மேனகா 1/010-022
அதைக்கேட்ட மேனகா உள்ளூறப் பெருமகிழ்ச்சி கொண்டாள். அதற்குமுன் அவளது கணவன் அவளை நாடகம் பார்க்க அழைத்துப் போயிருந்தமையால், அதைப் பற்றிச் சிறிதும் சந்தேகங் கொள்ளாமல் சாமாவையருடைய சொற்களை அவள் உண்மையாக மதித்தாள். பெருந்தேவி கோமளத்தை யெழுப்பி விஷயத்தைத் தெரிவிக்க, அதற்கு முன் தமக்குள் முடிவு செய்யப்பட்டிருந்த அந்தரங்க ஏற்பாட்டின்படி கோமளம், “எனக்குத் துக்கம் வருகிறது; என்ன சாகுந்தலா வேண்டியிருக்கிறது? எத்தனையோ தரம் “பிழைக்குந்தலா” வைப் பார்த்தாய் விட்டது. மூன்றே முக்கால் நாடகத்தை வைத்துக்கொண்டு முப்பது வருஷமாய் ஆடினதையே ஆடியாடிச் சொன்னதையே சொல்லிச் சொல்லி அழுது காதைத் துளைக்கிறார்கள். நான் வரவில்லை, நீங்கள் போய் விட்டு வாருங்கள். நான் அகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அதைக் கேட்ட பெருந்தேவி, ‘அடி! சரிதானடி வாடி; எழுந்திருந்து வண்டியில் உட்கார்ந்தால் தூக்கம் போய்விடுகிறது. நீ வராவிட்டால் நாங்களும் போக மாட்டோம். மேனகா! இவளுக்கு நீ சொல்லடி!” என்றாள்.
மேனகா:- நீங்கள்தான் சொல்லுகிறீர்களே; அதற்குமேல் அதிகமாக நான் என்ன சொல்லப்போகிறேன்? சின்னக்கா! வாருங்கள், வேடிக்கையாகப் போய்விட்டு வருவோம்- என்று நயமாகக் கூறினாள்.
கோமளம்:- இல்லை இல்லை. எனக்குத் தூக்கம் சகிக்கக்கூடவில்லை. கூத்தாடிகளிடத்தில் வீணாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, அங்கே வந்து சாமியாடி விழுந்து பக்கத்திலிருப்பவர்களிடம் வசவும் இடியும் ஏன் பெற வேண்டும். நீங்கள் போங்கள். நான் வரவில்லை - என்று மறுமொழிக் கிடமின்றி உறுதியாகச் சொல்லி விட்டாள். பெருந்தேவியம்மாள் ஐந்து நிமிஷத்திற்குள் அறைகளைப் பூட்டிக் கொண்டு மேனகாவுடன் புறப்பட்டாள். இருவரும் வண்டியின் உட்புறத்தில் உட்கார்ந்தனர். சாமாவையர் வெளியில் வண்டிக்காரனோடு அமர்ந்தார்.
பெரு:- அடே சாமா! வண்டி கடற்கரைப் பாதையின் வழியாகப் போகட்டும் - என்றாள்.
