பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/நீர்ப்பாயல் துறைமுகப்பட்டினம்
11. நீர்ப் பாயல் துறைமுகப் பட்டினம்
பல்லவர் காலம் தொட்டு மாமல்லபுரம் என வழங்கப் பெறும் துறைமுகப் பட்டினம், திரையன் ஆண்டிருந்த சங்க காலத்தில் நீர்ப்பாயல் என அழைக்கப்பட்டது. அந்தணர் குடியிருப்பில் அறுசுவை விருந்துண்டு விடை கொள்ளும் பெரும்பாணன், அடுத்துப் புக இருப்பது, அந்தணர் குடியிருப்பிற்கு அணித்தாக இருக்கும் அத்துறைமுகப் பட்டினமே யாதலின், அதன் வணிகவளம், அதன்கண் வாழ் மக்கள் செல்வ வளம், பெரும்பாணன் ஆங்குப் பெறலாகும் சிறப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து விளக்கத் தொடங்கினார்.
நீர்ப்பாயல் தறை, அந்தணர் குடியிருப்பிற்கு நனிமிக அண்மையில் இருக்கும். அங்கு வந்து நிற்கும் மரக்கலங்களின் கூம்புகள் அந்தணர் குடியிருப்பிலிருந்து நோக்கினாலும் நன்கு புலப்படும். மேலும் அத்துறை நீரில் மூழ்கி மீன் கவரும் பறவைகள், அந்தணர் குடியிருப்பில் அந்தணர் நட்டு வைத்திருக்கும் வேள்விக் கம்பத்தில் அமர்ந்தே இரையுண்ணும். அத்துணை அண்மையது அது.
அப்பட்டினத்து வணிகர் செல்வச் செருக்கில்மிகுந்தவர்; அவர் வீட்டு மகளிர் புனலாடச் செல்லும்போது, தாம் அணிந்திருக்கும் மகரக்குழை முதலாம் பொன் அணிகள் விலை மிகுந்தவை; அவற்றை வீட்டிலேயே கழற்றிக் காப்பிட்டுச் செல்லவேண்டும் என்ற கருத்தின்றி அவற்றை அணித்தவாறே நீர் ஆடச் செல்வர். தோழியரோடு சென்று மணல் வீடு கட்டியும், மலர் கொய்தும் ஆடி, உண்ணு நீர்த்துறையில் நீர் உண்டு, அணிகளைக் கழற்றி அந்நீர்த்துறையில் போட்டுவிட்டுப் புனலாடி எழுந்து, மீண்டும் அணிகளை அணிந்து வீடு திரும்பும் அவர்கள் அணிகளில், மகரக் குழையாம் காதணியை அணிந்து கொள்ளமறந்து, அதை ஆண்டே விடுத்துச் செல்வர். அத்துணைச் செருக்கு மிக்க செல்வக்குடியில் வந்தவர் அம்மகளிர்.
செல்வச் செழுமையால், அப்பட்டினத்து மகளிர், தம் மகரக்குழையையும் மறந்து போவர் என்றால், அப்பட்டினத்துப் பறவைகள் அத்துறைமுகத்தில், வணிகப் பொருள்களைக் கொண்டு செல்வதும், கொண்டு வந்து குவிப்பதுமாகிய பணிகள் ஓய்வின்றி நடைபெற, எப்போதும் ஆரவாரம் மிகுந்திருக்குமாதலின், போதிய இரை பெறமாட்டாது வருந்தியிருக்கும் நிலையில், அரிதின் கிடைக்கும் இரையை இனப்பறவைகள் அறிந்தால், பங்கிற்கு வந்து விடுமோ எனும் அச்சத்தால், அவை இருக்குமிடம் செல்லாது, தனித்த இடம் தேடிப் போய்விடும்.
