முக அழகைக் காப்பது எப்படி/ஒப்பனையால் உருவாகும் அற்புத முகம்

விக்கிமூலம் இலிருந்து
7. ஒப்பனையால் உருவாகும் அற்புதமுகம்

முகத்தைப் பற்றி முன்னரே நாம் விளக்கமாக எழுதியிருக்கிறோம்.

மனிதர்கள் மனதிலேயுள்ள நவரசங்களையும். சுவாரஸ்யங்களையும். அதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகின்ற விந்தைமிகு உறுப்புதான் முகம் என்று.

அகத்தில் உள்ளதை முகந்து வெளியே கொண்டு வருவதால் அதற்கு முகம் என்று பெயர்வைத்தார்களோ என்னவோ.

உலகத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் எல்லாம். தங்களுக்கு ஏற்படுகிற உணர்ச்சி பாவங்களையெல்லாம். உரக்கக் குரல் எழுப்புவதால் அல்லது உடல் அசைவால்தான் வெளிக் காட்ட முடிகிறதே தவிர மனிதர்களைப்போல் முகபாவம் காட்ட முடியவில்லை.

காரணம் என்னவென்றால் மனித முகத்தின் அமைப்புத்தான். ஒரு முகமானது. 14 எலும்புகளாலான சிறு சிறு மூட்டுக்கள். ½ அங்குலம் ½ அங்குலம் கொண்ட சிறு தசைகளினாலான வடிவம். இந்தச் சிறு சிறு தசைகளினால்தான் மனித முகம் நவரச குணம் காட்டுகிறது.

மிருகங்களின் முகங்கள் எல்லாம். நீண்ட தசைகளாலும், தடித்த எலும்புகளாலும் உண்டாகியிருப்பதால் முகபாவங்களை வெளியே காட்ட முடிவதில்லை. இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள். முகத்தில் ஏற்படுகிற நவரசங்களும். அப்போது உடலில் ஏற்படுகின்ற வித்தியாசமான இயக்கங்களும், அந்த இயக்கத்திற்குத் தரப்பட்டுள்ள வினோதமான பெயர்களும். உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.

1. வருத்தம் ஆற்றாமல் இருதோள்மேல் தலை சாய்த்துக் கொண்டிருக்கும் முகம். அதன் பெயர் அஞ்சிதம்.

2. தலை குனிந்து அடுத்தவரைப் பார்த்தல். அதற்குப் பெயர் அதோமுகம்.

3. சம்மதித்ததற்கு அறிகுறியாகக் மேல் கீழாகத் தலையாட்டல் அகாம்பிதம்.

4. அதிசயத்தால் சிறிதளவு சிறிதாய் தலையாட்டுதல் பிரகம்பிதம்.

5. ஆசையால் மலர்ந்த முகமாய் ஒருவரை அழைத்தல், அலோவிதம்.

6. விந்தையால் ஒருதோள் மேல் தலை சாய்த்தல். உலோபிதம்.

7. தலை அண்ணாந்து பார்த்தல் உத்வாகிதம்.

8. தியானித்தல்போலத் தலை அசையாது இருத்தல் சமம்.

9. பூரித்த மகிழ்ச்சியால் மலர்ந்த முகம் காட்டல், செளந்தரம்.

10. வேண்டாததற்கு முகம் திருப்பலே, பராவிருத்தம்.

11. மதத்தால் ஒருபுறம் சாய்ந்து, தலையைச் சிறிதாய்ச் சுற்றியாட்டல், பரிவாகிதம்.

12. நாணத்தால் தலையாட்டலே திரச்சீன முகம்.

இப்படி எந்த உடலியக்கத்திற்கும் ஏற்றாற்போல் முகத்தில் பாவம் காட்டுவது ஒரு பெரிய கலையாகவே நமது தமிழகத்தில் விளங்கியிருக்கிறது.

ஆகவே, முகம் என்பதைக் கவனிக்காமல், நாம் பாராமுகமாய் இருந்துவிட்டால் அது அவலெட்சணமாகிக் கடைசியில் தீராச் சோகமாகிவிடும்.

நீங்கள் நிதமும் மிகவும் அக்கறையுடன் முகத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கண்காணித்துக் கொள்ள வேண்டும். களங்கமில்லாத முகமாக, கறைபடாத முகமாக, காணும்போதே கவர்ச்சியாகத் தோற்றமளிப்பது போலப் பார்த்துக் கொள்ள வேண்டும். பராமரித்து வாழவேண்டும். இதை எப்படியெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதையும் தொடர்ந்து காண்போம்.

