உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகவி பாரதியார்/பாரதி பாதை

விக்கிமூலம் இலிருந்து

பாரதி பாதை

எட்டையாபுரத்திலே, தேசீயக்கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு, அழகிய மண்டபம் அமைத்துச், சீரிய முறையில் விழா நடத்தினர்.

பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர் வத் தீ கொழுந்துவிட்டெரியும் உள்ளத்துடன் வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத்தனத்தார். தடை விதித்ததால், புதுவையில் தங்கிப், புதுப்பாதை வகுத்தார் பாரதியார்.

அவருக்குக் 'காணிக்கை' செலுத்த ஆட்சி அலுப்பையும் பொருட்படுத்தாது, ஆச்சாரியார் வந்தார்— ஆயிரக் கணக்கான தமிழர்கள் கூடினர்-இசைவாணர்கள்—கலைவாணர்கள்— எழுத்தாளர்கள் பற்பலர்.

'கல்கி' ஆசிரியர்,இப்பணியினைத் திறம்பட நடத்தி முடித்தார். விழாச் சொற்பொழிவுகளில், நாவலர் பாரதியார், சிவஞானக் கிராமணியார், ஜீவானந்தம், நாமக்கல்லார், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. தூரன் ஆகிய பலரும் கலந்துகொண்டனர்.

நண்பர் சிவஞானம் பெருமிதத்துடன் கூறினார், "அதிகாரமற்ற கரம் அஸ்திவாரக்கல் நாட்டுகிறதே என்று, முன்பு ஆயாசப்பட்டேன் இன்றோ, ஆளும் கரம், மணிமண்டபத்தைத் திறந்துவைத்தது கண்டு அகமகிழ்கிறேன்" என்று. உண்மை. வங்கமாளும் ஆச்சாரியார், மணி மண்டபத்தைத் திறந்தார். வறுமையாளராகக் கவனிப்பாரற்று, நாடு கடத்தப்பட்டு நலிவுற்றிருந்த பாரதியாருக்கு, நாடு முழுவதும் கொண்டாடும் அளவினதான விழா நடந்தேறியது.

பாரதியாரின் கவிதைத்திறன், அதனாலாய பயன், மறுக்கமுடியாதன. பாரதியாரின் தனிப்பண்புகளை, அவரை அந்நாளில் அறிந்தவர்கள் கூறிடக் கேட்டால், புதுஉலகு காண விழைபவர்களின் அகமெலாம் மகிழும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பாரதியாரைக் குறித்துப் பேச ஆரம்பித்தால், அவருடைய கண்களிலே ஓர் புத்தொளி தோன்றிடக் காணலாம்.

பாரதியாரின் காலம் வேறு; இக்காலம் வேறு. எனவே, இன்றுள்ள எண்ணங்களை எல்லாம் அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்கவேண்டுமென்றோ, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய—திராவிடப் பிரச்சினையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றோ நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர், 'ஆரியர்' என்ற சொல்லை, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக் காலம், நாமெல்லாம் பள்ளிகளில் 'ஆரிய மத உபாக்கியானம்' எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நம் தலைவர், தமிழ் நாட்டுக் காங்கிரசிலே பெருந்தலைவராக இருந்த காலம்.

ஆரியர்-திராவிடர் பிரச்சினை, ஓர் ஆராய்ச்சி—வரலாறு. இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை.

ஆரியம் என்பது, ஓர் வகைக் கலாச்சாரம்— வாழ்க்கை முறை.

திராவிடம், அதுபோன்றே, தனியானதோர் வாழ்க்கை முறை.

இது, இன்று விளக்கமாக்கப்படுவதுபோல, பாரதியாரின் நாட்களில் கிடையாது.

பல ஜாதி—பல தெய்வ வணக்கம்—பற்பல விதமான மூட நம்பிக்கைகள்—தெய்வத்தின் பெயர்கூறித் தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு— இவைதாம் ஆரியம்!

