மேனகா 1/011-022
7-வது அதிகாரம்
காட்சி தந்து மறைந்ததேன் காதலியே!
மூன்றாவது நாட் காலையில் சேலத்திலிருந்து திரும்பி வந்த வராகசாமி அதிவிரைவாக வீட்டிற்குள் நுழைந்தான். மல்கோவா மாம்பழம் நிறைந்த ஒரு மூங்கிற் கூடையைத் தாங்கிப் பின்னால் வந்த வண்டிக்காரன் அதை வைத்து விட்டுத் தனது கூலியைப் பெற்று வெளியிற் சென்றான். அதற்கு முன் இரண்டு நாட்களாய் மேனகா மேனகா வென்று தியானம் செய்திருந்த வராகசாமி அந்த மடவன்னத்தைக் காணவும், அவளோடு தனிமையில் பேசவும் பேராவல் கொண்டிருந்தான். ஆதலால், அவளைத் தேடி ஒவ்வொரு அறையாக நுழைந்தான். துடிதுடித்துத் தோன்றிய அவனது கண்கள் அவ்வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நுழைந்து அந்தப் பொற்பாவையைத் தேடி யலைந்தன. தன் சட்டை முதலிய உடைகளைக் கழற்றி அவற்றை வைக்கச் செல்பவன் போல அவன் தன் படுக்கையறைக்குள் சென்று அவ்விடத்தில் தேடினான். அவள் எங்கும் காணப்படவில்லை; கோமளமும், பெருந்தேவியும், மகிழ்வற்ற வதனத்தோடும், அவனிடம் வெறுப்பைக் காட்டியும், அவன் வந்ததைப் பொருட் படுத்தாமலும் ஏதோ அலுவல் இருப்பவரைப்போலப் பித்தளைப் பாத்திரங்களையும் அம்மிக் குழவியையும் உருட்டி ஓசை செய்தவண்ணம் இருந்தனர். ஒருக்கால் தனது பிரிய நாயகி மாதவிடாய் கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்றிருப்பாளோவென ஐயமுற்று அவன் உடனே வெளியிற் சென்று திண்ணையிலிருந்த சிறிய அறையை நோக்கினான். அதன் கதவு வெளிப்புறம் தாளிடப் பெற்றிருந்தது. என்ன செய்வான்? தேகம் பதறியது. ஆவலோ அதிகரித்தது. சகோதரிமாரிடம் தன் மனைவியெங்கே யென்று கேட்பதற்கும், ஒருவித வெட்கம் வருத்தியது. அத்தகைய நிலையில் உள்ளே வந்து ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து, “கோமாளீ” என்று மெதுவாகச் சிறிய பேயை அழைத்தான். அவள் வரவு மில்லை; ஏனென்று கேட்கவுமில்லை. அவனுடைய வியப்பும், வேதனையும், ஆவலும் அபாரமாய்ப் பெருகின.
அப்போது சாமாவையர் கவலை கொண்டு வாடிய வதனத்துடன் வந்து சேர்ந்தார். எப்போதும் புன்னகை கொண்ட சந்தோஷமான முகத்தோடு தோன்றும் அவ்வுல்லாச புருஷர் அன்று வழக்கத்திற்கு விரோதமாக அவ்வாறு தோன்றியதைக் கண்டு, தான் இல்லாத சமயத்தில் வீட்டில் ஏதோ விபரீதம் சம்பவித்திருப்பதாக வராகசாமி ஒருவாறு சந்தேகித்தான்.
உள்ளே வந்த சாமாவையர் நிரம்பவும் ஆவலோடு, “அடே வராகசாமி சங்கதிகளை யெல்லாம் பெருந்தேவி சொன்னாளா?” என்றார்.
அதைக்கேட்டு திடுக்கிட்ட வராகசாமி, “இல்லையே! என்ன நடந்தது?” என்றான்.
சாமா:- பெருந்தேவியை அழைத்துக் கேள். அடி பெருந்தேவி! இங்கே வா- என்றார்.
