முதற் குலோத்துங்க சோழன்/சோழரும் சளுக்கியரும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

௳ 

முதற்
குலோத்துங்க சோழன்

முதல் அதிகாரம்
சோழரும் சளுக்கியரும்


நம் தமிழகம்[1] சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று.[2] இவற்றுள், சோழமண்டலம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்[3] எனவும் வழங்கப்பெறும். இதனைப் பண்டைக் காலமுதல் ஆட்சிபுரிந்துவந்தோர் தமிழ் வேந்தர்களுள் ஒருவராகிய சோழமன்னர் ஆவர். இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழமன்னர்களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர்களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும் ; கொடியும் இலச்சினையும் புலியாம்[4]. வடவேந்தரையொப்ப இன்னோர் சூரியகுலத்தினரென்றும் காசிபகோத்திரத்தினரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன[5].

பரசிராமர் அரசகுலத்தினரை அழித்தொழிப்பதையே தம் பெருநோன்பாகக் கொண்டு இப்பரத கண்டம் முழுவதும் சுற்றிவந்த நாட்களில், காவிரிப்பூம்பட்டினத்தில் காந்தமன் என்ற சோழமன்னன் ஒருவன் அரசாண்டுவந்தான். அவன் பரசிராமரது வருகையைக் கேட்டுப் பெரிதும் அஞ்சி, பூம்புகார்த் தெய்வமாகிய சம்பாபதிபாற் சென்று, தான் உய்யும்வழி யொன்றுணர்த்துமாறு பணிவுடன் வேண்டினன். அஃது அவனது காதற்கணிகையின் புதல்வனாகிய ககந்தனுக்கு முடிசூட்டிவிட்டு அவனைக் கரந்துறையுமாறு அறிவுறுத்திற்று[6]. அவனும் அங்ஙனமே கரந்துறைதலும் சோணாடு சென்ற பரசிராமர் அரியணையில் வீற்றிருந்து அரசாளுவோன் அரசகுலத்தினன் அல்லன் என்பதையறிந்து கணிகையின் புதல்வனாகிய அவனைக் கொல்லுதல் தம் நோன்பிற்கேற்றதன்று எனக் கருதி அந்நாட்டை விட்டகன்றனர். பரசிராமருக்குப் பயந்து கரந்துறைந்த இக் காந்தமன் என்பவனே காவிரியாற்றைக் கொணர்ந்த பெருந்தகையாளன் என்று பழைய தமிழ் நூலாகிய மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது[7]. பிற்றைநாளில், அப்பரசிராமர் இராமபிரான் திருமணஞ்செய்துகொண்டு மிதிலை மாநகரிலிருந்து திரும்புங்கால் அவரை எதிர்த்துத் தோல்வியுற்று, அரச குலத்தினரை வேருடன் களைதற்கெண்ணிய தமது எண்ணத்தை முற்றிலும் ஒழித்து, மலைச்சாரல் சென்று தவம்புரிந்தனர் என்பது இராமாயணத்தால் அறியக் கிடக்கின்றது.

இனி, இராமாயண காலத்தில் சோழ மன்னருள் ஒருவன் மலையமலையிலிருந்த அகத்தியமாமுனிவரது ஆணையால் மக்களது இன்னலைப் போக்குமாறு, வானத்தின்கண் அசைந்துகொண்டிருந்த மூன்று மதில்களை அழித்தனன் அக்காரணம்பற்றியே சிலப்பதிகாரமும் புறநானூறும் அவனைத் 'தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்' என்று புகழ்ந்து கூறுகின்றன.[8]

பாரதப்போர் நிகழ்ந்த நாட்களில் ஒரு சோழ மன்னன் போர்முடியும் வரையில் தருமன் படைக்கு உணவளித்து உதவிபுரிந்தனன் என்று கலிங்கத்துப் பரணியுரைக்கின்றது.[9]

ஆகவே, இராமாயண பாரத காலங்களிலும் அவற்றிற்கு முந்தியநாட்களிலும் சோழகுலத்தினர் மிகச் சிறப்புற்று விளங்கினர் என்பது இனிதுணரப்படுகின்றது.

