உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/பாம்பணைப் பள்ளியானைப் பரவுக

விக்கிமூலம் இலிருந்து



13. பாம்பணைப் பள்ளியானைப் பரவுக

"கச்சியுள் புகுக" எனப் பெரும்பாணனுக்கு விடை கொடுத்த புலவர், பெரும்பாணன் கச்சி செல்வது, ஆங்கு அரசோச்சியிருக்கும் திரையனைக் கண்டு, பாடிப் பரிசில் பெறவே என்றாலும், கச்சி செல்லும் அவன், திரையனைக் காண்பதன் முன்னர், ஆங்குக் கோயில் கொண்டிருக்கும் பாம்பணைப் பள்ளிப் பரமனை வழி படுதல் முறையாகும் என்பதால், திரையன் நாளோலக்கச் சிறப்பினை எடுத்துரைப்பதன் முன்னர், அப்பெருமான் பள்ளி கொண்டிருக்கும் திரு வெஃகா என்னும் திருக்கோயில், அக் கோயிலை அடுத்த சோலை, அச்சோலையை அடுத்து ஓடும் சிற்றாற்றுத்துறை, அச் சோலையிலும், துறையிலும், மகளிர் உடன் வர வந்து ஆடி மகிழும் ஆடவர் ஆகியோர் பற்றியும் விளக்குவராயினர்.

கோயிலை அடுத்து ஒரு மலர்ச் சோலை; அம் மலர்ச் சோலையை அடுத்து ஒரு சிற்றாறு; அது பெருக்கெடுக்கும் போதெல்லாம் சோலையுள் புகுந்து பாய்ந்து, ஆங்கு உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகு முதலாம் குப்பைகளை வாரிக் கொண்டு, புது மணலைப் பரப்பி விட்டுப் போகும். அம் மலர்ச் சோலையில், பல்வேறு வகை மரங்களும் நெருங்க வளர்ந்து தழைத்து நிற்கும். ஆதலால், அச்சோலையுள் வெயிலையே காண இயலாது. குயில்கள் கூடச் சிறகடித்துப் பறக்க இயலாது. மரங்கள் ஊடே நுழைந்து தான் மெல்லப் பறத்தல் இயலும். அச் சோலையில் காஞ்சி மரங்களில் ஏறிப்படர்ந்திருக்கும் மாதவிக் கொடியிலிருத்து வேனில் வெப்பம் தாங்க் மாட்டாது வாடிப் போன மலர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும். அவ்வாறு உதிரும் மலர்கள், மரத்தடியில், வட்டம், வட்டமாக நீர் தேங்கி நிற்கும் சிறு சிறு பள்ளங்களில் வீழ்ந்து மிதக்கும் அக்காட்சி, அக் காஞ்சிமா நகரத்து வீதிகளில், அப்ப வணிகர், கரிய சட்டியில் காய்ச்சிய பாகு கலந்து பிசைந்த மாவை, வட்டம் வட்டமாகச் கற்றி வைத்த, வெண்ணூல் போலும் வடிவில் பிழிந்து எடுக்கும் இடியாப்பம், பால் நிறைந்த வட்டத் தட்டில் மிதக்க விட்டிருப்பதை நினைவூட்டுவதாய் இருக்கும்.

அழகிய அந்தச் சோலையுள், காதலனும் காதலியுமாக: கணவனும் மனைவியுமாக, ஆடவரும் மகளிரும் திரண்டிருப்பர். ஆங்கு உலா வரும் அம் மகளிர் அழகில் மிக்கவர்; அவர் நுதல் மூன்றாம் பிறைத் திங்கள் போல் ஒளிவீசும். படம் விரித்த பாம்பு போலும் வடிவுடைய, மகரவாய் என்ற அணியைத் தலையில் அணிந்திருக்கும் நிலையில், அவர் முகத்தை நோக்கினால், அரவு கவ்விய இளம்பிறைத் திங்கள் போல் தோன்றும். அவர் கருவிழிகளில் அன்பு கனியும், இனிக்கும் தேனை உருமாற்றி, இம்மகளிரின் கண்ணாகப் பொறுத்தி விட்டனரோ என எண்ணி ஏங்குமளவு இன்பத் சுவை ஊட்டும். அத்தகைய அழகுமிக்க இளம் மகளிர் உடன் வர, மலர்ச்சோலை புகும் ஆடவர், சோலைப் புது மணலில் அமர்ந்து, பாளை உள் அடங்க, சூல் கொண்ட கமுக மரத்தின் வயிறு போல் உடைத்திருக்கும் பச்சைக் குப்பிகளில், உடன் கொணர்ந்த கள்ளை உண்டு தீர்த்து, இன்ப விளையாடல் மேற்கொண்டிருப்பர்.