வண்டி அவ்வாறே கடற்கரைப் பக்கமாகத் திரும்பிச் சென்று அங்கிருந்த அழகான சாலையை அடைந்தது. மேனகா தனது ஆசை மணாளனைக் காணப்போகும் நினைவினால் மனவெழுச்சியும் மகிழ்வும் கொண்டிருந்தாள் ஆனாலும் ஒருவித சஞ்சலம் அவளது மனதின் ஒரு மூலையில் தோன்றி அவளை வருத்தியவண்ணம் இருந்தது. அங்கு தோன்றிய கடற்கரையின் அற்புத வனப்பைக் காண, அவளது மனதும், நாட்டமும் அதன்மேற் சென்றன. அந்தப் பாட்டையில் அப்போதைக்கப்போது இரண்டொரு மனிதரையும், யாதாயினுமொரு மோட்டார் வண்டியையுங் கண்டனர். நிலவு பகலைப்போல எங்கும் தவழ்ந்திருந்தது; மிக்க அழகுபடச் சமதூரங்களில் அமைக்கப்பெற்றிருந்த கம்பங்களில் காணப்பட்ட மின்சார விளக்குகளின் வரிசை நிலமகளின் கழுத்தில் அணியப் பெற்ற வைர மாலையைப்போலக் காணப்பட்டது. நிலமகளின் நெற்றித் திலகத்தைப்போலத் தனது மென்மையான சந்திர பிம்பம் பன்னீர் தெளிப்பதைப் போல தனது மென்மையான கிரணங்களால் அமுதத்தை வாரி வீசிக்கொண்டிருந்தது. கடலினில் உண்டான குளிர்காற்று ஜிலு ஜிலென்று வீசி மனிதரைப் பரவசப் படுத்தி ஆனந்தத் தாலாட்டு பாடியது. பாதையின் சுத்தமும் தீபங்களின் வரிசையும், கடற்பரப்பின் கம்பீரமும், மந்தமாருதத்தின் சுகமும், விண்ணில் நாட்டியமாடிய தண்மாமதியத்தின் இனிமையும் ஒன்று கூடி விவரிப்பதற்கு இயலாத ஒருவிதப் பரமானந்தத்தை உண்டாக்கின. தானும் தன்னாயகனும் அப்போது அங்கு தனிமையிலிருந்தால் அது எவ்வளவு இன்பமாயிருக்கும் என்று மேனகா நினைத்தாள். தன் கணவனின்றித் தான் மாத்திரம் அத்தகைய அற்புதக் காட்சியை அநுபவித்தல் தகா தென நினைத்து அவள் அவ்வின்பத்தில் சென்ற தனது மனதைக் கண்டித்து வழிமறித்தாள் அதிசீக்கிரம் தான் தனது கணவனைக் காணலாமென்று இன்பக் கனவு கண்டு கொண்டே சென்றாள். பெருந்தேவி அவளிடத்தில் ஓயாமல் மகிழ்வான வார்த்தைகளைச் சொல்லியவாறு இருக்க, வண்டி கோட்டையைக் கடந்து ஹைக்கோர்ட்டுப் பக்கம் திரும்பி அங்கப்ப நாயக்கர் தெருவிற்குள் நுழைந்தது.
மேனகா அது எவ்விடமென்று பெருந்தேவி யிடத்தில் கேட்க, அவள் அதை நன்றாக அறிந்திருந்தாளானாலும் உண்மையை மறைத்து அது வி.பி.ஹாலுக்கு சமீபமென்றும் தெரிவித்தாள்.
முன்னொரு நாள்தானும் தனது கணவனும் சென்றபோது இரு பக்கங்களிலும் இருந்த கட்டிடங்களொன்றும் அப்போது காணப்படவில்லை; தவிர அதில் அரைப்பங்கு நாழிகையில் தாம் இருவரும் வி.பி.ஹாலை அடைந்து விட்டதாகவும் தோன்றியது. எனினும், அவர்கள் வேறு வழியாகப் போகிறார்கள் என்று மேனகா நினைத்தாள். மேனகா அதற்கு முன்னர் தன்னைக் கணவன் கொடுமையாக நடத்திய நாட்களையும், அந்த முறை தான் வந்த பிறகு தன்னை நடத்திய விதத்தையும் நினைத்து, தனக்கு ஏதோ நல்ல காலமே திரும்பி யிருப்பதாக எண்ணி உள்ளுறப் பூரிப்படைந்தாள். தான் எத்தனையோ தடவைகளில் கிணற்றில் விழுந்துவிட முயன்றதையும், பொறுத்தார் பூமியாள்வார் என்றபடி தான்தன் மனதின் உறுதியால் யாவற்றையும் சகித்திருந்தமையால் அப்போது நிகரற்ற சுகம் அநுபவித்ததாயும் நினைத்துத் தற்பெருமை பாராட்டிக் கொண்டாள்; தன் மணாளர் இனி எப்போதும் தன்னை அன்பாகவே நடத்து வாரென்றும், தன்னைப்போன்ற பாக்கியவதிகள் எவரும் இருக்க மாட்டார்களென்றும் நினைத்தாள். அடுத்த நொடியில் பாம்பு கடித்து மரிக்கப்போகும் ஒரு மனிதன் நிலம் வாங்கவும், மெத்தை வீடு கட்டவும், இன்னொரு மனைவியை மணக்கவும் நினைப்பவைபோல மேனகா தனது காலடியிற் கிடந்த வஞ்சகப் பாம்பைப் பற்றிச் சிறிதும் சந்தேகிக்காமல் மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி கொண்டிருந்தாள். அந்தத் தெருவில் நெடுந்துரம் வந்து விட்டதைப் பற்றி திரும்பவும் ஐயமுற்ற மேனகா, “என்ன இது? நாம் இப்போது எங்கிருக்கிறோம்? வி.பி. ஹால் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்றாள்.
