மேனகா 1/009-022

விக்கிமூலம் இலிருந்து


5-வது அதிகாரம்

பாய்வதன் முன் பதுங்குதல்

மேனகா திரும்பவும் தன் மணாளனது இல்லத்தை அடைந்து அன்றிரவு தனிமையில் அவனோடு பேசிய பின்னரே - இருவரும் ஒரு வருஷ காலமாக மனதில் வைத்திருந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் வெளியிட்ட பின்னரே - அவளுடைய மனப்பிணி அகன்றது. மங்கிக் கிடந்த உயிர் ஒளியைப் பெற்றது. எமனுலகின் அருகிற் சென்றிருந்த அவளுடைய ஆன்மா அப்போதே திரும்பியது. வாடிய உடலும் தளிர்த்தது. நெடிய காலமாய் மகிழ் வென்பதையே கண்டறியாத வதனம் புன்னகையால் மலர்ந்தது. விசனம் என்னும் முகில் சூழப் பெற்றிருந்த அழகிய முகத்தில் இன்பத் தாமரை பூத்தது.

“பெண்ணோ வொழியா பகலே புகுதா
தெண்ணோ தவிரா இரவோ விடியா
துண்ணோ ஒழியா உயிரோ வகலா
கண்ணோ துயிலா விதுவோ கடனே.”

என்னத் தோன்றி, நீங்காமல் வதைத்து வந்த அவளுடைய விசனக் குன்று தீயின் முன்னர் இளகும் வெண்ணெயெனத் தன் கணவனது களங்கமற்ற உண்மை அன்பினால் இளகி இருந்தவிடம் தெரியாமல் பறந்தது. ஒரு வருஷத்திற்கு முன் அவள் தஞ்சைக்குச் சென்ற தினத்திற்கு முந்தய நாளில் சுருட்டி வைத்த வெல்வெட்டு மெத்தையை அப்போதே பிரித்தாள். அவளுடைய தேகம் அன்றைக்கே பட்டுப்புடவையைக் கண்டது. சடையாகப் போயிருந்த அவளுடைய அழகிய கூந்தல், சென்னைக்குப் புறப்படு முன்னரே எண்ணெயையும், புஷ்பத்தையும் ஏற்றுக்கொண்டது. அவள் ஒரு வருஷமாக ஊண் உறக்கமின்றி கிடந்து மெலிந்து வாடி இருந்தாள் ஆதலால் அவளது தேகத்தில் இளமை, நன்னிலைமை, தேகப் புஷ்டி முதலியவற்றால் உண்டாகும் தளதளப்பும், கொழுமையும், உன்னத வாமமும் அவளிடம் காணப்படவில்லை ஆனாலும், தன் கணவனை அடையப் போகும் பெரும் பாக்கியத்தை யுன்னி அவள் அடைந்த மனக் கிளர்ச்சியும், பெரு மகிழ்வுமே அவளை தாங்கிக் கொணர்ந்தன. நெடுங்காலமாய் பிரிந்திருந்த தன் மணாளர் அன்றிரவு தன்னிடம் தனிமையில் வந்து பேசுவாரோ, பேசினாலும் எவ்விதம் பேசுவாரோ என்று பெரிதும் கவலைகொண்டு அவள் உள்ளுற மனமாழ்கி யிருந்தாள். அதற்கு முன் நடந்தவைகளை மறந்துவிடுவதாகக் கடிதத்தில் எழுதி இருந்தவாறு அவர் யாவற்றையும் மறந்து தன்னோடு உண்மை அன்போடு மொழிவாரோ அன்றி மறுபடியும் யாவும் பழைய கதையாய் முடியுமோ வென்று அவள் பலவாறு நினைத்து நினைத்து இரவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தாள். அத்தகைய சகித்தலாற்றா மனநிலைமையினால், அவளது மெல்லிய மேனி ஜூர நோய் கொண்டு வெப்பமடைந்தது; பூக்களோ மோப்பக்குழையும்; பூவையரின் வதனமோ தம்மணாளரது கொடிய நோக்கால் குழையு மன்றோ? அவள் அதற்கு முன் தனது நாயகனிடம் ஒரு நாளும் இன்புற்றிருந்தவள் அன்று. ஆதலின், இனித் தன் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்குமோ வென்று அவள் கவலை கொண்டு ஏங்கினாள்.

