உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்/பாரதியாரும் நாடகமும்

விக்கிமூலம் இலிருந்து

பாரதியாரும் நாடகமும்



நற்சரிதை நற்கவிதை, நல்ந டிப்பு
நாடகத்தில் பாரதியார், அமைக்க எண்ணி
முற்காலம் காளிதா ஸன்பு கன்ற
"சாகுந்தளம்" நடத்த முடிவு செய்தார்.
உற்றநண்பர் சீனிவா சாச்சா ரிக்குச்
சகுந்தலையின் வேடந்தான் உரியதென்றார்.
பற்றறுவிஸ் வாமித்ரர் வா. வே. சுக்காம்;
பகரறிய துஷ்யந்தன் நான்தான் என்றார் !
தொண்டுசெயப் பலநண்பர் காத்திருந்தோம்.
துடைநடுக்கும் தமிழ்நாடு, தேச பக்தர்
அண்டுமந்தக் காரியத்தில் அண்ட வில்லை.
அருங்கவியின் நாடகத்தை இழந்தார் மக்கள்.
வண்டிவண்டி யாய்க்குப்பை கூள மெல்லாம்
வாரிப்போய்ப் பாரதியார் போட்டி ருப்பார்;
கொண்டுவந்து சேர்த்திருப்பார் நாடகத்தில்
குளிர்நிலவை, ஒளிநிலவை, அற்புதத்தை!