'ஒன்றேகுலம்,ஒருவனே தேவன்' இது திராவிடம்.

இரண்டிலே எது நல்லது? எந்தக் கலாச்சாரத்துக்கு நீர் ஆதரவு தருவீர்? என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர் திராவிடக் கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார். அவருடைய பாடல்களில்—பிற்காலப் பகுதிகளில் —இந்தச் சூழ் நிலை இருக்கக் காணலாம்.

பாரதியார் விஷயத்தில் பகுத்தறிவாளர்களுக்குள்ள மதிப்பு, முதலில், பரம்பரை வழக்கப்படி அவர் தேவியின் வரப்பிரசாதம் பெற்றதாலோ, முனிவர் அருளாலோ, பஞ்சாட்சர உபதேசப்பலனாலோ, பாட ஆரம்பித்தார் என்று அருட்கவியாக்காது விட்டார்களே, அதுதான்.

நாமகளைத் துதித்தார்—நாலைந்து ஆண்டு—பலன் இல்லை. பிறகோர் நாள், 'அம்மே! இனி நான் உயிர் வாழேன்' என்று கூறி, நாவை அறுத்துக்கொள்ளக் கிளம்பினார்; உடனே களுக்கென ஓர் சிரிப்பொலி கேட்டது; அம்மை பிரசன்னமாகி, 'பாலகா! பாடு!' என்றாள்- உடனே அவர் பாடலானார்—பாடினார், பாடினார், பார் முழுதும் பாடல் பரவும்வரை பாடினார் என்று, பாரதியார் புராணம் கட்டாதவரையில், நமக்கெல்லாம் மிகக் களிப்பு! நமக்குக் களிப்பு என்பது மட்டுமல்ல, பாரதியாருக்கே உண்மையில் பெருமை. அவர் நாமகள் பூமகள் அல்லது வேறோர் தேவனின் அருள் பெற்றவரல்லர்; அவர் ஓர் கவி, சிந்தனையில் பட்டதைச் செந்தமிழில் கவிதை யாக்கினவர் என்பதனால்தான்.

கூடுமானவரையில், பாரதி விழாச் சொற்பொழிவாளர்கள். அவருடைய அருமை பெருமைகளை எடுத்துரைக்கையில், 'புராணம்' பேசாதிருந்ததுபற்றி நாம் மகிழ்கிறோம். அன்பர் ஆச்சாரியார் மட்டும், பாரதியாரை, ஓர் 'முனிவர்' என்று கூறினார் ஆனால் அதற்கும், அவர் வழக்கமான பொருள் கூறத் துணியார்.

பாரதியாருக்குள்ள பெருமை, முதலில் இது. மற்றோர் பெருமை, அவர், தம்முடைய நாட்களிலே, மற்றவர்களை விட வேகமாக முன்னேற்றக் கருத்துகளைப் பாடி, அதன் பயனாக அவருடைய சமூகத்தாராலேயே வெறுக்கப்பட்டு, "பார்ப்பனமேதைகள்" என்போரால் அலட்சியப் படுத்தப்பட்டு, வறுமையில் வாடி, அன்னிய ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு ஆளாகி, அல்லலை அனுபவித்து, அந்த அல்லலால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல் அரைக்க அரைக்க மணக்கும் சந்தனமானாரே, அந்தப் பண்பு.

அவருடைய பண்பு, ஜாதிக்கட்டுக்களை உடைத் தெறியக் கூடியதாக இருந்தது என்பது, அவருடைய கவிதைகளிலே, பல ரசமான இடங்களில் தெரிகிறது.

அவருடைய நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அந்த நாட்களில் நையாண்டி செய்யப்பட்டது! இன்று, அவருக்கு மகாகவி என்ற பட்டம் தரவும், பளிங்கு மண்டபம் கட்டவும் தமிழகம் முன் வந்தது! கவிஞரைப் போற்றும் மாண்புக்கும், அதைக் கவர்ச்சிகரமான முறையிலே நடத்திக்காட்டிய கல்கியின் நிறமைக்கும், நமது பாராட்டுதல்.

