முதுமொழிக்காஞ்சி, 1919/பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்
பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம்
வனப்பிய றானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோ
டம்மை தானே அடிநிமிர் பின்றே.
என்னும் தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 236-சூத்திரத்தின் உரை, “சிலவாக என்பது எண்ணுச் சுருங்குதல். மெல்லியவாய்ச் சிலவாய சொற்கள், எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடிநிமிராதென்றது ஐந்தடியின் ஏறாதென்றவாறு. தாயபனுவலோ டென்றது,—இலக்கணஞ் சொல்ல எடுத்துக் கொண்ட அறம், பொருள், இன்பமென்னும் மூன்று மன்றி யும் வேறு இடையிடை தாய்ச் செல்வது என்றவாறு. அஃதாவது, பதினெண் கீழ்க்கணக்கு எனவுணர்க. அதனுள், இரண்டடியானும், ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம் பொருளின்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும், கார் நாற்பது, களவழி நாற்பது முதலாயின வந்தவாறும் கண்டு கொள்க”' என்று உரைத்திருக்கின்றது.
அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொரு ளின்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்
(பன்னிருபாட்டியல்)
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.
1. நாலடியார் - ஜைனமுனிவர்கள் இயற்றிய நானூறு வெண்பாக்களையுடையது, பதுமனார் என்பவர் இவைகளை
முப்பாலாய் நாற்பது அதிகாரங்களாகப் பகுத்து, உரையும் இயற்றினர். கடவுள் வாழ்த்தும் அவரே இயற்றிய தென்பர்.
2. நான்மணிக்கடிகை—விளம்பி நாகனார் இயற்றியது. கடவுள் வாழ்த்துட்பட நூற்றொரு வெண்பாக்களை யுடையது. ஒவ்வொன்றும் நந்நான்கு பொருளைக் கூறும்.
நானாற்பது
கால மிடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே
(இ-ள்.) காலமும், இடமும், பொருளும் பற்றி நாற்பது வெண்பாப் பொருந்த வுரைத்தல் நானாற்பதாம்.
காலம்பற்றி வருவது கார் நாற்பது. இடம்பற்றி வருவது களவழி நாற்பது. பொருள்பற்றி வருவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது. இன்னலாக்குதலை, இன்னாவென்றும் இனிமையாக்குதலை, இனியவை யென்றுங் கூறினார் (இலக்கண விளக்கம், பாட்டியல்—91-சூ).
3. இனியவை நாற்பது—மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் இயற்றியது. இன்ன தின்னது இனிதென்றுரைக்கும் நாற்பது வெண்பாக்களை யுடையது.
4. இன்னா நாற்பது—கபிலர் இயற்றியது. இன்ன தின்னது துன்பந் தரும் என்றுரைக்கும் நாற்பது வெண்பாக்களையுடையது.
5. கார் நாற்பது—மதுரைக் கண்ணங் கூத்தனார் இயற்றியது. கார் காலத்து வருவேனென்று வினை மேல் சென்ற தலைவன் வராமையின், தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதைக் கூறும் நாற்பது வெண்பாக்களை யுடையது.
6. களவழி நாற்பது—பொய்கையார் இயற்றியது. போர் செய்து தோல்வியடைந்த கணைக்காலிரும் பொறையைப் பற்றிப் போய்ச் சோழன் செங்கணான் சிறையிலிட்ட போது, பொய்கையார் களம் பாடி வீடு கொண்டார். இந்நூலின் பொருள், மேற்படி போர்க் கள வர்ணனை. அங்கங்கே காட்டியிருக்கும் உவமைகள் நிரம்ப அழகானவை.
ஐந்திணைச்செய்யுள்
உரிப்பொரு டோன்ற ஓரைந் திணையும்
தெரிப்ப தைந்திணைச் செய்யு ளாகும்.
(இ-ள்.) புணர்தல் முதலிய ஐந்து ஒழுக்கமும் விளக்கும் குறிஞ்சி முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக் கூறுவது ஐந்திணைச்செய்யுளாம். (இலக்கண விளக்கம்— பாட்டியல் —89-சூ.)
7. ஐந்திணையைம்பது—மாறன் பொறையனார் இயற்றியது ஒவ் வோர் அகப்பொருட்டிணைக்கும் பப்பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களை யுடையது.