பெரு:- இதோ வந்துவிட்டது. நாம் குறுக்கு வழியாக வந்திருந்தால் இவ்வளவு நாழிகையில் போயிருக்கலாம், கடற்கரை வழியாக மெல்ல வந்தமையால் தூரம் போல இருக்கிறது- என்றாள்.
இரண்டொரு நிமிஷத்தில் வண்டி ஒரு பெருத்த மாளிகையின் வாசலில் வந்து நின்றது. தெருவில் ஆங்காங்கு மின்சார விளக்குகள் நட்சத்திர மணிகள் போலச் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த மாளிகையின் வாசலில் இரண்டு விளக்குகள் இருந்தன. வண்டி நின்றவுடன் மேனகா, “இது வி.பி.ஹாலை போல இல்லையே” என்றாள்.
பெருந்தேவி, “சாமா! வண்டியை முன்பக்கத்துக்குக் கொண்டுபோகாமல் பின் பக்கத்தில் ஏன் நிறுத்தினாய்?” என்றாள்.
சாமா:- வராகசாமி இவ்விடத்தில் நமக்காக காத்திருப்பதாயும், பின்பக்கமாக உள்ளே போனால் முன்னே நல்ல இடத்தில் உட்காரலாமென்றும் சொன்னான். அவன் இங்கே எதிரில் இருப்பான், இறங்குங்கள்- என்றார்.
உடனே பெண்டீரிருவரும் வண்டியை விடுத்திறங்கினர். சாமாவையரும் இறங்கினார். மாளிகையின் வாசலிலிருந்த ஒரு மகம்மதியனைப் பார்த்த சாமாவையர், “பியூன்! ஐயா எங்கே?” என்றார். அவன், “உள்ளே இருக்கிறார்; போங்கள்” என்று மரியாதையாக மறுமொழி கூறினான்.
சாமா:- சீக்கிரம் வாருங்கள்; நாழிகையானால் கதவைச் சாத்தி விடுவார்கள் - என்றவண்ணம் உட்புறம் நுழைந்தார். பெண்டீரிருவரும் அவரைத் தொடர்ந்து உட்புறம் நுழைந்தனர். அவர்கள் உட்புறமிருந்த சில அகன்ற அறைகளைக் கடந்து செல்ல, எதிரில் மேன் மாடப் படிகள் தோன்றின. அவர்கள் அவற்றின் வழியாக ஏறிச்சென்றனர். எங்கும் மனிதரே காணப்படவில்லை. அவர்கள் மேன்மாடத்தை அடைந்தபின் அங்கிருந்த பல நெருக்கமான அறைகளைக் கடந்து மென்மேலும் நடந்தனர். ஒவ்வோர் அறையிலும், மின்சார விளக்குகள் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. பளபளப்பான புதிய நாற்காலிகளும், அழகிய சோபாக்களும், நிலைக் கண்ணாடிகளும், பூத்தொட்டிகளும், எங்கும் நிறைந்து காணப்பட்டன. அழகான உயர்ந்த இரத்தின கம்பளங்கள் தரை முழுவதும் விவரிக்கப்பட்டிருந்தன.
சாமாவையர், “பெருந்தேவி! இதுதான் வேஷம் போட்டுக்கொள்ளு மிடம். இது எவ்வளவு அழகா யிருக்கிறது பார்த்தாயா? எல்லோரும் வேஷம் போட்டுக் கொண்டு முன்னால் போய்விட்டார்கள்” என்றார்.