சமையலறைக் கதவின் மறைவில் ஆயுத்தமாக நின்றிருந்த மூத்த அம்மாள், “எல்லாம் நீயே சொல். எனக்கு இங்கே கையில் காரியமிருக்கிறது” என்றாள்.
வராக:- சாமா! நீதான் சொல்லடா; என்ன விளையாடுகிறீர்கள்? என்ன நடந்தது ? - என்று பெருத்த ஆவலோடு கேட்டான்.
சாமாவையர் உடனே கனைத்துத் தமது தொண்டையைச் சரிபடுத்திக் கொண்டார்; முகத்தில் அதிகரித்த விசனக் குறியை உண்டாக்கிக் கொண்டவராய், “அப்பா வராகசாமி! நான் என்ன சொல்வேன்! முந்தாநாள் நாம் புறப்பட்டு ரயிலுக்குக் போன பிறகு உன்னுடைய மாமனார் ஒரு பெட்டி வண்டியில் வந்தாராம். வண்டி வாசலில் நின்றதாம். அவர் வண்டியைவிட் டிறங்காமல் ஒரு சேவகனை உள்ளே அனுப்பினாராம். அவன் உள்ளே வந்து டிப்டி கலெக்டர் வாசலில் பெட்டி வண்டியில் இருந்ததாகவும், மேனகாவைக் கூப்பிட்டதாகவும் சொன்னானாம். உடனே மேனகா வெளியில் போய் வண்டியின், பக்கத்தில் நின்று அவரோடு அரைநாழிகை வரையில் பேசிக்கொண்டி ருந்தார்களாம். பிறகு டிப்டி கவெக்டர் வண்டியின் கதவைத் திறக்க, அவளும் ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாளாம். உடனே வண்டி போய்விட்டதாம். அவர் அவளை எங்கேயாவது அழைத்துக் கொண்டுபோய் விட்டுத் திரும்பவும் கொணர்ந்து விடுவாரென்று இவர்கள் நினைத்தார்களாம். அவன் திரும்பி வரவே இல்லை. நேற்று முழுவதும் பார்த்தோம்; இன்னமும் வரவில்லை. ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார் போலிருக்கிறது. உனக்குத் தந்தி மூலம் தெரிவிக்க நினைத்தோம். நீ எவ்விடத்தில் தங்குகிறாய் என்பது தெரியாது ஆகையால், எந்த விலாசத்துக்கு அனுப்புவ தென்னும் சந்தேகத்தினால் அப்படிச் செய்யக் கூடவில்லை. முந்தா நாளிரவு, நேற்று முழுவதும், டிப்டி கலெக்டருக்கு வேண்டிய இடமெல்லாம் தேடிப் பார்த்தோம். அவர்கள் எங்கும் காணப்படவில்லை! அவர் அவளை ஊருக்குத்தான் அழைத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால், அவர் உள்ளே வராமலும் எவரிடத்திலும் சொல்லாமலும் பெண்ணை அழைத்துப்போனதும், மேனகா அப்படியே வண்டியில் ஏறிப் போனதுமே வருத்தமாக இருக்கிறது” என்றார்.
அதைக் கேட்ட வராகசாமிக்கு அடக்க வொண்ணா கோபமும், ஆத்திரமும் உண்டாயின. அவனுடைய தேகம் பதறியது. “என்ன ஆச்சரியம்! ஏழெட்டு நாட்களுக்கு முன் வந்தவன், இங்கே அன்னியோன்னியமா யிருந்துவிட்டுப் போயிருக்கிறான். இதற்குள் அவனுக்கு என்ன கிறுக்கு வந்துவிட்டது! ஏனடி அக்கா! அவள் உங்களில் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமலா போய்விட்டாள்?” என்று கேட்டான்.
