முதுமொழிக்காஞ்சி, 1919/தண்டாப் பத்து
X. தண்டாப் பத்து.
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.
(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து எல்லா மக்களுள்ளும், உயர்வு வேண்டுவோன், பிறரை உயர்த்துச் சொல்லும் மொழிகளை மாறான்.
(ப-ரை.) ஆர்கலி உலகத்து—கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம்—எல்லா மக்களுள்ளும், ஓங்கல்—மேன்மை யடைதலை, வேண்டுவோன்—விரும்புவோன், உயர் மொழி—பிறரை மேன்மைப் படுத்திச் சொல்லும் சொற்களை, தண்டான்—சொல்லாமல் தவிரான்.
தான் சிறப்படைய விரும்புவோன், பிறருடைய சிறப்புக்களை எடுத்துரைக்கப் பின் வாங்க மாட்டான்.
தண்டுதல்—நீங்குதல், தண்டான்—நீங்கான்—மாறான்—தவிரான். “தண்டாமலீவது தாளாண்மை” என்றும் “கண்டாம் கலுழ்வ தெவன் கொலோ? தண்டா நோய், தாம்காட்ட யாம்கண் டது” என்றும் வருவனவற்றில் இச்சொல் இப்பொருளில் வருகின்றது.
2 வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்.
(ப-பொ.) ஆக்கத்தை வேண்டுவோ னொருவன், தனக்குப் பல புகழ் வரும் செய்கை களையான்.
(ப-ரை.) வீங்கல்—செல்வப் பெருக்கை, வேண்டுவோன்—விரும்புவோன், பல்புகழ்—பலவகைப் புகழ் தரும் செய்கைகளை, தண்டான்—செய்யாமல் தவிரான்.
வீங்கல்—பெருகுதல்,செல்வம் பெருகுதல், ஆக்கம். புகழ்—புகழ் தருஞ் செய்கை; ஆகு பெயர்.
“ஈதல் இசைபட வாழ்தல் அது வல்ல, தூதியம் இல்லை உயிர்க்கு” (திருக்குறள்) ஆதலால், செல்வம் பெருக வேண்டுமென்று விரும்புவோன், புகழுண்டாவதற்குக் காரணமான ஈகை முதலிய செய்கைகளைச் செய்யாமல் விடான்.
3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.
(ப-பொ.) ஒன்றனைக் கற்றல் விரும்புவான், தன்னைக் கற்பிக்கும் ஆசிரியற்குச் செய்யும் வழிபாடு ஒழியான்.
(ப-ரை.) கற்றல்-ஒரு வித்தையைக் கற்றலை, வேண்டுவோன்—விரும்புகின்றவன், வழிபாடு—கற்பிக்கும் ஆசிரியனுக்குச் செய்யலான பணிவிடைகளை, தண்டான்—செய்யாமலிரான்.
வழிபாட்டின் இலக்கணம்:- “அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி, நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு, எத்திறத் தாசான் உவக்கும் அத்திறம், அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே.”
“கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று” என்றார் முன். ஆதலால், “கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்” என்றார் இவ்விடத்து.
4. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செய றண்டான்.
(ப-பொ.) பிறப்புக் கெடுத்துத் தன்னை நிலைப்பிக்க வேண்டுவோன், தவஞ் செய்தல் ஒழியான்.
(ப-ரை.) நிற்றல்—நித்தியமாகிய முத்தியின்பத்தில் நிலை பெற்றிருத்தலை, வேண்டுவோன்—விரும்புகின்றவன், தவம் செயல்—தவஞ் செய்தல், தண்டான்—ஒழியான்.
உடல், பொருள் முதலியன நிலையில்லாதவை யாதலால், முத்தியின்பத்தில் நிலை பெற்றிருத்தலை ‘நிற்றல்’ என்றார்.
தவமாவது “மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில் நிலை நிற்றலும், மாரியிலும், பனியிலும் நீர் நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வருந் துன்பங்களைப் பொறுத்து, பிறவுயிர்களை ஓம்பல்.”
தவஞ் செய்ய வல்லார்க்கு அதனால், வரும் துன்பம் வருத்த, வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி, ஞானம் மிகும். ஞானமிக்க அளவிலே பிறப்பு வீடுகளின் உண்மையுணர்ச்சி உண்டாகும். ஆகையால் “நிற்றல் வேண்டுவோன் தவஞ்செய றண்டான்” என்றார்.
5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.
(ப- பொ.) வாழ்தலை மேன்மேலும் விரும்பிய ஒருவன், தான் எடுத்த தொழிலை ஆராய்தல் ஒழியான்.