பெரு :- கூத்தாடிகள் அடுத்த அறையிலிருப்பார்கள். இப்படியே வர எனக்கு நிரம்பவும் வெட்கமாக இருக்கிறதப்பா; நானும் மேனகாவும் வாசல்பக்கமாக வருகிறோம் - என்று கூறிய வண்ணம் அப்படியே நின்றாள்.
சாமா:- சரி; அப்படியானால் நீங்கள் இவ்விடத்திலேயே இருங்கள், நான் வராகசாமியிடம் போய் டிக்கட்டுகளை வாங்கி வருகிறேன். நாம் முன்பக்கமாகவே உள்ளே போகலாம் - என்றார்.
பெரு:- அப்படியானால் சரி, சீக்கிரமாக வா - என்றாள்.
சாமாவையர் அவர்களை அவ்விடத்தில் விடுத்து எதிரி லிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்து போனார்.
கால் நாழிகை கழித்து, உட்புறத்தில் ஹார்மோனிய வாத்தியத்தின் இன்னோசையெழுந்தது. அவர்கள் வஞ்சகமாக நடிக்கிறார்களென்று கனவிலும் சந்தேகியாதிருந்த மேனகா, தனது கணவனை விரைவில் காணப் போவதாக நினைத்துத் துடித்து நின்றாள்.
பெரு:- மேனகா! இந்த இடம் எவ்வளவு சொகுசா யிருக்கிறது பார்த்தாயா! ஆகா! இந்த இடம் நமக்குக் கிடைத்துவிட்டால் எவ்வளவு சுகமாயிருக்கும்- என்றாள்.
மேனகா:- நம்முடைய அகத்தில் இருப்பதைவிட இங்கே அதிகமான சுகம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். பெரிய கண்ணாடிகளால் என்ன உபயோகம்? நம்மை நாமே நன்றாகப் பார்த்துக் கொள்ள ஈசுவரன் கொடுத்த கண்ணிருக்க அதற்கு நிலைக்கண்ணாடியின் உதவி எதற்கு? நம்முடைய சாதாரண விளக்கிலிருந்து உண்டாகும் வெளிச்சத்தில் நம்முடைய காரியம் ஆக வில்லையா? எந்தப் பொருள் நம்முடைய கண்ணிற் படாமல் மறைந்திருக்கிறது? முன்தோன்றாத வஸ்து ஏதாயினும் மின்சார விளக்கினால் நமது கண்ணுக்குப் புலப்படுகிறதா? ஒன்றுமில்லை. இதனால் கண்ணைத்தான் கெடுத்துக் கொள்கிறோம். எனக்கு இதெல்லாம் பிடிக்கிறதில்லை. ஒரு குடும்பத்தினர் ஒருவரிட மொருவர் அந்தரங்க அன்போடு நடந்துவந்தால், ஒரு குடிசை வாசமானாலும் அது பெருத்த சுகந்தான். இல்லையானால், அரண்மனையில் பஞ்சணையில் நடந்தாலும் சுகமில்லை - என்றாள்.
பெரு:- என்னடி இந்த சாமத்தடியன் போனவனைக் காணோமே! அவனுக்கு யாராவது கொஞ்சம் புகையிலை கொடுத்துவிட்டால் அவன் உலகத்தையே மறந்துவிடுவான். பெண்பிள்ளைகளை இங்கே அந்தரத்தில் நிறுத்தி வைத்து விட்டு எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டானே கட்டையிலே போவான்! என்று ஆத்திரமாக மொழிந்தாள்.
“உங்கள் தம்பியைக் காணாமல் கூட்டத்தில் ஒருவேளை தேடி அலைகிறாரோ என்னவோ!” என்றாள் வஞ்சகத்தை அறியாத வஞ்சி.