அதைக் கேட்ட பெருந்தேவிமனத்தாங்கலாக, “அவளேன் சொல்லுவாள்? நாங்கள் அவளுக்கு இலட்சியமா? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த மாதிரி ஊரில் ஒரு வருஷமாக நாறிக் கிடந்த தரித்திரத்தைத் திரும்ப அழைத்து வந்து நல்ல பதவியில் வைத்தோமல்லவா! அவளுடைய பகட்டைக் கண்டு அதற்குள் நீயும் மகிழ்ந்து போய்விட்டாய். அதனால் அந்த நாய்க்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. உன்னுடைய தயவைப் பூர்த்தியாகச்சம்பாதித்துக் கொண்டவளுக்கு எங்களுடைய தயவு எதற்கு? எங்களிடம் ஏன் சொல்லுவாள்?” என்றாள்.
அதைக் கேட்ட வராகசாமிக்கு டிப்டி கலெக்டர் மீதும், மேனகாவின் மீதும் அடக்கமுடியாத கோபம் பொங்கி யெழுந்தது. அவர்கள் யாராயினும் அப்போது எதிரிலிருந்தால் அவன் அப்படியே கசக்கிச்சாறு பிழிந்திருப்பான். அவனுடைய கண்ணில் தீப்பொறி பறந்தது. “இந்தப் பீடைகளின் உறவு இன்றோடு ஒழிந்தது. இனி செத்தாலும் நான் இவர்களுடைய முகத்தில் விழிப்பதில்லை! சனியன் ஒழியட்டும்” என்று அவன் உறுதியாகக் கூறினான். எவ்வளவோ சிபார்சு செய்து சில நாட்களுக்கு முன்னரே பெண்ணைக் கொணர்ந்து விட்டவன், ஒரு வாரத்தில் யாதொரு காரணமுமின்றி அழைத்துப் போக வேண்டியதென்ன வென்பதே அவனது மனதைப் பெரிதும் வருத்தியது. வீட்டிலிருந்து வெளியே போக ஆரம்பித்தான்; இன்ன இடத்திற்குப் போகிறோம்; எவ்வளவு நேரமாக அலைகிறோம் என்பதை அறியாமல் பல தெருக்களின் வழியாகப் பைத்தியங் கொண்டவனைப்போல அலைந்து கடைசியில் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தான். தண்ணீரின் ஒரமாக நடந்து நெடுந்துரம் சென்றான். தானும் மேனகாவும் அதற்கு முன் வந்து உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் செல்ல, அவளுடைய வேடிக்கையான சொற்களும், அஞ்சுகத்தைப்போல அவள் கொஞ்சிக் குலாவித் தன்னோடு செய்த விளையாடல்களும், அவள் தன்னை உயிருக்குயிராய் நினைத்து அதைச் செயல்களில் காட்டிவந்ததையும், அவ்விடம் நினைப் பூட்டியது. அவளுடைய அரிய குணமும், ஆழ்ந்த காதலும் நினைவிற்கு வந்தன. அந் நினைவுகள் அவனது மனதைப் பெரிதும் வருத்தத் தொடங்கின.
அவ்வாறிருந்தவள் தான் இல்லாத காலத்தில் எதிர்பாரா வகையில் நடந்ததன் காரணமென்ன என்பதைப் பற்றி எத்தனையோ முறை யோசித்து உண்மையை அறியமாட்டாத வனாய்த் தடுமாறினான். சென்ற ஒரு வாரத்தில் அவள் நடந்து கொண்ட விதமும் , அவளால் தான் அடைந்த சுவர்க்க போகமும் அவனுடைய மனதில் தத்ரூபமாய்த் தோன்றின. அவள்மீது அவன் கொண்ட கோபமும் வெறுப்பும் ஒருவாறு தணிவடைந்தன. தான் அவ்வளவு விரைவாக அவர்களின் மீது வெறுப்பையும் கோபத்தையும் கொண்டு அவர்களுடைய உறவை அறவே விலக்கிட நினைத்தது பிசகெனத் தோன்றியது. நடந்தது என்ன என்பதை உள்ளபடி உணராமல் அவர்கள் மீது தான் பகைமை பாராட்டுதல் ஒழுங்கன்று என நினைத்தான். தன் மனைவியின் அழகும், ஆசையும் மாதுரிய குணமும் படிப்படியாக அவனை மேற்கொள்ள ஆரம்பித்தன. உடனே அவன் ஒரு விதமான உறுதி