அவ்வாறு இரைக்காக ஏங்கிக் காத்திருக்கும், சிச்சிலி என அழைக்கப்படும் மீன்குத்திப் பறவை, மகளிர் விட்டுச் சென்ற மகரக்குழையை, இரை எனக்கருதி தன் கூரிய அலகால் கொத்திக் கொண்டு, தன் இனப் பறவைகள் கூட்டமாக இருக்கும் பனந்தோப்பில் சென்று தங்காது, அந்தணர் சேரியில் அந்தணர் நட்டு வைத்திருக்கும் வேள்விக் கம்பத்தின் உச்சியில் சென்று அமர்ந்து கொள்ளும். நீலமணி நிறம் காட்டும் தோற்றப் பொலிவு வாய்ந்த அப்பறவை தன் கூரிய அலகில், மின்னும் மகரக்குழையைத் தாங்கியவாறே அக்கம்பத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காட்சி, யவன நாட்டிலிருந்து வந்து, நங்கூரமிட்டிருக்கும் மரக்கலத்துக் கூம்பில் பொருத்தப்பட்டு, எரிந்து ஒளிவிடும் அன்னவடிவில் ஆன விளக்கை நினைவூட்டுவதாக இருக்கும். மேலும் வைகறைப் போதில், வானவீதியில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் , வெள்ளி என்ற விண்மீன் போலவும் அது காட்சி தரும். நீர்ப்பாயல் நகர் எல்லையை அணுகும் நிலையில், அழகிய அக்காட்சி கண்டு, பெரும்பாண! நீ அகம் மிக மகிழ்ந்து போவாய்,'
"வண்டல் ஆயமொடு உண் துறைத் தலைஇப்
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எறிந்தெனப்
புள்ஆர் பெண்ணைப் புலம்புமடல் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்
நீர்ப் பெயற்று எல்லை போகி"
(311-319)
உரை:
புனல் ஆடு மகளிர்—நீராடும் மகளிர், வண்டல் ஆயமொடு—ஆடும் தோழியரோடு, உண்துறை தலைஇ இட்ட பொலங்குழை—நீர் உண்ணும் துறையில் கூடிப்போட்டு விட்டுப்போன பொன்னால் செய்த மகரக் குழையை; இரைதேர் மணிச்சிரல்—இரையைத் தேடும் நீலமணி போலும் நிறம் வாய்ந்த சிச்சிலி என்னும் பறவை, இரை செத்து எறிந்தென—இரை எனக்கருதி எடுத்துக் கொண்டதாக, புள்ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது—இனப்பறவைகள் நிறைந்திருக்கும்
பனையின் தனி மடலில் சென்று தங்காது. கேள்வி அந்தணர்—கேள்வி அறிவு மிக்க அந்தணர், அருங்கடன் இறுத்த—செய்தற்கு அரிய கடனாகக் கருதிச் செய்து11-1 நீர்ப்பாயல் பட்டினப் பெருமை
நீர்ப்பாயல் துறையின் சிறப்பினை எடுத்துரைத்து, அத் துறைமுகப் பட்டினத்துள் விரைந்து புகவேண்டும் என்ற வேட்கையைப் பெரும் பாணன் உள்ளத்தில் எழுப்பிவிட்ட புலவர், அடுத்து, அப்பட்டினத்தில் வந்து குவியும் வணிகப் பொருட்கள், அவற்றைச் சேமித்து வைக்கும் பண்டகசாலை, வணிக வீதி முதலாம் பல்வேறு வீதிகள், அவ்வீதிகளின் இருமருங்கிலும் கட்டப்பட்டிருக்கும் மாடமாளிகைகள், ஆகியவற்றின் சிறப்புக்களை சீர்பெற உரைக்கத் தொடங்கினார்.
நீர்ப்பாயல் பட்டினத்தின் துறைமுகத்தில், கடல் கடந்த நாடுகளிலிருந்து வரும் கடல் ஓடவல்ல பெரிய நாவாய்களும் வங்க நாட்டிலிருந்து வரும் கரை ஓரப் போக்குவரத்திற்கு உகந்த மரக்கலங்களும் கணக்கிலவாய் வந்து அலை வீசும் நீரில் அசைந்தாடியவாறே நங்கூரம் இட்டிருக்க, வேந்தர்களின் நாற்படை நிறைவு கருதி, மேலை நாடுகளில் பெரு விலை கொடுத்து வாங்கப் பெறும், பால் போலும் தூய வெண்ணிறம் வாய்ந்த உடலும், அதற்கு ஏற்ப வெள்ளிய தலையாட்டமும் வாய்க்கப் பெற்ற குதிரைகளும், வட நாட்டுப் பெருமலையாம் இமயம் தரும் வளங்களாம் செம்பொன்னும், நவமணியும், கங்கை பாயும் வங்க நாடு தரும் பல்வேறு வளங்களும், அக் கலங்களிலிருந்து இறக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
தமிழகத்துப் பொருள்களை அவை விரும்பும் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விற்றும், தமிழகத்திற்குத் தேவைப்படும் பொருள்களை அவை கிடைக்கும் வெளிநாடுகளிலிருந்து வாங்கி வந்தும் தமிழகத்தின் செல்வ வளம் பெருக்கும் வணிகப் பெருமக்கள் தொழிலாற்றும் வணிக வீதிகள் எண்ணிலவாகும். கடற்கரைப் பகுதியாதலின் வீதிகளில் பெருமணலே பரந்து கிடக்கும் என்றாலும், இரு மருங்கிலும் மாடமாளிகைகள் வானளாவும் உயர்வுடையவாகக் கட்டப்பட்டிருக்கும். வாணிகம் கருதி வந்து குவிந்திருக்கும் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கும் மிக உயர்ந்த பண்டக சாலைகளும், அவற்றைக் காத்து நிற்கும் காவல் வீரர்களையும் ஆங்கே காணலாம். அடுத்து அவ்வணிகப் பெருமக்களும், ஆங்குப் பணி புரிவாரும் வாழும் இல்லங்களைக் காணலாம்.