கழிந்த ஒரு வருஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பகலே ஒரு யுகம் போல வளர்ந்து வருத்திக் கடைசியில் அகன்றது. இரவில் யாவரும் உணவருந்தித் தத்தம் சயனத்திற்குப் போயினர். மேனகா தனது படுக்கையறையிலிருந்த வண்ணம் தன் கணவன் அன்று தன்னுடன் தனிமையில் பேச வருவாரோ வென்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். கடைசியாக அவர் தன் அறைக்குள் வந்து தன்னுடன் பேசாமல் சயனித்ததைக் காண, அவளது மனம் ஏங்கியது. அப்போதும் அவருடைய வெறுப்பும், கோபமும் தணியவில்லையோ வென அவள் ஐயமுற்றாள். ஆயினும், அவர் சயன அறைக்கு வந்ததிலிருந்து அவருக்குத் தன் மீது சொற்பமாயினும் அன்பு பிறந்திருக்க வேண்டுமென்று நினைத்தாள்.

ஆனால், அவர் முதலில் தன்னோடு பேசுவாரென்று தான் எதிர் பார்ப்பது தகாதென மதித்தாள்; பெண்பாலாகிய தானே முதலில் பணிவாக நடக்க வேண்டுமென்று எண்ணினாள். ஆனால் எதைப்பற்றி அவரிடம் பேசுவ தென்பது அவளுக்குத் தோன்றவில்லை. சிறிது யோசனை செய்தாள். முதலில் அவருக்கு மகிழ்வுண்டாக்கும்படி தான் பேசவேண்டு மென்று நினைத்தாள். தான் முதலில் மன்னிப்புக் கேட்பது போலவும் இருத்தல் வேண்டும்; தானே முதலிற் பேசியதாயும் இருத்தல் வேண்டும் என்று நினைத்துச்சிறிது தயங்கி, கவிந்த தலையோடு நாணி நின்றாள்; பிறகு மெல்ல அவனுடைய காலடியிற் சென்று, தனது மென்மையான கரங்களால், தாமரை இதழால் தடவுதலைப்போல அவனுடைய காலை இன்பகரமாய் வருடினாள்; அன்று அவர் பேசாவிடினும், தான் அவரது காலைத் தீண்டியதற்காகக் கோபங்கொண்டு தன்னை உதைத்தாலும் அதையும் பெரும் பாக்கியமாகக் கொள்ளத் தயாராக இருந்தாள். அவன் அப்போதும் அவளிடம் பேசாமலும், எவ்வித தடையும் செய்யாமலும் அசைவற் றிருந்தான். அவ்விதம் இருவரும் இரண்டொரு நிமிஷ வெட்கத்தினாலும், பரஸ்பர அச்சத்தினாலும் மெளனம் சாதித்தனர். இனியும், தான் பேசாமல் இருந்தால் கூடாதென நினைத்த மேனகா, வருடியவாறே தனது கையால் அவனுடைய மார்பையும் கரங்களையும் தடவிப் பார்த்து, “ஆகா! என்ன இவ்வளவு இளைப்பு முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங் கூட இல்லையே” என்றாள். அவளது உள்ளத்தினடியிலிருந்து தோன்றிய அவ்வினிய மொழிகள் புல்லாங்குழலின் இன்னொலியைப் போல அவனது செவிகளிற் பட பஞ்சைப் போன்ற குளிர்ந்த அவளுடைய மெல்லிய கரம் உடம்பிற் படக் கணவன் ஆனந்த பரவசம் அடைந்து, அவளது பக்கம் திரும்பி, அவளை ஆசையோடு இழுத்துத் தனக்கருகில் உட்காரச் செய்தான். ஆனால் அவன் அப்போதும் வாயைத் திறக்கவில்லை. அவன் பேசாமையால் மேனகாவின் மனம் முன்னிலும் அதிகம் துடித்தது. “ஆகா இன்னமும் கோபமா? இந்தப் பாவியோடு ஒருவார்த்தை சொல்லக்கூடாதா? இவ்வளவு நாழிகை பேசாமலிருந்து என்னைத் தண்டித்தது போதாதா?” என்றாள்.