"பாரதி மண்டபத்தை, விழாவுக்காகப் போடப்பட்ட பந்தல் மறைத்துக்கொண்டிருக்கிறது" என்று,அன்று ஆச்சாரியார் பேசினார்.

மண்டபத்தைப், பந்தல் மறைக்கிறது !

மண்டபத்தை மட்டுமல்ல! தேசியக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே பெரிதாக்கி நாட்டிலே பரப்பிக் காட்டுவதால் பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரியவொட்டாதபடி மறைக்கப்படுகிறது !

பாரதியார், தோத்திரப் பாடல்கள் பல பாடினார். ஆனால், தேவார திருவாசகமும், திருவாய் மொழியும் பாடியானபிறகு பாடினார். எனவே, அவருடைய கவிதைகளிலே, தோத்திரப்பகுதி முக்கியமோ, அவருடைய, பெருமைக்குச் சான்றோ ஆகாது, வைதீகர்களின் நோக்கத்தின்படியேகூட, பாரதியார், வேந்தாந்தப் பாடல்கள் பல பாடியுள்ளார். ஆனால் அவருக்கு முன்னர்த் தாயுமானாரும் வள்ளலாரும் பாடிவிட்டனர். எனவே, அந்தப் பகுதியும் பழம் பதிப்புப் போன்றதுதான்.

அவருடைய நாட்டுப்பற்றுப் பாடலே, அவருடைய கவிதைகளில் மிக முக்கியமான-மற்றக் கவிகள் பாடாத காலத்திற்கேற்ற பலன் அளித்த பகுதி.

விடுதலைப்போர் புரிய அவருடைய கவிதைகள் தக்க கருவியாயின. எனவேதான், வெள்ளையன் வெளியேறிய விழாவுக்கு அடுத்ததாக, பாரதி மண்டபத் திறப்புவிழா நடைபெற்றது.

ஆச்சாரியார் சொன்னார், "அன்னிய ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல கவிகள் பாடல்கள் இயற்றினர். தமிழச்களுக்கு தமிழ்க் கவிதானே பயன்பட முடியும்? பாரதியார், அந்த வகையிலே தமிழருக்குப் பயன்பட்டார்" என்று.

ஆகவே, பாரதியாரின் பக்திப்பாடல் வேதாந்தப் பாடல் இவைகளைவிட, நாட்டுப்பற்றுப் பாடலே மகத்தான பலன் தந்தது! விழாக் கொண்டாடின அன்பர்கள் இந்தப் பகுதியைத்தான் விளக்கினார்கள் விஸ்தாரமாக. மதுரை முஸ்லீம் தோழர் ஒருவர், "பாரதியாரின் பாடல் ஆங்கிலேயரை ஓட்டிய அணுக்குண்டு" என்று கூறினார். தமிழகத்திலே காங்கிரசின் வெற்றிக்குப் பாரதியார் பாடல் மிகமிகத் தாராளமாகப் பயன்பட்டது. பயன்படுத்திக்கொண்டு பாராளும் அளவு உயர்ந்த பலர், பாரதியாரை ஏதோ ஓர் சமயத்திலே மட்டும் எண்ணுவதுடன் இருந்தனர். இக்குறையைப் போக்கி கவிஞரின் நினைவுக்குறியாக ஓர் அழகிய மண்டபத்தை அமைத் தார் கல்கி.

ஆச்சாரியார் சொன்னாரே பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று. அதுபோல,பாரதியரின் தேசியப் பாடல்களை மட்டுமே பரப்பிய காரணத்தால், நாட்டவருக்குப் பாரதியாரின் முழு உருவமும் தெரியவில்லை ! இனியாவது தெரியுமா என்றால், தெரியச் செய்தாலொழியத் தெரிவதற்கில்லை என்றே கூறலாம்.