(ப-ரை.) வாழ்க்கை—நல்வாழ்க்கையை, வேண்டுவோன்—மேன்மேல் விரும்புமவன், சூழ்ச்சி—தான் எடுத்த தொழிலைத் தக்கவரோடு ஆராய்ச்சி செய்தலை, தண்டான்—தவிரான்.
நல்வாழ்க்கைக்கு அவசியமானது காரிய சித்தி; ஆகவே எடுத்த காரியம் நன்கு முடிதற்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒரு தலை.
“தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.”—திருக்குறள்.
6. மிகுதி வேண்டுவோன் வருத்தந் தண்டான்.
(ப-பொ.) அளவு மிக்க பொருள் வேண்டுவோன், முயற்சி வருத்தமென நீக்கான்.
(ப-ரை.) மிகுதி—அளவு மிக்க பொருளை, வேண்டுவோன்—விரும்புகின்றவன், வருத்தம்—அதற்குரிய முயற்சி செய்வதில் உண்டாகின்ற வருத்தம் பற்றி, தண்டான்—அம்முயற்சியைத் தவிரான்.
மிக்க பொருளை விரும்புகின்றவன், அதற்குரிய முயற்சி செய்தலில் உண்டாகின்ற வருத்தம் பற்றி அம்முயற்சியினின்று ஒழியான்.
“தகுதி தண்டான்” பாடபேதம்.
பெருமையை விரும்புகின்றவன், நல்லொழுக்கத்தினின்று தவிரான் என்பது பொருள்.
7. இன்பம் வேண்டுவோன் துன்பந் தண்டான்.
(ப- பொ.) இன்பத்தை விரும்பிய ஒருவன், துன்பத்தைத் துன்பமென்று களையான்.
(ப-ரை.) இன்பம் வேண்டுவோன்—இன்பத்தை விரும்பிய ஒருவன், துன்பம் தண்டான்—அதற்குரிய முயற்சியில் உண்டாகும் துன்பத்தினின்றும் தவிரான்.
சுகமாக வாழ விரும்புவோர், அதற்குரிய முயற்சியில் உண்டாகும் மெய் வருத்தம் முதலிய துன்பங்களைப் பாராட்ட மாட்டார். தோட்டி போல் உழைத்துத் துரை போல் சாப்பிட வேண்டும். துன்பத்துக்குப் பின் வாங்கினால், இன்பம் உண்டாகாது. Of sufferance comes ease.
“துன்புள தெனினன்றோ இன்புளது.”—இராமாயணம்.
8. துன்பம் வேண்டுவோன் இன்பந் தண்டான்.
(ப-பொ.) துன்பத்தை விரும்பிய ஒருவன் இன்பத்தை, இன்பமென்று களையான்.
(ப-ரை.) துன்பம் வேண்டுவோன்—ஒரு காரியத்தில் முயலும் போது உண்டாகிற துன்பத்தை வெறாமல் விரும்பி ஏற்பவன், இன்பம்—பின்பு அதனாலுண்டாகும் இன்பத்தை, தண்டான்—வெறுத்துக் களையான்.
முன்னே துன்பங்களைப் பட்டு, அதனால் இன்பமடைய விரும்புவோன், அத்துன்பங்களி னிமித்தமாக அவ்வின்பத்தை வேண்டாவென்று களையான்.
9. ஏமம் வேண்டுவோன் முறைசெய றண்டான்.
(ப-பொ.) குடிகளைக் காக்க விரும்பிய அரசன் முறைமைப்படி நடத்த லொழியான்.
(ப-ரை.) ஏமம் வேண்டுவோன்—குடிகளைப் பாதுகாத்தலை விரும்பிய அரசன், முறை செயல் தண்டான்—நீதி முறைமைப்படி அரசு செய்தல் தவிரான்.
குடிகளை ரக்ஷிக்க விரும்பிய அரசன் நீதி முறை தவறாமல் நடப்பான்.
“ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும், தேர்ந்து செய்வஃதே முறை” (திருக்குறள்) என்பதனால் முறையின் இலக்கணம் விளங்கும்.
10. காமம் வேண்டுவோன் குறிப்புச்செய றண்டான்.
(ப-பொ.) காமத்தை விரும்பிய ஒருவன் குறிப்பறிதல் ஒழியான்.
(ப-ரை.) காமம்—காமவின்பத்தை, வேண்டுவோன்—விரும்புகின்றவன், குறிப்புச் செயல்— குறிப்பறிதல், தண்டான்—ஒழியான்.
குறிப்பறிதலாவது, தலைமகன் தலைமகளது குறிப்பினை யறிதலும், தோழியது குறிப்பினை யறிதலுமாம்.
“இன்பந்தண்டான்” என்ற பாடத்துக்குக் காமவின்பம் நுகர்தல் தவிரான் என்பதாம்.