சோலையிலும், சோலையை அடுத்து வற்றாத சிற்றாறு பரப்பும் புது மணல் மீதும், கரை வளர் மரங்கள் சொரியும் பன்னிற மலர்கள் நிறைந்திருக்க, அடைவதற்கு அரியது, அடைந்தார்க்குப் பேரின்பம் பயப்பது என்ற பழம் பெருமை வாய்ந்த துறக்க உலகம் என்றது இதைத்தானோ என எண்ணுமளவு இன்பச் சூழல் மிகுந்த அச் சோலையிலும், அச் சோலையை அடுத்த ஆற்றுத் துறையிலும் உலக இன்பத்தில் ஆழ்ந்துபோகும் அவர்கள், மறுமை இன்பத்திற்கும் வழிவகுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வரப் பெற்றதும், சோலையின் நீங்கி, திருவெஃகா அடைவர். பள்ளி கொண்ட பெருமாளின் திருவருட் காட்சிக்காக, ஆங்குக் காத்திருப்பார் வரிசையில், தாமும் இடங் கொண்டு விடுவர்.

பெரும்பாண! அவ்வாறு காத்திருப்பாரோடு நீயும் கலந்து கொள்வாயாக; திருக்கோயில் உள்ளே படம் விரித்து உயர்ந்த ஆயிரம் தலைகளைக் கொண்ட பாம்பணைமீது, கரிய திருமேனிப் பெருமாள் பள்ளி கொண்டிருப்பான். அக்காட்சி, கடந்து வந்த வழியில், காந்தள், விரிந்த கைபோலும் வடிவில், கொத்துக் கொத்தாய் மலர் ஈன்று காடென வளர்ந்திருக்கும் மலைச்சாரலில், அக் காந்தள் மலர்க்கிடையே, கரிய பெரிய ஆண் யானை படுத்துறங்கும் காட்சியை நினைவூட்டிப் பேரின்பம் தரும். அப்பெருமான் திருமுகக் காட்சி கிடைக்கும் வரை வாளா இராது, உன் கையில் இருக்கும் இனிய யாழை இயக்கி, அப் பெருமாள் புகழ் பாடிப் பரவுவாயாக! திரையன் புகழ் பாடுவதன் முன்னர்த் திருமால் புகழ் பாடினம் என்ற மன நிறைவு உண்டாகும்.


"நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்குப்
பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியாக்குயில் நுழைபொதும்பர்க்
குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்,
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
கார் அகல்கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால்கலந்தவை போல்

நிழல்தாழ் வார்மணல் நீர்முகத்து உறைப்பப்,
புனல் கால்கழீஇய பொழில்தொறும், திரள்கால்
சோலைக் கமுகின் சூல்வயிற்று அன்ன
நீலப் பைங்குடம் தொலைச்சி, நாளும்
பெருமகிழ் இருக்கை மரீஇச், சிறுகோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச்
சுறவுவாய் அமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல்,
நறவு பெயர்த்தமைத்த நல்எழில் மழைக்கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடிப்,
பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூமலி பெருந்துறைச்
செவ்வி கொள்பவரொடு அசைஇ, அவ்வயின்
அருந்திறல் கடவுள் வாழ்த்திச் சிறிதுநும்
கருங்கோட்டு இன்னியம் இயக்கினிர் கழிமின்"

(371-392)

உரை :