அது வணிகப் பேரூர், உழு தொழிலுக்கு இடமில்லை ஆதலாலும் ஏர்களிலிருந்து பூட்டி விடப்படும் உழுகாளைகளும், கன்றுஈன்ற பசுக்களும் வயிறாரத் தின்பதற்கான புல், மணல் நிறைந்த கடற்கரைப் பகுதியில் கிடைக்காது ஆதலாலும், உழு காளைகளையும், கன்று ஈன்ற பசுக்களையும், ஆங்குக் காணல் இயலாது. ஆனால், ஆங்கு வாழ்வார் தம் உடைமைகளின் காவல் கருதி வளர்க்கப்படும் நாய்களையும், உணவு கருதி வளர்க்கப்படும், ஆட்டுக்கிடாய்களையும் காணலாம். வருவார்க்கு எப்போதும் வழங்கிக் கொண்டே இருப்பதற்கேற்ற பெருஞ்சோற்று வளம் மிக்கவை, வணிகரின் அவ்வில்லங்கள்.
"பால் கேழ்
வால் உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல்வேறு தெருவின்,
சிலதர் காக்கும் சேண்உயர் வரைப்பின்,
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா
மேழகத் தகரோடு எகினம் கொட்கும்
கூழ் உடை நல் இல்"
(319–327)
உரை:
11.2 நீர்ப் பாயல் பட்டினத்து மகளிர் மாண்பு
வணிகர் இல்லத்துச் சோற்று வளத்தை வாயாரப் புகழ்ந்த புலவர், அடுத்து, அவ்வில்லத்து உறையும் மகளிரின் ஆடை அணிகள் பற்றியும், அவர் மேற்கொள்ளும் ஆடல் வகை பற்றியும் கூறுமுகத்தான் வணிகரின் செல்வச் செழிப்பைச் சிறப்புறக் கூறத் தொடங்கினார்.
வானளாவி நிற்கும் உயர்வுடைமையால் மட்டுமே வணிகரின் மாடமாளிகைகள், சிறப்புடையவாம் எனல் பொருந்தாது. மகளிர் பந்தாடும் களமாக, மேனிலை மாடத்தைக் கொள்ளுமளவு அகன்று நீண்ட பரப்புடைமையாலும், அது சிறப்புடையது. அம்மாளிகை வாழ் மகளிர், உச்சி முதல் உள்ளங்கால் வரை பொன்னணிகளாகவே பூண்டிருப்பர். பல மணிவடங்கள் தொங்கும் மேகலை கிடந்து ஒளி செய்யும் இடையில் உடுத்தியிருக்கும் மெல்லிய வெண்துகில், பூங்காற்று அலைக்க அசைய நிற்கும் அம்மகளிர், பொன்னிற அரும்புகள் பூத்துக் குலுங்கும் கிளைகள் வெண்ணிறப் பனிப்படலத்தால் மூடுண்டு கிடக்க நிற்கும் கொன்றை மரம் போலும் காட்சி நலம் உடையராகிக் கண்ணுக்கு விருந்தளிப்பர்.
மேனிலை மாடத்தில் பந்தாடித்திரியும் அம்மகளிர், மலை உச்சிகளில் மகிழ்ச்சி பொங்க, தோகை விரித்து ஆரவாரிக்கும் மயில் கூட்டம் போலவும் காட்சி அளிப்பர். மேனிலை மாடத்தில், காலில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு ஒலிக்க, ஓடி, ஓடி, நூலால் வரியப்பட்ட பந்தாடி மகிழும் அவர்கள், சிறிதே தளர்வுற்றுப் போனதும், பந்தாடலைக் கைவிட்டு, நிறத்தாலும், வடிவாலும் முத்தை நிகர்க்கும் புது மணல் பரப்பில் அமர்ந்து, கையில் அணிந்திருக்கும் தொடி அசைய, பொன்னால் செய்யப்பட்ட கழங்கை மெல்ல மெல்ல உருட்டி ஆடி மகிழ்வர்.
"கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப்பணி, தவழ்பவைபோல்
பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க
மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந்து ஆலும்
பீலிமஞ்ஞையின் இயலிக் கால
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப உயர்நிலை
வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்துவார் மணல்பொற் கழங்கு ஆடும்"
(327–335)
உரை :
11-3 பட்டினத்தில் பெரு விருந்து
நீர்ப்பாயல் பட்டினத்து, மகளிர் நலம் பாடுவார்போல், அந்நகரத்து வணிகச் செல்வரின் வளம் பாடிய புலவர், அடுத்து, ஆங்குச் செல்வார்க்கு, அவர் வழங்கும் விருந்துச் சிறப்பினை விளக்கத் தொடங்கினார்.
திரையன் அரசோச்சியிருந்த சங்க காலத்தில், தமிழகத்தில் சிறந்து விளங்கிய துறைமுகப் பட்டினங்களில் நீர்ப் பாயல் துறையும் ஒன்று. ஆங்கு வாழ்ந்தோரில், தமிழகத்து வணிகரினும், யவனர் முதலாம் பிறநாட்டு வணிகர்களே மிகப் பலராவர். மொழியாலும், பழக்கவழக்கங்களாலும் வேறுபடுவது போலவே, உணவாலும் வேறுபடும் அவர்களோடு பழகி, தமிழகத்து வணிகர்களும், அவர்கள் உணவு முறையினை, ஏற்றுக்கொண்டு விட்டமையால், நீர்ப்பாயல் பட்டினத்தில், அவர்கள் விரும்பி உண்ணும் பன்றிக் கறியும், கள்ளுமே கிடைக்கும். அதனால் புலவரும், பன்றிக் கறி பற்றிக் கூறத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கியவர். நினைவில், அப்பன்றி, அது விரும்பும் பிணவு, அது ஈனும் குட்டிகள், அவை வீழ்ந்து புரளும் சேறு, சேறுபட உதவிய கள் அக்கள் விற்கும் கடை அமைப்பு ஆகியவை நிரலே வந்து நிற்கவே, அவை பற்றிய விளக்கத்தை முதற்கண் மேற்கொண்டார்.
கள் உண்பார் எவ்வளவு பேர் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், இல்லை என்னாது வழங்கவல்ல பெருமை உடையது அக் கள்ளுக்கடை அக்கடை வாயிலில், அது கள்ளுக்கடை என்பதைத் தொலைவில் உள்ளாரும் அறிந்து கொள்ள உதவும் அடையாளக் கொடி பறந்து கொண்டிருக்கும். கடை முன்புறம் புல் போகவும், மேடு பள்ளம் அகலவும் நன்கு செதுக்கப் பட்டிருக்கும். கள்ளுச் சாடிக்கு நாள்தோறும் மலர் மாலை சூட்டி வழிபாடு செய்வது வழக்கமாதலின், கடை வாயிலில் மலர் தூவப்பட்டிருக்கும். கள்ளுக் கடையின் ஒரு பகுதியிலேயே கள் காய்ச்சவும் படும். கள் காய்ச்சும் தொழிலை மகளிரும் கற்றிருப்பர், அம் மகளிர்கள் காய்ச்சிய கலங்களைக் கழுவிச் சாய்க்கும் கழிநீர், பல கால்களாக ஓடி, பன்றிக் கூட்டம் தம் குட்டிகளோடு வீழ்ந்து புரளுமளவு அகன்ற பெரும் பள்ளத்தில் வீழ்ந்து நிரப்பும்.
கள் காய்ச்சிய கலங்களைக் கழுவி வார்த்த நீர் ஓடித் தேங்கும், சேற்றுக் குழிகளில், பன்றிக் கூட்டம் வீழ்ந்து கிடக்கும் எனக் கூறுவதன் முகத்தான், கள்ளுக் கடையின் பெருமையினை எடுத்துக் காட்டிய புலவர். பன்றிக் கறியின் பெருமையினைத் தொடர்ந்தார்.