                       "ஆடுவோமே பள்ளு பாடுவோமே !”
                       "வந்தே மாதரம் என்போம்"
                       "செந்தமிழ் நாடேன்னும் போதினிலே"
                       "தாயின் மணிக்கொடி பாரீர்"
                       "ஜெய ஜேய பாரத்"

இப்படிப்பட்ட பல தேசீயப் பாடல்களை, நாட்டு மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் கொண்டுவந்துள்ளனர். பாரதியார் அவ்வளவுதானா? அல்ல ! பாரதியாரின் முழு உருவம், அதுவல்ல ! அடிமை நிலை போக வேண்டும் என்ற கோபநிலையில் உள்ள பாரதி அது. ஆனால், அதைத் தாண்டி, நாட்டு உள்நிலை, மக்கள் மன நிலை இவைகளைக் கண்டு மனம் நொந்து வேதனைப் படும் பாரதி இருக்கிறார் ! மக்களின் மந்த மதியினைக் கண்டு, அவர்களை திருந்தவேண்டும் என்ற ஆவல் கொண்டு, துடிக்கும் பாரதி இருக்கிறார் ! நாடு எப்படி எப்படி இருக்கவேண்டும்? சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும்? என்ற இலட்சியம்கூறும் பாரதி இருக்கிறார்! தேசீயப் பாரதியின் உருவம் இத்தனை பாரதிகளை மறைக்கிறது, ஆச்சாரியார், பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று கூறினாரே அதுபோல!

பெரியபந்தல், விழாவுக்காக. மண்டபமோ கவியின் பெருமைக்குரிய சின்னம். விழா முடிந்ததும் பந்தலைப் பிரித்துவிடுவார்கள்—மண்டபம் நின்று அழகளிக்கும். அதுபோல், பாரதியாரின், 'தேசியக்கவிதை,' அன்னியரை ஓட்டும் அரும்பணிக்காக மட்டுமே அமைவது. அந்தக் காரியம் முடிந்ததால், இனி அந்தப் பந்தலுக்கு அவசியமில்லை. அவசியமில்லாததால் அது எடுபடும். அது எடுபட்ட பிறகுதான், பாரதியாரின் மனம் தெரியும். பாரதியாரின் முழு உருவமும் தெரிய, அவருடைய கவிதா சக்தியின் முழுப்பயனையும் பெற, அப்போது தான் முடியும்.

இனியும் மேடைகளிலே ஏறி, 'தாயின் மணிக்கொடி பாரீர்' போன்ற தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடிப் பயனில்லை.

தாயின் மணிக்கொடி பார்க்கினோம்; இங்கே காயும் வயிற்றையும் காண்பீர் என்று, மக்கள் முழக்க மிடுவர்! எனவே, எந்தப் பகுதியை மட்டும் அதிகமாகப் போற்றி நாட்டுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அந்தத் தேசீயப் பாடல் பகுதிக்குள்ள பயனும் ஜொலிப்பும், இனி இராது! ஆகவே, பாரதி பயன் இல்லையா?அல்ல, அல்ல! பயனுள்ள பகுதி, பலரறியாப் பாரதி! மறைக்கப்பட்ட பாரதி, இனித்தான் மக்களுக்குத் தெரியவேண்டும். தேசீயக் கவிக்கு அப்பால் நிற்கிறார், அந்தப் பாரதி! அந்தப் பாரதி, ஆங்கிலேயனை ஆரியப் பூமியிலிருந்து விரட்டும் பாரதி மட்டுமல்ல; நாட்டை விட்டுக் கேட்டினை எல்லாம் ஓட்டவேண்டு மென்று கூறும் பாரதி ! மேடைகளிலே, இதுவரை நிறுத்தப்படாத பாரதி ! தேசபக்தர்களின் நாவிலே நின்று, இதுவரை நர்த்தனமாடாத பாரதி ! மறைந்திருக்கிறார், பொன்னாலான பெட்டிக்குள் முத்துமாலை இருப்பதுபோல ! அந்தப் பாரதியை நாம் அறிமுகப் படுத்தினால், விழாக் கொண்டாடியவர்களிலேயே பலருக்கு, முகமும் அகமும் சுருங்கக்கூடும் ! ஆனால், அந்தப் பாரதி, நெடுநாட்களுக்கு மறைந்திருக்க முடியாது. வெளிவந்தாலோ, இன்று அவரை வந்திருக்கும் பலரே, நிந்திக்கவும் கூடும் ! இதோ அந்தப் பாரதி—பந்தலால் மறைக்கப்பட்டுள்ள மண்டபம் !