சாமாவையரும், பெருந்தேவி அம்மாளும் போதித்து போதித்து அவனுடைய மனதை மாற்றி மேனகாவின் மீது நல்லெண்ணத்தையும் அன்பையும் உண்டாக்கியிருந்தனர் ஆதலாலும், கல்லையும் கரையச் செய்யும் தன்மை வாய்ந்த அவளுடைய அன்பு ததும்பிய கடிதத்தைக் கண்டு அவன் கழி விரக்கமும், மனது இளக்கமும் கொண்டிருந்தான் ஆதலாலும், அவன் அவளது விஷயத்தில் தான் பெரிதும் தவறு செய்ததாய் நினைத்து அதற்காக அவளிடம் அன்று மன்னிப்புப் பெறவேண்டு மென்று வந்தவன் ஆதலாலும், அவளுடைய செயலும், சொல்லும் அவனது மனத்தை முற்றிலும் நெகிழச் செய்தன. உள்ளம் பொங்கிப் பொருமி யெழுந்தது. அவன் இன்பமோ, துன்பமோ, அழுகையோ, மகிழ்வோ வென்பது தோன்றாவாறு வீங்கிய மன வெழுச்சியைக் கொண்டான். கனவிற் கள்வரைக் கண்டு அஞ்சி யோட முயல்வோர் கால்கள் தரையினின்று எழாமையால் வருந்துதலைப் போல அவன் சொல்ல விரும்பிய சொற்கள் தொண்டையினின்று வெளிவராமையால் அவன் வருந்திச் சிறிது நேரம் தவித்தான். “மேனகா! உன்னுடைய நல்ல குணத்தை உள்ளபடி அறிந்து கொள்ளாமல் மூடனாய் நான் உன்னை எவ்வளவோ வருத்தினேன்! நான் செய்த கொடுமைகளை நினைக்க என் மனமே பதறுகிறது! எவ்வளவு படித்தாலும் என்ன பயன்? மாற்றில்லா மணியான மனைவியை அன்பாக நடத்தும் திறமையற்ற பெருந் தடியனானேன். உன்னிடத்தில் அழகில்லையா? குணமில்லையா? நன்னடத்தை யில்லையா? நீ கற்பிற் குறைந்தவளா? காரியம் செய்யும் திறமையற்றவளா? நீ எதில் குறைந்தவள்? உன்னை நான் ஏன் இவ்விதம் கொடுமையாக நடத்தவேண்டும்? உன்னுடைய பெற்றோரையும் உன்னையும் இப்படி ஏன் துன்ப சாகரத்தில் ஆழ்த்த வேண்டும்? சகல சுகத்தையும் காமதேனுவைப் போலத் தரும் தெய்வ ரம்பையாகிய உன்னை நான் இவ்வொரு வருஷமாக நீக்கி வைத்தது என்னுடைய துர்பார்க்கியமே யொழிய வேறில்லை. பாவியாகிய எனக்கு நற்பொருள் தெரியவில்லை. தானே தேடிவரும் இன்பத்தை அநுபவிக்கப் பாக்கியம் பெறாத அதிர்ஷ்ட ஹீனனானேன். போனது போகட்டும்; உன் விஷயத்தில் நான் இது வரையில் லட்சம் தவறுகள் செய்து உன்னை வதைத்தும் வைதும் கடின மனத்தனாய்த் துன்புறுத்தினேன். அவைகளை யெல்லாம் நீ இன்றோடு மறந்துவிடு. இனிமேல், உன் மனம் வருந்தும்படி நான் எந்தக்காரியமும் செய்வதில்லை. இது சத்தியம்” என்றான். அப்போது அவனுடைய கண்களினின்று கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அவளை அவன் அன்போடு இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான். அவளும் ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தாள் ஆனாலும், அவளுடைய கை மாத்திரம் அவனை வருடியவண்ணம் இருந்தது. அந்தக் கரத்தைப் பிடித்துப் பார்த்த வராகசாமி, “ஆகா! இரக்கமற்ற பாவியாகிய நான் சுட்ட வடுவல்லவா இது! அடி மேனகா! இவ்வளவு கொடுமை செய்த துஷ்டனாகிய என்னைக் கொஞ்சமும் வெறுக்காமல் நீ எவ்வளவு அதிகமாக விரும்புகிறாய்! சுகத்தைக் கருதிய பெண்கள் தமது கணவரிடம் வாஞ்சையை வைக்கின்றனர். ஓயாத் துன்பத்தை அநுபவித்தும், நீ என்னுடன் இருப்பதை விரும்புகிறாய்! ஆகா! காதலின் மகிமையை என்ன வென்று சொல்வது! சூட்டைப் பெற்ற உன் கை என்னை வருடி எனக்கு இன்பம் கொடுப்பதைக் காண்பதே எனக்குப் போதுமான தண்டனையாய் விட்டது. நடந்தவற்றை நினைக்க என் மனம் பதறுகிறது. இப்போது நான் அநுபவிக்கும் மனவேதனையைப் போல நான் என் ஆயுசு காலத்தில் அநுபவித்ததும் இல்லை; இனி அநுபவிக்கப் போவதும் இல்லை” என்றான். அந்தரங்கமான அன்போடு மொழிந்த சொற்கள் பசுமரத்து ஆணிபோல மேனகாவின் மனதிற் புகுந்தன. அதுவரையில் அவள் அனுபவித்த எண்ணிறந்த துன்பங்களின் நினைவு முற்றிலும் அவளுடைய மனதைவிட்டு அறவே ஒழிந்தது. நிகழ்ந்தவை யாவும் கனவாகத் தோன்றின. பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தாள்; மனவெழுச்சிப் பெருக்கால் பொருமினாள். ஆந்தக் கண்ணிர் அருவிபோலப் பொங்கி வழிந்து ஆடைகளை நனைத்தது. அதுவரையிற் கண்டும் கேட்டும் அறியாவாறு அவன் அன்று தன்னிடம் அணைவாகவும் உருக்கமாகவும் அந்தரங்க அன்போடும் தன்னை கனப்படுத்தி மொழிந்ததைக் கண்ட மேனகா இன்ப சாகரத்தில் ஆழ்ந்து அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடாமல் நன்றாக இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ஆகா! இவ்வளவு ஆழ்ந்த பிரியத்தை என்மேல் வைத்துள்ள உங்களை விட்டு நான் என் உயிரை யொழிக்க முயன்றேனே! அந்த விஷயத்தில் நான் பெருத்த அபராதியானேன். நீங்கள் என் பிழைகளையெல்லாம் இன்றோடு மன்னித்து விடவேண்டும். இனி என்னுடைய நடத்தையால் உங்களுடைய முழுப் பிரியத்தையும் சம்பாதித்துக் கொள்ளும் விதத்தில் நான் நடக்கிறேன். இனி நீங்கள் அடித்தாலும், வைதாலும், சுட்டாலும் என் தகப்பனாருடைய வீட்டைக் கனவிலும் நினைக்கமாட்டேன். நான் இறந்தாலும் உங்கள் பாதத்தடியிலேயே இறக்கிறேன்” என்றாள்.

