முதுமொழிக்காஞ்சி, 1919/சிறந்த பத்து
முதுமொழிக்காஞ்சி
I. சிறந்த பத்து.
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.
(பழைய பொழிப்புரை.) கடல் சூழ்ந்த உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலினும் மிக்க சிறப்புடைத்து ஆசாரமுடைமை.
(பதவுரை) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம்—மனிதர் எல்லார்க்கும், ஒழுக்கமுடைமை—சதா சாரமுடை யவராதல், ஓதலின்—நூல்களைக் கற்றலைக் காட்டிலும், சிறந்தன்று—சிறந்ததாம்.
“ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்.”— ஔவையார்.
“மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.”-திருக்குறள்.
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.
(ப-பொ.) பிறர் தன் மேற் செய்யும் காதலினும் சிறந்தது கற்றவரால் கண்ணஞ்சப்படுதல்.
(ப-ரை.) காதலின்—ஒருவன் பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும், கண்ணஞ்சப்படுதல்—அவரால் அஞ்சப்படுதல், சிறந்தன்று—சிறந்தது.
பிறருடைய அன்பினும் நன்கு மதிப்பே சிறந்தது என்பதாம்.
காதல்—விருப்பம்; கண்ணஞ்சுதல்—அஞ்சுதல்; ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினாலே, பிறர் அஞ்சி நடத்தல்; கண்ணஞ்சப்படுதல்—பிறர் அஞ்சி நடக்கத் தக்க நன்கு மதிப்பு.
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை.
(ப-பொ.) தானாக ஒன்றை மதியுடைமையான் அறியும் அறிவினும் மிக்க சிறப்புடைத்துத் தான் கற்றதனைக் கடைப் பிடித்திருத்தல்.
(ப-ரை.) மேதையின்—புத்தி நுட்பத்தால் தானே ஒன்றை அறியும் அறிவைக் காட்டிலும், கற்றது மறவாமை—கற்ற நூல்களின் பொருளை மறவாதிருப்பது, சிறந்தன்று—சிறந்தது.
மேதை—அறிவு. கடைப்பிடித்தல்—மறவாதிருத்தல்.
கற்ற கல்வியை மறவாமையானது, அறிவு நுட்பத்தைக் காட்டிலும் சிறந்தது. அறிவு நுட்பம் மாத்திரம் அமைத்திருப்பது போதாது; கற்ற கல்வியை மறவாமையும் வேண்டும். நுட்பமாகப் பொருள்களை மேலு மேலும் நுனித்தறிய வல்லவனாயினும், ஒருவன் முன் குருமுகமாகக் கற்றதை மறவாமல் போற்றல் வேண்டும்.
4 வண்மையிற் சிறந்தன்று வாய்மை யுடைமை.
(ப-பொ.) செல்வத்தினும் மிக்க சிறப்புடைத்து மெய் யுடைமை.
(ப-ரை.) வாய்மை உடைமை—உண்மையுடைமை, வண்மையின்—செல்வமுடைமையைக் காட்டிலும், சிறந்தன்று—சிறந்தது.
வண்மையை ஈகையென்று கொள்வதுமாம்.
செல்வத்தா லாகும் நன்மையைக் காட்டிலும் வாய்மையா லாகும் நன்மை சிறந்தது.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.”—திருக்குறள்.
“வளமையிற் சிறந்தன்று”—பாடபேதம்.
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை.
(ப-பொ.) இளமையினும் மிக்க சிறப்புடைத்து உடம்பு நோயின்மை.
(ப-ரை.) மெய் பிணியின்மை—சரீர சௌக்கியம், இளமையின்—பாலியத்தைக் காட்டிலும், சிறந்தன்று—மிக்க சிறப்புடையது.
நோயோடு கூடியதாயின் இளமை வேண்டா; நோயில்லையாயின், முதுமையும் அமையும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்றது ஒரு மூதுரை.
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.
(ப-பொ.) அழகுடைமையினும் மிக்க சிறப்புடைத்து நாணுடைமை.
(ப-ரை.) நாணு—அடாத காரியங்களைச் செய்யக் கூசுதலானது; நலன் உடைமையின்—ஒருவன் அழகுடையவனாதலைக் காட்டிலும், சிறந்தன்று—மிக்க சிறப்புடையது.
“அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு” ஆதலின், “நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்”; “நலஞ்சுடும் நாணின்மை நின்றக்கடை” ஆதலால், நாணுடைமை நலனுடைமையின் சிறந்ததாம்.
நாணு என்பதில் உ சாரியை, நாணாவது “செய்யத் தகாதனவற்றின் கண் உள்ள மொடுங்குதல்.”
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று.
(ப-பொ.) நல்ல குலமுடைமையினும் கல்வியுடைமை சிறப்புடைத்து.
(ப-ரை.) கற்பு—ஒருவர் கல்வி உடையராதல், குலன் உடைமையின்—நற்குடிப் பிறப்பு உடையராதலைக் காட்டிலும், சிறந்தன்று—சிறப்புடையது.
உயர் குடிப் பிறப்பினும் சிறந்தது கல்வி.
“மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலா பாடு.”—திருக்குறள
“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்,
கீழ்ப்பா லொருவன் கற்பின்,
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே”—புறம்.
8. கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
(ப-பொ.) தான் ஒன்றைக் கற்குமதனினும் சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.
(ப-ரை) கற்றாரை—கல்வியறிவுடையாரை, வழிபடுதல்—உபசரித் தொழுகுதல், கற்றலின்—ஒன்றைக் கற்பதைக் காட்டிலும், சிறந்தன்று—சிறந்ததாம்.
ஒருவன் கற்றலும் வேண்டும்; கற்றாரை வழிபடுதலும் வேண்டும்; இவ்விரண்டிலும், வழிபாடு சிறந்ததாம். வழிபாடு செய்தலால், குருவருள் உண்டாகும். அஃதுண்டாகவே தான் கற்கலுற்றது கை கூடும். தண்டாப் பத்திலும் இந்நூல் “கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண் டான்” என்றுரைக்கின்றது.
“தேவானையர் புலவரும்; தேவர்
தமரனையர் ஓரூர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர்
கற்றாரைக் காதலவர்”- நான்மணிக்கடிகை
9 செற்றாரைச் செறுத்தலிற் றற்செய்கை சிறந்தன்று!
(ப-பொ.) பகைவரைச் செறுத்தலினும் மிக்க சிறப்புடை த்துத் தன்னைப் பெருகச் செய்தல்.
(ப-ரை.) தற்செய்கை—தன்னைப் பெருகச் செய்தல்; செற்றாரை—பகைவரை, செறுத்தலின்—தண்டித்தலினும், சிறந்தன்று—சிறப்புடையதாம்.
தற்செய்கை—தன்னைப் பகைவரினும் பெருகச் செய்தல்: அதாவது, அங்கங்களை அபிவிர்த்தி செய்தல்.
அரசன் தன் அங்கங்களை அபிவிர்த்தி செய்தால், பகைவர் தாமே அஞ்சி அடங்குவர்; தண்டோபாயத்தை அனுசரிக்கும் அவசியம் இல்லை. ஆகவே, பகைவரைத் தண்டிக்கப் புகுவதைக் காட்டிலும், அரசன் தன் அங்கங்களைப் பலப்படுத்துவதே சிறப்புடையது என்பதாம்.
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்”—திருக்குறள்.
10. முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று.
(ப-பொ). செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலின், நின்ற நிலையிற் சிறுகாமை சிறப்புடைத்து.
(ப-ரை.) முன் பெருகலின்—செல்வம் முற்காலத்துப் பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும், பின் சிறுகாமை—உள்ள அளவில் பின் குறையாமை, சிறந்தன்று—சிறப்புடையதாம்.
செல்வம், உள்ள அளவினும் ஓங்கி வளர்ந்து அழிவதைக் காட்டி லும், உள்ள அளவிற் குறையாதிருப்பதே சிறந்தது. “தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர், நிலையின் இழிந்தக் கடை”(திருக்குறள் ) ஆகையால், நின்ற நிலையில் தாழாமையே சிறந்தது. ஆகவே, நின்ற நிலையில் தாழாதபடி முயற்சி செய்தல் வேண்டும் என்பதாம்.