கொண்டு திரும்பி திருவல்லிக்கேணி தபாற்சாலைக்கு விரைவாக நடந்து சென்று டிப்டி கலெக்டருக்கு அவசரமான தந்தி யொன்றை அனுப்பிவிட்டுத் திரும்பத் தனது வீட்டிற்கு வந்தான்; பெருத்த இழவு விழுந்த வீட்டிற்குள் நுழைபவனைப்போலத் துயரங் கொண்டவனாய் நுழைந்து தன் படுக்கையறைக்குள் சென்று, துணியால் முகத்தை மூடிக் கொண்டு படுத்தான். ஒரு நிமஷத்தில் அவனது மனத்தில் கோடி எண்ணங்கள் உதித்தன. தொடக்க முதல் தன்னிடம் மாறாத அன்புடன் மனதிற்குகந்த விதமாய் ஒழுகி வந்த மேனகாவின் வடிவம், அப்போதே இதழ்களை விரித்து நகைக்கும் தாமரைப்போல, அவளது சொற்களும், செயல்களும், திரும்பத் திரும்ப அவனது நினைவில் தோன்றின. சுவரில் மாட்டப்பட்டிருந்த அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தான். உடனே அதை எடுத்து அருகில் பார்க்கவேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று, அதை எடுத்து அருகிற் பிடித்து உற்று நோக்கினான். மனதிலிருந்த விசனத்தை முகத்தின் புன்னகையால் மறைப்பதாகத் தோன்றிய அவ்வடிவத்தின் வதனத்தைக் கண்ணிமைப்பின்றி நோக்கினான். அறையின் வெளியிலிருந்ததன் சகோதரிமார்தன்னைப் பார்க்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்து ஆராய்ச்சி செய்து அந்தப் படத்திற்கு ஒரு முத்தம் கொடுத்தான். “ஆகா! உன்னை அன்போடு நடத்தாமல் வருத்துகிறேனே என்று நீ விசனப்பட்ட காலத்தில் எடுத்த படமல்லவா இது! நீ எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும் உன் விசனம் நன்றாய்த் தெரிகிறது. நான் உன்னுடைய மனதின் நோயை மாற்ற முயலும் சமயத்தில் நீ என்னை விட்டுப் போய்விட்டாயே! இனிமேல் உன்னை நான் எப்படி அழைத்துக் கொள்வேன்?” என்று பலவாறு எண்ணமிட்டு அவன் வருந்திக் கிடந்த சமயத்தில், “வரகுசாமி அய்யர்! வரகுசாமி அய்யர்!” என்று வீட்டின் வாசலில் எவனோ உரக்கக் கூவிய ஓசை உண்டாயிற்று. அவன் திடுக்கிட்டெழுந்து வெளியிற் சென்று பார்க்க, சேவகனொருவன் ஒரு தந்தியை நீட்டினான். வராகசாமி கையெழுத்துச் செய்து அதை வாங்கி மிகுந்த ஆவலோடு திறந்து படித்தான். அதில் அடியில் வருமாறு விஷயம் எழுதப்பட்டிருந்தது:- “ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லா இடங்களில் நன்றாய்த் தேடிப் பார்க்கவும்; போலீசிலும் பதிவு செய்யவும், நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு அவ்விடம் வருகிறேன். அவசரம்; அசட்டையாயிருக்க வேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறு தந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஒய்வுமிராது; ஒரு வேலையிலும் மனம் செல்லாது” என்றிருந்த சங்கதியைப் படித்தான். அவனுடைய நெஞ்சம் தடுமாறியது, குழம்பியது. கோபம் பொங்கி யெழுந்தது. என்ன செய்வான்? யார் சொன்னது உண்மை யென்பதை எப்படி அறிவான்? உடனே “அக்கா! அடி அக்கா!” என்று அதட்டிய குரலில் பெருந்தேவியை அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
❊ ❊ ❊ ❊ ❊