வரா:- எவ்வளவோ செல்வத்தில் இருக்கும் டிப்டி கலெக்டருடைய ஒரே பெண்ணான நீ அடக்க ஒடுக்கம், பணிவு, பொறுமை முதலிய அரிய குணங்களுக்கு இருப்பிடமா யிருக்கிறாயே! ஆகா! நான் எவ்வளவுதான் தேடி அலைந்தாலும் உன்னைப் போன்ற நற்குணமுள்ள பெண்மணியை நான் ஒரு நாளும் காணமாட்டேன்- என்றான்.

இவ்வாறு அவ்விரு யெளவனப் பருவத்தினரும், அவ்வொரு வருஷத்தில் நிகழ்ந்த விஷயங்களைப் பற்றி பேசியவண்ணம் அதிகக் கிளர்ச்சி அடைந்து மாறி மாறி ஒருவரை யொருவர் புகழ்வதும், மகிழ்வதும், மொழிவதும், அழுவதுமாய்த் தெவிட்டாத இன்பம் அநுபவித்திருந்தனர். அது இரவென்பதும், தாம் துயில வேண்டுமென்பதும் அவர்களுடைய நினைவிற்கே தோன்றவில்லை. அவ்வாறு அன்றிரவு முழுவதும் கழிந்தது. அவர்களுடைய ஆசையும் ஆவலும் ஒரு சிறிதும் தணிவடையவில்லை. மற்றவர் எழுந்து இறங்கி யதையும், சூரியன் மிக்க உயரத்திற் கிளம்பிவிட்டதையும் உணர்ந்த பிறகு, ஒருவாறு அச்சங்கொண்டு அவர்கள் வெளியில் வந்தனர். அவ்விரவு கால் நாழிகை நேரத்தைப் போலக் கழிந்து போனதைக் காண அவர்கள் ஏக்கம் கொண்டனர்.

விசனத்தின் சுமையால் தனது உடம்பின் சுறுசுறுப்பை இழந்து மிகவும் தளர்வடைந்து தோன்றிய மேனகா அன்று புதுப்பெண்ணாக மாறிவிட்டாள். அவளுடைய தேகம் பளுவற்று இலேசாய்த் தோன்றியது. சந்தோஷத்தால் அவளுடைய உள்ளமும், தேகமும் பூரித்தன. வதனத்திற் புதிய ஒளி ஜ்வலித்தது. தான் அங்கு மிங்கும் சென்ற தருணங்களில் தனது மணாளன் தன்னை ஒளிமறைவாய்க் கடைக்கணித்துப் புன்முறுவல் செய்ததைக் காண, அவள் பெருமகிழ்வடைந்து நிகரற்ற பேரின்பம் அநுபவித்தாள். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்கள் அன்றில் பறவைகளைப் போல இணைபிரியாதிருந்து, கொஞ்சிக் குலாவி, எத்தகைய பூசலும் கவலையுமின்றி இன்பக் கடலிலாடி சுவர்க்க போகம் அநுபவித்தார்கள். இரவுகளை பேசியே கழித்தனர். பெருந்தேவி முதலியோர் அதனால் மிக்க மகிழ்வடைந்தோர் போலப் பாசாங்கு செய்து அவர்கள் இச்சைப்படி விடுத்து அவர்களுக்கு அநுகூலமாயிருந்து வந்தமையால், அவர்கள் அவ்வைந்து நாட்களிலும் நிகரற்ற இன்பம் அநுபவித்தனர். பெருந்தேவியின் தூண்டுதலினால் அவன் மாலை வேளைகளில் மேனகாவை வண்டியில் வைத்துக் கடற்கரைக்கும், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்த நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றான். அவர்களுடைய விளையாடல்களை யெல்லாம் கவனிக்காதவர் போலத் தோன்றி ஒவ்வொன்றையும் செவ்வனே கவனித்து வந்த விதவைகள் இருவரும் பொறாமையால் வயிறு வெடிக்க உள்ளூற வருந்தினர். ஆனாலும், தமது சதியாலோசனைக்கு அது அதுகூலமானதென்று நினைத்து அவர்கள் வாளாவிருந்தனர்.