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், மகதநாட்டில் செங்கோல் செலுத்திய அசோகனது ஆணையை யுணர்த்துங் கல்வெட்டுக்களிலும் சோழரைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கி பி. முதல் நூற்றாண்டில், மேனாட்டினின்றும் தமிழ்நாடுபோந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பானது வரலாற்றுக் குறிப்பிலும், மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால், அப்பழைய காலத்தில் எழுதப்பெற்ற 'பெரிப்ளஸ்' என்ற நூலிலும் சோழரைப்பற்றிய உயரிய செய்திகள் காணப்படுகின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அன்னாருடன் வாணிபத் தொடர்புடையராய்ப் பெருமையோடு வாழ்ந்துவந்தனர் என்பது பெறப் படுகின்றது.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, சோழகுலத்தினர் நம்மனோரால் ஆராய்ந்து அளந்து காணமுடியாத அத்துணைப் பழங்காலமுதல் நம் தமிழ்நாட்டின் கீழ்ப்பகுதியாகிய சோழவளநாட்டில் வீற்றிருந்து, அதனைச் சிறப்புடன் ஆண்டுவந்த அரச குலத்தினர் ஆவர் என்பது நன்கு விளங்குதல் காண்க.

இனிச் சளுக்கியர் என்பார், வடநாட்டினின்றும் போந்து, பம்பாய் மாகாணத்தின் தென்பகுதியிலுள்ள இரட்டபாடி நாட்டை, வாதாபிநகரம்,[10] மானியகேடம், கலியாணபுரம் முதலான நகரங்களில் வீற்றிருந்து அரசு புரிந்துவந்த ஓர் அரசகுலத்தினர் ஆவர். சீன தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த வழிப்போக்கனாகிய யுவான் சுவாங் என்ற ஆசிரியன், சளுக்கியரது போர்வன்மையைத் தன் நூலுட் புகழ்ந்திருத்தலோடு வடவேந்தனாகிய ஹர்ஷவர்த்தனனைத் தென்னாட்டிற்குச் செல்லாதவாறு போர்புரிந்து விலக்கிய இரண்டாம் புலிகேசி என்பவன் இச்சளுக்கிய குலத்தில் தோன்றிய மன்னன் என்று பாராட்டிக் கூறியுள்ளான்.[11]

இரண்டாம் புலிகேசியின் தம்பியாகிய குப்ஜ விஷ்ணு வர்த்தனன் என்பான் கிருஷ்ணை, கோதாவரி என்ற இருபேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கீழைச்சளுக்கிய நாடொன்றை அமைத்தான்.[12] இது நிகழ்ந்தது முதல், சளுக்கியர் கீழைச்சளுக்கியர் மேலைச் சளுக்கியர் என்ற இரு கிளையினராயினர்.

இன்னோர் சந்திரகுலத்தினர் என்றும் மானவிய கோத்திரத்தார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவர்களுக்குரிய கொடியும் இலச்சினையும் பன்றி என்பர்.

பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளிற் சோழருக்கும், மேலைச் சளுக்கியருக்கும் அடிக்கடி பெரும் போர்கள் நடைபெற்றன ; ஆனால், கீழைச் சளுக்கியர் சோழ மன்னரது பெண்களை மணஞ்செய்து கொண்டு அன்னோர்க்கு நெருங்கிய உறவினராய் நட்புற்று வாழ்ந்து வந்தனர். இவ்வுண்மையை அடுத்த அதிகாரத்தில் நன்கு விளக்குவாம். 1. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்’ –
        சிலப்பதிகாரம் - அரங்கேற்றுகாதை 37.

 2. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
  நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
  யாப்பின் வழிய தென்மனார் புலவர்’
      தொல்–பொருள்–செய்யுளியல்–சூத்-79.

 3. தண்பணை தழீஇய தளரா விருக்கைக்
  குணபுலங் காவலர் மருமான்’–
         சிறுபாணாற்றுப்படை–78, 79.

 4. 4. 'நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே'- புறநானூறு-45 'புலிபொறித்துப் புறம்போக்கி' - பட்டினப்பாலை-135
 5. 5. கலிங்கத்துப்பரணி - தாழிசைகள் 173, 174. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 1, 2, 3. இராசராசசோழனுலா - ௸ 1, 2, 3.
 6. 6. மணிமேகலை --சிறைசெய்காதை 25- 100
 7. 7. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை ' -- மணிமேகலை - பதிகம் 9--12.
 8. 8. புறநானூறு 39. 'உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை' -- சிலப்பதிகாரம்-வாழ்த்துக்காதை.
 9. 9. கலிங்கத்துப்பரணி 181.
 10. 10. The Mcdern Badami in the Bijapur District.
 11. 11.Mysore Gazetteer Volume II Part II pages 708, 709 & 710
 12. 12. Mysore Gazetteer Volume II, Part II pages 707 & 708.