1. முகத்தை சுத்தமாக்குதல் (steaming)

உங்கள் முகத்தின் தோல்பகுதி நன்கு சுத்தமாகவும், தூய்மையாகவும் தோற்றமளிக்கத் தண்ணீரால் ஒத்தடம் கொடுத்தல். குளிர்காலமாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்துக் கொண்டு. அந்தச் சூட்டில் எழுகின்ற ஆவியிலே வேவு பிடித்தல் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு முகத்தில் மட்டும் ஆவிபடுவதுபோல அங்கு ஏற்படுகிற வியர்வை முகத்தோலில் உள்ள நுண்ணிலையாக விளங்கும் துவாரங்களை (Pores) திறந்து விடுகிறது. அதனால் முகத்தோலிலுள்ள அழுக்குகள் நீங்கிப்பதமான சூட்டின் காரணமாக இதம் பெற்றுக் கொள்கிறது. பத்து நிமிடம் இவ்வாறு செய்கிறபோது முகத்தோலின் அழுக்கு நீங்கி, அழகு மெருகேறிய முகமாகக் காட்சியளிக்கிறது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணிரால் முகம் கழுவ, திறந்த நுண்துவாரங்கள் மூடிக் கொள்கின்றன.

2. சோப்பால் முகம் கழுவுதல் (Soap Washing)

சோப்பால் முகம் கழுவுதல், எளிமையான, அதே நேரத்தில் இனிமையான வேலைதான். ஆனால் உபயோகிக்கும் சோப்பை மிகவும் எச்சரிக்கையுடன் தேர்ந்து எடுக்க வேண்டும். ஏனென்றால், சில சோப்புக்கள் கடுமையான வீரியம் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும். அந்தச் சோப்பின் காரமானது, இயற்கையாகவே முகத்திலிருக்கும் எண்ணெய் பசையை அழித்து விட்டு, முகத்தோலின் நெகிழ்ச்சித் தன்மையையும். நீர்க்காப்புத் (Water Proof) தன்மையையும் பாதிப்பதுடன் ஒரு இறுக்கமானமுக அமைப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே, நீங்கள் தேர்வு செய்கிற சோப்பு நுரைவருகிற அளவுக்கு. முகத்தை கழுவுகிற தன்மையும், உங்கள் முகத்துக்கு நல்ல பொலிவை உண்டாக்கித் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

3. துடைப்பான்கள் (Cleansers)

எண்ணையும், தண்ணீரும் கலந்து தயாரிக்கப்பட்ட ஒருவகையான திரவத்திற்குப் பெயர் துடைப்பான்கள். இது சோப்பைவிட மிகவும் செளகர்யமான ஒப்பனைப் பொருளாகும்.

சுத்தமான விரல்களால், திரவத்தைத் தொட்டு, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். சிறிது நேரம் கழித்துப் பஞ்சால் திரவம் தேய்த்த பகுதியை எல்லாம் அழுத்தித் துடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அழுக்கு நீங்கி, வறட்சியான தோல் நிலமையை மாற்றி முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது.

குறிப்பு: அழகு சாதனக்கடைகளில் “(Cleansers)” என்று கேட்டு வாங்கி உங்கள் முகத்திற்கு ஏற்ற துடைப்பான்களைப் பெற்றுக் கொள்ளவும்.

4. கிறீம் (Cream)

முகம் கழுவியபிறகு, முகத்தோல், வறட்சியாக இருந்தாலோ, அல்லது இறுக்கமாக இருந்தாலோ, அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தி சுகமான ஒரு இதம் தருகிற கிறீம்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடுமையான வெயிலிலோ அல்லது கடுங் குளிரில் செல்லும் பொழுதோ இயற்கையாய் முகத்திலே இருக்கும் எண்ணெய்ப்பசை போன்ற ஒரு அமைப்பை இந்தக் கிறீம்கள் ஏற்படுத்தி விடுகின்றன.

நம்மவர்களில் பலர் முகத்தின் அழகிற்காகத் தயிரைத் தேய்த்துக் கொள்வார்கள் கொஞ்ச நேரங்கழித்து அலம்பிவிட முகப் பொலிவு தோன்றும். ஒரு சிலர் சாறு பிழிந்த எலுமிச்சம் பழத்தோலினால் முகத்தைத் தேய்த்துக் கொண்டு பிறகு அலம்புகிறபோது. முகத்தோற்றத்தில் ஒரு சுகமிருப்பதை உணரலாம்.

கோழிமுட்டையின் வெள்ளைக் கருவைச் சிலர் தேய்த்துப் பின் அலம்பிவிட்டு சிலர் முகப்பொலிவு பெறுவார்கள். இப்படி நாட்டுவைத்திய முறையிலே பல வழிகள் உண்டு.

எனவே உங்கள் இயற்கையான முகம், எண்ணெய்ப்பசை, தோல் அமைப்பு இவற்றுக்கேற்ப உங்கள் முக அழகைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஒப்பனையையும் அதற்கேற்ற முறையில் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம். எழுந்தால். முக அலங்காரத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிறுவனத்துக்கு (Beauty Parlour) சென்று ஆலோசனை பெறவும்.