இளையோர் இருவரும் சயன அறையில் தனிமையில் இருக்கையில் விதவைகள் தமக்குள் கண்ணைச் சிமிட்டி உதட்டைப் பிதுக்கி ஏளனமாய்ப் பேசியும், தமது விரலை அறைப்பக்கம் நீட்டிப் பெளரஷம் கூறியுமிருந்து, அவர்கள் மொழிந்த சொற்களை யெல்லாம் உற்றுக் கேட்டு வந்தனர். ஒருவர் மீதொருவருக்குக் காதலும், அன்பும் நிமிஷத்திற்கு நிமிஷம் மலையாய்ப் பெருகியதைக் கண்ட விதவைகளும், சாமாவையரும் தம்முடைய வஞ்சக ஆலோசனையை அதி சீக்கிரத்தில் நிறைவேற்ற உறுதி கொண்டனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு அநுகூலமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆறாம்நாள் ஒரு பெருத்த கொலைக்கேசின் பொருட்டு வராகசாமி சேலத்திற்குப் போக நேர்ந்தது. அவன் எந்த வக்கீலின் கீழ் வேலை செய்து வந்தானோ அவருடன் அவனும் அவசியம் போகவேண்டியதாயிற்று. அதை முன்னாலேயே அறிந்திருந்த அம்மூன்று சதிகாரரும், அன்றிரவே தமது காரியத்தை நிறைவேற்றி விடத் தீர்மானித்தனர். ஆறாம் நாள் வராகசாமி உணவருந்தி எட்டு மணிவண்டிக்குப் புறப்பட ஆயத்தமானான். வீட்டை விடுத்து வெளிப்படுமுன் அவன் மேனகாவுடன் தனிமையில் தனது சயன அறைக்குள் சென்று “மேனகா! இந்த ஐந்து நாட்களாய் ஒரு நிமிஷமும் பிரியாதிருந்தோம். இப்போது உன்னை விட்டுப் போக மனமே இல்லை. ஏதோ என் மனசில் ஒரு வித சஞ்சலம் தோன்றி வதைக்கிறது. காலெழவில்லை. மனசும் சகிக்க வில்லை. என்ன செய்வேன்!” என்று கண்கலங்க மனதிளக உருக்கமாக நைந்து கூறினான். மேனகா கண்ணீர் விடுத்து விம்மி விம்மி அழுது தனது முகத்தை அவனது மார்பில் புதைத்து, “அங்கே எத்தனை நாள் இருக்க வேண்டும்?” எனறாள்.

வரா:- வேலையெல்லாம் அநேகமாய் நாளைக்கு முடிந்து போம். நாளை நின்று மறுதினம் காலையில் அவசியம் வந்துவிடுவேன். நீ அதுவரையில் மனசைத் தேற்றிக்கொண்டு கவலைப்படாமலிரு - என்று கூறி அவளை இழுத்து இறுகத் தழுவி முத்தமிட்டுக் கண்ணிரைத் துடைத்து விட்டான். அவனுடைய ஆலிங்கனத்திலிருந்து விடுபட மனமற்றவளாய் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு, “இன்றிரவு! நாளைப் பகல்! நாளையிரவு! அவ்வளவு காலம் நீங்கள் இல்லாமல் எப்படிக் கழியும்? நானும் கூட வந்தால் என்ன?” என்று கொஞ்சிய மொழியாற் கூறினாள். “ஒரு நாளைக்காக இங்கிருந்து அழைத்துப் போய் உன்னை அங்கே வைப்பதற்கு நல்ல வசதியான இடம் அகப்படாது. நீ பெரிதும் வருந்த வேண்டி வரும்” என்றான் வராகசாமி.

மேனகா, “ஆண்பிள்ளைக ளெல்லாம் மகா பொல்லா தவர்கள். அவ்வளவு பெரிய ஊரில் ஒரு பெண்பிள்ளை ஒருநாளைக்கு இருக்க வசதியான இடங்கொடுக்காத அந்த ஊர்ப்புருஷரை என்னவென்று சொல்வது அந்த ஊரிலுள்ளவர் தங்கள் மனைவி மார்களையாவது வசதியான இடத்தில் வைத்திருக்கிறார்களா? அல்லது, அவர்களை யெல்லாம் அங்கே இடமில்லை யென்று அவரவர்களுடைய தாய் வீட்டிலேயே விட்டுருக்கிறார்களா?” என்று பரிகாசமாகக் கூறிப் புன்னகை செய்தாள்.

வரா:- நீ இங்கே ஒரு குறைவு மில்லாமல் செளக்கியமா யிருப்பதை விட்டு வண்டியில் கண் விழித்து அங்கே வந்து ஏன் துன்பங்களை அநுபவிக்க வேண்டும்? ஒரு நாள் ஒரு நொடியில் கழிந்து போம். கவலைப் படாதே!

மேனகா:- நீங்கள் அவ்வித வருத்தங்களுக்கு ஆளாகும் போது நான் மாத்திரம் உயர்வா? வருத்த மெல்லாம் உங்களுக்கு, சுக மெல்லாம் எங்களுக்கோ? நாங்கள் மாத்திரம் வெயிலையே அறியாமல் நிழலிலேயே இருக்கப் பிறந்திருக்கிறோமா? நானும் வந்தால் துன்பம் ஆளுக்குப் பாதியாய்ப் போகுமே - என்றாள்.

