ட வெண்ணையில் வெந்ததினால், உருப்புறு மாதுளத்து பசுங்காய்ப் போழோடு—சிவந்த மாதுளங்காயின் வகிரோடு, கறி கலந்து—மிளகுப் பொடி கலந்து, கஞ்சிக நறுமுறி அளை இ—கருவேப்பிலையின் நல்ல இலைகளைக் கலந்து ஆக்கிய கறியையும்; பைந்துணர் நெடுமரக் கொக்கின்—பசிய இளந்தளிர்களையுடைய உயர்ந்த மாமரத்தின், நறு வடி விதிர்த்த தகை மாண் காடியின்-நல்ல இளம் பிஞ்சுகளைப் பிளந்து போட்ட உண்ணும் தகுதியால் மாண்புற்ற ஊறுகாயினோடு, வகை படப் பெறுகுவிர்—வகை வகையாகப் பெறுவீர்கள்.