பண்டைப் பெருமை—பழங்கால மகிமை—அந்த நாள் சிறப்பு —என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களை நாம் எவ்வளவோ கெளரவமாகத்தானே கேட்கிறோம், "ஐயோ ! பழைய காலத்தைக் கட்டிப் பிடித்தழுகிறீரே, இது சரியா?" என்று.

பலருக்குத் தெரியாத முழுப் பாரதி, அவர்களை இலேசில் விடவில்லை ! 'மூடரே !' என்று அவர்களை விளிக்கிறார், கேட்கிறார் அவர்களை.


          "முன்பிறந்ததோர் காரணத் தாலே
           மூடரே, பொய்யை மெய்யென லாமோ?
           முன்பெனச் சொல்லும் கால மதற்கு
           மூடரே, ஓர்வரை துறை யுண்டோ?

           முன்பெனச் சொல்லின், நேற்று முன்பேயாம்
           மூன்றுகோடி வருடமு முன்பே !
           முன் பிறந்த தெண்ணிலாது புவிமேல்
           மொத்த மக்களெலா முனிவோரோ?
           நீர் பிறக்கு முன் பார்மிசை மூடர்
           நேர்ந்ததில்லை என நினைத்தீரோ?
           பார் பிறந்ததுதொட் டின்றுமட்டும்.
           பலபலப்பல பற்பல கோடி !
           கார்பிறக்கு மழைத்துளி போலே
           கண்ட மக்க ளனைவருள்ளேயும்,
           நீர் பிறப்பதன் முன்பு மடமை
           நீசந்தன்மை இருந்தன வன்றோ?"

பழமை விரும்பி, என்ன எண்ணுவான் பாரதியாரைப்பற்றி?

          "சென்றதினி மீளாது மூடரே நீர்
           எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
           கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
           குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா,
           இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
           எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
           தின்றுவிளை யாடி இன்புற் றிருந்து வாழ்வீர்
          தீமையெலாம் அகன்றுபோம் திரும்பி வாரா."

மற்றுமோர் சாட்டை, வெந்ததைத் தின்ற வாயில் வந்ததைப் பேசுபவர்களுக்கு வகையாகத் தருகிறார் பாரதி! "சென்றது இனி மீளாது." மூடரே! மனுதர்மம் இருந்ததே! அரசுகளிலே ஆதிக்கம் இருந்ததே! நமது வலக்கரத்திலே அக்னி இருந்ததே! நம்மைக் கண்டதும், மற்றவர்களுக் கெல்லாம் பயபக்தி இருந்ததே! இவை எல்லாம் இன்று இல்லையே! மீண்டும் கிடைக்கப் பெறுவோமா என்றெல்லாம், எண்ணி எண்ணி ஏங்காதீர்! "சென்றது இனி மீளாது!" என்று திட்டமாகக் கூறுகிறார்.'கூறுகிறேன் சேளுங்கள் மூடர்களே!' என்று, இடித்துரைத்துப் பேசுகிறார். இந்தப் பாரதி, மேடையிலே தோன்றாத பாரதி!


