உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/தண்டலை உழவர் தரும் விருந்து

விக்கிமூலம் இலிருந்து



12. தண்டலை உழவர் தரும் விருந்து

கச்சியையும், தமிழகத்துப் பிற பெரு நகரங்களையும் இணைக்கும் பெரு வழிகள் பல இருந்தாலும், கச்சியையும், நீர்ப்பாயல் துறையையும் இணைக்கும் பெருவழி, மிகவும் சிறப்புடையதாகும். தொண்டை நாட்டின் தலை சிறந்த துறைமுகம் பட்டினமாகவும், சிறந்த கடற்படை நிலையமாகவும், நீர்ப்பாயல் இருந்தமையால், நாடாளும் அரசனும், அவன் நாற்படையும், வணிகப் பெருமக்களும், அப்பெரு வழியில் எப்போதும் வழங்கி வந்தமையால், அது, நன்கு பேணப்பட்டு வந்தது. வழியின், இரு மருங்கிலும், தென்னந் தோப்புகளும், கமுகஞ் சோலைகளும், மாவும், பலாவும் மலிந்த பெருந் தோப்புகளும், வாழைத் தோட்டங்களும் நிறைந்து, வழி நெடுகப் பந்தர் இட்டாற்போல் நிழல் படர்ந்திருக்கும். நீர்ப்பாயல்துறை விடுத்துக் கச்சிக்குப் புறப்படும் பெரும்பாணனுக்கு, அப்பெரு வழியின் சிறப்பினையும், ஆங்குப் பசி தீரப் பெறலாம் காய்கனி வகைகளையும் எடுத்துரைக்கத் தொட்ங்கினார்.

பெருவழி, கீழ்க்கடலை அடுத்துச் செல்வது. அதனால், நிலம் மணல் கலந்து, வாழையும் தென்னையும், மாவும் பலாவும், போலும் மர வகைகளும், மஞ்சளும், மலர்ச் செடிகளும், வள்ளிக் கிழங்கும் வளமாக வளர்வதற்கு ஏற்புடையதாக இருக்கும். பருவ மழையால், நீர் வளத்தையும் குறைவரப் பெற்றிருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, அவ்விரு வளங்களையும் துணை கொண்டு தொழிலாற்றிப் பயன் காணத் துடிக்கும் மனவளம் படைத்த உழவர் பெருமக்களும் நிறைந்திருப்பர். அவர் வளர்க்கும் மரம், செடி கொடிகளுக்கு இடையறாக் காவல் தேவை. சிறிது கண்ணயர்ந்தாலும், அவை களவாடப்பட்டு விடும். அதனால், அவர்கள், அவை வளரும் விளை நிலங்களிலேயே, தங்கள் வாழிடங்களையும் வகுத்துக் கொள்வர்.

அவர் வாழும் மனைகள், தென்னந்தோப்பிலும், மாந்தோப்பிலும் தனித் தனியாகக் கட்டப்பட்டிருக்கும். தென்னை மடல்களுள், வளமான மடல்களாகத் தேர்ந்து வெட்டிப், பச்சை நிறம் மாறிப் பழுப்பு நிறம் பெறுமாறு வதக்கி உலர்த்திப் பின்னிய கீற்றுகள் கொண்டு கூரை வேயப்பட்ட அக்குடில்கள், தொலைவிலிருந்து நோக்குவார்க்கு, உரல்போல் பருத்த கால்களையும், குன்றோ என ஐயுறத்தக்க உடலமைப்பையும் உடைய பருத்த யானையோ என ஐயுறத் தோன்றும்.