நீடுகுலைக் காந்தள் அம்சிலம்பில்—நீண்ட குலைகளையுடைய காந்தள் வளர்ந்த அழகிய பக்க மலையில், களிறு படிந்தாங்கு—யானை படுத்திருந்தாற்போல, பாம்பு அணைப்பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்—பாம்பணைப் படுக்கையில் விரும்பித் துயில்கொண்டோனுடைய திருவெஃகாவில், வெயில் நுழைபு அறியா—ஞாயிற்றின் கதிர் சிறிதும் நுழைவதும் அறியாத, குயில் நுழை பொதும்பர்—குயில்கள் நுழைந்து செல்லும் இள மரக்காவில், குறுங்கால் காஞ்சி சுற்றிய—குறுகிய காலையுடைய காஞ்சி மரத்தைச் சுற்றிய, நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ—நீண்ட கொடிகளையும், பசிய இலைகளையும் உடைய குருக்கத்தியின் பொலிவிழந்த புறத்திணையும் வரிகளையும் உடைய மலர்கள், கார் அகல்—கரிய சட்டியில், கூவியர் பாகொடு பிடித்த—அப்ப வாணிகர், பாகொடு கலந்து
பிழிந்து எடுத்த, இழைசூழ் வட்டம்—நூல்போல் வட்ட வட்டமாய் பிழிந்து எடுக்கப்பட்ட அப்பம், பால் கலந்தவைபோல்—பாலில் கலந்து மிதப்பவைபோல், நிழல் தாழ்வார் மணல்நீர் முகத்து உறைப்ப—நிழல் படிந்த பரந்த மண்விடத்துக் குழிகளில் தேங்கி நிற்கும் நீரில் விழுந்து மிதக்க, புனல்கால் கழீயை பொழில் தொறும்—வெள்ளநீர், குப்பைகளை அகற்றித் தூய்மை செய்த பொழில்கள் தோறும், சிரள்கால் சோலைக் கமுகின்—திரண்ட தாளையுடைய சோலையிடத்துக் கமுக மரத்தின் சூல்கொண்ட வயிற்றைப்போலும், நீலம் பைக்குடம் தொலைச்சி—பச்சைநிறக் குப்பிகளில் கொணர்ந்த கள்ளைஉண்டு தீர்த்து, நாளும் பெருமகிழ் இருக்கை மரீஇ—நாள்தோறும் பேரின்ப வாழ்க்கை மேற்கொண்டு, சிறுகோட்டுக் குழவித்திங்கள்—சிறிய கோடு போன்ற இளம் பிறையை, கோள் நேர்ந்தாங்கு—பாம்பு, தீண்டினாற்போல, சுறவுவாய் அமைத்த—மகரவாய் என்ற தலைக் கோலத்தை அணிந்த, சுரும்பு சூழ் சுடர் நுதல்—வண்டுகள் சூழும் ஒளிவீசும் நெற்றியினையும், நறவு பெயர்த்து அமைத்த—தேனை உருவுமாற்றி அமைத்தால் ஒத்த, நல்எழில் மழைக்கண்—நல்ல அழகு அமைந்த, குளிர்ந்த பார்வை பொருந்திய, கண்களையும் உடைய, மடவரல் மகளிரோடு பகல் விளையாடி—மடப்பம் மிக்க இளமகளிரோடு பகலெல்லாம் விளையாடி, பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்—பெறுதற்கு அரிய பழைய புகழ்வாய்ந்த துறக்க உலகத்தை ஒக்கும், பொய்யா மரபின் பூமலி பெருந்துறை—நீர்பொய்யா இயல்பு வாய்ந்த பூக்கள் நிறைந்த பெரிய நீர்த்துறையில், செவ்வி கொள்பவரோடு—திருவெஃகாவில் குடிகொண்டுள்ள திருமாலைக் காணும் செவ்விக்காகக் காத்திருப்பவரோடு, அசைஇ—காத்திருந்து, அவ்வயின்—ஆங்குக் கோயில் கொண்டிருக்கும், அருந்திறல் கடவுள் வாழ்த்தி—அரியதிறல் வாய்ந்த
திருமாலை வாழ்த்தி, சிறிதுநும் கருங்கோட்டு இன்னியம் இயக்கினிர் கழிமின்—சிறிது நேரம், உம்முடைய கரிய தண்டுடைய இனிய யாழை இயக்கி, பின்னர் அவ்விடம் விட்டு அகன்று போவீராக.