8. திணைமொழியைம்பது—சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேந்தனார் இயற்றியது. ஒவ்வோர் அகப்பொருட்டிணைக்கும் பப்பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களை யுடையது.
9. ஐந்திணையெழுபது—வாதியார் இயற்றியது. அகப் பொருளைந் திணைக்கும் பதினான்கு பதினான்காகப் பாடிய எழுபது வெண்பாக்களை யுடையது.
10. திணை மாலை நூற்றைம்பது—மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியர் இயற்றியது. அகப் பொருளைந் திணைக்கும் முப்பது முப்பதாகப் பாடிய நூற்றைம்பது வெண்பாக்களை யுடையது.
11. முப்பால்—திருக்குறள் (திருவள்ளுவப் பயன்) - திருவள்ளுவ நாயனார் இயற்றியது. அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பால் என்னும் முப்பாலாய், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாய், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களை யுடையது. பரிமேலழகர் உரை பயில வழங்குகின்றது. இந்நூலின் பெருமையை உணர்த்துவது திருவள்ளுவ மாலை.
12. திரிகடுகம்—நல்லாதனார் இயற்றியது. மும்மூன்று பொருள்களை விளக்கும் வெண்பாக்கள் (கடவுள் வாழ்த்துட்பட) நூற்றொன்றுடையது. திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர் உரை பயில வழங்குகின்றது.
13. ஆசாரக் கோவை—பெருவாயின் முள்ளியார் இயற்றியது. இரு டிகள் சொல்லிய ஆசாரங்களைக் கோத்துரைக்கும் பல்வகை வெண்பாக்கள் (தற்சிறப்புப் பாயிரமுட்பட) நூற்றொன்றுடையது.
14. பழமொழி—மூன்றுறையரையனார் (ஜைனர்) இயற்றியது. ஒவ்வொரு பழமொழியை இறுதியில் பெற்ற நானூறு வெண்பாக்களையுடையது.
15. சிறுபஞ்ச மூலம்—காரியாசான் (ஜைனர்) இயற்றியது. ஐவைந்து நீதிகளைக் கூறும் தொண்ணூற்றெட்டு வெண்பாக்களை யுடையது.
16. இன்னிலை—பொய்கையார் பாடியது. மதுரையாசிரியர் பூதனார் தொகுத்தது. கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது. அறப்பால் பத்தும், பொருட் பால் ஒன்பதும், இன்பப்பால் பன்னிரண்டும், வீட்டிலக்கப் பால் பதினான்கும் ஆகிய நாற்பத்தைந்து வெண்பாக்களை யுடையது. (கைந்நிலை என்பர் சிலர். ஐந்திணை யைந்து நூலில் இன்னும் காணக் கிடையாததொன்று என்பர் சிலர்.)
முதுமொழிக் காஞ்சி
பலர்புகழ் புலவர் பன்னின தெரியும்
உலகியல் பொருண்முடி புணரக்கூ றின்று.
(இ-ள்.) எல்லாரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொரு ளின்பத்தை அறியச் சொல்லியது.(புறப்பொருள் வெண்பா மாலை—பொது வியற் படலம்—காஞ்சிப் பொதுவியற் பால்-1)
ஏதமி லறமுதல் இயல்பிவை யென்னும்
மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி.
(இலக்கணவிளக்கம் - 619-சூ.)
கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய
முறைமையாகும் முதுமொழிக் காஞ்சி.
(திவாகரம்- ஒளி பற்றிய பெயர்த் தொகுதி-126)
(காஞ்சியின் பொதுவிலக்கணம்)
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
(தொல்—புறத்திணை—28-சூ.)
17. முதுமொழிக் காஞ்சி—மதுரை கூடலூர் கிழார் இயற்றியது. பத்ததிகாரமாய் ஒவ்வோரதிகாரமும் பப்பத்துக் குறட்டா ழிசையால் அமைந்தது. ஒவ்வோரடியும் ஒவ்வொரு முதுமொழி. (தொல்-பொருள்—490)
18. ஏலாதி—தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியர் (ஜைனர்) இயற்றியது. அவ்வாறு பொருளுரைக்கும் வெண்பாக்கள் (கடவுள் வாழ்த்து நீங்கலாக) எண்ப துடையது.