மனையின் முன் புறத்தில் மஞ்சளும், இஞ்சியும், இரு பக்கங்களிலும் மணம் நாறும் மலர்ச் செடிகளும் செழித்து வளர்ந்திருக்கும். மனையின் முற்றத்தே நின்று நாற்புறமும் நோக்கினால் ஒரு பக்கத்தில், பெரிய பெரிய பழங்கள் பல காய்த்துத் தொங்குவதால் தாழ்ந்து போன கிளைகளைக் கொண்ட வேர்ப்பலா நிற்பதைக் காணலாம். மற்றொரு பக்கத்தில், உயர்ந்து வளராமல் குட்டையாகவே நிற்பதால், அம் மண்ணில் நிறைய வளரும் தாழையோ என மருளத் தக்க தென்னை, குலை குலையாகக் காய்த்து நிற்பதைக் காணலாம். பிறிதொரு பக்கத்தில் முற்றிய பெருங்குலைகள் நிலத்தைத்தொட நீண்டுதொங்கும் வாழைத் தோட்டத்தைக் காணலாம். சிறிது தொலைவில், பனை மரங்கள் சல சலக்கும் பச்சோலைகளுக்கிடையே, குலை குலையாகக் காய் விட்டு நிற்பதைக் காணலாம்.

அம்மனை வாழ் மக்கள், விருந்தோம்பி மகிழும் வேளான் குடி வந்தவர். விருந்தினர் யாரையேனும் கண்டுவிட்டால், அவர்களை அன்புடன் அழைத்துச் சென்று, தம்மிடம் உள்ளன எல்லாம் அளித்து அக மகிழ்வர். விருந்தினரை மனை முற்றத்தில் அமரச் செய்து விட்டு, ஒருவர் சென்று, பலாக்கனியொன்றை வெட்டிக் கொணர்ந்து, பிளந்து சுளை விரித்து வைப்பர். ஒருவர் தென்னையில் ஏறிக் காய்களைப் பறித்துக் கொணர்ந்து சீவி இளநீர் பருக வேண்டுவர். ஒருவர் வாழைத் தோட்டத்துள் புகுந்து, முழுத் தாரைக் கொணர்ந்து, புகையூட்ட வேண்டாது குலையிலேயே கனிந்திருக்கும் பழங்களைத் தோல் உரித்து வைப்பர். ஒருவர் ஓடிப், பனை மரத்தில் ஏறிக் கொணர்ந்த பனங்காய்களை வெட்டி நுங்கெடுத்து வைப்பர்.

சக்கை குறைந்து, சுளையே மிகுந்திருக்கும் இப்பலாப் பழத்தின் பெரும் பாரத்தைத் தாங்கி, அக்கிளை, எப்படித்தான் ஒடிந்து போகாமல் நிற்கிறதோ என வியந்தவாறே, சுளையை வாயில் இட்டால் அதன் சுவை, மேலும் வியப்பூட்டுவதாய் இருக்கும். தோல் அற்றுப் போக, வெண்ணிறம் காட்டி, வளைந்து கிடக்கும் வாழைக் கனிகள், பிடியானையின் வாயின் இரு மருங்கிலும் சிறிதே வெளிப்பட்டுத் தோன்றும் வெள்ளிய கொம்புகளை வடிவாலும், வண்ணத்தாலும் ஒத்திருப்பது கண்டு அடையும் மகிழ்ச்சியினும், உண்டவழிச் சுவை அளிக்கும் மகிழ்ச்சி, குறைவுடையதாக இராது. தென்னையின் முற்றா இளங்காயின் சுவை மிகு நீரைக் குடிக்கக் குடிக்க, அத்துணைக் குட்டையான மரம், இவ்வளவு நீர்கொண்ட காய்களை எவ்வாறுதான் காய்த்துத் தாங்குகிறதோ என்ற வியப்பே மேலிடும். பனம் நுங்கு பெரிய பாராட்டைப் பெற்று விடும். இவை மட்டுமன்று அவர் கொடுக்கக் கொடுக்க நிறைய உண்பதால், அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம் என்பதற்கேற்ப, அவற்றின் பால் வெறுப்புண்டாகி விடவும் கூடும்; வயிறு புடைக்க உண்டதால் வயிறு வலிக்கவும் கூடும்; அதைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் அவ்வீட்டார், விரைந்து சென்று இஞ்சிக் கிழங்கை அகழ்ந்து கொணர்ந்து தருவர். அதைத் தின்று நோய் தீர்த்தபின்னரே, விருந்தினர்க்கு விடைதருவர்.