"செந்தபிறகு சிவலோகம் வைகுண்டம்
சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பர்
பித்தமனிதர்"


"சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்"


"அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடு வீரே!
பெரும்புகழ் உமக்கே இசைக்கின் றேன் நான்
பிரமதேவன் கலைபிங்கு நீரே"


"பெண்ணுக்கு விடுதலைநீர் இல்லே யென்றல்,
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை!"

தேசியக் கவிஞரால் மறைக்கப்பட்டுள்ள புரட்சிக் கவிஞர் தெரிகிறார், இன்னும் தெளிவாக!


"நெஞ்சு பொறுக்கு தில்லையே—இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்"

என்று சோகிக்கிறார் பாரதி! ஏன் நிலைகெட்டுவிட்டது? தேசியக் கவியாகமட்டும் இருப்பின், பரங்கி பிடித்தாட்டப் பாரதநாடு பரதவித்தது என்றுமட்டுமே கூறுவார். ஆனால், பலருக்குத் தெரியவிடாதபடி மறைக்கப்பட் டிருக்கும் முழுப்பாரதி, பேசுவதைக் கேளுங்கள்.

"அஞ்சி அஞ்சி சாவார்—இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!
வஞ்சனை பேய்களென்பார் இந்த
மரத்திலென்பார் அந்தக் குளத்திவென்பார்!
துஞ்சுது முகட்டிலென்பார்!—மிகத்
துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!
மந்திரவாதி யென்பார்—சொன்ன
மாத்திரத்திலே மனக் கிலி பிடிப்பார்!
யந்திர சூன்யங்கள்—இன்னும்
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!"

சாடுகிறார், சாடுகிறார், மூட நம்பிக்கைகளை!

"கொஞ்சமோ பிரிவினைகள்?—ஒரு
கோடி யென்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான்—அப்பன்;
ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால்,
நெஞ்சு பிரிந்திடுவார்—பின்பு
கெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்!"

இங்ஙனம், சமுதாயத்திலே உள்ள கேடுகளை - மனதிலேயுள்ள தளைகளை—மூடக்கொள்கைகளைத் தாக்குகிறார், தமது கவிதா சக்தியைக்கொண்டு! 'பாரதியாரா?' என்று ஆச்சரியத்துடன் நாடு கேட்கும், அவர் சொன்ன தத்தனையும் சொல்லப்போனால்! ஆனால், அந்தப் பாரதியாரை, அரும்பாடுபட்டு மறைத்திருக்கிறார்கள்!

"பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே!"

என்ற ஒரு வரியைக்கூட, அவர் சொன்னதாகச் சொல்ல அஞ்சி மறைத்தனர், அருந்தமிழ் நாட்டவர் தான்! பாரதியார், அந்தச் சமுதாயத்தை மேலும் என் னென்ன கூறினார் என்று தெரிந்தால்தானே, பாரதியாரின் முழு உருவம் தெரியும்?

"இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்—அவர்
ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார்!
பிள்ளைக்குப் பூணூலா மென்பான்—நம்மைப்
பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்!
பேராசைக்காரனடா பார்ப்பான்!—ஆனால்
பெரியதுரை என்னில் உடல் வேர்ப்பான்!
யாரானாலும் கொடுமை செய்வான்!—பணம்
அள்ளி இடவில்லை யெனில் வைவான்!"

மகாகவி பாரதியின் வாக்கு, பேராசைக்காரனடா பார்ப்பான்! என்பது. மேடைகளிலே கேட்டதுண்டா? பாரதி சிறப்புவிழாக் கூட்டங்களிலே, இந்தப் பாரதி தெரிந்தாரா? இல்லை! அவர் மறைந்திருக்கிறார், மண்டபம் பந்தலால் மறைக்கப்பட்டிருப்பதுபோல! விழா முடிந்தது; பந்தலும் பிரிக்கப்பட்டது; மண்டபம் தெரிகிறது என்பது போல, வெள்ளையர் வெளியேறும் விழா முடிந்தது! இனித், தேசியக் கவிதை அலங்காரத்தைக் கடந்து நிற்கும், பாரதி காணவிரும்பிய புது சமுதாயம்!