“ஆம் ஆம். அப்படித்தானிருக்கும். அடுத்த அறையில் அவனிருக்கிறானா வென்று நான் எட்டிப்பார்க்கிறேன்” என்று சொல்லிய வண்ணம் பெருந் தேவியம்மாள் எதிரிலிருந்த அறையின் நிலைப்படியண்டையில் போய் அதன் கதவைச் சிறிது திறந்து அப்புறம் எட்டிப்பார்த்த வண்ணம், “ஏனடா சாமா! நாங்கள் எவ்வளவு நாழிகையடா இங்கே நிற்கிறது? எங்கே டிக்கட்டு? இப்படிக் கொடு!” என்று கேட்டுக்கொண்டே கதவிற்கு அப்புறம் நடந்தாள். அவள் டிக்கட்டை வாங்கிக்கொண்டு திரும்பி வருவாளென்று நினைத்து மேனகா அப்படியே சிறிது நேரம் நின்றாள். ஆனால், அப்புறஞ் சென்ற பெருந்தேவியம்மாளின் குரலாகிலும், சாமாவையரின் குரலாகிலும் பிறகு உண்டாக வில்லை. அவ்விதமே மேனகா ஒன்றையும் அறியாதவளாய்க் கால் நாழிகை நின்றாள். எவரும் இல்லாத இடத்தில் தான் தனிமையில் நின்றதைப் பற்றியும், போனவர்கள் திரும்பி வராததைப் பற்றியும், அவள் ஒரு விதக் கவலையும் அச்சமும் கொண்டு தத்தளித்து நின்றாள். அரை நாழிகை யாயிற்று. அவளுடைய மனோவேதனை முன்னிலும் அதிகரித்தது. இன்னதென்று விவரித்தற்கு இயலாத ஒரு வித துன்பமும் சந்தேகமும் வதைக்க ஆரம்பித்தன. தான் முன்னால் சென்று எதிரில் தோன்றிய அறைக்குள் எட்டிப் பார்க்கலாமா என்னும் ஒருவித எண்ணம் மனதில் உதித்தது. ஆனால் காலெழவில்லை. அவள் மெல்ல நடந்து எதிரிலிருந்த வாசலையடைந்து மிக்க அச்சத்தோடு உட்புறம் எட்டிப் பார்த்தாள். அந்த அறையும் விசாலமாய்க் காணப்பட்டது. அதற்குள்ளும் மனிதர் காணப்படவில்லை. தான் செய்யத் தக்க தென்ன என்பதை அறியாமல் அவள் மனக்குழப்பம் அடைந்தாள். முதலில் நின்ற அறையிலேயே நிற்பதா, அன்றி எதிரில் தோன்றிய அறைக்குள் நுழைந்து பார்ப்பதா வென்னும் நினைவுண்டாயிற்று. எவ்வித முடிவுக்கும் வரமாட்டாமல் அவள் தடுமாறித் திகைத்து அவ்விதமே ஐந்து நிமிஷ நேரம் நின்றாள். மனம் மேலே செல்லத்துண்டியது. நாணம் காலைப் பின்புறம் இழுத்தது. அவ்வாறு கலக்கங்கொண்ட நிலையில் எதிரிலிருந்த அறைக்குள் மெல்ல நுழைந்தாள்; அதற்கப்பால் எங்கு செல்வதென்பதை அறியாமல் மயங்கி நின்றாள். எப்பக்கத்திலும் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அப்புறம் செல்ல வழி தோன்றவில்லை. அவ்வாறு தத்தளித்து நின்ற தருணத்தில், அவள் எந்தக் கதவைத் தாண்டி அந்த அறைக்குள் வந்தாளோ அந்தக் கதவை யாரோ சாத்தி வெளியில் தாளிட்டதை உணர்ந்தாள். அவள் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போலப் பெரிதும் கோபமும், அச்சமும் அடைந்தவளாய்க் கையைப் பிசைந்து கொண்டு, “இதென்ன பெருத்த துன்பமாய்ப் போய்விட்டதே போனவர்கள் திரும்பி வரவில்லையே! அங்கே என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே! ஒருவேளை பிராணபதிக்கு ஏதாவது துன்பம் சம்பவித் திருக்குமோ? அன்றி, அவரைக் காணாமல் இவர்கள் தேடுகிறார்களோ? யாராவது வந்து நான் இவ்விடத்தில் தனியாக நிற்பதைப்பற்றி கேட்டால் நான் என்ன மறுமொழி சொல்லுவேன்? ஐயோ! தெய்வமே! இன்று என்ன ஆபத்தோ தெரியவில்லையே! ஈசுவரா! நீயே துணை”’ என்று பலவாறு எண்ணமிட்டு ஆற்று மணலில் வெயிற் காலத்தில் கிடந்து துடிக்கும் புழுவைப் போலத் துடித்துக் கையைப்பிசைந்து கொண்டு நின்றாள்.