தண்டலை உழவர் மனையில் விருந்துண்டு, அவரிடம் விடை கொண்டு கச்சி நோக்கிச் செல்வார்க்கு இடைவழியில், கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுக்குக் குறைவிராது அது கோடைகாலம்: அக்காலத்து மாலைப் பொழுதில் கருமேகம் கால் கொண்டு பெருமழை கொட்டும். மழை பெய்து ஓயும்வரை காப்பான இடத்தில் ஒதுங்கியிருந்து, அது நின்ற பிறகு, மீண்டும் வழி மேற்கொண்டு செல்லும் நிலையில் இடைவழியில் அவர் காணும் ஒரு காட்சி, கருமேகம் மீண்டும் கால் கொண்டு விட்டதோ என்று எண்ணி நடுங்கச் செய்துவிடும். அந்நடுக்கத்தோடு, அக்காட்சியை மெல்ல மெல்ல அணுகி நோக்க, அது, மேகம், கால் கொண்டது அன்று: அஃது ஒரு கமுகந்தோட்டம்; கமுக மரத்தின் பருத்து நீண்ட தண்டுகளே, கருமேகம் கால் கொண்டது போல் காட்சி அளித்தது என அறிந்து அச்சம் நீங்கி, மேலே செல்லத் தொடங்கியதும், மகிழ்ச்சியூட்டும் காட்சி ஒன்றும், ஆங்கே காத்திருக்கும்.

கமுகந்தோட்டத்தை அடுத்திருக்கும் தென்னந்தோப்பில் வழிப்போவார் சிலர், மரத்தடியில் கல்லடுப்பு மூட்டிச் சமைத்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கோ கடும்பசி, சமையல் முடிந்து உணவு படைக்கும் வரை, பசிதாங்க மாட்டாது துயருற்றுக் கிடப்பர். அந்நிலையில், முற்றிய தேங்காய் ஒன்று, காம்பற்று அடுப்பருகே விழும். அது விழும் அதிர்ச்சியில்,அக்கல்லடுப்பும், அதன் மீது உள்ள சோற்றுப் பானையும் சிறிதே நடுங்கவும் செய்யும். அதிர்ச்சியால் சோற்றுப் பானை உருண்டு வீழ்ந்து உடைந்து விடுமோ என அவரும் அஞ்சி நடுங்கிப்போவர். அது சிறிது பொழுதே; காய் வீழ்ந்தபோது பானை சிறிது அசைந்ததே ஒழிய உருண்டு விடவில்லை என்று கண்டு, கலக்கம் ஒழிவர். கலக்க மிகுதியால், வீழ்ந்த தேங்காயை, மறந்திருந்த அவர்கள், அக்கலக்கம் கழிந்ததும், காயைக் கண்ணுற்றதும், அக்காயை மட்டை நீக்கி உடைத்து உண்டு ஓரளவு பசி தீர்ந்து மகிழ்ச்சி உறுவர்.

வளம் மிக்க அத்தகைய இடங்களைக் கடந்து செல்லும் பேரது, இடையிடையே, செல்வவளம் மிக்க சில நகரங்களையும் காணலாம். அந்நகரத்து மக்கள் நிறை வாழ்வு வாழ்பவர்கள். எங்கு நோக்கினும் மாடமாளிகைகளே காணப்படும். வானளாவ உயர்ந்து நிற்கும் அவை, அடுத்தடுத்து இடையீடின்றிக் கட்டப்படாமல், ஒவ்வொன்றும் நாற்புறங்களிலும் சுற்றுச்சுவர் அமைய தனித்தனியாகவே கட்டப் பட்டிருக்கும். அதுமட்டும் அன்று; அம்மக்கள், ஆடல் பாடல்களிலும் தம்மை மறந்து ஈடுபட்டிருப்பர். வள்ளிக்கூத்து போலும் பல கூத்துக்கள், ஆங்குத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். தன்னாட்டு மக்களை அத்தகைய பேரின்பத்தில் ஆழ்த்திட வல்ல பெருவளம் கொழிக்கும் நாடு, திரையன் ஆட்சி நிலவும் நாடு; பெரும்பாண! அத்தகைய வளம் சிறக்கும் அந்நாட்டின் பல பகுதிகளையும் கடந்து சென்று, கடைசியில் கச்சி மாநகர் புகுவாயாக என்றார்.