"ஏழை என்றும் அடிமை என்றும்
எவனுமில்லை, ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்போர்
இந்தியாவில் இல்லையே!"

என்ற இலட்சியம் ஈடேறிய நிலைபெற்ற சமுதாயம், மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்க மில்லாத சமுதாயம், பழமை மோகத்தில் படியாத சமுதாயம், காசியில் பேசுவதைக் காஞ்சியிலுள்ளோர் கேட்பதற்கான கருவி செய்யும் சமுதாயம், அத்தகைய புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி நிற்கிறார். ஆனால் அவரைப், பந்தல் மறைத்துக்கொண்டிருக்கிறது! அவரை, நாட்டுக்குத் தெரியவிடாதபடி செய்வதில், பலருக்கு இலாபம் இருக்கிறது! எனவே. தேசியக் கவிமட்டுமே தெரியவேண்டும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்வார்! ஆனால், அந்த எண்ணமும் ஈடேறுவதற்கில்லை. மக்களுக்குத் தெரிய ஒட்டாது அவர்கள் மறைத்து வைத்துள்ள பாரதியார், உண்மையில் மறைந்துவிடவில்லை. அதோ பாடுகிறார், கேளுங்கள்.

"இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி
இருக்கின்ற தென்பானும்....."

இது பாரதிதாசன் குரல் அல்லவா? என்பீர்கள். ஆம்! பாரதிதாசன்தான்! அவர்தாம், மணிமண்டபத்தைவிட விளக்கமாக, முழுப் பாரதியைத் தமிழகத்துக்குத் தரும் அரும்பணியாற்றுகிறார், அவரிடம் நாங்கள், முழுப் பாரதியாரைக் காண்கிறோம். களிக்கிறோம், வாழ்த்துகிறோம்.

"அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
உடலினை உறுதி செய்
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
கால மழியேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித்தொழில் செய்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
சரித்திரத் தேர்ச்சிகொள்
சாவதற் கஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சூரரைப் போற்று
சோதிடந் தனையிகழ்
தெய்வம்நீ என்றுணர்
தையலை உயர்வு செய்
தொன்மைக் கஞ்சேல்
நினைப்பது முடியும்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்

பிணத்தினைப் போற்றேல்
புதியன விரும்பு
பேய்களுக் கஞ்சேல்
போர்த்தொழில் பழகு
முனையிலே முகத்தநில்
மேழி போற்று
யாரையும் மதித்துவாழ்"

இவை, பாரதியாரின் புதிய ஆத்திசூடி! புதிய பாதை! பாரதி பாதை ! தேசீய மணி மண்டபத்தோடு முடிந்து விடுவதல்ல, அதற்கும் அப்பாலுள்ள சமதர்ம புரிக்குப் போவதற்கு அமைந்த பாதை! அந்தப் பாரதி பாதையை அமைத்துக்கொண் டிருக்கும் — அரும்பணியாற்றும் நாம், பாரதியார் பெற்ற சிறப்புக்கண்டு பெருமை யடைவதுடன், பாரதியாரின் முழு உருவமும் மக்களுக்குத் தெரியச் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டுள்ளோம் பாரதி காட்டிய பாதையை, நாடு நன்கு அறியவேண்டும் ! பரங்கியை ஓட்டிவிடுவது மட்டுமல்ல அது. நாட்டின் கேட்டுக்குக் காரணமாக உள்ளதனைத்தையும் ஓட்டிப், புதிய சமூக அமைப்பாக்கும் பாதை! அந்தப் பாரதி பாதையை நாம் போற்றுகிறேம்!