வரா:- எங்களுக்கு அவ்வளவு துன்பம் தோன்றாது. நாங்கள் போஜன சாலையில் நூறு ஆண் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவோம்; நினைத்த இடத்தில் படுக்கையை விரித்து விடுவோம். ஸ்திரீகளுக்கு அது சரிப்படுமா! பாதக மில்லை. நீ இரு; வருத்தப்படாதே; வண்டிக்கு நாழிகை யாகிறது. நான் போய் விட்டு வருகிறேன் - என்று அவளை இன்னொருமுறை ஆலிங்கனம் செய்தான். அவள் அவனைத் திரும்பவும் இறுகப் பிடித்துக்கொண்டு, “நான் உங்களை விடமாட்டேன். குற்றவாளியே தன் கேசை எடுத்துச் சொல்லிக் கொள்ளட்டும். அவனுடைய நியாயம் அவனுக்குத் தெரியா விட்டால் அதற்காக நானா இங்கே துன்பப் படுகிறது?” என்று வேடிக்கையாக நகைத்துக் கொண்டே மொழிந்தாள்.

வரா:- (அந்த இன்பத்தை விலக்க மாட்டாதவனாய் மதிமயக்கமடைந்து நகைத்த முகத்தோடு நின்று) ஐயோ பாவம்! நான் போகாவிட்டால் துரை நம்முடைய கட்சிக்காரனைத் தண்டித்து விடுவான். பணத்தை வாங்கிக்கொண்டு வக்கில் வரவில்லை யென்று கட்சிக்காரன் மண்ணை வாரி இறைப்பான் - என்றான்.

மேனகா:- மண்ணை வாரி இறைத்தால் அது இந்த ஊர் வரையில் வராது; எறிந்தவனுடைய கண்ணில் தான் படும். அந்தத்துரைக்கு ஏன் புத்தியில்லை? அவனை ஏன் நாம் முதலில் தண்டிக்கக் கூடாது?

வரா:- (புன்னகையோடு) எதற்காக அவனைத்தண்டிக்கிறது?

மேனகா:- கொலைக் குற்றத்துக்காக.

வரா:- (திகைத்து) அவன் யாரைக் கொலை செய்தான்?

மேனகா:- உயிராகிய உங்களை உடலாகிய என்னிட மிருந்து பிரித்து விடுவது கொலைக் குற்றமல்லவா! அவர்கள் கிழவியைக் கலியாணம் செய்து கொள்கிறவர்கள். அந்ததுரையும் ஒரு பாட்டியைக் கலியாணம் செய்து கொண்டிருப்பான். அதனால் நாம் அநுபவிக்கும் சுகம் அவனுக்கு எப்படி தெரியப் போகிறது. இளந் தம்பதிகளை நாமேன் பிரிக்கவேண்டும் என்ற இரக்கம் இல்லையே அவனுக்கு! - என்று பேசி மென்மேலும் உல்லாஸமாகப் பேசிக் கொண்டே இருந்தாள்.

வராகசாமி ஆனந்த மயமாய்த் தோன்றித் தனது மனையாட்டியின் மதுரமான விளையாட்டுச் சொற்களைக் கேட்டு மனங் கொள்ளா மகிழ்வை அடைந்தான்; அவளை விடுத்துப் பிரிய மனமற்றவனாய்த் தத்தளித்துத் தயங்கினான்; ஊருக்குப் போகாமல் நின்றுவிட நினைத்தான்.

அப்போது சாமாவையர், “அடே வராகசாமி! குதிரை வண்டி வந்து விட்டது. நாழிகை யாகிறது” என்றார். பெருந்தேவியம்மாள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு, “ஏனடா சாமா! வண்டிவந்தால் என்னடா நிற்கட்டுமே; என்ன அவசரம்? ஊருக்குப் புறப்படுவ தென்றால் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிக்கொண்டு, பணமோ காசோ எடுத்துக்கொண்டு தானே வரவேண்டும். வண்டிக்காரனுக்கு முன்னால் உனக்கு அவசரமாடா! எட்டு மணி ரயிலுக்கு இப்போதே என்ன அவசரம்? மணி ஏழேகால் தானே ஆகிறது” என்று வராகசாமியின் காதிற்படும் வண்ணம் கூறினாள்.