13-1 கச்சிமாநகர் மாண்பு

மரங்களுள், காய்த்துப் பயன்தரா மரங்கள், பூத்துக் காய்க்கும் மரங்கள், பூவாதே காய்க்கும் மரங்கள் என எத்தனையோ வகையிருப்பினும், பூவாதே காய்த்துக் கனிந்து, விரிந்து, சுளை கொட்டும் பலா மரத்தையே பல்திசைப் பறவைகளும் சென்று அடைவது போல், கடல் சூழ்ந்த உலகில், எண்ணற்ற பெரு நகரங்கள் இருந்தாலும் பல்வேறு சமயக் கடவுளர்களும், சமயத் தலைவர்களும் கோயில் கொண்டிருக்க, திங்கள் தோறும் திருவிழா என ஆண்டு முழுவதும் விழாக்கள் எடுக்கப் படுவதால் உலக மக்கள் எல்லாம் தன்பாலே வந்து திரளும் தனிச் சிறப்பு வாய்ந்த பெரு நகரம், காஞ்சி மாநகரம்.

அத்தகைய பெருமை மிகு கச்சிமா நகரம் அடையும் பெரும்பாணன், முதற் பணியாக ஆங்குக் கோயில் கொண்டிருக்கும் பெருமாளை வணங்கிய பின்னர், அவன் செல்ல வேண்டிய இடம், திரையன் உறையும் அரண்மனை யாதலின், அதுபற்றிக் கூறத் தொடங்கிய புலவர், கோட்டையைச் சூழ உள்ள செண்டு வெளிகளில் இடம் பெற்றிருக்கும் நாற்படைத் தளங்கள், வாணிக நிலையங்கள், காவற்காடு, கோட்டை வாயில் ஆகியவற்றைப் பற்றியும் கூறத் தொடங்கினார்.

பழைய காலத்து நாற்படையுள், பெரும் பங்கு கொள்வது யானைப்படை. மேலும், திரையன் நாட்டு வேங்கட மலையில் யானைகள் மிகுதி. அதனால், அவன் பால், எண்ணற்ற போர்க்களிறுகள் இருந்தன. அவை ஒரு பெரிய சோலையுள் நிறுத்தப் பட்டிருக்கும். ஆங்கு, நெய் இட்டு மிதித்துக் கலந்த உணவு, கவளம் கவளங்களாகப் பிரிக்கப் பட்டு, யானைகளுக்கு இடப்படும். அவ்வாறு இடப்படும் கவளத்தில் சிறிது குறைந்து போவதால் யானைகள் கவலையுறுவது இல்லை. அதனால், குரங்குகள் யானைக்கு அஞ்சுவதில்லை. ஆனால், இடப்படும் உணவு, குரங்குகள் கவர்ந்து கொள்வதால் குறைவுற்று, அதனால் களிறுகளின் உரம் குறைந்து விடுமோ என அஞ்சும் பாகர்கள், அக் குரங்குகளை விரட்டிக் கொண்டே இருப்பர். அதனால், அக் குரங்குகள் அப்பாகர்களைக் கண்டு அஞ்சும், என்றாலும், சூல் முதிர்ந்த நிலையில், ஏனைய குரங்குகள் போல், ஊரெல்லாம் திரிந்தோ, காடெல்லாம் அலைந்தோ, உணவு தேடி உண்ண இயலாது ஓய்ந்து கிடக்கும் மந்திகள் சிலவும் அவற்றிடையே இருப்பதால், அவை, பாகர் ஏமாந்திருக்கும் காலம் பார்த்துக் கவளத்தைக் கவர்ந்தோடிச் செல்லும்.

இது ஒரு பால், பிறிதோரிடத்தில், அண்மையில் பிடிக்கப்பட்டு, பழகுவதற்காகக் கொண்டு வரப்படும் யானைகளை, அவற்றின் சினம் அடக்கி, அடங்கும் வரை பிணித்து வைப்பதற்காக, வெள்ளீடு இன்றி வயிரம் பாய்ந்த மரத்தால் ஆன கட்டுத் தறிகள் வரிசையாக நடப்பட்டிருக்கும்.