அவ்வாறு ஒரு நாழிகை கழிந்தது. அவளது மனம் பட்ட பாட்டை எப்படி விவரிப்பது! மேலும் செல்லலாம் என்னும் கருத்தோடு அவள் கதவுகளை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். எல்லாம் அப்புறம் தாளிடப்பெற்றோ பூட்டப் பட்டோ இருந்தன. சாமாவையரும், பெருந்தேவியம்மாளும் எங்கு சென்றார்களோ வழியில்லாதிருக்க அவர்கள் எப்படி போனார்களோ? அவர்களது கதி என்னவானதோ? என்று நினைத்து நினைத்து அவள் வருந்தினாள். அப்போதும் அவளுக்கு அவர்களின் மீது எவ்வித ஐயமும் தோன்றவில்லை. குழம்பிய மனதும் பதைபதைத்த உடம்புமாக மேனகா நின்றாள்.
அந்த அறை ஒரு சயன அறைபோல் மிக்க அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கந்தவருப் பதுமைகள் புஷ்பங் களைச் சொரிதலைப்போன்ற உருவங்களின் கையிற் பொருத்தப்பட்ட மின்சார விளக்குகள் நவரத்தினக் கற்களைப் போலவும் நrத்திரச் சுடர்கள் போலவும் பல வருணங்களிற் காணப்பட்டன. ஒரு முழ உயரம் காணப்பட்ட வெல்வெட்டு மெத்தை, திண்டுகள், தலையணைகள் முதலியவற்றைக் கொண்ட ஒரு தந்தக் கட்டில் இருந்தது. அதன் மீது அழகிய வெள்ளை நிறக் கொசுவலையும், மெத்தையின் மீது மெல்லிய வழுவழுப்பான பட்டுப் போர்வையும் காணப்பட்டன. மின்சார விசிறிகளின் சுழற்சியால் குளிர்ந்த இனிய காற்று உடம்பில் தாக்கிய வண்ண மிருந்தது; எங்கும் நிருவாணமான மங்கையின் படங்களும் விகாரமான படங்களும் காணப் பட்டன. யாவற்றையும் நோக்கிய மேனகா அது ஒருகால் நாடகத்தின் காட்சியாய் (சீனாக) இருக்குமோ வென்று நினைத்து மயங்கினாள். அந்த அறையில் இருந்த பொருட்களைக் காண அவளுடைய தேகம் குன்றியது. அங்கிருந்த ஒரு கடிகாரத்தின் கைகள் பத்து மணி நேரத்தைச் சுட்டின.
அந்த மகா பயங்கரமான நிலைமையில் ஒரு கதவு திடீரென்று திறக்கப்பட்டது. மேனகா திடுக்கிட்டு யார் வரப்போகிறார்களோ வென்று அந்தப் பக்கத்தைப்பார்த்தாள். அடுத்த நொடியில் மேனகாவைப் பார்த்துப் புன்னகை செய்த வதனத்தோடு ஒரு யெளவனப் பருவ மகம்மதியன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட மேனகாவினது மனம் பதைத்தது. தேகம் துடித்துப் பறந்தது. அவள் நெருப்பின் மீது நிற்பவளைப் போலானாள். அவளுடைய சிரம் சுழல ஆரம்பித்தது, அறிவு தள்ளாடியது. உயிர்துடித்தது. அது கனவோ நினைவோ வென்று நினைத்து முற்றிலும் திகைத்துக் கல்லாய்ச் சமைந்து நின்றாள்.
❊ ❊ ❊ ❊ ❊