சாமா:- (புன்சிரிப்போடு) வண்டிக்காரனுக்காக அவசரப்படுத்த வில்லை. நாழிகை ஆய்விட்டது; ரயில் தவறிப் போனால் கேஸ் பாழாய்ப் போய் விடும். உனக்கென்ன கவலை யம்மா! வீட்டிற்குள் இருப்பவள். கேஸின் அவசரம் உனக்கெப்படி தெரியப் போகிறது!- என்று உரக்கக் கூவினார்.

உடனே மேனகா, “சரி சம்மன் வந்து விட்டது. போய் விட்டு வாருங்கள். ரயில் தவறிப்போனால், சேலம் குற்றவாளியோடு நானும் இன்னொரு குற்றவாளி ஆகி விடுவேன். போய் விட்டு வாருங்கள்; வரும்போது எனக்கு என்ன வாங்கி வருவீர்கள்?” என்றாள். அவ்வாறு அவள் சலிப்பாக மொழிந்ததும் ஒர் அழகாய்த் தோன்றியது

வரா:- சேலத்தில் முதல் தரமான மல்கோவா மாம்பழம் இருக்கிறது. அதில் ஒரு கூடை வாங்கி வருகிறேன் - என்று கடைசியாக அவளை இழுத்து ஆலிங்கனம் செய்து முத்தமிட்டான்.

அப்பெண்மணி கொடி போல அவனைத் தழுவிய வண்ணம், “எந்த மல்கோவாவும் இந்தச் சுகத்துக்கு இணை யாகுமோ இதைக் கொண்டு வந்தால் போதும்” என்றாள்.

வரா:- எதை?

மேனகா:- தாங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பாகிய பழத்தை வட்டியும் முதலுமாக ஒரு வண்டியளவு கொண்டு வாருங்கள். ஒரு கூடையளவு போதாது - என்று மெதுவாக அவனை விடுத்து நகர்ந்து அவன் போவதற்கு இடையூறின்றி விலகி நின்றாள்.

அடுத்த நிமிஷம் வராகசாமி வெளியில் வர, அவனும் சாமாவையரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வண்டி புறப்பட்டு சென்டிரல் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது.


❊ ❊ ❊ ❊ ❊


ரவு ஒன்பது மணியாயிற்று. ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் இறங்கிய சாமாவையர் பெருந்தேவியைக் கூவியழைத்துக் கொண்டே உட்புறம் நுழைந்தார்.

பெருந்தேவியம்மாள், “ஏனடா! வண்டி அகப்பட்டதா?” என்றாள்.

தனது கணவன் திரும்பி வந்துவிடக்கூடாதா வென்று நினைத்து இன்பக் கனவு கண்டுகொண்டே இருந்த மேனகா சாமாவையருடைய குரலைக் கேட்டுக் கதவடியில் மறைந்து நின்று அவருடைய சொற்களைக் கவனித்தாள். கோமளம் ஒரு மூலையில் படுத்துப் பொய்த் துயிலி லிருந்தாள்.

சாமா:- நீங்களெல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா?- என்றார்.

பெரு:- ஆய்விட்டது; என்ன விசேஷம் ? என்றாள்.

சாமா:- சரி அப்படியானால் புறப்படுங்கள். கேஸை வேறு தேதிக்கு மாற்றி விட்டதாகத் தந்தி வந்து விட்டது. வராகசாமி போகவில்லை. வி.பி.ஹாலில் இன்றைக்கு, “சகுந்தலா” நாடகம், வராகசாமி உங்கள் மூவரையும் அழைத்துவரச் சொன்னான்-என்றார்.


❊ ❊ ❊ ❊ ❊
"https://ta.wikisource.org/w/index.php?title=மேனகா_1/009-022&oldid=1252331" இலிருந்து மீள்விக்கப்பட்டது