"கறையடிக்
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண்தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பைத்
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்,
தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்,
வீழ் இல் தரழைக் குழவித் தீநீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்

"குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்,
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம்பல்தார முனையின், சேம்பின்
முளைப்புற முதிர்கிழங்கு ஆக்குவிர், பகல்பெயல்
மழை வீழ்ந்தன்ன மாத்தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆறு செல் வம்பலர் காய்பசி தீரச்
சோறடு குழிசி இளக விழூஉம்
வீயாயாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி, நன்னகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை"

(351—371)

உரை:

கறையடிக் குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்—உரல், போன்ற கால்களை உடைய, வடிவால் மலையோடு மாறுபடும் யானையின் உடம்பை ஒக்கும், வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த—வளமான மடல்களை உடைய தென்னையின் வற்றிய மடலால் வேயப்பட்ட, மஞ்சள் முன்றில்—மஞ்சள் வளர்ந்த முற்றத்தினையும், மணம் நாறு படப்பை—மணம் நாறும் மலர்ச் செடிகள் வளர்ந்த தோட்டங்களையும் உடைய, தண்டலை உழவர் தனி மனை சேப்பின்—தோட்டக்கால் பயிர் செய்யும் உழவர்களின் தனித் தனியாக அமைந்த மனைகளிலே தங்கின், தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும் பழம்—தாழ்ந்த குலைகளை உடைய பலாமரத்தின் சுளைகள் மிகுந்த பெரிய பழத்தையும், வீழ் இல் தாழைக் குழவித் தீநீர்—விழுது இல்லாத் தாழையாம் தென்னையின் இளங்காயின்
இனிய நீரையும், கவைமுலை யிரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்—கவைத்த முலைகளையுடைய பெண் யானையின் வாயிடத்து வெண் தந்தங்களை ஒக்கும், குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்—குலையிலேயே கனிந்த வாழையின் வெண் பழத்தையும், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு—திரண்ட அடிமரத்தினையுடைய பனையின் நுங்கோடு, பிறவும் தீம்பல் தாரம்—வேறு பல இனிய பண்டங்களையும், முனையின்—தின்று வெறுப்பின், சேம்பின் முளைப்புற முதிர்கிழங்கு ஆக்குவிர்—சேம்பினுடைய, முளைக்கும் திறம் பெற முளைவிட்டு முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்கள், பகல் பெயல் மழை வீழ்ந்தன்ன—பகற்போதில் பெய்யும் மழை கால் இறங்கினால் அன்ன, மாத்தாள் கமுகின்—பெரிய தண்டினை உடைய கமுகந் தோட்டத்தின், புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்—பக்கத்தே சூழ்ந்த, தென்னையின் முப்பக்கங்களையுடைய முற்றிய காய், ஆறுசெல் வம்பலர் காய் பசிதீர—வழிப் போவாரின் கொடிய பசி தீரவும், சோறு அடு குழிசி இளச—அவர் சோறு ஆக்குகின்ற பானை அசையவும், விழூஉம், வியாயாணர் வளங் கெழு பாக்கத்து—விழும், கெடாத புது வருவாயினையுடைய வளம் மிக்க பாக்கங்களில், பல் மரம் நீள் இடைப் போகி—பல மரங்கள் வளர்ந்த நீண்ட வழிகளைக் கடந்து சென்று, விளங்கு சுவர் உடுத்த—விளங்குகின்ற மதிலால் சூழப்பட்ட விண் தோய் மாடத்து—வான் அளவா உயர்ந்த மாடங்களை உடைய, நன் நகர்—நல்ல நகரங்களில், வாட வள்ளி வளம் பல தரூஉம்—வள்ளிக் கூத்து ஆடி ஆடி மகிழ்தற்குக் காரணமான வளங்கள் பலவற்றையும் தருகின்ற, நாடு பல கழிந்த பின்றை—நாடுகள் பலவற்றைக் கடந்து போன பிறகு.