முதுமொழிக்காஞ்சி, 1919/பதிப்புரை
பதிப்புரை.
முற்காலங்களில் பாண்டியர்களால் ஏற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் மூன்று. அவை தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன. தலைச்சங்கமும், இடைச்சங்கமும் சரிதக்காலத்துக்கு முற்பட்டவை. கடைச்சங்கம் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்ததென்பது இக்காலப் புலவரில் பலருடைய கொள்கை. கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை. அச்சங்கமிருந்து தமிழாராய்ந்தவர் சிறுமேதாவியர், சேந்தம்பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலானவர். அவருள்ளிட்டுப் பலர் பாடினர். அவர்கள் பாடியன கூத்தும் வரியும், பேரிசையும், சிற்றிசையும், பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், பதினெண் கீழ்க் கணக்கும் என்றித் தொடக்கத்தன. இவற்றில் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மேற்கணக்கின் பாற்படும். முதுமொழிக் காஞ்சி பதினெண் கீழ்க் கணக்கில் ஒன்று.
காஞ்சியென்பது பொருளிலக்கணத்தில் புறப்பொருளின் பகுதியைச் சேர்ந்தது. பொருளாவது, சொற்றொடர் கருவியாகச் செய்யுளிடத்தே சார்ந்து விளங்கும் இயல்பினையுடையது. அது நோக்குதற்கு எட்டாத வீட்டை விடுத்து, அறமும், பொருளும், இன்பமும் என மூன்று வகையினையுடையது. அவற்றில், இன்பமென்னும் இயல்பினையுடைத்தாகி, உள்ளத்தின் கண்ணே நிகழும் ஒழுக்கம், அகம் எனப் பெறும். அது, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலையோடு பெருந்திணை, கைக்கிளையென்னும் எழுவகையினையுடையது. அறமும், பொருளும் என்னும் இயல்பினையுடைத்தாய்ப் புறம்பே நிகழும் ஒழுக்கம், புறம் எனப் பெறும். அது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகையொடு, காஞ்சி, பாடாண் என்னும் ஏழுவகையினையுடையது. இப்புறத்திணையேழும், அவ்வகத்திணையேழற்கும் முறையே புறனாயவை.
புறப்பொருள் ஏழனுள் வெட்சியாவது, ஆதந்தோம்பலும், அந்நிரை மீட்டலும், வஞ்சியாவது, பகைமேற் சேறல். உழிஞையாவது, அரணை முற்றலும், காத்தலும். தும்பையாவது, வந்த வேந்தனை இருந்த வேந்தன் எதிர் சென்று பொருதல். வாகையாவது, பொருது வெற்றி பெறுதல் (இது அரசவாகை. ஏனையோருடைய இயல்பை மிகுதிப்படுத்தலும் வாகை எனப் பெறும்.) காஞ்சியாவது, நிலையாத உலகியற்கையைப் பொருந்திய நெறியினையுடையது. பாடாணாவது, பாடுதற்குரிய ஆண்மகனது பெருமை பொருந்திய ஒழுக்கத்தைப் பாடுகின்ற அம்முறையினையுடையது. இவையெல்லாம் அரசனுக்கும், குடிகளுக்கும் உரிய அறமும், பொருளும் உணர்த்துவனவாம்.
அறம் பொருளின்பங்களின் நிலையின்மையை உரைத்தற்குரிய காஞ்சி எல்லாத் திணைக்கும் ஒத்த மரபினது. எதிர்த்த வேந்தர்க்கும், எதிர் சென்று தாக்கும் வேந்தர்க்கும் அறம் பொருளின்பங்களின் நிலையாமையைக் கூறி, இறப்பினுக்கஞ்சாது நின்று வீடு பேறு நிமித்தமாகச் செய்யக் கடவ கடமைகளை அறம் பிறழாமல் செய்யுமாறு வற்புறுத்துவதே இத்திணையின் குறிப்பு. “தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி, நிலைஇ யாமை நெறிபட வுரைத்தன்று.”
முதுமொழிக் காஞ்சியென்பது காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று; முதுமொழிகளால் காஞ்சியை விளக்குவது என்பதாம். “ஏதமில் அறமுதல் இயல்பிவை யென்னும், மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி” என்பது இலக்கண விளக்கம். இதனைத் திவாகரர் “கழிந்தோர் ஏனை ஒழிந்தோர்க்குக் காட்டிய, முறைமையாகும் முதுமொழிக் காஞ்சி” என்றார்.
இத்துறைப் பெயரே பெயரான இந்நூல், பத்ததிகாரமும், ஒவ்வோரதிகாரத்தில் பப்பத்து முதுமொழியுமாக அமைக்கப் பெற்றது. ஒவ்வொரு முதுமொழியும், ஒவ்வொரு குறட்டாழிசை. இந்நூல், அற முதலிய பாகுபாட்டை முறையாகக் கடைப்பிடித்திலது. வகுத்துக் கொண்ட அதிகாரங்களுக்கேற்ப மும்முதற்பொருளும் இந்நூலில் விரவி உரைத்திருக்கின்றன. இன்பப் பகுதிக்குரிய முதுமொழிகள் மிகச் சிலவே. அவையும், இன்பச் சுவையை விளக்குவனவல்ல. கார் நாற்பதும், ஐந்திணையும் முப்பாலும் (இன்னிலையும்) ஒழிந்த. ஏனைக் கீழ்க்கணக்கெல்லாம் அறம் பொருளின்பங்களை இங்ஙனம் உரைப்பனவே. திருக்குறளிற் கூறிய சில பொருள்களை, அம்மொழிகளையே பின்பற்றிக் கூறுதலின், இந்நூல் திருக்குறளுக்குப் பின் இயற்றியதென்பது துணிதலாகும்.
இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார் என்பவர். பழைய ஆன்றோர்கள், “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என இவரைச் சிறப்பித்துக் கூறுவர். கூடலூர் மலைநாட்டின் கண்ணது (மதுரையென்பர் சிலர்). படிக்காசு புலவர் “ஊரார் மலிபுலியூர்கோட்ட நற்குன்றத் தூரிலுள்ள ‘தீராவளமலி பாக்கிழவோன்புகழ் சேக்கிழவோன்’ காராளன் கூடற் கிழவோன் முதுமொழிக் காஞ்சிசொற்ற, வாரார் புரிசைக் கிழவோனும் வாழ்தொண்டை மண்டலமே” என இவரைத் தொண்டை மண்டலத்தினர் என்பர். இவர் பெயர் புரிசைக் கிழவோன் என்பர். எட்டுத் தொகையுள் ஒன்றான ஐங்குறுநூறு தொகுத்தோர் இவரே. இவருடைய பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும் உண்டு.