சோலையின் நீங்கிப், படை போகு பெருந்தெருவில் அடிவைத்தால், அது, மக்கள் வழங்குவதற்கு இயலாவாறு பாழ்பட்டிருப்பது தெரியும். அத்தெரு வாழ்மக்களை அது பற்றிக் கேட்டால், அத்தெருவில், நாள் தோறும் ஓடும் தேர்களின் எண்ணிக்கை மிகுதியாலும், அவற்றின் நெடிய, பெரிய, வடிவமைப்பாலும், அவற்றில் பூட்டப்படும் குதிரைகள், காற்றினும் கடுக ஈர்த்து ஓடுவதாலும், அது, அவ்வாறு, குண்டும் குழியுமாகப் பாழ்பட்டுப் போகும் என அறிவிப்பர், அவர்களின் சொல்லோவியம் மூலமாகவே தேர்ப்படை, குதிரைப்படைகளின் பெருமையை உணர்ந்து கொள்வதால், அவை இருக்கும் இடம் சென்று அவற்றைக் காணாது, அடுத்து நடந்தால் வீரர் வாழிடம் அடையலாம்.

எதிர்த்து நிற்கும் படைவரிசையை அழிப்பதல்லது, அப்படை வரிசை முன்அழியா ஆற்றல் மறவர்கள். அதனால், அவர்கள் அடையும் புகழுக்கு ஓர் எல்லை வகுக்க இயலாது. புகழ் எல்லையைக் கடந்த அவ்வீரர் குடியிருப்பைக் கடந்து சென்றால், வாணிக வீதி வரும். ஆங்குப் பொருள்களை வாங்குவோரும், விற்போருமாக மக்கள் கூட்டம் பெருகி நிற்பதால், அத்தெருவைக் கடந்து செல்வதே அரிதாக இருக்கும். ஒருவாறு கடந்து விட்டால், காவற் காட்டையும், அதை அடுத்து அரண்மனை வாயிலையும் அடையலாம்.

அது அரண்மனை வாயில். அகத்தே அரசன் இருக்கை. அதனால், யாரேனும் பகைவர் அறியாது உள் நுழைந்து ஊறு விளைவிக்கவும் கூடும் என்ற அச்சத்தால் வாயில் அடைபட்டு இருக்குமோ என்ற ஐயஉணர்வோடு அணுகிப் பார்த்தால், அது திறந்தே கிடக்கும். திரையன் ஆற்றலும், அவன் படைப் பெருமையும் அறிந்திருக்கும் அவன் பகைவர், அவன் நாட்டின் எல்லையையும் அணுக மாட்டார். ஆதலின் அவர்களுக்கு அஞ்சி, வாயிலை அடைக்க வேண்டிய நிலை என்றுமே எழாது, மேலும், திரையன் பெருங் கொடையாளன், அவன் புகழ் பாடிப் பரிசில் பெறும் நினைவோடு, இரவலர்கள், எப்போதும் வந்த வண்ணமே இருப்பர். அவர்களை வரவேற்க, அவ்வாயில், எப்போதும் திறந்தேயிருக்கும்.

வாயிலைக் கடந்தால் அரசன் கோயில். அது, செங்கல்லும், இட்டிகையும் கொண்டு வானளாவக் கட்டப் பட்டிருக்கும். நாற்புறங்களிலும், படைபோகு பெருவீதி, வணிகர் வீதி, என வரிசையாக வீதிகள் இடம் பெற்றிருக்க, அரசன் பெருங்கோயில் நடுவே அமைந்திருக்கும், அந்நகர் அமைப்பு, வட்டம், வட்டமாக. இதழ்கள் விரித்திருக்க, இடையே கொட்டை புடைத்திருக்கும் தாமரை மலரை நினைவூட்டும். அந் நகர் அமைப்பு தாமரை மலரை நினைவூட்ட, அந் நகர் காணும் மக்கள் உள்ளத்தில், அதைத் தொடர்ந்து, திருவெஃகாவில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் உந்தியில் வேர்விட்டு நான்முகனைப் பயந்து மலர்ந்திருக்கும் உந்திக் கமல நினைவு எழ, உள்ளத்தில் அப்பெருமானின் நினைப்பே முனைப்போடு முன்நிற்கும்.


