மகாகவி பாரதியார்/பாரதியார் நாமம் வாழ்க!
பாரதியார் நாமம் வாழ்க!
வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
தாளேந்திக் காத்தநறுத் தமிழ்மொழியைத்
தாய்மொழியை உயிரை இந்த
நாள்ஏந்திக் காக்குநர்யார்? நண்ணுநர்யார்?
என அயலார் நகைக்கும் போதில்,
தோளேந்திக் காத்தஎழிற் சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
கிளைத்தமரம் இருந்தும்வெயிற் கீழிருந்து
வாடுநர்போல் நல்லின் பத்தை
விளைத்திடுதீந் தமிழிருந்தும் வேறுமொழி
யே வேண்டி வேண்டி நாளும்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
கனிந்தபடி தோலுரித்துச்
சுளைத்தமிழாற் கவியளித்த சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை
சுவையூட்டம் தந்து, சந்த
அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
நற்காதல் ஆழம் காட்டித்
தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
தமிழறிவில் தறுக்குண் டாக்கிச்,
சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு
விடுதலையை மறுத்தி ருக்கும்
துக்கநிலை தனையகற்றித் தூயநிலை
உண்டாக்கிப் பெண்மை தன்னில்
தக்கதொரு தாய்த்தன்மை, சமத்வநிலை
காட்டி, உயிர் தளிர்க்கும் காதல்
துய்க்கும்விதம் எழுத்தளித்த சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்புப்
பெரியாரின் துணையும் வேண்டும்.
விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கோ
ஊக்கமில்லை. கட்டா யத்தால்
வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்
சுவைக்கவியால் மனத்தைஅள்ளித்
தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
நிதிபெருக்கும் மனிதர்களும், நெடுந்தேக
பக்தர்களும், தலைவர்தாமும்,
கதிபெருக்க ஏடெழுதும் ஆசிரியர்
என்பவரும் கவிதையென்றால்
மிதிஎன்பார்! தமிழ்க்கவியைப் புதுவகையில்
மேலெழுப்பிக் கவிகள் தம்மைத்
துதிபுரியும் வகைதந்த சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
பேசுகின்ற தமிழினிலே சுவைக்கவிதை
தரவறியாப் பெரியோரெல்லாம்,
பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்
வேண்டுவன பெறுதல்கண்டும்,
ஏசிநின்றார் அவர்சகிதம் தமிழ்க்கவிதை
யுலகினிலே எசமான் ஆன
தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங்கவிஞன்
ஐரிஷ்மொழி வளரச்செய்தான்!
அயர்லாந்தில் அதன்பிறகே உணர்வுபெற
லாயிற்றென் றறிஞர்சொல்வார்.
பெயர்பெற்ற கவிதைகளின் பெற்றியினைத்
தமிழர்களும் காணச்செய்து
துயர்நீக்கும் சுடர்க்கவிஞர் சுப்ரமண்ம
பாரதியார் நாமம் வாழ்க!
எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்
இசைந்திருந்த ஷேக்ஸ்பியேரும்,
சொல்லும்விக்டர் உய்கோவும், டால்ஸ்டாயும்,
ரவிந்திரனும் சொந்தநாட்டில்
நல்லசெயல் செய்தார்கள்! நடைப்பிணங்கள்
மத்தியிலே வறுமை என்னும்
தொல்லையிலும் தொண்டுசெய்த சுப்ரமண்ய
பாரதியார் நாமம் வாழ்க!
வாழ்கஎழிற் பாரதியார் திருநாமம்
வையமிசை எந்தநாளும்!
வாழ்கதமிழ்! தமிழ்க்கவிதை! தமிழ்நாட்டார்
மாவீர ராகி எங்கும்!
வாழ்க அவர் வகுத்தநெறி வருங்கவிதா
மண்டலமும் கவிஞர்தாமும்!
வாழ்க நனி சமத்துவநல் லுதயமதி
வார்ந்தபுகழ் நிலவு நன்றே!