உள்ளடக்கத்துக்குச் செல்

மூவர்புராண சாரம்

விக்கிமூலம் இலிருந்து

மூவர் புராண சாரம்[தொகு]

மூவர் என்று இங்குக் குறிக்கப்படுபவர்கள், ஆளுடைய பிள்ளை எனும் திருஞானசம்பந்தரும், ஆளுடைய அரசு எனும் திருநாவுக்கரசரும், ஆளுடைய நம்பி எனும் சுந்தரமூர்த்தியாரும் ஆவார்கள். அவர்களின் புராண வரலாறு இங்குச் சாரமாகத் தரப்படுகின்றது, பாடல் வடிவில்!

திருஞான சம்பந்தர்[தொகு]

(எண்சீர் விருத்தம்)
காழிநகர்ச் சிவபாத யிதயர் தந்த கவுணியர்கோ னழுதுமையாள் கருதி யூட்டும்
ஏழிசையின் அமுதுண்டு தாளம் வாங்கி இலங்கியநித் திலச்சிவிகை யிசைய வேறி
வாழுமுய லகனகற்றிப் பந்த ரேய்ந்து வளர்கிழிபெற் றரவின்விட மருகல் தீர்த்து
வீழிநகர்க் காசெய்தி மறைக்கதவம் பிணித்து மீனவன்மே னியின்வெப்பு விடுவித் தாரே. (1)
ஆரெரியிட் டெடுத்தவே டவைமுன் னேற்றி ஆற்றிலிடு மேடெதிர்போ யணைய வேற்றி
ஓரமண ரொழியாமே கழுவி லேற்றி ஓதுதிருப் பதிகத்தா லோட மேற்றி
காருதவு மிடிபுத்தன் றலையி லேற்றிக் காயாத பனையின்முது கனிக ளேற்றி
ஈரமிலா வங்கமுயி ரெய்த வேற்றி இலங்குபெரு மணத்தரனை யெய்தி னாரே. (2)


திருநாவுக்கரசர்[தொகு]

(எண்சீர் விருத்தம்)
போற்றுதிரு வாமூரில் வேளாண் தொன்மைப் பொருவில்கொறுக் கையரதிபர் புகழ னார்பால்
மாற்றருமன் பினில்திலத வதியா மாது வந்துதித்த பின்புமரு ணீக்கி யாரும்
தோற்றியமண் சமயமுறு துயர நீங்கத் துணைவரரு டரவந்த சூலை நோயால்
அரற்றருநீ ளிடரெய்திப் பாடலிபுத் திரத்தில் பாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார். (1)
வந்துதமக் கையரருளால் நீறு சாத்தி வண்டமிழா னோய்தீர்ந்து வாக்கின் மன்னாய்
வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி வியன் சூலங் கொடியிடபம் விளங்கச் சாத்தி
அந்தமிலப் பூதிமக னரவு மாற்றி அருட்காசு பெற்றுமறை யடைப்பு நீக்கிப்
புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு பூம்புகலூர் அரன்பாதம் பொருந்தி னாரே. (2)
சுந்தரர்[தொகு]

(எண்சீர் விருத்தம்)


தண்கயிலை யது நீங்கி நாவ லூர்வாழ் சைவனார் சடையனார் தனயனாராய்
மண்புகழ வருட்டுறையா னோலை காட்டி மணம்விலக்க வன்றொண்டா யதிகை சேர்ந்து
நண்பினுட னருள்புரிய வாரூர் மேவி நலங்கிளரும் பரவைதோ ணயந்து வைகித்
திண்குலவும் விறன்மிண்டர் திறல்கண் டேத்துந் திருத்தொண்டத் தொகையருளாற் செப்பி னாரே. (1)
செப்பலருங் குண்டையூர் நெல்லழைத்துத் திருப்புகலூர்ச் செங்கல் செழும் பொன்னாச் செய்து
தப்பின்முது குன்றந்தரும் பொருளாற் றிட்டுத் தடத்தெடுத்துச் சங்கிலிதோள் சார்ந்து நாதன்
ஒப்பிறனித் தூதுவந்தா றூடு கீறி வுறுமுதலை சிறுமதலை யுமிழ நல்கி
மெய்ப்பெரிய களிறேறி யருளாற் சேர வேந்தருடன் வடகயிலை மேவி னாரே. (2)
முற்றும்.


பார்க்க


அகத்தியர் தேவாரத்திரட்டு
மூவர் வரலாறு
மூவர் தோத்திரம்
மூவர் சிறப்பு
நால்வர் சிறப்பு
தேவார மகிமை
"https://ta.wikisource.org/w/index.php?title=மூவர்புராண_சாரம்&oldid=29352" இலிருந்து மீள்விக்கப்பட்டது