அவர்கள், பன்றிக் கறி உண்பவர்தான் எனினும், பன்றிகளுள் நல்லதாகத் தேர்ந்தெடுக்கும் பன்றியின் கறியை மட்டுமே உண்பார்கள். உடலெல்லாம் மாசுபடச், சேற்றில் வீழ்ந்து கிடக்கும் பன்றியின் கறியையோ, கிடைப்பன எல்லாம் தின்று வளரும் பன்றியின் கறியையோ, குட்டி பல ஈனும் பெண் பன்றியோடு கூடி உரம் இழந்து போகும் பன்றியின் கறியையோ உண்ண மாட்டார்கள். உண்பதற்கென்றே ஆண் பன்றி ஒன்றைத் தேர்ந்து, அதைப், பிற பன்றிகளோடு சேர்த்து வளர்த்தால், அவை போலவே சேற்றில் புரண்டு வந்து சேரும், கிடைப்பன எல்லாம் தின்று வந்து சேரும், பெண் பன்றியோடு இணைந்து உரம் இழந்து போகும் என்பதால், அதை ஏறமாட்டா ஆழம் மிக்க குழியில் வைத்து, நெல்லை இடித்து எடுத்த மாவை மட்டுமே உணவாக அளித்து வளர்ப்பர். உண்பர்; வருவோர்க்கும் படைப்பர்; பெரும்பாண! அப் பட்டினத்தில் தங்க நேர்ந்தால், அவர் அளிக்கும் பன்றிக் கறியும், களிப்பு மிக அளிக்கும் கள்ளும் உண்டு செல்வாயாக என்றார்.
"பட்டினம் மருங்கின் அசையின், முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம்பூத் தூய செதுக்குடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின்
ஈர்ஞ் சேறு ஆடிய இரும்பல் குட்டிப்
பன் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நெல் மா வல்சி தீற்றிப் பன்னாள்
குழி நிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்
சொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெருகுவீர்"
(336–345)
உரை
11 : 4 கலங்கரை விளக்கு
நீர்ப்பாயல் துறையின் கலங்கரை விளக்கம், நகரப் பெருமாளிகைகளிடையே கட்டப் படாது, கலங்களின் கண்ணில் நன்கு படுதற் பொருட்டு, நகர எல்லையில் கட்டப்பட்டிருப்பினும், அது, அந் நகரத்துக் கட்டிடங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் உயரமானது ஆதலின், ஆங்குச் செல்வார் கண்களுக்கு அது தப்புவது இல்லை. அதனால், நீர்ப்பாயல் நீங்கிக் கச்சி நோக்கிப் புறப்பட்ட பெரும்பாணனுக்குக் கச்சி பற்றிக் கூறுவதன் முன்னர்க், கலங்கரை விளக்கம் பற்றிக் கூறத் தொடங்கினார்.
கலங்கள், நடுக்கடவில், நெடுந் தொலைவில் வரும்போதே அடையாளம் காட்டி அழைக்க வேண்டு மாதலின், கலங்கரை விளக்கம் நனிமிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். அதன் உயர்வை நோக்குவார் அனைவரும், வானம் இடிந்து வீழ்ந்து விடாதபடி முட்டுக் கொடுத்து நாட்டி வைத்திருக்கும், மதலையோடு கூடிய கம்பமோ, வானத்தோடு முட்டி மோத உயர்ந்து நிற்கிறதோ என்றே ஐயுறுவர். அத்துணை உயரம் உடையது. அதன் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்கை, நாள்தோறும் இரவில் ஏற்றி வைக்க ஏறிச் செல்ல ஏணி பொருத்தப்பட்டிருக்கு மென்றாலும் அதன் மூலம் ஏறுவதும் அத்துணை எளிதன்று. ஒவ்வொரு நாளும் அரும்பாடு பட்டே ஏறுதல் இயலும். அத்தனை உயரமாக இருப்பதாலும், பெருங்காற்று வீசும் கடற்கரையில் இருப்பதாலும், மணல் நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாலும், அது, கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்டிருக்கும். அதன் கூரையும், கழிகளாலும், ஓலைகளாலும், வைக்கோலாலும் வேயப் படாமல், மாடியாகவே அமைக்கப்பட்டிருக்கும், பெரும்பாண! அதன் சிறப்பினையெல்லாம் கண்டு வியந்தவாறே கச்சிக்குப் புறப்படுவாயாக, என்றார்.
"வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றரும் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை பிறக்கு ஒழியப் போகி"
(346–351)
உரை