"காழோர் இகழ் பதம் நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம் மிதி கவளம்,
கடுஞ்சூல் மந்தி கவரும் காவின்,
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டுநெடுந் தெருவின்,
படைதொலைபு அறியா மைந்து மலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த
அடையா வாயில் மிளைசூழ் படப்பை,
நீல் நிற உருவின் நொடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவன் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண் வரத் தோன்றி,
சுடு மண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்,
இழு மென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக்
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலா அப் போலப்
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத் துள்ளும் பலர் தொழ
விழவு மேம் பட்ட பழ விறல் மூதூர்"

(393-411)

உரை :

காழோர் இகழ் பதம் நோக்கி—பரிக் கோலை உடைய யானைப் பாகன் ஏமாந்திருக்கும், காலம்

பார்த்து, கீழ நெடுங்கை யானை—கீழ் இடத்தே வைக்கப் பட்ட நீண்ட கையையுடைய யானைக்கு இடும். நெய்ம் மிகுதிகவளம்—நெய் இட்டு மிதித்துப் பண்ணிய உணவாகிய கவளத்தை, கடுஞ்சூல், மந்தி கவரும் காவின்—நிறைசூல் கொண்ட மந்தி கவர்ந்து கொள்ளும் சோலையினையும், களிறு கதன் அடக்கிய—களிற்றின் கடுஞ்சினத்தை அடக்கிய, வெளிறு இல் கந்தின்—வெள்ளீடு இல்லாதகட்டுத் தறிகளையும், திண்தேர் குழித்த—திண்ணிய தேர்கள் பலகால் ஓடிக் குழி செய்த, குண்டு நெடுந்தெருவின்—பள்ளமும் மேடும் ஆன நீண்ட தெருவினையும், அறியா— படையின் முன்னே கெட்டு அழிதலை அறியாத, மைந்து மலி—ஆற்றல் மிகுதலால் உண்டான, பெரும் புகழ்க் கடைகால் யாத்த—பெரிய புகழின் எல்லையை அழித்த, பல்குடி கெழீஇ—பல மறக்குடிகள் நிறையப் பெற்று, கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த—விற்றலும் வாங்குதலுமாகிய வணிகத் தொழில் மிகுதியால் ஆங்கு இயங்கு வாரைத் தடுப்பதற்கு காரணமான, அடையா வாயில்—இரவலர்க்கும் பரிசிலர்க்கும் அடைக்காத வாயிலையும், மிளை சூழ் படப்பை—காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும் உடைய நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்— நீல நிற மேனி யோனாகிய திருமாலின் திரு வுந்தியாகிய, நான்முக ஒருவன் பயந்த—நான்முகன் என்ற ஒகுவனை ஈன்ற, பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின்—பல இதழ்களையுடைய தாமரையின் கொட்டை போல, காண் வரத்தோன்றி-அழகு விளங்கத் தோன்றி, சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்—செங்கல்லால் கட்டப் பட்டு உயர்ந்த பெரிய அரண்மனையச் சூழ்ந்தமதிலினையும், இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத்தொழுதி—இழும் எனும் ஒலி எழுப்பும் பறவையின், பெரிய இனத்தின் கூட்டம் வந்து தங்கும், கொழு மென் சினைய கோளி-

யுள்ளும்—கொழு கொழு வென்ற மெல்லிய கொம்புகளையுடைய பூவாதே காய்க்கும் மரங்களுள்ளும், பழம் மீக் கூறும் பலா அம்போல—இனிய பெரிய பழம் உடைமையால் புகழப் படும் பலாமரத்தைப் போல, புலவுக் கடல் உடுத்த—புலால் நாறும் கடலால் சூழப்பட்ட, வானம் சூடிய—வானம் கவிந்த, மலர்தலை உலகத் துள்ளும்—பரந்த இடத்தையுடைய உலகத்து நகரங்கள் பலவற்றுள்ளும், பலர் தொழ—பல்வேறு சமயத்தாரும் தொழும்படி, விழவு—விழாக்களாலே மேலான சிறப்பைப் பெற்ற, பழ விறல் மூதூர்—பழம் பெருமைவாய்ந்த மூதூர்.